பழநி - 0132. கருகி அகன்று





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருகி அகன்று (பழநி)

முருகா!
மாதர் மயலில் விழுந்து தளராமல், திருவடியைத் தந்து அருள்

தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான


கருகிய கன்று வரிசெறி கண்கள்
     கயல்நிக ரென்று ...... துதிபேசிக்

கலைசுரு ளொன்று மிடைபடு கின்ற
     கடிவிட முண்டு ...... பலநாளும்

விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
     விதிவழி நின்று ...... தளராதே

விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
     விதபத மென்று ...... பெறுவேனோ

முருகக டம்ப குறமகள் பங்க
     முறையென அண்டர் ...... முறைபேச

முதுதிரை யொன்ற வருதிறல் வஞ்ச
     முரணசுர் வென்ற ...... வடிவேலா

பரிமள இன்ப மரகத துங்க
     பகடித வென்றி ...... மயில்வீரா

பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
     பழநிய மர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கருகி அகன்று வரிசெறி கண்கள்
     கயல்நிகர் என்று ...... துதிபேசி,

கலைசுருள் ஒன்று மிடைபடு கின்ற
     கடிவிடம் உண்டு, ...... பலநாளும்

விரகுஉறு சண்ட வினைஉடல் கொண்டு,
     விதிவழி நின்று ...... தளராதே,

விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
     விதபதம் என்று ...... பெறுவேனோ?

முருக! கடம்ப! குறமகள் பங்க!
     முறை என அண்டர் ...... முறைபேச,

முதுதிரை ஒன்ற வருதிறல் வஞ்ச
     முரண் அசுர் வென்ற ...... வடிவேலா!

பரிமள இன்ப மரகத துங்க
     பகடித வென்றி ...... மயில்வீரா!

பறிதலை குண்டர் கழுநிரை கண்டு,
     பழநி அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

     முருக --- முருகப் பெருமாளே!

     கடம்ப --- கடப்ப மலர் மாலை தரித்தவரே!

     குறமகள் பங்க --- வள்ளிநாயகியை ஒரு பங்கில் வைத்தவரே!

      முறை என அண்டர் --- ஓலம் என்று தேவர்கள்,

     முறை பேச --- முறையிட்டுத் துதி செய்ய,

     முது திரை ஒன்று வரு --- பழைமையான கடல்போலப் பரந்து வருகின்ற,

     திறல் --- வலிமையும்,

     வஞ்ச --- வஞ்சனையும்,

     முரண் --- மாறுபாடும் உடைய,

     அசுர் வென்ற --- அசுரரை வென்ற,

     வடிவேலா --- கூர்மையான வேலை யுடையவரே!

      பரிமள இன்ப --- நறிய வாசனையைப் போல் இன்பந் தருவதும்,

     மரகத --- மரகதமணி போன்ற நிறம் பொருந்தியதும்,

     துங்க --- பரிசுத்தமானதும்,

     பகடு --- வலிமையும்,

     இதம் --- நன்மை உடையதும்,

     வெற்றி --- வெற்றியுடையதும் ஆகிய,

     மயில் வீரா --- மயில் மீது வருகின்ற வீரரே!

     பறிதலை குண்டர் --- தலை மயிரைப் பறிக்கின்ற சமணர்கள், 

     கழுநிரை கண்டு --- வரிசையான கழுவில் ஏறுவதைப் பார்த்து,

     பழநி அமர்ந்த பெருமாளே --- பழநிமலைமீது விரும்பியிருக்கின்ற பெருமையிற் சிறந்தவரே!

      கருகி அகன்று --- கருமை நிறம் படைத்த விசாலம் உடையதாகி,

     வரி செறி கண்கள் --- ரேகைகள் நிறைந்த கண்கள்,

     கயல் நிகர் என்று --- கயல்மீனுக்குச் சமானம் என்று,

     துதி பேசி --- துதியுரைகளைக் கூறி

     கலைசுருள் ஒன்றும் --- புடவையின் சுருள் பொருந்தி,

     மிடை படுகின்ற --- நெருங்கியுள்ள,

     கடி விடம் உண்டு --- காவலுடன் கூடிய மாதருடைய இன்பமாகிய நஞ்சினைப் பருகி,

     பல நாளும் --- அநேக நாட்கள்,

     விரகு உறு சண்ட வினை உடல் கொண்டு --- வஞ்சனையைச் செய்யும் கொடிய வினையினாலாய உடம்பைச் சுமந்து,

     விதிவழி நின்று தளராதே --- அயன் எழுதிய விதிப்படியே நின்று அடியேன் தளராதபடி,

     விரை கமழ் தொங்கல் மருவிய --- வாசனை வீசுகின்ற மாலைகள் பொருந்திய,

     துங்க வித பதம் என்று பெறுவேனோ --- பரிசுத்த விதமான உமது திருவடியை அடியேன் என்று பெறுவேனோ!


பொழிப்புரை

         முருகக் கடவுளே!

         கடப்பமாலை புனைந்தவரே!

         வள்ளியை ஒரு புறத்தில் கொண்டவரே!

         ஓலம் என்று தேவர்கள் முறையிட பழைமையான கடலில் பொருந்தி வந்த வலிமையும் வஞ்சனையும் மாறுபாடும் கொண்ட அசுரர்களை வென்ற கரிய வேற்படையை யுடையவரே!

         வாசனையைப் போல் இன்பத்தைப் புரிவதும், பச்சை நிறம் பொருந்தியதும், பரிசுத்தமுடையதும், வலிமையும் நன்மையும் பூண்டதுமான வெற்றி மயிலை வாகனமாக உடைய வீரரே!

         தலை மயிரைப் பறிக்கின்ற சமணர்கள் வரிசையாக கழுவில் ஏறுவதைக் கண்டு, பழநிமலையின் மீது விரும்பியுறைகின்ற பெருமிதம் உடையவரே!

         கருமை நிறமுடன் விசாலமாக விளங்கி, ரேகைகளுடன் கூடிய கண்கள் கயல்மீனுக்கு நிகர் என்று புகழ் பேசி, புடவையின் சுருள் பொருந்தி நெருங்கி இருக்கின்ற காவலுடன் கூடிய மாதருடைய இன்பமாகிய நஞ்சை உண்டு, வஞ்சனையைச் செய்யும் கொடிய வினையினால் வந்த உடம்பைச் சுமந்து, விதியின் வழி நின்று தளர்ச்சி அடையாத வண்ணம் மணம் வீசும் மாலையுடன் கூடிய பரிசுத்த விதமான (தேவரீருடைய) திருவடியை என்று  பெறுவேனோ?


விரிவுரை


விரகுறு சண்ட வினையுடல் கொண்டு ---

இந்த உடம்பு வினையால் வந்தது: “வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய்” என்கின்றார் பட்டினத்தடிகள். எனவே வினையின் வேர் அற்றால் உடம்பும் அற்றுப்போகும்.

விதி வழி நின்று ---

வினைக்கு ஏற்ப சுக துக்கங்கள் நுகருமாறு விதிக்கப் பெறுகின்றது. அவ் விதி வழியே ஒவ்வோர் உயிரும் நின்று இயங்குகின்றது.

துங்க வித பதம் என்று பெறுவேனோ? ---

இறைவன் திருவடி “யான் எனது” அற்ற இடம் ஆதலின் அது பரிசுத்தமானது. விரும்பித் தொழுகின்ற அடியவர்களை விண்ணுலகத்திற்கு ஏற்றுவதற்குரிய ஏணி போன்றது. மாணிக்கம் அனையது. மரகதம் போன்றது, வைர மணிக்கும் ஆணிப்பொன்னுக்கும் ஒப்பானது.

பேணித் தொழும்அவர் பொன்உலகு ஆளப் பிறங்குஅருளால்
ஏணிப் படிநெறி இட்டுக் கொடுத்து,இமை யோர் முடிமேல்
மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று வயிரம் மன்னி
ஆணிக் கனகமும் ஒக்கும் ஐ யாறன் அடித்தலமே. ---  அப்பர்

முருக கடம்ப.........முறையென அண்டர் முறைபேச ---

சூரபன்மன் போரின் முடிவில், ஆயிரங்கோடி அமாவாசை இருள் போன்ற காரிருள் வடிவு கொண்டு, வானவர்கள் அனைவரையும் வடிவாளால் கொல்லுதற்கு எழுந்தான். அப்போது மாலயனாதி தேவர்கள் யாவரும் ‘முருகா! முருகா!’ என்று ஓலமிட்டார்கள். அந்த ஓலத்தைச் செவிசாய்த்துக் கேட்ட முருகப்பெருமான் “ஏழுகடலும் எண் சிலம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சும் இமையவரை அஞ்சேல்” என்று வலக்கரத்தை நீட்டி அபயந் தந்து, அந்த இருளின் மீது ஆயிரங்கோடி சூரிய ஒளி மயமான வேலாயுதத்தை விடுத்தருளினார்.

தேவர்கள் ஓலமிட்டதாகக் கூறும் கந்தபுராணக் கவிகளைக் காண்க.

நண்ணினார்க்கு இனியாய் ஓலம், ஞான நாயகனே ஓலம்,
பண்ணவர்க்கு இறையே ஓலம், பரஞ்சுடர் முதலே ஓலம்,
எண்ணுதற்கு அரியாய் ஓலம், யாவையும் படைத்தாய் ஓலம்,
கண்ணுதற் பெருமான் நல்கும் கடவுளே ஓலம் ஓலம்.

தேவர்கள் தேவே ஓலம், சிறந்த சிற்பரனே ஓலம்,
மேவலர்க்கு இடியே ஓலம், வேற்படை விமலா ஓலம்,
பாவலர்க்கு எளியாய் ஓலம், பன்னிரு புயத்தாய் ஓலம்,
மூவரும் ஆகி நின்ற மூர்த்தியே ஓலம் ஓலம்.


பரிமள இன்ப மரகத துங்க பகடித வென்றி மயில் ---

இந்த அடி எம்பெருமானுடைய மயிலைப் புகழ்ந்து கூறுகின்றது. மயில் இன்ப மயமானது. மரகத வடிவுடையது. தூய்மையானது, வலிமையும் நன்மையும் பூண்டது. வெற்றியையுடையது.

பறி தலை குண்டர் ---

சமணர் ஒருவனைக் குருவாக நியமிக்கும்போது “இப் துக் பிற் சுக்” என்ற மந்திரத்தைக் கூறி, ஏனைய குருமார்கள் அவனைச் சூழ்ந்து நின்று ஆளுக்கு ஒன்றாக தலைமயிரைப் பறிப்பார்கள். இப்துக்-இப்போதும் துக்கம். பிற்சுக்- பின்னால் சுகம். என்பது இம்மந்திரத்தின் பொருள்.

கேசம் பறி கோப்பாளிகள்” என்று திருவோத்தூர்த் திருப்புகழிலும் கூறுகின்றார். குண்டர்-கீழ்மக்கள்.

கழு நிரை கண்டு ---

நிரை-வரிசை, மதுரையில் சமணர்கள் திருஞானசம்பந்தரிடம் அனல் வாதம் புனல் வாதம் புரிந்து தோல்வியுற்று, தாம் கழுவேறிக் கொள்வதாக முன்னமே கூறிய படி, வரிசையாகக் கழுமரங்களை நட்டு கழுவேறினார்கள். அதனைத் திருஞானசம்பந்தர் கண்டருளினார். இங்கே திருஞானசம்பந்தராக முருகவேளை அமைத்துப் பாடுகின்றார்.


கருத்துரை


அசுர குல காலா! பழநி வேலா! உனது திருவடியைத் தந்து அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...