திரு வாழ்கொளிப்புத்தூர்





திரு வாழ்கொளிப்புத்தூர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

      மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில்16 கி.மீ. தொலைவு.

     வைத்தீசுவரன்கோயிலில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் இளந்தோப்பு தாண்டி மேலும் சென்றால் "திருவாளப்புத்தூர்" ஊர் வரும். ஊரில் இடப்புறமாகச் செல்லும் பாதையில் சென்று கோடியிலுள்ள கோயிலை அடையலாம்.


இறைவர்         : மாணிக்கவண்ணர், இரத்தினபுரீசுவரர்

இறைவியார்      : வண்டமர் பூங்குழலி, பிரமகுந்தளாம்பாள்

தல மரம்     : வாகை

தீர்த்தம்           : பிரம தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - 1. பொடியுடை மார்பினர்,                                                                       2. சாகை ஆயிரமுடையார்.

                                               2. சுந்தரர்   - தலைக்கலன் தலைமேல்

         பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை மத்தாக்கி, வாசுகி நாகத்தைக் கயிறாக்கி முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் கயிறாக இருந்து பாற்கடலைக் கடைய உதவிய வாசுகி நாகம் உடல் வாடி வருந்தியது. தனது உடல் நலம் பெற சிவபெருமானை ஆராதனை செய்து நலிவு நீங்கி பொலிவு பெற்றது. இத்தலத்தில் சிவபூஜை செய்ய வாகை மரத்தடியில் வாசுகி நாகம் ஒரு புற்றில் குடி கொண்டாள். அந்த நாகம் இத்தலத்தில் ஒரு புற்றில் வாழ்ந்திருந்த காரணத்தால் இத்தலம் புற்றூர் என்று அழைக்கப்பட்டது.

         பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்ட போது, அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். பல தலங்களுக்குச் சென்ற அவன் வாசுகி நாகம் சிவபெருமானை பூஜித்த இத்தலத்திற்கும் வந்தான். அச்சமயம் அவனுக்கு மிகுந்த தாகம் ஏற்பட்டது. தண்ணீருக்காக அலைந்து திரிந்தான். அப்போது இறைவன் அவன் முன் ஒரு வயோதிகராகத் தோன்றி, ஒரு தண்டத்தை அவன் கையில் கொடுத்து அதனை வாகை மரத்திடியில் ஊன்றுமிடத்தில் நல்ல நீர் கிடைக்கும் என்று கூறினார். அர்ஜுனன் தன் கையில் இருந்த வாளை அந்த வயோதிகரிடம் கொடுத்து தான் நீர் அருந்திவிட்டு திரும்பி வரும் வரை வாளை பத்திரமாக் வைத்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றான். இறைவன், அர்ஜுனன் திரும்பி வருவதற்குள், அந்த வாளை வாசுகி நாகம் குடியிருந்த புற்றில் ஒளித்து வைத்துவிட்டு மறைந்தார். நீர் அருந்தி திரும்பி வந்த அர்ஜுனன் வயோதிகரைக் காணாமல் திகைத்து நின்றான். இறைவன் சற்று நேரம் கழித்து வெளிப்பட்டு மறைத்து வைத்திருந்த வாளை வெளிப்படுத்தி அருளினார். இதன் காரணமாக் இத்தலம் வாள் ஒளி புற்றூர் என வழங்கப்பட்டது. தற்போது மக்கள் வழக்கில் இத்தலம் திருவாளப்புத்தூர் என்று வழங்குகிறது. மகாவிஷ்ணு ஒரு மாணிக்க லிங்கத்தை தாபித்து இத்தலத்தில் இறைவனை வழிபட்டதால் இறைவன் மாணிக்கவண்ணர் என்ற் பெயர் பெற்றார்.

         திருவாளப்புத்தூரில் உள்ள இரத்தினபுரீசுவரர் ஆலயம் தான் வாசுகி வழிபாடு செய்த ஆலயம். இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் முன் ஆலயத்தின் பிரம தீர்த்தம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் வாகை மரம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் குறிப்பிடும் படி வேறு சந்நிதிகள் ஏதுமில்லை. வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் வண்டமர் பூங்குழலி சந்நிதி உள்ளது. உட்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சரஸ்வதி, நால்வர், பைரவர் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. நால்வர் சந்நியும் உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் சபை தரிசிக்க வேண்டிய ஒன்று. இத்தலத்தில் கோஷ்டத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கையை விசேஷமாக வழிபடுகின்றனர். மூலவர் மாணிக்கவண்ணர் சற்று உயரமான பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். அர்த்த மண்டப நுழைவாயிலில் இடதுபுறம் நிருதி விநாயகரும் வலதுபுறம் வாசுகியும் உள்ளனர்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தாவு மயல் தாழ்கொள் இருமனத்துக் கார் இருள் நீத்தோரு மருவும் வாழ்கொளிபுத்தூர் மணிச் சுடரே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7-30 மணி முதல் 11-30 மணி வரையும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 251
மற்றநல் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந்து, அலர்ந்த செந்தமிழ்ச்
சொல்தொடை பாடி,அங்கு அகன்று சூழ்மதில்
பொன்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.

         பொழிப்புரை : அந்நற்பதியில் வடதளிக் கோயிலில் எழுந்தருளிய, அற்புதமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங்கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான திருவாழ்கொளிப்புத்தூரில் வந்து புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 252
சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.

         பொழிப்புரை : சிறப்பு மிக்க அத்திருக்கோயிலை அடைந்து, தேன்பொருந்திய கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர்வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருமானாரைக் கண்டு மகிழ்பவர், உலகம் புகழும் திருப்பதிகங்களைப் பாடியருளி, நிறைந்த புகழைக் கொண்ட `திருக்கடம்பூரை'யும் வணங்கினார்.

         குறிப்புரை : திருவாழ்கொளிப்புத்தூரில் பாடிய பதிகம் `பொடியுடை மார்பினர்' (தி.1 ப.40) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் பாடல் தொறும், அப்பெருமான் அடியைக் காண்போம், சேர்வோம், சார்வோம் என உலகினரை உளப்படுத்திக் கூறுவதால், `பார் புகழ் பதிகங்கள்' என்றார். பாரோடு சேர்ந்து புகழும் பதிகங்கள் என்றவாறு. பதிகங்கள் என்ற பன்மையால் மேலும் பல பதிகங்கள் இருந்திருக்கலாம். எனினும் இதனையடுத்து வரும் ஒரு பதிகமே இன்று காணக் கிடைக்கின்றது. இப்பதிகம், `சாகையாயிரம்' என்பது: பண் - பியந்தைக் காந்தாரம் (தி.2 ப.94).


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


1.040 திருவாழ்கொளிபுத்தூர்         பண் - தக்கராகம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொடிஉடைமார்பினர் போர்விடைஏறிப்
         பூதகணம் புடைசூழக்
கொடிஉடையூர்திரிந்து ஐயம்
         கொண்டு, பலபலகூறி
வடிவுடைவாள்நெடுங் கண்உமைபாகம்
         ஆயவன்வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலர்இட்டுக்
         கறைமிடற்றான்அடி காண்போம்.

         பொழிப்புரை :திருநீறு அணிந்த மார்பினராய், வீரம் மிக்க விடை மீது ஏறி, பூதகணங்கள் புடைசூழ்ந்து வர, கொடிகள் கட்டிய ஊர்களில் திரிந்து பற்பல வாசகங்களைக் கூறிப்பலியேற்று, அழகிய வாள் போன்ற நெடிய கண்களையுடைய உமையொரு பாகராகிய சிவபிரானார் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று மணம் கமழும் சிறந்த மலர்களால் அருச்சித்து அக்கறைமிடற்றார் திருவடிகளைக் காண்போம்.


பாடல் எண் : 2
அரைகெழுகோவண ஆடையின்மேல்ஓர்
         ஆடுஅரவம் அசைத்து ஐயம்
புரைகெழுவெண்தலை ஏந்திப்
         போர்விடை ஏறிப்புகழ
வரைகெழுமங்கையது ஆகம்ஒர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி புத்தூர்
விரைகமழ் மாமலர்தூவி
         விரிசடையான்அடி சேர்வோம்.

         பொழிப்புரை :இடையில் கட்டிய கோவண ஆடையின்மேல் ஆடும் அரவம் ஒன்றைக் கட்டிக் கொண்டு, துளை பொருந்திய வெண்தலையோட்டைக் கையில், ஏந்திப் பலியேற்று, சினம் பொருந்திய விடை மீது ஏறிப் பலரும் புகழ, இமவான் மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மணம் கமழும் சிறந்த மலர்களைத் தூவி அவ்விரிசடையான் திருவடிகளைச் சேர்வோம்.


பாடல் எண் : 3
பூண்நெடுநாகம் அசைத்துஅனல்ஆடிப்
         புன்தலை அங்கையில் ஏந்தி,
ஊண்உடுபிச்சை ஊர்ஐயம்
         உண்டிஎன்று பலகூறி,
வாள்நெடுங்கண்உமை மங்கையொர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி புத்தூர்த்
தாள்நெடு மாமலர்இட்டுத்
         தலைவனதாள்நிழல் சார்வோம்.

         பொழிப்புரை :நெடிய பாம்பை அணிகலனாகப் பூண்டு, அனலைக் கையின்கண் ஏந்தி, ஆடிக்கொண்டும், பிரமனது தலையோட்டை அழகிய கையொன்றில் ஏந்திப் பல ஊர்களிலும் திரிந்து மக்கள் உணவாகத் தரும் பிச்சையைத் தனக்கு உணவாக ஏற்றுப் பற்பலவாறு கூறிக்கொண்டும், வாள் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ஏற்று விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று அப்பெருமான் திருவடிகளில் சிறந்த மலர்களைத் தூவித் தலைவனாக விளங்கும் அவன் தாள் நிழலைச் சார்வோம்.


பாடல் எண் : 4
தார்இடுகொன்றையொர் வெண்மதிகங்கை
         தாழ்சடை மேல்அவைசூடி,
ஊர்இடுபிச்சைகொள் செல்வம்
         உண்டிஎன்று பலகூறி,
வார்இடுமென்முலை மாதுஒருபாகம்
         ஆயவன்வாழ்கொளி   புத்தூர்க்
கார்இடு மாமலர்தூவிக்
         கறைமிடற்றான்அடி காண்போம்.

         பொழிப்புரை :கொன்றை மாலையையும், வெண்மதியையும், கங்கையையும், தாழ்ந்து தொங்கும் சடைமுடியில் சூடி, ஊர் மக்கள் இடும் பிச்சையை ஏற்றுக்கொண்டு, அதுவே தனக்குச் செல்வம், உணவு என்று பலவாறு கூறிக்கொண்டு கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்ட சிவபிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று, கார்காலத்தே மலரும் சிறந்த கொன்றை மலர்களைத் தூவிக் கறைமிடற்றானாகிய அப்பெருமான் திருவடிகளைக் காண்போம்.


பாடல் எண் : 5
கனமலர்க்கொன்றை அலங்கல்இலங்கக்
         காதிலொர் வெண்குழையோடு
புனமலர்மாலை புனைந்துஊர்
         புகுதிஎன்றே பலகூறி,
வனமுலைமாமலை மங்கையொர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி   புத்தூர்
இனமலர் ஏய்ந்தனதூவி
         எம்பெருமான்அடி சேர்வோம்.

         பொழிப்புரை :கார்காலத்து மலராகிய கொன்றை மலர்மாலை தன் திருமேனியில் விளங்க, ஒரு காதில் வெண்குழையணிந்து, முல்லை நிலத்து மலர்களால் தொடுக்கப்பெற்ற மாலைகளைச்சூடிப் பல ஊர்களுக்கும் சென்று பற்பல கூறிப் பலியேற்று அழகிய தனங்களையுடைய மலைமகளாகிய பார்வதியை ஒருபாகமாகக் கொண்ட எம்பிரான் எழுந்தருளிய திருவாழ்கொளிபுத்தூர் சென்று நமக்குக் கிட்டிய இனமான மலர்களைத் தூவி அவன் அடிகளைச் சேர்வோம்.

  
பாடல் எண் : 6
அளைவளர்நாகம் அசைத்துஅனல்ஆடி
         அலர்மிசை அந்தணன்உச்சிக்
களைதலையில் பலிகொள்ளும்
         கருத்தனே, கள்வனே, என்னா
வளைஒலிமுன்கை மடந்தையொர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி புத்தூர்த்
தளைஅவிழ் மாமலர்தூவித்
         தலைவனதாள்இணை சார்வோம்.

         பொழிப்புரை :புற்றின்கண் வாழும்பாம்பினை இடையில் கட்டி, சுடுகாட்டில் ஆடி, தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் உச்சித்தலையைக் கொய்து, அத்தலையோட்டில் பலி கொள்ளும் தலைவனே, நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கள்வனே, என்று, வளையல் ஒலிக்கும் முன் கையையுடைய பார்வதிதேவியை ஒருபாகமாகக் கொண்ட சிவபெருமான் உறையும் திருவாழ்கொளிபுத்தூர் சென்று, மொட்டவிழ்ந்த நறுமலர்களைத்தூவி அப்பெருமானின் தாளிணைகளைச் சார்வோம்.


பாடல் எண் : 7
அடர்செவிவேழத்தின் ஈர்உரிபோர்த்து
         அழிதலையங்கையில் ஏந்தி
உடல் இடுபிச்சையோடு ஐயம்
         உண்டிஎன்று பலகூறி,
மடல்நெடுமாமலர்க் கண்ணியொர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி   புத்தூர்த்
தடமலர் ஆயினதூவித்
         தலைவனதாள்நிழல் சார்வோம்.

         பொழிப்புரை :பரந்த காதுகளையுடைய யானையைக் கொன்று, அதன் உதிரப் பசுமை கெடாத தோலை உரித்துப் போர்த்து, கிள்ளிய பிரமன் தலையோட்டைக் கையில் ஏந்தி, தாருகாவன முனிவர் மகளிர் தம் கைகளால் இட்ட பிச்சையோடு ஐயம், உண்டி, என்று பலகூறப்பலியேற்ற மடப்பம் வாய்ந்த நீண்ட நீல மலர் போன்ற கண்களையுடைய உமையொரு பாகனாக உள்ள திருவாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்கள் பலவற்றால் அருச்சித்து அப்பெருமான் தாள்நிழலைச் சார்வோம்.


பாடல் எண் : 8
உயர்வரைஒல்க எடுத்தஅரக்கன்
         ஒளிர்கடகக்கை  அடர்த்து,
அயல்இடுபிச்சையோடு ஐயம்
         ஆர்தலைஎன்றுஅடி போற்றி,
வயல்விரிநீல நெடுங்கணிபாகம்
         ஆயவன்வாழ்கொளி புத்தூர்ச்
சயவிரி மாமலர்தூவித்
         தாழ்சடையான்அடி சார்வோம்.

         பொழிப்புரை :உயர்ந்த கயிலைமலையை அசையுமாறு பெயர்த்த இராவணனது ஒளி பொருந்திய கடகத்தோடு கூடிய தோள் வலிமையை அடர்த்தவனே என்றும், ஊர் மக்கள் இடும் பிச்சை, ஐயம் ஆகியவற்றை உண்ணும் தலைவனே என்றும், வயலின்கண் தோன்றி மலர்ந்த நீலமலர் போன்ற நீண்ட கண்களையுடைய உமையம்மை பாகனே என்றும் திருவாழ்கொளிபுத்தூர் இறைவனே, என்றும் வெற்றி யோடு மலர்ந்த சிறந்த மலர்களைத் தூவி அத்தாழ் சடையான் அடிகளைச் சார்வோம்.


பாடல் எண் : 9
கரியவன்நான்முகன் கைதொழுதுஏத்தக்
         காணலும் சாரலும் ஆகா
எரி உரு ஆகி ஊர்ஐயம்
         இடுபலி உண்ணிஎன்று ஏத்தி,
வரிஅரவுஅல்குல் மடந்தையொர்பாகம்
         ஆயவன்வாழ்கொளி   புத்தூர்
விரிமலர் ஆயினதூவி
         விகிர்தனசேவடி சேர்வோம்.

         பொழிப்புரை :திருமாலும் நான்முகனும் கைகளால் தொழுதேத்திக் காணவும் சாரவும் இயலாத எரி உரு ஆகியவனே என்றும், பல ஊர்களிலும் திரிந்து ஐயம், பிச்சை ஆகியவற்றை உண்பவனே என்றும் போற்றிப் பொறிகளோடு கூடிய பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனாகிய வாழ்கொளிபுத்தூர் இறைவனை விரிந்த மலர்களைத் தூவி வழிபட்டு விகிர்தனாகிய அவன் சேவடிகளைச் சேர்வோம்.


பாடல் எண் : 10
குண்டுஅமணர்துவர்க் கூறைகள்மெய்யில்
         கொள்கையினார் புறங்கூற,
வெண்தலையிற்பலி கொண்டல்
         விரும்பினைஎன்று விளம்பி,
வண்டுஅமர்பூங்குழன் மங்கையொர்பாகம்    ஆயவன்வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர்தூவத்
         தோன்றிநின்றான்அடி சேர்வோம்.

         பொழிப்புரை :கொழுத்த அமணர்களும், துவராடைகள் போர்த்த புத்தர்களும், புறம் பேசுமாறு வெண்மையான தலையோட்டின்கண் பலியேற்றலை விரும்பியவனே என்று புகழ்ந்து போற்றி, வண்டுகள் மொய்க்கும் அழகிய கூந்தலையுடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவன் எழுந்தருளிய வாழ்கொளிபுத்தூர் சென்று அடியவர்கள் சிறந்த மலர்களைத் தூவி வழிபட அவர்கட்குக் காட்சி அளிப்பவனாகிய சிவனடிகளைச் சேர்வோம்.


பாடல் எண் : 11
கல்உயர்மாக்கடல் நின்றுமுழங்கும்
         கரைபொரு காழியமூதூர்
நல்உயர் நான்மறை நாவின்
         நல்தமிழ் ஞானசம்பந்தன்
வல்உயர்சூலமும் வெண்மழுவாளும்
         வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச்
சொல்லியபாடல்கள் வல்லார்
         துயர்கெடுதல் எளிது ஆமே.

         பொழிப்புரை :மலைபோல உயர்ந்து வரும் அலைகளை உடைய பெரிய கடல், பெரிய கரையோடு மோதி முழங்கும் காழிப்பழம்பதியில் தோன்றிய, உயர்ந்த நான்மறைகள் ஓதும் நாவினை உடைய நற்றமிழ் ஞானசம்பந்தன், வலிதாக உயர்ந்த சூலம், வெண்மையான மழு, வாள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் வல்லவனாகிய சிவபிரான் விளங்கும் வாழ்கொளிபுத்தூரைப் போற்றிச் சொல்லிய பாடல்களை ஓதவல்லவர் துயர் கெடுதல் எளிதாம்.

                                             திருச்சிற்றம்பலம்


2.094 திருவாழ்கொளிபுத்தூர்     பண் - பியந்தைக்காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
சாகை ஆயிரம் உடையார் ,
         சாமமும் ஓதுவது உடையார்,
ஈகை யார்கடை நோக்கி
         இரப்பதும் பலபல உடையார்,
தோகை மாமயில் அனைய
         துடிஇடை பாகமும் உடையார்,
வாகை நுண்துளி வீசும்
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாகை மரங்கள் நுண் துளி சொரியும் வாழ் கொளிபுத்தூர் இறைவர் வேதப்பிரிவுகளான சாகைகள் பலவற்றை அருளியவர் . சாமகானம் பாடுபவர் . கொடுப்பவர் இல்லங்கட்குச் சென்று இரக்கும் வேடங்கள் கொள்பவர் . மயில் போன்ற சாயலையும் துடி போன்ற இடையையும் உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவர் .


பாடல் எண் : 2
எண்இல் ஈரமும் உடையார்,
         எத்தனை யோர்இவர் அறங்கள்,
கண்ணும் ஆயிரம் உடையார் ,
         கையும் ஓராயிரம் உடையார்,
பெண்ணும் ஆயிரம் உடையார்,
         பெருமை ஓர்ஆயிரம் உடையார்,
வண்ணம் ஆயிரம் உடையார்,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் , எண்ணற்ற வகைகளில் அன்பு காட்டுபவர் . இவர் அறங்களைப் பெற்றோர் பலராவர் . இவர் ஆயிரங்கண் , கைகளை உடையவர் . சக்தியின் அம்சமாகப் பலவற்றை உடையவர் . பெருமைகள் பல உடையவர். இவர் வண்ணமும் பலவகைப்படுவனவாகும் .


 
பாடல் எண் : 3
நொடியொர் ஆயிரம் உடையார் ,
         நுண்ணியர் ஆம்அவர் நோக்கும்,
வடிவும் ஆயிரம் உடையார் ,
         வண்ணமும் ஆயிரம் உடையார்,
முடியும் ஆயிரம் உடையார் ,
         மொய்குழ லாளையும் உடையார்,
வடிவும் ஆயிரம் உடையார்,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் , நுட்பமான கால அளவுகளாய் விளங்குபவர் . மிகவும் நுண்மையானவர் . அவர் பார்வையும் பலவேறு வகைப்பட்டவை . பலவேறு வண்ணங்கள் கொண்டவர் . பலவாய முடிகளை உடையவர் . உமையம்மையை இடப்பாக மாகக் கொண்டவர். பலவேறு வடிவங்கள் கொண்டவர்.


பாடல் எண் : 4
பஞ்சி நுண்துகில் அன்ன
         பைங்கழல் சேவடி உடையார்,
குஞ்சி மேகலை உடையார்,
         கொந்துஅணி வேல்வலன் உடையார்,
அஞ்சும் வென்றவர்க்கு அணியார்,
         ஆனையின் ஈர்உரி உடையார்,
வஞ்சி நுண்இடை உடையார் ,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிய இடையினை உடைய மகளிர் வாழும் வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பஞ்சினால் இயன்ற துகில் போன்ற சேவடிகளை உடையவர் . சடைமுடியில் ஆடையைத்தரித்தவர் . பூங்கொத்துக்கள் சூடிய வேலை வெற்றிக்கு அடையாளமாகக் கொண்டவர் . ஐம்பொறிகளை வென்றவர்க்கு அணிமையில் இருப்பவர் . ஆனைத்தோல் போர்த்தவர் .

  
பாடல் எண் : 5
பரவு வாரையும் உடையார் ,
         பழித்துஇகழ் வாரையும் உடையார்,
விரவு வாரையும் உடையார் ,
         வெண்தலைப் பலிகொள்வது உடையார்,
அரவம் பூண்பதும் உடையார்,
         ஆயிரம் பேர்மிக உடையார்,
வரமும் ஆயிரம் உடையார் ,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் பரவுவாரையும் பழித்து இகழும் புறச் சமயத்தவரையும் உடையவர் . தம்மோடு அன்பு கலந்து ஒன்றாகுபவரையும் உடையவர் . பிரமனது வெள்ளிய தலை யோட்டில் பலிகொள்பவர் . அரவம் பூண்டவர் . ஆயிரம் பேருடையவர் . வரங்கள் பல அருள்பவர் .

  
பாடல் எண் : 6
தண்டும் தாளமும் குழலும்
         தண்ணுமைக் கருவியும், புறவில்
கொண்ட பூதமும் உடையார் ,
         கோலமும் பலபல உடையார்,
கண்டு கோடலும் அரியார்,
         காட்சியும் அரியதொர் கரந்தை
வண்டு வாழ்பதி உடையார் ,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :கரந்தைப் பூவில் வண்டுகள் வாழும் வளம் உடைய பதியான வாழ்கொளிபுத்தூர் இறைவர் தண்டு , தாளம் , குழல் , தண்ணுமை ஆகியவற்றுடன் காட்டில் வாழும் பூதப்படைகளையும் கொண்டவர் . பல்வேறு கோலங்கள் கொண்டவர் . காணுதற்கும் காட்சிக்கும் அரியவர் .


பாடல் எண் : 7
மான வாழ்க்கையது உடையார்,
         மலைந்தவர் மதிற்பரிசு அறுத்தார்,
தான வாழ்க்கையது உடையார்,
         தவத்தொடு நாம்புகழ்ந்து ஏத்த
ஞான வாழ்க்கையது உடையார்,
         நள்இருள் மகளிர்நின்று ஏத்த
வான வாழ்க்கையது உடையார்,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பெருமை பொருந்திய வாழ்க்கையர் . தம்மோடு மலைந்த அசுரர்களின் மும்மதில்களை அழித்தவர் . அருட் கொடை வழங்கும் இயல்புடைவர் . தவத்தோடு நாம் பரவ ஞானவாழ்வு அருள்பவர் . நள்ளிருளில் அரமகளிர் நின்று ஏத்த வானநாட்டு வாழ்வினை உடையவர் .

  
பாடல் எண் : 8
ஏழு மூன்றுமொர் தலைகள்
         உடையவன் இடர்பட அடர்த்து,
வேழ்வி செற்றதும் விரும்பி,
         விருப்புஅவர் பலபல உடையார்,
கேழல் வெண்பிறை அன்ன
         கெழுமணி மிடறுநின்று இலங்க
வாழி சாந்தமும் உடையார்,
         வாழ்கொளி புத்தூர் உளாரே

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் , பத்துத்தலைகளை உடைய இராவணனைத் துன்புறுமாறு அடர்த்தவர் . தக்கன் செய்த வேள்வியைச் செற்றவர் . பலப்பல விருப்புடையவர் . வெண்பிறை போன்ற பன்றிக் கொம்பை மணி மிடற்றில் தரித்தவர் . சாந்தம் அணிந்தவர் .


பாடல் எண் : 9
வென்றி மாமல ரோனும்
         விரிகடல் துயின்றவன் தானும்
என்றும் ஏத்துகை உடையார்,
         இமையவர் துதிசெய விரும்பி,
முன்றின் மாமலர் வாச
         முதுமதி தவழ்பொழில் தில்லை
மன்றில் ஆடல்அது உடையார்,
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :வாழ்கொளிபுத்தூர் இறைவர் , தாமரை மலர் மேலுறையும் நான்முகனும் விரிந்த கடலிடைத்துயிலும் திருமாலும் நாள் தோறும் துதித்து வணங்கப் பெறுபவர் . இமையவர் துதித்தலை விரும்பி வானளாவிய மலர் மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த தில்லைமன்றில் ஆடுபவர் .


பாடல் எண் : 10
மண்டை கொண்டுஉழல் தேரர்
         மாசுஉடை மேனிவன் சமணர்
குண்டர் பேசிய பேச்சுக்
         கொள்ளன்மின், திகழ்ஒளி நல்ல
துண்ட வெண்பிறை சூடிச்
         சுண்ணவெண் பொடிஅணிந்து எங்கும்
வண்டு வாழ்பொழில் சூழ்ந்த
         வாழ்கொளி புத்தூர் உளாரே.

         பொழிப்புரை :மண்டை என்னும் உண் கலன் ஏந்தித் திரியும் தேரர் , அழுக்கேறிய உடலினராகிய சமணர்களாகிய குண்டர்கள் பேசும் பேச்சுக்களைக் கொள்ளாதீர் . ஒளிமிக்க பிறை சூடி , திருநீற்றுப் பொடி பூசி வண்டுகள் வாழும் பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் இறைவனைப் போற்றுவீராக .

  
பாடல் எண் : 11
நலங்கொள் பூம்பொழில் காழி
         நல்தமிழ் ஞானசம் பந்தன்,
வலங்கொள் வெண்மழு வாளன்,
         வாழ்கொளி புத்தூர் உளானை,
இலங்கு வெண்பிறை யானை,
         ஏத்திய தமிழ்இவை வல்லார்,
நலங்கொள் சிந்தையர் ஆகி
         நல்நெறி எய்துவர் தாமே.

         பொழிப்புரை :நன்மை நிறைந்த அழகிய பொழில் சூழ்ந்த சீகாழியில் தோன்றிய நற்றமிழ் ஞானசம்பந்தன் வெற்றிதரும் வெண் மழுவை ஏந்தி விளங்கும் வாழ்கொளிபுத்தூர் இறைவனாகிய பிறை சூடிய பெருமானை ஏத்திப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர் . நலந்தரும் சிந்தையராய் நன்னெறி எய்துவர் .

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------

சுந்தரர் திருப்பதிக வரலாறு:
         சுவாமிகள், திருமண்ணிப்படிக்கரையைத் தொழுது திரு வாழ்கொளிபுத்தூர் செல்லாமல் திருக்கானாட்டு முள்ளூருக்குச் செல்லும்பொழுது நினைந்து, மீண்டு வாழ்கொளி புத்தூர் செல்லும்பொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 118)

பெரிய புராணப் பாடல் எண் : 118
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
         கைதொழுது நீங்கிப் போய், கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி, அங்கு
         மாதுஒருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி,
எண்ணில்புகழ்ப் பதிகமும் "முன்னவன்" என்று ஏத்தி
         ஏகுவார், வாழ்கொளிபுத் தூர் எய்தாது
புண்ணியனார் போம்பொழுது, நினைந்து மீண்டு
         புகுகின்றார் "தலைக்கலன்" என்று எடுத்துப்போற்றி.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி உறைகின்ற திருக்கருப்பறியலூரைத் தொழுது, வணங்கிப் பின்னர் அங்கிருந்து நீங்கிச் சென்று, மீன்கள் பாய்ந்து திரியும் மண்ணி ஆற்றின் வளமுடைய திருப்பழமண்ணிப் படிக்கரையை அடைந்து, உமையொரு கூறராய் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுபவர், எண்ணற்கரிய புகழமைந்த பதிகமாய `முன்னவன்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின்னர் திருவாழ்கொளிப்புத்தூர் என்னும் கோயிற்குச் செல்லாது செல்கின்றவர், அத்திருப்பதியை நினைந்தளவில், மீண்டு அங்குச் சென்று, `தலைக்கலன்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் போற்றியவாறு உட்சென்றார்.


பெ. பு. பாடல் எண் : 119
திருப்பதிகம் பாடியே சென்றுஅங்கு எய்தி,
         தேவர்பெரு மானார்தம் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே,
         உள்அணைந்து பணிந்துஏத்தி உருகும் அன்பால்
பொருப்புஅரையன் மடப்பாவை இடப்பா லானைப்
         போற்றிஇசைத்து, புறம்போந்து தங்கி, பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
         கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.

         பொழிப்புரை : சென்றவர் திருவாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக்கும் தேவர் பெருமானாரின் திருக்கோயில் வாயிலைச் சார்ந்து, உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறியத் தாழ்ந்து, உள்ளாகச் சென்று, பணிந்து, அன்பினால் மலையரசன் மகளாராய உமையம்மையாரை இடமருங்கில் கொண்ட சிவபெருமானை வணங்கிப் போற்றிப் பாடி வெளியே போந்து, அங்குத் தங்கி, பின்னர் அழகும் மென்மையும் உடைய கரும்பின் வயல் நிறைந்த வாழ்கொளிப்புத்தூரை விடுத்து நீங்கி, திருக்கானாட்டு முள்ளூரைச் சேர்ந்த பொழுது,


7 - 057    திருவாழ்கொளிபுத்தூர்      பண் - தக்கேசி
                           திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
தலைக்க லன்தலை மேல்தரித் தானை,
         தன்னைஎன் னைநினைக் கத்தரு வானை,
கொலைக்கையா னைஉரி போர்த்துஉகந் தானை,
         கூற்றுஉதைத்த குரை சேர்கழ லானை,
அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை,
         ஆணை யால்அடி யேன்அடி நாயேன்
மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை :தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்த வனும் , தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும் , கொலைத் தொழிலையும் , கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும் , கூற்றுவனை உதைத்த , ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும் , எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய , பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 2
படைக்கண் சூலம் பயிலவல் லானை,
         பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானை,
கடைக்கட்பிச் சைக்குஇச்சை காதலித் தானை,
         காமன்ஆ கந்தனைக் கட்டுஅழித் தானை,
சடைக்கண் கங்கையைத் தாழவைத் தானை,
         தண்ணீர்மண் ணிக்கரை யானை,தக் கானை,
மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும் , தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள் பவனும் , வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும் , காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும் , கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும் , தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும் , எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய , நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 3
வெந்த நீறுமெய் பூசவல் லானை,
         வேத மால்விடை ஏறவல் லானை,
அந்தம் ஆதிஅறி தற்குஅரி யானை,
         ஆறுஅலைத்த சடை யானை, அம் மானை,
சிந்தை என்தடு மாற்றுஅறுப் பானை,
         தேவ தேவன்என் சொல்முனி யாதே
வந்துஎன்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை :வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும், வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும் , முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும் , ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும், பெரியோனும், எனது மனக் கலக்கத்தைக் களைபவனும், தேவர்களுக்குத் தேவனும் , யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்திலே புகுந்து நிற்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 4
தடங்கை யால்மலர் தூய்த்தொழு வாரைத்
         தன்அடிக் கேசெல்லு மாறுவல் லானை,
படங்கொள்நா கம்அரை ஆர்த்துஉகந் தானை,
         பல்லின்வெள் ளைத்தலை ஊண்உடை யானை,
நடுங்கஆ னைஉரி போர்த்துஉகந் தானை,
         நஞ்சம்உண் டுகண் டங்கறுத் தானை,
மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள், பிறவிடத்துச் செல்லாது , தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும் , படத்தை உடைய பாம்பை அரை யில் விரும்பிக் கட்டியுள்ளவனும் , முன்னர் விளங்கும் பற்களை யுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும் , தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ள வனும் , நஞ்சினை உண்டு கண்டம் கரியதாகியவனும் , மாதொரு பாகனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 5
வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன்
         மார னார்உடல் நீறுஎழச் செற்று,
துளைத்தஅங் கத்தொடு தூமலர்க் கொன்றை
         தோலும்நூ லும்துதைந்த வரை மார்பன்,
திளைக்கும் தெவ்வர் திரிபுர மூன்றும்
         அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை, வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை :வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும் , மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியு மாறு அழித்தவனும் , துளைசெய்யப்பட்ட எலும்பும் , தூய கொன்றை மலரும் , தோலும் , நூலும் நெருங்கிய , கீற்றுக்களையுடைய மார்பை யுடையவனும் , வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும் , அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும் , அவரைச் சார்ந்த அசுரரும் , அவர்தம் பெண்டிரும் , பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன்.


பாடல் எண் : 6
திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு
         அருள்கள் செய்திடும் தேவர் பிரானை,
உருவி னானைஒன் றாஅறி வொண்ணா
         மூர்த்தியை. விச யற்குஅருள் செய்வான்
செருவில் ஏந்திஓர் கேழல்பின் சென்று
         செங்கண் வேடனாய், என்னொடும் வந்து
மருவி னான்தனை, வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை :திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த , தேவர் தலைவனும் , உருவம் உடையவனும் , அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது , அள வற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரிய வில் ஒன்றை ஏந்திக்கொண்டு , ஒரு பன்றியின்பின்னே , சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவ னும் , என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய , திரு வாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 7
எந்தை யை,எந்தை, தந்தை, பிரானை,
         ஏதம் ஆயஇடர் தீர்க்க வல்லானை,
முந்தை யாகிய மூவரின் மிக்க
         மூர்த்தி யை,முதல் காண்பரி யானை,
கந்தின்மிக்க கரி யின்மருப் போடு
         கார் அகில்கவ ரிம்மயிர் மண்ணி
வந்து வந்துஇழி வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : என் தந்தையும் , என் தந்தை தந்தைக்கும் தலைவ னும் , துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும் , யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , மண்ணியாறு வழியாக , தறி யிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும் , கரிய அகிற் கட்டைகளும் , கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 8
தேனை ஆடிய கொன்றையி னானை,
         தேவர் கைதொழும் தேவர் பிரானை,
ஊனம் ஆயின தீர்க்கவல் லானை,
         ஒற்றை ஏற்றனை, நெற்றிக்கண் ணானை,
கான ஆனையின் கொம்பினைப் பீழ்ந்த
         கள்ளப் பிள்ளைக்கும் காண்புஅரிது ஆய
வான நாடனை, வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை :தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும் , தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் , குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும் , ஒற்றை எருதை உடையவனும் , நெற்றிக்கண்ணை உடையவனும் , காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும் , வானுலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 9
காளை ஆகி வரைஎடுத் தான்தன்
         கைகள் இற்று,அவன் மொய்தலை எல்லாம்
மூளை போத, ஒருவிரல் வைத்த
         மூர்த்தி யை,முதல் காண்புஅரி யானை,
பாளை தெங்கின் பழம்விழ மண்டிச்
         செங்கண் மேதிகள் சேடுஎறிந்து எங்கும்
வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து , நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும் , தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய , பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ , சிவந்த கண்களையுடைய எருமைகள் , நெருங்கிச் சேறுசெய்ய , எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல் களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 10
திருந்த நான்மறை பாடவல் லானை,
         தேவர்க் குந்தெரி தற்குஅரி யானை,
பொருந்த மால்விடை ஏறவல் லானை,
         பூதிப் பை,புலித் தோல்உடை யானை,
இருந்துஉண் தேரரும் நின்றுஉணும் சமணும்
         ஏச நின்றவன், ஆருயிர்க்கு எல்லாம்
மருந்து அனான்தனை, வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும் , தேவர்க்கும் அறிதற்கு அரியவனும் , பெரிய விடை யினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும் , திருநீற்றுப் பையும் , புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும் , இருந்து உண்கின்ற சாக்கிய ரும் , நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும் , அரிய உயிர்கட் கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 11
மெய்யனை மெய்யில் நின்றுஉணர் வானை,
         மெய்யி லாதவர் தங்களுக்கு எல்லாம்
பொய்ய னை, புரம் மூன்றுஎரித் தானை,
         புனிதனை, புலித் தோல்உடை யானை,
செய்ய னை,வெளி யதிரு நீற்றில்
         திகழும் மேனியன் மான்மறி யேந்தும்
மைகொள் கண்டனை, வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேனே

         பொழிப்புரை : என்றும் ஓர் அழிவில்லாதவனும் , மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும் , அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல் லாம் உணரப்படாதவனும் , முப்புரங்களை எரித்தவனும் , குற்றமில் லாதவனும் , புலித்தோலாகிய உடையை உடையவனும் , சிவந்த நிறம் உடையதாய் , வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும் , மான்கன்றை ஏந்துகின்ற , கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய , திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளி யிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து , யான் , வேறு எதனை நினைப்பேன் ! ஒன்றையும் நினையேன் .


பாடல் எண் : 12
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர்
         மாணிக்கத் தைமறந்து என்நினைக் கேன்என்று
உளம் குளிர்தமிழ் ஊரன்,வன் தொண்டன்,
         சடையன் காதலன், வனப்பகை அப்பன்,
நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன்,
         நங்கை சிங்கடி தந்தை, பயந்த
பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேல்
         பறையு மாம்செய்த பாவங்கள் தானே

         பொழிப்புரை : வன்றொண்டனும் , சடையனார் மகனும் , வனப்பகை , சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும் , விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலை வனும் , இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன் , ` வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன் ` என்று சொல்லிப் பாடிய , பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும் , அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...