அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கலைகொடு பவுத்தர் (பழநி)
முருகா!
உண்மை ஞானத்தை உணர்த்தி,
திருவடியைத் தந்து ஆண்டு
அருள்
தனதனன
தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடுப
வுத்தர் காம கருமிகள்து ருக்கர் மாய
கபிலர்பக ரக்க ணாதர் ...... உலகாயர்
கலகமிடு
தர்க்கர் வாம பயிரவர்வி ருத்த ரோடு
கலகலென மிக்க நூல்க ...... ளதனாலே
சிலுகியெதிர்
குத்தி வாது செயவுமொரு வர்க்கு நீதி
தெரிவரிய சித்தி யான ...... வுபதேசந்
தெரிதரவி
ளக்கி ஞான தரிசநம ளித்து வீறு
திருவடியெ னக்கு நேர்வ ...... தொருநாளே
கொலையுறஎ
திர்த்த கோர இபமுகஅ ரக்க னோடு
குரகதமு கத்தர் சீய ...... முகவீரர்
குறையுடலெ
டுத்து வீசி யலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே
பலமிகுபு
னத்து லாவு குறவநிதை சித்ர பார
பரிமளத னத்தில் மேவு ...... மணிமார்பா
படைபொருது
மிக்க யூக மழைமுகிலை யொட்டி யேறு
பழநிமலை யுற்ற தேவர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கலைகொடு
பவுத்தர், காம கருமிகள், துருக்கர், மாய
கபிலர், பகர் அக்கணாதர், ...... உலகாயர்,
கலகம்இடு
தர்க்கர், வாம பயிரவர், விருத்தரோடு
கலகல என மிக்க நூல்கள் ...... அதனாலே,
சிலுகி
எதிர் குத்தி வாது செயவும், ஒருவர்க்கு நீதி
தெரிவு அரிய சித்தியான ...... உபதேசம்
தெரிதர
விளக்கி, ஞான தரிசனம் அளித்து, வீறு
திருவடி எனக்கு நேர்வது ...... ஒருநாளே?
கொலையுற
எதிர்த்த கோர இபமுக அரக்கனோடு,
குரகத முகத்தர், சீய ...... முகவீரர்,
குறை
உடல் எடுத்து வீசி, அலகையொடு பத்ர காளி
குலவியிட, வெற்றி வேலை ...... விடுவோனே!
பலமிகு
புனத்து உலாவு குறவநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவும் ...... மணிமார்பா!
படைபொருது
மிக்க யூகம், மழைமுகிலை ஒட்டி ஏறு
பழநிமலை உற்ற தேவர் ...... பெருமாளே.
பதவுரை
கொலை உற எதிர்த்த --- கொலைகள் நேரும்படி
எதிர்த்து வந்த,
கோர இபமுக அரக்கனோடு --- கோரமுள்ள யானை
முகமுடைய தாரகாசுரனுடன்,
குரகத முகத்தர் --- குதிரை முகமுடைய அசுரர்,
சீய முக வீரர் --- சிங்க முகமுடையவர்களின்,
குறை உடல் எடுத்து வீசி --- குறைப்பட்ட
உடல்களை எடுத்து வீசி எறிந்து,
அலகையோடு --- பேய்களுடன்,
பத்ரகாளி குலவி இட --- பத்ரகாளியும்
மகிழ்ச்சியடைய,
வெற்றி வேலை விடுவவோனே --- வெற்றி
வேலாயுதத்தை விடுத்தவரே!
பலம் மிகு புனத்து உலாவு --- நன்கு
விளைந்து பலன் மிகுந்த தினைப்புனத்தில் உலாவுகின்ற,
குற வநிதை --- வள்ளி பிராட்டியாருடைய,
சித்ர --- அழகிய,
பார --- கனத்த,
பரிமள --- வாசனையுடன் கூடிய,
தனத்தில் மேவு --- கொங்கைகளில் பொருந்திய,
மணிமார்பா --- அழகிய திருமார்பினரே!
படை பொருது மிக்க யூகம் --- ஒன்றோடொன்று
போர் செய்து கொண்டு மிகுதியாக எழுந்த பெண் குரங்குகள்,
மழை முகிலை ஒட்டி ஏறு --- மழை பொழியும்
மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிக்கின்ற,
பழநி மலை உற்ற --– பழநி மலையில்
எழுந்தருளியுருக்கும்,
தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையின் மிக்கவரே!
கலை கொடு --- தாம் கற்ற கலைகளைக் கொண்டு,
பவுத்தர் --- புத்தர்களும்,
காம கருமிகள் --- தன் சாதியின் கருமத்தைக்
கொண்டே முத்தனாவான் என்ற கருமியும்,
துருக்கர் --- முகமதியர்களும்,
மாய --- மாயா வாதிகளும்,
கபிலர் --- கபில முனிவர் நிறுவிய
சாங்கியர்களும்,
பகர் அகணாதர் --- சொல்லப்பட்ட அந்த
கணாதர்களும்,
உலகாயர் --- உலகாயதர்களும்,
கலகம் இடு தர்க்கர் --- கலகம் புரியும்
தார்க்கீகர்களும்,
வாம --- வாம மதத்தினரும்,
பயிரவர் --- பயிரவ சமயத்தினரும்,
விருத்தரோடு --- தம்முடன் மாறுபட்ட
கொள்கையுடன்,
கலகல என மிக்க நூல்கள் அதனாலே --- கலகல
என்னும் சத்தத்துடன் மிகுந்த நூல்களைக் காட்டி,
சிலுகி --- சண்டையிட்டு,
எதிர் குத்தி வாது செயவும் --- எதிர்த்துத்
தாக்கி வாதம் செய்தும்,
ஒருவருக்கும் நீதி தெரிவரிய --- ஒருவர்க்குமே
உண்மை இதுதான் என்று உணர்வதற்கு அரிதான,
சித்தியான உபதேசம் தெரிதர விளக்கி --- சித்தி
தரும் பொருளான உபதேசத்தை அடியேன் அறியுமாறு விளக்கி,
ஞான தரிசனம் அளித்து --- உண்மை ஞானத்தைக் காண
அருள் புரிந்து,
வீறு திருவடி எனக்கு நேர்வது --- சிறந்த திருவடியை
அடியேனுக்குத் தந்தருளும் நாள்,
ஒரு நாளே --- ஒன்று கிடைக்குமா?
பொழிப்புரை
கொலைகள் உண்டாகும்படி எதிர்த்து வந்த
கோரமான யானை முகம் படைத்த தாரகாசுரனோடு, குதிரை
முகமும் சிங்கமுகம் படைத்த அசுரர்களின் குறை உடல்களை எடுத்து வீசி எறிந்து, பேய்களும், பத்ரகாளியும் மகிழுமாறு வெற்றி மிகுந்த
வேலாயுதத்தை விடுத்தவரே!
நல்ல பலன் தருகின்ற தினைப் புனத்தில்
உலாவிய வள்ளி நாயகியின் அழகும் கனமும் நறுமணமும் பொருந்திய தனங்களில் தழுவுகின்ற
அழகிய திருமார்பினரே!
ஒன்றோடொன்று எதிர்த்துப் போர் புரிந்து, மிகுதியாக எழுந்த பெண் குரங்குகள், மழை மேகத்தைக் கண்டு அஞ்சி ஏறி ஒளிகின்ற
பழநி மலைமீது வீற்றிருக்கின்ற தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!
தாங்கள் கற்ற நூல்களைக் கொண்டு
புத்தர்களும், காம கருமிகளும், முகம்மதியரும், மாயா வாதிகளும், கபில மதத்தினரும், சொல்லுகின்ற கணாதரும், உலகாயதர்களும், கலகம் புரிகின்ற தார்க்கீகரும், வாம மதத்தினரும், பயிரவர்களும், மாறுபட்ட கொள்கையுடன் கலகல என்று
இரைச்சல் செய்து, மிகுந்த நூல்களை
உதாரணமாகக் காட்டி சண்டையிட்டு,
எதிர்தாக்கி, வாதிட்டு ஒருவர்க்குமே உண்மை இதுதான்
என்று உணர்வதற்கு அரிதான சித்தி தரும் பொருளான உபதேசத்தை அடியேன் அறியுமாறு
விளக்கி, ஞான தரிசனத்தைத்
தந்து, சிறந்த உமது
திருவடிக் கமலத்தைத் தருகின்ற நாள் ஒன்று உளதாகுமோ?
விரிவுரை
கலைகொடு
பவுத்தர்
---
மதவாதிகள்
சமயவாதிகளும் தத்தம் மதமே - சமயமே சிறந்ததென்று கருதி, அதற்குரிய ஆதார நூல்களைக் காட்டி, வாதிட்டு, ஒருவரை யொருவர் தாக்கியும், எதிர்த்துப் போர் புரிந்தும்
உழலுவார்கள்.
"சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்கிறது மணிவாசகம்.
இத்திருப்புகழில்
சுவாமிகள் அதனைக் கண்டித்தருளுகின்றார்.
மாறுபடு
தர்க்கம் தொடுக்க அறி வார்,சாண்
வயிற்றின் பொருட்டதாக
மண்டலமும் விண்த உலமும்
ஒன்றாகி மனதுழல
மால் ஆகி நிற்க அறிவார்,
வேறுபடு வேடங்கள் கொள்ள அறி வார், ஒன்றை
மெணமெண என்று அகம்வேறு அதாம்
வித்தை அறிவார், எமைப் போலவே
சந்தைபோல்
மெய்ந்நூல்
விரிக்க அறிவார்,
சீறுபுலி போல் சீறி மூச்சைப் பிடித்து விழி
செக்கச்
சிவக்க அறிவார்,
திரம் என்று தந்தம்
மதத்தையே தாமதச்
செய்மைகொடும்
உளறஅறிவார்,
ஆறுசம யங்கள் தொறும் வேறுவேறு ஆகி விளை
யாடும் உனை யாவர் அறிவார்,
அண்டபகிர் அண்டமும்
அடங்க, ஒரு நிறைவாகி
ஆனந்த மானபரமே. ---
தாயுமானவர்
முதலில்
பவுத்தரைக் கூறுகின்றார்.
கௌதம
புத்தர் என்பவர் வடநாட்டில் கபிலவஸ்து என்ற நகரிலே அரச குமாரனாகப் பிறந்தவர்.
இளமையிலேயே மனைவியையும், மகனையும் துறந்து, உலகத் துன்பத்திற்கு விடுதலை காண
வேண்டும் என்று எங்குந் திரிந்து,
முடிவில்
ஓர் அரசமரத்தின் கீழ் இருந்து தவஞ் செய்தார். எவ்வுயிர்க்கும் இரங்குதலே பேரறம்; ஊன் பயில் வேள்வியும், உடலைத் துன்புறுத்தும் தவமும் மக்கட்கு
வேண்டாதன என்று கண்டார்.
புத்தர், இக்கொள்கையைத் தமர்க்கும் பிறர்க்கும்
எடுத்து ஓதினார். நல்லொழுக்கத்தை மட்டும் போதித்தார். கடவுளைப் பற்றி யாதும்
கூறினாரில்லை.
அவர்க்குப்
பின் வந்தவர்களும் அவர்கள் தலைவரும் புத்த சமயத்தைத் தனியே ஒரு சமயமாக்கிப்
“பிடகநூல்” என்னும் ஒரு சமய நூலை வகுத்தார்கள். அந்த நூலில் அறிவே ஆன்மா என்று
கூறப்பட்டது. அவ் அறிவானது ஒவ்வொரு கணப்பொழுதிலும் தோன்றி அழியும், முற்கணத்தில் தோன்றி அழியும் அறிவின்
வாசனை பிற்கணத்தில் தோன்றும். அறிவின் பற்றுதலால் நீரோட்டம் போல அறிவு
தொடர்ச்சியாக நிகழ்கின்றது. இவ்வாசனை அழிவதுவே முக்தி, “கந்த நாஸ்தி” என்பர். அதுவே நிருவாணம்
எனப்படும். உலகத்திலேயுள்ள பொருள் எல்லாம் இவ்வாறே கணந்தொறும் தோன்றி அழியும்
என்பதே புத்தமதக் கொள்கை.
மாத்தியமிகர், யோகாசாரர், சௌத்திதாரந்திகர்., வைபாடிகர் எனப் புத்த மதத்தில் நான்கு
வகையினர் உண்டு.
1. மாத்யமிகர் ---
உலகப் பொருள்கள் எல்லாம்
உண்மையில் சூனியமே. உள்ள பொருளாயின் அழியமாட்டா. இல் பொருளாயின் தோன்றமாட்டா. ஆனால்
உணர்ச்சிக்குப் புலனாதல் போலுதலின் அவை தோற்றமே என்ற கொள்கையுடையவர்கள்.
இவர்கள்
பிடகநூல் சொன்னதைச் சொன்னவாறே கொண்டு மேல் வினவாமையால் மத்தியம மாணாக்கர்
எனப்பட்டனர்.
2. யோகாசாரர் ---
இவர்கள்
புறப்பொருள் சூனியமாயின், ஞானமும் அத் தகைத்தோ
என்ற தமது ஆசிரியனை வினாவினர். ஆசிரியன் “ஞான மாத்திரம் உள்பொருள்; அது இரு வகைப்படும். வடிவம் நிறம்
முதலியவற்றேடு கூடியதொன்று; அங்ஙனம் கூடாததொன்று., அகத்திலுள்ள ஞானமே புறத்துலகமாகத்
தோன்றுவது” என விடை கூறினான்.
3. சௌத்திராந்திகர் ---
இவர்கள்
புறப்பொருள் சூனியம் என்பதனை மறுத்து ‘யான் இது கண்டேன்’ என்றபோது, யான்
என்னும் உணர்வு அகத்துப் பொருளும், இது என்று சுட்டி அறியப் படுவது
புறத்துப் பொருளும் வெவ்வேறு என்றனர்; அப்போது
ஆசிரியன் கூறுவான்:
“புறத்துப் பொருளும்
உள்பொருளே. அவை கணந்தோறும் தோன்றி அழிதலின், அவற்றின் வடிவு முதலியன அறிவிற்பட்டு
நீங்க அழிவிற்பட்ட வடிவத்தையே அப்பொருளென அறிகின்றோம். பொருள்கள் அகச்சமுதாயம், புறச்சமுதாயம் என இரு வகைப்படும்.
புறச்
சமுதாயத்திற்குக் காரணம் நிலவணு,
நீரணு, தீயணு, வளியணு என்பன.
அகச்
சமுதாயம் என்பது சித்தமும் அதன் பகுதிகளும். அவற்றிற்குக் காரணம் உருவகம், அறிவு, உணர்ச்சி, பெயர், தொழில் என்னும் ஐவகைக் கந்தங்கள்.
சித்தத்தில் சிந்திக்கப்படும் சுவை,
ஒளி, ஊறு, நாற்றம் முதலியன உருவக் கந்தம்
எனப்படும். உருவக் கந்தத்தை உணரும் உணர்வுகள் அறிவுக் கந்தம், அது பொது, சிறப்பு என இருவகைப்படும். இவ்வறிவில்
தோன்றும் இன்ப துன்பங்கள் வேதனைக் கந்தம்; பொருள்களின் பெயர்கள் குறிக்கந்தம்; பொருள்களின் தொழில்கள் வாசனைக் கந்தம்.
கந்தம்
என்ற சொல் கூட்டம் என்று பொருள்படும்.
உருவம், ஞானம், வேதனை, குறி, வாசனை என்ற ஐந்து கந்தங்களின்
தொகுப்புக்கள் உள்ளத்து உணரப்படுதலின். அவை அகச் சமுதாயமாம். எனவே, அங்ஙனங் கூறிய விடையைக் கேட்டு, இவ்வாறு கேட்பதற்குத் தக்கவாறு விடை அறிவுறுக்கும் சூத்திரங்கள் எவ்வளவிலே முடியுமென்று வினாவிய மாணாக்கர்கள் சூத்திர
அந்தம் யாது எனக் கேட்டமையின் சௌத்திராந்திகர் எனப்பட்டனர்.
4. வைபாடிகர் ---
இவர்கள்
புறப்பொருள் காட்சிப் பொருளே என்ற கொள்கையுடையவர்கள்.
இந்த
நால்வகைப் புத்த சமயத்தவர்களும்,
கணபங்க
வாதத்தையும், ஞானமே ஆன்மாவென்ற
கொள்கையையும், பொதுவாகத்
தழுவுபவர்கள்.
புத்த மதமானது
வடநாட்டிலே பெருவழி என்னும் மகாயானம், சிறுவழி என்னும் ஹீனயானம் என்று இரு
பகுதிப்பட்டது.
தெய்வ
வணக்கம், காயசித்தி
முதலியவற்றோடு கூடிய நெறியாகிய பெருவழியே சீனநாடு முதலியவற்றில் பரவியது.
சிறுவழி
பொதுமக்களுக்கு ஏற்புடையது அன்றாயிற்று.
தென்னாட்டில்
அசோகன் காலத்தே வந்தது கலப்பில்லாத புத்த மதமாகிய சிறுவழியே ஆகும். இதனைச் சிவஞான
சித்தியார் பரபக்கத்திலே விரிவாக ஓதி மறுக்கப்பட்டது. இது சௌத்திராந்திகக் கொள்கையாம்.
காம
கருமிகள்
---
தன்
சாதி கருமமே பற்றி முத்தனாமவன் கருமி:
துருக்கர் ---
முகமது
நபியினால் ஏற்பட்ட மதம்.
மாய ---
இவர்கள்
மாயாவாதிகள் எனப்படுவர். இது ஏகான்ம வாதத்தில் ஒன்று என உணர்க.
ஏகான்மவாதம், என்பது நான்கு பிரிவுகளை யுடையது.
மாயவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் எனப்படும்.
1. மாயாவாதம் ---
பிரமமாகிய
கடவுள் உள்ள பொருள்; உலகம் உயிர்களாகிய
அனைத்தும் தோற்றம் மாத்திரமேயாகும். இத் தோற்றத்திற்குக் காரணம் பிரமம், மாயையோடு தொடர்புற்று அதன் வாயிலாகப்
பிரதிபலித்தலே; (பழுதையில் பாம்பு
தோன்றுவது போல்) அந்த மாயை யாதெனில் அது இன்னதென்று சொல்ல முடியாதது.
“அநிர்வசனீயம்.” இம்மாயைக்கு வேறாக உள்ள பிரமம் யான் என அறிவதே முத்தி என்ற
கொள்கையுடையது.
2. பாற்கரியவாதம் ---
பிரமமே
சடமும் சித்துமாய உலகமாயிற்று. அங்ஙனம் விகாரப்பட்டதை அறியாமையாற் பந்தமாயிற்று.
வேதாந்த ஞானத்தால் உடம்புக்கு வேறாக ஆன்ம ரூபம் விளங்கும். அதன் கண் ஒடுங்குதலே
முத்தியெனப்படும்.
3. கிரீடாப் பிரமவாதம் ---
பிரமம்
யானே; நிகழ்பவையெல்லாம் என்
விளையாட்டே என அறிவதே முத்தி என்று கூறும்.
4. சத்தப்பிரய வாதம் ---
முடிவு
காலத்திற் பிரமம் சத்த வடிவாக இருக்கும். அதுவே அவிச்சையால் சடமும் சித்துமாய
உலகங்களாம் என்ற கொள்கையுடையது.
இந்த
ஏகான்ம வாதத்தை நன்கு பரவச் செய்தவர் சங்கராச்சாரியார்.
“யாங்களே கடவுளென்னும்
பாதகத்தவரும்”
என்று
தாயுமானாரும்,
“நாம் பிரமம் என்னும்
சாம் பிரமம்” என்று இராமலிங்கரும் பிற ஆன்றோரும் இதனை நன்கு
மறுத்திருக்கின்றார்கள்.
கபிலம்
---
இது
சாங்கிய மதம் எனப்படும். இதனைச் செய்தவர் கபிலமுனிவர். சட உலகம்
குணதத்துவத்தினின்றும் உண்டாகின்றது. சத்துவம் இராசதம் தாமதம் என்ற மூன்று
குணங்களும் ஒப்ப நின்ற நிலையிலே அது பிரகிருதி தத்துவம் எனப்படும். அது
எல்லாவற்றுக்கும் மூலமானதால் மூலப் பிரகிருதியாம்.
இதற்குக்
கீழ் உள்ள,
மண், நீர், தீ, வளி, வெளி -பூதம் 5
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் -தன்மாத்திரை 5
மெய், வாய், கண், நாசி, செவி -ஞானேந்திரியம் 5
வாக்கு, பாணி, பாதம், பாயு, உபத்தம் -கன்மேந்திரியம் 5
மனம், புத்தி, அகங்காரம் 3
ஆக
இந்த இருபத்து மூன்று தத்துவங்களால் ஆகியதே உலகம். ஆன்மாக்கள் பல அவை அறிவு
வடிவாயிருப்பன. மூலப் பிரகிருதியின் திரிபு வடிவாகிய புத்தியைச் சார்ந்து உயிர்கள்
கட்டுப்பட்டமையால் அவைகட்கு இன்ப துன்ப உணர்வு தோன்றியது. மூலப் பகுதியினின்றும்
தன்னைப் பகுத்து உணர்வதால் அவிச்சை நீங்கி முத்தியுண்டாம். இதன் கண் சற்காரிய
வாதம் கூறப்படுகின்றது.
இந்த
சாங்கிய-நூலின் தத்துவம் 25 தத்துவங்களை மட்டும்
கூறும்.
“சுவையொளி” என்ற
திருக்குறளுக்கு உரை வகுத்த இடத்திலே பரிமேலழகர் இந்த சாங்கிய நூற்கொள்கையை
எடுத்து ஆண்டனர்.
சமணரைப்
பார்க்கினும் சாங்கியன் உலக மூலத்தைக் காண்பதில் வல்லவன்.
சமணன்-அணுகரணவாதி..
சாங்கியன்-பிரகிருதி வாதி.
பகர
அகணாதர்
---
பகர்
அ கணாதர் என்று பிரியும். சொல்லப்படுகின்ற அந்த கணாதர் என்று பொருள்படும்.
இவர்கள்
வேதத்தை ஒப்புக்கொள்ளுகின்றவர்கள்,
வேதத்தை
உடன்படுகின் றவர்கள். ஆறு தரிசனம் என்று ஆறு சாத்திரங்களைச் செய்தார்கள்.
இந்த
ஆறு தரிசனத்தில் ஒன்று கணாதமுனிவர் செய்த வைசேடிகம்.
உலகாயதம் ---
உலகாயதம்
என்ற மதந்தான் சமய உலகில் முதலில் நிற்பது. இவர்கள் நிலம், நீர், தீ, காற்று என்ற நான்கு பூதங்களே உள்ளன.
(ஆகாயத்தை இவர்கள் ஒப்புக் கொள்வதில்லை) இவற்றின் கூட்டுறவால் உண்டாகிய
உடம்பின்கண், வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பின் கலப்பினால் ஒரு சிவப்பு நிறம் உண்டாவதுபோல், ஓர் அறிவு தோன்றும்; அஃதே உயிர். உடம்பின் வேறாக உயிர்
இல்லை. வினை என்பது கிடையாது. இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாக வுள்ளன. பெண்
இன்பமே முத்தி இன்பம். பிராணவாயு நீங்கில் உடல் அழியும் என்ற கொள்கைகளைக் கடைப்
பிடித்தவர்கள்.
கலகமிடு
தர்க்கர் ---
தருக்க நூலைச்
செய்தவர் கௌதமர். நியாய சூத்திரங்களும் தருக்கமேயாம். இத் தார்க்கீகர்கள்
ஐம்பூதங்கள், காலம், திசை, மனம், உயிர், கடவுள் என்பனவற்றை ஒப்புக் கொள்வர்.
கடவுள் எல்லாஞ் செய்ய வல்லவன். அவன் திருவுள்ளப்படி உலகந் தோன்றி நின்று
ஒடுங்கும். இறைவன் வாக்கு வேதம்,
உயிர்கள்
வினைக்கீடாகப் பிறப்புடையன. மனம் அணுவளவினதாய், உயிர் தோறும் வெவ்வேறாய் நிற்கும். மனத்தோடு கூடாமற் போனால் உயிர்க்கு அறிவில்லை, மனமற்றவிடத்தே உயிர் கல்போல் கிடக்கும்.
அதுவே முத்தியாகும்.
வாம ---
வாம
மதம்; சக்தியை மட்டும் வழி படுவது.
வாமம் என்ற ஆகமத்தைத் தழுவியது. இது சமயத்தைச் சேர்ந்தது.
பயிரவர் ---
பயிர
வாதம்: இவர்கள் வைரவரை வழிபடுகின்றவர்கள்.
வாம
மதத்தினரும், பைரவ மதத்தினரும்
முப்பத்தாறு தத்துவங்களையும் ஒப்புக்கொண்டவர்கள். எனினும் கடவுளுக்குப் பரிணாமம்
கூறுகின்றமையாலும் கடவுள் உருவில் ஒடுங்குதலே முத்தி என்பதனாலும் இவையும்
சித்தாந்த சைவத்தினின்றும் வேறுபடுகின்றன.
விருத்தரோடு
கலகலென மிக்க நூல்களதனாலே சிலுகி ---
விருத்தம்-மாறுபாடு.
(வடசொல்) தம் கொள்கைக்கு மாறுபடுகின்றவர்களை எதிர்த்து, தம்தம் சமய நூல்களை எடுத்துக் காட்டி வாதிட்டு
நிற்பர்.
ஒருவர்க்கு
நீதி தெரிவரிய சித்தியான உபதேசம் ---
மேற்கூரிய
சமயவாதிகள் அனைவர்க்கும் தெரிவதற்கு இயலாத சித்தாந்த சைவமான உண்மையை அடியேனுக்கு
உபதேசிக்கவேண்டும் என்று முருகனிடம் அருணகிரிநாதர் வேண்டுகின்றார்.
சித்தாந்த
சைவம் என்பது;-
முடிந்த
முடிபாக உள்ளது. எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டது. எச்சமயத்தாரையும்
இகழாதது.
நால்வர்கள், திருமூலர், பட்டினத்தார், அருணகிரிநாதர், மெய்கண்டார், முதலிய சந்தான குரவர்கள், தாயுமானார், பாம்பனடிகள் முதலிய ஆன்றோர்கள்
அநுபவத்தில் கண்டது. வேதத்தின் தெளிவாகவும், சிவாகமங்களின் உட்பொருளாகவும்
விளங்குவது.
இந்த
அரிய சித்தாந்த சைவத்தைப் பற்றித் தாயுமானார் கூறுவதைக் காண்க.
செப்பரிய
சமயநெறி எல்லாம் தம்தம்
தெய்வமே தெய்வம் எனுஞ் செயற்கை யான
அப்பரிசா
ளரும் அஃதே பிடித்து ஆலிப்பால்,
அடுத்த தம் நூல்களும் விரித்தே, அனுமான ஆதி
ஒப்பவிரித்து
உரைப்பர், இங்ஙன் பொய்மெய் என்ன
ஒன்றிலை ஒன்று எனப் பார்ப்பது ஒவ்வாது, ஆர்க்கும்
இப்பரிசாம்
சமயமுமாய் அல்ல வாகி
யாது சமயமும் வணங்கும் இயல்ப தாகி.
இயல்பு
என்றும் திரியாமல், இயமம் ஆதி
எண்குணமும் காட்டி, அன்பால் இன்பமாகி,
பயன்அருளப்
பொருள்கள் பரிவாரமாகி,
பண்புறவும் சௌபான பட்சம் காட்டி,
மயல் அறு
மந்திரம் சிக்ஷை சோதிட ஆதி
மற்று அங்க நூல் வணங்க, மௌனமோலி
அயர்வு அற, சென்
னியில் வைத்து ராசாங்கத்தில்
அமர்ந்தது வைதிக சைவம் அழகிது அந்தோ.
அந்தோ! ஈது
அதிசயம், இச் சமயம் போல் இன்று
அறிஞர் எல்லாம் நடு அறிய, அணிமா ஆதி
வந்து ஆடித்
திரிபவர்க்கும், பேசா மோனம்
வைத்திருந்த மாதவர்க்கும், மற்றும் மற்றும்
இந்த்ராதி
போகநலம் பெற்ற பேர்க்கும்,
இது அன்றித் தாயகம் வேறு இல்லைஇல்லை,
சந்தான
கற்பகம்போல் அருளைக் காட்டத்
தக்கநெறி இந்நெறியே தான் சன்மார்க்கம். --- தாயுமானார்.
ஓது சமயங்கள்பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல்
உள; பலவும் இவற்றுள்
யாது சமயம், பொருள்நூல் யாது இங்கு என்னின்,
இது ஆகும் அது அல்லது எனும் பிணக்கு அது இன்றி,
நீதியினால்
இவை எல்லாம் ஓரிடத்தே காண
நின்றது, யாதொரு சமயம்
அதுசமயம், பொருள்நூல்,
ஆதலினால்
இவை எல்லாம் அருமறை ஆகமத்தே
அடங்கியிடும்,
அவை இரண்டும் அரன் அடிக்கீழ் அடங்கும்.
– சிவஞானசித்தயார்
சுபக்கம்.
இதன் விரிவை மெய்கண்ட சாத்திர நூல்களில் கண்டு, ஓதி உணர்ந்து தெளிதல் வேண்டும்.
ஞான தரிசனம்
அளித்து வீறு திருவடி எனக்கு நேர்வது ஒரு நாளே ---
“சைவ சித்தாந்தத்தின்
அநுபவஞானமாகிய சிவஞான போதத்தை நல்கி, முருகா!
உன் திருவடியை அடியேனுக்குத் தந்தருளும் நாள் ஒன்று எனக்கு உண்டாகுமோ?” என்று அருணகிரிநாதர் முருகனிடம்
வேண்டுகின்றார்.
படைபொருது
மிக்கயூக மழைமுகிலை ஒட்டியேறு பழநி ---
பழநிமலையில்
உள்ள குரங்குகள், மழை பொழியும்
முகிலைக் கண்டு, நாம் நனைந்து துன்புறுவோமே
என்று எண்ணி அஞ்சி, வருமுன்
காக்கவேண்டும் என்று, மலை மீது ஏறி
மழைக்குத் தற்காப்பான இடங்களில் பதுங்கிக் கொள்கின்றன. இது என்ன கருத்தைக்
குறிக்கின்றது?
கருமுகில்
போன்ற கூற்றுவன் வருவான். அவன் கோபாக்கினியான மழை பொழிவான். அவன் வருமுன்
முருகனுடைய சரண கமலாலயத்தில் ஒதுங்கி மரண பயந்தீர்க்கவேண்டும் என்பது குறிப்பு.
திருஞானசம்பந்தரும்
கூறுமாறு காண்க;
புலன்ஐந்தும்
பொறி கலங்கி, நெறிமயங்கி,
அறிவுஅழிந்திட்டு,
ஐமேல்உந்தி
அலமந்த
போதாக, அஞ்சேல்என்று
அருள்
செய்வான் அமருங்கோயில்,
வலம்வந்த
மடவார்கள் நடம்ஆட, முழவுஅதிர,
மழை என்றுஅஞ்சிச்
சிலமந்தி
அலமந்து மரம்ஏறி முகில்பார்க்கும்
திருவை
யாறே.
கருத்துரை
பழநியப்பா!
சித்தாந்த ஞானத்தை உபதேசித்து உன் திருவடியைத் தந்தருள்.
No comments:
Post a Comment