அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நிகமம் எனில் (பழநி)
பழநியப்பா!
வெற்றுக் கல்வியால் வீணாகாமல்,
கற்றதனால் ஆய பயனாக உம்மைத்
துதிக்க அருள்.
தனதனன
தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனி லொன்று மற்று நாடொறு
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள
...... பெயர்கூறா
நெளியமுது
தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகியதி குண்ட லப்ர தாபமு ......
முடையோராய்
முகமுமொரு
சம்பு மிக்க நூல்களு
முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில்
முடிவிலவை யொன்று மற்று வேறொரு ......
நிறமாகி
முறியுமவர்
தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர
...... அருள்வாயே
திகுதிகென
மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி யாருகர்
திகையினமண் வந்து விட்ட போதினு .....
மமையாது
சிறியகர
பங்க யத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ......
கழுவேற
மகிதலம
ணைந்த அத்த யோனியை
வரைவறம ணந்து நித்த நீடருள்
வகைதனைய கன்றி ருக்கு மூடனை ......
மலரூபம்
வரவரம
னந்தி கைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
நிகமம்
எனில் ஒன்றும் அற்று, நாடொறும்
நெருடு கவி கொண்டு வித்தை பேசிய
நிழலர், சிறு புன்சொல் கற்று, வீறு உள ...... பெயர்கூறா,
நெளிய
முது தண்டு சத்ர சாமர
நிபிடம்இட வந்து, கைக்கு மோதிரம்,
நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் ...... உடையோராய்,
முகமும்
ஒரு சம்பு மிக்க நூல்களும்,
முதுமொழியும் வந்து இருக்குமோ எனில்,
முடிவில் அவை ஒன்றும் அற்று, வேறு ஒரு ...... நிறமாகி
முறியும்
அவர் தங்கள் வித்தை தான், இது
முடிய உனை நின்று பத்தியால் மிக
மொழியும், வளர் செஞ்சொல் வர்க்கமே வர ...... அருள்வாயே.
திகுதிகு
என மண்ட விட்ட தீ ஒரு
செழியன் உடல் சென்று பற்றி, ஆருகர்
திகையின் அமண் வந்து விட்ட போதினும்
...... அமையாது,
சிறிய
கர பங்கயத்து நீறு, ஒரு
தினை அளவு சென்று பட்ட போதினில்
தெளிய, இனி வென்றி விட்ட மோழைகள் ...... கழு ஏற,
மகிதலம்
அணைந்த அத்த! யோனியை
வரைவு அற மணந்து நித்தம் நீடு அருள்
வகைதனை அகன்று இருக்கு மூடனை, ...... மலரூபம்
வரவர
மனம் திகைத்த பாவியை,
வழி அடிமை கொண்டு, மிக்க மாதவர்
வளர்பழநி வந்த கொற்ற வேலவ! ......
பெருமாளே.
பதவுரை
திகுதிகு என மண்ட விட்ட தீ --- திகுதிகு
என்று மண்டி எரிய விட்ட தீயானது,
ஒரு செழியன் உடல் சென்று பற்றி --- ஒப்பற்ற
பாண்டியனுடைய உடலைச் சென்று (சுரப்பிணியாய்) பற்ற,
ஆருகர் திகையின் அமண் வந்து விட்ட போதிலும் ---
பல திசைகளில் வாழ்கின்ற சமணர்கள் வந்து முயற்சி செய்தும்,
அமையாது --- அச் சுரநோய் தணியாமல் போக,
சிறிய கர பங்கயத்து --- உமது சிறிய
திருக்கரமாகிய தாமரையினின்றும்,
நீறு ஒரு தினை அளவு சென்று பட்ட போதினில் ---
திருநீறு ஒரு தினை அளவு பாண்டியன் மீது போய் பட்டவுடனே,
தெளிய --- பாண்டியன் நோய் நீங்கித் தெளிவு
அடைய,
இனி வென்றி விட்ட மோழைகள் கழு ஏற ---
வெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற,
மகிதலம் அணைந்த அத்த --- இப்பூமியில்
அவதரித்த தலைவரே!
யோனியை வரைவு அற மணந்து --- பெண்களது
குறியைக் கணக்கின்றிச் சேர்ந்து,
நித்தம் நீடு அருள் வகை தனை அகன்று இருக்கும்
மூடனை --- நாள்தோறும் தேவரீரது பேரருளை உணராது விலகி நிற்கும் மூடனாகிய என்னை,
மல ரூபம் --- ஆணவ மலத்தின் வடிவாகவே நின்று,
வர வர மனம் திகைத்த பாவியை --- நாளுக்கு நாள்
மனம் கலங்கும் பாவியாகிய என்னை,
வழி அடிமை கொண்டு --- வழியடிமையாக ஆட்கொண்டு,
மிக்க மாதவர் வளர் --- சிறந்த பெருந்தவ
முனிவர்கள் வாழ்கின்ற,
பழநி வந்த --– பழநி மலையில் எழுந்தருளியுள்ள,
கொற்ற வேலவ --- வீர வேலாயுதரே!
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
நிகமம் எனில் ஒன்றும் அற்று --- வேதப்
பொருள் ஒரு சிறிதும் அறியாமல்,
நாள் தோறும் --- தினந்தோறும்,
நெருடு கவி கொண்டு --- மொழிகளைத் திரித்து
இயற்றிய பாடலைக்கொண்டு,
வித்தை பேசிய நிழலர் --- தனது வித்தைப்
பெருக்கைப் பற்றிப் பெருமையாகப் பேசும் போலிக் கவிகள்,
சிறு புன் சொல் கற்று --- சில அற்பச்
சொற்களைக் கற்று,
வீறு உள பெயர் கூறா --- ஆடம்பரமான பட்டப்
பெயர்களை வைத்துக் கொண்டு,
நெளிய முதுகு தண்டு --- தூக்குவோரது முதுகு
நெளியத் தக்க கனத்த பல்லக்கு,
சத்ரம் --- குடை,
சாமரம் --- வெண்சாமரம் முதலியவை,
நிபிடம் இட வந்து உலவி --- நெருங்கும்படியாக
வந்து உலாவி,
கைக்கு மோதிரம் --- கையில் மோதிரங்கள்,
நெடுகி அதி குண்டல ப்ரதாபமும் உடையோராய் ---
(காதில்) நீண்டு தொங்குகின்ற ஒளிமிகுந்த குண்டலங்கள் பூண்டுள்ள சிறப்பை
உடையவர்களாய் இருப்பார்கள். (ஆனால்)
முகமும் --- அவர்கள் முகமானது,
ஒரு சம்பு மிக்க நூல்களும் --- ஒப்பற்ற
செய்யுளும் வசனமும் கலந்த நூல்களும்,
முதுமொழியும் --- திருக்குறளும்,
வந்திருக்குமோ எனில் --- கற்றுள்ளீரோ? விளக்கமுடியுமோ? என்று கேட்டால்,
முடிவில் அவை ஒன்றும் அற்று --- முடிவில் அவை
ஒன்று தெரியாததால்,
வேறு ஒரு நிறம் ஆகி --- வெட்கத்தால் முகம்
வெளுத்து நிறம் மாறி,
முறியும் அவர் தங்கள் வித்தை தான் --- மனம்
உலைகின்ற இவர்களுடைய இக்கல்வி எல்லாம்,
இது முடிய --- (ஆதலால் இத்தகைய கல்வி போதும்)
இது முடிவதாக;
உனை நின்று பத்தியால் --- தேவரீரை ஒரு
வழியில் நின்று அன்புடன்,
மிக மொழியும் வளர் செம் சொல் வர்க்கமே வர ---
மிகுதியாகத் துதிப்பதற்கு வளர்கின்ற செஞ்சொற்களின் வகைகள் பெருகிவர,
அருள்வாயே --- அருள் புரிவீராக.
பொழிப்புரை
திகுதிகு என்று எரியவிட்ட அக்கினியானது, வெப்பு நோயாகப் பாண்டியனது உடம்பில்
சென்று பற்ற, பல திசைகளிலிருந்து
வந்த சமணர்கள் முயன்றும் அந்த வெப்பு நோய் தணியாமையால், உமது தாமரை போன்ற சிறிய திருக் கரத்தால்
திருநீறு ஒரு தினையளவு பூசியவுடன் சுரம் நீங்கி மன்னன் தெளிவு பெற, தோல்வி உற்ற சமணர்களாகிய மூடர்கள்
கழுவில் ஏறுமாறு, இப்பூதலத்தில்
அவதரித்த தலைவரே!
பெண்கள் குறியை மிகுதியாகச் சேர்த்து
நாள்தோறும் தேவரீரது திருவருளின் திறங்களை உணராது விலகி நிற்கும் மூடனாகிய என்னை, ஆணவ மலத்தின் உருவாகி நின்று நாளுக்கு
நாள் மனம் கலங்கும் பாவியாகிய என்னை, வழியடிமையாக
ஆட்கொண்டு, சிறந்த பெருந்தவ
முனிவர்கள் வாழும் பழநியில் வந்து அமர்ந்துள்ள வீரவேற்படை யுடையவரே!
பெருமிதம் பூண்டவரே!
வேதப் பொருள் ஒன்றும் தெரியாது, நாள்தோறும் மொழிகளைத் திரித்து பாடிய
பாடல்களைக் கொண்டு தமது வித்தைப் பெருக்கைப் பற்றிப் புகழ்ந்து கூறும் போலிப்
புலவர்கள், சில அற்பச் சொற்களைக்
கற்று ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு, சுமப்போரது முதுகு நெளியத் தக்க கனத்த
பல்லக்கு, குடை, சாமரம், இவை நெருங்கும்படியாக உலாவி, கையில் மோதிரங்கள், காதில் நீண்டு தொங்கும் ஒளியுடைய
குண்டலங்கள், தாங்கிய சிறப்பினை
யுடையவர் களாயிருப்பார்கள். அவர்களைப் பார்த்து, “சம்பு, திருக்குறள் முதலிய நூல்கள்
கற்றிருக்கின்றீரோ? அவற்றை விளக்க
வல்லீரோ?” என்று கேட்டால்; முடிவில் ஒன்றும் தெரியாததால் அவர்கள்
முகம் நாணத்தால் வெளுத்து நிறம் மாறி மனம் குலைவார்கள். இத்தகைய கல்வி முடிவு
பெறுவதாக; ஒருவழியில் நின்று
தேவரீரைப் பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு மேலும் மேலும் வளர்ச்சியுறுகின்ற
செஞ்சொற்களின் வகைகள் பெருகிவரத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
இத்திருப்புகழில்
சுவாமிகள் போலிப் புலவர்களைக் குறித்து வருந்தி அவர்கள் திருந்தவேண்டும் என்று
கூறுகின்றார்.
நிகமம்
எனில் ஒன்றும் அற்று ---
நிகமம்-வேதம்.
எல்லா சமயங்கட்கும் வேதம் பொதுவாகத் திகழும்.
ஒரு
தாய்க்கு ஆறு பிள்ளைகள்; ஒருவன் வியாபாரி; ஒருவன் ஆசிரியன்; ஒருவன் மருத்துவன்; ஒருவன் உத்தியோகஸ்தன்; ஒருவன் விவசாயி; ஒருவன் சமையல்காரன்; இப்படி ஆறு பிள்ளைகளும் பல்வேறு
தொழில்கள், பல்வேறு நிலைமை, பல்வேறு கொள்கைகள், பல்வேறு செயல்களை உடையவர்களாயிருப்பினும்
தாய் ஒன்று தானே? தாயை நோக்கி இவர்கள் ஒன்றுபடுவார்கள்.
அதுபோல்
சமயங்களும் வேறு வேறு கொள்கைகளைத் தாங்கி நிற்பினும் வேதம் மாதாவாதலின், வேதத்தினிடம் ஒற்றுமைப்பட்டு
விடுவார்கள்.
வேதம்
ஓதி அதன் வழி நிற்றல் வேண்டும். சிலர் புலவர்கள் போல் நடித்து ஏதோ சில பாடல்களைக்
கூறித் திரிவார்கள். ஆனால் வேதத்தில் ஒன்றும் அறியார்கள்.
நெருடு
கவிகொண்டு வித்தை பேசிய நிழலர் ---
முன்
கூறிய அப்புலவர்கள் தாம் அங்கொன்று இங்கொன்றாக உதிரியாகக் கற்ற பாடல்களிலிருந்து
சில சில சொற்களைக் கொண்டு கவி பாடுவார்கள்: தாம் கற்ற வித்தையைப் பெரிதாகப்
பேசுவார்கள்.
நிழலர்-போலிகள்.
மனிதனுடைய நிழல் பெறும் வடிவம் போல் காட்சி தருவதுபோல், புலவர்களைப் போல் நடிக்கும் போலிப்
புலவர்களை நிழலர் என்றனர்.
புன்சொல்
கற்று வீறுள பெயர் கூறா ---
புல்லிய
சொற்களைக் கற்ற அப்புலவர்கள், ஏதேதோ டம்பமான பட்டப்
பெயர்களை வைத்துக் கொள்வர்.
நெளிய
முது தண்டு
---
தண்டு-சிவிகை.
பாரம் அதிகம் ஆதலால் அதனைச் சுமப்போருடைய உடம்பு நெளிகின்றது.
சத்ர
சாமரம்
---
சத்ரம்-குடை.
சாமரம்-வெண்சாமரை. புலவர்கள் கொடி,
மேளம், தாளம், குடை விருதுகளுடன் திரிவர். இப்படித்
திரிகின்ற செருக்கு அழியாதோ என்ற மற்றொரு திருப்புகழ்ப் பாடலிலும்
கூறியிருக்கின்றார்.
“விருது கொடி மேள தாள
தண்டிகை
வரிசையோடு உலாவும் மால் அகந்தை தவிர்ந்திடாதோ” --- (படர்புவி) திருப்புகழ்
நிபிடமஎ
இட
---
நிபிடம்-நெருக்கம்.
மிக நெருக்கமாகப் பரிசனங்களுடன் உலாவுவர்.
சம்பு ---
சம்பு
என்பது ஒரு வகை நூல். இது செய்யுளும் வசனமும் விரவி வருகின்ற நூல்.
முதுமொழி........நிறமாகி ---
முதுமொழி-திருக்குறள்.
முதுமொழி என்றால் பழமொழி என்று பொருள்படும். ‘திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கின்ற
பழமொழி’ என்று வேறு திருப்புகழிலும் கூறுகின்றார்.
இப்புலவர்களை
ஒருவர் சந்தித்து “உமக்கு சம்பு,
திருக்குறள்
நூல்கள் தெரியுமோ” என்று கேட்டவுடன் அவர்கள் திருதிரு என்ற விழிப்பர். முகம்
வெளுத்து நிறம் மாறுபடுவர்.
இது
முடிய
---
இத்தகைய
வித்தை முடிவு பெறுக; இதனால் உலகத்திற்கு
பயனில்லை.
உனை
நின்று பக்தியால் மிக மொழியும் வளர் செஞ்சொல் வர்க்கமே வர அருள்வாயே:-
“முருகா! அப்படி அவமே
திரிகின்ற போலிப் புலவர்கள் உன் அருள் வழியில் ஒருமைப்பட்டு நின்று அன்பினால்
வளர்கின்ற செஞ்சொல் மொழியால் துதிக்கின்ற தன்மையுண்டாக அருள்புரிவாய்” என்று
அருணகிரிநாதர் வேண்டு கின்றார்.
திகுதிகென
மண்டவிட்ட தீ
---
மதுரையில்
திருஞானசம்பந்தர் சென்று திருமடத்தில் தங்கியருளினார். அது கண்டு பொறாத சமணர்கள்
இரவில் திருமடாலயத்தில் தீ வைத்தார்கள்.
ஒருசெழியன்
உடல் பற்ற
---
அத்
தீ வெப்பு நோயாகப் பாண்டியனைச் சென்று பற்றியது.
ஆருகர்
திகையின மண் வந்துவிட்ட போதினும் அமையாது :-
பல
திசைகளிலிருந்து சமண குருமார்கள் வந்து தண்ணீர் மந்திரித்துத் தந்தும் அந் நோய்
நீங்கப் பெறாதிருந்தது.
சிறியகர
பங்கயத்து நீறு ஒரு தினையளவு சென்று பட்ட போதினில் தெளிய ---
திருஞானசம்பந்தர்
எழுந்தருளி, தமது தாமரையன்ன இளந்
திருக்கரத்தினால் “மந்திரமாவது நீறு” என்று பாடி, ஒரு தினையளவு திருநீற்றினைப் பூசியவுடன்
பாண்டியன் வெப்பு நோய் தீரப்பெற்றுத் தெளிவு பெற்றனன்.
இனி
வென்றிவிட்ட மோழைகள் கழுவேற ---
சமணர்கள்
சம்பந்தருடன் அனல் வாதம், புனல் வாதம் புரிந்து
தோல்வி யுற்றுக் கழுவில் ஏறினார்கள்.
மகிதலம்
அணைந்த அந்த ---
திருஞானசம்பந்தராகப்
பூமியில் அவதரித்த தலைவரே!
கருத்துரை
பழநியப்பா! புலவர்கள்
திருந்த அருள்வாய்