அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தோகை மயிலே கமல
(பழநி)
பழநியப்பா!
நற்குணம் ஏதும்
இல்லாத நாயேன் கடைத் தேறத் திருவடியைத் தந்து அருள்.
தானதன
தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன ...... தனதான
தோகைமயி
லேகமல மானேயு லாசமிகு
காமதுரை யானமத வேள்பூவை யேயினிமை
தோயுமநு போகசுக லீலாவி நோதமுழு ......துணர்தேனே
சூதனைய
சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரெ னாணைமொழி
சோர்வதிலை யானடிமை யாவேனு மாணைமிக
......மயலானேன்
ஆகமுற
வேநகம தாலேவி டாதஅடை
யாளமிட வாருமென வேமாத ரார்களுட
னாசைசொலி யேயுழலு மாபாத னீதியிலி
......யுனையோதேன்
ஆமுனது
நேயஅடி யாரோடு கூடுகில
னீறுநுதல் மீதிடலி லாமூட னேதுமிலி
யாயினுமி யானடிமை யீடேற வேகழல்கள்
......தருவாயே
மாகமுக
டோடகில பாதாள மேருவுட
னேசுழல வாரியது வேதாழி யாவமரர்
வாலிமுத லானவர்க ளேனோர்க ளாலமுது
...... கடைநாளில்
வாருமென
வேயொருவர் நோகாம லாலவிட
மீசர்பெறு மாறுதவி யேதேவர் யாவர்களும்
வாழஅமு தேபகிரு மாமாய னாரினிய ...... மருகோனே
மேகநிக
ரானகொடை மானாய காதிபதி
வாரிகலி மாருதக ரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரு காவேரி சேவகன ...... துளமேவும்
வீரஅதி
சூரர்கிளை வேர்மாள வேபொருத
தீரகும ராகுவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயு தாவமரர்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தோகைமயிலே, கமல மானே, உலாசமிகு
காமதுரை ஆன மத வேள் பூவையே, இனிமை
தோயும் அநுபோக சுக லீலா விநோதம் முழுது
......உணர் தேனே,
சூது அனைய
சீத இள நீரான பாரமுலை
மீது அணைய வாரும், இதழ் தாரீர், என் ஆணைமொழி
சோர்வது இலை, யான்அடிமை ஆவேன் நும் ஆணை மிக ...... மயல் ஆனேன்,
ஆகம்
உறவே, நகம் அதாலே விடாத அடை-
யாளம் இட வாரும் எனவே, மாதரார்களுடன்
ஆசை சொலியே உழலும், மாபாதன், நீதி இலி, ...... உனை ஓதேன்,
ஆம்
உனது நேய அடியாரோடு கூடுகிலன்,
நீறு நுதல் மீது இடல் இலா மூடன், ஏதும் இலி,
ஆயினும் யான் அடிமை ஈடேறவே கழல்கள்
...... தருவாயே.
மாக
முகடோடு அகில பாதாளம் மேருவுடனே
சுழல, வாரி அதுவே தாழியா, அமரர்
வாலி முதல் ஆனவர்கள் ஏனோர்களால், அமுது ...... கடைநாளில்,
வாரும்
எனவே ஒருவர் காமல்நோ ஆலவிடம்
ஈசர் பெறுமாறு உதவியே, தேவர் யாவர்களும்
வாழ, அமுதே பகிரும் மாமாயனார் இனிய ...... மருகோனே!
மேகம்
நிகர் ஆன கொடை மால் நாயக அதிபதி
வாரி கலி மாருத கர பாரி மாமதன
வேள், கலிசை வாழவரு காவேரி சேவகனது
...... உளமேவும்
வீர!
அதிசூரர் கிளை வேர் மாளவே பொருத
தீர! குமரா! குவளை சேர் ஓடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயுதா! அமரர் ......
பெருமாளே.
பதவுரை
மாக முகடோடு --- அண்ட முகடுடன்,
அகில பாதாளம் --- பாதாளம் முழுவதும்,
மேருவுடனே சுழல --- மேருமலையுடன் சுழலவும்,
வாரி அதுவே தாழியா --- திருப் பாற்கடலே
பானையாகக் கொண்டு,
அமரர் --- தேவர்களும்,
வாலி முதலானவர்கள் ஏனோர்களால் --- வாலி
முதலியவர்களும் மற்றையோரும் கூடி,
அமுது கடை நாளில் --- அமிர்தம் கடைந்த நாளில்,
வாரும் எனவே ஒருவர் நோகாமல் --- வாருங்கள்
என்று கூறி ஒருவரும் மனம் நோவாத வண்ணம்,
ஆலவிடம் ஈசர் பெறுமாறு உதவியே --- ஆலகால
விடத்தைச் சிவபெருமான் பெறும்படி தந்து,
தேவர் யாவர்களும் வாழ அமுதே பகிரும் ---
வாழும் பொருட்டு தேவர் யாவர்களுக்கும் அமுதத்தைப் பங்கிட்டு வழங்கிய,
மாமாயனார் இனிய மருகோனே --- பெருமை மிகுந்த
திருமாலுக்கு இனிமையான மருகரே!
மேக நிகர் ஆன கொடை --- மேகத்துக்குச்
சமானமான கொடையாளியும்,
மால் நாயக அதிபதி --- பெருமை வாய்ந்த
தலைவர்கட்கெல்லாந் தலைவரும்,
வாரி கலி மாருத கர --- செல்வத்தின் கடலை
வாயுவேகமாத் தரும் கரத்தினரும்,
பாரி --- பாரி வள்ளலைப் போன்றவரும்,
மா மதனவேள் --- சிறந்த மன்மதவேள் போன்றவரும்,
கலிசை வாழவரும் --- கலிசை என்ற ஊரில்
வாழ்பவரும் ஆகிய,
காவேரி சேகவனது உளம் மேவும் வீர --- காவேரிச்
சேவகனுடைய திருவுள்ளத்தில் எழுந்தருளியுள்ள வீரமூர்த்தியே!
அதி சூரர் கிளை வேர் மாள --- மிகுந்த
சூராதி அவுணர்களுடைய சுற்றமெலாம் வேரொடு மாளும்படி,
பொருத தீர --- போர் புரிந்த தைரியமுள்ளவரே!
குமார --- குமாரக் கடவுளே!
குவளைச் சேர் ஓடை சூழ் கழனி --- குவளை
மலர் நிறைந்த ஓடை சூழ்ந்த வயல்களையுடைய,
வீரை நகர் வாழ் --- வீரை என்ற தலத்தில்
வாழ்கின்ற,
பழனி வேலாயுதா --- பழநிமேவும் வேலாயுதப்
பெருமானே!
அமரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும்
பெருமையிற் சிறந்தவரே!
தோகை மயிலே --- கலாபத்தையுடைய மயிலே!
கமல மானே --- தாமரையில் வாழும் இலக்குமியே!
உலாச மிகும் காம துரையான மதனவேள் பூவையே ---
உல்லாசம் மிகுந்த ஆசையை விளைவிக்கும் அரசனாகிய மன்மதனுக்குரிய நாகணவாய்ப் பறவை
போன்ற இரதியே!
இனிமை தோயும் --- இனிமை நிரம்பிய,
அநுபோக சுகலீலா விநோதம் முழுது உணர் தேனே ---
தொடர்ந்த அனுபவம் இன்ப விளையாடலின் விதங்கள் முழுதும் உணர்ந்தேனே,
சூது அனைய --- சூதுக்கருவி போன்றதும்,
சீத இளநீர் ஆன --- குளிர்ந்த இளநீர்
போன்றதும்,
பார --- கனமுள்ளதுமாகிய,
முலை மீது அணைய வாரும் --- முலையின் மீது
நான் தழுவும்படி வாரும்,
இதழ் தாரீர் --- உமது வாய் இதழைக் கொடுங்கள்,
என் ஆணை மொழி --- இது எனது ஆணை மொழி,
சோர்வது இலை யான் உமது அடிமை ஆவேன் ---
சோர்வே இல்லாமல் நான் உமக்கு அடிமையாக ஆவேன்,
உம் ஆணை --- உம் மீது ஆணை;
மிக மயல் ஆனேன் --- மிகவும் உம் மீது மயக்கம்
கொண்டுளேன்;
ஆகம் உறவே --- எனது உடம்பில் அழுந்திப்
பதியுமாறு,
நகம் அதாலே விடாத அடையாளம் இடவாரும் ---
உங்கள் நகத்தினால் என்றும் அழியாதபடி அடையாளத்தை இடவாரும்;
என --- என்றெல்லாம்,
மாதரார்களுடன் ஆசை சொலி உழலும் ---
பெண்களுடன் ஆசை வார்த்தைகளைக் கூறித் திரிகின்ற,
மா பாதகன் --- பெரிய பாதகன்;
நீதி இலி --- நீதி இல்லாதவன்;
உனை ஒதேன் --- தேவரீருடைய புகழை
ஓதுவதில்லாதவன்;
ஆம் உனது நேய அடியாரோடு கூடுகிலன் --- உமக்கு
ஆகிய அன்பு பூண்டவராகிய அடியவருடன் கூடாதவன்;
நீறு நுதல் மீது (இடல்) இலா மூடன் ---
திருவெண்ணீற்றை நெற்றியில் இடாத அறிவீனன்,
ஏதும் இலி --- நற்குணங்கள் ஒன்றுமில்லாதவன்;
ஆயினும் இயான் அடிமை --- இப்படிப்பட்டவன்
ஆனாலும் நாயேன் உமது அடிமையானவன்;
ஈடேறவே கழல்கள் தருவாயே --- கடைத்தேறும்படி
தேவரீரது திருவடிகளைத் தந்தருளுவீர்.
பொழிப்புரை
ஆகாய முகடு முதல் பாதாளம் வரையுள்ள
எல்லாமும், மேருமலையும், சுழலுமாறு பாற்கடலைத் தயிர்ப் பானையாகக்
கொண்டு, வாலி முதல் தேவர்கள்
யாவரும் அமுதம் கடைந்த காலத்தில்,
வாருங்கள்
என்று கூறி ஒருவரும் மனம் வருந்தாவண்ணம் ஆலகால விடத்தைச் சிவபெருமானுக்கு ஈந்து, தேவர் யாவர்களும் வாழும்படி அமுதத்தைப்
பங்கிட்டு வழங்கிய பெரிய மாயவராகிய நாராயணருடைய இனிமையான திருமருகரே!
மேகம் போன்ற பெருங்கொடை யினரும், பெருமை மிக்க தலைவர்கட்குத் தலைவரும், கடல்போன்ற தன் செல்வச் சிறப்பை
வாயு வேகமாகத் தரும் கரத்தினரும்,
பாரிவள்ளலைப்
போன்றவரும், சிறந்த மன்மதனைப்
போன்ற அழகினரும், கலிசை என்ற ஊரில்
வாழ்பவரும் ஆகிய காவேரிச் சேவகனார் என்ற மன்னர் பெருமானுடைய திருவுள்ளத்தில்
எழுந்தருளிய வீர மூர்த்தியே!
மிகுந்த சூராதியவுணர்களது சுற்றத்தினர்
அடியுடன் அழியுமாறு போர் புரிந்த தீர மூர்த்தியே!
குமாரக் கடவுளே!
குவளை மலர் நிறைந்த நீரோடை சூழ்ந்த
கழனிகளுடன், வீரை என்ற தலத்திலும்
பழநியம் பதியிலும் வாழ்கின்ற வேலாயுதக் கடவுளே!
தேவர்கள் போற்றும் பெருமித முடையவரே!
“கலாபமயில் போன்றவளே! தாமரை மலரில்
வாழும் இலட்சுமியே! உல்லாச மிகுந்த ஆசையைத் தரும் மன்மதன் மகிழும் இரதியே! இனிமை
நிரம்பிய தொடர்ந்த இன்ப சுக விளையாடலின் விதம் அனைத்தும் தெரிந்த தேனே! சூதுக்
கருவி போன்றதும், இளநீர்க்காய்
போன்றதும் கனமானதும் ஆகிய உமது தனத்தில் நான் தழுவிக்கொள்ள வாரும், இதழைக் கொடும்; எனது ஆணை; சொன்ன சொற்களைத் தவறமாட்டேன்; உமக்கு நான் அடிமை யாவேன், உம்மீது ஆணை. மிகவும் மையல் கொண்டேன்.
எனது உடலில் அழுந்துமாறு நகத்தால் அழியாதபடி அடையாளம் இடும்பொருட்டு வாரும்” என்று
கூறி மாதரார்களிடம் ஆசை மொழிகளைச் சொல்லி உழல்கின்ற பெரிய பாதகன்; நீதியில்லாதவன்; அன்புடைய தேவரீருடைய அடியார்களுடன்
கூடாதவன்; திருவெண்ணீற்றினை
நெற்றியில் இடாத மூடன்; நற்குணம் ஒன்றும்
இல்லாதவன்! எனினும் உமது அடிமையாகிய நாயேன் கடைத்தேறும்படி உமது திருவடிகளைத்
தந்தருள்வீர்.
விரிவுரை
தோகைமயிலே.....மாபாதகன் ---
இந்தத்
திருப்புழில் அருணகிரிநாதர், காமிகள்
விலைமகளிரிடம் எப்படி எப்படி உறவு கொண்டு உழல்கின்றார்கள் என்பதை ஒன்பது வரிகளில்
கூறி அங்ஙனம் உழல்வது பிழை, அதினின்றும் மீண்டு
உய்ய வேண்டும் என்று மன்பதைக்கு அறிவிக்கின்றார்.
உனை
ஓதேன்
:-
மாதரைப்
புகழ்ந்து அழியாமல், இறைவன் தந்த வாயால்
அப்பரமனை வாழ்த்தித் துதிசெய்ய வேண்டும்.
வாழ்த்த
வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த
சென்னியும் தந்த தலைவனை
சூழ்த்த
மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா
வினையேன் நெடுங்காலமே”. ---
அப்பர்
வணங்கத்
தலைவைத்து, வார்கழல்வாய் வாழ்த்தவைத்து,
இணங்கத்தன்
சீரடியார் கூட்டமும்வைத்து, எம்பெருமான்
அணங்கொடு
அணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப்
பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. ---
திருவாசகம்
ஆம்
உனது நேய அடியாரோடு கூடுகிலன் ---
எத்தனை
குணக் கேடர்களாக இருந்தாலும் தொண்டரோடு கூடிவிட்டால், அத்தனை குணக் கேடுகளும் நீங்கப் பெற்று
உத்தமர்களாக ஆவார்கள்.
நீறுநுதல்
மீது இடல் இலா மூடன் ---
திருநீறு
மனித குலத்தை உய்விக்கும் புனிதமான பொருள். வெண்மையான ஒரு கடிதத்தை அல்லது
வெண்மையான ஒரு துணியை நெருப்பில் இட்டால் உடனே அவை வெந்து கருமையாகி விடுவதைக்
காண்கிறோம். நெருப்பிலிட்ட யாவும் கரியாகி விடும். ஆனால் கருமையாகவுள்ள சாணத்தின் உருண்டை
மட்டும் நெருப்பில் இட்டவுடன் வெண்மையாகி விடுகின்றது. எனவே கருமையான அறியாமை
நிறைந்த உள்ளத்தை பரிசுத்தமாக வெண்மையுறச் செய்வது திருநீறு.
உள்ளத்தின்
தூய்மையைத் தெள்ளிதின் உணர்த்தும் சின்னம் திருநீறு. இதன் பெருமையை வேதாகமங்கள்
யாவும் வியந்து ஓதுகின்றன.
கடவுள்
நீறிடாக் கடையரைக் கண்காள்,
கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக,
அடவுள்
மாசுதீர்த்து அருள்திரு நீற்றை
அணியும் தொண்டரை அன்புடன் காண்க,
தடவும்
இன்னிசை வீணைகேட்டு அரக்கன்
தனக்கு வாளொடு நாள்கொடுத் தவனை
நடவும்
மால்விடை ஒற்றியூர் உடைய
நாதன் தன்னைநாம் நண்ணுதற் பொருட்டே.
போற்றி
நீறிடாப் புலையரைக் கண்டால்
போக போகநீர் புலம்இழந்து அவமே,
நீற்றின்
மேனியர் தங்களைக் கண்டால்
நிற்க நிற்கஅந் நிமலரைக் காண்க,
சாற்றின்
நன்னெறி ஈதுகாண் கண்காள்
தமனி யப்பெரும் தனுஎடுத்து எயிலைக்
காற்றி
நின்றநம் கண்நுதற் கரும்பைக்
கைலை ஆளனைக் காணுதற் பொருட்டே.
தெய்வ
நீறிடாச் சிறியரைக் கண்டால்
சீறு பாம்புகண்டு எனஒளித்து ஏக,
சைவ
நீறிடும் தலைவரைக் கண்காள்
சார்ந்து நின்றுநீர் தனிவிருந்து உண்க,
செய்ப
வன்செய லும்அவை உடனே
செய்விப் பானுமாய்த் தில்லைஅம் பலத்துள்
உய்வ
தேதரக் கூத்துஉகந்து ஆடும்
ஒருவன் நம்உளம் உற்றிடல் பொருட்டே.
தூய
நீறிடாப் பேயர்கள் ஒன்று
சொல்லு வாரெனில் புல்லென அடைக்க,
தாய
நீறிடும் நேயர்ஒன்றுஉரைத்தால்
தழுவி யேஅதை முழுவதும் கேட்க,
சேய
நன்னெறி அணித்தது செவிகாள்
சேர மானிடைத் திருமுகம் கொடுத்து
ஆய
பாணற்குப் பொன்பெற அருளும்
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
நல்ல
நீறிடா நாய்களின் தேகம்
நாற்றம் நேர்ந்திடில் நண்உயிர்ப்பு அடக்க,
வல்ல
நீறிடும் வல்லவர் எழின்மெய்
வாசம் நேரிடில் மகிழ்வுடன் முகர்க,
சொல்ல
ரும்பரி மளந்தரும் மூக்கே
சொல்லும் வண்ணம்இத் தூய்நெறி ஒன்றாம்
அல்லல்
நீக்கிநல் அருட்கடல் ஆடி
ஐயர் சேவடி அடைகுதற் பொருட்டே.
அருள்செய்
நீறிடார் அமுதுஉனக்கு இடினும்
அம்ம லத்தினை அருந்துதல் ஒழிக,
தெருள்கொள்
நீறிடும் செல்வர்கூழ் இடினும்
சேர்ந்து வாழ்த்திஅத் திருஅமுது உண்க,
இருள்செய்
துன்பநீத்து என்னுடை நாவே
இன்ப நல்அமுது இனிதுஇருந்து அருந்தி
மருள்செய்
யானையின் தோலுடுத்து என்னுள்
வதியும் ஈசன்பால் வாழுதற் பொருட்டே.
முத்தி
நீறுஇடார் முன்கையால் தொடினும்
முள் உறுத்தல்போல் முனிவுடன் நடுங்க,
பத்தி
நீறிடும் பத்தர்கள் காலால்
பாய்ந்து தைக்கினும் பரிந்துஅதை மகிழ்க,
புத்தி
ஈதுகாண் என்னுடை உடம்பே
போற்ற லார்புரம் பொடிபட நகைத்தோன்
சத்தி
வேற்கரத் தனயனை மகிழ்வோன்
தன்னை நாம்என்றும் சார்ந்திடற் பொருட்டே.
இனிய
நீறுஇடா ஈனநாய்ப் புலையர்க்கு
எள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக,
இனிய
நீறிடும் சிவன்அடி யவர்கள்
எம்மைக் கேட்கினும் எடுத்துஅவர்க்கு ஈக,
இனிய
நன்னெறி ஈதுகாண் கரங்காள்
ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க்கு
இனிய
மால்விடை ஏறிவந்து அருள்வோன்
இடங்கொண்டு எம்முளே இசைகுதற் பொருட்டே.
நாட
நீறுஇடா மூடர்கள் கிடக்கும்
நரக இல்லிடை நடப்பதை ஒழிக,
ஊடல்
நீக்கும்வெண் நீறிடும் அவர்கள்
உலவும் வீட்டிடை ஓடியும் நடக்க,
கூட
நன்னெறி ஈதுகாண் கால்காள்
குமரன் தந்தைஎம் குடிமுழுது ஆள்வோன்
ஆட
அம்பலத் தமர்ந்தவன் அவன்தன்
அருட்க டல்படிந் தாடுதற் பொருட்டே.
நிலைகொள்
நீறுஇடாப் புலையரை மறந்தும்
நினைப்பது என்பதை நெஞ்சமே ஒழிக,
கலைகொள்
நீறுஇடும் கருத்தரை நாளும்
கருதி நின்றுஉளே கனிந்துநெக்கு உருக,
மலைகொள்
வில்லினான் மால்விடை உடையான்
மலர்அ யன்தலை மன்னிய கரத்தான்
அலைகொள்
நஞ்சமு தாக்கிய மிடற்றான்
அவனை நாம்மகிழ்ந் தடைகுதற் பொருட்டே.
என்கின்றார்
இராமலிங்க அடிகளார்.
ஆதலால்
அரும்பெரும் பேறு எனத் திகழும் திருநீற்றினை சைவசயமத்திற் பிறக்கும் தவம்
புரிந்தும் இடாத பாவிகள் மூடர்கள் ஆவார்கள்.
“திருவெண்ணீறு இடா
மூடர்”
என்று
மற்றொரு திருப்புகழிலும் கூறுகின்றனர்.
ஏதுமிலி ---
இந்த
சொல் மிகவும் உருக்கத்தைத் தருகின்றது. “சுவாமி ஒரு நற்குணமும் இல்லாதவன்”
என்கிறார். “மரம்; இலை, மலர், காய், கனிகளை உதவுகின்றது. இடிந்த சுவர், மாடு முதலிய விலங்கினங்கட்குத் தினவு
தீர்க்க உதவுகின்றது. மாடு பொதி சுமக்கின்றது; குதிரை வண்டியிழுக்கின்றது; உடைந்த கண்ணாடித் துண்டுகளைக் கூட பின்புறம்
சுவர்மீது வைத்துக் கள்வர் ஏறிவராத வண்ணம் பாதுகாவலுக்குப் பயன்படுகிறது. கிழிந்த
கந்தல் விளக்கு, துடைக்க உதவுகின்றது.
உடும்புத் தோல் கஞ்சிராவுக்கு உதவுகின்றது. கிழிந்த காகிதம் பற்பொடி மடிக்க
உதவுகின்றது. சாணம் வயலுக்கு உரமாகின்றது. துரும்பு கூடப் பல்குத்த உதவுகின்றது.
இப்படி எல்லாம் ஒவ்வொன்றுக்கும் உதவுகின்றன. ஆறறிவு படைத்த நான் ஒன்றுக்கும்
உதவாமல் ஒரு நற்குணமும் இன்றி இருக்கின்றேன்” என்று அடிகளார் வருந்துகின்றார்.
மாகமுகடோடு
அகில.....அமுதுகடை நாளில் ---
நரை, திரை, மூப்பு, மரணம் என்றவற்றைத் தவிர்க்கும்
பொருட்டுத் தேவர்கள் அமிர்தம் கடைந்தார்கள். பன்னாள் கடைந்து அயர்ந்தபொழுது வாலி
என்ற வானர வேந்தன் துணை செய்து பாற்கடலை மிக்க மிடுக்குடன் கடைந்தான்.
அப்போது
எதிர்பார்த்த அமிர்தத்திற்கு எதிரிடையாக, ஆலகால
நஞ்சு அதிக பயங்கரமாகத் தோன்றியது. திருமால் சிவபெருமானை வேண்டி, எங்களுக்குத் தேவரீர்தானே தலைவர், அடிமைகளாகிய நாங்கள்
செய்த முயற்சியில் முதலில் விளைந்த இதனை முதன்மையான தேவரீர் பெறவேண்டும் என்று
கூறி அவரிடம் ஈந்தனர். பின்னர் தோன்றிய அமிர்தத்தை திருமால் தேவர்கட்குப்
பங்கிட்டு உதவினார்.
மேக
நிகரான கொடை
---
அருணகிரிநாதருடைய
காலத்தில், அவருக்குப் பரம
நண்பராக இருந்தவர் காவேரிச் சேவகன் என்ற குறுநில மன்னர். இவருடைய வரலாறு ஒன்றும்
விளக்கமாகத் தெரியவில்லை. முருகனையே பாடும் நியமம் பூண்ட அருணகிரிநாதர் தமது
ஞானமயமான திருப்புகழில் இவரை இப்படி மிகச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றார்.
இதனால் இவர் மிகச் சிறந்தவர் எனத் தெரிகின்றது. மேகம் போன்று கைமாறு கருதாது
பெரும் அளவில் வறியார்க்கு வழங்குபவர்.
மால்
நாயக அதிபதி
---
மால்-பெருமை, பெருமையுடைய அரசர்க்கும் அரசராம்
சிறப்புடையவர்.
வாரி
கலி மாருத கரோபாரி ---
வாரி-செல்வம்.
கலி-தழைப்பு; கடல்
செல்வக்கடலை
வாயு வேகமாகத் தரும் கரதலத்தையுடையவர் பாரிக்குச் சமானமானவர்.
மாமதன
வேள்
---
பெருமையுடைய
மன்மதவேளுக்கு நிகரான அழகுடையவர். எனவே இவர் கொடை, பதவி, அழகு, பக்தி முதலிய எல்லா நலன்களுக்கும்
உறைவிடம் ஆனவர், சிறந்த முருகபக்தர்,
கலிசை
வாழவரு காவேரிசேவகனது உளம் மேவும் வீரா ---
இவர்
வாழ்ந்த ஊர் கலிசை. இவருடைய இயற்பேர் காவேரிச் சேவகன். வீரை என்ற ஊரில்
பழநியாண்டவருடைய திருவுருவத்தை வழிபட்டனர். இதனால் இவரை அருணகிரிநாதர் அதிகம்
பாராட்டுகின்றனர்.
சுந்தரமூர்த்திநாயனாருக்குச்
சேரமான் பெருமாள் நண்பராக இருப்பதுபோல், அருணகிரிநாதருக்கு
இந்தக் காவேரிச்சேவகனார் இனிய நண்பராக விளங்கினார்.
இவருடைய
திருவுள்ளக் கோயிலில் முருகவேள் உறைகின்றார் என்று சுவாமிகள் அழகாக
வியந்துரைக்கின்றார்.
கருத்துரை
திருமால்
மருகா. பழநியப்பா! அடியேன் ஈடேற அருள்புரிவாய்.