அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கருப்புவிலில் (பழநி)
முருகா!
தந்தைக்கு உபதேசித்ததை
அடியேனுக்கும் உபதேசிப்பாய்
தனத்ததன
தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன
தனத்தனா தனதன ...... தனதான
கருப்புவிலில்
மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு
திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலை
கனத்தவிரு தனத்தின்மிசை
கலக்குமோ கனமதில் ...... மருளாமே
ஒருப்படுதல்
விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
யுனைப்புகழு மெனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும்
விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகி
யுரைக்கமறை யடுத்துபொருள்
உணர்த்துநா ளடிமையு ...... முடையேனோ
பருப்பதமு
முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழு
படிக்கடலு மலைக்கவல
பருத்ததோ கையில்வரு ...... முருகோனே
பதித்தமர
கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி ...... வயலூரா
திருப்புகழை
யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளு மிசைப்பிரிய
திருத்தமா தவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவ
ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குளுறை
திருக்கைவே லழகிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கருப்புவிலில்
மருப்பகழி தொடுத்து, மதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்து, அணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்,
கதக்களிறு
திடுக்கம் உற மதர்த்து, மிக எதிர்த்து, மலை
கனத்த இரு தனத்தின்மிசை
கலக்கு மோகனம் அதில் ...... மருளாமே,
ஒருப்படுதல்
விருப்புஉடைமை மனத்தில்வர நினைத்து அருளி,
உனைப் புகழும் எனைப் புவியில்
ஒருத்தனாம் வகை, திரு ...... அருளாலே,
உருத்திரனும்
விருத்திபெற அநுக்கிரகி எனக்குறுகி
உரைக்க மறை அடுத்துபொருள்
உணர்த்து நாள் அடிமையும் ...... உடையேனோ?
பருப்பதமும், உருப்பெரிய அரக்கர்களும், இரைக்கும் எழு
படிக்கடலும் மலைக்க வல
பருத்த தோகையில் வரு ...... முருகோனே!
பதித்த
மரகதத்தினுடன் இரத்ன மணி நிரைத்த,
பல
பணிப் பனிரு புயச்சயில!
பரக்கவே இயல்தெரி ...... வயலூரா!
திருப்புகழை
உரைப்பவர்கள், படிப்பவர்கள், மிடிப்பகைமை
செயித்து அருளும் இசைப்பிரிய!
திருத்த மாதவர் புகழ் ...... குருநாதா!
சிலைக்குறவர்
இலைக்குடிலில் புகைக் களகமுகில் புடைசெல்
திருப்பழநி மலைக்குள் உறை
திருக்கைவேல் அழகிய ...... பெருமாளே.
பதவுரை
பருப்பதமும் --- மலையையும்,
உரு பெரிய அரக்கர்களும் --- பெரிய வடிவமுடைய
அரக்கர்களையும்,
இரைக்கும் எழுபடி கடலும் --- ஒலிக்கின்ற ஏழு
பூமியையும் ஏழு கடல்களையும்,
அலைக்க வல --- அலைத்துக் கலக்க வல்ல,
பருத்த தோகையில் வரும் --- பெரிய தோகை
மயிலின் மீது வருகின்ற,
முருகோனே --- முருகக் கடவுளே!
பதித்த மரகதத்தினுடன் --- பதிக்கப்
பெற்ற மரகத மணியுடன் பெற்ற,
பல பணி --- பலவகையான அணிகலன்களை யணிந்துள்ள,
பனிரு புய சயில --- மலை போன்ற பன்னிரண்டு
புயங்களை உடையவரே!
பரக்கவே இயல் தெரி --- விரிவாக இயற்ற
மிழைத் தெரிந்த,
வயலூரா --- வயலூரில் எழுந்தருளியவரே!
திருப்புகழை உரைப்பவர்கள் ---
திருப்புகழை எடுத்துக் கூறி அதற்கு விரிவுரை பகிர்கின்றவர்களுக்கும்,
படிப்பவர்கள் --- ஓதுகின்றவர்களுக்கும்,
மிடி பகைமை செயித்து அருளும் ---
தரித்திரத்தையும் பகைகளையும் தொலைந்து அருள்புரிகின்ற,
இசைப் பிரிய --- இசைக்கும் பிரியம் வைப்பவரே!
திருத்த மாதவர் புகழ் --- திருந்திய
ஒழுக்கமுடைய சிறந்த தவத்தினர்கள் புகழ்கின்ற,
குருநாதா --- குருநாதரே!
சிலை குறவர் இலை குடிலில் --- வில்லுடன்
கூடிய குறவர்களுடைய இலையினால் வேய்ந்த குடிசையிலும்,
புகை களமுகில் புடை செல் --- புகை போன்ற
கருமையுடைய மேகங்கள் அருகில் தவழ்ந்து செல்கின்ற,
திருப்பழநி மலைக்குள் உறை ---
திருப்பழநியிலும் வசிக்கின்ற,
திருக்கை வேல் அழகிய --- திருக்கையில் வேலை
யேந்திய அழகு நிறைந்த,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
கருப்பு விலில் --- கரும்பு வில்லில்,
மரு பகழி தொடுத்து --- வாசனையுடைய
மலர்க்கணைகளைத் தொடுத்து,
மதன் விடுத்த --- மன்மதன் விடுத்தது போன்ற,
கடைக் கணொடு --- கடைக்கண் பார்வையுடன்,
சிரித்து அணுகு --- சிரித்துக் கொண்டு
நெருங்கி வந்து,
கருத்தினால் விரகு செய் --- கருத்தோடு உபாயச்
செயல்கள் புரிகின்ற,
மடமாதர் --- மடமையுடைய விலைமாதர்களின்,
கத களிறு திடுக்கம் உற --- கோபமுள்ள யானையுந்
திடுக்கிடும்படி,
மதர்த்து --- செழிப்புற்று,
மிக எதிர்த்து --- மிகவும் எதிர்த்து,
மலை கனத்த --- மலை போல் பருத்துள்ள,
இரு தனத்தின் மிசை --- இரண்டு தனங்களின் மீது,
கலக்கு மோகனம் அதில் --- கலந்து கொள்ளும் மோக
வெறியில்,
மருளாதே --- மயங்காமல்,
ஒருப்படுதல் விருப்பு உடைமை மனத்தில் வர ---
ஒருமை அடைதலில் விருப்ப உணர்ச்சி என் மனத்தில் உண்டாகும்படி,
நினைத்து அருளி --- திருவுள்ளத்தில் நினைத்து
அருள் செய்து,
உனை புகழும் எனை --- தேவரீரையே புகழ்ந்து
பாடும் அடியேனை,
புவியில் --- இப்பூதலத்தில்,
ஒருத்தனாம் வகை --- நிகரில்லாதவனாகும் வகையை,
திரு அருளால் --- உமது திருவருளினால்,
உருத்திரனும் விருத்தி பெற ---
உருத்திரமூர்த்தியும் விளக்கம் பெற வேண்டி,
அநுக்கிரகி என குறுகி --- எனக்கு
உபதேசித்தருளுக என்று உம்மை அணுகிக் கேட்க,
உரைக்கும் அ மறை அடுத்து பொருள் --- தேவரீர்
உபதேசித்த அந்த இரகசியப் பொருளை,
உணர்த்தும் நாள் --- அடியேனுக்கும் உணர்த்தி உபதேசிக்கின்ற
ஒரு நாளை,
அடிமையும் உடையேனோ --- அடியேன் பெறக் கடவேனோ? (உபதேசிக்கின்ற ஒரு நாள் எனக்கு
கிடைக்குமோ).
பொழிப்புரை
மலையையும், பெரிய வடிவமுள்ள அரக்கர்களையும், ஒலிக்கின்ற ஏழு பூமிகளையும், ஏழு கடல்களையும், கலங்கச் செய்வதில் வல்ல பெரிய தோகை மயில்மீது
வருகின்ற முருகவேளே!
பதித்துள்ள மரகத மணியுடன், இரத்தின மணிகள் இழைத்த பற்பல ஆபரணங்களை
யணிந்த மலை போன்ற பன்னிரு புயங்களை யுடையவரே!
இயற்றமிழை விரிவாகத் தெரிந்த வயலூர்
முருகரே!
திருப்புகழை உரை கூறுவோருக்கும், ஓதுவோர்க்கும், உள்ள வறுமையையும், பகைமையையுங் களைந்தருளும் இசையை
விரும்புபவரே!
திருந்திய ஒழுக்கமுள்ள பெரிய
தவத்தினர்கள் புகழ்கின்ற குருநாதரே!
வில்லையேந்திய குறவர்களுடைய இலையால்
வனைந்த குடிசைகளிலும் புகை போன்ற கரிய மேகம் படர்கின்ற திருப்பழநி மலையிலும்
உறைகின்ற திருக்கையில் வேலேந்திய அழகிய பெருமிதம் உடையவரே!
கரும்பு வில்லில் மணம் பொருந்திய
மலர்க்கணைகளை மன்மதன் தொடுத்து விடுத்தது போன்ற கடைக்கண் பார்வையுடன், அடிக்கடி சிரித்துக் கொண்டு நெருங்கி
வந்து, உள்ளத்தினால் உபாயச்
செயல்கள் புரிகின்ற விலைமகளிருடைய,
கோபமுள்ள
யானையுந் திடுக்கிடுமாறு செழித்து,
மிகவும்
எதிர்த்து, மலைபோல் பருத்துள்ள
இரு தனங்களின் மிசை கலக்கங் கொள்ளும் மோக வெறியில் மயக்க மடையாமல், ஒருமைப்பாட்டில் விருப்பமானது என்
மனதில் வருமாறு தேவரீர் திருவுள்ளத்தில் நினைத்தருளி, உம்மையே புகழ்கின்ற அடியேனை இப்புவியில்
நிகரில்லாதவனாகும்படி திருவருளினால், உருத்திர
மூர்த்தியும், விளக்கமுறும்படி
உபதேசிக்க வேண்டும் என்று அருகில் வந்து கேட்க உபதேசித்த, அந்த இரகசியப் பொருளை எனக்கும்
உணர்த்துகின்ற நாள் ஒன்று கிடைக்குமோ?
விரிவுரை
முதல்
இரண்டு அடிகளிலும் மாதர் திறம் கூறப்படுகின்றது.
ஒருப்படுதல்
விருப்புடைமை மனத்தில் வர ---
மனமானது
எதனை எதனையோ விரும்புகின்றது. ஆனால் பொருள்களை விரும்ப விரும்பத் துக்கமே
மேலிடுகின்றது. ஒருமைப்பாடு ஒன்றினாலேயே உண்மையான சுகம் ஏற்படுகின்றது.
“ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்” என்கிறார் இராமலிங்க அடிகள்.
புவியில்
ஒருத்தனாம் வகை ---
முருகனை
உண்மையாக நினைக்கின்ற அடியாரை இப்புவியில் “இவர் சமானமில்லாதவர்” என்று உலகம்
நினைக்கும்படி செவ்வேட்பரமன் செய்தருளுவார்.
“உலகத்து ஒருநீயாகத்
தோன்ற விழுமிய
பெறல்அரும் பரிசில்” ---
திருமுருகாற்றுப்படை
“என்னையும் ஒருவன் ஆக்கி
இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி” ---
திருவாசகம்
உரைக்க
மறையடுத்த பொருள் ---
உரைக்கு
அம் மறை எனப் பதப்பிரிவு செய்க.
இந்த
அடியில் அருணகிரிநாதர், “முருகா! உன்
அப்பாவுக்கு உபதேசித்த மறைப்பொருளை அடியேனுக்கும் உபதேசிக்க வேண்டும்” என்று
வேண்டுகின்றார்.
“..............விசும்பின் புரத்ரயம்
எரித்த பெருமானும்
நிருபகுருபரகுமர
என்றென்று பத்திகொடு
பரவ அரு ளியமவுன மந்த்ரந் தனைப்பழைய
நினதுவழி யடிமையும் விளங்கும் படிக்கினி
துணர்த்தி யருள்வாயே” --- (அகரமுத) திருப்புகழ்
“நாதா குமார நமஎன்று அனார்
ஓதாய்என ஓதியது எப்பொருள்தான்” ---
கந்தரநுபூதி
திருப்புகழை
உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப் பகைமை செயித்தருளும் இசைப் பிரிய ---
முருகனுடைய
திருப்புகழை அன்புடன் பாடுவோர்க்கும், அப்பாடலுக்கு
உரை கூறுவோர்க்கும் எப்போதும் வறுமையும் பகைச் சிறுமையும் இல்லாதபடி இறைவன் அருள்
புரிவான். “இசைப்பிரியன்” என்றபடியால் இசையுடன் பாடவேண்டும் என்றும்
குறிப்பிடுகின்றார்.
சிலைக்குறவர்
இலைக்குடிலில்
---
வெள்ளிமலையான
திருக்கயிலாய மலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் முருகன், எளிய குறவருடைய இலைக்குடிசையிலும்
அவர்களை ஆட்கொள்ளும் பொருட்டு உறைகின்றான்.
இது
அப்பெருமானுடைய பெருங்கருணையை உணர்த்துகின்றது. அப் பெருமான் ஏழைக்கிரங்கும்
பெருமான்.
இப்பாடலில் ஒவ்வோரடியிலும் இறுதியில்
உள்ள வரியை எடுத்து தனியே அமைத்தால் அது ஒரு தனித் திருப்புகழாக அமையும். இது
“கரந்துறை பாடல்” என்று பேர் பெறும்.
கருத்தினால்
விரகுசெய் மடமாதர்
கலக்குமோ கனமதில் மருளாதே
ஒருத்தனாம்
வகைதிரு வருளாலே
உணர்த்துநாள்அடிமையும் உடையேனோ
பருத்ததோ
கையில்வரு முருகோனே
பரக்கவே இயல்தெரி வயலூரா
திருத்தமா
தவர்புகழ் குருநாதா
திருக்கைவேலு அழகிய பெருமாளே.
கருத்துரை
முருகா!
வயலூரா! பழநியப்பா! சிவமூர்த்திக்கு உபதேசித்த இரகசியப் பொருளை அடியேனுக்கும்
உபதேசித்தருள்வாய்.
No comments:
Post a Comment