திருக் குறுக்கை வீரட்டம்





திருக் குறுக்கை வீரட்டம்
(கொருக்கை)

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் 'கொருக்கை' என்று வழங்குகிறது.

         மயிலாடுதுறையிலிருந்து 12 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - மணல்மேடு பேருந்துச் சாலையில் நீடூர் தாண்டிச் செல்ல வேண்டும். மயிலாடுதுறை - மணல்மேடு நகரப் பேருந்துகள் உள்ளன. வாகனங்களில் கோயில் வரை செல்லலாம்.
  
இறைவர்               : வீரட்டேசுவரர்.

இறைவியார்           : ஞானாம்பிகை

தல மரம்                : கடுக்கா

தீர்த்தம்                 : சூல தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : அப்பர் - 1. ஆதியிற் பிரம னார்,
                                                               2. நெடியமால் பிரம னோடு
         
          இங்குள்ள சூல தீர்த்தத்தின் பெருமையறியாது, 'தீர்க்கபாகு' என்னும் முனிவர், கங்கை நீரைப் பெறவேண்டித் தம் கைகளை நீட்டியபோது அக்கைகள் குறுகிவிட்டன. அதுகண்டு தம்பால் பிழை நேர்ந்தது என்றெண்ணித் தலையைப் பாறைமீது மோதமுற்பட, இறைவன் காட்சி தந்து, அவர் உடற்குறையைப் போக்கினார் என்பது வரலாற்றுச் செய்தி. இத்தலம் 'குறுங்கை முனிவர் ' என்று இவர் பெயரால் அழைக்கப்பட்டு, நாளடைவில் 'குறுக்கை' என்று ஆனதாகச் சொல்லப்படுகிறது.

          மன்மதனை எரித்தத் தலம்.

          யோகீசபுரம், காமதகனபுரம், கம்பகரபுரம் என்பன இதன் வேறு பெயர்களாகும்.

          ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்களில் பன்றி, யானை, நரசிம்மம், மனிதன் ஆகிய நான்கு முகங்களையுடைய ஒரு மூர்த்தியின் சிற்பம் காணத்தக்கது.    கொடிமரமில்லை.

          காமனைத் தகனம் செய்த இடம் 'விபூதிக்குட்டை ' என்ற பெயரில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது; இக் குட்டையில் எங்கெடுத்தாலும் மண்ணானது விபூதியாவேயுள்ளது.

          குறுக்கை விநாயகர் - தலவிநாயகர் சந்நிதி உள்ளது; இச்சந்நிதியில் விநாயகர் சதுர ஆவுடையாரில் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.

          நடராச சபையில் சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இச்சபை, 'சம்பு விநோத சபை', 'காமனங்கநாசனி சபை' எனப் பெயர் பெறும்.

          மூலவர் சுயம்பு மூர்த்தி; சதுர ஆவுடையார் - உயர்ந்த பாணம். மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் (ஐந்து அம்புகளுள்) ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.

          மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ள தலபுராணம் உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மணம் சேர்ந்து வார் அட்ட கொங்கை மலையாளொடும் கொறுக்கை வீரட்டம் மேவும் வியன் நிறைவே" என்று போற்றி உள்ளார்.

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு எழுந்தருளக் கோலக் காவை
         அவரோடும் சென்றுஇறைஞ்சி, அன்பு கொண்டு
மீண்டுஅருளி னார், அவரும் விடைகொண்டு, இப்பால்
         வேதநா யகர்விரும்பும் பதிகள் ஆன
நீண்டகருப் பறியலூர், புன்கூர், நீடூர்,
         நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய நனிபள்ளி முதலா நண்ணி,
         கண்ணுதலார் கழல்தொழுது வணங்கிச் செல்வார்.

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய பெருமைமிக்க திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி மேற்செல்பவராய்.

         குறிப்புரை : திருக்கோலக்காவில் அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள் ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும் திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.

         திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு பதிகங்கள் கிடைத்து உள்ளன.
                  1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;

                  2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.

         இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல் தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன. திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.



4. 049    திருக்குறுக்கைவீரட்டம்            திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆதியில் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவர் உணருமாறு உணரல் உற்றார்
சோதியுள் சுடராய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார், பல்பூக்
கோதிவண்டு அறையும் சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :ஆதிப்பிரமர் வண்டுகள் மலர்களைக் கோதி ஒலிக்கும் சோலைகளால் சூழப்பட்ட குறுக்கைவீரட்டனார் திருவடிக்கீழ் அர்ச்சனை செய்தார். வேதம் ஓதிய நாவினை உடைய பிரமனார் தம்மை வழிபாட்டால் உணருந்தன்மையைச் சிவபெருமான் உணர்ந்தவராவர். அப்பெருமான் சூரியன் முதலிய ஒளிப்பொருள்களுக்கு ஒளிதருபவராய் ஆரேனும் அமர்ந்திருந்து சொல்லும் நிலையைக் கடந்த பெருமையுடையவர்.


பாடல் எண் : 2
நீற்றினை நிறையப் பூசி, நித்தலும் நியமம் செய்து,
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தண னாரைக் கொல்வான்
சாற்றுநாள் அற்றது என்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :திருநீற்றை உடல்நிறையப் பூசி நாடோறும் செய் கடன்களைச்செய்து , காவிரி நீரை நிறைத்து அபிடேகம் செய்யும் மார்க்கண்டேயருக்குப் பிரமனால் குறிப்பிடப்பட்ட வாழ்நாள் முடிந்து விட்டது என்று அவரைக் கொல்வதற்காகத் தருமராசருடைய ஆணைப்படி வந்த கூற்றுவனைக் குறுக்கை வீரட்டனார் தண்டித்தார் .


பாடல் எண் : 3
தழைத்தது ஓர் ஆத்தி யின்கீழ் தாபரம் மணலால் கூப்பி
அழைத்து அங்கே ஆவின் பாலைக் கறந்துகொண்டு ஆட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :தழைகள் நிரம்பிய ஆத்தி மரத்தின் கீழே மணலால் இலிங்கம் அமைத்து எம்பெருமானை அவன் திருநாமங்களைக் கூறி அழைத்து விசாரசருமன் பசுவின் பாலைக் கறந்து கொண்டு அபிடேகம் செய்ததனைக் கண்டு தவறு செய்த தன்னுடைய தந்தையின் கால்களைப் பெரிய வளைந்த மழுவாயுதத்தால் வெட்ட அவ்விசார சருமனுக்குக் குறுக்கை வீரட்டனார் சிவானந்தமாகிய அமுதத்தைக் குழைத்துக் கொடுத்துள்ளார் .


பாடல் எண் : 4
சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழல் பந்தர் செய்து
உலந்துஅவண் இறந்த போதே கோச்செங்க ணானும் ஆகக்
கலந்த நீர்க் காவிரீ சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்
குலந்தனில் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :திருவானைக்காவிற் பெருமானுக்கு அழகிய நிழலைத்தரும் பந்தலை அமைத்த சிலந்தி இறந்தபின் மறுபிறப்பில், சுவாமியுடன் கலந்து பயின்ற நீரைஉடைய காவிரியாற் சூழப்பட்ட சோழ நாட்டு மன்னர் மரபிலே கோச்செங்கண்ணான் என்ற பெயருடைய அரசனாகுமாறு பிறப்பித்து விட்டார் குறுக்கை வீரட்டனார் .


பாடல் எண் : 5
ஏறுஉடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம்பூக் கொண்டு
ஆறுஉடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடி இணைக்கீழ்
வேறும்ஓர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை ஈண்டக்
கூறும்ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :ஏழு இடபங்களையும் ஒரு சேர அழித்த கண்ணனாக அவதரித்த திருமால் கங்கா சடாதரனை அவன் திருவடிகளின்கீழ் ஆயிரம் தாமரைப் பூக்கள் கொண்டு அருச்சித்தானாக அப்பூக்களில் ஒரு பூக்குறைய அக்குறைவை நீக்கத் தாமரை போன்ற தன் கண் ஒன்றனைப் பெயர்த்து அருச்சிக்க , அத்திருமாலுக்கு எல்லோராலும் புகழப்படும் சக்கராயுதத்தை வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .


பாடல் எண் : 6
கல்லினால் எறிந்து, கஞ்சி தாம்உணும் சாக்கி யனார்
நெல்லினார் சோறு உணாமே நீள்விசும்பு ஆள வைத்தார்,
எல்லி ஆங்கு எரிகை ஏந்தி எழில் திகழ் நட்டம்ஆடிக்
கொல்லியாம் பண் உகந்தார் குறுக்கை வீரட்டனாரே.

         பொழிப்புரை :சிவபெருமான் மீது நாடோறும் ஒரு கல்லினை எறிந்த பின்னரே தாம் உண்ணும் நியமத்தைக் கொண்ட சாக்கிய நாயனார் இவ்வுலகிலிருந்து அரிசிச் சோறு உண்ணாமல் மேம்பட்ட வீட்டுலகை ஆளுமாறு செய்தவர், இரவிலே உள்ளங்கையில் தீயை ஏந்தி அழகிய கூத்து நிகழ்த்திக் கொல்லிப்பண்ணை விரும்பிப் பாடும் குறுக்கை வீரட்டனாராவர் .


பாடல் எண் : 7
காப்பதுஓர் வில்லும் அம்பும், கையதுஓர் இறைச்சிப் பாரம்,
தோல்பெரும் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெருங் கண்கள் செய்ய குருதிநீர் ஒழுகத் தன்கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார், குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :காவல் செய்வதற்குரிய வில்லும் அம்பும் ஒரு கையிலும் , நிவேதனத்திற்குரிய இறைச்சிச் சுமை மற்றொரு கையிலும் பொருந்த , காலில் தோலாலாகிய பெரிய செருப்பினை அணிந்து , தூயவாயினில் நீரைக்கொணடு கலசநீரால் அபிடேகிப்பது போல எம் பெருமானை அபிடேகித்து , அப்பெருமானுடைய ஒளிவீசும் பெரிய கண்களில் இரத்தம் பெருகி ஒழுகத் தன் கண் ஒன்றனைப் பெயர்த்து முதலில் ஒரு கண்ணில் அப்பிப்பின் மற்றொரு கண்ணைப் பெயர்க்க அதன்கண் அம்பினைச் செலுத்திய அளவில் அத்திண்ணனுடைய கையைப் பற்றிக்கொண்டார் குறுக்கை வீரட்டனார் .


பாடல் எண் : 8
நிறை மறைக் காடு தன்னில் நீண்டுஎரி தீபம் தன்னைக்
கறை நிறத்து எலி தன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட
நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்டவான் உலகம் எல்லாம்
குறைவு அறக் கொடுப்பர்போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :மந்திர சித்தி நிறைந்த வேதங்கள் பூசித்த மறைக் காட்டில் நீண்டு எரியும் திறத்ததாகிய விளக்கினைக் கறுத்த நிறத்தை உடைய எலி தன் மூக்கினை அத்தீப்பிழம்பு சுட்டிட அதனால் வெகுண்டு திரியைத் தூண்டி விளக்கு நல்ல ஒளியோடு எரியச் செய்ய அந்த எலிக்கு மறுபிறப்பில் கடலால் சூழப்பட்ட நிலஉலகம், தேவர் உலகம், நீண்ட மேலுலகங்கள் ஆகியவற்றை எல்லாம் ஆளுமாறு குறைவற வழங்கினார் குறுக்கை வீரட்டனார் .


பாடல் எண் : 9
அணங்குஉமை பாகம் ஆக அடக்கிய ஆதி மூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த
கணம்புல்லர்க்கு அருள்கள் செய்து காதலாம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை :பார்வதியைப் பாகமாகத் தம் திருமேனியில் அடக்கிக் கொண்ட வடிவினராய் , தம்மை வணங்குபவர்களுடைய துயரம் போக்கும் மருந்தாகியவராய் , நல்ல மேம்பட்ட தவத்தை உடைய கணம்புல்ல நாயனாருக்கு அருள்கள் செய்து , தம்மிடம் அன்பு பூணும் அடியவர்களுக்கு , நல்ல பண்புகளை அருளுவார் குறுக்கை வீரட்டனார் .


பாடல் எண் : 10
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்துஒரு விரலால் ஊன்ற, அலறிப்போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன், கைந்ந ரம்பால் வேதகீ தங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாழ்நாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட இலங்கையின் மன்னனாகிய இராவணனைப் பொருந்திய கால் விரலால் அழுத்திய அளவில் அலறிப் போய் அவன் செயலற்று விழுந்து , செருக்கினை விடுத்துக் கை நரம்புகளை வீணை நரம்புகள் ஆக்கி ஒலித்து வேத கீதங்களைப் பாட , அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும் நீண்ட ஆயுளையும் நல்கினார் குறுக்கை வீரட்டனார் .

                                             திருச்சிற்றம்பலம்


4.  050   திருக்குறுக்கைவீரட்டம்                  திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
நெடியமால் பிரம னோடு நீர்எனும் பிலயம் கொள்ள
அடியொடு முடியும் காணார், அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடிஉடை வேடர் ஆகித் தூயமந் திரங்கள் சொல்லிக்
கொடிநெடுந் தேர்கொ டுத்தார், குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : உலகங்களை எல்லாம் ஊழி வெள்ளம் மூழ்க்கிய காலத்தில் , சிவபெருமான் தீப்பிழம்பாகத் தோன்ற , பிரமனும் , நெடியோனாகிய திருமாலும் முறையே அவருடைய முடிஅடிகளைக் காணா நிலையினராயினர் . அப்பெருமான் திருக்குறுக்கை வீரட்டத்து உறைபவராய்த் துடி என்னும் பறையை ஒலிக்கும் வேடர்வடிவினராய் அருச்சுனனுக்குத் தூயமந்திரங்களை உபதேசித்து அம்பும் வில்லும் கொடிகள் உயர்த்தப்படும் தேரும் வழங்கியுள்ளார் .


பாடல் எண் : 2
ஆத்தம்ஆம் அயனும் மாலும் அன்றிமற்று ஒழிந்த தேவர்
சோத்தம்எம் பெருமான் என்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமாம் அட்டமீ முன் சீர்உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

         பொழிப்புரை : குருவிற்குத் தொண்டு செய்யும் பிரமனும் திருமாலும் ஏனைய தேவர்களும் ` எம்பெருமானே உனக்கு அஞ்சலி செய்கிறோம் ` என்று தொழுது தோத்திரங்களை மொழியக் குறுக்கை வீரட்டனார் பிரமோற்சவ வேள்வி நிகழும் அட்டமிக்கு முற்பட்ட ஏழு நாள்களும் கூத்தாடுபவராய்த் திருவீதி உலாவை நிகழ்த்தியவராவர் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...