பழநி - 0131. கரியிணைக் கோடு என




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரியிணை கோடு என (பழநி)

மாதர் மயலில் மயங்காமல், சிவபதத்தில் சேர்த்து அருள்

தனதனத் தானனத் தனதனத் தானனத்
     தனதனத் தானனத் ...... தனதான


கரியிணைக் கோடெனத் தனமசைத் தாடிநற்
     கயல்விழிப் பார்வையிற் ...... பொருள்பேசிக்

கலையிழுத் தேகுலுக் கெனநகைத் தேமயற்
     கலதியிட் டேயழைத் ...... தணையூடே

செருமிவித் தாரசிற் றிடைதுடித் தாடமற்
     றிறமளித் தேபொருட் ...... பறிமாதர்

செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
     சிவபதத் தேபதித் ...... தருள்வாயே

திரிபுரக் கோலவெற் பழல்கொளச் சீர்நகைச்
     சிறிதருட் டேவருட் ...... புதல்வோனே

திரைகடற் கோவெனக் குவடுகட் டூள்படத்
     திருடர்கெட் டோடவிட் ...... டிடும்வேலா

பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற்
     படியினிட் டேகுரக் ...... கினமாடும்

பழநியிற் சீருறப் புகழ்குறப் பாவையைப்
     பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து, டிநல்
     கயல்விழிப் பார்வையில் ...... பொருள்பேசி,

கலை இழுத்தே, குலுக்கு என நகைத்தே, மயல்
     கலதி இட்டே, அழைத்து, ...... அணைஊடே

செருமி, வித்தார சிற்றிடை துடித்து ஆட, மல்
     திறம் அளித்தே, பொருள் ...... பறிமாதர்

செயல் இழுக்காமல், க் கலியுகத்தே புகழ்ச்
     சிவபதத்தே பதித்து ...... அருள்வாயே.

திரிபுரக் கோல வெற்பு அழல்கொள, சீர்நகைச்
     சிறிது அருள் தே அருள் ...... புதல்வோனே!

திரைகடல் கோ என, குவடுகள் தூள்பட,
     திருடர் கெட்டு ஓட விட் ...... டிடும்வேலா!

பரிமளப் பாகலில் கனிகளைப் பீறி நல்
     படியின் இட்டே குரக்கு ...... இனம் ஆடும்

பழநியில் சீர்எறப் புகழ்குறப் பாவையைப்
     பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.


பதவுரை

      திரிபுர கோல வெற்பு அழல் கொள --- முப்புரம் எனப்படும் அழகிய மலை போன்ற நகரங்கள் எரியும்படி,

     சீர் நகை சிறிது அருள் --- சிறந்த சிரிப்பு சிறிது அருளிய,

     தே அருள் புதல்வோனே --- கடவுள் அருளிய திருப்புதல்வரே!

      திரை கடல் கோ என --- அலைகளுடன் கூடிய கடல் கோ என்று கதறவும்,

     குவடுகள் தூள் பட --- கிரவுஞ்ச மலையும் குலமலைகள் ஏழுந் தூளாகுமாறும்,

     திருடர் கெட்டு ஓட --- கள்வர்களாகிய அரக்கர்கள் ஓடி மாளவும்,

     விரட்டிடும் வேலா --- செலுத்திய வேலாயுதரே!

      பரிமள பாகலில் கனிகளை பீறி --- வாசனை வீசும் பலாப்பழங்களைக் கீறி,

     நற் படியில் இட்டு --- நல்ல படிகளில் பலாச்சுளைகளைச் சிதறி,

     குரக்கு இனம் ஆடும் --- குரங்கின் கூட்டங்கள் விளையாடுகின்ற,

     பழநியில் சீர் உற --- பழநி மலையில் கீர்த்தி விளங்க,

     புகழ் குற பாவையை --- புகழ் மிகுந்த வள்ளி நாயகியை,

     பரிவு உற சேர் மணம் --- அன்புடன் மணம் செய்து கொண்ட,

     பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!

      கரி இணை கோடு என --- யானைகளின் இரு கொம்புகள் என்னும்படி,

     தனம் அசைந்து ஆடி --- தனங்களை அசைத்து நடனம் புரிந்து,

     நல் கயல் விழி பார்வையில் --- நல்ல கயல் மீன் போன்ற பார்வையினாலேயே,

     பொருள் பேசி --- பெரும் பொருள் தரவேண்டும் என்று பேசி,

     கலை இழுத்தே --- ஆடையை இழுத்து இழுத்து இட்டும்,

     குலுக்கென நகைத்தே --- குலுக்கென்ற ஒலியுடன் சிரித்தும்,

     மயல் கலதி இட்டே அழைத்து --- மயக்கமாகிய கேட்டினைத் தந்தும் அழைத்துச் சென்று,

     அணை ஊடே --- படுக்கையில்,

     செருமி --- நெருங்கி,

     வித்தார சிறு இடை துடித்து ஆட --- அலங்கரித்த சிறிய இடை துடித்து அசைய,

     மல் திறம் அளித்தே --- வளமையான இன்பத் திறத்தை நல்கி,

     பொருள் பறி மாதர் --- பொருளைக் கவர்கின்ற விலைமாதர்களின்,

     செயல் இழுக்காமல் --- செயல்கள் என்னைக் கவராத வண்ணம்,

     கலியுகத்தே புகழ் --- இக்கலியுகத்தில் புகழப் படுகின்ற,

     சிவபதத்தே பதித்து அருள்வாயே --- சிவபதவியில் அடியேனைப் பொருந்த வைத்து அருள் புரிவீராக.

பொழிப்புரை


         அழகிய மலைபோன்ற முப்புரங்கள் எரியுமாறு சிறந்த புன்னகை சிறிது அருளிய சிவபெருமான் பெற்றருளிய திருப்புதல்வரே!

         அலைகளுடன் கூடிய கடல் கோ என்று கதறவும், கிரவுஞ்ச மலையும் குலமலைகளும் இடிந்து தூளாகும்படியும், திருட்டுத்தனமுடைய அசுரர்கள் ஓடி அழியுமாறும் வேலாயுதத்தை விடுத்தவரே!

         நறுமணம் வீசும் பலாப்பழத்தைக் கீறி, அதன் சுளைகளை நல்ல படிகளில் சிதறி குரங்குக் கூட்டங்கள் விளையாடுகின்ற பழநி மலையில் கீர்த்தி விளங்க இருந்து, புகழ்மிக்க வள்ளி பிராட்டியை அன்புடன் மணம் புரிந்து கொண்ட பெருமிதம் உடையவரே!

         யானையின் இரு கொம்புகள் போன்ற தனங்களை அசைத்து நடனம் ஆடியும், நல்ல கயல் மீன் போன்ற கண்பார்வையில் பெரும் பொருள் தரவேண்டும் என்று பேசியும், மேல் முந்தானையை இழுத்து இழுத்து விட்டும், குலுக்கென்று அடிக்கடி சிரித்தும், மயக்கமான கெடுதியைத் தந்தும், அழைத்துக் கொண்டுபோய் படுக்கையில் நெருங்கி, அலங்கரித்த சிறு இடை துடித்து அசையவும், வளமையான இன்பத்தைத் தந்து பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் செயல் அடியேனை இழுக்காமல், இக்கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவபதத்தில் என்னைப் பொருந்துமாறு அருள் புரிவீர்.


விரிவுரை


முதல் மூன்றடிகளிலும் விலைமகளிரின் செயல்களைக் கூறுகின்றனர்.

இக் கலியுகத்தே புகழ் சிவபதத்தே பதித்தருள்வாயே ---

கலி - பாவம் மிகுந்த யுகம்.

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம், உயர்
தந்தையைச் சீறுகாலம்,
சற்குருவை நிந்தைசெய் காலம், மெய்க் கடவுளைச்
சற்றும் எண்ணாத காலம்,
பேய் தெய்வம் என்று உபசரித்திடும் காலம்,
புரட்டருக்கு ஏற்ற காலம்,
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம், நல்
பெரியோர் சொல் கேளாத காலம்,
தேய்வுடன் பெரியவன் சிறுமை உறு காலம், மிகு
சிறியவன் பெருகு காலம்,
செருவில் விட்டு ஓடினோர் வரிசை பெறு காலம், வசை
செப்புவோர்க்கு உதவு காலம்,
வாய்மதம் பேசிடும் அநியாய காரர்க்கு
வாய்த்த கலிகாலம், ஐயா!
மயிலேறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.                 ----  குமரேச சதகம்.


துட்ட விகடக் கவியை யாருமே மெச்சுவார்,
சொல்லும் நல் கவியை மெச்சார்,
துர்ச்சனற்கு அகமகிழ்ந்து உபசரிப்பார், வரும்
தூயரைத் தள்ளி விடுவார்,
இட்டம் உள தெய்வம்தனைக் கருதிடார், கருப்பு
என்னிலோ போய்ப் பணிகுவார்,
ஈன்றதாய் தந்தையைச் சற்றும் மதியார், வேதை
என்னிலோ காலில் வீழ்வார்,
நட்ட லாபங்களுக்கு உள்ளான பந்து வரின்
நன்றாகவே பேசிடார்,
நாளும் ஒப்பாரியாய் வந்த புத்துறவுக்கு
நன்மை பலவே செய்குவார்,
அட்டதிசை சூழ்புவியில் ஒங்கு கலி மகிமைகாண்,
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர்
அறப்பளீசுர தேவனே.                     --- அறப்பளீசுர சதகம்.


எழுதப் படிக்க வகை தெரியாத மூடனை
இணைஇலாச் சேடன் என்றும்,
ஈவது இல்லாத கனலோபியை சபையதனில்
இணைஇலாக் கரணன் என்றும்,
அழகுஅற்ற வெகுகோர ரூபத்தை உடையோனை
அதிவடிவ மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
ஆண்மைமிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சனை
மொழி அரிச் சந்த்ரன் என்றும்,
மூதுலகில் இவ்வண்ணம் சொல்லியே கவுராசர்
முறைஇன்றி ஏற்பது என்னோ?
அழல்என உதித்துவரு விடம் உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே.                    --- அறப்பளீசுர சதகம்.


அண்டின பேரைக் கெடுப்போரும்
         ஒன்று பத்தா முடிந்து
குண்டுணி சொல்லும் குடோரிகளும்
         கொலையே நிதம் செய்
வண்டரைச் சேர்ந்து இன்பச்
         சல்லாபம் பேசிடும் வஞ்சகரும்,
சண்டிப் பயல்களுமே
         கலிகாலத்தில் தாட்டிகரே.  


கோழை, ஆணவ மிகுத்த வீரமே புகல்வர், அற்பர்,
         கோதுசேர் இழிகுலத்தர்,                  குலமேன்மை
கூறியே நடு இருப்பர், சோறுஇடார், தருமபுத்ர
         கோவும் நான் என இசைப்பர்,       மிடியூடே
ஆழுவார், நிதி உடைக் குபேரனாம் என இசைப்பர்,
         ஆசுசேர் கலியுகத்தின்      நெறி ஈதே. 
ஆயும் நூலறிவு கெட்ட நானும் வேறல அதற்குள்,  
         ஆகையால் அவையடக்க   உரையீதே.        --- திருப்புகழ்.
        
          இதன் பொருள் ---- பயந்தவராய் இருப்பினும் அகங்காரம் மிக்க வீரப்பேச்சைப் பேசுவார்கள் சிலர்.  கீழ் மக்களாகவும்,  குற்றம் உள்ள இழி குலத்தவராக இருப்பினும், சிலர் தங்கள் குலப்பெருமை பேசியே சபை நடுவே வீற்றிருப்பர். பசித்தவருக்குச் சோறு இடாத சிலர், தரும புத்ர அரசன் நான்தான் என்று தம்மைப் புகழ்ந்து பேசிக் கொள்வார்கள். ஏழ்மை நிலையிலே ஆழ்ந்து கிடந்தாலும் சிலர், செல்வம் மிக்க குபேரன் நான்தான் என்று தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள்.  குற்றம் நிறைந்த கலியுகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கிறது. ஆயவேண்டிய நூலறிவு இல்லாத நானும் இந்த வழிக்கு வேறுபட்டவன் அல்லன்.

த்தகைய கலியுகத்திலும் புகழப் பெறுவது சிவபதம் எனக் குறிப்பிடுகின்றார்.

பிரமபதம், விஷ்ணுபதம், முதலிய எல்லாப் பதங்களிலும் சிறந்தது சிவபதம் என வுணர்க.

நகை சிறிது அருள் தே ---

தே-கடவுள். திரிபுரத்தை அழிக்கவேண்டும் என்று எல்லாத் தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டார்கள். போருக்குரிய கருவிகள் யாவற்றையும் ஆயத்தம் புரிந்தார்கள். சகல தேவர்களும் ஒவ்வொரு கருவியாக ஆனார்கள்.

அப்படி அமைந்த அமரர்கள் தம் உள்ளத்தில் “நாமெல்லாம் துணை புரிவதனால்தான் திரிபுரம் அழியப் போகின்றது” என்று கருதித் தருக்குற்றார்கள்.

சிவபெருமான் வில்லை வளைக்கவில்லை; பாணம் தொடுக்கவில்லை. நமக்கு வில்லுங் கணையும் வேண்டுமோ எனச் சிறிது புன்னகை புரிந்தார். அச்சிரிப்பில் ஒரு சிறு தீப்பொறி தோன்றியது.

முப்புரங்களும் எரிந்து பொடியாகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. அமரர்கள் நாணி நின்றார்கள்.

இந்நா ரணன் ஆதியர்யா வர்களும்
அந்நாள் அமலன் பணிஆற் றிடலும்
உன்னா அவர்சிந் தனைமொய்ந் நகையால்
ஒன்னார் புரம்அட் டதுஉணர்ந் திலையோ.     --- கந்தபுராணம்.

ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
ஒன்றும் பெருமிகை உந்தீபற...                --- திருவாசகம்.


பரிமளப் பாகலிற் கனிகளைப் பீறிநற் படியினிட்டே குரக்கினமாடும் பழநி ---

பாகல்-பலா, பலாப்பழம் நல்ல வாசனையுடன் கூடியது.

பழநியில் குரங்குகள் பலாப்பழத்தைக் கொணர்ந்து கீறி அதன் சுளைகளை எடுத்து உண்டும், எஞ்சியவற்றைப் படிகளில் வீசி, சிதறும்படி செய்து விளையாடுகின்றன.

“.......பலாவின் இருஞ்சுளைகளும்
 கீறி நாளும் முசுக்கிளையோடு உண்டு உகளும் கேதாரமே”

என்று திருஞானசம்பந்தரும் குரங்கு பலாப்பழம் உண்பதைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

கருவுற்று வருந்தும் பெண்மந்திகட்கு, ஆண் மந்திகள் பலாப்பழத்தை கீறி தந்து உபசரிக்கின்றன என்று மகாபாரதத்திலும் வில்லிபுத்தூரார் கூறுகின்றார்.

உலைவந்தயரும் சூன்மந்திக் குருகா நிலங்கீண் டுதவுகுலக்
கலைவன் பலவின் களைகீறிக் களிப்போ டளிக்குங் காந்தாரத்
தலைவன்”
  
கருத்துரை

சிவகுமாரா! பழநியப்பா! அடியேனுக்குச் சிவபதம் அருள்வாய்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...