அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பஞ்ச பாதகன் (பழநி)
பழநியப்பா!
தீக் குணங்கள் பலவும் நிறைந்த என்னையும் ஆண்டு அருள்.
தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந்
தானதன தானதன
தந்த
தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன்
சூதுகொலை காரன்மதி
பண்கொ
ளாதவன் பாவகட லூடுநுழை ...... பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர்
வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச
மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங்
காரியம லாமலரு
ளன்பர்
பாலுடன் கூடியறி யாதபுக ...... ழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன்
பாவைவிளை யாடுபடி
கந்த
நாடுடன் கூடிவிளை யாடஅருள் ...... புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை
யாகடம் பேடுதொடை யாடுமுடி.....முருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங்
காளியெமை யீணபுகழ்
மங்க
ளாயிசந் தானசிவ காமியுமை ......யருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயில் போலிரச
கொங்கை
மால்குறம் பாவையவல் தீரவர ...... அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின்
றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழநி வாழ்குமர ......பெருமாளே.
பதம்
பிரித்தல்
பஞ்ச பாதகன், பாவி,முழு மூடன்,வெகு
வஞ்ச லோபியன், சூது கோலைகாரன், மதி
பண் கோளாதவன், பாவகடல்ஊடு நுழை ......பவுஷாசை
பங்கன், மோதி அம் பாழ்நரகில் வீணின் விழ,
பெண்டிர், வீடு,பொன் தேடி,நொடி மீதில்மறை
பஞ்ச
மாமலம் பாசமொடு கூடி,வெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதம் உண்ட ஆகடிய காரர் இவர்
தங்கள் வாணிபம்
காரியம் அலாமல், அருள்
அன்பர்
பால் உடன் கூடி அறியாத புகழ் .....அடியேனை,
அண்டர் மால்அயன் தேடி அறியாத ஒளி,
சந்த்ரசேகரன் பாவை
விளையாடு, படிக
அந்த
நாடுடன் கூடி விளையாட அருள் ......புரிவாயே.
வஞ்ச மாசுரன் சேனை கடலோடு குவடும்
கவே இனன் போல
ஒளிர் வேலைவிடு
வண் கையா!
கடம்பு ஏடு தொடை ஆடுமுடி.....முருகோனே!
மங்கை, மோக சிங்கார, ரகுராமர் இட
தங்கை, சூலி, அம் காளி, எமை ஈண புகழ்
மங்கள ஆயி, சந்தான சிவகாமி உமை ......அருள்பாலா!
கொஞ்சு மா சுகம் போலமொழி, நீலகடை,
பெண்கள் நாயகம், தோகைமயில் போல் இரச
கொங்கை, மால் குறம் பாவை அவல் தீர வர ......அணைவோனே!
கொண்டல் சூழும் அம் சோலை மலர், வாவி கயல்
கந்து பாய நின்று
ஆடு துவர் பாகை உதிர்
கந்தியோடு
அகம்சேர் பழநி வாழ்குமர! ......பெருமாளே.
பதவுரை
வஞ்ச மா சுரன் --- வஞ்சனை நிறைந்த பெரிய சூரனும்,
சேனை கடலோடு --- அவனுடைய சேனையும் கடலும்,
குவடும் கவே --- கிரவுஞ்ச மலையும் கவிழ்ந்து அழியுமாறு,
இனன் போல ஒளிர் --- சூரியனைப் போல் ஒளி செய்கின்ற,
வேலை விடு --- வேலாயுதத்தை விடுத்தருளிய,
வண் கையா --- வழங்கும் தன்மையுடைய திருக் கரத்தினரே!
கடம்பு ஏடு தொடை
ஆடு முடி --- கடப்ப மலரின்
இதழ்கள் விளங்கும் மாலை அசைகின்ற திருமுடியுடன் கூடிய,
முருகோனே --- முருகக்கடவுளே!
மங்கை --- மங்கைப் பருவமுடையவரும்,
மோக சிங்கார
ரகுராமர் இட தங்கை --- கண்டோர் காதலிக்கும் அழகுடைய ஸ்ரீராமருடைய தங்கையும்,
சூலி --- திரி சூலத்தை ஏந்தியவரும்,
அம் காளி --- அழகிய
காளிதேவியும்,
எமை ஈண புகழ்
மங்கள ஆயி --- எங்களை ஈன்ற புகழ்
பெற்ற மங்களகரமான அம்மையும்,
சந்தான சிவகாமி --- சந்தான
தருவைப்போல் வேண்டியதைத் தருகின்ற சிவகாமியும் ஆகிய,
உமை அருள்பாலா --- உமாதேவியார் அருளிய குமாரரே!
கொஞ்சு மாசுகம்
போல மொழி --- கொஞ்சுகின்ற அழகிய
கிளி போன்ற மொழியும்,
நீல கடை --- நீல மணி போன்ற கடைக்கண்ணும்,
பெண்கள் நாயகம் --- பெண்குலத்திற்கே
தலைமையும்,
தோகை மயில் போல் --- தோகையுடைய மயில் போன்ற சாயலும்,
இரச கொங்கை --- இன்பத்தைத் தருகின்ற தனங்களும்,
மால் --- பெருமையும் உடைய,
குற பாவை ஆவல் தீர
--- குறமகளாம்
வள்ளிபிராட்டியின் ஆவல் தீருமாறு,
அர அணைவோனே --- அரவணைத்துத் தழுவுபவரே!
கொண்டல் சூழும் --- மேகமானது சூழ்கின்ற,
அம் சோலை --- அழகிய சோலைகளும்,
மலர் வாவி --- மலர்கள் நிறைந்த குளங்களும்,
கயல் --- மீன்கள்,
கந்து பாய --- குதிரைப் பாய்ச்சலாகப் பாய்வதனால்,
நின்று ஆடு --- நின்று அசைகின்ற,
துவர் பாகை உதிர் --- துவர்க்கின்ற பாக்குகள் உதிர்கின்ற,
கந்தியோடு --- பாக்கு மரங்களும்,
அகம் சேர் --- தன்பால் விளங்குகின்ற,
பழநி வாழ் குமர --- பழநியம்பதியில் வாழ்கின்ற குமாரமூர்த்தியே!
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
பஞ்ச பாதகன் --- ஐந்து பாதகங்களையும் செய்தவன்;
பாவி --- பாவி,
முழு மூடன் --- அறிவு முழுதும் இல்லாதவன்,
வெகு வஞ்ச லோபியன்
--- மிக்க வஞ்சனையுடன்
கூடிய உலோபி,
சூது கொலைகாரன் --- சூதாகக் கொலை புரிபவன்,
மதி பண் கொளாதவன் --- அறிவில் நல்ல பண்பைக் கொள்ளாதவன்,
பாவ கடலூடு நுழை --- பாவமாகிய கடலுள் நுழைகின்ற,
பவுஷு ஆசை பங்கன் --- செருக்கிலும் ஆசையிலும் பங்கு பெற்றவனும் ஆகிய நான்,
மோதி அ பாழ்
நரகில் வீணின் விழ --- தாக்குண்டு அந்த நரகத்தில் வீணாக விழும்படி,
பெண்டிர் --- பெண்களையும்,
வீடு --- வீடுகளையும்,
பொன் --- பொன்னையும்,
தேடி --- நிரம்பத் தேடி,
நொடி மீதில் மறை --- ஒரு நொடிப் பொழுதில் மறைகின்றவன்,
பஞ்ச மாமலம்
பாசமொடு கூடி --- ஐந்து
மலங்களுடனும் பாசத்துடனும் கூடி,
வெகு சதிகாரர் --- மிக்க மோசக்காராம்,
அஞ்சு பூதம் உண்ட
அ கடிய காரர் இவர் தங்கள் --- ஐந்து பூதங்களை உண்ட அந்த கடுமையானவர்களாகிய இவர்களுடன்,
வாணிபம் காரியம்
அலாமல் --- வியாபார
காரியங்களில் கலவாத,
அருள் அன்பர் பால்
உடன் கூடி அறியாத --- அருள் பெற்ற அன்பர்களிடம் சேர்ந்து அறியாத,
புகழ் அடியேன் --- புகழுக்கு உரிய அடியேன்,
அண்டர் மால் அயன்
தேடி அறியாத --- தேவர்கள் திருமால்
பிரமன் முதலியோர்கள் தேடியுங் காணாத,
ஒளி சந்த்ர சேகரன்
--- ஒளி உருவராம் பிறைமுடிப் பெருமானும்,
பாவை --- பார்வதியம்மையும்,
விளையாடு --- விளையாடுகின்ற,
படிக அந்த நாடு
உடன் கூடி விளையாட --- படிகம் போன்ற அழகிய சிவலோகத்தில் சேர்ந்து விளையாட,
அருள் புரிவாயே --- திருவருள் செய்வீர்.
பொழிப்புரை
வஞ்சனை உடைய பெரிய
சூரபன்மனும், அவனுடைய சேனையும், கடலும், கிரவுஞ்ச மலையும் கவிழ்ந்து அழியுமாறு, சூரியனைப் போல்
ஒளிர்கின்ற வேலாயுதத்தை விடுத்தருளிய வழங்கும் தன்மையுடன் கூடிய திருக்கரத்தினரே!
கடப்ப மலர் மாலை
அசைகின்ற திருமுடியையுடைய முருகப் பெருமானே!
மங்கைப் பருவம்
உடையவரும், கண்டவர் காதலிக்கும் அழகுடைய ரகு குலத்தில் அவதரித்த இராமருடைய, தங்கையும், சூலத்தை
ஏந்தியவரும், அழகிய காளி தேவியும், எங்களையெல்லாம் ஈன்ற புகழுடைய மங்களகரமான அம்மையும், சந்தான தருவைப் போல்
வேண்டியவற்றை தருகின்றவரும் ஆகிய உமையன்னை பெற்ற திருக்குமாரரே!
கொஞ்சுகின்ற அழகிய
கிளி போன்ற மொழியும் நீலமணி போன்ற கடைக்கண் பார்வையும், பெண்குலத்
தலைமையும், தோகைமயில் போன்ற சாயலும், இன்பத்தை தரும் தனங்களும் பெருமையும் உடைய வள்ளி நாயகியின் ஆவல் தீரத்
தழுவுபவரே!
மேகங்கள்
சூழ்கின்ற, அழகிய சோலைகளும், தாமரைத் தடாகங்களும், குதிரைப் பாய்ச்சலில் மீன்கள் பாய்வதனால், துவர்க்கின்ற பாக்குகள்
உதிர்கின்ற கமுகு மரங்களும் தன்னிடம் சேர்ந்து விளங்கித் திகழும் பழநியம்பதியில்
வாழ்கின்ற குமார மூர்த்தியே!
பெருமிதம் உடையவரே!
ஐந்து பாதகங்களை
புரிபவனும் பாவியும், முழுமூடனும், மிக்க வஞ்சனை செய்கின்ற உலோபியும், சூது கொலை என்பவற்றைச் செய்பவனும், அறிவில் பண்பு
கொள்ளாதவனும், பாவமாகிய கடலில் நுழைபவனும், செருக்கு, ஆசை என்பவற்றில்
பங்கு பெறுபவனும், தீக்குணங்களால் தாக்குண்டு நரகில் வீணாக விழுவதற்கு ஏதுவாக பெண், வீடு, பொன் என்பவற்றைச்
சதாதேடி ஒரு நொடிப் பொழுதில் மறைபவனும், ஐந்து மலங்கள் பாசம் என்பவற்றுடன் கூடி நின்று, மிக்க
மோசக்காரரும், அஞ்சு பூதங்களையுண்டு பொல்லாங்கு புரிபவரும் ஆகிய தீயவருடன் வியாபாரம் புரியாத
(தொடர்பு இல்லாத) திருவருள் பெற்ற அன்பர்களுடன் கூடியறியாதவனும் ஆகிய அடியேன், தேவர் திருமால்
பிரமன் முதலியோர் தேடியுங் காணாத ஒளியுருவராம் சந்திரசேகரும், உமையும்
விளையாடுகின்ற படிகம் போன்ற அழகிய சிவலோகத்தில் சேர்ந்து விளையாடுமாறு திருவருள்
புரிவீர்.
விரிவுரை
பஞ்ச பாதகன் ---
பாவங்கள் பல. அவற்றுள் ஐந்து பெரும் பாவங்களாகும். அவற்றை மகாபாதகங்கள் என்பர்.
கள், காமம், கொலை, களவு, சூது என்பன. இவற்றைப் புரிவோர்
பற்பல நரகங்கள் சென்று துன்புறுவர்.
பாவி ---
பாவத்தைப் புரிபவன் பாவி. பாவம் என்பது வேதத்தால் மறுக்கப்பட்டது. மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் புரிகின்ற பாவங்கள் அநந்தம்.
“கோடிய மனத்தால் வாக்கினால் செயலால்
கொடிய
ஐம்புலன்களால் அடியேன்
தேடிய பாவம் நரகமும் கொள்ளா,
செய்தவம்
புரியினும் தீரா,
வீடிய பிரமர் சிரம்எலாம் கவர்ந்த
விழவுஅறா
வீதிவெண் காடா,
ஆடிய பாதா, அம்பலத்து ஆடும்
ஐயனே, உய்யுமாறு
அருளே” --- பட்டினத்தார்.
மக்கள் அறியாமையால் எத்தனை எத்தனைப் பாவங்களை, எந்த எந்த
வகையினாலோ செய்து குவிக்கின்றார்கள். அவை அத்தனையும் இம்மையிலும் மறுமையிலும் அல்லலை விளைவிக்கின்றன.
முழு மூடன் ---
மூடன் அறிவில்லாதவன், முழுதும்
அறிவிலாதவன் மூடன் தனக்குங்கேடு சூழ்வான், பிறருக்குங் கேடு
விளைவிப்பான். அவனுக்குப் புண்ணியங்
கசக்கும்; பாவம் தித்திக்கும். வேண்டாத வினைகளை ஈட்டுவான்.
வெகு வஞ்ச லோபியன் ---
மனிதனுடைய நற்குணங்கள் அனைத்தையும் மறைக்கின்ற பொல்லாத
குணம் உலோப குணம்.
தாடகை என்ற கொடிய அரக்கி வளமை மிகுந்த மருத நிலத்தையும், சோலைகளையும், வானளாவிய கனி
மரங்களையும், மலர்ப் பூங்காவனங்களையும் அழித்து விட்டாள். அவள் ஒருத்தியே அத்தனையையும் அழித்துவிட்டாள். அது எது போல் இருக்கின்றது என்றால் "உலோப குணம்" ஒன்றே மனிதனுடைய எல்லா
நற்குணங்களையும் அழித்துவிடும். அதுபோல் அவள் அழித்துவிட்டாள் என்று, கம்ப நாடார் கூறுகின்றார்.
லோபிகள் வஞ்சகமாகவே பிறரை ஏமாற்றி மிக்க சாமர்த்தியமாக
நடித்து, உபாசர வார்த்தைகள் ஒரு கோடி புகன்று, பச்சைத் தண்ணீரும் தராமல் அனுப்பிவிடுவார்கள்.
மதி பண் கொளாதவன் ---
பண்பு என்பது பண் என வந்தது. ‘பண்பு’ என்ற ஒன்று மிகச்
சிறந்தது. அது மனிதனிடம்
அமையவில்லையானால் அவன் எத்துனை அறிஞனாயினும் அவன் மனிதனன்று; மரம் என்கின்றார்
திருவள்ளுவர்.
“அரம்போலும் கூர்மையை ரேனும் மரம்போல்வர்
மக்கட் பண்பு இல்லா
தவர்”
பாவ கடலூடு நுழை ---
பாவத்தை ஒரு கடலாகவே சுவாமிகள் உருவகம் புரிகின்றார். கடல் அகன்றது; அதுபோல் பாவமும் அதிகமாக நீண்டுள்ளது என்கிறார்.
பெரியோர்கள் அன்புக் கடலிலும், அருட்கடலிலும்
முழுகுகின்றார்கள். பாவக் கடலில்
முழுகினவனுக்கு உய்வு உண்டா? அந்தோ! கடைத் தேறுவது
எக்காலம்?
பவுஷாசை பங்கன் ---
பங்கன்-பங்கு
கொள்கின்றவன்; பவிஷு-செருக்கு. தான் என்ற செருக்கிலும் ஆசையிலும் பங்கு கொள்கின்றவன்.
பெண்டிர் வீடு பொன் தேடி ---
பெண், மண், பொன், என்ற மூவாசை கொண்டு சதா மனைவி,
மக்கள், வீடு, வாசல், நிலம், புலம், செல்வம் இவற்றையே தேடி அலைகின்றனர்.
பஞ்ச மாமலம் ---
ஐந்து மலங்களாவன; ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்.
வெகு சதிகாரர் ---
அநேக சதிகளைப் புரிபவர். சதி-நயவஞ்சகம்.
அஞ்சுபூதம் உண்ட அகடிய காரர் ---
அஞ்சு பூதம் உண்ட அ கடிய என்று பதப்பிரிவு செய்க. ஐம்பெரும் பூதங்களை உண்ட அந்த கடியவர்.
புகழடியேனை ---
புகழுக்கு உரியவனான அடியேன். ஐ-சாரியை.
படிகந்த நாடு ---
படிக அந்த நாடு. படிகம் போன்ற அதி வெண்மையான ஒளியுலகம் சிவலோகம். அங்கே சிவகாமியுடன் சந்திரசேகரசிவம் சதா அருளாடல் புரிகின்றார்.
மோக சிங்கார ரகுராமர் ---
ராமர் மிக்க அழகுள்ளவர். ஆடவர்கள் கண்டு காதலிக்கும் அழகு.
“ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்”
“ஓவியத் தெழுத வொண்ணா உருவத்தோய்” -கம்பர்
ஈண புகழ் மங்களாயி சந்தான சிவகாமி ---
ஈண-ஈன்ற; அகில உலகங்களையும்
ஈன்றவள். சந்தானம் என்பது
தேவ லோகத் தருக்கள் ஐந்தில் ஒன்று. வேண்டியதை வழங்கும் வள்ளன்மையுடையது.
கொஞ்சுமா சுகம்.......அவல் ---
சுகம்-கிளி. கிளி கொஞ்சிப் பேசும் இயல்புடையது. ஆவல் என்ற சொல் அவல் எனக் குறுகி நின்றது.
கயல் கந்து பாய ---
(கந்து - குதிரை) மீன்கள் குதிரை வேகத்தில் பாய்கின்றன.
துவர்ப்பாகை உதிர் கந்தி ---
துவர்ப்புள்ள பாக்கை உதிர்க்குங் கமுகமரம். கந்தி-பாக்கு மரம்.
கருத்துரை
பழநிநாதா! அடியேன் சிவலோகம் பெற அருள் புரிவாய்.
No comments:
Post a Comment