திருக் குரக்குக்கா
(திருக்குரக்காவல்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
வைத்தீசுவரன் கோயில் - திருப்பனந்தாள்
சாலையில் "இளந்தோப்பு" என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக்
கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் 3 கி.மீ. உள்ளே சென்றால் கோயிலை
அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்லும்.
இறைவர்
: குந்தளேசுவரர்.
இறைவியார்
: குந்தளாம்பிகை.
தீர்த்தம் : கணபதிநதி
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - மரக்கொக்
காமென
பஞ்ச(கா) தலங்களில் திருக்குரக்குக்கா
தலமும் ஒன்று. மற்ற தலங்கள் திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா. குரங்கு வழிபட்டதால்
இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை.
ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து சென்றால் பலிபீடம்
நந்தி உள்ளன. கொடிமரமில்லை. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள்
உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் உள்ளன. வாயில்
முகப்பில் அநுமன் சுவாமியைப் பூசிப்பதுபோல வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே
சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும்,
வலதுபுறம்
தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சனேயர்
கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில்
உள்ளது. இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம்
கூறுகிறது. இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால்
கட்டி அகற்ற முறபட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க
இராமர் அறிவுரைப்படி ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை
பூஜித்தார். இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தி இந்த அனுமனே. ஒவ்வொரு
அமாவாசையன்றும் இவரது சன்னிதியில் ஹோமம் நடக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை சித்திரை
மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி
வழிபடுகிறது. இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.
ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து
வழிபட்டதால், சூரியன் மற்றும்
சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும்
வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும்
பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்கும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "மிக்க திரு மா வளரும்
செந்தாமரை வளரும் செய் குரக்குக்கா வளரும் இன்பக் கனசுகமே" என்று போற்றி உள்ளார்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 189
ஆண்டஅரசு
எழுந்தருளக் கோலக் காவை
அவரோடும்
சென்றுஇறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டுஅருளி
னார்அவரும், விடைகொண்டு இப்பால்
வேதநா யகர்விரும்பும்
பதிகள் ஆன
நீண்டகருப்
பறியலூர், புன்கூர், நீடூர்,
நீடுதிருக் குறுக்கை,திரு நின்றி யூரும்,
காண்தகைய
நனிபள்ளி முதலா நண்ணி,
கண்ணுதலார்
கழல்தொழுது வணங்கிச் செல்வார்.
பொழிப்புரை : திருநாவுக்கரசர்
எழுந்தருளவே அவருடன் சென்று திருக்கோலக்காவைப் பணிந்து அன்பு விடைபெற்று
ஞானசம்பந்தர் திரும்பினார். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரிடம் விடைபெற்றுக் கொண்டு
மேலும் மறைமுதல்வரான சிவபெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் பதிகளாய
பெருமைமிக்க திருக்கருப்பறியலூர்,
திருப்புன்கூர், திருநீடுர், திருக்குறுக்கை வீரட்டம், திருநின்றியூர், காணும் தகைமையுடைய திருநனிபள்ளி என்ற
இவை முதலான பதிகளைச் சேர்ந்து நெற்றிக்கண் உடையவரின் திருவடிகளை வணங்கி
மேற்செல்பவராய்.
குறிப்புரை : திருக்கோலக்காவில்
அப்பர் அருளிய பதிகம் கிடைத்திலது. இனி இப்பாடலில் குறிக்கப்பட்ட திருப்பதிகள்
ஆறனுள் திருக்கருப்பறியலூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. அடுத்து இருக்கும்
திருப்புன்கூர், திருநீடுர் ஆகிய இரு
பதிகளுக்கும் ஒருங்கியைந்தவாறு ஒரு பதிகம் உள்ளது. அது `பிறவாதே தோன்றிய`(தி.6 ப.11) எனத் தொடங்கும் திருத்தாண்டகம் ஆகும்.
திருக்குறுக்கை வீரட்டத்திற்கு இரு
பதிகங்கள் கிடைத்து உள்ளன. 1. `ஆதியிற் பிரமனார்` (தி.4 ப.49)- திருநேரிசை;
2. `நெடியமால்` (தி.4 ப.50) - திருநேரிசை.
இவற்றுள் முன்னைய பதிகத்தில் பாடல்
தோறும் வரலாறுகள் அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் இரண்டே பாடல்கள் உள்ளன.
திருநின்றியூரில் அருளிய திருக்குறுந்தொகைப் பதிகம் `கொடுங்கண் வெண்டலை` (தி.5 ப.23) என்பதாம். திருநனிபள்ளியில் அருளிய
பதிகம் `முற்றுணை ஆயினானை` (தி.4 ப.70) எனத் தொடங்கும் திருநேரிசையாம்.
இனி, இப்பாடற்கண் நனிபள்ளி முதலா நண்ணி என
வருதலின் வேறு பிற பதிகளும் தொழுது சென்றமை விளங்குகின்றது. அப்பதிகளும்
பாடியருளிய பதிகங்களும்:
1. திருக்குரக்குக்கா: `மரக்கொக்காம்` (தி.5 ப.75) – திருக்குறுந்தொகை.
2. புள்ளிருக்கு வேளூர்:
(அ). `வெள்ளெருக்கு` (தி.5 ப.79) - திருக்குறுந்தொகை;
(ஆ). `ஆண்டானை` (தி.6 ப.54) - திருத்தாண்டகம்.
3. திருவெண்காடு:
(அ). `பண்காட்டி` (தி.5 ப.49) - திருக்குறுந்தொகை
(ஆ). `தூண்டுசுடர்` (தி.6 ப.35) - திருத்தாண்டகம்.
4. திருச்சாய்க்காடு:
(அ) `தோடுலாமலர்` (தி.4 ப.65) - திருநேரிசை.
(ஆ). `வானத்து இளமதியும்` (தி.6 ப.82) - திருத்தாண்டகம்.
5. திருவலம்புரம்:
(அ). `தெண்டிரை` (தி.4 ப.55) - திருநேரிசை
(ஆ). `மண்ணளந்த` (தி.6 ப.58) - திருத்தாண்டகம்.
5. 075 திருக்குரக்குக்கா திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மரக்கொக்கு
ஆம்என வாய்விட்டு அலறி,நீர்
சரக்குக்
காவித் திரிந்துஅய ராது,கால்
பரக்குங்
காவிரி நீர்அலைக் குங்கரைக்
குரக்குக்கா, அடை யக்கெடும்
குற்றமே.
பொழிப்புரை :மரத்தின்கண்
இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து
திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப்
பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் .
பாடல்
எண் : 2
கட்டு
ஆறேகழி காவிரி பாய்வயல்
கொட்டு
ஆறேபுனல் ஊறு குரக்குக்கா
முட்டா
றாஅடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டா
றாஇடர் ஓட எடுக்குமே.
பொழிப்புரை : கட்டப்பட்ட
கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும்
நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும்
அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் .
பாடல்
எண் : 3
கைஅ
னைத்தும் கலந்துஎழு காவிரி
செய்
அனைத்திலும் சென்றிடும் செம்புனல்
கொய்அ
னைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐய
னைத்தொழு வார்க்குஅல்லல் இல்லையே.
பொழிப்புரை : பக்கமெங்கும் கலந்து
எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக்
கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை .
பாடல்
எண் : 4
மிக்க
அனைத்துத் திசையும் அருவிகள்
புக்குக்
காவிரி போந்த புனல்கரைக்
கொக்கு
இனம்பயில் சோலைக் குரக்குக்கா
நக்க
னைநவில் வார்வினை நாசமே.
பொழிப்புரை : அனைத்துத்
திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின்
கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய
பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும்.
பாடல்
எண் : 5
விட்டு
வெள்ளம் விரிந்துஎழு காவிரி
இட்ட
நீர்வயல் எங்கும் பரந்திடக்
கொட்ட
மாமுழவு ஓங்கு குரக்குக்கா
இட்ட
மாய்இருப் பார்க்குஇடர் இல்லையே.
பொழிப்புரை : வெள்ளம் பொருந்தி
விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும்
குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை .
பாடல்
எண் : 6
மேலை
வானவ ரோடு விரிகடல்
மாலும்
நான்முக னாலும் அளப்பொணாக்
கோல
மாளிகைக் கோயில் குரக்குக்காப்
பால
ராய்த்திரி வார்க்குஇல்லை பாவமே.
பொழிப்புரை : மேல் உலகத்திலுள்ள
தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத
பெருமான் உறைவதும் , அழகு மிக்க
மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப்
பாவம் இல்லை .
பாடல்
எண் : 7
ஆல
நீழல் அமர்ந்த அழகனார்,
கால
னைஉதை கொண்ட கருத்தனார்,
கோல
மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்
பால
ருக்குஅருள் செய்வர் பரிவொடே.
பொழிப்புரை : கல்லால நிழற்கீழ்
அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக்
கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற
குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் .
பாடல்
எண் : 8
செக்கர்
அங்குஎழு செஞ்சுடர்ச் சோதியார்,
அக்கு
அரையர்எம் ஆதி புராணனார்,
கொக்கு
இனம்வயல் சேருங் குரக்குக்கா
நக்க
னைத்தொழ நம்வினை நாசமே.
பொழிப்புரை :செவ்வானத்தைப்
போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும், கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற
குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் .
பாடல்
எண் : 9
உருகி
ஊன்குழைந்து ஏத்தி எழுமின்நீர்,
கரிய
கண்டன் கழல்அடி தன்னையே,
குரவ
னம்செழும் கோயில் குரக்குக்கா
இரவும்
எல்லியும் ஏத்தித் தொழுமினே.
பொழிப்புரை : திருநீலகண்டன்
கழலணிந்த பாதங்களை நீர் உருகி ,
உடல்
குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும்
பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக .
பாடல்
எண் : 10
இரக்கம்
இன்றி மலைஎடுத் தான்முடி
உரத்தை
ஒல்க அடர்த்தான் உறைவிடம்,
குரக்கு
இனம்குதி கொள்ளும் குரக்குக்கா
வரத்த
னைப்பெற வான்உலகு ஆள்வரே.
பொழிப்புரை : மலையெடுக்கலுற்ற
இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல்
வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி
குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு
ஆள்வர் .
திருச்சிற்றம்பலம்
அருமை அருமை வணக்கம் வணக்கம் அப்பர் சுவாமிகள் திருவடி போற்றி 🙏
ReplyDelete