பழநி - 0142. கனத்து இறுகி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கனத்து இறுகி (பழநி)

முருகா!
பொதுமாதர் வசமாகாமல் காத்து அருள்

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான


கனத்திறுகிப் பெருத்திளகிப்
     பணைத்துமணத் திதத்துமுகக்
          கறுப்புமிகுத் தடர்த்துநிகர்த் ...... தலமேராய்

கவட்டையுமெத் தடக்கிமதர்த்
     தறக்கெருவித் திதத்திடுநற்
          கலைச்சவுளித் தலைக்குலவிக் ...... களிகூருந்

தனத்தியர்கட் கிதத்துமிகுத்
     தனற்குண்மெழுக் கெனப்புவியிற்
          றவித்திழிசொற் பவக்கடலுற் ...... றயர்வாலே

சலித்தவெறித் துடக்குமனத்
     திடக்கனெனச் சிரிக்கமயற்
          சலத்தின்வசைக் கிணக்கமுறக் ...... கடவேனோ

புனத்தின்மலைக் குறத்தியுயர்த்
     திருக்குதனக் குடத்தினறைப்
          புயத்தவநற் கருத்தையுடைக் ...... குகவீரா

பொருப்பரசற் கிரக்கமொடுற்
     றறற்சடிலத் தவச்சிவனிற்
          புலச்சிதனக் கிதத்தைமிகுத் ...... திடுநாதா

சினத்தெதிர்துட் டரக்கர்தமைத்
     திகைத்துவிழக் கணப்பொழுதிற்
          சிதைத்திடுநற் கதிர்க்கைபடைத் ...... துடையோனே

செருக்கொடுநற் றவக்கமலத்
     தயற்குமரிக் கருட்புரிசைத்
          திருப்பழநிக் கிரிக்குமரப் ......    பெருமாளே.


பதம் பிரித்தல்


கனத்து இறுகி, பெருத்து இளகி,
     பணைத்து, மணத்து, தத்து, முகக்
          கறுப்பு மிகுத்து, டர்த்து நிகர்த் ...... தலமேராய்,

கவட்டையும் மெத்த அடக்கி, மதர்த்து,
     அறக் கெருவித்து, தத்திடு நல்
          கலைச் சவுளித் தலைக் குலவிக் ...... களிகூரும்

தனத்தியர் கட்கு இதத்து மிகுத்து,
     அனற்கு உள் மெழுக்கு எனப் புவியில்
         தவித்து, ழிசொல் பவக்கடல் உற்று, ...... அயர்வாலே

சலித்த வெறித் துடக்கு மனத்து
     இடக்கன் எனச் சிரிக்க, மயல்
          சலத்தின் வசைக்கு இணக்கம் உறக் ...... கடவேனோ?

புனத்தின் மலைக் குறத்தி உயர்த்து
     இருக்கு தனக் குடத்தின் நறைப்
          புயத்தவ! நல் கருத்தை உடைக் ...... குக! வீரா!

பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்று,
     அறல் சடிலத்த அச் சிவனில்
          புலச்சி தனக்கு இதத்தை மிகுத் ...... திடுநாதா!

சினத்து எதிர் துட்ட அரக்கர் தமைத்
     திகைத்து விழ, கணப்பொழுதில்
          சிதைத்திடு நல் கதிர்க்கை படைத்து ......உடையோனே!

செருக்கொடு நல் தவக் கமலத்து
     அயற்கும் அரிக்கு அருள்புரிசைத்
          திருப் பழநிக் கிரிக் குமரப் ...... பெருமாளே.

பதவுரை

      புனத்தில் --- தினைப்புனத்தில் வாழ்ந்த,
    
     மலைக் குறத்தி --- மலை குறத்தியாகிய வள்ளி பிராட்டியின்,

     உயர் திருக்கு --- சிறந்த கண்களும்,

     தனக் குடத்தின் --- குடம் போன்ற தனங்கள்,

     தோய்ந்து நறை புயத்தவ --- மணக்கின்ற புயங்களை உடையவனே!

      நல் கருத்தை உடை --- நல்ல எண்ணங்களையுடைய,

     குக --- குகப் பெருமானே!

      வீரா --- வீர மூர்த்தியே!

      பொருப்பு அரசற்கு --- மலையரசனாம் இமவானிடம்,

     இரக்கமொடு உற்ற --- கருணையுடன் சென்றவரும்,

     அறல் சடிலத்த --- கங்கையைத் தரித்த சடை முடியையுடைவரும் ஆகிய,

     அ சிவனில் --- அந்தச் சிவ மூர்த்தியிடத்துள்ள,

     புலச்சி தனக்கு --- ஞானாம்பாளுக்கு,

     இதத்தை மிகுத்திடு நாதா --- இனிய அன்பைத் தரும் தலைவரே!

      சினத்து எதிர் துட்ட அரக்கர் தமை --- கோபத்துடன் எதிர்த்து வந்த கொடிய அசுரர்களை,

     திகைத்து விழ --- திகைப்புண்டு விழுமாறு, 

     கணப்பொழுதில் --- ஒரு நொடிப் பொழுதில்,

     சிதைத்திடும் --- அழித்த,

     நல் கதிர்க் கை --- ஒளி வீசும் வேலாயுதத்தை,

     படைத்து உடையோனே --- உடைமையாக உடையவரே!

      செருக்கொடு நல் தவ --- மகிழ்ச்சியுடன் தவம் நிறைந்த,

     நல் கமலத்து அயற்கும் --- நல்ல தாமரையில் வாழ்கின்ற பிரமதேவனுக்கும்,

     அரிக்கு --- திருமாலுக்கும்,

     அருள் --- அருள் புரிந்த,

     புரிசை திருப் பழநிக் கிரி குமார --- மதில் சூழ்ந்த திருப்பழநி மலையில் எழுந்தருளியுள்ள குமரக் கடவுளே!

      பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      கனத்து --- பாரமுள்ளதாய்,

     இறுகி --- அழுத்தமுள்ளதாய்,

     பெருத்து --- பெருமையுடையதாய்,

     இளகி --- நெகிழ்ச்சியுடையதாய்,

     பணைத்து --- எழுச்சியுள்ளதாய்,

     மணத்து --- மணங்கொண்டதாய்,

     இதத்து --- இனிமையுடையதாய்,

     முக கறுப்பு மிகுத்து --- முனையில் கருமை மிகுந்ததாய்,

     அடர்த்து --- நெருங்கியுள்ளதாய்,

     நிகர் தல மேராய் - மேரு மலைக்குச் சமானமுடையதாய்,

     கவட்டையும் மெத்த அடக்கி --- கபடத்தை மிகவும் உள்ளடக்கினதாய்,

     மதர்த்து --- செழிப்புள்ளதாய்,

     அற கெருவித்து --- மிகவும் ஆடம்பரமுள்ளதாய்,

     இத்து --- இன்பம் தருவதாய்,

     இடு நல் கலை சவுளி தலை குலவி --- அணியப்பட்ட ஆடை அணிகலங்களுடன் சேர்ந்தாய்,

     களி கூறும் --- மகிழ்ச்சி மிகுந்ததாய் விளங்கும்,

     தனத்தியர் --- கொங்கைகளை உடைய பொதுமகளிரது,

     கட்கு இதத்து மிகுந்து --- கண்களுக்கு இன்பத்துடன் ஈடுபட்டு,

     அனற்கு உள் மெழுக்கு என --- நெருப்பில் விழுந்த மெழுகு போல்

     புவியில் தவித்து --- பூமியின் கண்துன்புற்று,

     இழிசொல் பவகடல் உற்ற --- இழிந்த சொல்லுக்கு இடமாகிய பிறவிக் கடலில் வீழ்ந்து,

     அயர்வாலே --- அயர்ச்சியினால்

     சலித்த வெறி துடக்கு மனத்து --- அலுத்த வெறியில் கட்டுண்ட மனத்தையுடைய,

     இடக்கன் என சிரிக்க --- கீழ் மகன் என்று நல்லோர் சிரிக்கும்படி,

      மயல் சலத்தின் வசைக்கு இணக்கம் உறக் கடவேனோ --- மயக்கத்திலும் கோபத்திலும் வசைக்கும் தொடர்புடையவனாக அடியேன் ஆகலாமோ?

பொழிப்புரை


         தினைப்புனத்தில் இருந்த மலைக் குறத்தியாம் வள்ளி நாயகியின் சிறந்த கண்மலர்களும் குடம் போன்ற தனங்களும் தோய்ந்து மணம் வீசும் புயத்தை உடையவரே!

         நல்ல எண்ணங்களை உடைய குக மூர்த்தியே!

         வீரப் பொருளே!

         மலையரசனாகிய இமவானிடம் கருணையுடன் சென்றவரும், கங்கா நதியை தரித்தவருமாகிய அந்த சிவபெருமானிடத்தில் உறைகின்ற ஞானாம்பிகையின் மனம் மகிழ்கின்ற திருக்குமாரரே!

         கோபத்துடன் எதிர்த்த அசுரர் திகைத்துவிழ, ஒரு கணப்பொழுதில் கொன்ற நல்ல ஒளிவீசும் வேற்படையை உடையவரே!

         தாமரையில் மகிழ்ச்சியுடன் தவம் புரியும் பிரமாவுக்கும், நாராயணருக்கும் அருள் புரிந்த, மதில் சூழ்ந்த திருப்பழநி மலையில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

         பெருமிதம் உடையவரே!

         பாரமும், அழுத்தமும், பருமனும், நெகழ்ச்சியும், எழுச்சியும், மணமும், இனிமையும், நுனியில் கருமையும், நெருக்கமும் மேரு மலைக்குச் சமானமும், உள்ளடக்கிய கபடமும், செழிப்பும், மிகுந்த ஆடம்பரமும், நல் ஆடை அணிகலன்களும், மகிழ்ச்சியும் உடைய தனபாரங்களைக் கொண்ட விலைமாதருடைய கண்களில் இன்பத்துடன் ஈடுபட்டு, அழலில் பட்ட மெழுகுபோல் பூதலத்தில் தவித்து, இழிந்த பிறவிக் கடலில் வீழ்ந்த அயர்ச்சியினால் சலித்து, பயித்தியம் பிடித்த மனதோடு தொடர்புடைய மூடன் என்று பெரியோர்கள் சிரிக்குமாறு மயக்கத்திற்கும், கோபத்திற்கும், பழிப்புக்கும் இணக்கம் உற்றவனாக அடியேன் ஆகலாமோ?
  
விரிவுரை

கனத்து இறுகி.........தனத்தியர் ---

இந்த ஆறு வரிகளில் மாதர்களின் தனபாரத்தினைப் பற்றி விளக்கமாக விளம்புகின்றார்.

பவக்கடல் உற்று அயர்வாலே ---

ஆன்மாக்களாகிய நாம், பிறவிப் பெருங்கடலுள் வீழ்ந்து பல்லூழி காலமாகப் பெருந்துன்பம் உறுகின்றோம். கரை காணாது கலங்குகின்றோம். முருகன் திருவடியாகிய தோணியைப் பற்றினால் முத்திக்கரை சேரலாம். அத்தோணிக்கு அப்பரம குருநாதனே மீகாமன்.

சுவர்க்க லோக மீகாம, சமஸ்த லோக பூபால,
 தொடுத்தநீப வேல்வீர,    வயலூரா”         ---  (அனித்தமான) திருப்புகழ்

சலித்த வெறித் துடக்கு மனம் ---

பிறவித் துயரால் மனம் அயர்ந்து வெறி பிடித்தது போல் வேதனை அடைகின்றது. இந்த வெறியை வென்றவரே மேன்மை யடைவர்.

வெறிவென்றவ ரோடுஉறும் வேலவனே”    ---  கந்தரநுபூதி

இடக்கன் எனச் சிரிக்க ---

நன்னெறி நில்லாது, இடக்கான கருமங்களையே புரியும் கீழ்மகனாகிய என்னை நல்லோர்கள் பரிகசித்து நகைப்பார்களே” என்று வருந்துகின்றார்.

இங்ஙனம் வேறு பாடல்களிலும் கூறுகின்றார்.

பார் நகைக்கும் ஐயா”           ---  (ஏதுபுத்தி) திருப்புகழ்

ஊரில் அனைவரும் நகைக்க”   ---  (மனையவள்)திருப்புகழ்

ஏசிடார்களோ பாச நாசனே”     ---  (அறுகுநுனி) திருப்புகழ்


மயல் சலத்தின் வசைக்கு இணக்கம் உறக்கடவேனோ ---

இணக்கம் அறிந்து இணங்கு” என்று கூறியவாறு, நல்லாரோடு இணங்காது, மயக்கத்துடனும், கோபத்துடனும் நான் இணங்கக் கூடாது. சலம்-கோபம்.

சலமான பயித்திய மாகித்          தடுமாறி”   ---  (நிலையாத) திருப்புகழ்

 
பொருப்பு அரசற்கு இரக்கமொடு உற்ற ---

மூவருக்கும் தேவருக்கும் எட்டாத முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான், மலையரசனாகிய இமவானை மாமனாராகக் கொண்டு கருணையினால் அவன் பால் சென்றருளினார்.

புலச்சி ---

புலம் - அறிவு மயமானவர். புலவர் என்ற சொல்லும் புலம் என்ற பகுதியடியாகப் பிறந்தது. புலவர்-அறிஞர் என்று பொருள். வித்-அறிவு. வித்வான்-அறிஞன். உமாதேவி ஞான பூரணி ஆதலால் புலச்சி என்றனர்.

சினத்தெதிர்.........சிதைத்திடும் ---

கோபத்துடன் எதிர்த்த அசுரர்கள் பாவக் கூட்டங்கள். வேல்-ஞானம். ஞானத்தினால் பாவக் கூட்டங்களைப் பரமன் ஒரு கணத்தில் அழித்தனர். பஞ்சுப் பொதியைத் தீப்பொறியால் எளிதில் எரிப்பதுபோல் என அறிக.

தவக் கமலத்து அயற்கும் அரிக்கு அருள் ---

தவமுடைய பிரம விஷ்ணுக்களுக்குப் பழநியில் முருகவேள் அருள் புரிந்தனர்.

திருமருவு புயன் அயனோடு அயிராவதக் குரிசில்
 அடி பரவு பழநிமலை”           ---  (குமர...குகனே) திருப்புகழ்

   
கருத்துரை

குகமூர்த்தியே! வள்ளி மணவாளா! பழநியப்பா! மாதர் வசப்படாது அடியேனைக் காத்தருள் செய்வீர்.

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...