அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கனக கும்பம் (பழநி)
முருகா!
மாதர் மயலை ஒழித்து, பாத மலரைத் தருவாய்
தனன
தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக
கும்பமி ரண்டு நேர்மலை
யெனநெ ருங்குகு ரும்பை மாமணி
கதிர்சி றந்தவ டங்கு லாவிய ...... முந்துசூதம்
கடையில்
நின்றுப ரந்து நாடொறு
மிளகி விஞ்சியெ ழுந்த கோமள
களப குங்கும கோங்கை யானையை ...... யின்பமாக
அனைவ
ருங்கொளு மென்று மேவிலை
யிடும டந்தையர் தங்கள் தோதக
மதின்ம ருண்டுது வண்ட வாசையில் ......நைந்துபாயல்
அவச
மன்கொளு மின்ப சாகர
முழுகும் வஞ்சக நெஞ்சை யேயொழி
தருப தங்கதி யெம்பி ரானருள் ...... தந்திடாயோ
தனத
னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென ...... வுந்துதாளந்
தமர
சஞ்சலி சஞ்ச லாவென
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தவோதும்
பணிப
தங்கய மெண்டி சாமுக
கரிய டங்கலு மண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை
பவுரி கோண்டிட மண்டி யேவரு
நிசிச ரன்கிளை கொன்ற வேலவ
பழநி யங்கிரி யின்கண் மேவிய ...... தம்பிரானே.
பதம் பிரித்தல்
கனக
கும்பம் இரண்டு நேர்மலை
என, நெருங்கு குரும்பை, மாமணி
கதிர் சிறந்த வடம் குலாவிய ...... முந்து சூதம்,
கடையில்
நின்று பரந்து, நாள்தொறும்
இளகி விஞ்சி எழுந்த, கோமள
களப குங்கும கொங்கை யானையை, ...... இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே, விலை
இடு மடந்தையர் தங்கள், தோதகம்
அதின் மருண்டு துவண்ட ஆசையில்
......நைந்து,பாயல்
அவசம்
மன்கொளும் இன்ப சாகரம்
முழுகும், வஞ்சக நெஞ்சையே ஒழி-
தரு பதம் கதி எம்பிரான் அருள் ......தந்திடாயோ?
தனத
னந்தன தந்தனா என,
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோ என ...... உந்து தாளம்
தமர
சஞ்சலி சஞ்சலா என,
முழவு டுண்டுடு டுண்டு டூ என.
தருண கிண்கிணி கிண்கிணாரமும் ......
முந்த ஓதும்
பணி
பதம் கயம், எண் திசாமுக
கரி அடங்கலும், அண்ட கோளகை
பதறி நின்றிட, நின்று தோதக ...... என்று,தோகை
பவுரி கொண்டிட, மண்டியே வரு
நிசிசரன் கிளை கொன்ற வேலவ!
பழநி அம் கிரியின் கண் மேவிய ...... தம்பிரானே.
பதவுரை
தனதனந்தன தந்தனா என டிகுகு டிங்குகு
டிங்கு பேரிகை தனதனந்தன ----- என்ற
ஒலியுடனும்,
டிகுகு --- என்ற ஒலியுடனும் பேரிகைகள்
ஒலிக்கவும்,
தகுதி திந்திகு திந்தோ என உந்து தாளம் தமர
சஞ்சலி என
---
தாளங்கள் தகுதி திந்திகு திந்ததோ என்றும், சஞ்சலா என்றும் ஒலி செய்யவும்,
முழவு டுண்டு டுடுண்டுடூ என --- முரசு
வாத்தியமானது டுண்டுடு டுண்டுடூ என்று ஆரவாரிக்கவும்,
தருண கிண்கிணி கிணிகிணாரமும் முந்தவோதும் ---
சிறிய சதங்கையானது கிண்ணாரம் போல் முற்பட்டு ஒலிக்கவும்,
எண் திசாமுக கரி அடங்கலும் --- எட்டு
திசைகளில் உள்ள யானைகள் யாவும்,
அண்ட கோளகை பதறி நின்றிட --- உருண்டை வடிவமான
அண்டங்களும் நடுங்கி நிற்கவும்,
பணி பதம் கய நின்று --- பாம்பைப் பெருமையுடன்
காலில் அணிந்து நின்று, தோகை மயிலானது,
தோதக என்று பவுரி கொண்டிட ---- தோதக என்ற
ஒலிக் குறிப்புடன் நடனம் புரிய,
மண்டியே வரும் --- நெருங்கி வந்த,
நிசிசரன் கிளை கொன்ற வேலா ---
சூரபன்மனுடைய சுற்றத்தைக் கொன்ற வேலாயுதரே!
பழநி அம் கிரியின் கண் மேவிய --- அழகிய
பழநிமலை மீது விரும்பி வீற்றிருக்கின்ற,
தம்பிரானே --- தனிப்பெருந் தலைவரே!
கனக குடும்பம் இரண்டும் நேர் என ---
மலைகட்கு நிகர் என்றும் கூறுமாறு,
நெருங்கு குரும்பை --- நெருங்கியுள்ள
தெங்கின் இள நீர்க் குரும்பை போன்று,
மாமணி கதிர் சிறந்த வடம் குலாவிய --- அழகிய
இரத்ன மணிகளின் மாலைகளுடன் கூடியனவாய்,
முந்து சூதம் --- முற்பட்ட சூதாடு கருவியைப்
போன்றனவான தனங்களுடன்,
கடையில் நின்று --- தங்கள் வீட்டின் கடை
வாசலில் நின்று,
பரந்தும் --- யாரை வசப்படுத்தலாம் என்ற
பரபரப்பு கொண்டும்,
நாள் தோறும் இளகி --- நாள் தோறும்
நெகிழ்வுற்றும்,
விஞ்சி எழுந்த கோமள --- மேல் எழுந்துள்ள
அழகியதும்,
களப குங்கும கொங்கை யானையை இன்பம் ஆக ---
கலவைச் சாந்தும் குங்குமப் பூவும் பூசியுள்ள தனமாகிய யானையை இன்பத்துடன்,
அனைவரும் கொளும் என்று --- எல்லாரும்
பெறுங்கள் என்று கூறி,
விலை இடும் --- விலைக்கு விற்கும்,
மடந்தையர் தங்கள் தோதகம் அதில் மருண்டு ---
விலை மாதர்களின் வஞ்சகச் செயல்களில் மயங்கி,
துவண்டு அவ் ஆசையில் நைந்து --- மெலிவுற்று
அந்த ஆசையினால் உள்ளம் நைவுற்று,
பாயல் அவசம் மன் கொளும் --- படுக்கையில்
மூர்ச்சை போன்ற மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும்,
இன்ப சாகரம் முழுகும் வஞ்சக நெஞ்சையே
ஒழிதரும் --- இன்பக்கடலில் முழுகும் எனது வஞ்சக மனத்தைத் தொலைக்க வல்ல,
பதம் கதி --- திருவடிவாகிய புகலிடத்தை,
எம்பிரான் --- எம்பிரானே!
அருள் தந்திடாயோ --- உமது திருவருளை
அடியேனுக்கு வழங்கமாட்டாயோ?
பொழிப்புரை
போர்ப் பறைகள் தன தந்தன தந்தனா என்றும்
டிகுகு டிங்குகு டிங்கு என்று ஒலிக்கவும், தாளமானது தகுதி திந்திகு திந்ததோ சஞ்சலி
சஞ்சலா என்று ஒலிக்கவும், முழவுகள் டுண்டுடு
டுண்டுடூ என்று ஒலிக்கவும், சிறிய கிண்கிணிகள்
கிண் எனவும் கிண்ணாரம் முற்பட்டு ஒலிக்கவும், திசை யானைகளும் அண்டங்களும் நடுங்கி
நிற்கவும், பாம்பைக் காலில்
அணிந்த மயிலானது தோதக என்று நடிக்குமாறு நெருங்கி வந்த சூரபன்மனுடைய
சுற்றத்தினர்களைக் கொன்ற வேலாயுதரே!
அழகிய பழநிமலை மீது எழுந்தருளியுள்ள
தனிப்பெருந் தலைவரே!
இரண்டு பொற்குடத்தையும் மலையையும்
ஒத்ததும், நெருங்கிய தென்னங் குரும்பை
போன்றதும், அழகிய மணி மாலை அணியப்
பெற்றதும், குங்குமப்பூ, சந்தனக் கலவை பூசப்பட்டதும். சூது கருவி
போன்றதும், மிகவும் மேல் எழுந்த
இளமையான யானை போன்றதும் ஆகிய தனத்தை, உள்ளமுருகி, இன்பமாக யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள்
என்று விலை பேசி விற்கின்ற பொது மாதர்களின் வஞ்சனையில் மயங்கித் தளர்ச்சி அடைந்த, அந்த ஆசையில் நொந்து படுக்கையில்
மயக்கத்தைக் கொள்ளுகின்ற இன்பக் கடலில் மூழ்கும் எனது வஞ்சக மனத்தை ஒழித்து, அடைக்கலமான உமது திருவடியை, எம்பிரானே! அடியேனுக்குத் தந்து அருள
மாட்டாயோ?
விரிவுரை
இப்பாடலில்
நான்கு அடிகளில் உலக மாயை பற்றிக் கூறினார். பின்னே மூன்றடிகளில் போரின்
வர்ணனையும் மயிலின் நடனச் சிறப்பும் கூறப்பட்டன.
கருத்துரை
பழநிவேலா!
உன்பாத மலரைத் தருவாய்.
No comments:
Post a Comment