அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கலகக் கயல்விழி
(பழநி)
முருகா!
மாதர் மயலில் உழலாமல்
ஆண்டு அருள்
தனனத்
தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன ...... தனதான
கலகக்
கயல்விழி போர்செய வேள்படை
நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவு மேமொழி பேசிய ...... விலைமாதர்
கலவித் தொழினல மேயினி தாமென
மனமிப் படிதின மேயுழ லாவகை
கருணைப் படியெனை யாளவு மேயருள் ....தரவேணும்
இலவுக்
கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
இசைபெற் றருளிய காமுக னாகிய ...... வடிவோனே
இதமிக்
கருமறை வேதிய ரானவர்
புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
இசையத் தருமநு கூலவ சீகர ...... முதல்வோனே
நிலவைச்
சடைமிசை யேபுனை காரணர்
செவியிற் பிரணவ மோதிய தேசிக
நிருதர்க் கொருபகை யாளியு மாகிய
...... சுடர்வேலா
நிமலக்
குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு ...... முரியோனே
பலவிற்
கனிபணை மீறிய மாமர
முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய
......வகையாலே
பழனத்
துழவர்க ளேரிட வேவிளை
கழனிப் புரவுகள் போதவு மீறிய
பழநிச் சிவகிரி மீதினி லேவளர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கலகக்
கயல்விழி போர்செய, வேள்படை
நடுவில் புடைவரு பாபிகள், கோபிகள்,
கனியக் கனியவுமே மொழி பேசிய ...... விலைமாதர்,
கலவித் தொழில் நலமே இனிது ஆம் என
மனம் இப்படி தினமே உழலாவகை
கருணைப் படி எனை ஆளவுமே அருள் ....தரவேணும்.
இலவுக்
கிளை எனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையினால், உயர்
இசைபெற்று அருளிய காமுகன் ஆகிய ...வடிவோனே!
இதம்
மிக்க அருமறை வேதியர் ஆனவர்
புகல, தயவுடனே அருள் மேன்மைகள்
இசையத் தரும், அநுகூல வசீகர ......முதல்வோனே!
நிலவைச்
சடைமிசையே புனை காரணர்
செவியில், பிரணவம் ஓதிய தேசிக!
நிருதர்க்கு ஒருபகையாளியும் ஆகிய
...... சுடர்வேலா!
நிமலக்
குருபர! ஆறிரு பார்வையும்
அருளைத் தர, அடியார் தமை நாடொறும்
நிகர் அற்றவர் எனவே மகிழ் கூர்தரும்
....உரியோனே!
பலவில்
கனி பணை மீறிய மாமரம்,
முருகில் கனி உடனே நெடு வாளைகள்
பரவித் தனி உதிர் சோலைகள் மேவிய... வகையாலே
பழனத்து
உழவர்கள் ஏர் இடவே விளை
கழனிப் புரவுகள் போதவும் மீறிய,
பழநிச் சிவகிரி மீதினிலே வளர் ...... பெருமாளே.
பதவுரை
இலவு கிளை எனும் வாய் --- இலவ மலருக்கு
உறவு என்னும்படி சிவந்த அதரத்தையுடைய,
வளி நாயகி --- வள்ளி நாயகி,
குழைய தழுவிய மேன்மையினால் --- உள்ளங்
குழையுமாறு தழுவிய சிறப்பினால்,
உயர் இசை பெற்று அருளிய --- உயர்ந்த புகழைப்
பெற்று உயிர்கட்கு அருள்புரிந்த,
காமுகன் ஆகிய வடிவோனே --- காமுகன் என்ற
வேடங்கொண்ட அழகியவரே!
இதம் மிக்க அருமறை --- இனிமை மிகுந்த
அரிய வேதங்களைக் கற்ற,
வேதியர் ஆனவர் புகல --- மறையவர் வேதங்களைச்
சொல்ல,
தயவுடனே --- கருணையுடன்,
அருள் மேன்மைகள் --- அவர்கட்கு
அருட்செல்வங்களை,
இசைய தரும் --- திருவுளம் இசைந்து
வழங்குகின்ற,
அநுகூல --– உதவியாளரே!
வசீகர --- மனதைக் கவர்பவரே!
முதல்வோனே --- எப்பொருளுக்குந் தலைவரே!
நிலவை சடைமிசை புனை காரணர் ---
சந்திரனைச் சடைமுடியில் தரித்துள்ள மூலப் பொருளாகிய சிவ பெருமானுடைய,
செவியில் பிரணவம் ஓதிய தேசிக ---
திருச்செவியில் ஓம் என்ற ஒரு மொழியின் உட்பொருளை உபதேசித்த குருநாதரே!
நிருதர்க்கு ஒரு பகையாளியும் ஆகிய ---
அசுரர்கட்கு ஒரு பகைவனாகவும் விளங்கும்,
சுடர் வேலா --- ஒளிமிகுந்த வேலாயுதத்தை
யுடையவரே!
நிமல குருபர --- மலமில்லாத சிறந்த
குருமூர்த்தியே!
ஆறு இரு பார்வையும் அருளைத் தர ---
பன்னிரு கண்களும் திருவருளைத் தந்தருள,
அடியார் தமை நாள்தோறும் --- அடியவர்களைத்
தினந் தோறும்,
நிகர் அற்றவர் எனவே மகிழ் கூர் தரும் ---
சமானமில்லாதவராகச் செய்து உள்ளம் மிகவும் மகிழும்,
உரியோனே --- உரிமையுடையவரே!
பலவின் கனி --- பலாப்பழங்கள்,
பணை மீறிய மாமர முருகின் கனியுடனே ---
கிளைகள் மிகுந்த மாமரங்களின் வாசனையுடன் பழுத்த பழங்கள்,
நெடு வாளைகள் பரவி தனி உதிர் --- நீண்ட வாளை
மீன்கள் பரவிப் பாய்வதனால் தனித் தனியே உதிர்கின்ற,
சோலைகள் மேவிய வகையாலே --- சோலைகள் பொருந்திய
தன்மையினால்;
பழனத்து உழவர்கள் --- வயல்களில்
பயிரிடுவோர்கள்,
ஏர் இட விளை --- ஏர்கொண்டு உழுவதனால் நன்கு
விளைகின்ற,
கழநி பரவுகள் போதவும் மீறிய --- வயல்களின்
செழுமைகள் மிகவும் மேம்படுகின்ற,
பழநி சிவகிரி மீதினில் வளர் --- பழநி என்ற
பேருடைய சிவகிரியின்மீது வீற்றிருந்தருளும்,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
கலக கயல் விழி போர் செய --- கலகத்தை
தரும் மீன்போன்ற கண்கள் போர் புரிய,
வேள் படை நடுவில் புடை வரு பாபிகள் ---
மன்மதனுடைய சேனைகளாகிய பெண்கள் கூட்டத்தில் நடுவிலும் பக்கங்களிலும் வருகின்ற
பாவிகளும்,
கோபிகள் --- கோபக்காரிகளும்,
கனியம் கனியவும் மொழி பேசிய விலைமாதர் ---
இனிக்க இனிக்கப் பேசுபவர்களுமாகிய விலை மகளிருடைய,
கலவித் தொழில் நலமே --- புணர்ச்சித் தொழிலை
நன்மையானது.
இனிதாம் என --- இனிது என்று கருதி,
மனம் இப்படியே தினம் உழலா வகை --- அடியேனுடைய
மனமானது இவ்வாறு நாள்தோறும் அலையாதவாறு,
கருணை படி --- தேவரீரது திருக்கருணை வழியே,
எனை ஆளவுமே அருள் தரவேணும் --- அடியேனை
ஆட்கொண்டு அருள்புரிவீராக.
பொழிப்புரை
இலவ மலருக்கு ஒப்பாகிய இதழ்களை உடைய
வள்ளி நாயகியின் மனம் உருகும்படி தழுவிய சிறப்பினால் உயர்ந்த புகழைப் பெற்ற
காமுகன் என வேடம் கொண்ட அழகரே!
இனிய அரியமந்திரங்களுடன் கூடிய
வேதங்களைக் கற்ற அந்தணர்கள் அவ் வேதங்களைச் சொல்ல, அவர்கட்கு அன்புடன் அருட் செல்வங்களை
இசைந்து தருகின்ற அநுகூலரே!
உள்ளத்தைக் கவர்பவரே!
தனிப்பெருந்தலைவரே!
சந்திரனைச் சடைமுடியில் சூடிய
சிவபெருமானுடைய திருச் செவியில்,
ஓம்
என்ற ஒரு மொழியின் உட்பொருளை உபதேசித்த குருநாதரே!
அசுரர்கட்கு ஒரு பகைவராக விளங்கும் ஒளி
மிக்க வேலாயுதரே!
அநாதியே மல நீக்கம் பெற்ற சிறந்த
குருமூர்த்தியே!
பன்னிரு கண்களும் அடியார்கட்குத்
திருவருளைத் தர தினந்தோறும் அவ் அடியார்களை சமானம் இல்லாதவராகச் செய்து
திருவுள்ளத்தில் மிக்க மகிழ்ச்சியடையும் உரிமை உடையவரே!
பலாப்பழமும், கிளைகள் மிகுந்த மாமரத்தில்
நறுமணத்துடன் பழுத்த மாம்பழங்களும் நீண்ட வாளைமீன்கள் உலாவிப் பாய்தலால் தனித்
தனியே உதிர்கின்ற சோலைகள் புடைசூழவும், உழவர்
ஏரிட்டு உழுவதால் நன்கு விளைகின்ற வயல்கள் செழுமையாக மேம்பட்டு இருக்கவும்
வளமையாலுயர்ந்த பழநியாகிய சிவகிரியில் வீற்றிருந்தருளும் பெருமிதம் உடையவரே!
கலகத்தைச் செய்யும் கயல் மீன்கள் போன்ற
கண்கள் போர் செய்ய, மன்மதனுடைய
சேனைகளாகிய பெண்களின் கூட்டத்தின் நடுவிலும் பக்கத்திலும் வருகின்ற பாவிகளும், கோபிகளும் இனிக்க இனிக்கப்
பேசுபவர்களுமாகிய விலைமாதர்களின் புணர்ச்சித் தொழிலின் இன்பமே இனிது என்று கருதி, என் மனம் இப்படியே தினம் அலையாமல் உமது
திருக்கருணை வழி எளியேனை ஆட்கொண்டு அருள்புரிவீர்.
விரிவுரை
கலகக்
கயல்விழி போர் செய ---
விலைமகளிர்
தமது கூர்மையான கண் பார்வையால் ஆடவர்பால் கலகத்தை விளைவிப்பார்கள். அன்றியும்
அந்தக் கரணங்களுக்குள் மாறுபாட்டை விளைவிப்பார்கள். அதனால் உள்ளத்திலும் ஒரு கலகம்
ஏற்படுகின்றது.
“கலகவிழி மாமகளிர்
கைக்குளே யாய்” --- திருப்புகழ்
வீரர்கள்
வில்லம்பால் போர் புரிவார்கள். இம்மகளிர் கண்ணம்பால் போர் புரிகின்றார்கள்.
வேள்
படை
---
வேள்-மன்மதன், மன்மதனுக்குச் சேனைகள் பெண்கள்.
நடுவில்
புடை வரு பாவிகள் ---
பெண்களின்
நடுவிலும் (புடை) பக்கங்களிலும் உல்லாசமாகவும் பெருமிதமாகவும் அழகாகவும்
பொதுமகளிர் நடந்து வருவார்கள். அநேக பாவத் தொழில்களையும் புரிவார்கள். தம்பால்
வரும் ஆடவர்க்கு உணவில் மருந்து வைப்பார்கள். ஆடவர் தமது மனைவியிடம் வெறுப்புக்
கொள்ளுமாறு கலக மொழிகளை வாய் கூசாது கூறுவார்கள். கற்புடைய மனைவியின் மீது அஞ்சாது
அபவாதங்கள் கூறுவார்கள். பொய் புலை முதலியன புரிவார்கள்.
கோபிகள் ---
கேட்ட
பணந் தரவில்லையானால் சினங்கொள்வார்கள். ஆடவர் தமது மனைவியிடம் சிறிது நேசங்
காட்டினாலும் சினந்து ஊடல் புரிவார்கள்.
கனியக்
கனியவுமே மொழிய பேசிய விலைமாதர் ---
தம்மை
நாடி வரும் இளைஞர்களிடம் மொழிக்கு மொழி தித்திக்க “தாங்கள் தரும குணசீலர்.
உங்களுடைய தாராள குணம் எவரிடமும் இல்லை. நீங்கள் கை வைத்தால் பட்ட கட்டையும்.
தளிர்க்கும். ஆஹா! நீங்கள் தான் மன்மத அவதாரம். உங்கள் முகத்தில் அலாதியான ஒரு களை
நடம் புரிகின்றது. உங்களைப் பார்த்தாலே பசியாறி விடுகின்றது. தங்களைப் பிரிந்தால்
நான் இறந்தே போவேன். தங்கள் கை பட்டால் என் உடம்பே குளிர்ச்சியடைகின்றது. உங்கள்
இன்மொழி தேனினுந் தித்திக்கின்றது......” என்றெல்லாம் பேசுவார்கள்.
நா
ஆர வேண்டும் இதம் சொல்லுவார், உனை நான் பிரிந்தால்
சாவேன்
எனச் சத்தியம் புரிவார், கை தான் வறண்டால்
போய்வாரும்
என்று நடுத்தலையில் குட்டும் பூவையருக்கு
ஈவார்,
தலைவிதியோ? இறைவா கச்சி ஏகம்பனே, --- பட்டினத்தார்.
வெம்புவாள்
விழுவாள் பொய்யே, மேல் விழுந்து அழுவாள் பொய்யே,
தம்பலம்
தின்பாள் பொய்யே, சாகிறேன் என்பாள் பொய்யே,
அம்பிலும்
கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை
நம்பின
பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. --- விவேக சிந்தாமணி.
இலவுக்கிளையெனும்
வாய்வளி நாயகி
---
உத்தமப்
பெண்களின் அதரம் பவளம் போலவும் இலவம் பூவைப் போலவும் சிவந்து அழகாக இருக்கும்.
கிளை-உறவு. இலவமலருக்கு உறவுபோல் சிறப்பாகவும் சிவப்பாகவும் வள்ளியம்மையாருடைய
இதழ்கள் திகழ்கின்றன.
காமுகனாகிய
வடிவோனே
---
முருகன்
“ஞானந்தான் உருவாகிய நாயகன்” வள்ளிபிராட்டி தவமாது. தவம் புரிந்த அம் மாதரசியை
ஆட்கொள்ளும் கருணையினால் காமுகன் போன்ற வடிவுடன் சென்று அருள்புரிந்தனர்.
இதமிக்க
அருமுறை வேதியர் ஆனவர் ---
இனிமை
மிகுந்த வேதங்களை வேதியர் அன்புடன் ஓதக் கேட்டு முருகவேள் அவருக்கு நலங்கள்
அனைத்துந் தந்து உதவுகின்றனர்.
தனக்கென்று
வாழாமை வேதியரின் இயல்பு.
சிவபாத
இருதயரைப் பற்றிச் சேக்கிழார் பெருமான் கூறுகின்றார்.
“சிவபாத இருதயர் என்று
இப்புவி
வாழத் தவஞ்செய் இயல்பினார் உளரானார்”
நிருதர்க்
கொருபகை யாளியு மாகிய சுடர்வேலா ---
பகையாளியும்
ஆகிய என்ற எச்ச உம்மையினால் நண்பராகவும் முருகன் விளங்குகின்றான். தீமை புரிகின்ற
அசுரரை அடக்கி யாளுவான். அது மறக்கருணை.
“நிமலக் குருபர ஆறிரு
பார்வையும் அருளைத்தர அடியார் தமை நாடொறும்
நிகரற்றவர் எனவே மகிழ் கூர்தரும் உரியோனே ---
இந்த
அடி மிகவும் இனிமையானது. முருகப் பெருமான் அடியார்க்குப் புரியும் அருள் திறத்தை
இதில் சுவாமிகள் மிகவும் அழகாகவும் இனிமை யாகவும் கூறுகின்றனர்.
அடியார்களைப்
பன்னிரு கண்களாலும் பார்த்தருளி அருள் வழங்கி அவர்களை உலகில் நிகரில்லாத
பெருமைக்கு உரியவராகப் புரிந்து,
அடியவரின்
பெருவாழ்வைக் கண்டு எம்பெருமான் திருவுள்ளம் மகிழ்ச்சி உறுகின்றான். என்னே
முருகனுடைய கருணை.
முருகனை
சதா நினைந்து உருகி வழிபடும் அடியார்கள், உலகில்
தமக்கு ஒருவரும் சமானம் இல்லாதவர்களாகித் தனிப்பெருஞ் சிறப்புடன் விளங்குவார்கள்.
பலவிற்கனி.....பழநி ---
பழநியம்தியின்
வளத்தை இந்தக் கடைசி 7-8 அடிகளில் அழகாகக்
கூறுகின்றார்கள்.
பலாப்பழங்களும்
மாம்பழங்களும், வாளை மீன்களால்
உதிர்க்கப்படுகின்றன. அழகிய குளிர்ந்த சோலைகள் சூழ்ந்திருக்கின்றன. உழவர்களால்
கழநிகள் நன்கு வளமையாக விளைகின்றன.
கருத்துரை
வள்ளிநாயக!
சிவகுருவே! பழநியப்பா! அடியேன் மாதர் மயலில் உழலாவண்ணம் ஆண்டருள்வாய்.
No comments:
Post a Comment