அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கறுத்த குழலணி (பழநி)
முருகா!
மாதர் மயல் என்னு
பெரும் தீயில் வீழ்ந்து அழியாமல் அருள்
தனத்த
தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த
குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுத லணிதில தம்பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச்
...... சிரமான
கழுத்தி
லுறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை யண்மைக்
கமைத்த கலையிறு குறுதுவள் வஞ்சிக்
...... கொடிபோலச்
சிறுத்த
களமிகு மதமொழு கின்சொற்
குயிற்க ளெனமட மயிலெகி னங்கட்
டிருக்கு நடைபழ கிகள்கள பங்கச் ...... சுடைமாதர்
திகைத்த
தனமொடு பொருள்பறி யொண்கட்
குவட்டி யவர்வலை யழலுறு பங்கத்
திடக்கு தலைபுலை யவர்வழி யின்பைத்
...... தவிர்வேனோ
பறித்த
விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபர னிதழிநல் தும்பைப்
படித்த மதியற லரவணி சம்புக் ...... குருநாதா
பருத்த
அசுரர்க ளுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகட லெரிபட செம்பொற்
படைக்கை மணியயில் விடுநட னங்கொட்
...... கதிர்வேலா
தெறித்து
விழியர வுடல்நிமி ரம்பொற்
குவட்டொ டிகைகிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரிகொ ளும்பொற்
...... றிருபாதா
சிறக்கு
மழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்கு ளணைகுக சிவமலை கந்தப் ......பெருமாளே.
பதம் பிரித்தல்
கறுத்த
குழல் அணி மலர் அணி பொங்க,
பதித்த சிலை நுதல் அணி திலதம், பொன்
கணைக்கு நிகர்விழி சுழல, எழு கஞ்சச் ...... சிரமான
கழுத்தில்
உறுமணி, வளைகுழை மின்ன,
குவட்டு முலை அசைபட, இடை அண்மைக்கு
அமைத்த கலை இறுகுறு துவள் வஞ்சிக்
...... கொடிபோலச்
சிறுத்த
களம் மிகு மதம் ஒழுகு இன் சொல்
குயில் களம் என,மட மயில் எகினங்கள்
திருக்கு நடை பழகிகள், களபம் கச்சு ...... உடைமாதர்
திகைத்த
தனமொடு பொருள்பறி, ஒண்கண்
குவட்டி, அவர் வலை அழல் உறு பங்கத்
திடக்கு தலை, புலை அவர் வழி இன்பைத்
...... தவிர்வேனோ?
பறித்த
விழி,தலை, மழுவு உழை செங்கைச்
செழித்த சிவபரன், இதழி நல் தும்பைப்
படித்த மதிஅறல் அரவு அணி சம்புக்
...... குருநாதா!
பருத்த
அசுரர்களுடன் மலை துஞ்ச,
கொதித்த அலைகடல் எரிபட, செம்பொன்
படைக்கை மணிஅயில் விடு நடனம் கொள்
...... கதிர்வேலா!
தெறித்து
விழி அரவு உடல் நிமிர, அம்பொன்
குவட்டு ஒள் திகை கிரி பொடிபட, சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரி கொளும்பொன்
......திருபாதா!
சிறக்கும்
அழகிய திருமகள், வஞ்சிக்
குறத்தி மகள் உமை மருமகள் கொங்கைச்
சிலைக்குள் அணை குக! சிவமலை கந்தப்....... பெருமாளே.
பதவுரை
பறித்த விழி தலை --- பறிக்கப்பட்ட
கண்களுடன் கூடிய பிரமனது தலையையும்,
மழு --- பரசு என்ற ஆயுதத்தையும்,
உழை --- மானையும் ஏந்திய,
செம்கை செழித்த சிவபரன் --- சிவந்த
திருக்கரங்களையுடைய பரம்பொருளாகிய சிவபெருமான்,
இதழி --- கொன்றை மலர்,
நல் தும்பை --- நல்ல தும்பை மலர்,
படித்த மதி --- படிந்திருக்கின்ற சந்திரன்,
அறல் --- கங்கா நதி,
அரவும் அணி சம்பு --- பாம்பு இவற்றை அணிந்த
சுக காரணருக்கு,
குருநாதா --- குருநாதரே!
பருத்த அசுரர்களுடன் --- பருத்துள்ள
அரக்கர்களுடன்,
மலை துஞ்ச --- மலைகளும் மடியவும்,
கொதித்த அலைகடல் எரிபட --- சூடு ஏறி
அலைவீசும் கடல் எரியவும்,
செம்பொன் படை கை மணி அயில் விடு --- செவ்விய
அழகிய படைகளை ஏந்தும் திருக் கரத்தினின்று மணிகட்டிய வேலாயுதத்தைச் செலுத்தி,
நடனம் கொள் --- திருநடனம் புரிந்த,
கதிர்வேலா --- கதிர்வேற் கடவுளே!
தெறித்த விழி அர உடல் நிமிர --– கண்
தெறிந்து ஆதிசேடனுடைய உடம்பு நிமிரவும்,
அம் பொன் குவட்டு ஒள் திகைகிரி பொடி பட ---
அழகிய ஒளி பொருந்திய சிகரங்களுடன் கூடிய திசை மலைகள் பொடிபடுமாறும் செல்லுகின்ற,
சண்ட சிறப்பு --- வேகத்தில் சிறந்த,
மயில் மிசை பவுரி கொளும் --- மயில்மீது
திருநடனம் புரிந்த,
பொன் திரு பாதா --- அழகிய திருவடிகளை
யுடையவரே!
சிறக்கும் அழகிய திருமகள் --- சிறந்த
அழகு பொருந்திய இலக்குமியின் புதல்வியும்,
வஞ்சி குறத்தி மகள் --- வஞ்சிக்கொடி போன்ற
குறமகளும்,
உமை மருமகள் --- பார்வதியம்மையின் மருமகளும்
ஆகிய வள்ளியம்மையின்,
கொங்கை சிலைக்குள் அணை குக --- தனபாரமான
மலைக்குள் அணைகின்ற குகப்பெருமாளே!
சிவமலை கந்த --- சிவமலையில்
எழுந்தருளியுள்ள கந்தப் பெருமானே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
கறுத்த குழல் அணிமலர் அணி பொங்க ---
கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை
நன்கு விளங்கவும்,
பதித்த
சிலை நுதல் அணி திலகம் --- வில்லைப் போன்ற நெற்றியில்
பதித்துள்ள அழகிய பொட்டும்,
பொன் கணைக்கு நிகர் சுழல் எழு கஞ்ச விழி ---
அழகிய அம்புக்கு ஒத்து சுழற்சி கொண்டு எழும் தாமரை மலர் போன்ற கண்களும்,
சிரம் ஆன கழுத்தில் உறு மணி --- சிரத்தின்
பகுதியில் கழுத்தில் உள்ள மணியும்,
வளை --- வளைகளும்,
குழை மின்க --- குழைகள் ஒளி வீசவும்,
குவட்டு முலை அசைபட --- மலை போன்ற முலைகள்
அசையவும்,
இடை --- இடையானது,
அண் பை கமைத்த --- அருகில் உள்ள பாம்பின்
படம்போன்ற நிதம்பம் மறைய அமைத்த,
கலை இறுகுறு துவள் வஞ்சிக்கொடி போல --- சீலை
இறுகக் கட்டியபடியால் நெளிகின்ற வஞ்சிக்கொடி போல் இடை துவளவும்,
சிறுத்த களமிகு மதம் ஒழுகு இன்சொல் குயிற்கள்
என --- மெல்லிய கழுத்திலிருந்து பொங்கி எழும் இன்ப மதம் ஒழுகும் இனிய சொற்கள்
குயிலின் குரல் போல் ஒலிக்கவும்,
மடமயில் எகினங்கள் திருக்கு நடை பழகிகள் ---
அழகிய மயில் அன்னம் இவற்றின் நடைபோலக் காணப்படும் நடையைப் பழகுபவரும்,
களபம் கச்சுடை மாதர் --- கலவைச் சாந்துபடும்
இரவிக்கை யணிந்தவருமான மாதர்கள்,
திகைத்த தனமொடு --- ஆடவரைத் திகைத்துச்
செய்கின்ற தன்மையோடு,
பொருள் பறி ஒண் கண் குவட்டி --- பொருளைப்
பறிக்கின்ற ஒளி பொருந்திய கண்களை வளைத்து,
அவர் வலை அழல் உறு பங்க --- தமது வலையாகிய
நெருப்பு ஒத்த துன்பத்தில்,
திடக்கு தலை --- திடமாக வீழச் செய்பவரின்,
புலை அவர் வழி இன்பை --- கீழானவருடைய
இன்பத்தை,
தவிரேனோ --- அடியேன் ஒழிக்க மாட்டேனோ?
பொழிப்புரை
பிரமதேவனுடைய விழியுடன் கூடிய பறித்த
தலையையும் மழுவையும் மானையும் சிவந்த திருக்கரத்தில் ஏந்திய சிவமூர்த்தியும், கொன்றை நல்ல தும்பை, படிந்த சந்திரன், கங்கை, பாம்பு இவற்றை அணிந்த சுக காரணரும் ஆகிய
சிவபெருமானுக்குக் குகநாதரே!
பருத்த உடம்புடன் கூடிய அசுரர்களும்
மலைகளும் மடியுமாறும், கொதிப்புற்ற அலைகடல்
எரியுமாறும், சிவந்த அழகிய
படைக்கலங்களை ஏந்திய திருக்கரத்திலிருந்து மணி கட்டிய வேலாயுதத்தை விடுத்து வெற்றி
நடனம் புரிந்த கதிர்வேற் கடவுளே!
ஆதிசேடனுடைய விழி தெறித்து அவன் உடல்
நிமிரவும், அழகிய சிகரங்களுடன்
கூடிய ஒளி பெற்ற திசைக் கிரிகள் பொடிபடவும், வேகத்தில் சிறந்த மயிலின் மீது திருநடனம்
புரிகின்ற திருவடியை உடையவரே!
அழகிற் சிறந்த இலக்குமியின் புதல்வியும், கொடி போன்ற குறமகளும், உமாதேவியின் மருமகளும் ஆகிய
வள்ளியம்மையின் தனமலைகளுடன் அணைகின்ற குகமூர்த்தியே! சிவமலையில் எழுந்தருளியுள்ள
கந்தநாயகரே!
பெருமிதம் உடையவரே!
கரிய கூந்தலில் அணியப்பட்ட மலர் வரிசை
விளங்கவும், வில்லைப் போன்ற
நெற்றியில் பதித்துள்ள பொட்டும்,
ஒளி
பொருந்திய அன்புக்கு நிகரான சுழலும் தாமரை போன்ற கண்களும், சிரத்தின் கீழுள்ள கழுத்தில் உள்ள
மணியும், வளைகளும் குழைகளும்
ஒளி வீசவும், மலை போன்ற தனங்கள்
அசையவும், அருகில் உள்ள படம் போன்ற
நிதம்பத்துக்கு அமைத்த சீலை இறுக்கிக் கட்டியுள்ளதால் இடை வஞ்சிக்கொடி போல்
துவளவும், மெல்லிய
கழுத்திலிருந்து எழும் காம மதம் ஒழுகும் இன்சொற்கள் குயிலின் குரல் போல்
ஒலிக்கவும், அழகிய மயில் அன்னம்
இவற்றின் நடைபோல் காணப்படுகின்ற நடையைப் பழகுபவரும் கலவைச் சாந்துபடும் ரவிக்கை அணிந்தவருமான
மாதர்கள், ஆடவரைத்
திகைப்பிக்கும் தன்மையோடு, அவர்களுடைய
பொருள்களைப் பறிக்கும் ஒளி பொருந்திய கண்களை வளைத்துத் தம்முடைய வலையாகிய நெருப்பை
ஒத்த துன்பத்தில் திடமாக விழப் புரியவல்ல இழிந்தவருமான விலைமகளிரின் மூலம்
கிடைக்கும் இன்பத்தை ஒழிக்க மாட்டேனோ?
விரிவுரை
பெண்ணாசை ---
வித்து
இன்றி புல், பூண்டு, செடி, கொடி, தருக்கள் விளைய மாட்டா. அதுபோல்
உயிர்கட்கு ஆசையின்றி பிறப்பு எய்த மாட்டாது. பிறப்புக்கு விதை அவா.
“அவா என்ப
எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவா அப் பிறப்புஈனும் வித்து.” --- திருக்குறள்
இந்த
ஆசையாகிய மரத்தில் மூன்று கிளைகள் உண்டு. பொன் அவா, மண் அவா, பெண் அவா. இம் மூன்று கிளைகளில் மிக மிக உயரமானதும்
வைரம் ஏறியதும் பெண் அவா தான். ஏனைய பொன் ஆசையும் மண் ஆசையும் மனிதன் அல்லாத ஏனைய
உயிர்கட்குக் கிடையா.
ஆடு
மாடுகளிடம் ஒரு கூடைப் பவுனை வைத்தால் அவை அவற்றை விரும்புவதில்லை. கானகத்தில்
வாழும் புலி, கரடி, சிங்கம், யானை, முதலிய விலங்குகள் இந்த எல்லை வரை எனது
நிலம் என்று அமைத்து ஆசைப்படுவதும் இல்லை. இந்த பொன் மண் ஆசைகள் மனிதனுக்கு
மட்டுமே உண்டு.
ஆனால்
மூன்றாவது ஆசையான மாதர் அவா எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கட்கும் உண்டு.
பெண்ணாசை பிரமாவுக்கும் உண்டு. புழுவுக்கும் உண்டு. பிரமாதி பிபீலிகாந்தம், பெண்ணாசை வாட்டி வதைக்கின்றது. அதனால்
அழிந்தவர் அனந்தம், தேவரும், முனிவரும், சித்தரும், அரசரும், அசுரரும் பெண்ணாசையால் பேதுற்றார்கள்.
இதனைத்
திருவருளின் துணைகொண்டே அகற்றவேண்டும். நமது அறிவாற்றலால் அகற்ற இயலாது.
“குறத்திபிரான் அருளால் வெங்காம சமுத்திரம் யான் கடந்தேன்” என்ற
கந்தரலங்காரத்திலும், முருகா “நினது அன்பு
அருளால் ஆசா நிகளம் துகள் ஆயின” என்று கந்தரநுபூதியிலும் அருணகிரிப் பெருமான்
கூறுகின்றனர்.
இருளை
விளக்கினால் விரட்டுவது போல், ஆசா பாசத்தை ஞான
பண்டிதன் திருவருளால் அகற்றவேண்டும்.
இந்த
நியாயப் படி மனிதர்கள் மாதர் ஆசையை மெய்ஞ்ஞான பண்டிதனை வேண்டி அகற்றி, வீடுபேறு பெறுமாறு சுவாமிகள் பல
பாடல்கள் மாதராசையை அகற்றும் முறையில் பாடி அருளினார். பல பாடல்கள் பெண் மயலைப்
பற்றியும் அதனை அகற்றுமாறும் பாடிய காரணம் இதுதான்.
ஆகவே
இத்திருப்புகழில் பாதிப் பாடல் மாதராசையைப் பற்றி அமைந்துள்ளது.
ஒண்கட்
குவட்டி
---
ஒண்கண்
குவட்டி: கோட்டி என்பது குவட்டி என மருவியது. கோட்டி- வளைத்து. ஒளிபெற்ற
கண்களாலும் இளைஞரை வளைத்து இழுப்பர்.
பறித்த
விழிதலை.....சம்புக் குருநாதா ---
பிரமதேவர்
“நான் சிருஷ்டிக் கர்த்தன்” என்ற அகந்தை கொண்டனர்; சிவபெருமானுடைய திருவுருவில் இருந்து
வெளி வந்த வைரவர் பிரமதேவருடைய நடுத்தலையை நகத்தினால் கிள்ளி விட்டார். அதனால்
பிரமதேவர் நான்கு தலைகளை உடையவரானார். அன்று முதல் இன்றுவரை பிரமதேவர் அற்ற
தலையைப் படைத்துக் கொண்டாரில்லை. அதனால் படைத்தல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்கட்கும்
மூலகர்த்தா சிவபெருமானே என்பது மலையிடை விளக்காக விளங்குகின்றது.
மும்மூர்த்திகளும் சிவமூர்த்தியின் ஆணையைத் தாங்கி முத்தொழில்களைப்
புரிகின்றார்கள்.
“படைப்பானும்
காப்பனும் பார்க்கில் அருணேசன்
படைப்பான்
அயன் என்றால் பாவம்-படைப்பானேல்
தன்தலையைச்
சோணேசன் தானரிந்த போதிலவன்
தன்தலையைப்
பண்ணறியான் தான்.”
என்ற
அருணகிரி அந்தாதியால் இது தெளிவாகின்றது.
அங்ஙனம்
அயன் தலையை அரனார் அரிந்தபோது, அத்தலையை அவர் கையில்
ஏந்தி யருள்புரிந்தனர்.
சம்-சுககாரணம்.
நடனங்கொள்
கதிர்வேலா
---
சூரபன்மனுடைய
சேனைகள் யாவும் போருக்கு வந்த போது,
முருகவேள்
அச் சேனைகளை அழித்தும், கடல் எரிய வேலை
விடுத்தும், அகில உலகங்களும்
அசையுமாறு, அப்பெரும்
போர்க்களத்தில் வெற்றி நடனம் புரிந்தருளினார்.
“புண்டரிகர் அண்டமும்
கொண்டபகிர் அண்டமும்
பொங்கியெழ வெங்களங் கொண்டபோது
பொன்கிரியெ
னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையும் சிந்தைகூரக்
கொண்ட
நடனம்” --- (தண்டையணி) திருப்புகழ்
தெறித்து
விழியர வுடல் நிமிர ---
முருகப்
பெருமான் மிகுந்த ஆற்றல் படைத்த பச்சை மயிலின் மீது, மயிலும் ஆட, ஆடல் புரிந்தனர். அத்தருணம் எல்லாம்
ஆடின., பூமியை தாங்குகின்ற
ஆதிசேடன் தாங்கமாட்டாது விழி பிதுங்க உடல் நிமிர்ந்து அசைந்தான். ‘அதலசேடனாராட’
என்று மற்றொரு திருப்புகழிலும் இந்தக் கருத்தை அடிகளார் கூறுகின்றனர்.
அம்பொற்
குவட்டு ஒள் திகைகிரி பொடிபட ---
அம்பொன்
குவட்டு ஒள் திகை கிரி என்று பதப்பிரிவு செய்து கொள்ளவும்.
மயிலின்
மீது பெருமான் ஆடிய போது, அழகிய பொன் மயமான
சிகரங்களுடன் கூடிய ஒளி பெற்ற திசை மலைகள் எல்லாம் தூளாகி யுதிர்ந்தன.
ஓங்காரமாகிய
மயிலின் மீது மெய்ஞ்ஞானம் ஒளி விட்டபோது தீவினைக் கூட்டமாகிய மலைகள் துகள் பட்டன
என்பது இதன் உட்பொருள்.
சண்டச்
சிறப்பு மயில் ---
சண்டம்-வேகம்.
உலக முழுவதும் ஒரு நொடியில் வலம் வரக்கூடிய வேகம் உடையது மயில்.
“சண்ட மாருத
விசையினும்
விசை உற்று எண் திசாமுக
மகிதலம் அடையக் கண்டு மாசுணம் உண்டுஉலாவும்
மரகத
கலபச் செம்புள் வாகனம்” --- (அலகிலவுணரை) திருப்புகழ்
பவுரிகொளும்
பொன் திரு பாதா ---
பவுரி-கூத்து.
சாடுஞ்
சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுல்
கருத்தை இருத்த வல்லார்க்கு,உகம் போய்,சகம்போய்,
பாடும்
கவுரி பவுரி கொண்டு ஆடு அப் பசுபதிநின்று
ஆடும்
பொழுது பரமாய் இருக்கும் அதீதத்திலே. --- கந்தரலங்காரம்.
சிறக்கும் அழகிய திருமகள் வஞ்சிக் குறத்தி மகள் உமை மருமகள் ---
இலக்குமியை
யாரும் எங்கும் “திருமகள்” என்று கூறுவார்கள். திருவாகிய மகள் என்ற விரிந்து
பொருள்படும்.
அருணகிரிநாதர்
இங்கு ஒரு புதுமையாக வள்ளிபிராட்டியைத் திருமகள் என்றனர். மூன்றாம் வேற்றுமைத்
தொகையாக வைத்துக் கூறினர். “திருவின் மகள்” என்று விரித்துக் கொள்ளவும்.
இனி
திருமகள் என்று ஓர் அரிய சொல்லுக்கு எதுகையாக மருமகள் என்று அமைத்தனர். குறமகளாகிய
வள்ளிபிராட்டி, திருமகள் உமைக்கு
மருமகள் என்று கூறும் நயமும், சொல் இனிமையும்
எத்துணை இன்பத்தை தருகின்றன?
சிவமலை
கந்த
---
பழநிமலைக்குச்
சிவமலை என்று பேருண்டு. அன்றி சிவமலையென்ற ஓர் அருமையான திருத்தலம்
காங்கேயத்துக்கு அருகில் இருக்கிறது. சிவமலையில் எழுந்தருளியுள்ள முருகர் மிக்க வரதர்.
சிவவாக்கிய சித்தர் வழிப்பட்ட தலம். இங்கு முருகனுருவம் மிகவும் எழில் பெற்றது.
தரிசிக்க வேண்டிய தலம்.
கருத்துரை
சிவகுருவே
கதிர்வேலா! சிவமலை முருகா! மாதராசை தவிர அருள்புரிவாய்.
No comments:
Post a Comment