திரு மணஞ்சேரி




திரு மணஞ்சேரி

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு.

     மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.


இறைவர்                : அருள்வள்ளல் நாயகர், உத்வாகநாதசுவாமி,                                              கல்யாண சுந்தரேசுவரர்

இறைவியார்           : யாழினும் மென்மொழியம்மைகோகிலாம்பாள்

தீர்த்தம்                 : சப்த சாகர தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - அயிலாரும் அம்பதனால்
                                      2. அப்பர்   -  பட்ட நெற்றியர் பாய்புலி


         உமாதேவி ஒருமுறை கயிலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.

         உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார் என்று தல வரலாறு கூறுகிறது. சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.

         திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.

         திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு கோகிலாம்பாள்  உடனாய கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால்விரைவில் திருமணம் இனிதே கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் தினமும் காலையில் நீராடி விட்டு ஆலயத்தில் வழங்கப்பட்ட எலுமிச்சம் பழத்தை பிழிந்து உப்பு சர்க்கரை சேர்க்காமல் நீரில் கலந்து சாப்பிட்டுவிட்டு, ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

         திருமணம் முடிந்தவுடன், ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை தம்பதி சமேதராய் வந்து ஆலயத்தில் செலுத்தி பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்வது வழக்கமாக உள்ளது.

         நெய்தீபம், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், வாழைப்பழம், சந்தனம், 2 மாலை, 2 தேங்காய்ஆகிய பூஜை சாமான்கள் அனைத்தும் ஆலயத்தின் உள்ளே ஆலய நிர்வாகத்தால் நியாயாமான விலையில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

         கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலய இராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு 3 நிலை 2வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.

         கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது.

         இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது. சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது.

         சோழ மன்னன் கண்டராதித்யனின் மனைவியான செம்பியன் மகாதேவியால் இந்த ஆலயம் திருப்பணி செய்யப்பட்டது என்று இந்த ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

         இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருவேள்விக்குடி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணத்திற்கான வேள்விகள், யாகம் மற்றும் இதர கல்யாண சடங்குகள் நடைபெற்றன.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நண்ணு வணம் சேர் இறைவன் மகிழ்ந்து வணங்கும் மணஞ்சேரி நீங்கா மகிழ்வே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 290
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும் சென்று தொழுதுஇசை பாடி
எப்பொரு ளும்தரும் ஈசர் எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்புஇல் பதிகங்கள் பாடி ஓங்குவேள் விக்குடி உற்றார்.

         பொழிப்புரை : பந்தணைநல்லூர் என்னும் அத்திருப்பதியைப் போற்றி மேற்செல்பவராய், இறைவரின் `திருமணஞ்சேரியைச்' சொலற்கரிய திருத்தொண்டர்கள் உடன்வரச் சென்று வழிபட்டுத் திருப்பதிகத்தைப் பாடி, உயிர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வழங்கும் இறைவரின் `திரு எதிர்கொள்பாடி\' என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங்களைப் பாடி, உயர்ந்த `வேள்விக்குடியை\' அடைந்தார்.

         குறிப்புரை : திருமணஞ்சேரியில் அருளிய பதிகம் `அயிலாரும்' (தி.2 ப.16) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருஎதிர்கொள்பாடியில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.


2.016 திருமணஞ்சேரி                     பண் - இந்தளம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அயில்ஆரும் அம்புஅத னால்புர மூன்றுஎய்து,
குயில்ஆரும் மென்மொழி யாள்ஒரு கூறுஆகி,
மயில்ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்குஇல்லை பாவமே.

         பொழிப்புரை :கூரிய அம்பினால் முப்புரங்களையும் எய்து அழித்து, குயில் போலும் இனிய மென்மையான மொழிபேசும் உமையம்மையை ஒரு கூற்றில் உடையவனாகி, மயில்கள் வாழும் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் எழுந்தருளிய இறைவனைப் பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 2
விதியானை, விண்ணவர் தாம்தொழுது இத்திய
நெதியானை, நீள்சடை மேல்நிழ் வித்தவான்
மதியானை, வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்
பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.

         பொழிப்புரை :நீதி நெறிகளின் வடிவினன். தேவர்கள் வணங்கித் தமது நிதியாகக் கொள்பவன். நீண்ட சடைமீது வானத்து மதியைச் சூடியவன். வளமான பொழில்கள் சூழ்ந்த திருமணஞ்சேரியைத் தனது பதியாகக் கொண்டவன். அவனைப் பாடவல்லார் வினைகள் அழியும்.


பாடல் எண் : 3
எய்ப்புஆனார்க்கு இன்புஉறு தேன்அளித்து ஊறிய
இப்பாலாய், எனையும் ஆள உரியானை,
வைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரி
மெய்ப்பானை, மேவிநின் றார்வினை வீடுமே.

         பொழிப்புரை :வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகிய இன்பம் தரும் தேன் அளித்து இவ்வுலகத்துள்ளோனாய் அருள்புரிபவன். என்னையும் ஆட்கொண்டருளும் உரிமையன். செல்வங்களாக உள்ள மாடவீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். அவனை மேவி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 4
விடையானை, மேல்உலகு ஏழும்இப் பார்எலாம்
உடையானை, ஊழிதோறு ஊழி உளதுஆய
படையானை, பண்இசை பாடு மணஞ்சேரி
அடைவானை அடையவல் லார்க்குஇல்லை அல்லலே.

         பொழிப்புரை :விடை ஊர்தியன். மேலே உள்ள ஏழு உலகங்களையும் இம்மண்ணுலகையும் தன் உடைமையாகக் கொண்டவன். பல்லூழிக்காலங்களாய் விளங்கும் படைகளை உடையவன். அடியவர் பண்ணிசைபாடி வழிபடும் திருமணஞ்சேரியை அடைந்து வாழ்பவன். அவனை அடையவல்லார்க்கு அல்லல் இல்லை.


பாடல் எண் : 5
எறிஆர்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்
வெறிஆரும் செஞ்சடை ஆர மிலைத்தானை,
மறிஆரும் கைஉடை யானை மணஞ்சேரிச்
செறிவானைச் செப்பவல் லார்க்குஇடர் சேராவே.

         பொழிப்புரை :ஒளிபொருந்திய கொன்றைமலர்களோடு புதிய ஊமத்தம் மலர்களை மணம் கமழும் தன் செஞ்சடை மீது பொருந்தச் சூடியவன். மான்கன்றை ஏந்திய கையினன். திருமணஞ்சேரியில் செறிந்து உறைபவன். அவனைப் புகழ்ந்து போற்ற வல்லவர்களை இடர்கள் அடையா.


பாடல் எண் : 6
மொழியானை முன்ஒரு நான்மறை ஆறுஅங்கம்
பழியாமைப் பண்இசை யான பகர்வானை,
வழியானை, வானவர் ஏத்து மணஞ்சேரி
இழியாமை எத்தவல் லார்க்குஎய்தும் இன்பமே.

         பொழிப்புரை :முற்காலத்தே நான்மறைகளையும், ஆறு அங்கங்களையும் அருளியவன். அவற்றைப் பண்ணிசையோடு பிறர் பழியாதவாறு பகர்பவன். வேதாகம விதிகளைப் பின்பற்றி, வானவர்கள் வந்து துதிக்குமாறு திருமணஞ்சேரியில் விளங்குபவன். அத்தலத்தை இகழாமல் போற்ற வல்லவர்க்கு இன்பம் உளதாம்.
  

பாடல் எண் : 7
எண்ணானை, எண்அமர் சீர்இமை யோர்கட்குக்
கண்ணானை, கண்ஒரு மூன்றும் உடையானை,
மண்ணானை, மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்
பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.

         பொழிப்புரை :யாவராலும் மனத்தால் எண்ணி அறியப்படாதவன். தம் உள்ளத்தே வைத்துப்போற்றும் புகழ்மிக்க சிவஞானிகட்குக் கண்போன்றவன். மூன்று கண்கள் உடையவன். அட்டமூர்த்தங்களில் மண் வடிவானவன். சிறந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியில் உமையம்மையோடு கூடியவனாய் விளங்கும் அவ்விறைவன் புகழைப்பேசுவோர் பெரியோர் ஆவர்.

  
பாடல் எண் : 8
எடுத்தானை எழில்முடி எட்டும் இரண்டும்தோள்
கெடுத்தானை, கேடுஇலாச் செம்மை உடையானை,
மடுத்துஆர வண்டுஇசை பாடு மணஞ்சேரி
பிடித்துஆரப் பேணவல் லார்பெரி யோர்களே.

         பொழிப்புரை :கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனின் அழகியபத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அடர்த்தவன். மாறுபாடற்ற செம்மை நிலையை உடையவன். வண்டுகள் தேனை மடுத்து உண்ணுதற்கு இசைபாடிச் சூழும் திருமணஞ்சேரியில் உறையும் அவ்விறைவன் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொள்வார் பெரியார்கள்.
  

பாடல் எண் : 9
சொல்லானை, தோற்றம் கண்டானும், நெடுமாலும்
கல்லானை, கற்றன சொல்லித் தொழுதோங்க
வல்லார்நல் மாதவர் ஏத்தும் மணஞ்சேரி
எல்லாம் ஆம்எம்பெரு மான்கழல் ஏத்துமே.

         பொழிப்புரை :வேதாகமங்களைச் சொல்லியவன். உலகைப்படைக்கும் நான்முகன் திருமால் ஆகியோர்களாற் கற்றுணரப்படாத பெருமையன். தாம் அறிந்தவற்றைச் சொல்லித் தொழுது உயர்வுறும் அன்பர்களும் பெரிய தவத்தினை உடையவர்களும் தொழுது வணங்கும் திருமணஞ்சேரியில் உலகப் பொருள்கள் எல்லாமாக வீற்றிருக்கும் அப்பெருமான் திருவடிகளை ஏத்துவோம்.


பாடல் எண் : 10
சற்றேயும் தாம்அறிவு இல்சமண் சாக்கியர்
சொல்தேயும் வண்ணம்ஒர் செம்மை உடையானை,
வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரி
பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.

         பொழிப்புரை :சிறிதேனும் தாமாக அறியும் அறிவு இல்லாத சமண புத்தர்களின் உரைகள் பொருளற்றனவாய் ஒழியும் வண்ணம் ஒப்பற்ற செம்பொருளாய் விளங்கும் சிவபெருமானை வற்றாத நீர் நிலைகள் சூழ்ந்த திருமணஞ்சேரியை அடைந்து வழிபட்டு அவனையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்பவர்களை வினைகள் பற்றா.


பாடல் எண் : 11
கண்ஆரும் காழியர் கோன்,கருத்து ஆர்வித்த
தண்ஆர்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலை
மண்ஆரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரி
பண்ஆரப் பாடவல்லார்க்கு இல்லை பாவமே.

         பொழிப்புரை :கண்களுக்கு விருந்தாய் அமையும் சீகாழிப்பதியில் விளங்கும் சிவபிரானின் திருவுள்ளத்தை நிறைவித்த இனிய புகழ்பொருந்திய ஞானசம்பந்தன் பாடிய இத்தமிழ்மாலையை, வளம் நிறைந்த மண்சேர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருமணஞ்சேரியை அடைந்து பண் பொருந்தப்பாடிப் போற்றுவார்க்குப் பாவம் இல்லை.
                                             திருச்சிற்றம்பலம்




திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 190
மேவுபுனல் பொன்னிஇரு கரையும் சார்ந்து
         விடைஉயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக்
காஉயரும் மயிலாடு துறைநீள் பொன்னிக்
         கரைத்துருத்தி வேள்விக்குடி எதிர்கொள் பாடி
பாவுறு செந்தமிழ்மாலை பாடிப் போற்றிப்
         பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே
ஆவுறும்அஞ்சு ஆடுவார் கோடி காவில்
         அணைந்துபணிந்து ஆவடுதண் துறையைச் சார்ந்தார்.

         பொழிப்புரை : நீர் இடையறாது பொருந்திய காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் சேர்ந்து, ஆனேற்றுக் கொடியை உயர்த்திய சிவபெருமானின் திருச்செம்பொன்பள்ளியினைப் பாடிச் சோலைகள் உயர்ந்து சூழ்ந்த திருமயிலாடுதுறையையும், காவிரியின் இரு கரைகளிலும் உள்ள திருத்துருத்தி - திருவேள்விக்குடியையும், திருஎதிர்கொள்பாடியையும் தொழுது செந்தமிழ்ப் பதிகங்களான பாமாலைகளால் போற்றி, இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து சென்று, ஆன் ஐந்தையும் ஆடும் சிவபெருமானின் திருக்கோடிக்காவை அடைந்து, வணங்கிச் சென்று, திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.

         குறிப்புரை : இங்கு முதற்கண் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஐந்தாம். இவ்விடங்களில் பாடப்பெற்ற திருப்பதிகங்கள்:

1.    திருச்செம்பொன் பள்ளி: இது இக்காலத்துச் செம்பொனார்கோயில் என வழங்கப் பெறுகிறது.
(அ). `ஊனினுள் உயிரை` (தி.4 ப.29) - திருநேரிசை.
(ஆ) `கானறாத` (தி.5 ப.36) - திருக்குறுந்தொகை.

2.    திருமயிலாடுதுறை: `கொள்ளும் காதல்` (தி.5 ப.39) - திருக்குறுந்தொகை.

3.    3+4. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்: இறைவன் பகலில் திருத்துருத்தியிலும் இரவில் வேள்விக்குடியிலும் எழுந்தருளியிருப்பர். இதனால் இவ்விரு திருப்பதிகளையும் இணைத்தே ஞானசம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். நாவரசர் திருத்துருத்தி ஒன்றற்கே பதிகம் பாடியுள்ளார். `பொருத்திய` (தி.4 ப.42) - திருநேரிசை.

4.    திருஎதிர்கொள்பாடிக்கு உரிய பதிகம் கிடைத்திலது. இனி, இப்பதிகளோடு `பரமர் திருப்பதி பலவும் பணிந்து போந்தே` என ஆசிரியர் அருளுவதால், இதுபொழுது பாடிய பதிகள் வேறு பிறவும் உளவாம் எனத் தெரிகிறது.

அவையாவன:
1. திருஅன்னியூர் :
`பாறலைத்த` (தி.5 ப.8) - திருக்குறுந்தொகை.

2. திருமணஞ்சேரி:
`பட்டநெற்றியர்` (தி.5 ப.87) - திருக்குறுந்தொகை.

         இப்பாடலில் ஆசிரியர் நிறைவாக இருபதிகளைக் குறிக்கின்றார். அவை:

1. திருக்கோடிக்கா:
         (அ). `நெற்றிமேல்` (தி.4 ப.51) - திருநேரிசை.
         (ஆ). `சங்குலாம்` (தி.5 ப.78) - திருக்குறுந்தொகை.
         (இ). கண்டலஞ்சேர் (தி.6 ப.81) - திருத்தாண்டகம்.

2. திருவாவடுதுறை: இப்பதியில் அருளிய பதிகங்கள் வரும் பாடலில் குறிக்கப் பெறுகின்றன.


5. 087    திருமணஞ்சேரி                 திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்
நட்டம் நின்று நவில்பவர் நாள்தொறும்
சிட்டர் வாழ்திரு ஆர்மணஞ் சேரிஎம்
வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

         பொழிப்புரை : பட்டமணிந்த நெற்றியினரும் , பாயும் புலியின் தோலை உடுத்தவரும் , நாள்தொறும் நட்டமாடி நின்று பாடுவோரும் , உயர்ந்தவர் வாழ்கின்ற திருவுடைய மணஞ்சேரியில் வட்டமாகிய வார்சடை உடைய எமது பெருமானுமாகிய இறைவர் வண்ணத்தை வாழ்த்துவீராக .


பாடல் எண் : 2
துன்னு வார்குழ லாள்உமை யாளொடும்
பின்னு வார்சடை மேல்பிறை வைத்தவர்,
மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை
உன்னு வார்வினை ஆயின ஓயுமே.

         பொழிப்புரை : நெருங்கிய நீண்ட கூந்தலை உடைய உமா தேவியோடு கூடியவரும் , பின்னிய நீண்ட சடைமேற் பிறையை வைத்தவரும் ஆகிய நிலைபெற்ற நீண்ட புகழை உடைய திருமணஞ் சேரியில் மருந்தாம் பெருமானை உள்ளத்தே உன்னுவார்களின் வினைகள் ஓயும் .


பாடல் எண் : 3
புற்றில் ஆடுஅரவு ஆட்டும் புனிதனார்
தெற்றி னார்புரம் தீயெழச் செற்றவர்
சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார்
பற்றி னார்அவர் பற்றவர் காண்மினே.

         பொழிப்புரை : புற்றிற் பொருந்திய அரவினை ஆட்டும் புனிதரும் , எல்லை மீறிய முப்புராதிகளின் கோட்டைகளைத் தீயெழச் சினந்தவரும் , சுற்றிலும் நெருங்கிய மதில் சூழ்ந்த மணஞ்சேரி உறைபவருமாகிய இறைவரைப் பற்றினார்க்கு அவர் பற்றாவர் ; காண்பீராக .


பாடல் எண் : 4
மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை
முத்தர் முக்கணர் மூசுஅர வம்அணி
சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரிஎம்
வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

         பொழிப்புரை : ஊமத்தமலரும் , பிறையும் வளருஞ் சிவந்த சடையை உடைய முத்தி நாயகரும் , முக்குணங்களை உடையவரும் , ஒலிக்கும் அரவம் அணிந்த சித்தரும் , தீயின்வண்ணம் உடையவரும் , பெருமைமிக்க மணஞ்சேரியில் வித்தாயிருப்பாருமாகிய இறைவர் தம்மை விரும்பியவரைத் தாம் விரும்புபவர் ஆவர் .


பாடல் எண் : 5
துள்ளு மான்மறி தூமழு வாளினர்
வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர்
அள்ளல் ஆர்வயல் சூழ்மணஞ் சேரிஎம்
வள்ள லார்கழல் வாழ்த்தல்வாழ் வாவதே.

         பொழிப்புரை : துள்ளும் மான்குட்டியையும் , தூய மழு வாளினையும் உடையவரும் , சடைமேற் கங்கையை மறைத்தவரும் ஆகிய சேறு நிறைந்த வயல் சூழ்ந்த மணஞ்சேரியில் உறையும் வள்ளலார் கழல்களை வாழ்த்தலே வாழ்வாவது .


பாடல் எண் : 6
நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல்
ஊர்ப ரந்த உரகம் அணிபவர்
சீர்ப ரந்த திருமணஞ் சேரியார்
ஏர்ப ரந்துஅங்கு இலங்குசூ லத்தரே.

         பொழிப்புரை : கங்கைநீர் பரவி நிமிர்ந்து விளங்கும் சடையின் மேல் ஊர்ந்து பரவுகின்ற பாம்பினை அணிந்தவராகிய பெருமை பரவிய திருமணஞ்சேரி இறைவர் எழில் பெருகி விளங்கும் சூலப் படையினை உடையவர் .


பாடல் எண் : 7
சுண்ணத் தர்சுடு நீறுஉகந் துஆடலார்
விண்ணத்து அம்மதி சூடிய வேதியர்
மண்ணத் தம்முழவு ஆர்மணஞ் சேரியார்
வண்ணத்து அம்முலை யாள்உமை வண்ணரே.

         பொழிப்புரை : சுண்ணம் பூசியவரும் , சுட்ட வெண்ணீற்றினை உகந்து ஆடுபவரும் , விண்ணின் மதியைச் சூடிய வேதியரும் ஆகிய மார்ச்சனை பொருந்திய முழவு ஆர்க்கும் மணஞ்சேரி உறையும் இறைவர் , நிறம் உடைய முலையாளாகிய உமையின் வண்ணம் உடையவர் ஆவர் .


பாடல் எண் : 8
துன்ன ஆடையர் தூமழு வாளினர்
பின்னு செஞ்சடை மேல்பிறை வைத்தவர்
மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரிஎம்
மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.

         பொழிப்புரை : பின்னிய நூலாடையினரும் , தூயமழு வாளினரும் , பின்னிய சிவந்த சடையின்மேல் பிறை வைத்தவரும் ஆகிய , நிலை பெற்ற நீண்ட பொழில்கள் சூழும் மணஞ்சேரி உறையும் மன்னனார் கழலே தொழ வாய்ப்பாவது .


பாடல் எண் : 9
சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன்
புத்தர் சேர்அமண் கையர் புகழவே
மத்தர் தாம்அறி யார்மணஞ் சேரிஎம்
அத்த னார்அடி யார்க்குஅல்லல் இல்லையே.

         பொழிப்புரை : சித்தர்களும் , தேவர்களும் , திருமாலும் , நான்முகனும், புத்தரும், உடையற்றவராய சமண ஒழுக்கத்தினரும் புகழ , உலக மையலிற்பட்டவர் அறியாத மணஞ்சேரி மேவிய எம் தலைவரது அடியார்க்கு அல்லல் இல்லை .


பாடல் எண் : 10
கடுத்த மேனி அரக்கன் கயிலையை
எடுத்த வன்நெடு நீள்முடி பத்துஇறப்
படுத்த லும்மணஞ் சேரி அருஎனக்
கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

         பொழிப்புரை : ஆற்றல் மிகுந்த இராவணன் திருக்கயிலையை எடுத்தபோது அவன் நீண்ட முடிகள் பத்தும் இற்றுவிழச் செய்தலும், ` மணஞ்சேரி இறைவா! அருள்வாயாக` என்று அவன்கூவ அவனுக்கு வெற்றிதரும் வாளையும், நாமத்தையும் கொடுத்தனன் பெருமான்.


                                              திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...