திரு இன்னம்பர்




திரு இன்னம்பர்

     சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் இன்னம்பூர் என்று வழங்கப்படுகின்றது.

         கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊருக்கு வடக்கே திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் இத் திருத்தலம் இருக்கிறது.

     இங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் திருப்புறம்பயம் என்ற பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.

     கும்பகோணத்தில் இருந்து திருப்புறம்பயம் செல்லும் நகரப் பேருந்துகள் இத்திருத்தலம் வழியாகச் செல்லுகின்றன.


இறைவர்              : எழுத்தறிநாதர், தான்தோன்றியீசர்

இறைவியார்          : கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (இரு சந்நிதிகள்)

தல மரம்              : பலா, சண்பகம்

தீர்த்தம்               : ஐராவத தீர்த்தம்

வழிபட்டோர்          : சூரியன், அகத்தியர், ஐராவதம்

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - எண்திசைக்கும் புகழ்.

                                               2. அப்பர் -1. விண்ணவர் மகுடகோடி,                                                                          2. மன்னும் மலைமகள்,
                                                                3. என்னிலாரும் எனக்கு                                                                                               4. அல்லிமலர் நாற்றத்து


         காவிரியின் வடகரையிலுள்ள இத்தலம் ஒரு பாஸ்கர ஷேத்திரமாக விளங்குகிறது. அம்பர் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயத்தில் வலம் வரும் சூரியன் இழந்த தன் ஆற்றலைப் பெற வேண்டி இத்தல இறைவனை பூஜித்துள்ளான். சூரியன் பூஜித்ததால் இத்தலம் இன்னம்பர் என்று பெயர் பெற்றது. பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரிய ஒளி காலையில் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றது. இதனை சூரியபூஜை என்று கொண்டாடுகின்றனர்.

         தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இஙுகுள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தல விருட்சமாக பலாமரமும், சணபக மரமும் உள்ளன.

         அகத்திய முனிவர் இத்தல இறைவனிடம் தமிழ் இலக்கணம் பயின்றதாக தல புராணம் கூறுகிறது. மேலும் இப்பகுதியை ஆண்டு வந்த மன்னனிடம் கணக்கராக பணியாற்றி வந்தார் சுதஸ்மன் என்ற ஆதிசைவர். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வை செய்து வந்த இவரிடம் ஒரு முறை அரசன் வரவு செலவு கணக்குகளைப் பற்றி விசாரித்தான். அரசரிடம் கணக்கை ஒப்படைத்தார் சுதஸ்மன். கணக்கில் அரசருக்கு ஐயம் ஏற்பட்டது. தன் மீது வீண் பழி வருமோ என்று கவலைப்பட்ட சுதஸ்மன் இத்தல இறைவனிடம் வேண்டினார். ஈசன் சுதஸ்மன் உருவில் மன்னரிடம் சென்று மன்னருக்கு கணக்கில் ஏற்பட்ட ஐயத்தைப் போக்கினார். அதனாலேயே இத்தல இறைவனுக்கு எழுத்தறிநாதர் என்ற பெய்ரும் ஏற்பட்டது.

         குழந்தைகளுக்கு சிறு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வித்யாரம்பம் செய்ய இத்தலத்திற்கு பக்தர்கள் வருகிறார்கள். இறைவன் சந்நிதி முன் நெல்லைப் பரப்பி அதில் எழுதுவதைத் தொடங்குவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபடுவது நல்ல பலனைத் தரும்.

         கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் காண்பது விநாகயரையும் அதன் பின் உள்ள நந்தி மண்டபம். கொடிமரம் இல்லை. இந்த கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு தோக்கிய சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இந்த அம்பாளே பிரதான அம்பாளாகும். மற்றொரு அம்பாள் சந்நிதியும் இங்குள்ளது. அம்பாளின் பெயர் நித்யகல்யானி என்கிற சௌந்தர நாயகி.

         நந்தி மண்டபத்திற்கு பின்னாலுள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இத்தல இறைவன் எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இறைவன் சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்கு தனி சந்நிதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.

     வள்ளல் பெருமான்தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "இட்டமுடன் என் அம்பர் என் அம்பர் என்று அயன்மால் வாதுகொள இன்னம்பர் மேவுகின்ற என் உறவே" என்று போற்றி உள்ளார்.

         காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 296
மொய்திகழ் சோலைஅம் மூதூர்
         முன்அகன்று ,அந்நெறி செல்வார்
செய்தரு சாலிகரும்பு
         தெங்குபைம் பூகத்துஇ டைபோய்,
மைதிகழ் கண்டர்தம் கோயில்
         மருங்குஉள்ள எல்லாம் வணங்கி,
எய்தினர் ஞானசம் பந்தர்
         இன்னம்பர் ஈசர்தம் கோயில்.

         பொழிப்புரை : அரும்புகள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அப்பழமையான திருந்துதேவன்குடி என்னும் ஊரினின்றும் நீங்கி, அவ்வழியில் செல்பவராகி, வயல்களில் விளைந்து நிற்கும் நெல்லும் கரும்பும் தென்னையும் பசிய கமுகும் என்ற இவற்றிடையே சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தை உடைய இறைவரின் கோயில்களுள், அம்மருங்கில் உள்ளனவற்றை யெல்லாம் வணங்கிக்கொண்டு, திருஇன்னம்பர் இறைவரின் கோயிலைத் திருஞானசம்பந்தர் அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 297
இன்னம்பர் மன்னும்பி ரானை
         இறைஞ்சி இடைமடக்கு ஆன
பன்னும்த மிழ்த்தொடை மாலைப்
         பாடல் புனைந்து பரவி,
பொன்அம்க ழல்இணை போற்றி,
         புறம்போந்து, அணைந்து புகுந்தார்,
மன்னுந்த டங்கரைப் பொன்னி
         வடகுரங் காடு துறையில்.

         பொழிப்புரை : திருஇன்னம்பரில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி, இடைமடக்கான யாப்பால் அமைந்த `திருமுக்கால்\' என்ற இறைவரின் புகழைப் பரவும் திருப்பதிகத் தமிழ்ப் பாடல் மாலைகளைச் சாத்தி, வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப் புறப்பட்டுச் சென்று, நிலை பெற்ற பெரிய கரையையுடைய காவிரியின் வட கரையில் உள்ள வடகுரங்காடுதுறையில் வந்து அணைந்தார்.

         குறிப்புரை : திருஇன்னம்பரில் அருளிய பதிகம் `எண்டிசைக்கும்' (தி.3 ப.95) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடற்குரிய நான்கடிகளில் இடையிலுள்ள இரண்டாவது அடி மடங்கி மீண்டும் மூன்றாவது அடியாகவும் வருவது இடைமடக்காகும். இவ்வகையில் நான்கடிகளில் இரண்டும் மூன்றுமாக அமைந்த அடிகள், சொல்லானும் பொருளானும் ஒரு நிலையவாய் இருத்தலின் அவற்றை ஓரடியாகக் கொள்ள, மூன்றடிகளாக அமைதலின் முக்கால் என்றனர்.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 095   திருவின்னம்பர்      திருமுக்கால்      பண் - சாதாரி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
எண்திசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டுஇசைக் கும்சடை யீரே
வண்டுஇசைக் கும்சடை யீர்உமை வாழ்த்துவார்
தொண்டுஇசைக்கும் தொழி லோரே.

         பொழிப்புரை : எட்டுத் திசைகளிலும் புகழ்பரப்பும் திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, வண்டு இசைக்கும் மலர்மாலை அணிந்த சடையுடைய சிவபெருமானே! வண்டிசைக்கும் மலர்மாலை அணிந்துள்ள சடையுடைய உம்மை வாழ்த்தும் அடியவர்கள் தொண்டு நெறியில் சிறப்புடன் நின்று மேம்படுவரே.


பாடல் எண் : 2
யாழ்நரம்பு இன்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீர்உமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை இலரே.

         பொழிப்புரை : யாழின் இனிய இசையை உடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீண்ட தாழ்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே ! நீண்டு தாழ்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து பக்தியுடன் வழிபடுபவர்கள் பெருந்துன்பத்திலிருந்தும் , அதற்குக் காரணமான அரிய வினையிலிருந்தும் நீங்கியவராவர் .


பாடல் எண் : 3
இளமதி நுதலியொடு இன்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீர்உமை வாழ்த்துவார்
உளமதி மிகஉடை யோரே.

         பொழிப்புரை : பிறைச்சந்திரனைப் போன்ற நெற்றியையுடைய உமாதேவியோடு திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய சிவபெருமானே! குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த நீண்ட சடையுடைய உம்மை வாயால் வாழ்த்தி வழிபடுவோர் பேரறிவுடையவராவர்.


பாடல் எண் : 4
இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீர்,உம கழல்தொழும்
அடியவர் அருவினை இலரே.

         பொழிப்புரை : இடிக்குரல் போன்று ஒலிக்கும் முரசு, முழவு போன்ற வாத்தியங்கள் ஒலிக்க, திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, நறுமணம் கமழும் சடைமுடி உடைய சிவபெருமானே! நறுமணம் கமழும் சடைமுடியுடைய உம் திருவடிகளைத் தொழும் அடியவர்கள் வினைநீக்கம் பெற்றவராவர்.


பாடல் எண் : 5
இமையவர் தொழுதுஎழும் இன்னம்பர் மேவிய
உமைஒரு கூறுஉடை யீரே
உமைஒரு கூறுஉடை யீர்,உமை உள்குவார்
அமைகிலர் ஆகிலர் அன்பே.

         பொழிப்புரை : உமையைத் திருமேனியின் ஓர் பாகத்திற் கொண்டவரே, தேவர்கள் தொழுது போற்றும் திரு இன்னம்பரில் எழுந்தருள்பவரே, உமை பாகராகிய உம்மை உள்ளத்தால் நினைந்து ஏத்துபவர் அன்பு அமையப் பெறாதவர் ஆகார்.


பாடல் எண் : 6
எண்அரும் புகழ்உடை இன்னம்பர் மேவிய
தண்அரும் சடைமுடி யீரே
தண்அரும் சடைமுடி யீர்,உமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுஉடை யோரே.

         பொழிப்புரை : நினைத்தற்கரிய அளவில்லாத பெரும்புகழை யுடைய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , குளிர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானே! குளிர்ந்த சடைமுடியுடைய உம்மைச் சார்ந்து வழிபடுபவர்கள் தேவர்களுக்குரிய சிறப்பினை அடைவர்.


பாடல் எண் : 7
எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீர்,உமை நினைபவர்
குழறிய கொடுவினை இலரே.

         பொழிப்புரை : அழகுடன் விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, ஒளி விளங்கும் திருமேனியுடைய சிவபெருமானே! ஒளி விளங்கும் திருமேனியுடைய உம்மை நினைப்பவர்களுடைய, வாட்டும் குழம்பிய கொடுவினை கெட்டழியும்.


பாடல் எண் : 8
ஏத்தஅரும் புகழ்அணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீர்,உமைத் தொழுபவர்
கூர்த்தநல் குணம்உடை யோரே.

         பொழிப்புரை : போற்றுதற்கு அரிய புகழுடைய அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவரும், தூர்த்தனான இராவணனை அடர்த்தவருமான சிவபெருமானே! தூர்த்தனான இராவணனை அடர்த்த உம்மைத் தொழுபவர் பேரறிவும், நற்குணமும் உடையவராவர்.


பாடல் எண் : 9
இயல்உளோர் தொழுதுஎழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரி யீரே
அயனுமால் அறிவரி யீர்,உமது அடிதொழும்
இயல்உளார் மறுபிறப்பு இலரே.

         பொழிப்புரை : நல்லியல்புடையோர் தொழுது எழுகின்ற திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானே ! பிரமனும் , திருமாலும் அறிவதற்கரிய உம் திருவடிகளைத் தொழும் இயல்பு உடையவர்கட்கு மறுபிறப்பு இல்லை.


பாடல் எண் : 10
ஏர்அமர் பொழில்அணி இன்னம்பர் மேவிய
தேர்அமண் சிதைவுசெய் தீரே
தேர்அமண் சிதைவுசெய் தீர்,உமைச் சேர்பவர்
ஆர்துயர் அருவினை இலரே.

         பொழிப்புரை : ஏர் எனப்படும் திருத்தலத்திற்கு அருகிலுள்ள சோலைகள் சூழ்ந்த அழகிய திரு இன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்றவராய், சமண, புத்த நெறிகளிலுள்ள குறைகளைக் காட்டித் தாழ்ச்சியுறச் செய்த சிவபெருமானே! சமண, புத்த நெறிகள் தாழ்வடையும்படி செய்த உம் திருவடிகளைப் போற்றி வணங்குபவர்கட்குத் துன்பமும், அதற்குக் காரணமான தீவினையும் இல்லை .


பாடல் எண் : 11
ஏடுஅமர் பொழில்அணி இன்னம்பர் ரீசனை
நாடுஅமர் ஞானசம் பந்தன்
நாடுஅமர் ஞானசம் பந்தன நல்தமிழ்
பாடவல் லார்பழி இலரே.

         பொழிப்புரை : இதழ்களையுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருஇன்னம்பர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி , தேசமெல்லாம் விரும்புகின்ற ஞானசம்பந்தன் அருளிய நற்றமிழாலான இத்திருப் பதிகத்தை ஓதவல்லவர்கள் பழியற்றவர் ஆவர் .
                                             திருச்சிற்றம்பலம்



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 301
பொங்கு புனல்ஆர் பொன்னியினில்
         இரண்டு கரையும் பொருவிடையார்
தங்கும் இடங்கள் புக்குஇறைஞ்சித்
         தமிழ்மா லைகளும் சாத்திப்போய்
எங்கும் நிறைந்த புகழாளர்
         ஈறுஇல் தொண்டர் எதிர்கொள்ளச்
செங்கண் விடையார் திருஆனைக்
         காவின் மருங்கு சென்று அணைந்தார்.

         பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும் வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும் நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண் விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.

         குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:

1.    திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.

2.    திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.

3.    திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.

4.    திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.

5.    திருப்பந்தணை நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.

6.    திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.

7.    திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.

8.    தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.

9.    திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.

10.திருக்கருவிலிக் கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.

11.திரு அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.

12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.

13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.

14.திருஅன்பில்ஆலந்துறை: `வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை

15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.

16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி: `மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 072    திருஇன்னம்பர்                       திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும்,
பெண்ஒரு பாகர் போலும், பேடுஅலி ஆணர் போலும்,
வண்ணமால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்,
எண்உரு அநேகர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பரில் உறைந்து எல்லோரையும் ஆளும் தலைவர் , தேவர்களுடைய பல மகுடங்களும் நெருங்கிக் கலந்த திருவடிகளை உடையவர் . பார்வதி பாகர் . ஆண் பெண் அலி ஆனவர் . நல்ல அழகுடைய திருமாலும் , பிரமனும் அடிமுடி காணாத வகையில் பெரிய தீ மலையாகக் காட்சி வழங்கியவர் . அட்டமூர்த்தியாயும் அவற்றினும் பல வடிவத்தராயும் உள்ளவர் .

பாடல் எண் : 2
பன்னிய மறையர் போலும், பாம்புஅரை உடையர் போலும்,
துன்னிய சடையர் போலும், தூமதி மத்தர் போலும்
மன்னிய மழுவர் போலும், மாதிடம் மகிழ்வர் போலும்,
என்னையும் உடையர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசர் வேதத்தை ஒலித்து , இடையில் ஆடைமேல் பாம்பைஇறுகக் கட்டி , செறிந்த சடையில் பிறையும் ஊமத்தம் பூவும் அணிந்து , மழுப்படை தாங்கிய கையராய் , பார்வதி பாகராய் , அடியேனையும் அடியவனாக உடையவர் .


பாடல் எண் : 3
மறிஒரு கையர் போலும், மாதுஉமை உடையர் போலும்,
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்,
செறிவுஉடை அங்க மாலை சேர்திரு வுருவர் போலும்,
எறிபுனல் சடையர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : ஒரு கையில் மான்கன்றை ஏந்திப் பார்வதி பாகராய் , தலைமயிரை வலிந்து பிடுங்கிக் கொள்ளும்சமணத் தோற்றத்தை நீக்கி , அடியேனைத் தம் திருத்தொண்டில் ஈடுபடுத்த வல்லவராய் , செறிந்த தலைமாலையை அணிந்த வடிவினராய் , அலைவீசும் கங்கையைச் சடையில் தரித்தவராய் உள்ளார் இன்னம்பர் ஈசன் .


பாடல் எண் : 4
விடமலி கண்டர் போலும், வேள்வியை அழிப்பர் போலும்,
கடவுநல் விடையர் போலும், காலனைக் காய்வர் போலும்,
படமலி அரவர் போலும், பாய்புலித் தோலர் போலும்,
இடர் களைந்து அருள்வர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் , நஞ்சு பொருந்திய கழுத்தினராய் , தக்கன் வேள்வியை அழித்தவராய் , பெரிய காளையைச் செலுத்துபவராய் , கூற்றுவனைக் கோபித்தவராய் , படம் எடுக்கும் பாம்பினை உடையவராய் , பரவிய புலித்தோலை உடுத்தவராய் , அடியார்களுடைய துன்பங்களைப் போக்கி அருள் செய்பவர் ஆவர் .


பாடல் எண் : 5
அளிமலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்,
களிமயில் சாய லோடும் காமனை விழிப்பர் போலும்,
வெளிவளர் உருவர் போலும், வெண்பொடி அணிவர் போலும்,
எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் வண்டுகள் மொய்க்கும் கொன்றைப்பூமாலை பொருந்திய , ஒளிவீசும் சடையை உடையவராய் , மகிழ்ச்சியுறும் மயில் போன்ற மென்மையை உடைய பார்வதி பாகராய் , மன்மதனைச் சாம்பலாகுமாறு விழித்தவராய் , எல்லா அண்டங்களும் நிறைந்த விசுவரூபம் எடுத்தவராய் , திருநீற்றை அணிபவராய் , அடியவர்கள் எப்பொழுதும் வணங்கி வேண்டுவதற்கு எளியவராய் உள்ளார் .


பாடல் எண் : 6
கணைஅமர் சிலையர் போலும், கரிஉரி உடையர் போலும்,
துணைஅமர் பெண்ணர் போலும், தூமணிக் குன்றர் போலும்,
அணைவுஉடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணைஅடி உடையர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் , அம்பு பொருந்திய வில்லினராய் , யானைத்தோற் போர்வையினராய் , பார்வதி பாகராய் , தூய மாணிக்கக் குன்றம் போல்பவராய் , உள்ளத்தில் தியானம் செய்யும் அடியார்கள் கூடி அன்பொடு மலர்களைத் தூவும் திருவடி இணையை உடையவருமாவார் .


பாடல் எண் : 7
பொருப்புஅமர் புயத்தர் போலும், புனல்அணி சடையர் போலும்,
மருப்புஇள ஆமை தாங்கு மார்பில்வெண் நூலர் போலும்,
உருத்திர மூர்த்தி போலும், உணர்விலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் மலையை ஒத்த தோள்களை உடையவராய் , கங்கையை அணிந்த சடையினராய் , பன்றியின் கொம்பு , இளைய ஆமைஓடு எனும் இவற்றை அணிந்த மார்பில் வெண்ணூலைப் பூண்டவராய் , உருத்திர மூர்த்தியாய் , நல் உணர்வு இல்லாத அசுரர்களுடைய மும்மதில்களையும் தீக்கு இரையாக்கிய மேருமலையாகிய வில்லை உடையவருமாவார் .


பாடல் எண் : 8
காடுஇடம் உடையர் போலும், கடிகுரல் விளியர் போலும்,
வேடுஉரு உடையர் போலும், வெண்மதிக் கொழுந்தர் போலும்,
கோடுஅலர் வன்னி தும்பை கொக்குஇறகு அலர்ந்த கொன்றை
ஏடுஅமர் சடையர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் , சுடுகாட்டைத் தங்கும் இடமாகக் கொண்டவராய் , கடுமையான குரலால் ஒலி உண்டாக்குபவராய் , அருச்சுனனுக்காக வேடர் வடிவு எடுத்தவராய் , பிறை சூடியவராய் , கிளைகளில் மலர்கின்ற கொன்றைப் பூவின் இதழ்கள் , தும்பை , வன்னி , கொக்கின் இறகு இவை அணியப்பட்ட சடையை உடையவராய் உள்ளார் .


பாடல் எண் : 9
காறிடு விடத்தை உண்ட கண்டர்,எண் தோளர் போலும்,
நீறுஉடை உருவர் போலும், நினைப்பினை அரியர் போலும்,
பாறுஉடைத் தலைகை ஏந்திப் பலிதிரிந்து உண்பர் போலும்,
ஏறுஉடைக் கொடியர் போலும், இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் , கைப்புச்சுவையை உடைய நஞ்சினை உண்ட கழுத்தினராய் , எட்டுத் தோள்களை உடையவராய் , திருநீறு அணிந்த வடிவினராய் , நினைப்பதற்கும் எட்டாதவராய் , பருந்துகள் நெருங்கும் மண்டை ஓட்டைக் கையில் ஏந்திப் பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்று உண்பவராய் , காளை வடிவம் எழுதிய கொடியினராய் உள்ளார் .


பாடல் எண் : 10
ஆர்த்துஎழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்,
பார்த்தனோடு அமர் பொருது படைகொடுத்து அருள்வர் போலும்,
தீர்த்தமாம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்,
ஏத்தஏழ் உலகும் வைத்தார் இன்னம்பர் ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர் ஈசன் , ஆரவாரித்துக் கொண்டு கயிலை மலையைப் பெயர்க்க வந்த இராவணனை , மலையின் கீழ் நசுக்கியவர் . அருச்சுனனோடு போரிட்டு, அவனுக்குத் தெய்வப் படைகளைக் கொடுத்து அருளியவர் . தூய்மையை நல்கும் கங்கையைச் சடையில் வைத்தவர் . தம்மைப் போற்றிப் புகழ ஏழு உலகங்களிலும் சீவான்மாக்களை வாழ வைத்தவராவார் .

                                             திருச்சிற்றம்பலம்

4. 100    திருஇன்னம்பர்                   திருவிருத்தம்
                                             திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
மன்னும் மலைமகள் கையால் வருடின, மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின, தூக்கமலத்து
அன்ன வடிவின, அன்புஉடைத் தொண்டர்க்கு அமுதுஅரும்பி
இன்னல் களைவன, இன்னரம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின் கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம் பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன. தூய தாமரை போன்ற வடிவின; தம்மாட்டு அன்புடைய அடியவர்களுக்கு அமுது வழங்கி அவர்களுடைய துயர்களைப் போக்குவன.


பாடல் எண் : 2
பைதல் பிணக்குழைக் காளிவெம் கோபம்பங் கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன, சீர்மறையோன்
உய்தற் பொருட்டுவெங்கூற்றை உதைத்தனஉம்பர்க்குஎல்லாம்
எய்தற்கு அரியன, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணை அடிகள் இளம் பிள்ளைகளின் பிணங்களைக் காதணிகளாக அணியும் காளியின் கொடிய கோபத்தைப் போக்குவதற்கு மற்றவர்களால் செய்தற்கு அரிய திருக்கூத்தினை நிகழ்த்துவன. சிறப்புடைய அந்தணனாகிய மார்க்கண்டேயன் உயிர் தப்புவதற்காகக் கொடிய கூற்றுவனை உதைத்தன. தேவர்களுக்கெல்லாம் கிட்டுதற்கு அரியன.


பாடல் எண் : 3
சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை சூடின, தூமலரால்
வணங்கிநின் றுஉம்பர்கள் வாழ்த்தின, மன்னு மறைகள் தம்மில்
பிணங்கிநின்று, இன்னன என்றுஅறி யாதன, பேய்க்கணத்தோடு
இணங்கிநின்று ஆடின, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணையடிகள் தேமல் படர்ந்த கொங்கைகளை உடைய உமாதேவியால் சூடப்பட்டன; தேவர்கள் வணங்கிநின்று தூய மலர்களைத் தூவி வாழ்த்துதலைப் பொருந்தியன; என்றும் நிலைபெற்ற நான்கு வேதங்களும் தம்முள் கருத்து மாறுபட்டு உண்மையில் இத்தன்மையன என்று அறியப்படாதன; பேய்க் கூட்டத்தொடு கலந்து நின்று கூத்து நிகழ்த்தின.


பாடல் எண் : 4
ஆறுஒன் றியசம யங்களின் அவ்வவர்க்கு அப்பொருள்கள்
வேறுஒன்று இலாதன, விண்ணோர் மதிப்பன, மிக்குஉவமன்
மாறுஒன்று இலாதன, மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறுஒன்று இலாதன, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணையடிகள் ஆறு ஆறாக நான்கு வகைகளில் அடங்கிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு வேறாகாது அவ்வப் பொருள்களாக நின்று அருள்புரிவன; தேவர் களால் மதிக்கப்படுவன; தம்மை ஒப்பனவும் தம்மின் மிக்கனவும் இல்லாதன; நில உலகமும் மேல் உலகமும் அழிந்த காலத்தும் தமக்கு அழிவு இல்லாதன.


பாடல் எண் : 5
அரக்கர்தம் முப்புரம் அம்புஒன்றி னால்அடல் அங்கியின்வாய்க்
கரக்க,முன் வைதிகத் தேர்மிசை நின்றன, கட்டுஉருவம்
பரக்கவெம் கான்இடை வேடுஉருவு ஆயின, பல்பதிதோறு
இரக்க நடந்தன, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணை அடிகள், அரக்கர் களுடைய முப்புரங்களும் அம்பு ஒன்றினால் அழிக்கும் நெருப்பிற்கு இரையாகி மறையுமாறு அக்காலத்தில் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றன; எடுத்துக்கொண்ட வேடர் வடிவம் சிறக்குமாறு கொடிய காட்டிலே வேடர்களுடைய அடிகளின் வடிவின ஆயின; பல ஊர்கள்தோறும் பிச்சை எடுக்க நடந்தன.


பாடல் எண் : 6
கீண்டும் கிளர்ந்தும்பொன் கேழல்முன் தேடின, கேடுபடா
ஆண்டும் பலபல ஊழியும் ஆயின, ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்கநின்று ஆடின, மேவுசிலம்பு
ஈண்டும் கழலின, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணையடிகள், நிலத்தைக் கிழித்தும் கிளரியும் பொலிவை உடைய பன்றி வடிவெடுத்த திருமாலால் தேடப்பட்டன; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊழிகள் கடந்தாலும் கெடுதியை அடையாதன; வேதங்களின் விரும்பிய பொருள் புலப்படுமாறு திருக்கூத்து நிகழ்த்தின; விரும்பிய சிலம்பும் கழலும் அணிந்தன.


பாடல் எண் : 7
போற்றும் தகையன, பொல்லா முயலகன் கோபப்புன்மை
ஆற்றும் தகையன, ஆறு சமயத்து அவர்அவரைத்
தேற்றும் தகையன, தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணையடிகள், வழிபடத் தக்கன; கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையன; அறு வகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தெளிவிக்கும் தன்மையன; தெளிவடைந்த அடியவர்களை மேம்பட்ட நெறிக்கண் உயர்த்தும் தன்மையன.


பாடல் எண் : 8
பயம்,புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன, பார்ப்பதிதன்
குயம்பொன்மை மாமலர் ஆகக் குலாவின, கூடஒண்ணாச்
சயம்புஎன் றே,தகு தாணுஎன் றே,சதுர் வேதங்கள்நின்று
இயம்பும் கழலின, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணை அடிகள், அச்சமும் கீழ்மையும் ஒரு சேர வழங்கும் பாவங்களைப் போக்குவன; பார்வதியினுடைய தனங்களாகிய பொலிவுடைய தாமரை மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாகிய தம் இனத்தனவாகக் கொண்டு நட்புச் செய்தன; அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மாத்திரம் அடைய முடியாத தான்தோன்றி என்று சொல்லத் தகுந்த சிவபெருமானே அத்திருவடிகள் என்று நான்கு வேதங்களும் இயம்பும் சிறப்பினவாய்க் கழல்களை அணிந்தன, சிவபெருமான் செய்யும் அருள்களை அவன் திருவடிகளே வழங்கும் என்பதாம்.


பாடல் எண் : 9
அயனொடு மால்,இந் திரன்,சந்த்ர ஆதித்தர் அமரர்எலாம்
சயசய என்றுமுப் போதும் பணிவன, தண்கடல்சூழ்
வியன்நிலம் முற்றுக்கும், விண்ணுக்கும், நாகர் வியன்நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரான் தன் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன் மற்றுள்ள தேவர்கள் எல்லோரும் சய சய என்று பல்லாண்டு பாடிக் காலை நண்பகல் அந்தி என்ற முப்பொழுதுகளிலும் பணியும் திறத்தன. குளிர்ந்த கடலால் சூழப்பட்ட பரந்த இந்த நில உலகத்தில் உள்ளவர்களுக்கும் தேவர் உலகத்தவருக்கும் நாகர் உலகத்தவருக்கும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் நல்குவன.


பாடல் எண் : 10
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன, தாமரைப்போது
உருக்கிய செம்பொன் உவமன் இலாதன, ஒண்கயிலை
நெருக்கிய வாள்அரக் கன்தலை பத்தும் நெரித்து,அவன்தன்
இருக்குஇயல்பு ஆயின, இன்னம்ப ரான்தன் இணைஅடியே.

         பொழிப்புரை : இன்னம்பரானுடைய இணையடிகள், செருக்குற்ற தக்கனுடைய வேள்வியை அழித்தன; தாமரைப் பூ, உருக்கிய செம் பொன் என்பனவும் தமக்கு உவமம் ஆகாத வகையில் அவற்றிலும் மேம்பட்டன; கயிலையைப் பெயர்க்க முற்பட்ட கொடிய இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரித்து அவனால் பாடப்பட்ட வேதங்களின் இயல்பைத் தம் இயல்பாகக் கொண்டன.

                                             திருச்சிற்றம்பலம்


5. 021    திருஇன்னம்பர்                திருக்குறுந்தொகை
                                              திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
என்னில் ஆரும் எனக்குஇனி யார்இல்லை,
என்னிலும் இனி யான்ஒரு வன்உளன்,
என் உளே உயிர்ப் பாய்ப்புறம் போந்து,புக்கு
என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான்; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன் .


பாடல் எண் : 2
மட்டுஉண் பார்கள், மடந்தையர் வாள்கண்ணால்
கட்டுஉண் பார்கள், கருதுவது என்கொலோ,
தட்டி முட்டித் தள்ளாடித் தழுக்குஉழி
எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : கள்ளுண்பவர்களும் , பெண்கள் வாட் கண்ணால் கட்டுண்பவர்களும் கருதுவது எதனை ? தட்டி முட்டித் தள்ளாடி விழும்போது துணையாவார் எட்டு மூர்த்தியாகிய இன்னம்பர் ஈசனல்லனோ ?


பாடல் எண் : 3
கனலும் கண்ணியும் தண்மதி யோடுஉடன்
புனலும் கொன்றையும் சூடும் புரிசடை,
அனலும், சூலமும், மான்மறிக் கையினர்,
எனலும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : கண்ணியும் கொன்றையும் , தண்மதியோடு கங்கையும் சூடும் முறுக்குண்ட சடையர் , அனல் , சூலம் , மான் மறி கூடிய கையை உடையவர் , என்று சொன்னவுடன் அவ்இன்னம்பர் ஈசன் என்மனத்தே வெளிப்பட்டொளிரும் .


பாடல் எண் : 4
மழைக்கண் மாமயில் ஆலும் மகிழ்ச்சியால்
அழைக்கும் தன்அடி யார்கள்தம் அன்பினைக்
குழைக்கும், தன்னைக் குறிக்கொள வேண்டியே
இழைக்கும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : மழைக்காலத்தில் கரிய மயில்கள் ஆரவாரிக்கும் மகிழ்ச்சியைப் போன்று மகிழ்ந்து அழைக்கும் தன்னடியார்களின் அன்பினைத் தன்பாற் குறிக்கொள்ள வேண்டிக் குழைக்கும் பெருமை உடையவன் என்மனத்து இழைக்கும் இன்னம்பர் ஈசனாவன் .


பாடல் எண் : 5
தென்ன வன்,எனை ஆளும் சிவன்அவன்,
மன்ன வன்,மதி அம்மறை ஓதியான்,
முன்னம் அன்னவன், சேர்வன பூழியான்,
இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : தென்னவனும் , எனையாளும் சிவனும் , மன்னவனும் , மதித்தற்குரிய அழகிய மறைகளை ஓதியவனும் , உலகத் தோற்றத்திற்கு முன்னரே நிலைத்திருந்தவனும் , ஊழியிடத்துச் சேரும் திருநீற்றினை அணிந்தவனும் ஆகிய பெருமான் சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஈசனாவான் .


பாடல் எண் : 6
விளக்கும் வேறு படப்பிறர் உள்ளத்தில்,
அளக்கும் தன்அடி யார்மனத்து அன்பினை,
குளக்கும் என்னைக் குறிக்கொள வேண்டியே
இளக்கும் என்மனத்து இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : அடியவரல்லாத பிறர் உள்ளத்தில் தன்னை வேறுபடத் தோற்றுபவனும் , தன்னடியார் மனத்து அன்பினை அளப்பவனும் . தொடர்பு கொள்ளும் என்னைக் குறிக்கொள வேண்டி என் மனத்தினின்று உருகச் செய்பவனும் இன்னம்பர் ஈசனேயாவன் .


பாடல் எண் : 7
சடைக்க ணாள்புன லாள்,அனல் கையது,ஓர்
கடைக்க ணால்மங்கை நோக்குஇம வான்மகள்
படைக்க ணால்பரு கப்படு வான்,நமக்கு
இடைக்க ணாய்நின்ற இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : கங்கையாள் சடைக்கண் உள்ளாள் ; அவன் கையது அனல். அக்கங்கையாகிய மங்கை ஒரு கடைக்கண்ணால் நோக்க , இமவான் மகளாம் பார்வதி தனது படையனைய கண்களால் அழகைப் பருகநிற்பவன் ; நமக்கு துன்பக் காலத்துப் பற்றுக்கோடாய் நின்ற இன்னம்பர் ஈசன் .


பாடல் எண் : 8
தொழுது, தூமலர் தூவித் துதித்து, நின்று,
அழுது, காமுற்று, அரற்றுகின் றாரையும்,
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்,
எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : தூமலர்களைத் தூவித் தொழுது , துதித்து , நின்று அழுது விருப்புற்று அரற்றுகின்ற மெய்யன்பர்களையும் , வாளா பொழுதுபோக்கிப் புறக்கணிப்பார்களையும் கீழ்க்கணக்கெழுதும் இறைவன் இன்னம்பரில் உறையும் ஈசனேயாவன் .

  
பாடல் எண் : 9
விரியும் தண்இள வேனிலில் வெண்பிறை,
புரியும் காமனை வேவப் புருவமும்
திரியும், எல்லைஇல் மும்மதில் தீயெழுந்து
எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : வெள்ளிய பிறைமதி தோன்றும் குளிர்ந்த இள வேனிற் காலத்திலே காமத்தை விளைக்கும் மன்மதன் வெந்தழியும்படி புருவநெரித்தவன் , நெறிகடந்த மும்மதில் தீயெழுந்தெரியுமாறு நோக்கிய இன்னம்பர் ஈசனே .


பாடல் எண் : 10
சனியும், வெள்ளியும், திங்களும், ஞாயிறும்
முனிவ னாய், முடி பத்துஉடை யான்தனைக்
கனிய ஊன்றிய காரணம் என்கொலோ,
இனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே.

         பொழிப்புரை : நமக்கு இனியவனாய் நின்ற இன்னம்பர் ஈசனே ! சனியும் , ஞாயிறும் , வெள்ளியும் , திங்களுமாகிய கோள்களை முனிபவனாகிய பத்துத்தலையுடைய இராவணனைக் கனியுமாறு திருவிரலால் ஊன்றிய இன்னாமைக் காரணம் என்னையோ ?

                                             திருச்சிற்றம்பலம்


6. 089    திருஇன்னம்பர்          திருத்தாண்டகம்

                                      திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
அல்லிமலர் நாற்றத்து உள்ளார் போலும்,
         அன்புஉடையார் சிந்தை அகலார் போலும்,
சொல்லின் அருமறைகள் தாமே போலும்,
         தூநெறிக்கு வழிகாட்டும் தொழிலார் போலும்,
வில்லில் புரமூன்று எரித்தார் போலும்,
         வீங்குஇருளும் நல்வெளியும் ஆனார் போலும்,
எல்லி நடம்ஆட வல்லார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தலத்துத் தான்தோன்றி யீசனாராகிய சிவபெருமானாரே அக இதழ்களையுடைய மலர்களின் நறுமணத்துள் நிலவி இன்பந்தருபவரும் , தம்மாட்டு அன்புடையார் சிந்தையை விட்டு அகலாதவரும் , தாமே சொற்களையுடைய அரிய வேதங்கள் ஆனவரும் , வீட்டுநெறிக்கு வழியாகும் மெய்ஞ்ஞானத்தை உணர்த்தும் தொழிலினரும் , வில்லால் புரமூன்றையும் எரித்தவரும் , மிக்க இருளும் மிக்க ஒளியும் ஆனவரும் , இரவில் கூத்து ஆட வல்லவரும் ஆவார் .

  
பாடல் எண் : 2
கோழிக் கொடியோன்தன் தாதை போலும்,
         கொம்புஅனாள் பாகம் குளிர்ந்தார் போலும்,
ஊழி முதல்வரும் தாமே போலும்,
         உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்,
ஆழித்தேர் வித்தகரும் தாமே போலும்,
         அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்,
ஏழு பிறவிக்கும் தாமே போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாகிய சிவ பெருமான் கோழிக்கொடியோனாகிய முருகனுக்குத் தந்தையாரும் , பூங்கொம்பு போன்ற உமாதேவியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும் , ஊழியின் நிகழ்ச்சிகளுக்குத் தலைவரும் , தம்மை நினைப்பவர் உள்ளத்தில் தாம் நீங்காமல் உள்ளவரும் , சூரிய சந்திரர்களாகிய சக்கரங்களையுடைய தேரினை ஊர வல்லவரும் , தம்மை அடைந்தவரிடத்து அன்புடையவரும் , எழுவகைப் பிறவிகளுக்கும் தாமே காரணரும் ஆவார் .


பாடல் எண் : 3
தொண்டர்கள் தம்தகவின் உள்ளார் போலும்,
         தூநெறிக்குந் தூநெறியாய் நின்றார் போலும்,
பண்டுஇருவர் காணாப் படியார் போலும்,
         பத்தர்கள் தம்சித்தத்து இருந்தார் போலும்,
கண்டம் இறையே கறுத்தார் போலும்,
         காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்,
இண்டைச் சடைசேர் முடியார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , தொண்டர்களுடைய மெய்யன்பினிடத்துத் திகழ்பவரும் , தூய ஞானநெறிக்குப் பற்றுக்கோடாய் நின்றவரும், பண்டு மாலும் அயனும் காண இயலாத நிலையினரும் , பக்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , கண்டம் சிறிது கறுத்தவரும் , மன்மதனையும் இயமனையும வெகுண்டு ஒறுத்தவரும் , முடி மாலையணிந்த சடைமுடியவரும் ஆவார் .


பாடல் எண் : 4
வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை
         வளர்சடைமேல் வைத்துஉகந்த மைந்தர் போலும்,
ஊன்ஒத்த வேல்ஒன்று உடையார் போலும்,
         ஒளிநீறு பூசும் ஒருவர் போலும்,
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்,
         தம்மில் பிறர்பெரியார் இல்லார் போலும்,
ஏனத்து எயிறுஇலங்கப் பூண்டார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே வானில் திகழும் பிறைச்சந்திரனாகிய கண்ணியைத் தம் வளரும் சடைமேல் வைத்து மகிழ்ந்த வலியவரும் , ஊன் பொருந்திய சூலம் ஒன்றை உடையவரும் , ஒள்ளிய திருநீற்றைப் பூசும் ஒருவரும் , முச்சந்தி நேரங்களிலும் வழங்கப்படும் அருக்கியம் முதலியவற்றை ஏற்று அருள்பவரும் , தம்மினும் பெரியர் பிறர் இல்லாதவரும் , பன்றியினது கொம்பு மார்பில் விளங்க அணிந்தவரும் ஆவார் .


பாடல் எண் : 5
சூழும் துயரம் அறுப்பார் போலும்,
         தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்,
ஆழும் கடல்நஞ்சை உண்டார் போலும்,
         ஆடல்உகந்த அழகர் போலும்,
தாழ்வின் மனத்தேனை ஆளாக் கொண்டு
         தன்மை அளித்த தலைவர் போலும்,
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான்தோன்றி ஈசனாராகிய சிவபெருமானாரே , வந்து வளைத்துக்கொள்ளும் துயரங்களை நீக்குபவரும் , படைப்பு அழிப்புக்களைச் செய்து நிற்பவரும் , ஆழ மிக்க கடலிடத்துத் தோன்றிய நஞ்சை உண்டவரும் , கூத்து ஆடுதலை விரும்பும் அழகரும் , தாழ்ந்த மனத்தினை உடைய அடியேனையும் அடிமைகொண்டு ஞானமளித்த தலைவரும் , ஏழுவகையாகவும் பிறத்தலை அறுத்தெறிபவரும் ஆவார் .


பாடல் எண் : 6
பாதத்து அணையும் சிலம்பர் போலும்,
         பார்ஊர் விடைஒன்று உடையார் போலும்,
பூதப் படையாள் புனிதர் போலும்,
         பூம்புகலூர் மேய புராணர் போலும்,
வேதப் பொருளாய் விளைவார் போலும்,
         வேடம் பரவித் திரியும் தொண்டர்
ஏதப் படாவண்ணம் நின்றார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாராகிய சிவ பெருமானாரே , திருவடிகளில் கட்டப்பட்ட சிலம்பினரும் , பூமிமேல் நடக்கும் ஓர் இடபத்தை ஊர்தியாக உடையவரும் , பூதப்படையைச் செயற்படுத்தும் புனிதரும் , புகலூரைப் பொருந்திய புராணரும் , வேதங்களின் பொருளாய் விளங்குபவரும் , திருநீறு , கண்டிகை , சடை , முதலியவை எங்கே காணப்படினும் , அங்கேயெல்லாம் தம்மை ஏத்தி இறைஞ்சி நிற்கும் தொண்டர் துன்பப்படா வண்ணம் காத்து நின்றாரும் ஆவார் .


பாடல் எண் : 7
பல்ஆர் தலைஓட்டில் ஊணார் போலும்,
         பத்தர்கள்தம் சித்தத்து இருந்தார் போலும்,
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும்,
         கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்,
பொல்லாத பூதப் படையார் போலும்,
         பொருகடலும் ஏழ்மலையும் தாமே போலும்,
எல்லாரும் ஏத்தத் தகுவார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானாரே , பற்கள் நிறைந்த தலையோட்டில் உணவு ஏற்று உண்பவரும் , பத்தர்களுடைய சித்தத்தில் இருந்தவரும் , மெய்ந்நூல்களைக் கல்லாதவரால் காணப்படாதவரும், அவற்றைக் கற்பவரின் துன்பங்களைக் களைபவரும் , கொடுமை மிகும் பூதப்படையினரும் , அலைமோதுங் கடல் ஏழும் குலமலை ஏழும் தாமே ஆனவரும் , எல்லாரும் ஏத்துதற்குக் காரணமான அருளினரும் ஆவார் .


பாடல் எண் : 8
மட்டு மலியும் சடையார் போலும்,
         மாதைஓர் பாகம் உடையார் போலும்,
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும்,
         காலன்தன் வாழ்நாள் கழிப்பார் போலும்,
நட்டம் பயின்றுஆடும் நம்பர் போலும்,
         ஞாலம்எரி நீர்வெளிகால் ஆனார் போலும்,
எட்டுத் திசைகளும் தாமே போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை : இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே , பூக்களின் தேன்மிகும் சடையினரும் , உமையை ஒரு பாகத்திலுடையவரும் , துன்பம் , பிணிகளைத் தவிர்ப்பவரும் , இயமன் உயிருக்கு இறுதி கண்டவரும் , எப்பொழுதும் கூத்தாடுந் தலைவரும் , நிலம் , நீர் , தீ , வளி , ஆகாசம் ஆம் ஐம்பூதங்கள் ஆனவரும் , எட்டுத் திசைகளும் தாமே ஆனவரும் ஆவார் .


பாடல் எண் : 9
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
         கழற்போது தந்துஅளித்த கள்வர் போலும்,
செருவில் புரமூன்றும் அட்டார் போலும்,
         தேவர்க்கும் தேவராம் செல்வர் போலும்,
மருவிப் பிரியாத மைந்தர் போலும்,
         மலரடிகள் நாடி வணங்கல் உற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான்தோன்றியீசனாராகிய சிவ பெருமானாரே நான் கருவாய்ப் பொருந்திய காலத்திலேயே மெய்யுணர்வைப் பெறும் அவாவை என்பால் உண்டாக்கிப் பின் திருவடித் தாமரைகளைத் தந்து காத்த கள்வரும் , போரில் பகைவர்புரம் மூன்றையும் அழித்தவரும் , தேவர்க்கும் தேவராம் செல்வரும் , கூடியபின் பிரியாத மைந்தரும் , தம்முடைய மலரடிகளை விரும்பி வணங்கிய பிரமனுக்கும் திருமாலுக்கும் ஒப்பற்ற தலைவராய் நின்றவரும் ஆவார் .


பாடல் எண் : 10
அலங்கல் சடைதாழ ஐயம் ஏற்று
         அரவம் அரைஆர்க்க வல்லார் போலும்,
வலங்கை மழுஒன்று உடையார் போலும்,
         வான்தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்,
விலங்கல் எடுத்துஉகந்த வெற்றி யானை
         விறல்அழித்து மெய்ந் நரம்பால் கீதம் கேட்டு,அன்று
இலங்கு சுடர்வாள் கொடுத்தார் போலும்,
         இன்னம்பர்த் தான்தோன்றி ஈச னாரே.

         பொழிப்புரை :இன்னம்பர்த் தான் தோன்றியீசனாராகிய சிவபெருமானார் கொன்றை மாலையணிந்த சடை தாழப் பிச்சை ஏற்க வல்லவரும் , பாம்பினை இடையில் கட்டவல்லவரும் , வலக்கையில் மழுப்படை ஒன்றை உடையவரும் , தருக்கினால் உயர்ந்த தக்கனுடைய வேள்வியைச் சிதைத்தவரும் , கயிலை மலையை எடுத்த அளவில் தனது வெற்றி பற்றி மகிழ்ந்த இராவணனது அவ்வெற்றியை அழித்துப் பின் அவன் தன் உடல் நரம்பால் எழுப்பிய இசையைக் கேட்டு அவற்கு ஒளிவாளைக் கொடுத்தவரும் ஆவார் .

                                                திருச்சிற்றம்பலம்



No comments:

பொது --- 1123. உற்பாதப் பூதக் காயத்தே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உற்பாதப் பூதக் காயத்தே (பொது) முருகா!  மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசித்து அருளவேண்டும். தத்தா தத்தா தத்தா...