பழநி - 0136. கலக வாள் விழி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கலக வாள்விழி (பழநி)

முருகா!
மாதர் மயலில் வீழாமல், அருள் நூல்களை ஓதி உய்ய அருள்

தனன தானன தானா தானா
     தனன தானன தானா தானா
          தனன தானன தானா தானா ...... தனதான


கலக வாள்விழி வேலோ சேலோ
     மதுர வாய்கொழி தேனோ பாலோ
          கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோவாய்

களமு நீள்கமு கோதோள் வேயோ
     உதர மானது மாலேர் பாயோ
          களப வார்முலை மேரோ கோடோ...... இடைதானும்

இழைய தோமலர் வேதா வானோ
     னெழுதி னானிலை யோவாய் பேசீ
          ரிதென மோனமி னாரே பாரீ ......    ரெனமாதர்

இருகண் மாயையி லேமூழ் காதே
     யுனது காவிய நூலா ராய்வே
          னிடர்ப டாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்

அலைவி லாதுயர் வானோ ரானோர்
     நிலைமை யேகுறி வேலா சீலா
          அடியர் பாலரு ளீவாய் நீபார் ......    மணிமார்பா

அழகு லாவுவி சாகா வாகா
     ரிபமி னாள்மகிழ் கேள்வா தாழ்வா
          ரயலு லாவிய சீலா கோலா ......         கலவீரா

வலபை கேள்வர்பி னானாய் கானார்
     குறவர் மாதும ணாளா நாளார்
          வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே

மதுர ஞானவி நோதா நாதா
     பழநி மேவுகு மாரா தீரா
          மயுர வாகன தேவா வானோர் ......   பெருமாளே.


பதம் பிரித்தல்


கலக வாள்விழி வேலோ? சேலோ?
     மதுர வாய்மொழி தேனோ? பாலோ?
          கரிய வார்குழல் காரோ? கானோ? ......துவரோ வாய்?

களமும் நீள் கமுகோ? தோள் வேயோ?
     உதரம் ஆனது மால் ஏர் பாயோ?
          களப வார்முலை மேரோ? கோடோ? ...... இடைதானும்

இழை அதோ? மலர் வேதா ஆனோன்
     எழுதினான் இலையோ? வாய் பேசீர்,
          இது என மோன மினாரே பாரீர் ...... என,மாதர்

இருகண் மாயையிலே மூழ்காதே,
     உனது காவிய நூல் ஆராய்வேன்,
          இடர் படாது அருள் வாழ்வே நீயே ......   தரவேணும்.

அலைவு இலாது உயர் வானோர் ஆனோர்
     நிலைமையே குறி வேலா! சீலா!
          அடியர் பால் அருள் ஈவாய், நீபஆர்..... மணிமார்பா!

அழகு உலாவு விசாகா! வாகு ஆர்
     இப மினாள் மகிழ் கேள்வா! தாழ்வார்
          அயல் உலாவிய சீலா! கோலா ......      கலவீரா!

வலபை கேள்வர் பின் ஆனாய், கான் ஆர்
     குறவர் மாது மணாளா! நாளஉஆர்
          வனச மேல்வரு தேவா! மூவா ...... மயில்வாழ்வே!

மதுர ஞான விநோதா! நாதா!
     பழநி மேவு குமாரா! தீரா!
          மயுர வாகன தேவா! வானோர் ...... பெருமாளே.


பதவுரை

      அலைவு இலாது உயர் --- அலைச்சல் இல்லாத வண்ணம் உயர்வு பெற்ற,

     வானோர் ஆனோர் --- தேவர்களுடைய,

     நிலைமையே குறி --- நிலைமையைக் கண்காணித்து அருளும்

     வேலா --- வேலவரே!

     சீலா --- ஒழுக்கம் உள்ளவரே!

     அடியார்பால் அருள் ஈவாய் --- அடியவர்களிடம் திருவருள் புரிபவரே!

     நீப ஆர் மணி மார்பா --- கடப்ப மலர் மாலை அணிந்த அழகிய மார்பினரே!

     அழகு உலாவு விசாகா --- அழகு பொலியும் விசாகரே!

     வாகு ஆர் இப மினாள் மகிழ் கேள்வா --- அழகு நிறைந்த தேவயானையம்மையார் மகிழ்கின்ற நாயகரே!

     தாழ்வார் அயல் உலாவிய சீலா --- பணிபவர்களுடைய அருகில் இருந்து உதவுகின்ற குணசீலரே!

     கோலாகல வீர --- சிறப்புடைய வீரரே!

     வலபை கேள்வர் பின் ஆனாய் --- வல்லபையின் கணவனாராகிய விநாயகருடைய தம்பியே!

     கான் ஆர் குறவர் மாது மணாளா --- கானகத்தில் வாழ்கின்ற குறமகளாகிய வள்ளிபிராட்டியின் மணவாளரே!

     நாள் ஆர் வனச மேல் வரு தேவா --- புதிய தாமரை மீது எழுந்தருளியுள்ள ஒளிமயமானவரே!

     மூவா மயில் வாழ்வே --- முதுமையில்லாத இளம் மயிலை வாகனமாக உடையவரே!

     மதுர ஞான விநோதா --- இனிய ஞானத்தில் பொழுது போக்குபவரே!

     நாதா --- நாதமயமானவரே!

     பழநி மேவு குமாரா --- பழநிமலை மீது வீற்றிருக்கும் குமாரக் கடவுளே!

     தீரா --- தீரமூர்த்தியே!

     மயுர வாகன தேவா --- மயில் வாகனக் கடவுளே!

     வானோர் பெருமாளே --- தேவர் போற்றும் பெருமையில் மிகுந்தவரே!

      கலக வாள் விழி வேலோ சேலோ --- கலகத்தை விளைவிக்கின்ற ஒளி பெற்ற கண்கள் வேலாயுதமோ? சேல்மீனோ?

     மதுர வாய்மொழி தேனோ --- இனிமையான வாய்ச்சொல் தேனோ?

     பாலோ --- பாலோ?

     கரிய வார் குழல் --- கருமையான நீண்ட கூந்தல்,

     காரோ --- மேகமோ?

     கானோ --- காடோ?

     வாய் துவரோ --- அதரமானது பவளமோ?

     களமும் நீள் கமுகோ? --- கழுத்து நீண்ட பாக்குமரமோ?

     தோள் வேயோ --- தோள்கள் மூங்கிலோ?

     உதரம் ஆனது மால் ஏர் பாயோ --- வயிறானது திருமால் பள்ளிகொண்ட அழகிய ஆலிலையோ?

     களப வார் முலை மேரோ --- சந்தனம் பூசப்பட்டுக் கச்சு அணிந்த முலைகள் மேருகிரியோ?

     கோடோ --- யானைக் கொம்போ?

     இடை தானும் இழையதோ --- இடையான நூலோ?

     மலர் வேதவானோன் எழுதினான் இலையோ --- பிரமதேவன் இடையை எழுதவில்லையோ?

     வாய் பேசீர் --- வாய் திறந்து பேசுங்கள்!

     இது என மோனம் --- இது என்ன மௌனம் சாதிக்கின்றீர்களே?

     மினாரே பாரீர் --- மின்போன்ற பெண்மணிகளே பாருங்கள்.

     என மாதர் இருகண் மாயையிலே மூழ்காதே --- என்றெல்லாம் கூறிப் பொது மாதரைப் புகழ்ந்து அவர்களுடைய இருகண் வலையாகிய மாயையில் அடியேன் முழுகாமல்,

     உனது காவிய நூல் ஆராய்வேன் --- தேவரீருடைய அருள் நூல்களை ஆராய்வேன்!

     இடர் படாது --- இடர்கள் வந்து என்னைத் தாக்காத வண்ணம்,

     அருள் வாழ்வே --- திருவருள் வாழ்வினை,

     நீயே தரவேணும் --- தேவரீர் தந்தருள வேணும்.

 
பொழிப்புரை

         தேவர்களுக்குப் பகைவராலாகிய அலைச்சலை யகற்றி அமைதியாக வாழுமாறு அருளிய வேலாயுதரே!

         சீலமுடையவரே!

         அடியார்க்கு அருள் புரிபவரே!

         கடப்பமலர் மாலை அணிந்த திருமார்பினரே!

         அழகு நிறைந்த விசாகரே!

         வனப்பு நிறைந்த தெய்வயானை யம்மையின் கணவரே!

         வணங்கும் அடியாரது அருகில் உலாவுகின்ற குணசீலரே!

         சிறந்த வீரமூர்த்தியே!

         வல்லபையின் கணவராகிய கணபதியின் தம்பியே!

         கானகத்தில் வாழும் குறமகளின் மணாளரே!

         புதிய தாமரை மலர்மீது வீற்றிருக்கும் தேவரே!

         முதுமை யடையாத இளமைமிக்க மயில் வாகனரே!

         பழநி மலைமீது எழுந்தருளியுள்ள குமாரக்கடவுளே!

         தைரியமுள்ளவரே!

         மயிலையுடையவரே!

         ஒளியுருவினரே!

         தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         கலகத்தைச் செய்யும் ஒளியுடைய கண்கள் வேலோ? இனிய மொழி தேனோ? பாலோ? கரிய கூந்தல் மேகமோ? காடோ? அதரம் பவளமோ? கழுத்து பாக்கு மரமோ? தோள் மூங்கிலோ? வயிறு மாயவன் பள்ளி கொண்டுள்ள அழகிய ஆலிலையோ? சந்தனம் பூசிய கச்சணிந்த தனம் மேருகிரியோ? யானையின் கொம்போ? இடை நூலோ? தாமரைமீது வாழும் பிரமன் இடையை எழுதவில்லையோ? “ வாய் திறந்து கூறுங்கள்; ஏன் இந்த மௌனம்? பெண்களே பாருங்கள்” என்று கூறிப் பொது மாதர்களுடைய கண் வலையின் மாயையில் முழுகாமல், அடியேன் தேவரீருடைய அருள் நூல்களை ஆராய்வேன்; இடர் நேராத வண்ணம் திருவருள் வாழ்வைத் தந்தருளுவீர்.


விரிவுரை

கலக வாள்விழி ---

பொதுப் பெண்டிருடைய ஒளி பெற்ற கண்கள் ஆடவருடன் பெரும் கலகத்தை விளைவிக்கும். அன்றியும் பொறி புலன்களுக்கு மாறுபட்டுக் கலகத்தைச் செய்யும்.

இத்திருப்புகழில் முதல் மூன்றடிகளில் அருணகிரிநாதர் அம்மாதரது அங்கங்களைக் கண்டு காமுகர் மயக்க உணர்வால் புகழ்ந்து கூறும் வெற்றுரைகளை விளக்கிக் கூறுகின்றனர்.

உனது காவிய நூல் ஆராய்வேன் ---

நூல்களில் பசுநூல் என்றும் பதிநூல் என்றும் இரு வகையுண்டு.

செத்துப் பிறக்கின்ற பசுக்களாகிய அரசர்களைப் பற்றி எல்லாம் கூறும் நூல்கள் பசுநூல்களாகும்.

அதிவீரராம பாண்டியர் சிறந்த புலவர். அவர் நைடதம் என்ற ஒரு நூலைக் காவியச் சுவை ததும்பப் பாடித் தனது தமையனார் வரதுங்கராம பாண்டியரிடம் காட்டினார். சிவபக்தியிற் சிறந்த வரதுங்கராமர், “தம்பி! பதி நூல் பாடாது பசுநூல் பாடி அறிய தமிழாகிய பாலினைக் கமரில் கவிழ்த்தனையே” என்று கூறி வருந்தினார். அது கேட்ட அதிவீரராமர் பின்னர் சிவசம்பந்தமான கூர்மபுராணம் பாடி உய்வு பெற்றனர்.

ஆதலால் பிறவிப் பெருங் கடலைக் கடக்க விரும்புவோர் பசுநூல்களை ஓதாமல் பதிநூல்களை ஓதுதல் வேண்டும். ஓதி உணர்தல் வேண்டும். கந்தபுராணம் முதலிய அருள் நூல்கள் பதிநூல்களாகும். அதனை ஆய்ந்து, அதில் தோய்ந்து, வினைகள் ஓய்ந்து விலக, உய்வு பெறுவதே அறிவுடைமையாகும்.

இடர்படாதருள் வாழ்வே நீயே தரவேணும் ---

அங்ஙனம் இறைவனுடைய முதல் நூல்களை ஆராயும்போது அதன் நுண் பொருள்களை அறிவதில் இடர்ப்பாடு வரா வண்ணம் “முருகா! தேவரீர் திருவருளைத் தந்து அருள் புரியவேணும்” என்று வேண்டுகிறார்.

தாழ்வார் அயல் உலாவிய சீலா ---

இறைவன் திருவடியையே தாழ்ந்து வணங்கும் அடியவர்கள் அருகில் முருகன் இருந்து அருள் புரிவான். பாம்பன் அடிகள் கால் முறிந்து, மருத்துவச் சாலையில் படுக்கையில் கிடந்த போது, முருகப்பெருமான் ஒரு குழந்தை வடிவாக, அவர் அருகில் படுத்திருக்க, தலைமை மருத்துவராகிய ஆங்கிலேயர் கண்டு அதிசயப்பட்டார்.

  தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே” ---  (ஒரு பொழுது) திருப்புகழ்

நாளார் வனசமேல்வரு தேவ ---

நாளார்-புதுமை நிறைந்த, முருகப் பெருமான் சரவணப் பொய்கையில் அழகிய தாமரை மலர் மீது அழகே ஒரு வடிவாய் குழந்தை வடிவுடன் தோன்றி அருளினார்.

மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினால் அளக்கொணாமல்,
நிறைவுடன் யாண்டும் ஆகி நின்றிடு நிமல மூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவ ணத்தின்
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளி னானே.

இது ஆன்மாக்களின் இதய கமலந்தோறும் அப் பரம்பொருள் உறைகின்றான் என்ற உண்மையை உணர்த்துகின்றது.

கருத்துரை

         பழநியப்பா! மையல் கடலில் வீழாது உனது அறநூல்களை ஓதி உய்ய அருள்புரிவாய்.


                 


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...