பழநி - 0167. திடம் இலி சற்குணம் இலி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

திடமிலி சற்குணமிலி (பழநி)
  
பழநியப்பா!
நல் இயல்புகள் ஏதும் இல்லாத அடியேனுக்கும் திருவடிப் பேற்றைத் தந்து அருளவேண்டும்.

தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
     தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான


திடமிலிசற் குணமிலிநற் றிறமிலியற் ...... புதமான
     செயலிலிமெய்த் தவமிலிநற் செபமிலிசொர்க் ...... கமுமீதே

இடமிலிகைக் கொடையிலிசொற் கியல்பிலிநற் ...... றமிழ்பாட
     இருபதமுற் றிருவினையற் றியல்கதியைப் .....பெறவேணும்

கெடுமதியுற் றிடுமசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
     கிரணகுறைப் பிறையறுகக் கிதழ்மலர்கொக் ...... கிறகோடே

படர்சடையிற் புனைநடனப் பரமர்தமக் ...... கொருபாலா
     பலவயலிற் றரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


திடம்இலி, சற்குணம் இலி, நல் திறம் இலி, அற் ......புதம் ஆன
     செயல் இலி, மெய்த் தவம் இலி, நல் செபம் இலி சொர்க் ...... கமும் ஈதே

இடம் இலி, கைக் கொடைஇலி, சொற்கு இயல்பு இலி, நல் ...... தமிழ்பாட,
     இருபதம் உற்று இருவினை அற்று, இயல்கதியைப் .....பெறவேணும்.

கெடு மதி உற்றிடும் அசுரக் கிளை மடியப் ...... பொரும்வேலா!
     கிரண குறைப் பிறை,அறுகு, க்கு,   இதழ் மலர் கொக்கு ...... இறகோடே,

படர்சடையில் புனை, நடனப் பரமர் தமக்கு ...... ஒருபாலா!
     பலவயலில் தரள நிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.


பதவுரை


      கெடுமதி உற்றிடும் --- தீயவை செய்தற்கே தூண்டுகின்ற புத்தியை உடையவர்களாகிய,

     அசுர கிளை மடிய --- இராக்கதருடைய வம்சமானது அழியுமாறு,

     பொரும் வேலா --- போர் புரிந்த வேற்படையை உடையவரே!

      அறுகு --- அறுகம்புல்லையும்,

     அக்கு --- உருத்திராக்க மணியினையும்,

     இதழ் கிரண --- ஒளி பொருந்திய,

     குறை பிறை --- இளம் பிறைச் சந்திரனையும்,

     மலர் --- இதழ்களையுடைய மலர்களையும்,

     கொக்கு இறகோடு --- பறவையின் இறகுகளுடன்,

     படர் சடையில் புனை --- விரிந்த சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும்,

     நடன --- பஞ்சகிருத்ய ஆனந்தத் தாண்டவம் புரிபவரும் ஆகிய,

     பரமர் தமக்கு --- சிவபெருமானுக்கு,
    
     ஒரு பாலா --- ஒப்பற்ற புலவரே!

      பலவயலில் --- குறைபாடின்றி பலனைத் தரும் வயல்களில்,

     தரள நிறை --- முத்துக்கள் நிறைந்துள்ள,

     பழநிமலை பெருமாளே --- பழநிமலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

      திடம் இலி --- அடியேன் நினது திருவருள் நெறியில் உறுதியில்லாதவன்,

     சற்குணம் இலி --- உத்தம குணம் சிறிது மில்லாதவன்,

     நல்திறம் இலி --- நல்ல தொண்டுகளைச் செய்வதற்குரிய ஆற்றலற்றவன்,

     அற்புதம் ஆன செயல் இலி --- அடியார்களால் வியக்கப்டுகின்ற செயற்கு அருஞ் செயல் ஒன்றேனும் செய்யாதவன்;

     மெய் தவம் இலி --- மெய்யறிவோடு கூடிய தவத்தை ஒருபோதும் செய்யாதவன்,

     நல் செபம் இலி --- நன்மையை நல்கும் செபமும் செய்யாதவன்.

     சொர்க்கமும் மீது இடம் இலி --- சொர்க்க உலகத்திலும் இடம்பெறத் தகுதியற்றவன்,

     கை கொடையிலி --- (சுவர்க்கத்தில் இடம் பெறுவதற்காக) கரங்களால் ஒன்றும் கொடுத்து அறியாவதன்,

     நல்தமிழ் பாடசொற்கு இயல்பு இலி --- தேவரீரை நல்ல தமிழ்ப் பாமாலைகளால் பாடித் துதித்தற்கு சொல்வன்மை இல்லாதவன்,

(இத்தகைய ஒரு குணமுமில்லாத அடியேன்)

     இருபதம் உற்று --- தேவரீருடைய இரண்டு சரணார விந்தங்களை அடைந்து,

     இருவினை அற்று --- நல்வினை தீவினை என்கின்ற இரண்டையும், நீங்கி உய்ய,

     இயல் கதியை தரவேணும் --- மீட்டிங்கு வாராத முத்தி வீட்டைத் தந்தருளல் வேண்டும்.

பொழிப்புரை


         கொடிய செயல்களையே செய்தற்குத் தூண்டுகின்ற தீய புத்தியையுடைய வர்களாகிய அசுரர்களது குலம் அழிந்து ஒழியுமாறு போர்புரிந்த வேலாயுதரே!

         ஒளிர்கின்ற இளம்பிறைச் சந்திரன், அறுகு, உருத்திராக்கம், இதழ்களோடு கூடிய மலர்கள், பறவையின் இறகுகள் இவற்றை விரிந்த சடையில் தரித்துக் கொண்டிருப்பவரும் உயிர்களுடைய தகராகாசப் பெருவெளியில் இடையறாது ஆனந்த நடனஞ் செய்பவரும், பெரிய பொருளுமாகிய சிவபெருமானுடைய ஒப்பற்ற திருப்புதல்வரே!

         தவறாமல் நற்பலனைத் தரும் வயல்களில் (செந்நெல், கமுகு முதலியவை ஈனுகின்ற) முத்துக்கள் நிறைந்துள்ள பழநிமலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே!

         அடியேன் தேவரீரை யடைதற்குரிய திருவருள் நெறியில் உறுதி இல்லாதவன்; நற்குணம் இல்லாதவன்; திருவடித் தொழும்புகளைச் செய்தற்குரிய நல்ல திறமை அற்றவன்; உலகம் அதிசயப் படும்படியான செயற்கரிய செயல் ஒன்றேனும் செய்யாதவன்; உண்மை அறிவோடு கூடிய தவமும் செய்யாதவன்; முறைப்படி நல்ல செபமும் செய்து பழகாதவன்; சுவர்க்கலோகத்தில் இன்புறுதற்கு சிறிதும் இடம் பெறாதவன்; ஆங்கு இடம் பெறுவதற்கு இம்மையில் கையால் ஒன்றும் வறியவர்க்கு வழங்கி அறியாதவன்; தேவரீரை நல்ல தமிழ்ச் சொற்களைத் தொடுத்து பாக்களாகப் பாடித் துதிக்க சொல் திறமை இல்லாதவன்; இத்தகைய ஒருவிதமான நற்குணமும் இல்லாத அடியேன் தேவரீருடைய திருவடிகள் இரண்டையும் சார்ந்து இருவினைகளும் நீங்கப்பெற்றுய்ய உயர்ந்த முத்தி வீட்டைத் தந்தருளல் வேண்டும்.


விரிவுரை
  
திடம் இலி ---

சிவபூஜையிலும், சிவாலய வழிப்பாட்டிலும், சிவமந்திர உச்சாரணத்திலும் உறுதியான நியமமிருத்தல் வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் மனத்திற்கு உவந்த ஒவ்வொரு தொண்டினை மேற்கொண்டு, அதனை நியமமுடன் உறுதியாகச் செய்துவர வேண்டும். அத்தொண்டிற்கு இடையூறு வருங்கால் உயிரையும் பொருளாக எண்ணாது உறுதியோடு இருத்தல் வேண்டும்.

அறுபத்துமூன்று நாயன்மார்களும் ஒவ்வொரு நியமங்கொண்டு அதற்கு இடையூறு நேருங்கால் தமது உயிரையும் பொருள்படுத்தாது அதி தீவிர நிலையில் இருந்தார்கள். தாய நாயனார் நாள் தோறும் சிவபெருமானுக்கு “அமுதூட்டுவது” என்ற நியமங்கொண்டு, தாம் கொண்டு போன திருவமுது வயல் வெடுப்பில் சிந்தி விட, தம் நியமத்திற்கு இடையூறு வந்துவிட்டது என்று அஞ்சி அரிவாளால் தம் ஊட்டியை அரியத் தொடங்க, சிவபெருமானுடைய திருக்கரம் அவ் வயலிலிருந்து வெளிப்பட்டுத் தடுத்து ஆண்டு கொண்டது.

திருக்குறிப்புத் தொண்டநாயனார் அடியார்க்கு துணி வெளுத்துத் தரும் நியமங்கொண்டு, அதற்கு ஓர் இடையூறு உற்றபோது துணி ஒலிக்கும் பாறைமேல் தலையை மோதப் போகும் தருணத்தில் சிவபெருமானுடைய திருக்கரம் வெளிப் பட்டுத் தடுத்து அருளியது. இப்படி ஒவ்வொருவரும் தாம் கொண்ட நியமத்தில் மிகுந்த உறுதியுடன் இருந்து முத்தி பெற்றனர். அத்தகைய உறுதியே சாலச் சிறந்ததாம்.

சற்குணம் இலி ---

சற்குணமாவது இறைவனை ஏத்தி வழிபடுகின்ற திருவருட் குணமாம். அது முதலில் ஒருவனுக்கு உண்டாக வேண்டும்.

குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன்”  --- அப்பர்.

"குலத்து இடையும் கொடியன், ஒரு குணத்து இடையும் கொடியன்"    ---  திருவருட்பா.

நல் திறம் இலி ---

உயிர் ஈடேறுதற்குரிய சாதனங்களைச் செய்யும் திறமையில்லாதவன். அச் சாதனங்களாவன:- சிவாகம முறைப்படி திருநீறு தரித்தல், உருத்திராக்கம் பூண்டல், சிவபூஜை செய்தல், திருக்கோயில் வழிபாடு செய்தல், அடியாரை வணங்குதல், தோத்திரஞ் செய்தல் முதலியனவாம்

அற்புதமான செயல் இலி ---

உறுதியான நியமத்தால், சற்குணம் உற்று, நல் திறம் அடைவர். அதுகாலை உலகம் இறும்பூதுறும், அற்புதச் செயல்கள் நிகழும். மாதேவன் அடியார்கட்கு வாளால் மகவரிந்தூட்டலும், மாது சொன்ன சூளால் இளமை துறத்தலும், தொண்டு செய்து நாளாறில் கண்ணிடந்தப்பலும்; புனலில் ஏடெதிர் போகெனப் போதலும், கனலில் ஏடு இடப் பச்சென்று இருத்தலும், பழைய என்பு பொற்பாவை ஆதலும், ஆழி மிசைக் கன்மிதப்பில் கரை அடைதலும், மங்கைபாகனைத் தூது நடாத்தலும் ஆகிய பற்பல அற்புதங்கள் திருவருள் துணையால் நிகழும்.


மெய்த் தவம் இலி ---

உண்மைப் பொருளை அடைதற்கு உண்மை அறிவோடு கூடிய தவம் வேண்டற்பாலது. அத் தவமாவது உயிராவணம் இருந்து, இறைவனது திருவுருவத்தை உள்ளக்கிழியில் எழுதி, அகக்கண்ணாற் கண்டு, ஜீவபோதம் நீங்கி, மனம் அடங்கி சித்திர தீபம் போல் அசைவற்று நிற்பதாம்.

அங்ஙனம் நின்று நாள்தோறும் தவமிருப்பார் வேண்டிய வேண்டியாங்கு எய்துவர். அங்ஙனம் தவம்புரிவார் எல்லாவகைச் சித்தியும் பெறுவர். தம்தவத் திற்கு இடையூறு செய்தாரை யழித்தலும், நலம் புரிந்தாரை வாழ்வித்தலும் அவர்க்கு வெகு சுலபமாம்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம்
 ஈண்டு முயலப் படும்.”                  --- திருக்குறள்

ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும்
 எண்ணில் தவத்தான் வரும்,”                        --- திருக்குறள்

ஆதலால் தவமே மனிதனை உயர்த்துவது.

ஒரு தவமிலன்”           --- (உனைத்தினம்) திருப்புகழ்

நற் செபம் இலி ---

ஜபம் என்பது தவத்திற்கு முன் பழகவேண்டிய ஒன்றாம். ஜபத்தினால் வரும் பயன் தவம். தவமென்பது வரையறை இன்றி தியானித்தலாம். ஜபம் என்பது எண்ணிக்கைக்கு உட்பட்டதாம். தவத்தின் ஆரம்பநிலை ஜபம். முதன் முதலில் குருமூர்த்தியிடம் முறைப்படி பெற்ற மந்திரத்தைத் தனி இடத்து அமர்ந்து, வடக்கு நோக்கி, ஜபமாலை கரத்தில் கொண்டு, முறைப்படி ஜபம் செய்தல் வேண்டும்.

ஜபமாலையை சத்யோஜாத மந்திரத்தால் அபிடேகம் செய்து, வாமதேவ மந்திரத்தால் குச்சுப்புல் சாத்தி, இருதய மந்திரத்தால் கந்த மலர் சாத்தி, அகோர மந்திரத்தால் தூபதீபங்கொடுத்து, தற்புருட மந்திரத்தால் ஒற்றாடை சாத்தி, ஒவ்வொரு மணியையும் தனித்தனியே தொட்டு, ஈசான மந்திரத்தினாலே நூறு உருவில் குறையாமல் அபிமந்திரித்து, நாயகமணியைத் தொட்டு பஞ்சப் பிரம மந்திரத்தினாலே நூறு உருவில் குறையாமல் அபிமந்திரித்துப் பூசித்து எடுத்து ஜபம் பண்ணுவதற்கு வைத்துக் கொள்க.

இங்ஙனம் பூசித்து விதிப்படி கொள்ளப்பட்ட ஜபமாலை கொண்டு ஜபிக்கின்றிப் பெரும்பயன் எய்தாதெனச் சிவாகமங்கள் கூறுமெனவறிக.

ஜபமாலை 108 மணிகளால் அமைக்கவேண்டும்; 54 அல்லது 27 மணிகளாலும் அமைக்கலாம்.

விரலினும் விரலிறை 8 மடங்கு அதிகம் பலன்.

அதனினும் புத்திரதீப மணிமாலை 10 மடங்கு அதிகம்.

அதனினும் சங்குமணிமாலை 100 மடங்கு அதிகம்.

அதனினும் பவள மணிமாலை 1000 மடங்கு அதிகம்.

அதனினும் படிக மணிமாலை 10,000 மடங்கு அதிகம்.

அதனினும் முத்து மாலை 1,00,000 மடங்கு அதிகம்

அதனினும் தாமரை மணிமாலை 10,00,000 மடங்கு அதிகம்.

அதனினும் பொன்மணிமாலை 10,000,000 மடங்கு அதிகம்,

அதனினும் தருப்பைப் பவித்திர முடிச்சு மாலை 100,000,000  மடங்கு அதிகம்.

அதனினும் உருத்திராக்கமணி மாலையானது அநந்த மடங்கு அதிக பலன்.

உருத்திராக்க மணியைத் தரிசித்தவருக்கு இலக்ஷ மடங்கு பலன்.

பரிசித்தவருக்கு கோடி மடங்கு பலன்.

சரீரத்திலே தரித்தவருக்கு ஆயிரங்கோடி மடங்கு பலன்.

கையிற்கொண்டு ஜபித்தவருக்கு அநந்த மடங்கு பலன்.

உத்திராக்ஷ ஜபமாலை கோக்கும்போது முகம் முகத்தையும் அடி அடியையும் பொருந்தக் கோவைப் படுத்தவேண்டும். கயிறாயின் 27 இழையினால் ஆகியதாக இருத்தல் வேண்டும். உச்சியில் நாயகமணியைக் கோக்க வேண்டும். நாயகம் எனினும் மேரு எனினும் ஒன்றேயாம்.

ஜபிக்கும் போது நாயகமணிக்கு அடுத்த முகம் மேல் நோக்கிய மணியை முதலாகத் தொட்டு ஜபித்துப் பின்பு நாயகமணி கைப்பட்டதாயின், அதனைக் கடவாமல் திரும்ப மறித்து வாங்கி அதனைத் திரும்பக் கரத்தில் ஏறிட்டுச் செபிக்கவேண்டும். நாயக மணியைக் கடந்து செபிக்கில் பாவம் உண்டாகும்.

நாயகமணி இன்றி ஜபமாலையைச் செய்து கொண்டால் பாவமுமில்லை. பலனும் அதிகமில்லை என்று அறிக.

ஜபிக்கும்போது ஜபமாலை பிறர் கண்ணுக்குப் புலப்படில் ஜபங்கள் பயன்படாவாம்; ஆதலால் ஜபமாலையைப் பிறர் காணா வண்ணம் பரிவட்டத்தால் மூடிக்கொண்டு ஜபிக்கவேண்டும்.

ஜபம் பண்ணும்போது ஜபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படிற் பாவ முண்டாம்; ஆதலால் அதனை ஆராய்ந்து ஒன்றோடொன்று ஓசைப் படாமல் பைய ஜபிக்கவேண்டும்.

இத்தகைய ஜபம் மூன்று வகையாம். அவை உரை, மந்தம், மானதம் என்பன.

(1)   உரை என்பது அருகிலுள்ள பிறர் செவிக்குங் கேட்குமாறு பைய ஜபித்தலாம்.

(2)   மந்தம் என்பது தன் செவிக்கு மட்டும் கேட்குமாறு நாநுனி இதழைத் தீண்ட ஜபித்தலாம்.

(3)   மானதம் என்பது நாநுனி இதழைத் தீண்டிடாமல் ஒருமை பொருந்தி மனத்தினாலே ஜபித்தலாம்.

மந்தத்தை உபாம்சு எனவும் உறையை வாசகம் எனவுங் கூறுவர்.

மேற்கூரிய உரை, மந்தம், மானதம், என்ற மூவித ஜபங்களையும் செய்யும்போது முறையே தர்ச்சனி, மத்திமை, அநாமிகை (ஆள் காட்டு நடுமோதிர) விரல்களில் வைத்து ஜபிக்கவேண்டும். மூவிரலினும் வைத்து ஜபிக்கும்போது பெருவிரலால் தள்ளி ஜபிக்கவேண்டும். வாசகம் நூறுமடங்கு பலமும், மந்தம் பதினாயிர மடங்கு பலமும், மானதம் கோடி மடங்கு பலமும் தருமென்றறிக.

இவ்வாறு ஜபிக்குபோது அம் மந்திரத்துக்குரிய மூர்த்தியினது திருவடியை மனத்தில் தியானித்துக் கொண்டு ஜபிக்கவேண்டும். அப்படி தியானமின்றிச் செய்யும் ஜபம் குறைந்த பலனைத் தரும்.

சரீராதிகளை வெறுத்த முத்தி விருப்பு உடையவன், ஜெபமாலையை மேல் நோக்கித் தள்ளி ஜபிக்கவேண்டும். உலக போகங்களை வேண்டியன், கீழ் நோக்கித் தள்ளி ஜபிக்கவேண்டும்.

பிராணவாயுவானது சுழுமுனை நாடியில் ஓடும்போது ஜபிக்கில் புத்திமுத்தி இரண்டு முண்டாம்; இடை நாடியில் ஓடும்போது ஜபிக்கில் சுத்தமாய போகமுண்டாம்; பிங்கலை நாடியில் ஓடும்போது ஜபிக்கில் எப்போதும் அலையாத முத்தி வீடு உண்டாம்.

வீட்டிலிருந்து ஜெபிக்கின் ஒர் உருவேயாம்.

பசுக் கோட்டத்திலிருந்து ஜபிக்கின் ஒன்று நூறாகும்.

திருநந்தவனத்திலிருந்து ஜபிக்கின் ஒன்று ஆயிரமாகும்.

மலையின் மேலிருந்து ஜபிக்கின் ஒன்று பதினாயிரமாகும்.

நதிக்கரையில் இருந்து ஜபிக்கின் ஒன்று இக்ஷமாகும்.

சிவாலயத்தில் இருந்து ஜபிக்கின் ஒன்று கோடியாகும்.

சிவ சந்நிதியில் இருந்து ஜபிக்கின் ஒன்று அநந்தமாம்.

மரப்பலகை, வஸ்திரம், கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்ற தொன்றில் முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறக் காலை வைத்து, இரண்டு கண்களும் நாசி நுனியைப் பொருந்த இருந்து கொண்டு ஜபிக்கவேண்டும்.

சட்டையிட்டுக் கொண்டும், சிரத்தில் வேட்டி கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனந் தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய் கழுதை பன்றி முதலியவற்றையும் புலையர் முதலாயினோரையும் பார்த்துக்கொண்டும், ஜபஞ் செய்யலாகாது.

ஜபஞ்செய்யும்போது கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் முதலியவை ஆகாவாம்,

இன்னும் விரிக்கில் பெருகும். பிறவற்றைக் குரு முகத்தால் உணர்ந்து அநுஷ்டித்து உய்க.

சொர்க்கமுமீதே இடம் இலி ---

முற்பிறப்பில் புண்ணியஞ் செய்யார் இவ்வுலகத்திலும் குடியிருக்க வீடு இன்றி அலைவர். இப்பிறப்பிலும் மேற்கூறிய சிவநெறிகள் யாதாமொன்றிலேனும் சென்று பண்பு பெறாமையால் மறுமையிலும் புண்ணிய உலகத்தில் இடமின்றி நரகுறுவர்.

உம்-எச்ச உம்மை: ஏ-பிரிநிலை.

கைக் கொடை இலி ---

மேல் உலகில் இடம் பெறுவதற்கு இம்மையில் வறிஞர்களுக்கு வழங்குதல் வேண்டும்.


சொற்கு இயல்பு இலி நல் தமிழ் பாட ---

மொழிகளில் சிறந்தது தமிழ் என்பதைக் குறிப்பிடுவான் நற்றமிழ் என்றார். இறைவனை யடைவதற்கு எளிய மார்க்கம் பாடுவதேயாம்.

அளப்பில் கீதம் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே” --- அப்பர்.

பாதமலர் மீதில் போத மலர் தூவிப்
பாடும் அவர் தோழத் தம்பிரானே”    --- (ஆலவிழி) திருப்புகழ்

பாடும் பணியே பணியா அருள்வாய்”    --- கந்தர்அநுபூதி.

இதழ் என்பதை இதழி எனக்கொண்டு கொன்றை எனப்பொருள் கூறுவாரும் உண்டு. பலவயல் என்பதற்கு பலவிதமான வயல் எனவும் பொருள் கொள்ளலாம். அது சிறந்த பொருளன்று.

கருத்துரை

அசுரகுலகால! சிவகுமார! பழநியாண்டவ! உறுதி, சற்குணம், நல்லதிறம், அற்புதமான செயல், மெய்த்தவம், நல்லஜபம், சுவர்க்கத்தில் இடம், கொடை, தமிழ்பாடும் இயல்பு இவைகளில்லாத எளியேனுக்குத் தேவரீருடைய திருவடிப் பேற்றைத் தந்தருள வேண்டும்.

யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலர். ஆதலால் முருகவேள் பக்குவமற்றவர்க்கும் பரகதியைத் தருவர் என்பது குறிப்பு.

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...