அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பகர்தற்கு அரிதான
(பழநி)
பழநியப்பா!
அரிய
செந்தமிழ்க் காவியங்களை உணராமல்,
மாதர்
வலைப்பட்டு அடியேன் வீணே அழியாமுன்,
மயில் மீது வந்து காத்தருள்வீர்.
தனனத்தன
தான தந்தன
தனனத்தன
தான தந்தன
தனனத்தன தான தந்தன ...... தனதான
பகர்தற்கரி
தான செந்தமி
ழிசையிற்சில
பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை ...... யுணராதே
பவளத்தினை
வீழி யின்கனி
யதனைப்பொரு
வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி ...... விரகாலே
சகரக்கடல்
சூழு மம்புவி
மிசையிப்படி
யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் ...... மெலியாமுன்
தகதித்திமி
தாகி ணங்கிண
எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் ...... புரிவாயே
நுகர்வித்தக
மாகு மென்றுமை
மொழியிற்பொழி
பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு ...... மிளையோனே
நுதிவைத்தக
ராம லைந்திடு
களிறுக்கரு
ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் ...... மருகோனே
அகரப்பொரு
ளாதி யொன்றிடு
முதலக்கர
மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு ...... குருநாதா
அமரர்க்கிறை
யேவ ணங்கிய
பழநித்திரு
வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பகர்தற்கு
அரிது ஆன செந்தமிழ்
இசையில்
சில பாடல் அன்பொடு
பயிலப் பல காவியங்களை ...... உணராதே,
பவளத்தினை
வீழியின் கனி
அதனைப் பொரு வாய் மடந்தையர்
பசலைத் தனமே பெறும்படி ...... விரகாலே,
சகரக்கடல்
சூழும் அம்புவி
மிசை
இப்படியே திரிந்து உழல்
சருகு ஒத்து உளமே அயர்ந்து உடல் ......
மெலியாமுன்
தகதித்திமி
தாகி ணங்கிண
என
உற்று எழு தோகை அம்பரி
தனில் அற்புதமாக வந்து அருள் ......
புரிவாயே.
நுகர்
வித்தகம் ஆகும் என்று உமை
மொழியில் பொழி பாலை உண்டிடு
நுவல்மெய்ப்பு உள பாலன் என்றிடும் ......இளையோனே!
நுதி
வைத்த கரா மலைந்திடு
களிறுக்கு
அருளே புரிந்திட,
நொடியில் பரிவாக வந்தவன் ...... மருகோனே!
அகரப்பொருள்
ஆதி ஒன்றிடு
முதல்
அக்கரம் ஆனதின் பொருள்
அரனுக்கு இனிதா மொழிந்திடு ...... குருநாதா!
அமரர்க்கு
இறையே வணங்கிய
பழநித்
திரு ஆவினன்குடி
அதனில்,குடியாய் இருந்து அருள் ......
பெருமாளே.
பதவுரை
வித்தகம் ஆகும் --- ஞானமயமாக விளங்கும்
இதனை,
நுகர் என்று --- “பருகுவாய்” என்று,
உமை மொழியில் பொழி பாலை --- உமாதேவி
(சொல்லியருளிப் பொழிந்த) ஞானப்பாலமுதத்தை,
உண்டிடும் --- அருந்திய,
நுவல் மெய்ப்பு உள பாலன் என்றிடும் --- (வேதாகமங்களாலும்
ஞானங்களாலும்) சொல்லுகின்ற புகழ்ச்சியையுடைய திருக்குமாரர் என்கின்ற,
இளையோனே --- என்றும் இளையவரே!
கரா மலைந்திடு --- முதலையானது போர்புரிய,
நுதி வைத்த களிறுக்கு --- வணக்கத்தை கொண்டு
துதித்த கஜேந்திரன் என்ற யானைக்கு,
அருளே புரிந்திட --- திருவருள் செய்து
காத்தற்பொருட்டு,
நொடியில் பரிவாக வந்தவன் --- நொடிப் பொழுதில்
மிகுந்த அன்புடன் வந்தருளிய நாராயணமூர்த்தியின்,
மருகோனே --- மருகரே!
அகரப்பொருள் ஆதி ஒன்றிடு --- அகார உகார
மகாராதிகள் அடங்கியதும்,
முதல் அக்கரம் ஆனதின் பொருள் --- எல்லாக்
கலைகளுக்கும் எல்லா மந்திரங்களுக்கும் முதலெழுத்துமாகிய பிரணவமந்திரத்தினது பொருளை,
அரனுக்கு இனிதா மொழிந்திடு --- சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்தருளிய,
குருநாதா --- குருநாதரே!
அமரர்க்கு இறையே வணங்கிய ---
தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் வழிபட்டுப் போற்றிய,
பழநி திருவாவினன்குடி அதனில் --- பழநி
மலையின் அடியில் உள்ள திருவாவினன்குடியில்,
குடியாய் இருந்து அருள் --- என்றும் நீங்காது
நிவாசம் புரிந்து அடியார்கட்கு அருள் புரிகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
பகர்தற்கு அரிது ஆன --- இத்தன்மைத்து
என்று சொல்வதற்கு அரியதான
செம்தமிழ் --- செவ்விய தமிழ் மொழியிலுள்ள,
இசையில் சில பாடல் --- இனிமையான சில பாடல்களை
அன்போடு பயில --- மெய்யன்புடன்
கற்றுக்கொள்ளும் பொருட்டு,
பல காவியங்களை உணராதே --- பற்பல தமிழ்
காப்பியங்களைத் தெரிந்து கொள்ளாமல்,
பவளத்தினை --- பவளத்தையும், வீழியின் கனி
வீழியின் கனி அதனைப் பொருவாய் --- விழுதிக்
கனியையும் ஒத்துச் சிவந்திருக்கின்ற வாயையுடைய,
மடந்தையர் --- பரத்தையருடைய,
பசலைத். தனமே பெறும்படி விரகாலே ---
காமநோயால் உண்டாகும் நிற வேறுபாட்டை உடைய தனங்களை அடையத்தக்க விரக வேதனையால்,
சகரக் கடல் சூழும் --- சகர மைந்தர்களால்
தோண்டப்பட்ட கடலால் சூழப்பட்ட,
அம் புவி மிசை --- அழகிய பூமியின் மீது,
இப்படியே திரிந்து --- இவ்வண்ணமாகவே
மோகாடவிக்குள் திரிந்து, உழல் சருகு ஒத்து --- கழல் காற்றிலகப்பட்ட
சருகைப்போல் சாரமற்று,
உளம் அயர்ந்து --- மனமானது மிகவும் சோர்ந்து,
உடல் மெலியாமுன் --- அடியேனுடைய உடம்பு
மெலிந்து அழியாமுன்,
தகதித்திமி தாகிணங்கிணி என உற்று எழு ---
தகதித்திமி தாகிணங்கிண என்ற தாள ஒத்துடன் நடனம் செய்து எழுகின்றதும்,
தோகை அம் பரிதனில் --- தோகையை உடையதும்
அழகியதுமாகிய மயில் வாகனத்தின்மீது,
அற்புதம் ஆக வந்து அருள் புரிவாயே --- அற்புதம்
ஆக வந்து திருவருள் புரிவீர்.
பொழிப்புரை
“ஞானமயமாகின்ற இத் திருப்பாலமுதத்தை
உண்ணுவாய்” என்று உமையம்மையார் சொல்லிப் பொழிந்தருளுகின்ற ஞானப்பாலை அருந்திய, அறிஞர்கள் புகழ்ந்து “திருக்குழந்தையே”
என்று கூறுகின்ற என்றும் இளையவரே!
முதலையால் போர் தொடங்கப்பட்டு
(ஆதிமூலமென்று) வணங்கிப் புகழ்ந்த “கஜேந்திரம்” என்ற யானைக்குத் திருவருள்
புரியும் பொருட்டு கணப்பொழுதிற்குள் அன்புடன் வந்த திருமாலினது திருமருகரே!
அகார உகார மகாரங்களடங்கியதும் வேதாகமாதி
கலைகட்கு முதலக்கரமானதுமாகிய குடிலை மந்திரத்தின் மெய்ப்பொருளை சிவபெருமானுக்கு
இனிமையாக உபதேசித்தருளிய குருநாதரே!
தேவர் கோமானாகிய இந்திரன் வணங்கி
வழிபட்ட பழநிமலையின் அடியில் விளங்கும் திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில்
என்றும் நிலைபெற்று எழுந்தருளி யிருந்து அடியார்கட்குத் திருவருள் செய்கின்ற
பெருமையின் மிக்கவரே!
(மொழியின் இனிமையையும் அமைப்பின்
அருமையையும்) இத்தன்மைத்து என்று சொல்லுதற்கு அரிதாகிய செந்தமிழ் மொழியாலாகிய சில
பாடல்களை தேவரீரிடமுள்ள மெய்யன்புடன் கற்றுக் கொள்ளும் பொருட்டு, பற்பல தமிழ்ப் பெருங்காப்பியங்களை ஓதி
யுணர்ந்து கொள்ளாமல், பவளத்தையும்
விழுதியின் கனியையும் ஒத்து சிவந்திருக்கின்ற வாயையுடைய பெண்களினுடைய காம விகாரத்தால்
உண்டாகும் நிறவேற்றுமை அடைந்து,
விரகதாபத்தால், சகரர்களால் உண்டாகிய கடல் சூழ்ந்த அழகிய
உலகில் இவ்வாறு அவமே திரிந்து சருகுக்கு நிகராகச் சாரமற்று உழன்று, உளந்தளர்ந்து உடல் மெலிந்து அடியேன்
வீணேயழியாமுன், தகதித்திமி
தாகிணங்கிண என்ற தாள ஒத்துடன் நடித்து எழுகின்ற அழகிய மயில் வாகனத்தின் மீது
அற்புதமாக வந்து அருள்புரிவீர்.
விரிவுரை
பகர்தற்கு
அரிதான செந்தமிழ் ----
தமிழ் மிகச் சிறந்த கடவுள் மொழியாம்.
தோன்றித் தோன்றி மறையும் ஏனைய மொழிகள் போன்றதன்று. என்றைக்கும் இளமையாகவே விளங்கி
உன்னுந்தோறும் உன்னுந்தோறும் உவட்டா இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் உயர்வுடையது.
முழுமுதற்
கடவுளாம், முக்கட்பெருமான்
தாமும் ஒரு புலவராயிருந்து, தமிழை ஆராய்ந்தார்
என்னின்- அதன் பெருமையை என்னென்றியம்புவது? நம்பியாரூரருக்குப் “பித்தா” என்றும், சேக்கிழார் பெருமானுக்கு “உலகெலாம்”
என்றும், அருணகிரிநாதருக்கு
“முத்தைத்தரு” என்றும் சிவபெருமானும் செவ்வேடப் பெருமானும் செந்தமிழால்
அடியெடுத்துத் தந்தனர்.
என்பைப்
பெண்ணாக்கியதும், இறந்தவரை
எழுப்பியதும், கல் புணை கொண்டு
கரையேற விட்டதும், முதலை வாய்ப்பட்ட
மகனை வருவித்ததும், கம்பத்து இளையனாராகக்
கந்தவேளைக் காட்சி தரச் செய்ததும் இத்தமிழ் பாடலேயன்றோ? தமிழ்ப் பாடலைக் கேட்கும் பொருட்டு
கண்ணுதலண்ணல் நால்வர்களிடத்தில் செய்த திருவிளையாடல் ஒன்றா இரண்டா? எண்ணிலாதன. என்னே தமிழின் பெருமை!
“முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழ வைப்போன்” என்ற தெய்வத் திருவாக்கு எந்தக்
கல்நெஞ்சத்தாரை உருக்காது? இறைவனை எளிதில்
வசப்படுத்துவதற்குத் தமிழ்மொழியே தக்கதாம். தமிழ்ப்பாடலைப் பாடினால் மனவாசகங்கடந்த
இறைவன் ஆங்கு இனிது இன்பநடம் புரிவன்.
“எத்திடார்க்கு அரிய முத்த, பாத்தமிழ்கொடு
எத்தினார்க்கு எளிய பெருமாளே” --- (தொக்கறா) திருப்புகழ்
என்ற
திருப்புகழடியைச் சிந்திப்பார் சித்தத்தில் தேனமுதூறுகின்றது.
சகரக்கடல் ---
சகரபுத்திரர்கள்
அகழ்ந்து உண்டாக்கியதால் கடலுக்கு “சாகரம்” என்ற பெயருண்டாயிற்று.
சகரன்
அயோத்தியில் தருமசிந்தையுடைய சகரன் என்ற
அரசன் இருந்தான். இவன் தாயின் வயிற்றில் கருவிருந்த போது மாற்றாந்தாய்களால்
நஞ்சூட்டப்பட்டும் இறவாது ஒளரவரிஷியால் காக்கப்பட்டுப் பிறந்ததால் இப்பெயர்
பெற்றனன். இவன் மகப்பேறு இன்றி வருந்தினான். இவனுடைய மனைவியர் இருவர்; கேசினி, சுமதி என்பவர். இவ்விரு மனைவியரோடும்
சகரன் மகப்பேறு வேண்டி இமயமலை சென்று, பிறகு
சிரவணன் என்ற மலைச்சாரலில் நூறு ஆண்டுகள் தவமிருந்தான். பிருகு முனிவர் மனமிரங்கி
“சிறந்த புதல்வர்கள் உனக்குப் பிறப்பார்கள், உனது மனைவியர் இருவருள் ஒருத்திக்கு
குலத்தை வளர்க்கும் ஒரு புதல்வனும்,
மற்றொருத்திக்கு
அறுபதினாயிரம் புதல்வரும், உண்டாவார்கள்” என்று
வரமளித்தார். இவ்வாறு வரமளித்தலும் அரசன் மனைவியர் இருவரும் இருடியை இறைஞ்சி
“எங்களிருவருள் யாருக்கு ஒரு குழந்தை பிறக்கும்? யாருக்குப் பல குழந்தைகள் உண்டாகும்? என்று வினவினார்கள். பிருகு முனிவர்
அவர்களைப் பார்த்து, “உங்களுக்குள்
யாருக்கு குலத்தை நிலைநிறுத்தும் ஒரு குழந்தை வேண்டும்? யாருக்கு நிகரற்ற ஆற்றலும் கீர்த்தியுமுடைய
பல குழந்தைகள் வேண்டும்? அதை நீங்களே
கேளுங்கள்” என்றார். அப்பொழுது விதர்ப்ப நாட்டிறைவன் மகளும் மூத்தவளுமாகிய கேசினி
“எனக்குக் குலத்தை வளர்க்கும் ஒரு குழந்தை வேண்டும்” என்றாள். கருடனுடைய தங்கையும்
இளையாளுமாகிய சுமதி “சிறந்த பலமுடைய அறுபதினாயிரம் வீரர்கள் வேண்டும்” என்றாள்.
அவர் அந்த வரத்தை நல்கினார். அரசனும் அவன் மனைவியரும் முனிவரை வலம் வந்து வணங்கி
நகரமடைந்தார்கள்.
சின்னாட்களுக்குப் பின் கேசினி அஸமஞ்சன்
என்ற ஒரு குழந்தையைப் பெற்றாள். சுமதி ஒரு கர்ப்ப பிண்டத்தை யீன்றாள். அதிலிருந்து
பல கருக்களை நெய்நிறைந்த பாத்திரங்கிளிலிட்டுச் செவிலித் தாய்மார் பலர் வெகுகாலம்
காப்பாற்றி வந்தனர். அவற்றினின்று அறுபதினாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள்.
அவர்களுள் மூத்தவனான அஸமஞ்சன், துஷ்டனாக இருந்தான்.
நாள்தோறும் இளங்குழந்தைகள்ப் பிடித்துத் தூக்கிச் சரயூ நதியில் போடுவதும் அவர்கள்
தண்ணீர் குடித்துத் தத்தளிக்கும்போது வேடிக்கை பார்ப்பதும், சிரிப்பதுமாக இருந்தான். இவனால்
வருந்திய குடிகள் பரிதவித்தார்கள். அயோத்தியா நகர முழுவதும் இவன் செய்கையைக் கண்டு
அலறிற்று, இதைக் கண்ட சகர
மகாராஜன் மனங் கொதித்து, அவனைக் காட்டுக்குத்
துரத்தி விட்டான். அஸமஞ்சனுக்கு அம்சுமான் என்று ஒரு பிள்ளை பிறந்திருந்தான். அவன்
தந்தையைப் போலல்லாமல் சிறந்த நீதிமானாகவும் பலவானாகவும் இருந்தான். எல்லாரும்
அவனிடம் அன்பு பாராட்டினார்கள். எல்லாரிடத்திலும் அவன் அன்பு செய்து வந்தான்.
சகரமகாராஜன் அசுவமேத யாகஞ் செய்யத்
தொடங்கினான். விந்திய மலைக்கும் இயமமலைக்கும் இடையில் அந்த யாகம் நடந்தது.
யாகத்திற்குரிய அசுவம் உலக வலஞ் செய்ய
விடப்பட்டது-அதன்பின் அம்சுமான் வில்லுங் கையுமாக பெரிய தேரேறி அதனைக் காத்தற்
பொருட்டுச் சென்றான். அந்த அசுவமேத யாகத்தைக் கெடுக்க எண்ணிய இந்திரன் ஒரு நாள், அசுர உருவம் கொண்டு ஒருவருக்குந்
தெரியாமல் யாகத்துக்காக விடப்பட்டட அக்குதிரையைத் திருடிக்கொண்டு போய் விட்டான்.
குதிரை மறைந்துவிடவே, யாகத்தை நடத்தி
வைக்கும் புரோகிதர்கள் சகரனைப் பார்த்து “மன்னரே! குதிரையைத் திருடிக்கொண்டு
போனவனைக் கண்டு பிடித்து வதைக்க வேண்டும். குதிரையை மீட்டுக்கொண்டு வரவேண்டும்.
இல்லையேல் நமக்கெல்லாம் துன்ப முண்டாகும். யாகம் நிற்காமல் நடக்கும் வழியைத்
தேடுங்கள்” என்றனர். அதைக் கேட்ட அரசன் தனது அறுபதினாயிரங் குமாரர்களைக்
கூப்பிட்டு, “எனது வீரக் குழந்தைகளே!
நமது குதிரையை அசுரர் கொண்டு போயிருக்க மாட்டார்கள். மந்திரங்களால் திக்பந்தனம்
பண்ணியிருக்கிறோம். அதனை மீறி அசுரர் வரமாட்டார்கள். நமது யாகத்தை எவ்விதத்திலும்
நிறுத்தப்படாது. ஆதலால், நீங்கள் பூவுலக
முழுவதும் பங்கிட்டுக் கொண்டு தேடுங்கள். பாதாளலோகம் வரை பூமியைத் தோண்டித்தான்
ஆகவேண்டுமென்றாலும் அப்படியுஞ் செய்யுங்கள். நான் யாகத்திற்குச் சங்கல்பம் செய்து
கொண்டிருப்பதால், இந்த இடம் விட்டு
நீங்கப்படாது. குதிரையைக் காணுமளவும் எனது பேரனுடனும் புரோகிதர்களுடனும்
யாகசாலையில் இருக்கின்றேன். உடனே செல்லுங்கள்” என்றான்.
முயற்சியிற் சிறந்த அவர்கள்
காலதூதர்களைப் போல் உலகெங்கும் தேடிக் குதிரையைக் காணாமையால் ஆளுக்கு ஒரு யோசனை
தூரமாகப் பங்கிட்டுக் கொண்டு வஜ்ஜிராயுதத்திற் கொப்பான தமது நகங்களாலும்
ஆயுதங்களாலும் பூமியை வெட்டினார்கள். உலகெல்லாம் நடுங்கின. பேரிரைச்சல் உண்டாயிற்று.
பல உயிர்கள் மடிந்தன. நாகர்களிலும் அசுரர்களிலும பலர் இம்சிக்கப்பட்டு
அலறினார்கள். இவ்வாறு அவர்கள் அறுபதினாயிரம் யோசனை தூரம் பூமியை அகழ்ந்து
பாதாளலோகம் காணும்படி பிளந்து எறிந்தார்கள். அறுபதினாயிரம் சகரகுமாரர்களும்
செயற்கரிய இச்செய்கையைச் செய்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், நாகர்கள் முதலிய எல்லாரும் நடுநடுங்கி
பிரமதேவரிடம் ஓடி வணங்கி, “வாணிகேள்வ!
சகரபுத்திரர்கள் பூமி முழுவதும் பிளந்து எறிகின்றார்கள். எதிர்ப்பட்டவர்களை
எல்லாம், இவன் தான் குதிரையைத்
திருடியவன்,” “இவன் தான் யாகத்தைக்
கெடுத்தவன்” என்று சொல்லுகின்றனர். என்றார்கள். பிரமதேவர் “நீங்கள்
பயப்படவேண்டாம். இந்த பூமிதேவி எல்லாம் அறிந்தவரான நாராயணருடைய மனைவி. அவர்
கபிலமுனி வடிவங்கொண்டு இந்த பூமி முழுவதையும் எப்பொழுதும் தாங்கி வருகின்றார், அவருடைய கோபாக்கினியினால் அந்த
அறுபதினாயிரவரும் எரிந்து விடுவார்கள். அஞ்சாதீர்கள்” என்றார். அமரராதியோர்கள்
மகிழ்ந்து தத்தம் இருக்கை யேகினார்கள்.
சகரகுமாரர்கள பூமியைப் பிளந்து கொண்டு
போகும் பொழுது இடிவிழுந்தாற் போன்ற ஒரு பேரொலி கேட்டது. பூமி முழுவதும்
தேடிவிட்டதாக எண்ணி தந்தைபால் திரும்பி வந்து “எந்தையே! உலகமுழுவதும் தேடினோம்.
எதிர்ப்பட்ட தேவர், அசுரர், நாகர், மனிதர் முதலியோரை வதைசெய்தோம்.
குதிரையாவது குதிரையைத் திருடியவனாவது கிடைக்கவில்லை. இனி செயற்பாலது யாது?” என்ன, சகரன் சினந்து, “இன்னும் பூமியைப் பிளவுங்கள்.
குதிரையின்றித் திரும்பி வர வேண்டா” என்றான். மீண்டும் அவர்கள் குதிரையை விரைந்து
தேடினார்கள். பாதாளத்திற்குச் சென்று பார்த்தார்கள். அங்கு அவ்வுலகத்தை தலைமேல்
தாங்கிக் கொண்டு பெரிய மலைபோல் நிற்கும் விருபாக்ஷம் என்ற திக்கஜத்தைக்
கண்டார்கள். அக்கஜத்தின் அடியில் பல யோஜனை
தூரம் தோண்டிப் பார்த்தார்கள். எண்டிசைகளிலும் உள்ள திக்கஜங்களையும் பார்த்து
அவற்றின் அடியிலும் பிளந்து கொண்டு போனார்கள். அங்கு ஒருவர் உட்கார்ந்து கொண்டு
தவம் புரிய கண்டார்கள். அவர்தாம் கபிலமுனிவர் வடிவங்கொண்ட நாராயணர். குதிரையைக்
காணும் பேரவாவுடனிருந்த அவர்கள்,
இத்தனை
நாள் தேடியகப்படாத குதிரை அங்கு மேய்ந்து கொண்டிருக்கக் கண்டார்கள். மட்டற்ற
மகிழ்ச்சி யடைந்தார்கள். “இவன்தான் நமது குதிரையைக் கவர்ந்த கள்வன்” என்று மிகுந்த
கோபங்கொண்டு, மரங்களையும்
மண்ணையும், படைகளையும் வீசி, “துஷ்டா! நில்” என்று சொல்லிக்கொண்டு
அடிக்க ஓடிவந்தார்கள். அம்முனிவர் இவர்கள் செய்த ஆரவாரத்தைக் கேட்டு கண் திறந்து
பார்த்துச் சினத்துடன் “ஹும்” என்று ஊங்காரஞ் செய்தார். உடனே அந்தச் சகரன் மக்கள்
எல்லாரும் எரிந்து சாம்பற் குவியலாகி விட்டார்கள். பிறகு சகரன் தனது பேரனாகிய
அம்சுமானால் அக்குதிரையைக் கொண்டு வரச்செய்து யாகத்தை முடித்தான். பிறது
அம்சுமானுடைய பேரன் பகீரதன் கங்கையைக் கொணர்ந்து சகரபுத்திரர்களுடைய எலும்பின்
மேல் படவைத்ததும் அவர்கள் நற்கதியுற்றார்கள். இதன் விரிவை நூல்கள் வாயில் கண்டு
தெளிக.
சருகு
ஒத்து உளமே அயர்ந்து உடல் மெலியாமுன் ---
“சுழல்காற்றில்
அகப்பட்ட சருகுபோல் இங்குமங்கும் அலைந்து கெட்டேன்” என்ற பிரயோகத்தில் “சருகு
எப்படி சாரமற்று உலர்ந்து விட்டதோ அதுபோல் அடியேனும் பயனற்றுக் கிடக்கின்றேன்”
என்ற குறிப்புங் காணத்தக்கது.
உமை
மொழியில் பொழி பாலை உண்டிடும்....இளையோனே---
முருகப்
பெருமான் ஞானாம்பிகையாரது திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதையுண்டு
ஞானபண்டிதன் என்று நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச் செய்கின்றனர்.
“ஞானாகரன்” “ஞானாங்குமரன்” என்ற திருவாக்கை உன்னுக. அறுமுகனார் அம்மை முலைப்பாலை
விரும்பிச் செய்த திருச்செயலை அடியிற் கண்ட அரும்பாடலில் கண்டு மகிழ்க.
எள் அத்தனை வருந்து உறுபசிக்கும்
இரங்கி, பரந்து
சிறுபண்டி
எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய்
இதழைக்குவித்து, விரித்து
எழுந்து
துள்ளித்
துடித்து, புடைபெயர்ந்து,
தொட்டில் உதைத்து,
பெருவிரலைச்
சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,
தோளின் மகரக்குழைதவழ,
மெள்ளத்
தவழ்ந்து, குறுமூரல்
விளைத்து, மடியின் மீதுஇருந்து,
விம்மிப் பொருமி முகம்பார்த்து,
வேண்டும் உமையாள்
களபமுலை
வள்ளத்து
அமுதுஉண்டு அகமகிழ்ந்த
மழலைச் சிறுவா!
வருகவே!
வளரும் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா! வருகவே! ---திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.
உமையம்மையின்
திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே. ஒருவர்
இறைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அமைந்தது. மற்றொருவர் ஆளுடைய
பிள்ளையார். உமையம்மை அருளிய ஞானப் பாலை உண்டதனால், சிவஞானசம்பந்தர்
ஆனார்.
எண்ணரிய
சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி
உண்
அடிசில் என ஊட்ட, உமையம்மை
எதிர்நோக்கும்
கண்மலர்நீர்
துடைத்து அருளிக் கையிற்பொற் கிண்ணம்அளித்து
அண்ணலை
அங்கு அழுகை தீர்த்து அங்கணனார்
அருள்புரிந்தார்.
யாவருக்கும்
தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.
ஆவதனால்
ஆளுடைய பிள்ளையாராய் அகில
தேவருக்கும்
முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச்
சிவஞான சம்பந்தர் ஆயினார்.
சிவன்
அடியே சிந்திக்கும் திருப்பெருகு
சிவஞானம்,
பவம்
அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,
உவமை
இலாக் கலைஞானம், உணர்வு அரிய
மெய்ஞ்ஞானம்,
தவ
முதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார்
அந்நிலையில். --- பெரிய புராணம்.
நுதி
வைத்த கரா மலைந்திடு களிறுக்கு அருளே புரிந்திட
நொடியில் பரிவாக வந்தவன் ---
முதலையால்
போர் தொடங்கப்பட்டு (ஆதிமூலமென்று) வணங்கிப் புகழ்ந்த “கஜேந்திரம்” என்ற
யானைக்குத் திருவருள் புரியும் பொருட்டு கணப்பொழுதிற்குள் அன்புடன் வந்த திருமால்.
கஜேந்திரன் வரலாறு
திருப்பாற்
கடலாற் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயர
முடையதாயும், பெரிய ஒளியோடு
கூடியதாயும், திரிகூட மென்ற ஒரு
பெரிய மலையிருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த்தருக்கள் நிறைந்து
எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர்
நிலைகளும் நவரத்தின மயமான மணற் குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு
செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய
இமையவரும், அப்சர மாதர்களும்
வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல
தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத்தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது.
அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம்.
அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற
ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே
சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித்
தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண்
யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக்
கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக்
கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி
பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த
யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும்
ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது; கஜேந்திரம்
உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது.
யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது.
திக்கற்றவர்க்குத் தெய்வமே துணையென்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில்
செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு,
உடனே
கருடாழ்வான்மீது தோன்றி, சக்கரத்தை விட்டு
முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம்
தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட
நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து
கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.
“மதசிகரி கதறிமுது
முதலை கவர் தரநெடிய
மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
வருகருணை வரதன்” --- சீர்பாதவகுப்பு.
யானை
பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான்
கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன்
நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன்
கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று
அப்பணியாளன் வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை
நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.
கருத்துரை
உமாதேவியின் திருக்குமாரரே! திருமால்
மருகரே! பரசிவ குருவே! பழநி யாண்டவரே! அரிய செந்தமிழ்க் காவியங்களை உணராமல், மாதர் வலைப்பட்டு வீணே அழிந்து அடியேன்
மெலிவடையாமுன், மயில் வாகனத்தின்
மீது வந்து காத்தருள்வீர்.