பழநி - 0137. கலவியில் இச்சித்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கலவியில் இச்சித்து (பழநி)

முருகா!
மாதர் மயலில் மங்காமல் ஆண்டு அருள் புரி

தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான


கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
     கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்
          கயல்கள்சி வப்பப் பரிந்து நண்பொடு ...... மின்பமூறிக்

கனியித ழுற்றுற் றருந்தி யங்குறு
     மவசமி குத்துப் பொருந்தி யின்புறு
          கலகம்வி ளைத்துக் கலந்து மண்டணை .....யங்கமீதே

குலவிய நற்கைத் தலங்கொ டங்கணை
     கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
          குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையி ...... லங்கம்வேறாய்க்

குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துர
     முகதல முத்துப் பொலிந்தி லங்கிட
          கொடியம யற்செய்ப் பெருந்த டந்தனில் ...... மங்கலாமோ

இலகிய சித்ரப் புனந்த னிந்துறை
     குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமி
          னினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள் ......   கந்தவேளே

எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரி
     யிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறு
          மிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கிய ...... செங்கைவேலா

பலவித நற்கற் படர்ந்த சுந்தரி
     பயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறு ...... கின்றபாலைப்

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகரென இச்சித் துகந்து கொண்டருள்
          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ......தம்பிரானே.


பதம் பிரித்தல்


கலவியில் இச்சித்து, ரங்கி நின்று, ரு
     கனதனம் விற்கச் சமைந்த மங்கையர்,
          கயல்கள் சிவப்பப் பரிந்து, நண்பொடும் ...... இன்பம் ஊறிக்

கனி இதழ் உற்று உற்று அருந்தி, அங்கு உறும்
     அவசம் மிகுத்துப் பொருந்தி, இன்புறு
          கலகம் விளைத்துக் கலந்து, மண்டு அணை ..... அங்கம் மீதே

குலவிய நல் கைத்தலம் கொடு அங்கு அணை,
     கொடிஇடை மெத்தத் துவண்டு, தண்புயல்
          குழல் அளகக் கட்டு அவிழ்ந்து பண்டையில் ...... அங்கம் வேறாய்க்

குறிதரு வட்டத்து அடர்ந்த சிந்துர
     முகதல முத்துப் பொலிந்து இலங்கிட,
          கொடிய மயல் செய்ப் பெரும் தடம் தனில் ......மங்கல் ஆமோ?

இலகிய சித்ரப் புனம் தனிந்து உறை
     குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமின்
          இனிது உறு பத்மப் பதம் பணிந்து அருள் ...... கந்தவேளே!

எழுகடல் வற்ற, பெரும் கொடுங்கிரி
     இடிபட, மிக்கப் ப்ரசண்டம் விண்டு உறும்
          இகலர் பதைக்கத் தடிந்து இலங்கிய ......  செங்கைவேலா!

பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி,
     பயில்தரு வெற்புத் தரும் செழுங்கொடி
          பணைமுலை மெத்தப் பொதிந்து பண்பு உறு ...... கின்றபாலை,

பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
     பகர் என இச்சித்து உகந்து கொண்டு அருள்
          பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் ...... தம்பிரானே.

  
பதவுரை


      இலகிய --- விளங்குகின்ற,

     சித்ர --- அழகிய,

     புனம் தனிந்து உறை --- தினைப் புனத்தில் தனித்திருந்த,

     குறமகள் --- வள்ளியம்மை,

     கச்சு கிடந்த கொங்கை மின் --- கச்சு அணிந்த தனபாரங்களையுடைய மின்னொளி போன்ற அவளுடைய,

     இனிது உறு பத்ம பதம் பணிந்து அருள் --- இனிய பாத தாமரையில் பணிந்து அவருக்கு அருள் புரிந்த,

     கந்தவேளே --- கந்தக் கடவுளே!

      எழுகடல் வற்ற --- ஏழு சமுத்திரங்களும் வற்றவும்,

     கொடும் கிரி இடிபட --- கொடிய கிரவுஞ்ச மலை இடிந்து தூளாகவும்,

     மிக்கப் ப்ரசண்டம் விண்டும் உறும் --- மிகுந்த வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்த,

     இகலர் பதைக்க --- பகைவர்களாகிய அசுரர்கள் பதை பதைக்கவும்,

     தடிந்து இலங்கிய --- அழிவு செய்து விளங்கிய,

     செங்கை வேலா --- சிவந்த திருக்கரத்தில் வேலை ஏந்தியவரே!

      பலவித நல் கற்பு அடர்ந்த சுந்தரி --- பல வகையான நலம் கற்புக் குணங்கள் நிரம்பிய அழகியவரும்,

     பயில் தரு வெற்பு தரும் --- நல்ல பயின்ற இமயமலை யரசர் ஈன்ற,

     செழும் கொடி --- செழிப்புள்ள கொடி போன்றவரும் ஆகிய உமா தேவியார்,

     பணைமுலை --- பருத்த திருமுலையில்

     மெத்த பொதிந்து பண்பு உறுகின்ற --- மிகுதியாக நிறைந்து குணம் தங்கிய,

     பாலை --- சிவஞான அமுதத்தை,

     பல திசை மெச்ச --- பல திசைகளில் உள்ளவர்களும் மெச்சிப் புகழுமாறு,

     தெரிந்த செந்தமிழ் பகர் என --- உணர்வினால் உணர்ந்த செவ்விய தமிழ்ப்பாடல்களைப் பாடுக என்று கூறித் தர,

     இச்சித்து உகந்து கொண்டு அருள் --- அப்பாலை விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் உட்கொண்டருளிய,

     பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று --- அருள் பழநியம்பதியில் மலைமீது கருணையால் விளங்கி நின்று அடியார்க்கு அருள் புரிகின்ற,

     தம்பிரானே --- தனிப்பெருந் தலைவரே!

      கலவியல் இச்சித்து --- கலவி யின்பத்தில் ஆசைப்பட்டு,

     இரங்கி நின்று --- பரிந்து நின்று,

     இரு கனதனம் விற்க சமைந்த மங்கையர் --- பெரிய தனங்களை விலைப்படுத்த ஒப்புதலாகி நிற்கும் விலைமகளிரது,

     கயல்கள் சிவப்ப --- கயல் மீன் போன்ற கண்கள் சிவக்கும்படி,

     பரிந்து நண்பொடும் --- அன்பு பூண்டு நட்புகொண்டும்,

     இன்பம் ஊறி --- இன்ப வெள்ளத்தில் அழுந்தி,

     கனி இதழ் உற்று உற்று அருந்தி --- கொவ்வைக் கனி போன்ற இதழமுதை அடிக்கடி பருகி,

     அங்கு உறும் அவசம் மிகுந்து --- அங்கு அதனால் மயக்கம் அடைந்து,

     பொருந்தி இன்புறும் --- அவருடன் அணைந்து இன்பத்தை யடைந்து,

     கலகம் விளைத்து கலந்து --- மறுபடியும் ஊடல்கொண்டு பின் கலந்தும்,

     மண்டு அணை அங்க மீதே --- நெருங்கிய பஞ்சணைகளுடன் கூடிய கட்டிலின் மீது,

     குலவிய நல் கைத்தலம் கொடு அங்கு அணை --- குலவுகின்ற நல்ல கரதலத்தால் அங்கு தழுவி,

     கொடி இடை மெத்த துவண்டு --- கொடி போன்ற மெல்லிய இடையானது மிகவும் துவளவும்,

     தண் புயல் குழல் அளகம் கட்டு அவிழ்ந்து --- குளிர்ந்த மேகம்போன்ற அளகபாரக் கூந்தல் கட்டு அவிழவும்.

     பண்டையில் அங்கம் வேறாய் --- முன்னிருந்த உடம்பின் பொழிவு வேறுபடவும்,

     குறி தரு வட்டத்து அடர்ந்த சிந்துர --- அடையாளமாகவும் வட்டமாகவும் நெருக்கமாகவும் இட்ட குங்குமப் பொட்டுள்ள,

     முக தல முத்து பொலிந்து இலங்கிட --- முகத்தில் முத்துப் போன்ற வேர்வைத் துளி அழகாக விளங்கவும்,

     கொடிய மயல் செய் --- கொடுமையான மயக்கத்தைச் செய்கின்ற,

     பெரும் தடம் தனி மங்கல் ஆமோ --- பெரிய தடாகம் போன்ற அக்காம வெள்ளத்தில் அடியேன் மங்கிப் போகல் ஆமோ?


பொழிப்புரை


     அழகு நிரம்பிய தினைப்புனத்தில் தனித்திருந்த குறமாதும், கச்சுடன் கூடிய தனபாரங்களை யுடைய மின்னற் கொடி போன்றவரும் ஆகிய வள்ளி பிராட்டியாருடைய இனிய தாமரைத்தாளில் பணிந்து அவருக்கு அருள்புரிந்த கந்தக்கடவுளே!

         ஏழு கடல்கள் வற்றவும் பெரிய கொடிய கிரவுஞ்ச மலையானது இடிந்து பொடி படவும், மிகுந்த வேகத்தை வெளிப்படுத்திக் கொண்டு வந்த பகைவர்களாகிய அசுரர்கள் பதைபதைத்து அழியவும் போர்புரிந்த வேலாயுதத்தை ஏந்திய திருக்கரத்தை யுடையவரே!

         பலவகையான நல்ல கற்புக் குணங்களை யுடைய அழகியவரும், நல்ல பயின்ற இமவானுடைய குமாரியும், செழிப்புள்ள மலர்க்கொடி போன்றவரும் ஆகிய பார்வதியம்மையார், பருத்த தனங்களில் நிரம்பி வந்த குணமுடைய பாலமுதத்தை, பல திசைகளில் உள்ளவர்கள் மெச்சும்படி, இனிய தமிழ் பதிகங்களைப் பாடு என்று தர, அதனை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் உண்டருளிய, பழநியம்பதியில் மலை மீது நின்று ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்ற தனிப்பெரும் தலைவரே!

         கலவியின்பத்தில் ஆசைப்பட்டு பரிந்து நின்று, தமது பெரிய தனங்களை விற்பதற்கு உடன்பட்டுள்ள பொது மாதர்களின் கயல்மீன் போன்ற கண்கள் சிவக்கும்படி அவர்களைக் கலந்து, நட்போடு இன்ப வெள்ளத்தில் அழுந்தி, கொவ்வைக் கனிபோன்ற இதழமுதத்தை அடிக்கடி பருகி, அங்கு மிகுந்த மயக்கத்தை யடைந்து கலந்து இன்புற்று, ஊடல் கொண்டும் கூடியும், நெருங்கிய பஞ்சணையுடன் கூடிய கட்டிலின் மீது குலவிய நல்ல கரதலங்களால் தழுவி, கொடிபோன்ற மெல்லிய இடை துவளவும், குளிர்ந்த மேகம் போன்ற அளக பாரக் கூந்தல் கட்டு அவிழவும், முன்பிருந்த உடம்பின் பொலிவு வேறாகவும், அடையாளமாகவும் வட்டமாகவும் இட்ட குங்குமப் பொட்டுடன் கூடிய முகத்தில் வேர்வைத் துளி முத்துப்போல் தோன்றி அழகு செய்யவும், தீய மையலைப் புரியும் அம்மாதர்களின் பெரிய காம வெள்ளத்தில் அடியேன் விழுந்து மங்குதலை அடையல் ஆமோ?

விரிவுரை


இத் திருப்புகழில் முதல் அடிகள் நான்கிலும் விலை மகளிரது கலவி நலன்களின் தன்மைகளை எடுத்து சுவாமிகள் கூறுகின்றார்.

குறமகள்............பதம் பணிந்தருள் ---

வள்ளியம்மையாரை முருகவேள் பணிந்தார் என்று பல இடங்களில் அருணகிரிநாதர் கூறுகின்றார். தாய் தன் குழந்தையை மிகமிகக் கருணையுடன் பாலூட்டி வளர்க்கின்றாள்; அக்குழவி பால் உண்ண மறுக்கின்ற போது, “அன்புள்ள கண்ணா! உன்னைக் கும்பிடுகிறேன்; பால் குடித்துவிட்டு விளையாடு” என்று வேண்டுவாள். அதுபோல், எவ்வுயிர்க்குந் தாயாகிய தயாபரன், வள்ளிக்கு அருள்புரியும் பொருட்டு, அவளை வணங்கியும் அருள் புரிந்தான் என்று கொள்க. இது அப்பெருமானுடைய அளவற்ற கருணையைக் குறிக்கின்றது.

பலவித நற்கற்பு அடர்ந்த சுந்தரி ---

உமையம்மையாருடைய சிறந்த கற்புக் குணங்களை இங்கே சுவாமிகள் கூறுகின்றார். அம்பிகைக்குப் பல நாமங்கள்; அவற்றுள் ஒரு சிறந்த நாமம் உத்தமி என்பது.

உத்தமி புதல்வனை” என்றும் “இமவான் மடந்தை உத்தமி பாலா” என்றும் கூறுகின்றார்.

"சிவபிரானை நிந்தித்த தக்கனுடைய புதல்வி என்று இனி யான் வாழ்கில்லேன்" என்று அம்மை நினைத்து "அவன் வளர்த்த உடம்பும் தாட்சாயணி என்ற பேரும், வேண்டாம்" என வெறுத்து, அவற்றை அகற்றிப் பர்வதராஜனுக்குத் திருமகளாகத் திருவவதாரம் செய்து, பார்வதி என்ற திருப்பேருடன், சிவமூர்த்தியைத் திருமணம் புரிந்து கொண்டார். இதனால் அம்மையின் அரிய பெரிய கற்புக்குணம் இனிது புலனாகின்றது.

பெண்கள் தமது கணவனாரை நிந்தித்தவர், தாய் தந்தை உடன் பிறந்தார் யாவராயினும் அவர்களை விட்டு விடவேண்டும்.

கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை”       ---  நான்மணிக்கடிகை

கற்பனை முதலிய கடந்த கண்ணுதல்
தற்பர நினைஇகழ் தக்கன் தன்னிடைப்
பற்பகல் வளர்ந்தவன் பயந்த மாது எனச்
சொற்படு நாமமும் சுமந்தி லேன்யான்.

ஆங்கதோர் பெயரையும் அவன்கண் எய்தியே
ஓங்கிநான் வளர்ந்த இவ் உடலம் தன்னையும்
தாங்கினன் மேலவை தரித்தற்கு அஞ்சினேன்,
நீங்குவன், அவ்வகை பணித்தி நீ என்றாள். ---  கந்தபுராணம்

இத்தகைய உயர்ந்த பண்புகள் பலவற்றையும் உலகுக்கு உணர்த்தும் அன்னை திருஞானசம்பந்தருக்குத் திருமுலைப்பால் ஈந்து, உலகம் மெச்சும்படி திருப்பதிகம் பாடுமாறு அருள் புரிந்தனர்.

கருத்துரை

வள்ளி நாயகரே! வேலாயுதரே! பழநியாண்டவரே! மாதர் மயல் அற அருள்புரிவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...