பழநி - 0139. களப முலையை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

களப முலையை (பழநி)

முருகா!
பொருட்பெண்டிரால் மெலியால்,  
எனது தலையில் திருவடி மலரைச் சூட்டி அருள்

தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
     தனதனன தத்த தந்த ...... தனதான


களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து
     கயலொடுப கைத்த கண்கள் ...... குழைதாவக்

கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து
     கடியிருளு டுக்கு லங்க ...... ளெனவீழ

முழுமதியெ னச்சி றந்த நகைமுகமி னுக்கி யின்ப
     முருகிதழ்சி வப்ப நின்று ...... விலைகூறி

முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து
     முடுகுமவ ருக்கி ரங்கி ...... மெலிவேனோ

இளமதிக டுக்கை தும்பை அரவணிப வர்க்கி சைந்து
     இனியபொரு ளைப்ப கர்ந்த ...... குருநாதா

இபமுகவ னுக்கு கந்த இளையவம ருக்க டம்ப
     எனதுதலை யிற்ப தங்க ...... ளருள்வோனே

குழகெனஎ டுத்து கந்த உமைமுலைபி டித்த ருந்து
     குமரசிவ வெற்ப மர்ந்த ...... குகவேலா

குடிலொடுமி கச்செ றிந்த இதணுளபு னத்தி ருந்த
     குறவர்மக ளைப்பு ணர்ந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


களப முலையைத் திறந்து, தளவ நகையைக் கொணர்ந்து,
     கயலொடு பகைத்த கண்கள் ...... குழைதாவ,

கரியகுழலைப் பகிர்ந்து மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து,
     கடியிருள் உடுக் குலங்கள் ...... எனவீழ,

முழுமதி எனச் சிறந்த நகைமுகம் மினுக்கி, இன்ப
     முருகு இதழ் சிவப்ப நின்று ...... விலைகூறி,

முதல்உளது கைப் புகுந்து, அழகு துகிலைத் திறந்து,
     முடுகும் அவருக்கு இரங்கி ...... மெலிவேனோ?

இளமதி, கடுக்கை, தும்பை, அரவு அணிபவர்க்கு இசைந்து,
     இனிய பொருளைப் பகர்ந்த ...... குருநாதா!

இப முகவனுக்கு உகந்த இளையவ! மருக் கடம்ப!
     எனது தலையில் பதங்கள் ...... அருள்வோனே!

குழகு என எடுத்து உகந்த, உமை முலை பிடித்து அருந்து
     குமர! சிவ வெற்பு அமர்ந்த ...... குகவேலா!

குடிலொடு மிகச் செறிந்த இதண் உள புனத்து இருந்த
     குறவர் மகளைப் புணர்ந்த ...... பெருமாளே.


பதவுரை

      இளமதி --- இளம் பிறையையும்,

     கடுக்கை --- கொன்றை மலரையும்,

     தும்பை --- தும்பைப் பூவையும்,

     அரவு --- பாம்பையும்,

     அணிபவர்க்கு இசைந்து --- அணிந்து கொள்கின்ற சிவபெருமானுக்கு இணங்கி,

     இனிய பொருளை பகர்ந்த --- இனிமையான ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த,

     குருநாதா --- குருமூர்த்தியே!

         இபமுகவனுக்கு உகந்த இளையவ --- யானை முகமுடைய விநாயகருக்கு அன்பான தம்பியே!

       மரு கடம்ப --- நறுமணமுடைய கடப்ப மலர்மாலை அணிந்தவரே!

      எனது தலையில் பதங்கள் அருள்வோனே --- அடியேனுடைய சென்னியில் திருவடியைச் சூட்டியருளியவரே!

      குழகு என எடுத்து உகந்த --- குழந்தை என்று எடுத்து அணைத்து மகிழ்ந்த,

     உமை முலை பிடித்து அருந்து குமர --- உமாதேவியின் திருமுலையைப் பற்றி அதிலிருந்து சுரந்து ஒழுகிய சிவஞானப் பாலைப் பருகிய இளையவரே!

      சிவ வெற்பு அமர்ந்த --- சிவமலையில் எழுந்தருளிய, குக --- குகப் பெருமானே!

      வேலா --- வேலாயுதரே!

     குடிலொடு மிக செறிந்த --- சிறு குடிசைக்கு அருகில் மிகவும் நெருங்கியிருந்த,

     இதணுள புனத்து இருந்த --- பரண் அமைந்த தினைபுனத்தில் இருந்த,   குறவர் மகளை புணர்ந்த --- வள்ளியம்மையாரைத் தழுவிய, 

     பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      களப முலையைத் திறந்து --- கலவைச் சந்தனம் அணிந்த தனபாரத்தைத் திறந்து,

     தளவ நகையை கொணர்ந்து --- முல்லை மலர் போன்ற பற்களைக் காட்டி புன்னகை புரிந்து,

     கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ --- கயல் மீனுடன் மாறுபட்ட கண்கள் காதுகளிலுள்ள தோடுகளின்மீது தாவவும்,

     கரிய குழலை பகிர்ந்து --- கருமையான கூந்தலை வாரிப் பங்கிட்டு,

     சொருகு மலர் கொப்பு அவிழ்ந்து --- சொருகிய மலர்கள் கட்டுக் கலைந்து,

     இருள் கடு உடு குலங்கள் என வீழ --- இருளை நீக்குகின்ற நட்சத்திரக் கூட்டங்களைபோல் உதிரவும்,

     முழுமதி என சிறந்த நகை முகம் மினுக்கி --- பூரண சந்திரனைப் போன்ற சிறந்த ஒளி பொருந்திய முகத்தைக் கழுவி அழகு செய்து,

     இன்ப முருகு இதழ் சிவப்ப நின்று விலை கூறி --- இன்பத்தைத் தரும் வாசனையுள்ள இதழ்கள் சிவக்கும்படி நின்று விலைபேசி,

     முதல் உளது கை புகுந்து --- வந்தவருடைய மூலதனம் யாவும் தமது கையில் வந்த பின்,

     அழகு துகிலை திறந்து --- அழகிய ஆடையைத் திறந்து,

     முடுகும் அவருக்கு இரங்கி --- நெருங்கி உறவாடும், விலைமகளிர்க்கு உள்ளம் ஈடுபட்டு,

     மெலிவேனோ --- தேய்ந்து அழிவேனோ?


பொழிப்புரை


         பிறைச்சந்திரன், கொன்றை மலர், தும்பைப் பூ, பாம்பு இவற்றை அணிந்த சிவபெருமானுக்கு இசைந்து ஓம் என்ற முதல் எழுத்தின் இனிய மூலப் பொருளை மொழிந்த குருநாதரே!

         யானைமுகம் உடைய விநாயக மூர்த்திக்கு அன்பான இளையவரே!

         வாசனை நிறைந்த கடப்ப மலர் மாலை அணிந்தவரே!

         அடியேனுடைய சிரத்தில் உமது திருவடி மலரைச் சூட்டியருள் புரிந்தவரே!

         குழந்தை யென்று அன்புடன் எடுத்து அணைக்கும் பார்வதியம்மையின் திருமுலையைப் பற்றி, அதில் ஒழுகுஞ் சிவஞானப் பாலைப் பருகிய குமாரக் கடவுளே!

         சிவமலையில் அமர்ந்த முருகப் பெருமானே!

         வேலாயுதக் கடவுளே!

         குடிசைக்கு அருகில் நெருங்கி யிருக்கும் பரணுடன்கூடிய தினைப்புனத்தில் வசித்த வள்ளியம்மையாரைத் தழுவிய பெருமிதம் உடையவரே!

         கலவைச் சந்தனந் தடவிய கொங்கைகளைத் திறந்து, முல்லைமலர் போன்ற பற்களைக் காட்டிப் புன்னகை புரிந்து, கயல் மீனுடன் பகைக்கும் கண்கள், காதுகளில் உள்ள குழைகளைத் தாவவும், கரிய கூந்தலை வாரி அதில் சொருகிய மலர்கள் கட்டுத் தளர்ந்து இருளை நீக்கும் நட்சத்திரக் கூட்டம் போல் உதிரவும், முழுநிலாவைப் போல் சிறந்த ஒளி பெற்ற முகத்தை அலம்பி, இன்பத்தை தரும் வாசனை பொருந்திய இதழ்கள் சிவக்குமாறு நின்று விலை பேசி, தம்மை நாடி வந்த ஆடவர்களின் மூலதனம் முற்றும் தமது கைக்கு வந்தபின், அழகிய ஆடையை அகற்றி நெருங்கும் விலைமகளிருடன் கூடி அடியேன் மெலியலாமோ?
  
விரிவுரை


எனது தலையில் பதங்கள் அருள்வோனே ---

இந்தத் திருப்புகழில் இந்த அடி மிகவும் சிறந்தது. இனிமையானது. அருணகிரிநாதருடைய சரித்திரக் குறிப்புடையது.

முருகனுடைய திருவடி மிக மிக அரியது. அது மூவருக்கும் தேவருக்கும் எட்டாதது.

சுருதி மறைகள், இருநாலு திசையில்அதிபர், முனிவோர்கள்
  துகள்இல் இருடி எழுபேர்கள்,              சுடர்மூவர்,
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர், நவநாதர்,
  தொலைவின் உடுவின் உலகோர்கள்,    மறையோர்கள்,
அரிய சமயம் ஒருகோடி, அமரர் சரணர் சதகோடி,
  அரியும் அயனும் ஒருகோடி,               இவர்கூடி
அறிய அறிய அறியாத அடிகள்.”

என்கிறார் உத்திரமேரூர்த் திருப்புகழில்.

இத்தகைய திருவடி மலரை அருணகிரிநாத சுவாமிகளது சென்னியில் முருகவேள் சூட்டியருளினார். இதனால் அருணகிரிநாதரின் தவத்தின் பெருமை விளங்குகின்றது.

திருநல்லூரில் திருநாவுக்கரசு சுவாமிகளின் சென்னியில் சிவபெருமான் திருவடி மலரைச் சூட்டியருளினார்.

நினைந்துஉருகும் அடியாரை நைய வைத்தார்,
  நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்,
சினந்திருகு களிற்றுஉரிவைப் போர்வை வைத்தார்,
  செழுமதியின் தளிர்வைத்தார், சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத்துற்ற
  இனமலர்கள் போது அவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்து அனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார்,
  நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே.                   ---  அப்பர்

நன்மைபெருகு அருள் நெறியே வந்துஅணைந்து, நல்லூரின்
மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந்து எழும்பொழுதில்,
"உன்னுடைய நினைப்பு அதனை முடிக்கின்றோம்" என்று, அவர்தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினான் சிவபெருமான்   ---  பெரியபுராணம்

கயலொடு பகைத்த கண்கள் குழை தாவ ---

மீன் நீரில் பிறழ்ந்து ஓடும் இயல்புடையது. அது போல் கண்களும் பிறழ்ந்து ஓடி மீனைப் பகைக்கின்றது என்பது கவி மரபு. மேலும் கண்கள் நீண்டிருப்பதனால் அவ்விழி, தோட்டின் மீது தாவுகின்றது என்று கூறி, அக் கண்களின் அழகை மிகுதிப்படுத்துகின்றது. ‘செங் கயல் குழைகள் நாடுந் திருமுனைப் பாடி நாடு’ என்று சேக்கிழாரடிகளும் கூறியருளினார்.

மலர் சொருகு கொப்பு அவிழ்ந்து கடி இருள் உடுக்குலங்கள் என வீழ ---

கோப்பு என்ற சொல் கொப்பு எனக் குறுகி நின்றது. மலரின் கட்டுக்போப்பு அவிழ்ந்து உதிர்கின்றது.

இருளை நீக்கும் நட்சத்திரக் கூட்டம் உதிர்வது போல் மலர்கள் உதிர்கின்றன என்று உவமிக்கின்றனர். கூந்தல் மேகத்தையும், மலர்கள் நட்சத்திரங்களையும் காட்டுகின்றன.

கருத்துரை

சிவகுருவே! சிவமலையப்பா! வள்ளி மணவாளா! பொருள் பறிக்கும் பொருட் பெண்டிரால் மெலியாமல் என்னைக் காத்தருள்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...