பழநி - 0170. நாதவிந்து கலாதீ




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாத விந்து (பழநி)

பழநியப்பா! 
உன்னைப் பலமுறையும் வணங்குகின்றேன்.
அருள் புரிவாய்.


தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்துக லாதீ நமோநம
     வேத மந்த்ரசொ ரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்தம யூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்டவி நோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈத லும்பல கோலா லபூஜையும்
     ஓத லுங்குண ஆசா ரநீதியும்
          ஈர முங்குரு சீர்பா தசேவையு ...... மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
     சோழ மண்டல மீதே மனோகர
          ராஜ கெம்பிர நாடா ளுநாயக ...... வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதே றிமாகயி ...... லையிலேகி

ஆதி யந்தவு லாவா சுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நாத விந்து கலா ஆதீ! நமோ நம,
     வேத மந்த்ர சொரூபா! நமோ நம,
          ஞான பண்டித ஸாமீ! நமோ நம, ...... வெகுகோடி

நாம சம்பு குமாரா! நமோ நம,
     போக அந்தரி பாலா! நமோ நம,
          நாக பந்த மயூரா! நமோ நம, ...... பரசூரர்

சேத தண்ட விநோதா! நமோ நம,
     கீத கிண்கிணி பாதா! நமோ நம,
          தீர சம்ப்ரம வீரா! நமோ நம, ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ! நமோ நம,
     தூய அம்பல லீலா! நமோ நம,
          தேவ குஞ்சரி பாகா! நமோ நம, ...... அருள்தாராய்.

ஈதலும், பல கோலால பூஜையும்,
     ஓதலும், குண ஆசார நீதியும்,
          ஈரமும் குரு சீர்பாத சேவையும் ...... மறவாத,

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை
     சோழ மண்டல மீதே, மனோகர!
          ராஜ கெம்பிர நாடு ஆளும் நாயக! ...... வயலூரா!

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
     சேர்தல் கோண்டு, வரோடே முன் நாளினில்
          ஆடல் வெம்பரி மீது ஏறி, மா கயி ...... லையில் ஏகி

ஆதி அந்த உலா ஆசு பாடிய
     சேரர் கொங்கு, வைகாவூர் நல் நாடு அதில்
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.


 பதவுரை


      ஈதலும் --- இரப்பவர்க்குக்கு இல்லை என்னாது ஈந்து உதவி செய்யும் ஈகையும்,

     பல கோலால பூசையும் --- பற்பலவாறு கோலாகலமாக (ஆடல் பாடல் விழா மேளதாளம் முதலியவற்றுடன் கூடி)ச் செய்யும் பூஜையும்,

     ஓதலும் --- வேதம் ஆகமம் முதலிய முத்தி நூல்களையும் தேவாரம், திருவாசகம் முதலிய முத்தி நூல்களையும் ஓதியுணருந் தன்மையும்,

     குண ஆசார நீதியும் --- நற்குணம் நல்லொழுக்கம் சிவநெறியில் நிற்கும் நன்னிலை இவைகளும்,

     ஈரமும் --- கருணையும்,

     குரு சீர்பாத சேவையும் --- சற்குரு மூர்த்தியினுடைய சிறந்த சரணாரவிந்தங்களைச் சேவித்து தொண்டு புரிதல் முதலிய நன்னெறிகளை,

    மறவாத --- ஒரு காலத்திலும் மறவாத தன்மையுடைய நல்லவர்கள் வாழுகின்றதும்,

    ஏழ்தலம் புகழ் --- ஏழு தீவினர்களாலும் புகழப்படுகின்ற, 

     காவேரியால் விளை --- காவேரி நதி பாய்தலினால் வளம்பெருவதுமாகிய,

     சோழ மண்டலமீது --- சோழ மண்டலத்தின் கண்,

     மனோகர --- மனத்தைக் கவரும் வளப்பத்தையுடையதான,

     ராஜ கெம்பீர நாடு ஆளும் நாயக --- ராஜ கெம்பீர வளநாட்டினை ஆளுகின்ற தலைவரே!

      வயலூரா! --- (அந்த ராஜ கெம்பீர வளநாட்டின் மத்தியிலுள்ள) வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளவரே!

      ஆதரம் பயில் --- அன்பு பொருந்திய,

     ஆரூரர் தோழமை சேர்தல் கொண்டு --- சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய நட்பை மிகவும் நெருக்கமாகக் கொண்டு,

     அவரோடே --- அவா, (ஆரூரர்) திருக்கைலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே,

     முன் நாளினில் --- முன்னொரு நாளில்,

     ஆடல் வெம் பரிமீது ஏறி --- ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய புரவியின் மீது ஏறிக் கொண்டு,

     மா கயிலையில் ஏகி --- பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று,

     ஆதி அந்த உலா ஆசு பாடிய --- அந்தாதியாகவுடைய ஆதி கைலாச உலாவை ஆசு கவியாகப் பாடியருளிய,

     சேரர் கொங்கு வைகாவூர் ந(ன்) நடாதில் --- சேரமான் பெருமாள் நாயகர் அரசு செய்யும் பாக்கியத்தைப் பெற்ற கொங்கு தேயத்திலுள்ள நல்ல காவூர் நாட்டின் கண் விளங்கும்,

     ஆவினன் குடி வாழ்வான --- திருவாவினன் குடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள,

     தேவர்கள் பெருமாளே --- தேவர்களுக்கெல்லாந் தேவராகிய பெருமையுடையவரே!

      நாத விந்து கலா ஆதீ --- நாதம் விந்து கலை என்பவைகட்கு முதலாக நிற்பவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

      வேத மந்த்ர சொரூபா --- வேத மந்திரங்களின் வடிவமாக விளங்குபவரே! 
நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

      ஞான பண்டித ஸ்வாமீ --- ஞான வல்லுநரே, நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         வெகு கோடி நாம சம்பு குமார --- அநேக கோடி திருநாமங்களையுடைய சிவ பெருமானது திருக்குமாரரே! நமோநம --- நமஸ்கராம் நமஸ்காரம்,

         போக அந்தரி பாலா --- நலன்களை அனுபவிக்கச் செய்யும் போக சத்தியாகிய உமா தேவியாரது புதல்வரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         நாக பந்த மயூரா --- கால்களில் பாம்புகள் சுற்றப்பட்டுள்ள மயில்வாகனத்தை யுடையவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         பர சூரர் சேததண்ட விநோதா --- பகை கொண்டு வந்த சூராதியவுணர்களைத் தண்டித்து சேதித்தருளிய திருவிளையாடல்களைப் புரிந்தவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         கீத கிண் கிணி பாதா --- இனிய நாதத்தோடு கூடிய சதங்கைகளை யணிந்துள்ள திருவடியுடையவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         தீர --- தைரியத்தை உடையவரே! சம்ப்ரம --- சம்பிரமுடையவரே! வீரா --- சிறந்த வீரரே! நமோநம --- நமஸ்காரம், நமஸ்காரம்,

         கிரி ராஜ --- மலைகளுக்கு நாயகரே! தீப மங்கள ஜோதீ --- ஞானச் சுடர்விளக்காகிய அருட்பெருஞ் ஜோதியே! நமோநம --- நமஸ்காரம், நமஸ்காரம்,

         தூய அம்பல லீலா --- பரிசுத்தமாகிய தகராகாயத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிந்தருள்பவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         தேவ குஞ்சரி பாகா --- தெய்வயானை அம்மையாரை ஒரு பாகத்தில் உடையவரே! நமோநம --- நமஸ்காரம் நமஸ்காரம்,

         அருள் தாராய் --- அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளைத் தந்து அருளவேண்டும்.

பொழிப்புரை

         இல்லை என்று இரக்கும் இரவலருக்கு இல்லை என்னாத ஈகையும், பற்பல விதமான சம்பிரமத்தோடு கூடிய பூசையும், வேதாகமாதி அறிவு நூல்களையும், தேவாரம் திருவாசகம் முதலிய முத்தி நூல்களையும் ஓதி உணர்தலும் நற்குணங்களும், நல்லொழுக்கமும், நல்ல நீதிநெறிகளும் உயிர்களிடத்தல் இரக்கமும், குருநாதனுடைய திருவடித் தாமரையை மறவாத தன்மையுமாகிய சிறந்த நற்குணங்களை உடையவர் வாழ்கின்றதும், சத்த தீவினர்களால் புகழப்படுகின்றதும் காவிரி நதியால் வளமுற்று விளங்குவதுமாகிய சோழ மண்டலத்தில், மனதைக் கவரும் வனப்புடைய ராஜகெம்பீர வளநாட்டினை அரசாளும் நாயகரே!

         அந்நாட்டில் மிகவும் சிறப்புடன் விளங்கும் வயலூரில் வாழ்பவரே! தம்மிடத்து மிகவும் அன்பு பொருந்திய சுந்தரமூர்த்தி சுவாமிகளது நட்பைப் பெற்று, அப்பெருந்தகையார் திருக்கயிலாயத்திற்குப் புறப்பட்டபோது அவருடனேயே, முன்னாளில் ஆடுவதும் போருக்குரிய உக்கிரமுடையதுமாகிய குதிரையின் மீது ஏறி, பெருமை பொருந்திய திருக்கைலாய மலைக்குச் சென்று, திருக்கைலாய ஆதி உலா என்னும் பிரபந்தத்தை அங்கு ஆசுகவியாகப் பாடியருளிய சேரமான் பெருமான் நாயனார் அரசு செய்யும் பேற்றைப் பெற்ற கொங்கு தேயத்தில், நல்ல காவூர் நாட்டிலுள்ள திருவாவினன்குடி என்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளவரே!

     தேவர்கள் பெருமாளே!

         நாதம் விந்து கலை என்பவைகட்கு முதல்வரே! நமஸ்காரம் நமஸ்காரம்,

         வேதமந்திர சொரூபரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         ஞான பண்டிதரே! நமஸ்காரம் நமஸ்காரம்,

         அநேக கோடி திருநாமங்களை யுடையவரும், சுககாரணருமாகிய சிவபெருமானுடைய திருக்குமாரரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         வினைப் பயன்களைத் துய்க்கச் செய்யும் போகசக்தியாகிய சிவகாமி அம்மையாரது திருப்புதல்வரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         கால்களில் அரவங்கள் சுற்றப்பட்டுள்ள மயிலை வாகனமாக உடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         பகைத்து வந்த சூரபன்மன் முதலிய அசுரசேனைகளை அழித்துத் தண்டித்தருளிய திருவிளையாடலைப் புரிந்தவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         இனியவொலியையுடைய தண்டை சதங்கைகளை யணிந்துள்ள திருவடிக் கமலங்களை யுடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         தீரமும் சம்பிரமும் வீரமு முடையவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         மலைகளுக்கு நாயகரே! ஞான தீபகமாகத் திகழ்பவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         அருள் வெளியில் ஆனந்தக் கூத்தாடுபவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         தெய்வயானை யம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே! நமஸ்காரம் நமஸ்காரம்.

         அடியேனுக்குத் தேவரீருடைய திருவருளைத் தந்தருள்வீர்.


விரிவுரை

நாத விந்து கலா ஆதீ ---

இறைவனது சக்தி அளவிடப்படாத நுண்மையும் ஆற்றலும் வாய்ந்ததாதலின், அஃது இவ்வுலகங்களுக்கு முதலான அசுத்தமாயை நேரே சென்று பொருந்தி இயக்குமாயின், அவ்வசுத்த மாயை, அச்சக்தியின் வேகத்தைத் தாங்க மாட்டாமையின் இவ்வுலகங்கள் தோன்றாவாம்; அது பற்றி அச்சக்தி நுண் பொருள் இயல்பில் ஒருவாற்றால் தன்னோடு ஒத்தும், பருப்பொருள் இயல்பில் ஒருவாற்றால் அசுத்த மாயையோடு ஒத்தும், நடுநிலையாய் நிற்கும் சுத்த மாயை எனப்படும் விந்து சக்தியோடு நேரே பொருந்தி நின்று, தனது வேகத்தை அதன் வாயிலாக அசுத்த மாயை தாங்கும் அளவாக வைத்துத் தணிவுப் படுத்தி, பின்னர் அவ்வசுத்த மாயையை இயக்கி, இவ்வுலகங்களையும் இவ்வுலகத்துப் பல் பொருள்கைளையும் தோற்றுவிக்கும். எனவே சிவசக்தி நேரே சென்று இயைந்து நிற்குமிடம் விந்து என்பது அறியப்படுகிறது.

இனிச் சிவசக்தியால் உந்தப்பட்ட விந்து மாயை, சொல்லொணா இயக்கம் உடையதாய்ச் சுழல, அதன்கணின்றும் ஒரு நாதம் உண்டாகும்; அந்நாதம் அசுத்த மாயையின் அணுக்களைத் திரட்டி, உலகங்களைப் படைக்கும் சிவசக்தியால் இயக்கப்பட்ட விந்து சுழிந்து இயங்குங்கால் வட்ட வடிவும் அவ்வட்ட வடிவினின்று தோன்றும் நாதம் வரி வடிவம் உடையதாம். இவ்விந்து நாதங்களின் சேர்க்கையையைத் தான், `' பிள்ளையார் சுழியென முதல் உலக தோற்றத்திற்கு காரணமென்பதைப் புலப்படுத்த, முதலில் தீட்டப்படுகின்றது. இதன் அறிகுறியே சிவலிங்கமுமாம்.

இனிக் கலையென்பது ஐந்து வகையாகும்; அவை நிவர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியதீதகலை யென்பன; இவற்றுள்:-

(1)   நிவர்த்தி கலையென்பது: தன்கட்சேர்ந்த பக்குவர்கட்குச் சங்கற்பங்களை விடுவித்து மீட்கும்; அதனால் நிவர்த்தியெனப் பெற்றது; இதற்கு தேவதை பிரமதேவர்.

(2)   பிரதிட்டாக்கலையென்பது: தன்னை யடைந்த ஆன்மாக்கட்கு முற்சொன்ன, சங்கற்ப விகற்பங்களை விசேடித்து நிறுத்தும்; இதற்கு தேவதை திருமால்.
    
(3).  வித்தியாகலையென்பது: வித்யா என்பதற்கு அறிவு என்று பொருள்; தன்னை யடைந்திருக்கும் ஆன்மாக்களின் அறிவை பிரகாசிக்கச் செய்யும்; இதற்குத் தேவதை உருத்திரமூர்த்தி.

(4)   சாந்திகலையென்பது: சாந்தி யென்பதற்கு காந்தத் தன்மையென்று பொருள்; இது தன்னைச் சார்ந்த உயிர்கட்கு விருப்பு வெறுப்பை ஒழித்து சங்கற்பவழிச் செல்லவொட்டது முதன்மையான சாந்தத்தை விளைவிக்கும்; இதற்கு தேவதை மகேச்சுரர்.

(5)   சாந்தியதீத கலையென்பது, சாந்திக்கு மேலாய பரம ஞானத்தை யுண்டாக்கும்; இதற்குத் தேவதை சதாசிவ மூர்த்தி. இவ்வைந்து கலைகளின் நிறம், குணம், அவத்தை, நாடி, வாயு என்பவற்றின் விரிவை மதங்க ஆகம காலோத்தராதிகளிற் கண்டு தெளிக.

எனவே மேற்போந்த விந்து நாத கலைகளுக்குத் தலைவராக தாண்டி நிற்பவர் முருகவேள்.

விந்து நாத ஓசைக்குத் தூரமானது”   --- (வாசித்து) திருப்புகழ்.

வேத மந்திர சொரூபா ---

அப்ரமேய மரூப மவ்யக்தம்” என்று வடமொழி வேதமும், “உருவன்று அருவன்று” என்று தமிழ் வேதமும் கூறியிருக்க, சுப்ரமண்ய பரப்ரமத்திற்கு மந்திர வடிவம் மாய வடிவம் இல்லையென்பது மலை இலக்காக இருப்பவும், ஈண்டு “மந்த்ர சொரூபா” என்று கூறி மந்திர வடிவுடையவன் என்று விளக்கும் காரணம் பின் வருமாறு:

குமாரக் கடவுளுக்கு உண்மையில் வடிவமில்லை. ஆயினும் ஆன்மாக்களின் தியானபூசா நிமித்தம் மந்திராதி வடிவங்களைத் தாங்குகின்றார். “அருவுமாகுவன் உருவமாகுவன்” அருவும் உருவமற்றதோர் தன்மையுமாகுவன்” என்று கந்தபுராணமும், “காணொணாதது உருவோடருவது” என்ற திருப்புகழும், “உருவாய் அருவாய்” என்று அநுபூதியும் தெரிவிக்கின்றன.

மந்திரமென்பதற்கு, மந்-நினைத்தல், த்ர-காப்பாற்றல் எனவே நினைப்பவரைக் காப்பது என்பது பொருள். இதுவேயுமன்றி, “மகா ரச்சைவ மாயாஸ்யாத் த்ருசப்தஸ் தாரகோ பவேத்” என்று அசிதாமங் கூறியவாறு மா- மாயையை, த்ர-விடுவித்தல், எனவே மாயையைத் தூண்டுவிப்பது மந்திரமாகும் எனவும் பொருள்படும்.

ஆறாதாரத்தில் அடங்கியுள்ள அகாரதி க்ஷகாராந்த மகாவுள்ள ஐம்பத்தொரு அட்சரமே எல்லா மந்திரங்களினுமுயர்ந்தது. இம்மந்திரத்தை மாத்ருகா மந்திரமெனவும், மாலாமந்திரமெனவும், மேளாமந்திரமெனவும் வேத சிவாகமங்கள் கூறின. "மாத்ருகா புஷ்ப மாலை கோலப்ரவாள பாதத்தி லணிவேனோ" என அருணகிரியாரும் கூறியருளினார்.

மாத்ருகா மந்த்ராணாம் முக்ய பூதா பவேதிஹ
தச்சக்தி ருத்ர ஸம்யுக்தா: கேவலம் வாஸ மப்யஸேத் --- காமிகாகமம்

இம்மந்திரம் ஐம்பது சத்தர் பேதங்களோடும், அத்துணைச் சக்தி பேதங்களுடனும் விளங்கா நிற்கும். இவ்வைம்பத்தொரு எழுத்துக்களையே குகப்பெருமாள் தமக்கு வடிவமாகக் கொண்டு விளங்குவர்.

பெருமானுக்கு பஞ்சாக்கர வடிவமும் உளது என்பதனை:

    ஆடும்படி கேள்நல் அம்பலத்தான் ஐயனே
    நாடும் திருவடியி லேநகரம்-கூடும்
    மகரம் உதரம் வளர்தோள் கிகரம்
    பகருமுகம் வா,முடியப் பார்.

என்னும் உண்மை விளக்கத் திருவிருத்தத்தா லுணர்க.


ஞான பண்டித ஸ்வாமி:-

முருகப் பெருமான் ஞானமூர்த்தி என்பதும், ஞான தாதா என்பதும், ஞானாசாரியன் என்பதும், ஞான சொரூபன் என்பதும் அடியிற்கண்ட பிரமாணங்களால் அறிக.

    குருக டாக்ஷக லாவே தாகம
     பரம வாக்கிய ஞானா சாரிய
     குறைவு தீர்த்தருள் ஸ்வாமி”              --- (பொருளின் மேற்) திருப்புகழ்

    ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை
  யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ”      --- கந்தபுராணம்

வெகு கோடி நாம சம்பு ---

ஒரு நாமமுமில்லாத அப் பரமபதி, ஆன்மாக்களின் பொருட்டு பல ஆயிரந் திருநாமங்களைத் தாங்கியருள் புரிகின்றனர்.

திருமாலும் பன்றியாய்ச் சென்றுஉணராத் திருவடியை
உருநாம் அறியஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்,
ஒருநாமம் ஒர்உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.   --- திருவாசகம்.

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
     பெம்மானை, பிரிவுஇலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை,
     மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்து அருளவல்லான் தன்னை,
     திரிபுரங்கள் தீ எழத் திண்சிலை கைக்கொண்ட
போரானை, புள்ளிருக்கு வேளூரானைப்
     போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!       --- அப்பர்.

"எண்ணாயிர நூறு பெயராய் போற்றி"                ---  அப்பர்.


கிரிராஜ:-

முருகக் கடவுள் குறிஞ்சி நிலக் கடவுளாதலால் மலைக்கு நாயகன் என்றார். “மலைக்கு நாயக” என்று திருக்கோண மலைத் திருப்புகழிலும் கூறியுள்ளார்.

   சேயோன் மேய மைவரையுலகமும்” -தொல்காப்பியம்

தீப மங்கள ஜோதீ:-

அருட்பெருஞ் ஜோதியாண்டவர் அறுமுகக் கடவுளே என்பதை பிறிதொரு பாடலிலும் விளக்குகின்றார்.

    நிர்த்த ஜெக ஜோதிப் பெருமாளே”   --- (இத்தரணி) திருப்புகழ்

தூய அம்பல லீலா ---

ஆன்மாக்களினது இதய புண்டரீகத்திலுள்ள தகரா காயத்தில் குகப் பெருமான் ஓவாது நடனம் புரிந்து கொண்டிருக்கிறார். அவ்விருதய வெளியை பரவியோமம் சிதம்பரம், சிதாகாசம், தகராகாசம், சிற்றம்பலம், ஞானாம்பரம், அந்தராகாசம் எனப் பல பெயர்களால் சுருதிகளுரைக்கும்.

 ஈதலும் …. மறவாத ---

மனு நீதிச் சோழன் அரசு செய்யும் பாக்கியத்தைப் பெற்ற சோழ மண்டலத்திலுள்ளோர், ஈகை, பூஜை, கல்வி, குணம், ஒழுக்கம், நீதி, கருணை, குருசேவை இவற்றுடன் கூடிய உத்தமர்கள் என்பதை மிகவும் அழகாகக் கூறுகின்றார்.

ராஜ கெம்பீர நாடு ---

ராஜகெம்பீர நாடு என்பது வயலூரைச் சூழ்ந்துள்ள நாடு: வயலூரைச் சூழ்ந்துள்ள அந்நாட்டில் சாசனங்கள் எழுதும்போது ராஜகெம்பீர நாடு என எழுதுவதை இக்காலத்திலும் காணலாம்.

ஆதரம் பயில ஆரூரா ---

சமய குரவர் நால்வர்களில் சுந்தரர் ஞானத்தில் யோகம் என்ற நெறிக்கு ஆச்சாரியர். யோகம்-மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, அக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் பயிலப்படுவது, எனவே ஆறு ஆதாரங்களில் பயின்றவர் சுந்தரர்.

ஆதாரம் பயில் என்பது ஆதரம் பயில் என வந்தது. சாதாரயோகம், நிராதார யோகம் என யோக வகைகள் பல உண்டு. அவ்றையெல்லாம் குரு நெறி நின்று அறிக.

சேரமான் பெருமாள் நாயனார்
உலாப் பாடிய வரலாறு

     மலை நாட்டிலே மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே, பெருமாக்கோதையார் என்னும் சற்புத்திரர் ஒருவர் தோன்றினார். அவர் இளமையிலேயே வைராக்கியமுற்று சிவபக்தி மிகுந்து, இராஜ கருமத்தை வெறுத்து, திருவஞ்சைக் களத்திலேயே திருவாலயத் தொண்டினை அன்புடன் செய்வாராயினார்.

     அக்காலத்தில் செங்கோற் பொறையன் என்னும், சேர மகாராஜன் துறவறத்தை மேற்கொண்டு, தவவனம் அடைந்தான். மந்திரிமார்கள் திருவஞ்சைக் களம் போந்து, பெருமாக்கோதையாரை வணங்கி அரசராகும்படி வேண்ட, அவர் சிவாக்ஞை மேற்கொண்டு உயிர்கள் கழறினவற்றை அறியும் அறிவையும், அழிவில்லாத ஆற்றலையும், பெருங்கொடையையும், பற்பல படைகளையும், பக்தி நெறி வழுவாமல் அரசியற்றும் ஆண்மையையும், சிவபெருமான்பால் பெற்று, வணங்கி விடைபெற்று, நல்ல சுப தினத்திலே முடிசூடி, சிவாலயத்தை வணங்கி, யானை மீதூர்ந்து வெண்கொற்றக் குடை நிழற்ற, வெண்சாமரமிரட்ட, சகல விருதுகளுடன் பவனி வரும்போது, ஒரு வண்ணான் உவர் மண்ணைச் சுமந்து வர, மழையினாலே கரைந்த உவர் மண் அவ்வண்ணான் உடம்பில் விபூதிபோல் தோன்ற, அதுகண்ட பெருமாக்கோதையார் என்னும் சேரமான் பெருமாள் நாயனார், உடனே யானையினின்றும் இறங்கி விரைந்து போய் வணங்கினார். அதுகண்டு வண்ணான் நடுநடுங்கி, அவரை வணங்கி, “அண்ணலே, அடியேன் அடி வண்ணான்” என்று சொல்ல, சேரமான் பெருமாள் நாயனாரும் “தேவரீர் திருநீற்று வடிவத்தை நினைப்பித்தீர், அடியேன் அடிச் சேரன், வருந்தாதீர் போம்” என்று சொல்லியருளினார். அவருடைய அடியார் பக்தியைக் கண்ட மந்திரிமார்கள் முதலியோர், மிகவும் இறும்பூதுற்று இறைஞ்சினார்கள்.

     சேரமான் பெருமாள் நாயனார் நாள் தோறும் செய்யும் பூசை முடிவிலே நடராஜப் பெருமானுடைய திருச் சிலம்பொலி கேட்கும். அடியார்க்கும், மிடியார்க்கும், பொன் மாரி பொழிந்து வருவார். சிவபெருமான் கொடுத்தனுப்பிய திருமுகப்பாசுரத்தை சென்னிமேற்கொண்டு வணங்கி, அத்திருமுகங் கொண்டு வந்த பாண பத்திரருக்கு அளப்பில்லத அரதனங்களை நல்கி உபசரித்தார்.

     ஒரு நாள் பூஜாந்தரத்திலே, சபாநாதருடைய சிலம்பொலி கேளாது ஒழிய, சேரமான்பெருமாள் நாயனார் மனம் மயங்கி, “அடியேன் யாது பிழை செய்தேனோ? இனி இந்த உடம்பை ஒழிப்பேன்” என்று வாள் கொண்டு உயிர்விடத் துணிந்தனர். உடனே சபாநாயகர்  சிலம்பொலி கேட்கச் செய்து “அன்பனே! சுந்தரமூர்த்தியின் பாடலைக் கேட்டு வரத் தாழ்ந்தோம்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பெருமையை வெளிப்படுத்தினார்.

     சேரமான் பெருமாள் நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளுடைய பெருமையையும் அவர் அருட்பாடலின் அருமையையும், கனக சபாபதி அடியார்க்கருளும் கருணையின் திறத்தையும், நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்து, சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தெரிசிக்கும் ஆவல்கொண்டு, திருவாரூர் போந்து, வன்தொண்டரை வணங்கி, வன்மீகநாதர் மீது மும்மணிக் கோவையையும், சபாநாதர் மீது பொன்வண்ணத்து அந்தாதியையும், வேதாரணியர் மீது திருவந்தாதியையும் படி வழிப்பட்டார்.

     பல நாட்களுக்குப் பின் சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தம்முடைய கொடுங்கோளூருக்கு அழைத்துச் சென்று, மிகவும் உபசரித்து அவருடன் மிக்கதோர் நட்பு கொண்டு, தமது பண்டாரத்திருந்த செல்வமுழுவதையும் கொடுத்து ஆரூருக்கு அனுப்பினார்; அவரை மறவாது அரசு செய்து வந்தார்.

     பின்னர் ஒரு சமயம் அந்திவண்ணனைத் தூது கொண்ட சுந்தரமூர்த்தி நாயனார் கொடுங்கோளூருக்கு வந்து சேரமான் பெருமாள் நாயனாருடன் எழுந்தருளியிருந்தார். பல நாளாயின. பின் சுந்தரமூர்த்தி நாயனார் திருவஞ்சைக்களஞ் சென்று சுவாமி தரிசனஞ் செய்துகொண்டு இருந்தபோது, திருக்கைலாயத்தினின்றும் சிவபெருமானால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையின்மேல் ஏறி, “இந்திரன், மால், பிரமன், எழிலார் மிகு தேவர் எல்லாரும் வந்து எதிர் கொள்ளச் செல்லும் போது, தனது அருமைத்தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரை நினைத்தார். நீராடிக் கொண்டிருந்த சேரமான் பெருமாள் நாயனார், தம்பிரான் தோழருடைய நினைவை உணர்ந்து உடனே அருகிலே நின்ற குதிரைமீது ஏறி, திருவஞ்சைக்களஞ் சென்று, ஐராவதமூர்ந்து ஆகாயத்திற் செல்லும் ஆரூரடிகளைக் கண்டு, தாம் ஏறிய குதிரையின் செவியிலே ஐந்தெழுத்தை ஓதியருளினார். உடனே அக்குதிரை ஆகாயத்தில் பாய்ந்து, நம்பியாரூரருடைய வெள்ளை யானையை அடைந்து, அதனை வலஞ்செய்து அதற்கு முன்னாகச் சென்றது. சேரமான் பெருமாள் நாயனாருடைய படை வீரர்கள். குதிரை மேற்செல்லும், அந்நாயனாரைத் தங்கள் கண்ணுக்குப் புலப்படும் எல்லை வரைக்கும் ஆகாயத்திலே கண்டு, பின் காணாமையால் மிகுந்த திடபக்தியால் உடைவாள் கொண்டு தங்கள் உடம்பை வீழ்த்தி வீரயாக்கையைப் பெற்றுப் போய், சேரமான் பெருமாள் நாயனாருக்கு முற்பட்டு, அவரை வணங்கிக் கொண்டு சென்றார்கள். சேரமான் பெருமாள் நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும், உள்ளுவார் வினையகற்றும் வெள்ளியம் பொருப்பை நண்ணியவுடனே குதிரையினின்றும், யானையினின்றும் இறங்கி, பல வாயில்களையும் கடந்து திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள்.

     அங்கே சேரமான் பெருமாள் நாயனார் தடைப்பட்டு நிற்க, சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளே போய் சிவசந்நிதியில் விழுந்து வணங்கி எழுந்து துதித்து நின்று, “எந்தையே! தேவரீருடைய திருவடிகளை அடையும் பொருட்டுச் சேரர் கோன் திருவணுக்கன் திருவாயிலை அடைந்து நிற்கின்றார்.” என்று விண்ணப்பஞ் செய்தார்.

     புரிசடைக் கடவுள் புன்முறுவல் செய்து சேரமான் பெருமாளை அழைப்பிக்க, அவர் ஆராத அன்புடன் விரைந்து சென்று பன்முறை விழுந்து வணங்கித் துதித்து நின்றார். செம்மேனிப் பெம்மான் திருமுறுவல் கொண்டு “இங்கே நாம் உன்னை அழையாதிருக்க, நீ வந்தது என்னை?” என்று அருளிச்செய்ய, சேரமான் பெருமாள் நாயனார்  கைகூப்பி “பண்ணவர் போற்றுங் கண்ணுதற் கடவுளே! சுந்தர மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் துதித்து, அவர் ஏறிய வெள்ளை யானைக்கு முன் அவரை சேவித்துக் கொண்டு வந்தேன், தேவரீர் பொழிகின்ற பெருங்கருணை வெள்ளம் அடியேனை இங்கு கொண்டு வந்து ஓதுக்கியதால் திருமுன் வரப்பெற்றேன்; மலைமகள் நாயக! இனி ஒரு விண்ணப்பம் உண்டு; மாலயனாதி வானவர்களாலும், மாதவர்களாலும்,  மறைகளாலும் துதிக்கப்படுதற்கு அரிய பெருமையுடைய தேவரீர் மீது அன்பினாலே தேவரீரது திருவருள் துணைகொண்டு திருவுலாப் பாடினேன்; அதனைத் தேவரீர் திருச்செவி சாய்த்தருள வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தார். அப்பொழுது சிவபெருமான், "சேரனே! அதனைச் சொல்லு" என்று திருவாய் மலர்ந்தனர். சேரமான் பெருமாள் நாயனார் உடனே திருக்கைலாய ஞானவுலாவை ஆசுகவியாகப் பாடிப் பெருமானைக் கேட்பித்தார். அரனார் மகிழ்ந்து அருள்செய்து, “நம்முடைய கணங்களுக்கு நாதனாய் இரு” என்று அருள் புரிந்தார். சேரமான் பெருமாள் நாயனார் சிவகண நாதராகிச் சிவமூர்த்தியைச் சேவிப்பராயினர். அவர் அருளிச் செய்த திருக் கயிலாய ஞானவுலாவை அங்கு அன்று கேட்ட மகாசாத்தர், தமிழ் நாட்டிலேயுள்ள திருப்பிடவூரிலே அதனைக் கொணர்ந்து வெளியிட்டு, உலகில் விளங்க நாட்டியருளினார்.

கருத்துரை


         மேன்மை பொருந்திய சோழ மண்டலத்திலுள்ள ராஜகெம்பீர நாட்டிற்கரசே! வயலூரா! சேர நாட்டிலுள்ள பழிநியில் வாழும் பரம பதியே! தேவரீருக்குப் பலமுறை நமஸ்காரம்: அருள்புரிவீர்.
                                 

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...