பழநி - 0134. கருவின் உருவாகி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கருவின் உருவாகி (பழநி)

முருகா!
அடியேன் பிறந்து, கலைகள் பல தெரிந்து,  
மதனனால் கருத்து அழிந்து,  
சிவநாமங்களை நினையாமல், 
ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர்.


தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான


கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
     கலைகள்பல வேதெ ரிந்து ...... மதனாலே

கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
     கவலைபெரி தாகி நொந்து ...... மிகவாடி

அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
     அறுசமய நீதி யொன்று ...... மறியாமல்

அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
     அநுதினமு நாண மின்றி ...... யழிவேனோ

உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
     உலகளவு மால்ம கிழ்ந்த ...... மருகோனே

உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
     உறைபுகலி யூரி லன்று ...... வருவோனே

பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமனரு ளால்வ ளர்ந்த ...... குமரேசா

பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கருவின் உருவாகி வந்து, வயது அளவிலே வளர்ந்து,
     கலைகள் பலவே தெரிந்தும், ...... மதனாலே,

கரியகுழல் மாதர் தங்கள் அடி சுவடு மார்பு தைந்து
     கவலைபெரிது ஆகி நொந்து, ...... மிகவாடி,

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று,
     அறுசமய நீதி ஒன்றும் ...... அறியாமல்,

அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று,
     அநுதினமும் நாணம் இன்றி ...... அழிவேனோ?

உரகபட மேல் வளர்ந்த பெரிய பெருமாள், அரங்கர்,
     உலகு அளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே!

உபயகுல தீப! துங்க விருது கவிராஜ! சிங்க!
     உறைபுகலி ஊரில் அன்று ...... வருவோனே!

பரவைமனை மீதில் அன்று ஒருபொழுது தூது சென்ற
     பரமன் அருளால் வளர்ந்த ...... குமரேசா!

பகை அசுரர் சேனை கொன்று, அமரர்சிறை மீள வென்று,
     பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.

பதவுரை
  
      உரக படம் மேல் வளர்ந்த --- ஆதிசேடனாகிய பாம்பின் படத்தின் மீது கண்வளர்ந்து அறி துயில் புரிகின்றவரும்,

     பெரிய பெருமாள் --- பெருமையிற் சிறந்த பெருந் தகைமை உடையவரும்

     அரங்கர் --- திருவரங்கம் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளவரும்,

     உலகு அளவு மால் --- (மாபலிபால் மூவடிகேட்டு) உலகை ஓர் அடியால் அளந்தவருமாகிய திருமால்

     மகிழ்ந்த மருகோனே --- திருவுள்ளம் மகிழ்ந்து மதிக்கத்தக்க மருகரே!

      உபய குல தீப --- தாயின் குலம் தந்தையின் குலம் என்னும் இருகுலங்களையும் விளக்க வந்த தீபமும்,

     துங்க --- பரிசுத்தமுடையவரும்,

     விருது கவி ராஜ சிங்க --- கொடி சிவிகை தாளம் முதலிய விருதுகளையுடைய அருட்கவி ராஜசிங்கமும் ஆக,

     உறை புகலி ஊரில் அன்று வருவோனே --- வசிப்பதற்குத் தகுதியான சீகாழிப்பதியில் அந்நாளில் திருஞானசம்பந்த மூர்த்தியாகத் திருவவதாரம் புரிந்து வந்தவரே!

      பரவை மனை மீதில் ---  பரவை நாச்சியார் திருமனைக்கு,

     அன்று ஒரு பொழுது தூது சென்ற --- அன்றொரு நாள் (அவர் கொண்ட ஊடலைத் தணிக்கும் பொருட்டு சுந்தரமூர்த்தி நாயனாருக்காகத்) தூது சென்றருளிய,

     பரமன் அருளால் வளர்ந்த --- எப்பொருட்கும் இறைவராகிய சிவபெருமானது திருவருளால் வளர்ந்தருளிய,

     குமர --- குமாரக் கடவுளே!

      ஈசா --- இறைவரே!

     பகை அசுரர் சேனை கொன்று --- தேவர்களிடத்துப் பகை கொண்ட அசுரர்களது சேனைகளைக் கொன்று,

     அமரர் சிறை மீள வென்று --- தேவர்கள் சிறையினின்று நீங்கி மீண்டுவர (சூராதிகளை) வென்று

     பழநி மலை மீதில் நின்ற --- பழநிமலையின்மேல் என்றும் இன்பந் தருமாறு நின்றருளிய,

     பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

     கருவின் உரு ஆகி --- தாயாரது கருப்பையில் ஒரு வடிவத்தைப் பெற்று,

     வந்து --- உலகில் குழந்தையாகப் பிறந்து,

     வயது அளவிலே வளர்ந்து --- வயதின் அளவு அளவாக செழிப்புடன் வளர்ந்து,

     கலைகள் பல (ஏ-அசை) தெரிந்தும் --- பல நூல்களைப் படித்து உணர்ந்து கொண்டும்,

     மதனாலே கரிய குழல் மாதர் தங்கள் - (படித்ததன் பயனை உணர்ந்து அதனைப் பெறுதற்கு முயற்சி செய்யாமல்) மன்மதனுடைய மலர்க்கணையினால் மயங்கி, கருமை நிறமுடைய கூந்தலோடு கூடிய பெண்களது,

     அடி சுவடு மார் புதைந்து --- (கலவியில் அப்பெண்களின்) பாதச் சுவடு அடியேனது மார்பில் புதையும்படி விளையாடி,

     கவலை பெரிது ஆகி நொந்து ---- மிகவும் துன்பத்தையுடையவனாகி மனம் வருந்தி,

     மிக வாடி --- மிகவும் வாட்டத்தை அடைந்து,

     அரகர சிவாய என்று --- அரஹர சிவாய என்ற திருநாமங்களைச் சொல்லி,

     தினமும் நினையாமல் நின்று --- நாள்தோறும் நெஞ்சில் அன்புடன் நினையாமல் (வெறுமரம் போல்) நின்று,

     அறுசமய நீதி ஒன்றும் அறியாமல் --- ஆறு சமயங்களின் நீதிகளில் ஒன்றையேனும் அறிந்து கொள்ளாமல்,

     அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று  --- (வயிற்றை வளர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டு) சோறு போடுகிறவர்களுடைய வீடுகள் தோறும் சென்று அவ்வீட்டின் தலைவாசலில் நின்று,

     அநுதினமும் நாணம் இன்றி அழிவேனோ --- நாள்தோறும் சிறிதும் வெட்கமில்லாமல் கெடுவேனோ? (அங்ஙனம் கெடாமல் உம்மையடைந்து உய்வேன்.)


பொழிப்புரை


     ஆதிசேடனாகிய பன்னகப் பாயலின் மேல் அறிதுயில் கொண்டு திருக்கண் வளர்கின்றவரும், மிகுந்த பெருமையை உடையவரும் திருவரங்கம் என்னும் திருத்தலத்தில் உறைபவரும், பலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி கேட்டு ஓரடியால் உலகம் முழுவதும் அளந்தவரும் ஆகிய நாராயணமூர்த்தி மிகவும் மகிழ்கின்ற மருகரே!

         தாய்தந்தை என்னும் இரு குலங்களையும் விளங்கச் செய்ய வந்தவரும், ஞான தீபமும், தூய்மையானவரும், சிவிகை கவிகை கொடி முதலிய விருதுகளுடைய அருட்கவிராஜ சிங்கமும் ஆகி, நலன்கள் யாவுக்கும் உறையுளான சீகாழியில் (சைவசமயம் மங்கியிருந்த அந்நாளில்) திருஞான சம்பந்தராகத் திருவவதாரம் செய்தருளி வந்தவரே!

         (சுந்தரமூர்த்தியிடம் ஊடல் கொண்ட) பரவையம்மை திருமனைக்கு அந்நாளில் தமது திருத்தொண்டர் பொருட்டு தூது சென்றருளிய சிவபெருமானுடைய திருவருளால் வளர்ந்த குமாரக் கடவுளே!

         தலைவரே!

         பண்ணவர் பால் பகை கொண்ட அசுர சேனையை அழித்து, தேவர்கள் சிறையை ஒழித்து, சூராதிகளை வென்று பழநி மலை மேல் எழுந்தருளியுள்ள பெருமாளே!

         தாய் வயிற்றில் கருவிலிருந்து உருப்பெற்று பூமியில் பிறந்து, கிரமப் படி வளர்ந்து, பல கலைகளைக் கற்று உணர்ந்து, மன்மதனது செயலால் மயங்கி, கரிய கூந்தலுடைய காரிகையர்களது கலவியில் மூழ்கி, அவர்கள் பாதச் சுவடு என் மார்பில் படுமாறு லீலைகள் செய்து, அதனால் பெரும் கவலை உற்று, மனம் நொந்து, மிகவும் சோர்வுற்று, ஹரஹர சிவ சிவ என்ற திருமந்திரங்களை நாள்தோறும் நினையாமலும், ஆறு சமயநீதிகளில் ஒன்றையேனும் உணராமலும், (சோற்றுப் பையை நிரப்புவதையே பிறவியின் நோக்கம் எனக் கொண்டு) சோறு போடுபவர்கள் வீட்டின் தலைவாசலில் போய் நின்று, நாள்தோறும் சிறிதும் நாணமின்றி அலைந்து உழன்று அழிவேனோ? அங்ஙனம் அழியாது உமது அருட்சோற்றை நாடி ஆலயத்தின் முன்வந்து நிற்கக் கடவேனாக.


விரிவுரை

கவலை பெரிதாகி நொந்து மிகவாடி ---

மதனன் மலர்க்கணையால் மயங்கி, மதிகெட்டு, விலைமகளிரிடம் செல்வோர் திருவெலாம் இழந்து வறுமையும் நோயும் கொண்டு, பழி பாவம் பகை இவற்றைப் பெற்று அதனால் அளக்கரும் அல்லல்களை அடைந்து, பண்டைத் தனது பெருமிதத்தை உன்னி உன்னி உள்ளம் உடைந்து மனம் மறுகி மாழ்குவர்.

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் ---

அறியாமையாலும், அறிஞர்களின் கூட்டுறவு இன்மையாலும் நெறி தவறி பாவங்களைச் செய்தவர்கள், அப் பாவங்களினின்றும் விடுபட்டு உய்ய வேண்டுமாயின் அரன் நாமத்தை இடைவிடாது சிந்தித்தல் வேண்டும். அரன் பாவத்தை அழிப்பவன் என்பது பொருள். எனவே பாவ நீக்கத்திற்கும் பரகதியின் ஆக்கத்திற்கும் அரன்நாமத்தை நினைப்பதே சிறந்த சாதனமாகும்.

நாக்கைக் கொண்டு அன் நாமம் நவில்கிலார்” --- அப்பர்

அரகரா என்று அன்புடன் ஓதுபவர்க்குக் கிடைக்கத் தகாத பொருள் மூவுலகங்களிலும் இல்லை. அரகர என்பார்களுக்கு அரிய செயல் ஒன்றுமில்லை.. அரகர என்போர் தேவர்களுமாகிய பிறங்கிப் பெருமிதம் உறுவர். அரகர என்று அனுதினமும் ஓதுவார்க்குப் பிறவி நோயும் எளிதில் நீங்கும்.

அரகர என்ன அரியது ஒன்று இல்லை,
அரகர என்ன அறிகிலர் மாந்தர்,
அரகர என்ன அமரரும் ஆவர்,
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.         --- திருமந்திரம்

சிவாய என்பது திரு அட்சரம். சிவாய என்று உச்சரித்தவுடன் மன மாசுகளும் மல மாசுகளும் நீங்கி வரம்பிலா வாழ்வு பெறுவார்.

சிவாயம் எனு நாமம் ஒருகாலும் நினையாத
 திமிராகரனை வா என்று அருள்வாயே”         ---(அவாமரு) திருப்புகழ்

சிவாயவொடு அவ்வே தெளிந்து உள்ளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவன்உரு ஆகும்,
சிவாயவொடு அவ்வுத் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே.   --- திருமந்திரம்

ஆதலால், பிறவிப் பிணியை நீக்கிப் பிறவாப் பெற்றியைப் பெறுதற்கு அவாவும் பேரன்பர்கள் எக்காலமும் இம் மந்திர சிரோமணியைத் தைலதாரை போல் இடைவிடாது சிந்திப்பார்களாக. செம்மேனிப் பெம்மான் திருவருள் துணைசெய்யுமாக.


அறுசமய நீதி ---

சைவ சமயத்திற்குள் அகச் சமயங்கள் ஆறு. அவை: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம் என்பன. இவையேயுமன்றி வைதிக சமயங்கள் ஆறும் உள. இவை: சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சாத்தேயம், சௌரம் என்பன.

அசனம் இடுவார்கள்.............அழிவேனோ ---

உயிர்க்கு உறுதி பயக்கும் சன்மார்க்க நெறியைச் சார்ந்து அந்நெறியில் தம்மை உய்க்கும் சான்றோர்களது தலைவாசலில் சென்று நிற்க வேண்டும். அங்ஙனம் நிற்காமல் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டு அச்சோறு இடுவோர் தலைவாசலில் போய் நாள்தோறும் நிற்பது வெட்கக்கேடாம். உடற்பசியை நீக்க முயல்வதோடு உயிர்ப் பசியை நீக்கவும் விரைந்து முயலுதல் வேண்டும்.

இரை தேடுவதோடு இறையையும் தேடு” -பாம்பனடிகள்

உரகபட மேல் வளர்ந்த பெரிய பெருமாள் ---

உரகமென்பது குண்டலி சக்தி. அதன்மீது பகவான் பள்ளி கொண்டு யோக நித்திரை செய்கின்றார். அவர் அவ் அறிதுயில் செய்கின்றதனால் உலகில் உயிர்கள் இன்புறுகின்றன. அத்தூக்கமே பேரின்ப நிலையாம்.

தூங்கிக் கண்டார் சிவலோகம் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவ யோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம் உள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வது எவ்வாறே.   --- திருமந்திரம்

உலகு அளவு மால் ---

உரக அணைச் செல்வன் உலகளந்த வரலாறு

இரணியனுடைய புதல்வர் பிரகலாதர்; பிரகலாதருடைய புதல்வன் விரோசனன்; விரோசனனுடைய மைந்தன் பலி. இந்த பலி இந்திரனால் எல்லா நலன்களையும் இழந்து, பிருகுவமிசத்தில் வந்த மகரிஷிகளை யடுத்து, அவர்களுக்குச் சீடனாக இருந்தான். அம்முனிவர்கள் அப்பலியின் க்ஷேமத்தைக் குறித்து, விசுவசித்து என்ற ஒரு யாகத்தைச் செய்தார்கள். கதிரவன் குதிரைகட்கு நிகரான புரவிகள் பூட்டிய பொற்றேரும், சிங்கக்கொடியும், பெரிய வில்லும், குறையாத அம்பறாத் தூணிகள் இரண்டும், உறுதியான கவசமும் அந்த யாகத்தில் உண்டாயின. இவற்றைப் பலிக்கு முனிவர்கள் வழங்கினர். பிதாமகரான பிரகலாதர் வாடாத பத்மமாலையையும், சுக்கிரர் ஒரு சங்கத்தையும் அவனுக்குக் கொடுத்தனர்; பலி பொற்றேரில் ஊர்ந்து, சங்கத்தொனி செய்து, உலகங்களை யெல்லாம் நடுங்கச் செய்தான். அசுர சேனைகள் சூழ இந்திர னுலகிற் சென்று முற்றுகையிட்டு, சங்கத்தை ஊதினான். இந்திரன் பலியின் படை பலத்தையும் முனிவர்கள் தந்த வரங்களையும் உணர்ந்து, பயந்து சுவர்க்கலோகத்தைவிட்டு தேவர்களுடன் ஒளிந்து ஓடினான். பலியானவன் மூன்று உலகங்களையும் வசப்படுத்திக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். பிறகு நூறு அசுவ மேத யாகங்களைச் செய்து பெரும் புகழ் படைத்து சகல சம்பத்துடன் விளங்கினான்.

தேவமாதாவாகிய அதிதி தேவி, தன் மக்களாகிய தேவர்களுக்கு தைத்யர்களாலே உண்டான துன்பத்தை யறிந்து, தன் கணவராகிய காசிபரைக் குறித்து தவமிருந்தாள். வெகுகாலத்திற்குப் பின் காசிபர் சமாதியினின்றும் வெளிப்பட்டு அதிதியின் பால் வர, அதிதி கணவனைக் கண்டு முறைப்படி பூசித்து “என் புதல்வர்க்கு வாழ்வு உண்டாகுமாறு அருள்புரிவீர்” என்று வேண்டினாள். காசிபர் “பெண் மணியே! வருந்தற்க. எனது பிதாவாகிய பிரமதேவர் எனக்கு உபதேசித்த இதனை அனுஷ்டிப்பாயாக. பால்குனமாதம் சுக்கில பட்சத்திலே, பிரதமை முதல் பன்னிரண்டு நாள் மிகுந்த பயபக்தியுடன், பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனை வழிபாடு செய்வாய். இதற்குப் பயோவிரதம் என்று பேர். இவ்விரத பலத்தால் எண்ணிய நலனை நீ விரைவில் பெறுவாய்” என்று அப்பயோவிரதத்தை நோற்கும் முறைகளையும் துவாதசாக்ஷர மகா மந்திரத்தையும் உபதேசித்து அருள் புரிந்து காசிபர் நீங்கினார்.

அதிதிதேவி அந்த அரிய விரதத்தை அன்புடன் அனுஷ்டித்து அரவணைச் செல்வனை வழிபட்டனள். வாசுதேவர் சங்குசக்கர கட்க கேடகத்துடன் அவள் முன் தோன்றியருளினார். அதிதி பெருமானைத் தெரிசித்து, அஞ்சலி செய்து துதித்து, தன் குறைகளை விண்ணப்பித்து நின்றாள். பகவான் “அம்மா! அதிதிதேவியே! நின்னுடைய மைந்தர்களாகிய வானவர்கள் சுவர்க்கத்தை இழந்து, பலியினால் துன்புறுவதைக் கண்டு மிகவும் வருந்தி என்னை ஆராதித்தனை. தேவர்களுக்கு இப்போது நற்காலமில்லை. அவர்களுக்கு பராக்கிரமம் இப்போது உண்டாவது அரிது. ஆயினும், நின் விரதபலத்தால் உண்டாக்கி வைக்கிறேன். உனது பதியினிடத்தில் என்னுடைய இந்த உருவத்தைத் தியானித்து புத்திர பாக்கியத்தை யடைவாயாக. உனது துன்பத்தை நீக்கி தேவர்கட்கு இன்பத்தை தருவதற்காக நான் நினக்கு  மைந்தனாக வருவேன்” என்று சொல்லி மறைந்தருளினார். அதிதி மிகவும் மகிழ்ந்து பகவானைத் தியானித்து, பதியாகிய காசிபரை யடைந்தாள். அரியினுடைய அம்சம் தன்னிடம் வந்து சேர்ந்ததை சமாதியினால் அறிந்த காசிபர். அந்த அரியின் அம்சத்தை அதிதியிடம் ஸ்தாபித்தார். காசிபரால் கர்ப்பதானம் செய்யப்பட்ட அதிதி - கருவிருந்தாள். பகவான் நீல நிறத்தை யுடையவராயும், இரு மகரகுண்டலங்களை யுடையவராயும், ஸ்ரீவத்சம் என்னும் மருவை விஷசிலே உடையவராயும், கௌஸ்துப மணியையும் மணிமகுட ஆரகேயூர இரத்தினாலங்க்ருதராயும் அதிதியினிடத்தில், சுக்கிலபட்ச சிரவண துவாதசியில் ஸ்ரீ வாமனமூர்த்தியாகத் திருவவதாரம் புரிந்தார். தேவ துந்துபி முழங்கிற்று. விண்ணவர் தண்மலர் பொழிந்தனர். வாமன மூர்த்தியைக் கண்டு அதிதி தேவியும், காசிப முனிவரும் மட்டற்ற மகிழ்ச்சி யடைந்தார்கள். அருந்தவ முனிவர்கள் சாதகருமம் முதலிய வைதிக கருமங்களைச் செய்துவைத்து உபநயனமும் செய்து வைத்தனர். வாமன மூர்த்திக்கு கதிரவன் காயத்திரியை உபதேசித்தான். பிரகஸ்பதி பிரம சூத்திரத்தைக் கொடுத்தார். காசிபர் முஞ்சியைக் கொடுத்தார். பூமிதேவி கிருஷ்ணாசனத்தைக் கொடுத்தாள். சந்திரன் தண்டத்தைக் கொடுத்தான். பிரமா கமண்டல பாத்திரத்தைக் கொடுத்தார். குபேரன் பாத்திரத்தைக் கொடுத்தான். உமாதேவியார் பிக்ஷையைக் கொடுத்து ஓமஞ் செய்தார்.

வாமனமூர்த்தி அதன் பிறகு, பலிச்சக்கரவர்த்தி பிருகுவமிச முனிவர்களைக் கொண்டு செய்கின்ற அசுவமேத யாகசாலையிற் புகுந்தார். அவருடைய திருமேனியின் ஒளியால் அக்கினியும் ஆதித்தனும் ஒளி மழுங்கினார்கள். யாகசாலையிலுள்ளோர் அவரைக் கண்டு வியப்புற்றார்கள். அவரைக் கண்டு யாகபதியாகிய பலி, எழுந்து எதிர் சென்று அடிவணங்கி, ஆசனந் தந்து திருவடியைப் பூசித்து, அப் பாத நீரைத் தன் தலையிற் தெளித்துக் கொண்டு, “இன்றே அடியேன் புனிதனாயினேன். உங்கள் வரவு நல்வரவு. உமது பார்வையால் அடியேன் பரிசுத்த மடைந்தேன். உமது பாதோதகத்தால் என் பாவமெல்லாம் நசித்தன. என் பிதிரர்களும் மகிழ்வுற்றார்கள். யாசிக்க வந்தவராக உம்மைக் குறிப்பினாலுணர்கிறேன்; வேண்டியதைக் கேளும்; உடனே தருகிறேன்” என்று கூறினான்.

பகவான் பலியின் அந்த இதமான வசனங்களைக் கேட்டு மகிழ்ந்து, “மூவுலகாதிபதியே! உனக்கு பிரகலாதரும் பிருகு வமிச முனிவரும் குருவாக இருக்கின்றார்கள். உமது வார்த்தை ஒரு பொழுதும் பொய்க்காது. யாசிக்கும் யாசகனுக்கு எந்த தாதா கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் பின் இல்லையென்று அவமானம் பண்ணுகிறானோ, அவன் இந்தக் குலத்தில் இல்லை. பிரகலாத பேரனாகிய நீ சொற்சோர்வு படாதவன். உனது பிதாவாகிய விரோசனன் வேதிய உருக்கொண்ட விண்ணவர்க்குத் தன் ஆயுளை எல்லாம் கொடுத்தான். அத்தகைய புகழ்பெற்ற குலத்தில் பிறந்த உன்னிடத்தில் என்னுடைய அடியினால் அளக்கப்பட்ட மூன்றடி பூமியை யாசிக்கிறேன். சக்கரவர்த்தியும் மகா தாதாவுமாகிய நீ இதனைக் கொடுப்பாயாக” என்றார்.

பலிச் சக்கரவர்த்தி புன்முறுவல் கொண்டு “ஐயா! நீர் சிறுபிள்ளையாய் இருப்பதால் சிறு பயனை விரும்புகிறீர்.  மூன்று த்வீபத்தையும் கொடுக்கும் தகுதியுடைய என்னைப் புகழ்மொழிகளால் பூசித்து மூன்றடியை யாசிக்கிறீர்; வேண்டாம்; நிரம்ப விசாலமான பூமியைக் கேளும்” என்றான்.

பகவான், “பலியே! ஆசைக்கோர் அளவில்லை. மூன்றடியால் திருப்தி அடையாதவன் மூவுலகங்களாலும் திருப்தி அடையமாட்டான். நான்கேட்ட மூன்றடி இடத்தைக் கொடுத்தால் போதும்” என்றார்.

பலிச்சக்கரவர்த்தி “அப்படியே பெற்றுக் கொள்ளும்” என்று பூதானம் செய்ய நீர்ப் பாத்திரத்தைக் கொண்டு  வந்தான்.

அப்போது சுக்கிராச்சாரியார் தனது சீடனாகிய பலியை நோக்கி, “அன்பனே! இங்கு வாமனனாய் வந்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணனே ஆவான். இவன் அதிதி மைந்தனாய் தேவர்கட்கு அநுகூலம் புரிய வந்திருக்கிறான். இவன் வஞ்சனைக்கு மயங்கி விடாதே! வஞ்சனையாய் யாசிப்பவர்கட்குக் கொடுக்கப்படாது. இந்த தானத்தால் நீ அழிவது திண்ணம். நின்னைச் சார்ந்தவர்களும் அழிவார்கள். ஆபத்தில் பொய் சொல்லலாம். ஆதலால் நீ அவசரப்பட்டு இவர் கேட்டதைக் கொடுத்து துன்பத்திற்கு ஆளாகாதே” என்று தடுத்தனர்.

     பலிச்சக்கரவர்த்தி “குருநாதா! பிரகலாத பேரனாகிய நான் ஒருபோதும் அசத்தியனாக மாட்டேன். உயிர் நீங்கினும் கொடுக்கிறேன் என்றதைக் கொடுக்காமல் ஒளிக்க மாட்டேன். பூமிதேவி ‘பொய்யனைத் தவிர மற்றவர்களைச் சிரமமின்றி தாங்குகிறேன்’ என்று சொன்னாளல்லவா? நரகமே எனக்கு வரினும், "இல்லை" என்று சொல்ல இசையேன். தருமமே சிறந்த துணைவன். ஈந்துவக்கும் இன்பமே பெரிய இன்பம். ஈதலும்  இசையுடன் வாழ்தலும் உயிர்க்குச் சிறந்த ஊதியங்களாகும். ஆதலால் இவ் வாமனருக்கு இவனைத் தந்து பொன்றாப் புகழைப் பெறுவேன்” என்றான்.

சுக்கிராச்சாரியார் “விதியினால் ஏவப்பட்ட மூடனே! என் ஆணையை அவமதித்து நீ விரைவில் எல்லா ஐஸ்வரியங்களை இழப்பாயாக” என்று சபித்தார்.

பலி அதனால் சற்றும் சலிப்புறாது, வாமனமூர்த்தியை முறைப்படி பூசித்து தண்ணீர் தாரைவிட்டு “மூன்றடியைக் கொடுத்தேன்” என்றான். அப்போது பலியின் மனைவியாகிய விந்தியாவலி என்பவள், சுவர்ண கும்பத்தில் நீர் கொண்டு வந்து வாமனர் பாதத்தை யலம்பினாள். அந்த பாதத்தீர்த்தத்தை பலி தலையில் தெளித்துக் கொண்டு புனிதனானான். தேவர்களும் துந்துபிகளை முழக்கி மலர் மாரி பொழிந்தார்கள்.

அப்போது வாமன மூர்த்தியின் திருவுரு வளர்ந்து விசுவரூபங் கொண்டது. வாயுமண்டல சூரியமண்டல சந்திரமண்டல வன்னி மண்டலங்களை யெல்லாங் கடந்தன. எல்லாத் தேவர்களையும், ஏழுகடல்களையும் எண்டிசைப் பாலகர்களையும், எல்லா நதிகளையும் பிறவற்றையும், அந்த அரியின் திருவுருவில் பலிச் சக்கரவர்த்தி கண்டான்.

திரிவிக்கிரமனான திருமால் பூ மண்டல முழுவதையும் ஓரடியாலும், சுவர்க்கலோகத்தை ஓரடியாலும் அளந்தார். மூன்றாவது அடிக்கு அணுவளவும் இடமில்லாமற் போயிற்று. பகவான், ‘பலியே! உன் சொல்லை நிறைவேற்றுவாயாக. அசத்தியன் நரகிற் சொல்லுவான். மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்று கேட்க, பலி “தேவசிரேட்டரே! என்னுடைய சொல் பொய்க்காவண்ணம் உமது திருவடியை அடியேனது சென்னியில் வைத்தருள்வீர். நரகத்தை அனுபவிப்பதாயினும் சொன்னதை மாத்திரம் தவற மாட்டேன்” என்றான்.

அப்போது பிரகலாதர் தோன்றி பெருமானை வணங்கி, “பலி உம்மால் காப்பாற்றத்தக்கவன்” என்றார். பலியின் மனைவியாகிய விந்தியாவலி, “எம்மை என்றும் காக்கவல்லவர் நீரே; உலக பரிபாலன மூர்த்தியாகிய நீர் உமது இயற்கையான கருணையால் காத்தருள்வீர்” என்றாள்.

பிரமதேவர் “எம்பெருமானே! சர்வ சொத்தையும் உமக்கு சமர்ப்பித்த இந்தப் பலியை விட்டுவிடும். இவன் காக்கத்தக்கவன். அறுகம் புல்லையும் சிறிது நீரையும் கொண்டு பூசித்தவன் உத்தமமான கதியை அடைகின்றான். இந்தப் பலியோ உமக்கு மூன்று உலகங்களையும் கொடுத்தவன். இவனை ஆண்டருள்வீர்” என்றார்.

பகவான் “அன்புடைய பலியே! நீ சுதல லோகத்தில் சுகமே இருப்பாயாக; உனது வாசலில் நான் எப்போதும் இருந்து உன்னைக் காப்பாற்றுவேன். உனக்கு நன்மை உண்டாகக் கடவது! இனி வரப்போகிற காவர்ணி மனுவந்திரத்தில் நீ இந்திரனாகப் போகிறாய். நீ எப்போதும் என்னைத் தெரிசித்துக் கொண்டு இருப்பாயாக” என்று அருள் புரிந்தார். பலியை சுதல உலகத்தில் இருத்தி, பகவான் அமரர்கட்கு அமராவதியைக் கொடுத்து, அதிதியை மகிழ்வித்து இந்திரனுக்குத் தம்பியென்னும் முறையில் உபேந்திரனாகி விளங்கினார்.

துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு
    துலக்க அரிதிரு                  முருகோனே”   ---( முடித்த) திருப்புகழ்

வடிவுகுறளாகி மாபலியை
 வலியசிறையிட வெளியின் முகடு கிழிபடமுடிய
 வளருமுகில்”                                             --- சீர்பாத வகுப்பு.

                         .....“படி மாவலிபால்
மூவடி கேட்டு அன்று மூதண்ட கூட முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமான்”                            --- கந்தர்அலங்காரம்.


விருது கவிராஜ சிங்கம் ---

சுப்ரமண்ய மூர்த்தியின் சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளில் ஒன்று, சுப்ரமண்யத்தின் திருவருள் தாங்கி பரசமய கோளரியாகச் சீகாழியில் அவதரித்தது, முக்கண்ணியின் திரு முலைப்பால் உண்டு திருஞான சம்பந்தராக விளங்கி, சமண சமயத்தை அழித்து, சைவ சமயத்தை நிறுவியருளினார். அவர் ஒருவரே கவிராஜ சிங்கம் எனத்தக்கவர். விருதுகள் பல அவர்க்குச் சிவபெருமான் நல்கியருளினார்.

    விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே” --- (ஒருபொழுது) திருப்புகழ்


பரவைமனை மீதில் அன்று ஒருபொழுது தூது சென்ற பரமன் ---

பரமன் பரவையிடத்தில் தூதுசென்ற வரலாறு


சுந்தரமூர்த்தி நாயனார் தம்மை விடுத்துச் சென்று திரு ஒற்றியூரில் சங்கிலியாரை மணந்துகொண்ட தன்மையை அறிந்து, பரவை நாச்சியார் தம்மையறியா வெகுளியினால் தரியா நெஞ்சினோடு தளர்ந்திருந்தார்.

திருவாரூர் வந்தடைந்த நம்பியாரூரர் பரவையார் பிணங்கியிருப்பதை யுணர்ந்து, சில பெரியோர்களை பரவையார் பிணக்கை நீக்குமாறு தூதுவிட்டார். நம்பியருளாற் சென்ற அப்பெரியோர்கள், நங்கை பரவையரது பைம்பொன் மனையிற் போந்து “எம்பிராட்டிக்கு இது தகுமோ” என்று பல நியாயங்களை எடுத்துரைத்தார்கள்.

பரவையார் சினம் தணியாராய் “குற்றமிக்க அவர் விஷயத்தைக் கூறுவீரேல் என்னாவி நீங்கும்” என்றனர். அவர்கள் அஞ்சி, அதனை ஆரூரரிடம் கூறலும், பரவையாரது ஊடலால் சுந்தரமூர்த்தி நாயனார் துன்பமாம் பரவையில் மூழ்கி, பேயும் உறங்கும் அப்பேரிருட் கங்குலில் பிறைச் சடைப் பெருமானை நினைத்து “எம்பெருமானே! நீரே தூது சென்று பரவையின் ஊடலைத் தீர்த்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

அடியார் குறை முடிக்கும் அம்பலக் கூத்தர் நெடியோனுங்காணா அடிகள் படிதோய வந்து தொண்டர்க்குத் தரிசனந் தந்தருளினார். பெருமானைக் கண்டவுடன் தொண்டர் உடல் கம்பித்து உளம் உவந்து அடித் தாமரை மேல் வீழ்ந்து “எம்பெருமானே! தேவரீர் அருள் செய்யத் திரு ஒற்றியில் சங்கிலியை அடியேன் மணந்து கொண்டதை உணர்ந்து சினங்கொண்டு, யான் சென்றால் மடிவேன் என்று துணிந்திருக்கிறாள். நாயனீரே! நான் உமக்கு இங்கு அடியேனாகில், நீர் எனக்கு தாயில் நல்ல தோழருமாம் தம்பிரானாரே ஆகில் அறவு அழியும் அடியேனுக்காக இவ்விரவே சென்று பரவையின் ஊடலைத் தணித்தருள்வீர்” என்று வேண்டி நின்றார். அன்பையே வேண்டும் அரனார் “துன்பம் ஒழிக; நினக்கு யாம் தூதனாகி இப்பொழுதே பரவையின் பைம்பொன் மனைக்குப் போகின்றோம்” என்று அருள் செய்து,

"அண்டர் வாழக் கருணையினால் ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்று ஒருவர் இருவர்க்கு அறிவறியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல் பரவை யார்மாளிகைநோக்கித்
தொண்டனார்தம் துயர்நீக்கத் தூதனாராய் எழுந்தருள".  ---  பெரிய புராணம்.

தேவர்களும் முனிவர்களும் பூதகணங்களும் முன்னும் பின்னும் புறத்துமாகச் சென்றார்கள். தேவர்கள் பூமழை பொழிந்தார்கள்; எம்பெருமானது பாதச் சிலம்புகள் ஒலித்தன. அவ்வொலி “மாலும் அயனுங் காணாத மலர்த்தாளை வணங்குஞ் சமயம் இதுவே; எல்லாரும் வம்மின் வம்மின்” என்று அறைகூவி அழைப்பதுபோல் இருந்தது.

அடியார் தொடரவும், சடைவாழ் அரவு தொடரவும், மறைகள் தொடரவும், வன்றொண்டர் மனமுந்தொடர பெருமான் திருவாரூர் வீதியிற் சென்றருளினார். அது சமயம் அத்திருவீதி சிவலோகம் போல் விளங்கியது. பரவையர் திருமனைக்குப் பரமன் வந்து அனைவரையும் புறத்தே நிற்கச் செய்து, தாம் குருக்கள் வடிவு தாங்கி கதவிடம் சென்று “பாவாய்! மணிக்கதவம் திறவாய்” என்று அழைக்க, பரவையார் துணுக்குற்று எழுந்து அவரை அருச்சிப்போர் என்று நினைத்து வந்து, கதவு திறந்து வணங்கி, “என்னையாளும் பெருமானே! பேயும் நாயும் உறங்கும் இப்பேரிருட்கங்குலில் நீர் எழுந்தருளிய காரணம் யாது” என்று வினவினார்.

வேதியராக வந்த விமலன், “பரவையே! நான் கூறுவதை மறுக்காமல் செய்வையேல் கூறுவேன்” என்ன பரவையார், “இசையுமாகில் செய்வேன்; கூறும்” என்றார். பெருமான் “பரவையே! சுந்தரமூர்த்தி இங்கு வர அனுமதிக்க வேண்டும்” என்றார். பரவையார், “சங்கிலித் தொடக்குண்ட அவருக்கு இங்கு வருவது தகாது; நீர் கூறியது மிக அழகியதே” என்னலும், சிவபெருமான் “மடவரலே! நம்பியாரூரன் செய்த நவையைக் கருதாது சினந்தணிந்து மறுக்காமல் ஏற்றுக்கொள்வாய். உன்னை மிகவும் மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். என்றார்.

பரவையார் “ஐயரே! நீர் இக்கருமத்தை மேற்கொண்டு இந்நள்ளிரவில் வந்தது உமது மேன்மைக்குத் தகுதியற்றது. அவரை இங்குவர அனுமதிக்கேன்; செல்லுவீர்” என்று மறுத்துரைத்தார்.

மணிமிடற்றண்ணல் அன்பனுடன் விளையாடும் காரணமாய், தமது நல்லுருவை அவருக்குக் காட்டாமல் “நன்று” என்று திரும்பி தமது வருகையை எதிர் நோக்கியிருந்த நம்பியாரூரர் பால் வந்தார். பிணக்கு தீர்த்தே வந்தார் என்று மகிழ்ந்து பணிந்து “பரவையின் ஊடல் தீர்த்து என்னை ஆட்கொண்ட எந்தையே” என்று துதித்தார். பெருமான், “அன்பனே! நான் போய்க் கூறியும் பரவை மறுத்துவிட்டாள்” என்று சொன்னார்; சுந்தரமூர்த்தி நாயனார் “எம்பெருமானே! அமரருய்ய ஆலமுண்ட அண்ணலே! புரமெரித்த புராதன! பாவியேனை வலிய ஆட்கொண்ட பரமகருணா நிதியே! அடியேனைப் பரவைபால் சேர்க்காவிடில் என் ஆவி நீங்கிவிடும்” என்று வருந்திப் பூமியில் விழுந்தார். நம்பியாரூரது நடுக்கத்தைக் கண்டு எம்பிரான் திருவுளமிரங்கி “மீண்டும் நாம் சென்று பரவையை சமாதானப் படுத்துகிறோம்” என்று கூறி, தேவபூத கணங்கள் சூழ தேவதேவர் பரவையார் திருமாளிகைக்கு வருவாரானார்.

அங்கு பரவையார் தம்மிடம் வந்த அருச்சகர் சிவபெருமானே என்று கருத்தினாலுணர்ந்து “அந்தோ! என் செய்தேன்! தோழருக்காகத் தூது வந்தவரை அருச்சகர் என்று ஏமாந்து போனேனே! மூவர்க்கும் எட்டா முழுமுதல் என்று உணராமல் போனேனே! மனவாசகங் கடந்த மகாதேவர் உரையை மறுத்துப் பேசினேனே! என்னைப் போன்ற பாவிகளும் உளரோ?” என்று மனம்  புழுங்கி கண் துயிலாராய் கருத்தழிந்து திருவாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். சென்றடையாத் திருவுடை கொன்றை வேணிப் பெருமான் தமது தெய்வத் திருவுருவுடன் தேவரும் முனிவரும் பூதரும் சூழ வந்தருளினார். அம் மாளிகை அக்காலை வெள்ளியங்கிரி போல் விளங்கிற்று. அது கண்டு பரவையார் ஆகமும் அகமும் நடுங்கி எதிர்கொண்டு, இணையடிகளை இறைஞ்சி நிற்ப, எண்தோள் எம்பிரான் “பரவையே முன்போல மறுக்காது நம்பியாரூரனை ஏற்றுக் கொள்ளும்” என்றார். பரவையார் கசிந்து கண்ணீர் பொழிந்து “மறைகட்கும் எட்டாத மகாதேவராகிய நீர் ஓரிரவு முழுவதும் உமது மலரடி சிவப்ப அன்பர்க்காகத் தூது வந்து உழல்வீராகில் அடியேன் சம்மதியாமல் என் செய்யக்கூடும்.” என்றார். உடனே பெருமான் உளம் உவந்து நங்கையார் வழிவிடச் சென்று, நம்பியாரூரர் பால் வந்து “பரவை சினந்தணிந்தாள். இனி நீ செல்லுதி: என்று பணித்து விடை மீது உருக் கரந்தார். சுந்தரர் மகிழ்ந்து பரவையார் மாளிகைக்கு வர அம்மையார் பொற்சுண்ணம் தெளித்து, நறுங்கலவைச் சாந்தால் மெழுகி, பூரண கும்பம் வைத்து, நாயனாரை எதிர்கொண்டு வணங்கி இன்புற்றார்.

இவ்வரலாறு சிவபெருமானது கருணையின் எளிமையையும் அடியாரது பெருமையையும் நன்கு வெளிப்படுத்துகிறது. இதனாலன்றோ பரஞ்சோதியார் சுந்தரமூர்த்தி நாயனாரை அடியிற் கண்டவாறு துதிக்கின்றார்.

"அரவுஅகல் அல்குலார்பால் ஆசைநீத் தவர்க்கே வீடு
தருவம்என்று அளவில் வேதஞ் சாற்றிய தலைவன் தன்னைப்
பரவைதன் புலவி தீர்ப்பான் கழுதுகண் படுக்கும் பானாள்
இரவினில் தூதுகொண்டோன் இணையடி முடிமேல் வைப்பாம்".
                                                                    --- திருவிளையாடல் புராணம்.
    
கருத்துரை

உலகளந்த உரகணைச் செல்வரின் மருகரே! திருஞான சம்பந்தராகத் திருவவதாரம் புரிந்தவரே! பரவை மனைக்குத் தூது சென்ற பரமனது திருப்புதல்வரே! பழநிமலையாண்டவரே! அடியேன் கருவிலிருந்து பிறந்து, கலைகள் பல தெரிந்து, மதனனால் கருத்தழிந்து, சிவநாமங்களை நினையாமல் ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர்.






No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...