திருக் கருப்பறியலூர்
(தலைஞாயிறு)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
மயிலாடுதுறை -
மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே
சுமார் 2 கி.மீ. தொலைவில்
இத்திருத்தலம் உள்ளது.
வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள்
சாலையில், "தலைஞாயிறு"
என்று கைகாட்டி உள்ள இடத்தில், வலதுபுறம் பிரிந்து
செல்லும் சாலையில் சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.
வைத்தீசுவரன் கோயிலில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
இறைவர்
: குற்றம் பொறுத்த நாதர்
இறைவியார்
: கோல்வளை நாயகி
தல
மரம் : கொகுடி முல்லை
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
தேவாரப்
பாடல்கள் : 1. சம்பந்தர் - சுற்றமொடு பற்றவை
2. சுந்தரர் - சிம்மாந்து
சிம்புளித்து
இத்தலம் இந்நாளில் "தலைஞாயிறு"
என்று வழங்குகிறது. இங்குள்ள ஆலயம் "கொகுடிக்கோயில்" என்று பெயர்
பெறும். கொகுடி என்பது ஒருவகை முல்லை. இதன் வடிவில் அமைந்த கோயில் ஆதலால் இப்பெயர்
பெற்றது. சீகாழிக்கு மேற்கில் இருப்பதால் மேலைக்காழி என்றும், சூரியன் வழிபட்டதால் தலைஞாயிறு என்றும், ஆதித்யபுரி என்றும் இத்தலம்
அழைக்கப்படுகிறது.
தருமையாதீனத்தின் கட்டுப்பாட்டின் கீழ்
உள்ள இவ்வாலயம் கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.
உள்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்பில் காணப்படுகிறது. பிராகாரத்தில்
சீர்காழியிலிருப்பது போல உயர்ந்த தனிக்கோயிலாகச் சட்டைநாதர் சந்நிதி உள்ளது.
மேலேறிச் சென்று தோணியப்பரைத் தரிசித்து அதற்கும் மேலே சென்று சட்டை நாதரைத்
தரிசிக்க செங்குத்தான மரப்படிகளை ஏறவேண்டும். இதனாலேயே இத்தலம் மேலைக்காழி
என்று அழைக்கப்படுகிறது. தோணியப்பர் சந்நிதியை இத்தலத்தில் கர்ப்பஞானேஸ்வரர்
கர்ப்பஞானபரமேஸ்வரி சந்நிதி என்றழைக்கின்றனர். தலமரமான கொகுடிமுல்லை
லிங்கோத்பவருக்கு எதிரில் காணப்படுகிறது.
ஒருமுறை இந்திரன் இறுமாப்புடன்
கயிலைக்குச் சென்றான். அப்பொழுது இறைவர் பூதவடிவாய் அவன்முன் தோன்றினார். இந்திரன்
இறைவன் என்றறியாமல் அவர் மீது வச்சிராயுதத்தை எறிந்தான். அதன்பின் இறைவர் என்று
அறிந்து தன்பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினான். இறைவனும் இந்திரனின் குற்றத்தைப்
பொறுத்தருள் செய்தமையால் குற்றம் பொறுத்த நாதர் என்று இத்தல இறைவனுக்கு பெயர்
ஏற்பட்டது என்று தலவரலாறு கூறுகிறது. மேலும் இத்தல இறைவன் அனுமனால்
பூஜிக்கப்பட்டவர். தான் லிங்கத்தை கொண்டு வருவதற்குள் சீதை மணலால் லிங்கம் செய்து
இராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த
லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் முடியவில்லை. இப்படி செய்ததால்
அனுமனுக்கு சிவஅபராதம் ஏற்பட்டது. இந்த தோஷத்தைப் போக்கிக் கொள்ள சிவனைக் குறித்து
தவம் செய்யும்படி இராமர் அனுமனுக்கு ஆலோசனை கூறினார். அனுமனும் அவ்வாறே செய்ய, சிவன் தோன்றி அனுமனிடம் "தலைஞாயிறு
எனப்படும் இத்தலம் சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும்" என்று
அருள்பாலித்தார். அனுமனும் அதன் படி தலைஞாயிறு தலம் வந்து வழிபட்டு தோஷம் நீங்க
பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து இத்தலத்தின் வடகிழக்கில்
தன்பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். இத்தலம் தற்போது
"திருக்குரக்கா"' என வழங்கப்படுகிறது.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், ஓர் அட்ட திக்கும் கதி நாட்டி, சீர் கொள் திருத்தொண்டர்
உளம் ஒக்கும் கருப்பறியலூர் அரசே" என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 253
நம்பரை
நலம்திகழ் நாரை யூரினில்
கும்பிடும்
விருப்பொடு குறுகிக் கூடிய
வம்புஅலர்
செந்தமிழ் மாலை பாடிநின்று
எம்பிரான்
கவுணியர் தலைவர் ஏத்தினார்.
பொழிப்புரை : இறைவரை நன்மை
விளங்கும் திருநாரையூரில் வழிபடும் விருப்புடன் சென்று சேர்ந்து, சிவமணம் கமழ்ந்து விரிகின்ற மாலைகளான
திருப்பதிகங்களைப் பாடி நின்று,
எம்
தலைவரான கவுணியர் குலத்தலைவர் வணங்கினர்.
குறிப்புரை : வம்பு: சிவமணம்.
கூடிய - கமழ்கின்ற. இத்திருப்பதி யில் இதுபொழுது பாடிய பதிகங்கள் பல இருத்தல்
வேண்டும். எனினும் கிடைத்திருக்கும் பதிகங்கள் மூன்றேயாம். இவற்றுள் முன்னர்ப்
பாடியது, பின்னர்ப் பாடியன
எவையெனப் பிரித்தறிய இயலாதுள்ளன. எனினும், `உரையினில் வந்தபாவம்\' (தி.2 ப.86) எனத் தொடங்கும் பியந்தைக்காந்தாரப்
பண்ணிலமைந்த பதிகத்தை முன்னர் அருளியதாகக் கொள்ளலாம். அடுத்துப் பாடிய பதிகங்கள்:
1. `காம்பினை வென்ற' (தி.3 ப.102) - பழம்பஞ்சுரம்
2. `கடலிடை வெங்கடு' (தி.3 ப.107) - பழம்பஞ்சுரம்
பெ.
பு. பாடல் எண் : 254
அப்பதி
பணிந்து,அருந் தமிழ்பு னைந்து, தம்
மெய்ப்படு
விருப்பொடு மேவும் நாள்அரன்
பொன்பதி
பலவும்முன் பணிந்து போந்தனர்,
பைப்பணி
யவர்கருப் பறிய லூரினில்.
பொழிப்புரை : அத்திருப்பதியின்
கண்ணுள்ள இறைவரை வணங்கி அரிய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் தம் உள்ளன்பு நிறைந்த
விருப்புடன் தங்கியிருந்த அந்நாள்களில், அருகிலிருக்கும்
இறைவரின் அழகிய பதிகள் பலவற்றையும் சென்று பணிந்து போந்தவர், பையையுடைய பாம்பைச் சூடிய இறைவர்
வீற்றிருக்கும் திருக்கருப்பறியலூர் வந்து சேர்ந்தார்.
குறிப்புரை : திருநாரையூரில்
தங்கியிருந்த நாள்களில், அருகில் இருக்கும் பதிகள்
பலவற்றையும் வணங்கித் திருப்பதிகங்கள் பாடிப் போந்ததாக ஆசிரியர்
குறித்தருளுகின்றார். அப்பதிகள்,
குரக்குக்கா
முதலியன போலும் எனக் குறிக்கின்றார் சிவக்கவிமணியார். எனினும் அப்பதிக்கு, பிள்ளையார் பாடிய பதிகம் காணக்
கிடைத்திலது.
பெ.
பு. பாடல் எண் : 255
பரமர்தந்
திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச்
சிறுவர்கை தொழுது, செந்தமிழ்
உரைஇசை
பாடி,அம் மருங்கின்
உள்ளவாம்
சுரர்தொழும்
பதிகளும் தொழுது பாடினார்.
பொழிப்புரை : சிவபெருமானின்
திருக்கருப்பறியலூரை வணங்கிச் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளிய சீகாழிப்
பிள்ளையார், அதற்கு அருகிலுள்ள
தேவர்கள் வணங்குகின்ற பிற திருப்பதிகளையும் வணங்கிப் பாடினார்.
குறிப்புரை : திருக்கருப்பறியலூரில்
பாடிய பதிகம் `சுற்றமொடு பற்றவை' (தி.2 ப.31) என்று தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த
பதிகமாகும். அருகிலுள்ள பதிகளையும் வணங்கினார் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
அப்பதிகள் திருப்புன்கூர், திருப்புள்ளிருக்கு
வேளூர் முதலாயினவாகலாம் எனக் கருதுவர் சிவக்கவிமணியார்.
2.031 திருக்கருப்பறியலூர் பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சுற்றமொடு
பற்றுஅவை துயக்குஅற அறுத்துக்
குற்றம்இல்
குணங்களொடு கூடும்அடி யார்கள்
மற்றவரை
வானவர்தம் வானுலகம் ஏற்றக்
கற்றவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக்
குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம்
ஏற்றலைச் செய்யும் சிவபிரான் இருக்குமிடம் கருப்பறியலூர்.
பாடல்
எண் : 2
வண்டுஅணைசெய்
கொன்றைஅது வார்சடைகள்மேலே
கொண்டுஅணைசெய்
கோலம்அது கோள்அரவி னோடும்
விண்டுஅணைசெய்
மும்மதிலும் வீழ்தரவொர் அம்பால்
கண்டவன்
இருப்பது கருப்பறிய லூரே,
பொழிப்புரை :வண்டுகள் அணைதலைச்
செய்கின்ற கொன்றை மலர்மாலையை நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும் பாம்பு அணைதலைச்
செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும்
உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 3
வேதமொடு
வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு
போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதன்என
நள்ளிருள்முன் ஆடுகுழை தாழும்
காதவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :வேதியர்கள் வேதங்களை
ஓதுவதோடு வேள்வி முதலியனவற்றைச் செய்து, காலம்
பெற அரும்புகளையும் மலர்களையும் சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற
குழைதாழ ஆடும் காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 4
மடம்படு
மலைக்குஇறைவன் மங்கைஒரு பங்கன்
உடம்பினை
விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்துஅணவு
காலன்உயிர் கால,ஒரு காலால்
கடந்தவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :மலையரசனின் மகளாகிய
மடப்பம் பொருந்திய உமையொருபாகனும்,
உடலைவிட்டு
உயிர் செல்லும் காலம் வருவதை அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவரவந்த
காலனின் உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான்
வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.
பாடல்
எண் : 5
ஒருத்திஉமை
யோடும்ஒரு பாகம்அது ஆய
நிருத்தன்அவன்
நீதிஅவன் நித்தன்,நெறி ஆய
விருத்தன்அவன், வேதம்என அங்கம்அவை
ஓதும்
கருத்தவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :ஒருபாகமாக
ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும் அழியாதவனும், நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை ஓதும்
தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 6
விண்ணவர்கள்
வெற்புஅரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்அமரும்
மென்மொழியி னாளைஅணை விப்பான்
எண்ணிவரு
காமன்உடல் வேவஎரி காலும்
கண்ணவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய
உமையம்மையை, சிவபிரானது
திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவவந்த காமனது உடல் வெந்தழியுமாறு
எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 7
ஆதிஅடி
யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்
சோதிஒளி
நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய
வந்துஅணையும் அந்தகன் அரங்கக்
காதினன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :உலகின் ஆதியாய்
விளங்கும் தன்னை வழிபட நீர், மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டு மலையாய்
உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்தணைந்த
காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான் எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 8
வாய்ந்தபுகழ்
விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்
பாய்ந்துஅமர்செ
யும்தொழில் இலங்கைநகர் வேந்தற்கு
ஏய்ந்தபுயம்
அத்தனையும் இற்றுவிழ மேனாள்
காய்ந்தவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :புகழ் வாய்ந்த
தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை
மன்னனுக்கு அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில் சினந்தவனாகிய
சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.
பாடல்
எண் : 9
பரந்தது
நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை
மேல்மிசை உகந்துஅவளை வைத்து
நிரந்தரம்
நிரந்துஇருவர் நேடிஅறி யாமல்
கரந்தவன்
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :வரிசையாகப் பரவிப்
பெருகி வந்த அலைவீசும் கங்கை சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய
கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால்
பிரமர் தேடி அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய் ஒளித்திருக்கும்
சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.
பாடல்
எண் : 10
அற்றம்மறை
யாஅமணர், ஆதமிலி புத்தர்
சொல்தம்அறி
யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றம்அறி
யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றுஎன
இருப்பது கருப்பறிய லூரே.
பொழிப்புரை :மறைக்கவேண்டிய
உறுப்பை மறையாது ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும் திறன்
அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத பெருமான் கொகுடிக்
கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய ஊர் கருப்பறியலூர்.
பாடல்
எண் : 11
நலம்தரு
புனல்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர்
கருப்பறியல் மேயகட வுள்ளைப்
பலம்தரு
தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று
வலம்தரும்
அவர்க்குவினை வாடல்எளிது ஆமே.
பொழிப்புரை :நன்மைகளைத்தரும் நீர்
வளம் மிக்க புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில்
மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும்
கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள் வாடுதல் எளிதாம்.
திருச்சிற்றம்பலம்
----------------------------------------------------------------------------------------------------------
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
சுந்தரர் தில்லையில் கூத்தப்பெருமானைக்
கும்பிட்டுத் திருக்கருப்பறியலூர் என்னும் திருக்கொகுடிக் கோயிலினை அடைந்து
பணிந்து தங்கியிருக்கும் நாள்களில்,
இறைவர்
தமை நினைவதனால் பெறும் இன்பத்தை எடுத்துச் சொல்லிப் பாடியருளியது இத்
திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன் புரா. 115-118)
பெரிய
புராணப் பாடல் எண் : 116
மீளாத
அருள்பெற்றுப் புறம்போந்து,
திருவீதி மேவித்
தாழ்ந்தே,
ஆள்ஆன
வன்தொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து
வைகி,
மாளாத
பேர்அன்பால் பொற்பதியை
வணங்கிப்போய், மறலி வீழத்
தாள்ஆண்மை
கொண்டவர்தம் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று
சார்ந்தார்.
பொழிப்புரை : தில்லைக் கூத்தனை
வழிபட்டுப் பிரியாத அருள் பெற்று, வெளியே
சென்று, கோயிலின் திருவீதியை
அணைந்து தாழ்ந்து வணங்கி, பெருமானுக்கு ஆளான
நம்பிகள், தில்லையில் வாழும்
அந்தணர்கள் தம்மைப் போற்ற, அவர்களுடன் அங்கு
அமர்ந்து இருந்து, பின்பும் நீங்காத
பேரன்பினால் பொற்பதியாம் தில்லையை வணங்கி, அப்பால் சென்று, இயமன் வீழ்ந்திடத் திருவடியை ஓச்சி
அருளிய பெருமானது திருக்கருப்பறியலூரை வணங்கி அப்பால் சென்று சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 117
கூற்றுஉதைத்தார்
திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத்
தொழுதுபுகுந்து, அன்பர் சூழ,
ஏற்றபெரும்
காதலினால் இறைஞ்சி ஏத்தி,
எல்லைஇலாப்
பெருமகிழ்ச்சி மனத்தில் எய்த,
போற்றிஇசைத்துப்
புறத்துஅணைந்து,அப் பதியின் வைகி,
புனிதர்அவர்
தமைநினையும் இன்பம் கூறிச்
சாற்றியமெய்த்
திருப்பதிகம் "சிம்மாந்து" என்னும்
தமிழ்மாலை
புனைந்துஅங்குச் சாரும் நாளில்.
பொழிப்புரை : இயமனை உதைத்தருளிய
பெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கொகுடிக் கோயிலை அடைந்து, முதற்கண் கோபுரத்தைத் தொழுது, உட்சென்று அன்பர்கள் சூழ்ந்துவரப்
பெருவிருப்பால் இறைவனைப் போற்றி,
எல்லையில்லாத
பெருமகிழ்ச்சி மனத்தில் பொருந்தப் பெருமானைப் போற்றிப் பாடிப் புறமே போந்து, அத்திருப்பதியில் வதிந்திடும் நாள்களில், அப்புனிதராய பெருமானை நினைவதால் வரும்
இன்பப்பெருக்கினை எடுத்து மொழிந்தருளும் திருப்பதிகமான `சிம்மாந்து' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, அத்தமிழ் மாலையை, இறைவற்குச் சார்த்தி, அங்கு இருந்திடுங் காலத்தில்,
குறிப்புரை : திருக்கருப்பறியலூர்
- ஊர்ப் பெயர். கொகுடிக் கோயில் - கோயிலின் பெயர். கொகுடி - முல்லை. முல்லையினை
உடைய கோயில். இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது. அங்குத்
தங்கியிருந்த நாள்களில் அருளிய பதிகம் `சிம்மாந்து' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில்
அமைந்ததாகும் (தி.7 ப.30). `எம்மானை மனத்தினால்
நினைந்தபோது அவர் நமக்கு இனியவாறே'
எனவரும்
பதிகக் குறிப்பே ஈண்டு விளக்கப் பெறுகின்றது.
7. 030 திருக்கருப்பறியலூர் பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சிம்மாந்து
சிம்புளித்துச் சிந்தையினில்
வைத்துஉகந்து, திறம்பா வண்ணம்
கைம்மாவின்
உரிவைபோர்த்து உமைவெருவக்
கண்டானை, கருப்ப றியலூர்க்
கொய்ம்மாவின்
மலர்ச்சோலைக் குயில்பாட
மயில்ஆடும் கொகுடிக்
கோயில்
எம்மானை, மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : யானைத் தோலைப்
போர்த்துநின்ற காலத்தில் உமையவள் அஞ்ச , அதனைக்
கண்டு நின்றவனும் , திருக்கருப்பறியலூரில்
உள்ள , தளிர் கிள்ளுதற்குரிய
மாமரங்களில் இருந்து குயில்கள் பாட , கீழே
மயில்கள் ஆடுகின்ற சோலைகளையுடைய கொகுடிக் கோயிலில்கண் எழுந்தருளியுள்ள
எம்பெருமானும் ஆகிய இறைவனை , நாம் உடலை நேரே
நிறுத்திக் கண்களைச் சிறிது மூடியிருந்து உள்ளத்தில் அன்போடு நிலை பெயராது இருத்தி
, இவ்வாறு மனத்தினால்
நினைந்தபோது , அவன் நமக்கு
இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 2
நீற்றுஆரும்
மேனியராய் நினைவார்தம்
உள்ளத்தே நிறைந்து
தோன்றும்
காற்றானை, தீயானை, கதிரானை,
மதியானை, கருப்ப றியலூர்க்
கூற்றானை, கூற்றுஉதைத்து, கோல்வளையாள்
அவளோடும் கொகுடிக்
கோயில்
ஏற்றானை, மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : திருநீற்றால் நிறைந்த
மேனியை உடையவராய் நினைக்கின்றவரது உள்ளத்தில் நிறைந்து தோன்றுபவனும், `காற்று, தீ, ஞாயிறு, திங்கள்` என்னும் பொருள்களாய் நிற்பவனும், அழித்தல் தொழிலையுடையவனும் , கூற்றுவனை உதைத்தவனும் , வரிசையாகப் பொருந்திய வளைகளையுடைய
உமாதேவியோடும் திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலைத் தனக்கு உரிய இடமாக
ஏற்றுக் கொண்டவனும் ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை
சொல்லுதற்கரிது.
பாடல்
எண் : 3
முட்டாமே
நாள்தோறும் நீர்மூழ்கி,
பூப்பறித்து, மூன்று போதும்
கட்டுஆர்ந்த
இண்டைகொண்டு அடிசேர்த்தும்
அந்தணர்தம் கருப்ப
றியலூர்க்
கொட்டுஆட்டுப்
பாட்டுஆகி நின்றானை,
குழகனை, கொகுடிக் கோயில்
எட்டுஆன
மூர்த்தியை நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : நாள்தோறும் , ` காலை , நண்பகல் , மாலை ` என்னும் மூன்று பொழுதுகளிலும் , தப்பாமல் நீரின்கண் மூழ்கிப் பூக்களைப்
பறித்து , அவைகளை , கட்டுதல் பொருந்திய இண்டை மாலையாகச்
செய்துகொண்டு , மனத்தைத் தனது
திருவடிக்கண் சேர்த்துகின்ற அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக்
கோயிலில் , முழவம் முதலியவற்றின்
கொட்டும் , அவற்றிற்கேற்ற
கூத்தும் , பாட்டும் ஆகியவற்றை
விரும்பி இருக்கின்ற அழகனும் , எட்டுருவாயவனும் ஆகிய
இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன்
நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 4
விருந்துஆய
சொல்மாலை கொண்டுஏத்தி
வினைபோக, வேலி தோறும்
கருந்தாள
வாழைமேல் செங்கனிகள்
தேன்சொரியும் கருப்ப
றியலூர்க்
குருந்துஆய
முள்எயிற்றுக் கோல்வளையாள்
அவளோடும் கொகுடிக்
கோயில்
இருந்தானை, மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை :கல்வியில் வல்ல
அடியார்கள் புதியனவாகிய பல சொல்மாலைகளைக் கொண்டு புகழ்ந்து வினை நீங்கப் பெறுமாறு , வேலிகள் தோறும் , பசிய அடியினையுடைய செவ்வாழைகளின்மேல்
செவ்விய பழங்கள் சாற்றைச் சொரிந்து நிற்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக்
கோயிலில் இளையவாகிய கூரிய பற்களையும் , வரிசையான
வளைகளையும் உடையவளாகிய உமாதேவியோடும் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை நாம்
மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு
இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
பாடல்
எண் : 5
பொடிஏறு
திருமேனிப் பெருமானை,
பொங்குஅரவக் கச்சை
யானை,
கடிநாறும்
பூம்பொய்கைக் கயல்வாளை
குதிகொள்ளும் கருப்ப
றியலூர்க்
கொடிஏறி
வண்டுஇனமும் தண்தேனும்
பண்செய்யும் கொகுடிக்
கோயில்
அடிஏறு
கழலானை நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : நீறு
மிகுந்திருக்கின்ற திருமேனியையுடைய பெருமானும் , சீற்றம் மிக்க பாம்பாகிய அரைக்கச்சையை
உடையவனும் , நறுமணம் வீசுகின்ற
பூப் பொய்கைகளில் கயல் மீனும் ,
வாளை
மீனும் குதிகொள்கின்ற திருக்கருப்பறியலூரில் உள்ள , கொடிப் பூக்களில் , ` வண்டு ` என்றும் , ` தேன் ` என்றும் சொல்லப்படுகின்ற அவற்றது
கூட்டங்கள் மொய்த்து இசைபாடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் , திருவடியிற் பொருந்திய கழலையுடையவனும்
ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை
சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 6
பொய்யாத
வாய்மையால் பொடிபூசி,
போற்றிசைத்து, பூசை செய்து,
கையினால்
எரிஓம்பி மறைவளர்க்கும்
அந்தணர்தம் கருப்ப
றியலூர்க்
கொய்உலா
மலர்ச்சோலைக் குயில்கூவ
மயில்ஆலும் கொகுடிக்
கோயில்
ஐயனை,என் மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : பொய்கூறாத வாய்மையான
உள்ளத்தோடு திரு நீற்றை அணிந்து ,
` போற்றி
` எனச் சொல்லிப் பல வகை
வழிபாடு களையும் செய்து தங்கள் கையாலே தீயை எரிவித்து வேத ஒழுக்கத்தை வளர்க்கின்ற
அந்தணர்களது திருக்கருப்பறியலூரில் உள்ள, கொய்தல் பொருந்திய பூஞ்சோலைகளில்
குயில்கள் கூவ , அவற்றோடு மயில்கள்
ஆடுகின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனாகிய இறைவனை யான் என்
மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு
இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 7
செடிகொள்நோய்
உள்ளஅளவும் தீவினையும்
தீர்ந்துஒழியச்
சிந்தை செய்ம்மின்,
கடிகொள்பூந்
தடமண்டிக் கருமேதி
கண்படுக்கும் கருப்ப
றியலூர்க்
கொடிகொள்பூ
நுண்இடையாள் கோல்வளையாள்
அவளோடும்
கொகுடிக் கோயில்
அடிகளை,என் மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : நறுமணத்தைக் கொண்ட
பூக்களையுடைய பொய்கையின் கரைகளில் கரிய எருமைகள் மிக்கு உறங்குகின்ற
திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் கொடிபோலும் அழகிய நுண்ணிய
இடையினையும் , வரிசையான வளைகளையும்
உடைய உமையம்மையுடன் எழுந்தருளியிருக்கின்ற இறைவனை என் மனத்தினால் நினைந்தபோது அவன்
நமக்கு இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது ; ஆதலின் , துன்பந் தருவனவாய் உள்ள நோய்களும் , தீவினைகளும் ஒருதலையாக நீங்குதற் பொருட்டு
அவனை நினையுங்கள் .
பாடல்
எண் : 8
பறையாத
வல்வினைகள் பறைந்துஒழியப்
பல்நாளும் பாடி ஆடி,
கறைஆர்ந்த
கண்டத்தன், எண்தோளன்,
முக்கண்ணன், கருப்ப றியலூர்க்
குறையாத
மறைநாவர் குற்றேவல்
ஒழியாத கொகுடிக்
கோயில்
உறைவானை, மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய வாறே.
பொழிப்புரை : கருமை நிறம்
பொருந்திய கண்டத்தையும் , எட்டுத் தோள்களையும் , மூன்று கண்களையும் உடையவனும் , திருக்கருப் பறியலூரில் உள்ள குறைவுபடாத
வேதத்தை உடைய நாவினராகிய அந்தணர்கள் தம் சிறு பணிவிடைகளை நீங்காது செய்கின்ற
கொகுடிக் கோயிலில் எழுந்தருளியுள்ளவனும் ஆகிய இறைவனை , நாம் , நீங்குதற்கரிய வலிய வினைகள் நீங்குமாறு
பல நாளும் பாடியும் , ஆடியும் மனத்தினால்
நினைந்தபோது , அவன் நமக்கு
இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 9
சங்குஏந்து
கையானும் தாமரையின்
மேலானும் தன்மை
காணாக்
கங்குஆர்ந்த
வார்சடைகள் உடையானை,
விடையானை, கருப்ப றியலூர்க்
கொங்குஆர்ந்த
பொழில்சோலை சூழ்கனிகள்
பலஉதிர்க்கும்
கொகுடிக் கோயில்
எம்கோனை, மனத்தினால்
நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : சங்கினை ஏந்துகின்ற
கையினை யுடையவனாகிய திருமாலும் ,
தாமரைமலர்மேல்
இருப்பவனாகிய பிரமனும்காண இயலாத ,
கங்கை
பொருந்திய நீண்ட சடைகளையுடையவனும் ,
இடபத்தை
ஊர்பவனும் , திருக்கருப்பறியலூரில்
உள்ள , தேன் நிறைந்த
பொழிலாகிய சோலைகள் , சுற்றிலும் கனிகள்
பலவற்றை உதிர்க்கின்ற கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் தலைவனும்
ஆகிய இறைவனை நாம் மனத்தினால் நினைந்தபோது , அவன் நமக்கு இனியனாகின்ற தன்மை
சொல்லுதற்கரிது .
பாடல்
எண் : 10
பண்தாழ்இன்
இசைமுரலப் பல்நாளும்
பாவித்துப் பாடி
ஆடிக்
கண்டார்தம்
கண்குளிரும் களிக்கமுகம்
பூஞ்சோலைக் கருப்ப
றியலூர்க்
குண்டுஆடும்
சமணரும் சாக்கியரும்
புறங்கூறும் கொகுடிக்
கோயில்
எண்தோள்எம்
பெருமானை, நினைந்தபோது
அவர்நமக்கு இனிய
வாறே.
பொழிப்புரை : கண்டவரது கண்கள்
குளிர்தற்கு வழியாகிய கமுகஞ் சோலைகளையும் , களிப்பைத் தருகின்ற பூஞ்சோலைகளையும்
உடைய திருக்கருப்பறியலூரில் உள்ள கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , கீழ்மைத் தொழில்களைப் பயில்கின்ற
சமணராலும் , புத்தராலும்
புறங்கூறப்படுகின்ற , எட்டுத் தோள்களையுடைய
எம்பெருமானை , நாம் , பல நாள்களும் உள்ளத்திற் கருதி , பண்பொருந்துதற்கு அடிநிலையாகிய இனிய
சுருதியை , கூட்டுவார் கூட்டப்
பல இசைப் பாடல்களைப் பாடியும் ,
ஆடியும்
மனத்தினால் நினைந்த போது , அவன் நமக்கு
இனியனாகின்ற தன்மை சொல்லுதற்கரிது.
பாடல்
எண் : 11
கலைமலிந்த
தென்புலவர் கற்றோர்தம்
இடர்தீர்க்கும்
கருப்ப றியலூர்க்
குலைமலிந்த
கோள்தெங்கு மட்டுஒழுகும்
பூஞ்சோலைக் கொகுடிக்
கோயில்
இலைமலிந்த
மழுவானை, மனத்தினால்
அன்புசெய்து, இன்பம் எய்தி,
மலைமலிந்த
தோள்ஊரன் வனப்பகைஅப்
பன்,உரைத்த வண் தமிழ்களே.
பொழிப்புரை : திருக்கருப்பறியலூரில்
உள்ள , குலைகள் நிறைந்த வலிய
தென்னை மரங்களையும் , தேன் ஒழுகுகின்ற
பூஞ்சோலைகளையும் உடைய கொகுடிக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற , இலைத் தன்மை மிகுந்த மழுப்படையை உடைய
இறைவனை, ` வனப் பகை ` என்பவளுக்குத் தந்தையாகிய மலைபோலும்
தோள்களையுடைய நம்பியாரூரன் மனத்தினால் நினைத்தலாகிய அன்புச் செயலைச் செய்து , அதனானே இன்பமுற்றுப் பாடிய வளப்பமான
இத்தமிழ்ப் பாமாலையே , தன்னைக்
கற்றவர்களாகிய கல்வி மிக்க தமிழ்ப் புலவர்களது துன்பத்தினைக் களையும் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment