அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
திமிர உததி (பழநி)
திருப்பழநி ஆண்டவரே!
அடியேனுக்கு மறுபிறப்பு இருந்தால்,
செவிடு, குருடு, அங்க ஈனம், வறுமை வேண்டாம்;
சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு
இவற்றைத் தந்தருள்வீர்.
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
திமிர வுததி யனைய நரக
செனன மதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு ...... மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் ...... வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெ லசுரர் தமது
தலைக ளுருள ...... மிகவேநீள்
சலதி யலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவு மமரர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
திமிர உததி அனைய நரக
செனனம் அதனில் ...... விடுவாயேல்,
செவிடு, குருடு, வடிவு குறைவு,
சிறிது மிடியும் ...... அணுகாதே,
அமரர் வடிவும், அதிக குலமும்,
அறிவும் நிறையும் ...... வரவேநின்,
அருளது அருளி எனையும் மனதொடு
அடிமை கொளவும் ...... வரவேணும்.
சமர முகவெல் அசுரர் தமது
தலைகள் உருள ...... மிகவே, நீள்
சலதி அலற, நெடிய பதலை
தகர, அயிலை ...... விடுவோனே!
வெமர அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே!
மிடறு கரியர் குமர! பழநி
விரவும் அமரர் ...... பெருமாளே.
பதவுரை
சமர முக வெல் --- போர்முகத்தில் வெற்றியையடையும் பெருந்திறலுடையவர்களாகிய,
அசுரர் தமது --- இராக்கதர்களுடைய,
தலைகள் உருள --- சிரங்களானவை அறுபட்டு மண்ணில் உருண்டு புரளுமாறும்,
மிகவே நீள் சலதி அலற --- மிகவும் நீண்டு விசாலமாகவுள்ள கடலானது கதறவும்,
நெடிய பதலை தகர --- உயர்ந்த (கிரௌஞ்ச) மலையானது உடையுமாறும்,
அயிலை விடுவோனே --- வேலாயுதத்தை விடுத்தருளியவரே!
வெம் அரவு அணையில் --- வெப்பத்தைத் தரும் ஆதிசேடனாகிய சர்ப்பசயனத்தின் மேல்,
இனிது துயிலும் --- இனிமையாக கண்வளரும்,
விழிகள் நளினன் மருகோனே --- தாமரை ஒத்த திருக்கண்களையுடைய நாராயண மூர்த்தியின் மருகரே!
மிடறு கரியர் குமர --- ஆலகால விடத்தையுண்டு அதனால் கண்டம் கரியராயுள்ள சிவபெருமானுடைய திருக்குமாரரே!
பழநி விரவும் அமரர் பெருமாளே --- பழனாபுரியில் எழுந்தருளியுள்ள தேவர்களுக்கெல்லாம் தலைவராகிய பெருமையின் மிக்கவரே!
திமிர உததி அனைய --- இருளோங்கியுள்ள சமுத்திரத்தை ஒத்து, ஒழியாது வந்து கொண்டிருக்கின்ற,
நரக ஜெனனம் அதனில் விடுவாயேல் --- நரக வேதனைக்கு நிகரான துன்பத்துடன் கூடிய மற்றொரு பிறப்பில் வினை வசப்படி அடியேனைப் பிறக்குமாறு விடுவீரேயானால்,
செவிடு --- செவிட்டுத் தன்மையும்,
குருடு --- கண்ணில்லாமையும்,
வடிவ குறைவு --- அங்கப் பழுதும்,
சிறிது மிடியும் --- தரித்திரம் அணுவளவேனும்,
அணுகாதே --- அடியேனுக்கு உண்டாகதவாறு செய்து,
அமரர் வடிவும் --- தேவர்களையொத்த சிறந்த வடிவும்,
அதிக குலமும் --- சிறந்த சைவாசார நெறி நின்ற நற்குலப் பிறப்பும்,
அறிவு நிறைவும் வரவே --- அறிவும் நிறைவும் அடியேனுக்கு உண்டாக அருளிச் செய்து,
நின் அருள் அது அருளி --- தேவரீருடைய திருவருளை அடியேனுக்குக் கொடுத்து,
எனையும் மனதொடு அடிமை கொளவும் வரவேணும் --- அடியேனையும் அடியேனுடைய மனத்தையும் உமது வசமாக்கித் தடுத்தாட்கொண்டு அடிமைகொள்ளும் பொருட்டு வந்தருள வேண்டும்.
பொழிப்புரை
போர்முகத்தில் எதிர்த்தவரை வெல்லும் திறல் உடைய அசுரர்களுடைய தலைகளானது அறுபட்டு மண்ணில் கிடந்து உருளுமாறு மிகவும் பரந்துள்ள பெருங்கடல் ஓ என்று ஓலமிட்டுக் கதறவும், நீண்ட கிரௌஞ்ச மலை இடிந்து ஒழியுமாறும் வேற்படையை விட்டருளியவரே!
வெம்மையுடன் கூடிய அரவணை மேல் இன்பமுடன் அறிதுயில் கொள்ளும் தாமரைக் கண்ணராம் தாமோதரரது மருகரே!
அகிலாண்டங்களும் உய்யுமாறு ஆலமுண்ட நீலகண்டப் பெருமானது திருக்குமாரரே!
பழநிமலையில் எழுந்தருளியுள்ள தேவர் தலைவரே!
அடியேன் செய்த தீவினையின் பயனாக இருள் நிறைந்த கடலை ஒத்து ஒழியாது வந்துகொண்டிருக்கும் நரக துன்பத்தை நல்கும் பிறப்பில் பிறக்குமாறு அடியேனை விடுவதாயிருந்தால், செவிடு, குருடு, அங்கவீனம், தரித்திரம் சிறிதும் இல்லாமலருளி, தெய்வசரீரமும் சிறந்த குலமும், அறிவும் நிறைவும் உண்டாக அநுக்கிரகம் புரிந்து, அடியேனையும் என் மனத்தையும் அடிமை கொண்டு தடுத்தாட் கொள்ள தேவரீர் வந்தருள வேண்டும்.
விரிவுரை
திமிர உததி ---
பிறவிக்கு கடலை உவமிப்பது ஆன்றோர் மரபு.
திமிரம் --- இருள்; கடல் கருநிறத்தால் இருண்டுள்ளது.
பிறவி அஞ்ஞானமாகிய இருளுடன் கூடியது. கடலில் எங்ஙனம் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டிருக்கின்றனவோ, அங்ஙனமே பிறப்புடன் கூடியவர்க்கு ஆசாபாசமாகிய அலைகள் வந்துகொண்டிருக்கின்றன. மீன்கள், நீரானைகள், மலைகள், திமிங்கலங்கள் முதலியவைகட்கு சமுத்திரம் உறைவிடமாயுள்ளது. அதுபோல் பலவித எண்ணமாகிய மீன்கள், மதமாகிய யானைகள், அகங்காரமாகிய மலைகள், பாவமாகிய திமிங்கலங்கள் முதலியவைகட்கு இந்தப் பிறப்பு உறைவிடமாயுள்ளது. கடல் கரையில்லாதிருப்பதுபோல் பிறப்பும் முடிவில் லாமலிருக்கின்றது. கணக்கற்ற சிறுமணல்களைக் கடல் தன்னகத்தே கொண்டிருப்பது போல் கணக்கற்ற யோனி பேதங்களை உடையது பிறப்பு.
நரக செனனம் ---
கருவுற்றது தொடங்கிக் காலன் கைப்பற்றும் வரை நரக வேதனைக்கு சமானமான துன்பமே மிகுந்தது பிறவி.
விடுவாயேல் ---
“பெம்மான் முருகன் பிறவான் இறவான்” என்றபடி பிறப்பிறப்பில்லா பெருந்தகையாகிய தேவரீரைச் சரண்புகுந்த அடியேனுக்கு மீண்டும் பிறவி வராது. ஒருகால் அடியேன் செய்த வினையின் காரணத்தால் மறுபிறப்பு உண்டாவதாயின், அப்பிறப்பு இத்தன்மைத்தாயமைதல் வேண்டும் என்று அருணகிரியார் அறுமுகனாரிடம் விண்ணப்பஞ் செய்கிறார்.
செவிடு ---
“சர்வேந்த்ரியாணாம் நயனம் ப்ரதானம்” என்ற வாக்கியப்படி கட்புலனே சிறந்த புலனாயிருக்க, சுவாமிகள் முதலில் செவிப் புலனைப் பற்றிக் கூறுவதன் காரணம் யாது என்னில், பரகதி செல்வோர்க்குத் துணைசெய்து நல்வழிப்படுத்துவது செவியேயாம். கடவுளின் அருட்டிறங்களை கேட்பதும், குருநாதனிடம் நாவுக் கருங்கலமாம் நமசிவாய வாதி பஞ்சாக்கர, சடக்கரமாதி மகா மந்திரங்களைக் கேட்பதும், செவியேயன்றோ? தூய இடம் அச்செவியே ஆதலின் மலஜலங்கழிக்கும்போது உபவீதத்தை அச்செவியில் சேர்த்து வைக்கின்றனர். தமிழ் வேதமாகிய தேவாரம் தொடங்கும்போதும் இச்செவியினையே முதற்கூறுவதாக “தோடுடைய செவியன்” என்று உபதேசிக்கிறது. ஓங்கார வடிவமாக விளங்குவதும் செவியேயாம். முதன் முதலில் செவிக்கே ஆபரணம் சூட்டி “கர்ணபூஷணம்” என்ற வைதிகச் சடங்கைச் செய்கின்றனர். இத்யாதி காரணங்களால் “செவிடு வேண்டா” என்றனர்.
குருடு ---
“கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க” என்ற தமிழ் மறையின்படி, இறைவனது அருள் திருமேனியைக் காண்டற்கு உதவுவன கண்களாதலால் செவிடுக்கு அடுத்தபடியாகக் “குருடு வேண்டா” என்றனர்.
சிறிது மிடியும் அணுகாதே ---
மிடி --- தரித்திரம். மிடி என்னாது, சிறிது மிடியும் என்றதனால் தரித்திரம் மிகக் கொடியது என்பதும், அது சிறிதிருக்கினும் வாழ்வது மிகக் கடினமென்பதும் வெளிப்படுகின்றது. தரித்திரம் என்பதை பாவி என்று வைக்கின்றார் மற்றோர் இடத்தில். தரித்திரமாகிய பாவி ஒருவனிடம் அணுகுவனேயானால், அழகு, செல்வம், நல்ல மனம், குணம், நற்குடி, குலம் முதலிய யாவும் அடியோடு குடி பெயர்ந்தேகும்.
வடிவம் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடிபோ கியவா!
அடி அந்தம் இலா அயில்வேல் அரசே!
மிடி என்று ஒருபாவி வெளிப் படினே --- கந்தர்அநுபூதி.
தாங்க ஒணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்,
வேங்கை போல் வீரம் குன்றும்,
விருந்தினர் காண நாணும்,
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,
புல்லருக்கு இணங்கச் செய்யும்,
ஓங்கிய அறிவு குன்றும்,
உலகெலாம் பழிக்கும் தானே. --- விவேக சிந்தாமணி.
ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும். விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.
திருவள்ளுவ நாயனார், இந்த வறுமை குறித்து, "நல்குரவு" என்று ஒரு அதிகாரத்தையே வைத்து உள்ளார். வறுமை என்று சொல்லப்படுகின்ற ஒற்றைத் துன்பத்துள், பல வகையாகச் சொல்லப்படுகின்ற துன்பங்கள் அனைத்தும் ஒருங்கு சேர்ந்து உண்டாகும் என்கின்றார்.
நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
என்பது திருக்குறள்.
வறுமை காரணமாக உணவு கிடைக்காமல், பசி நோய் வந்துவிட்டால், தன்மானமும், குடிப்பெருமையும், கல்வியும், கொடையும், அறிவு உடைமையும், தானமும், தவமும், பெருமையும், தொழிலில் ஈடுபடும் முயற்சியும், தேன் கசிவது போன்ற இனிமையான சொற்களை உடைய மங்கையர் மீது விருப்பம் கொள்ளுதலும், ஆகிய இவை பத்தும் இல்லாமல் போய்விடும் என்கின்றார் ஔவையார்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம். --- ஔவையார்.
குசேல உபாக்கியானம் சொல்வதைக் காண்போம்.....
தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்
சரீரத்தை உலர்தர வாட்டும்,
தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,
சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,
தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே
தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,
தரித்திரம் அவமானம் பொய் பேராசை
தரும் இதில் கொடியது ஒன்று இலையே.
வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். (ஆதலால்) இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.
தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,
சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,
தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்
தக்க பேர் ஆகரம் என்ப,
தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்
தழைவனம் தனக்கு அழல் தழலாம்,
தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்
தகையதை ஒழித்தல் நன்று ஆமே.
வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும்; சொல்லப்பட்ட பல எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும்; வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும் என்பர்; வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்; தரித்திரம் கொடிய வெற்றினும் கொடியது. அத்தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.
வறுமை ஆகிய தீயின்மேல் கிடந்து
நெளியும் நீள்புழு ஆயினேற்கு இரங்கி ...... அருள்வாயே.--- (அறிவிலாதவர்) திருப்புகழ்.
"கொடிது கொடிது வறுமை கொடிது" என்றார் ஔவையார்.
இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். --- திருக்குறள்
வறுமைதான் வந்திடின் தாய்பழுது சொல்லுவாள்;
மனையாட்டி சற்றும் எண்ணாள்;
வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத
வசனமாய் வந்துவிளையும்;
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது
சிந்தையில் தைரியமில்லை;
செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;
செல்வரைக் காணில்நாணும்;
உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்
உயிருடன் செத்தபிணமாம்;
உலகம் பழித்திடும்; பெருமையோர் முன்புசென்று
ஒருவர் ஒரு செய்திசொன்னால்,
மறுவசன முஞ்சொலார்; துன்பினில் துன்பம்இது
வந்து அணுகிடாது அருளுவாய்
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. --- குமரேச சதகம்.
இதன் பொருள் ---
மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே! வறுமை தான் வந்திடில் --- (ஒருவனுக்கு) வறுமை வந்தால், தாய் பழுது சொல்வாள் --- அன்னையும் குற்றம் கூறுவாள்; மனையாட்டி சற்றும் எண்ணாள் --- இல்லாளும் சிறிதும் மதியாள்; வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் --- வாயிலிருந்து வரும் மொழிகள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்; சிறுமையோடு தொலையா விசாரமே அல்லாது --- இழிவும் நீங்காத கவலையுமே அன்றி, சிந்தையில் தைரியம் இல்லை --- உள்ளத்தில் வீரம் இராது; செய்ய சபை தன்னிலே சென்றுவர வெட்கம் ஆம் --- நல்ல சபையிலே போய்வர நாணம் உண்டாகும்; செல்வரைக் காணில் நாணும் --- பணம் படைத்தோரைக் கண்டால் உள்ளம் வெட்கமடையும், உறுதிபெறு வீரமும் குன்றிடும் --- நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; விருந்துவரின் உயிருடன் செத்த பிணம்ஆம் --- விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; உலகம் பழித்திடும் --- உலகத்தார் இகழ்வர்; பெருமையோர் முன்பு சென்று ஒருவரொரு செய்தி சொன்னால் மறு வசனமும் சொல்லார் --- பெருமையுடையோர் எதிரில் போய், வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைக் கூறினால் மறுமொழியும் விளம்பார்; துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் --- துன்பத்திலே துன்பமான இவ்வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்செய்வாய்.
அமரர் வடிவு ---
தெய்வ வடிவம்; சுத்த தேகம்.
“இக்கடத்தை நீக்கி அக்கடத்து ளாக்கி
இப்படிக்கு மோட்சம் அருள்வாயே” --- (மச்சமெச்சு) திருப்புகழ்
அதிக குலம் ---
சைவாசார நெறிநின்று, சீரிய ஒழுக்க முடைமையே சிறந்த குலமாகும்.
இந்தப் பாசுரத்தில் பரிவர்த்தனையாக, செவிடு, குருடு, அங்கப்பழுது, தரித்திரம் இந்த நான்கும் வேண்டா; இவற்றிற்குப் பதிலாக அமரர் வடிவு, அதிக குலம், அறிவு, நிறைவு இவற்றை அருள்வீர் என்று நயம்பட வுரைக்கும் திறம் கூர்த்த மதியால் கண்டு உள்ளம் உவகை உறற்பாலது.
கருத்துரை
திருப்பழநி ஆண்டவா! அடியேனுக்கு மறுபிறப்பு உண்டாவதாயின் செவிடு, குருடு, அங்கவீனம், ஒறுமை இவை வேண்டாம்; சீரிய தேவசரீரம், சீரியகுலம், மெய்யறிவு, நிறைவு இவற்றைத் தந்தருள்வீர்.