பழநி - 0172. நெற்றி வெயர்த்துளி





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நெற்றி வெயர்த்துளி (பழநி)

பழநியப்பா!
மாதர் உறவு தகாது.  உண்மையான பத்தியைத் தந்து அருள்

தத்தன தத்தன தனத்த தானன
     தத்தன தத்தன தனத்த தானன
          தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான


நெற்றிவெ யர்த்துளி துளிக்க வேயிரு
     குத்துமு லைக்குட மசைத்து வீதியி
          னிற்பவர் மைப்படர் விழிக்க லாபியர் .....மொழியாலே

நித்தம யக்கிகள் மணத்த பூமலர்
     மெத்தையில் வைத்ததி விதத்தி லேயுட
          னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு ......முறவாடி

உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு
     மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு
          முற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்க ......ளுறவாமோ

உச்சித மெய்ப்புற அனைத்த யாவுடன்
     மெய்ப்படு பத்தியி னிணக்க மேபெற
          வுட்குளிர் புத்தியை யெனக்கு நீதர ...... வருவாயே

கற்றத மிழ்ப்புல வனுக்கு மேமகிழ்
     வுற்றொரு பொற்கொடி களிக்க வேபொரு
          கற்பனை நெற்பல அளித்த காரண ...... னருள்பாலா
  
கற்பந கர்க்களி றளித்த மாதணை
     பொற்புய மைப்புயல் நிறத்த வானவர்
          கட்கிறை யுட்கிட அருட்க்ரு பாகர ...... எனநாளும்

நற்றவ ரர்ச்சனை யிடத்த யாபர
     வஸ்துவெ னப்புவி யிடத்தி லேவளர்
          நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே

நட்டுவர் மத்தள முழக்க மாமென
     மைக்குல மெத்தவு முழக்க மேதரு
          நற்பழ நிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நெற்றி வெயர்த் துளி துளிக்கவே, இரு
     குத்து முலைக் குடம் அசைத்து, வீதியில்
          நிற்பவர், மைப்படர் விழிக் கலாபியர், .....மொழியாலே

நித்த மயக்கிகள், மணத்த பூமலர்
     மெத்தையில் வைத்து, அதி விதத்திலே, உடல்
          நெட்டு வரத் தொழில் டுத்துகொ மேவியும் ....உறவாடி,

உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும்,
     மெத்தவும் நட்பொடு பறித்து, நாள்தொறும்
          உற்பன வித்தைகள் தொடுக்கும் மாதர்கள் .......உறவுஆமோ?

உச்சித மெய்ப்பு உற, அனைத் தயாவுடன்
     மெய்ப்படு பத்தியில் இணக்கமே பெற,
          உள்குளிர் புத்தியை எனக்கு நீ தர ...... வருவாயே.

கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வு
     உற்று ஒரு பொற்கொடி களிக்கவே, பொரு
          கற்பனை நெல்பல அளித்த காரணன் ...... அருள்பாலா!

கற்ப நகர்க் களிறு அளித்த மாது அணை
     பொற்புய! மைப்புயல் நிறத்த வானவர்-
          கட்கு இறை உட்கிட அருள் க்ருபாகர ...... எனநாளும்

நல்தவர் அர்ச்சனை இடத் தயாபர
     வஸ்து எனப் புவி இடத்திலே வளர்
          நத்து அணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ....மருகோனே!

நட்டுவர் மத்தள முழக்கமாம் என
     மைக்குலம் மெத்தவு முழக்கமே தரு
          நல் பழநிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.


பதவுரை


      கற்ற தமிழ் புலவனுக்கும் --- அறிவு நூல்களைக் கற்ற தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு,

     மகிழ்வும் உற்று --- மகிழ்ச்சியடைந்து,

     ஒரு பொன் கொடி களிக்க --- ஒரு பொன்கொடி போன்ற பரவை நாச்சியார் உள்ளம் உவக்குமாறும்,

     பொரு கற்பனை --- சிறந்த கட்டளைப்படி வந்து குவிந்த,

     நெல் பல அளித்த --- நெல் மலையைத் தந்த,

     காரணன் அருள் பாலா --- காரண கர்த்தராகிய சிவபெருமான் அருளிய புதல்வரே!

         கற்ப நகர் களிறு அளித்த மாது அணை --- கற்பகத் தருவுடன் கூடிய அமராவதியில் உள்ள வெள்ளை யானை வளர்த்த தெய்வயானை தழுவும்,

     பொன் புய --- அழகிய புயத்தை உடையவரே!

      மை புயல் நிறத்த --- கரிய மேகம் போன்ற நிறமுடையவனும்,

     வானவர்கட்கு இறை --- தேவர்களின் தலைவனுமான இந்திரன்,

     உட்கிட --- அஞ்சியபோது,

     அருள் க்பாகர --- அருள்புரிந்த கருணைக்கு உறைவிடமே!

     என நாளும் --- என்று நாள்தோறும்,

     நல்தவர் அர்ச்சனை இட --- நல்ல தவ முனிவர்கள் அர்ச்சனை செய்ய,

     தயாபர வஸ்து என --- கருணையுடைய பெரிய பொருள் என்று, 

     புவியிடத்திலே வளர் --- பூமியில் வளர்ந்திருக்கின்ற,

     நத்து அணி செக்கரன் --- சங்கு ஏந்திய சிவந்த திருக்கரனாம் திருமால்,

     மகிழ்ச்சி கூர் தரு மருகோனே --- மகிழ்ச்சி மிகக் கொள்ளும் மருகரே!

      நட்டுவர் மத்தள முழக்கம் ஆம் என --- நட்டுவர்கள் முழக்கும் மத்தளத்தின் ஒலிதானோ என்று ஐயுறுமாறு,

     மை குல மெத்தவும் முழக்கமே தரு --- கரிய மேகக் கூட்டம் முழக்கம் புரியும்,

     நல் பழநி பதி செழிக்க மேவிய --- நல்ல பழநியம்பதியில் செழிப்புற வீற்றிருக்கும்,      பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!

      நெற்றி வெயர் துளிக்கவே --- நெற்றியிலே வியர்வைத் துளிகள் துளிக்க,

     இரு குத்து முலை குடம் அசைத்து --- குத்திட்டு உள்ள இரண்டு பெரிய குடம் போன்ற முலைகளை அசைத்து,

     வீதியில் நிற்பவர் --- தெருவில் நிற்பவர்கள்,

     மை படர் விழி கலாபியர் --- மை எழுதியுள்ள கண்களையுடைய மயில் போன்ற மாதர்கள்,

     மொழியாலே நித்தம் மயக்கிகள் --- தங்கள் பேச்சினால் தினமும் மயக்குபவர்கள்,

     மணத்த பூமலர் மெத்தையில் வைத்து --- மணம் பொருந்திய அழகிய மலர்பரப்பிய படுக்கையில் வைத்து,

     அதி விதத்திலே --- அநேக சாகசம் புரிவதனால்,

     உடல் நெட்டுவர தொழில் கொடுத்து மேவியும் --- உடலில் திமிர் ஏறும்படியான தொழில்களைக் காட்டித் தந்தும் நெருங்கியும்,

     உறவு ஆடி --- உறவு கொண்டு,

     உற்ற வகைப்படி --- உள்ள வழக்கத்தின்படி,

     பொருள்கள் யாவையும் --- வந்தவர்களிடமிருந்து பணங்கள் முழுவதையும்

     மெத்தவும் நட்பொடு பறித்து --- மிகுதியான நட்பினைக் காட்டிப் பறித்து,

     நாள்தோறும் உற்பன வித்தைகள் தொடுக்கு மாதர்கள் --- நாள்தோறும் புதிது புதிதாகத் தோன்றுகின்ற வித்தைகளைக் காட்டும் விலைமகளிருடைய,

     உறவு ஆமோ --- சம்பந்தம் ஆகுமோ?

     உச்சித மெய்ப்பு உற --- மேலான உண்மை உடையதான,

     அனை தயானவுடன் --- தாயன்புடன்,

     மெய்படு பத்தியின் இணக்கமே பெற --- மெய்யான பத்தியின் சேர்க்கையை அடியேன் பெறுமாறு,

     உள் குளிர் புத்தியை --- உள்ளம் குளிரும் அறிவை,

     எனக்கு --- அடியேனுக்கு,

     நீ தர வருவாயே --- தேவரீர் தந்தருள வந்தருள வேண்டும்.


பொழிப்புரை


         ஞான நூல்களைக் கற்ற தமிழ்ப் புலவராகிய சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மகிழ்ச்சியுடன் ஒப்பற்ற பொன் கொடி போன்ற பரவையார் களிக்குமாறு, அளவற்ற நெல் மலையைத் தந்த காரணராம் கண்ணுதலார் தந்த குமாரரே!

         கற்பக மரத்துடன் கூடிய அமராவதி நகரில் உள்ள வெள்ளை யானை வளர்த்த தெய்வயானை தழுவுகின்ற அழகிய புயத்தினரே!

         கரிய மேகம் போன்ற இந்திரன் அஞ்சித் தஞ்சம் புக, அருள்புரிந்த கருணைக்கு உறைவிடம் என்று நாள்தோறும் நல்ல தவ முனிவர்களால் அர்ச்சிக்கப் பெற்றவரும், தயாமூர்த்தி எனப் பூதலத்தில் வளர்கின்றவரும், சங்கமேந்திய செங்கரத்தினருமாகிய திருமால் மகிழும் மருகரே!

         நட்டுவர்கள் மத்தள முழக்கம்போல் கரிய மேகங்கள் மிக்க ஒலிக்கின்ற நல்ல பழநிப்பதி செழிப்புற வீற்றிருக்கின்ற பெருமிதம் உடையவரே!

         நெற்றியில் வியர்வைத் துளி துளிக்கவும்,  இரண்டு பெரிய தனங்கள் அசையவும் வீதியில் நிற்பவர், மை எழுதிய கண்களையுடைய மயில் போன்றவர், இன்சொற்களால் தினந்தோறும் ஆடவரை மயக்குபவர். நறுமணம் பொருந்திய அழகிய மலர்கள் பரப்பிய மெத்தையில் வைத்து, சரச விதங்கள் புரிந்து, உறவு செய்து, தமக்கு ஏற்ற அளவில் பொருள் முழுவதும் மிக்க நட்புடன் பறித்து, நாள்தோறும், புதிய புதிய சாகசங்கள் செய்யும் மாதர்களாம் விலைமகளிருடைய உறவு ஆகுமோ? மேலான உண்மை அடைய தாயன்புடன், மெய்யான பக்தியின் சேர்க்கையை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்.


விரிவுரை


கற்ற தமிழ்ப் புலவனுக்கு.........நெற்பல அளித்த காரணன் ---

சுந்தரமூர்த்தி நாயனார் முறையே வேத சிவாகமங்களையும் தமிழ் நூல்களையும் நன்கு கற்றவர்.

இவர் திருவாரூரில் பரவையாருடன் வாழ்ந்திருக்கும் காலத்தில், குண்டையூர்க் கிழார் என்பவர் சுந்தரருக்கு நெல்லும் சர்க்கரையும் தவறாது தந்து வந்தார். மழை இன்மையால் வயல் வளம் குன்றியது. அதனால் சுந்தரருக்கு நெல் அனுப்புவதற்கு இயலாமல் குண்டையூர்க் கிழார் வருந்தினார்.

அவருடைய வருத்தம் நீங்க சிவபெருமான் குண்டையூர் முழுவதும் நெல் மலையை வழங்கி அருளினார். இதனைத் "திருவாரூருக்கு எவ்வாறு சேர்ப்பேன்" என்று அவர் வருந்தி சுந்தரர் பால் சென்று கூறினார். சுந்தரர் திருக்கோளிலி என்ற திருத்தலம் சென்று,

நீளநினைந்து, அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்,
வாள்அன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே,
கோளிலி எம்பெருமான்! குண்டையூர்ச் சில நெல்லுப்பெற்றேன்,
ஆள் இலை, எம்பெருமான்! அவை அட்டித் தரப்பணியே”

என்ற திருப்பதிக்கத்தைப் பாடியருளினார்.

இறைவன் கட்டளையால் அந்த நெல் மலை, பூதகணங்களால் திருவாரூரில் சேர்க்கப்பட்டது. பரவையார் அது கண்டு பரமன் அருளை வியந்து, அவ்வூரார் அனைவர்களும் அவரவர் வீட்டின் எல்லையில் உள்ள நெற்குவியல்களை எடுத்துக்கொள்ளுமாறு பறையறை வித்தனர்.


கற்பக நகர்க் களிறு அளித்த மாது அணை பொற்புய ---

கற்பகத் தருக்கள் நிறைந்த நகரம் அமராவதி. அதில் வாழ்கின்ற யானை ஐராவதம். திருமாலின் திருக்கண்ணில் அவதரித்த அமுதவல்லி முருகவேள் கட்டளையிட்ட வண்ணம் இந்திரனிடம் சிறு பெண் குழவியாக சென்றாள். அம்மகவை இந்திரன் தனது பட்டத்து யானை ஐராவதத்தின் பால் தந்து வளர்க்குமாறு செய்தான். ஐராவதம் வளர்த்தபடியால் தெய்வயானை என்று பேர் பெற்றனர்.

மைப்புயல் நிறைந்த வானவர்கட்கு இறை ---

இந்திரன் கருநிறமுடையவன். அவனுக்கு அவ்வப்போது அசுரர்களால் இடர் எய்தும். அஞ்சி நின்ற இந்திரனை அஞ்சல் எனத் திருமால் இடர் தீர்த்து உதவுவார்.


கருத்துரை


சிவகுமாரா! திருமால் மருகா! பழநி வேலா! பத்தியையும் புத்தியையும் தந்தருள்வாய்!        








12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...