அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தலைவலி மருத்தீடு
(பழநி)
பழநியப்பா!
நோயற்ற வாழ்வும், அடியார் உறவும் அடியேனுக்குத் தந்து,
அடியேன் உனைப் பாடிப் பரவ,
மயில் மீது வந்து
அருள வேண்டும்.
தனதன
தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன ...... தனதான
தலைவலி
மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ......
யணுகாதே
தலமிசை
யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும்
...... விதியாதே
உலைவற
விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ......
ளிருபாதம்
உளமது
தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ......
வரவேணும்
அலைகட
லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ..... மருகோனே
அறுகினை
முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் .....வருவோனே
பலகலை
படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு
......மணவாளா
பதுமவ
யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ
ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தலைவலி, மருத்தீடு, காமாலை, சோகை, சுரம்,
விழிவலி, வறள்சூலை, காயா சுவாசம்,வெகு
சலமிகு விஷப்பாகம், மாயா விகார பிணி ...... அணுகாதே,
தலமிசை
அதற்கு ஆன பேரோடு கூறி, இது
பரிகரி, எனக் காது கேளாது போலும்,அவர்
சரியும் வயதுக்கு ஏது தாரீர், சொலீர், எனவும் .....விதியாதே,
உலைவு
அற, விருப்பாக, நீள்காவின் வாசமலர்
வகைவகை எடுத்தே தொடா, மாலிகா ஆபரணம்
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் .....இருபாதம்
உளம் அது
தரித்தே, வினாவோடு பாடி, அருள்
வழிபட எனக்கே, தயாவோடு தாள் உதவ,
உரகம் அது எடுத்து ஆடும் மேகார மீதின்மிசை
......வரவேணும்,
அலைகடல்
அடைத்தே, மகா கோர ராவணனை
மணி முடி துணித்து, ஆவியே ஆன ஜானகியை
அடல் உடன் அழைத்தே கொள் மாயோனை மாமன்எனும்
.....மருகோனே!
அறுகினை
முடித்தோனை, ஆதாரம் ஆனவனை,
மழு உழை பிடித்தோனை, மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை, மா தாதையே எனவும் .....வருவோனே!
பலகலை
படித்து ஒது பாவாணர் நாவில் உறை
இரு சரண வித்தார வேலாயுதா! உயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள் மேவ மோகம் உறு
......மணவாளா!
பதும
வயலில் பூக மீதே வரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநி வரு
கற்பூர கோலாகலா அமரர் ...... பெருமாளே.
பதவுரை
அலை கடல் அடைத்தே --- அலைகளையுடைய
சமுத்திரத்தை அணை கட்டி அடைத்து (ஏ-அசை),
மகா கோர ராவணனை --- மிகவும் கொடுமையைச் செய்த
ராவணனை,
மணி முடி துணித்து --- இரத்தின
மகுடங்களையுடைய அவனது தலைகளை அறுத்துத் தள்ளி,
ஆவியே ஆன சானகியை --- தனது உயிருக்கு நிகரான
சீதா பிராட்டியாரை,
அடலுடன் அழைத்தே கொள் --- வெற்றியுடன்
(சிறையினின்று) மீட்டுக் கொண்ட
மாயோனை மாமன் எனும் மருகோனே --- மாயைக்குத்
தலைவராகிய ஸ்ரீநாராயணமூர்த்தியை “மாமன்” என்று அழைக்கும் மருகரே!
அறுகினை முடித்தோனை --- அறுகம்புல்லை
சடைமுடியில் தரித்துக் கொண்டிருப்பவரும்,
ஆதாரம் ஆனவனை --- எல்லா உலகங்களுக்கும் உயிர்களுக்கும்
ஆதராமாக இருப்பவரும்,
மழு உழை பிடித்தோனை --- மழுவையும் மானையும்
தமது திருக்கரத்தில் தாங்கியிருப்பவரும்,
மா காளி நாண --- நடிப்புத் திறத்தில்
வல்லவளான காளியானவள் வெட்கத்தையடைந்து தோல்வியுறுமாறு,
முனம் அவைதனில் நடித்தோனை --- முன்னாளில்
(தேவர் மூவாதிகள் கூடிய) பொற் சபையின்கண் அற்புத ஆனந்த திருநடனம்
புரிந்தருளியவருமாகிய சிவபெருமானை,
மா தாதையே எனவும் வருவோனே --- “பெருமையின்
மிக்க தந்தையே” என்று அழைக்குமாறு அவரிடத்தில் திருக்குழந்தையாகத் தோன்றி அருளியவரே!
பல கலை படித்து ஓது --- பற்பல அறிவு
நூல்களை நன்கு கற்று தேவரீரது அருட்புகழை ஓதுகின்ற,
பாவாணர் நாவில் உறை --- புலவர்களது நாவில் என்றும்
நீங்காது உறைகின்ற,
இரு சரண --- இரண்டு திருவடிகளை உடையவரே!
வித்தார --- விசாலமான புலமையுடையவரே!
வேலாயுதா --- படைக்கல நாயகமாகிய
வேற்படையைக் கரத்தில் தரித்தவரே!
உயர் செய் பரண் மிசை ---
(தினைப்புனத்தில்) உயரமாகச் செய்துள்ள பரண் மீதில் இருந்த,
குறப்பாவை தோள் மேவ மோகம் உறு --- குறவர்
மகளாக வளர்ந்த வள்ளி நாயகியாரது தோளையடைய காதல் கொள்ளும்,
மணவாளா --- மணவாளரே!
பதும வயலில் --- தாமரை மலர்ந்துள்ள வளம்
பெற்ற வயல்களிலுள்ள,
பூக மீதே வரால்கள் துயில் வரு-- - பாக்கு
மரங்களின் மீது வரால் மீன்கள் பாய்ந்து தூங்கும் வண்ணம் உயர்ந்து வருகின்ற,
புனல் பெருக்கு ஆறு காவேரி சூழ ---
நீர்ப்பெருக்கு மிகுதியாகவுடைய மகாநதியாகிய காவேரியானது சூழ,
வளர் பழநி வரு --- சூழ்ந்திருக்க வளர்கின்ற, பழநி மலை என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளி வருகின்ற,
கற்பூர கோலாகலா - கற்பூர தீபங்களின்
கோலாகத்தை உடையவரே!
அமரர் பெருமாளே --- தேவர்களுக்கெல்லாம்
தேவராகிய பெருமையை உடையவரே!
தலைவலி --- தலைநோய்,
மருத்தீடு --- மருந்திடுதலினால் வரும் தோஷம்,
காமாலை --- காமாலை என்னும் நோய்,
சோகை --- சோகையென்னும் நோய்,
சுரம் --- வெப்பு நோய்,
விழிவலி --- கண்ணோய்,
வறல் --- வறட்சி,
சூலை --- சூலை நோய்,
காயா சுவாசம் --- சுவாச காசம்,
வெகு சலம் --- அதிகமாக நீர்க்கோத்தல்,
மிகு விஷப் பாகம் --- கொடிய விஷநோய்கள்,
மாயா விகார பிணி அணுகாதே --- மாயா
விகராத்தால் (காமவிகாரத்தால்) வரும் நோய்கள் முதலியவை அடியேனை வந்து
அணுகாமலிருக்கவும்,
தல மிசை --- இந்நிலவுலகின் மேல்,
அதற்கு ஆன பேரொடு கூறி --- (வைத்தியர்களிடம்
சென்று) மேற்கூறிய நோய்களின் துன்பத்தையும் அந்நோய்களின் பேரையும் விவரமாக
எடுத்துச் சொல்லி,
இது பரிகரி என --- இந்நோய்களை நீக்குவீர்.
என்று சொன்னால்,
அவர் காது கோளாறு போலும் --- அவ்வைத்தியர்கள்
யான் சொன்னது காது கேட்காதது போல் இருந்து,
சரியும் வயதுக்கு ஏது தாரீர் சொல்லீர் எனவும்
--- “வயதின் முதிர்ச்சியால் நோய்கள் வருகின்றன. ஆதலால் அப்படி தளர்ந்து கொண்டே
வரும் வயதை பழையபடி பலப்படுத்துவதற்கு என்ன பொருள் கொடுப்பீர் சொல்லுங்கள்” என்று
சொல்லவும்,
விதியாதே --- அடியேனை அந்த வகையில்
வைத்தியரிடம் சென்று அலையுமாறு விதியாமல் அருள்புரியவும்,
உலைவு அற --- சோகமில்லாமற்படி,
விருப்பாக --- அன்புடன்,
நீள் காவின் வாச மலர் --- விசாலமான
நந்தவனத்திலுள்ள மணமிகுந்த மலர்களை,
வகை வகை எடுத்தே --- (நந்தியா வட்டம், மல்லிகை, கடம்பு முதலியவற்றை) வகை வகையாக
(அன்புடன்) எடுத்து,
தொடா மாலிகை ஆபரணம் --- தொடுத்த மாலையாகிய
திருவாபரணத்தை,
உனது அடியினில் சூடவே நாடும் மாதவர்கள் ---
தேவரீரது திருவடியில் சூட்டுவதையே தமது திருநெறித் தொண்டாகக் கொண்ட பெரிய தவசிகளுடைய,
இருபாதம் உளமது தரித்து --- இருபாதங்களையும்
அடியேனுடைய உள்ளத்தில் தரித்து,
வினாவோடு பாடி --- வினவுதலோடு துதித்துப்
பாடி,
அருள்வழி பட --- அடியேன் திருவருள் நெறியில்
நிற்கவும்,
எனக்கே தயாவோடு தாள் உதவ --- அடியேனுக்குக்
கருணையுடன் தமது திருவடியைத் தந்தருளவும்,
உரகம் அது எடுத்து ஆடும் --- பாம்பை தனது
காலால் எடுத்து ஆடுகின்ற,
மேகார மீதின்மிசை வரவேணும் --- மயில்
வாகனத்தின் மீது எழுந்தருளி வந்தருள்வீர்.
பொழிப்புரை
அலைகளை வீசும் கடலில் அணைக் கட்டிச்
சென்று, மிகவும் கொடிய செயலை உடைய
இராவணனுடைய இரத்தினங்கள் இழைத்த கிரீடங்களோடு கூடிய தலைகளை அறுத்து வீழ்த்தி, தனது ஆருயிராக இருக்கும் சீதாதேவியை
சிறை மீட்டு அழைத்துக் கொண்ட திருமாலை “மாமன்” என அழைக்கும் மருகரே!
அறுகம் புல்லைச் சூடியுள்ளவரும், உலகங்களுக்கும் உயிர்களுக்கும் ஆதாரமாக
இருப்பவரும், மழுமானைத்
தரித்தவரும், மகா காளிதேவி தோற்று
நாணத்தை அடையுமாறு (தேவர் மூவாதிகள் சேர்ந்துள்ள)
சிற்சபையின் கண் முன்னாளில், ஆனந்த அற்புதக்
கூத்தாடுகின்றவருமாகிய சிவபெருமானை “சிறப்புடைய தந்தையே” என்று அழைக்கும் வண்ணம்
திருப்புதல்வராக வந்தவரே!
பலப்பல அறிவு நூல்களைப் படித்ததன் பயனாக
உமது திருவருட் புகழை ஓதுகின்ற புலவர்களது நாவினிடத்து உறையும் இரண்டு திருவடிகளை
யுடையவரே!
விசாலமான புலமையை உடையவரே!
வேலாயுதரே!
தினைப்புனத்தில் உயரமாகச் செய்துள்ள
பரண் மிசை இருந்த குறவர் மகளாகிய வள்ளி பிராட்டியாரது தோள் புணர அன்பு கொள்ளும்
மணவாளரே!
தாமரைகளோடு கூடிய வயல்களில் வளர்ந்துள்ள
பாக்கு மரங்களின் மீது வரால்கள் பாய்ந்து நித்திரை செய்யும் படியாக, நீர் பெருக்கெடுத்து வரும் காவிரிநதி
சூழ வளம் பெற்றுள்ள பழநிமலை மீது எழுந்தருளியுள்ள, பொருமையின் மிக்கவரே!
தலைவலி, மருத்தீடு, காமாலை, சோகை, சுரம், கண்ணோய், வறட்சி, சூலை, சுவாசகாசம், நீர்க்கோப்பு, விஷப்பீடைகள் முதலிய பிணிகள் அடியேனை
வந்து அடையாமலிருக்கவும் உலகத்தில் அந்நோய்கட்குரிய பேர்களையும் நோய்களின் வகை
களையும் வைத்தியரிடம் கூறி, இவற்றை நீக்கிவைக்க
வேண்டும் என்னும்போது, அவர்கள் தமது
மருத்துவச் செருக்கால் காது கேளாதது போல் நடித்து “தளர்கின்ற வயதை தளராவண்ணம்
செய்வதற்கு என்ன பொருள் தருகிறீர்?”
என்று
கேட்கும்படி அடியேனை விதிக்கா வண்ணமும், வாட்டம்
அற மலர்ச் சோலையில் சென்று விருப்பத்துடன் வகை வகையாக மலர்களை எடுத்துத் தொடுத்த
மாலையாகிய ஆபரணத்தை தேவரீரது திருவடிகளில் சூட்ட வேண்டும்என்று அன்புடன்
எண்ணுகின்ற, பெருந் தவசிகளுடைய
பாததாமரைகள் இரண்டையும், அடியேனுடைய
உள்ளத்தில் தரித்து, வினாவுதலோடு பாடி, திருவருள் நெறியில் நிற்கவும்
அடியேனுக்குக் கருணையுடன் உமது திருவடியைத் தருமாறும் பாம்பை எடுத்து ஆடுகின்ற
மரகத மயில் மீது எழுந்தருளி வருவீராக.
விரிவுரை
தலைவலி..........அணுகாதே ---
உடம்பினாலாய
பயன் உடம்பிற்குள் உறையும் உத்தமனை அறிவதுவே. அதற்குச் சாதகமாகவுள்ள உடம்பு நோயின்றி இருக்க
வேண்டியதும் அவசியமே. ஆதலால், உடம்பிற்கு நோய் வராமல்
இருக்கப் பவரோக வைத்தியநாதனிடமே முறையிடுகின்றார். நோய் வாய்ப்பட்டவர் இந்த
பாசுரத்தைப் பக்தியுடன் ஓதி திருநீறு தரிக்க நோய் நிவர்த்தியாகும். நோய்வாய்ப்பட்ட
குழந்தைகட்கு இத்திருப்புகழை ஓதி திருநீறு கொடுக்க சுபமுண்டாகும். இது அனுபவத்திற்
கண்டது.
உலைவு அற..........மாலிகாபரணம் ---
விருப்பத்தோடு
“சிறையளி புகுதா முன்னம் சிறு காலை எழுந்திருந்து” நந்தவனம் சென்று வகைவகையாக
மலரெடுத்து மாலை தொடுத்து பெருமானுக்குத் தரிக்கச் செய்வது மிகமிக மேலான
தொண்டாகும். முருக நாயனார், சங்கிலியார்
முதலியோர் இத்திருத் தொண்டின் வழிநின்று மீட்டிங்கு வாராக் கதியைப் பெற்றார்கள்.
“துளக்கில் நல் மலர்
தொடுத்தால் தூயவிண் ஏறலாகும்” --- அப்பர்
“பூமாலை புனைந்து ஏத்தேன்” ---
மாணிக்கவாசகர்
“மாமலர்கள் கொண்டு
மாலைகள் புனைந்து
மாபதம் அணிந்து பணியேனே” --- (வாதினையடர்ந்த) திருப்புகழ்
மாதவர்கள்............உளமது
தரித்தே
---
ஆதலால், இத் திருத்தொண்டைச் செய்ய வேண்டுமென நினைக்கின்றவர்கள்
திருவடியை உள்ளத்தில் தரிக்க வேண்டும் எனக் கல்மனமும் கரைந்துருகுமாறு கூறினர்.
வினாவோடு ---
“இறைவனே! உன் கருணை
என்று எனக்குக் கிடைக்கும்? உன்னையடையும் நாள்
என்றோ?” என்று வினவுதலோடு
துதித்தல்.
உரகமது
எடுத்தாடு மேகாரம் ---
விந்து
தத்துவமாகிய மயில் பிராணவாயுவாகிய பாம்பை மிதித்து ஆடுகிறது என்பது அதன் தத்துவம்.
அலைகடல்
அடைத்தோனை
---
இராமச்சந்திரர்
நானாவிதமான எண்ணங்களாகிய அலைகளை ஒழியாது வீசுகின்ற சமுசாரமாகிய சமுத்திரத்தை
வைராக்கியமாகிய அணைகட்டி, காமக்ரோதாதிகளாகிய
அசுரர்களை அழித்தனர்.
ஆழியில் அணை கட்டிய
வரலாறு
ஸ்ரீராமர்
கடற்கரையில் தருப்பைகளைப் பரப்பி,
வருணனை
நினைத்து, கரத்தைத் தலையணையாக
வைத்து, கிழக்கு முகமாகப்
படுத்தார். அயோத்தியில் நவரத்ன மயமான தங்கக் கட்டிலில் நறுமலர்ச் சயனத்திலிருந்த
அவர் திருமேனி பூமியில் படுத்திருந்தது. மனோவாக்கு காயங்களால் நியமம் உள்ளவராய்
மூன்று நாட்கள் தவமிருந்தார். மூடனான சமுத்திரராஜன் இராமருக்கு முன் வரவில்லை.
இராமருக்குப் பெருங்கோபம் மூண்டது. இலட்சுமணனை நோக்கி, “தம்பி! இன்று சமுத்திரத்தை வற்றச்
செய்கிறேன், மூடர்களிடத்தில்
பொறுமை காட்டக்கூடாது. வில்லைக் கொண்டுவா; திவ்விய அஸ்திரங்களையும் எடுத்துவா.
சமுத்திரத்தை வற்றச்செய்து வானரர்கள் காலால் நடந்து போகச் செய்கிறேன்” என்று
சொல்லி உலகங்கள் நடுங்க, கோதண்டத்தை வளைத்து
நாணேற்றிப் பிரளய காலாக்கினிபோல் நின்றார். அப்போது கடல் கொந்தளித்தது. சூரியன்
மறைந்தான்; இருள் சூழ்ந்தது, எரிகொள்ளிகள் தோன்றின. மலைகள் நடுங்கின.
மேகங்களின்றியே இடியும் மின்னலும் உண்டாயின. இராமர் பிரம்மாஸ்திரத்தை எடுத்து
வில்லில் சந்தித்தார். இரட்சுமணர் ஓடி வந்து “வேண்டாம் வேண்டாம்” என்று வில்லைப்
பிடித்துக் கொண்டார். பிரளயகாலம் வந்துவிட்டதென்று தேவர்கள் மருண்டனர். உயிர்கள்
“இனி உய்வு இல்லை” என்று அசைவற்றுக் கிடந்தன.
உடனே
மேருமலையினின்றும் சூரியன் உதிப்பது போல், கற்பக மலர் மாலையுடனும் நவரத்ன
மாலையுடனும் குழப்பமடைந்த மனத்துடன் வருண பகவான் “ராம ராம” என்று துதித்துக்
கொண்டு தோன்றி, கால காலரைப் போல்
கடுங் கோபத்துடன் நிற்கும் ரகுவீரரிடம் வந்து பணிந்து, “ராகவரே! மன்னிப்பீர்; வானர சேனைகள் கடலைக் கடக்குமாறு அணை
கட்டுகையில் அதனை அடித்துக்கொண்டு போகாமல் நிலம் போல் நிற்கச் செய்கிறேன்”
என்றான்.
இராமர்
“நதிகளின் நாயகனே! எனது வில்லில் தொடுத்த இந்த அம்பு வீண் போகாது; இதை நான் எவ்விடத்தில் விடலாம் சொல்லுக”
என்றார். “வடதிசையில் என்னைச் சேர்ந்த துரும குல்யம் என்ற ஒரு தலமுள்ளது. அங்கே
அநேக கொடியவர்கள் அதர்மத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீது இக்கணையை
விட்டருள்வீர்” என்று சொல்ல, இராமர், உடனே அக்கணையை விடுத்தார். அக்கணை
சென்று அந்த இடத்தைப் பிளக்க ரஸாதலத்திலிருந்து தண்ணீர் பொங்கியது. அவ்விடம் விரண
கூபம் என்று பெயர் பெற்றது. அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என வழங்குகிறது.
அவ்விடம் “எல்லா நன்மைகளுக்கும் உறைவிடமாயும் சகல வளங்களும் உடையதாயும் விளங்குக”
என்று இரகுநாதர் வரங்கொடுத்தார்.
பிறகு
வருணன் இராமரைப் பார்த்து “சாந்த மூர்த்தியே! இவன் நளன் என்ற வானரவீரன்; விசுவகர்மாவினுடைய புதல்வன்; தந்தைக்குச் சமானமானவன்; தந்தையினிடம் வரம் பெற்றவன். இவ்வானரன்
என்மேல் அணைகட்டட்டும். நான் தாங்குகிறேன்” என்று சொல்லி மறைந்தான். சிறந்த பலம்
பொருந்திய நளன் எழுந்து இராமரை வணங்கி, “சக்கரவர்த்தித்
திருக்குமாரரே! வருணன் கூறியது உண்மையே! விசாலமான இந்தக் கடலில் நான் எனது
தந்தையின் வல்லமையைக் கைப்பற்றியவனாய் அணைகட்டுகிறேன். வீரனுக்குத் தண்டோபாயமே
சிறந்தது; அயோக்கியர்களிடம்
சாமம் தானம் என்பவற்றை உபயோகித்தால் தீமையே. இச்சமுத்திரராஜன் தண்டோபாயத்தினாலேயே
பயந்து அணை கட்ட இடங்கொடுத்தான். வானரவீரர்கள் அணைகட்டுவதற்கு வேண்டிய வற்றைக்
கொணரட்டும்” என்றான்.
இராமர்
அவ்வாறே கட்டளையிட, வானர வீரர்கள் நாற்புறங்களிலும்
பெருங் காட்டில் சென்று, ஆச்சா, அசுவகர்ணம், மருதம், பனை, வெண்பாலை, கர்ணீகாரம், மா, அசோகம் முதலிய தருக்களை வேரொடு
பிடுங்கிக் கொண்டு வந்து குவித்தார்கள். மலைகளையும் கல்குன்றுகளையும் நூற்றுக்
கணக்காகவும் ஆயிரக் கணக்காகவும் கொணர்ந்தார்கள். சிலர் நூறுயோசனை தூரம் கயிறுகளைக்
கட்டிப் பிடித்தார்கள். சிலர் அளவு கோலைத் தாங்கி நின்றார்கள். நளன் பெரிய அணையைக்
கட்டலானான். பெரிய பாறைகளும் மலைகளும் அக்கடலில் வீழ்த்தப்பட்ட பொழுது பெருஞ்
சத்தமுண்டாயிற்று. மனந்தளராத அவ்வானர வீரர்கள் முதல் நாள் 14 யோசனை தூரம் அணை கட்டினார்கள்.
பயங்கரமான சரீரமும் பலமும் பொருந்திய வானர வீரர்கள் இரண்டாம் நாள் விரைவாக 20 யோசனை தூரம் அணை கட்டினார்கள். மிகுந்த
பரபரப்பும் தொழில் செய்வதில் ஊக்கமுமுள்ள அவ்வானர சிரேட்டர்கள் மூன்றாவது நாள் 21 யோசனை தூரம் கட்டினார்கள். நான்காவது
நாள் 22 யோசனை தூரம்
கட்டினார்கள். எல்லாத் தொழிலையும் விரைவில் முடிக்கவல்ல அவ்வானரங்கள் ஐந்தாவது
நாள் 23 யோசனை தூரம் சுவேல மலை
வரையும் அணை கட்டினார்கள். இவ்வாறு வெகுவிரைவில் 100 யோசனை தூரம் அணைகட்டி முடித்தார்கள்.
அவ்வற்புதத்தைப் பார்க்க விரும்பி ஆகாயத்தில் திரண்ட தேவர்களும் அதைக் கண்டு
அதிசயித்தார்கள். மனத்தால் நினைக்க முடியாததும் மயிர்க்கூச்சல் உண்டாக்குவதுமாகிய
அச்சேதுவைப் பார்த்து எல்லாப் பிராணிகளும் இறும்பூதுற்றன.
அறுகிணை
முடித்தோனை ---
சிவார்ச்சனைக்கு
மிகவும் சிறந்தது அறுகு; அடியார்களால்
அர்ச்சிக்கப்பட்ட அறுகைப் பெருமான் அன்புடன் முடித்துக் கொண்டிருக்கின்றார்.
“மவுனவுப தேச சம்பு
மதி அறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீது அணிந்த மகதேவர்” --- (அவனிதனிலே) திருப்புகழ்
இவ்
அறுகம்புல்லை விதிப்படி எடுத்து சிவபெருமானைப் பக்தியுடன் அர்ச்சித்தால் இனிப் பிறவா
நிலையாகிய சிவகதி அடைவர். இதனை மிக அழகாக திருவருட்பிரகாச வள்ளலாராகிய இராமலிங்க
சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளி யுள்ளதைக் கண்டு மகிழ்க.
பகுதி
தகுதி விகுதி எனும் பாட்டில்
இகல்
இடையை இரட்டித் - தகவின்
அருச்சித்தால்
முன்னாம் அது கடையாம் கண்டீர்
திருச்சிற்
சபையானைத் தேர்ந்து
இதன்
பொருள்
---
பகுதி, தகுதி, விகுதி என்ற இம்மூன்று பதங்களின்
இடையிலுள்ள, “கு” என்ற எழுத்தை
இரட்டித்தால், குகு, குகு, குகு அறுகு ஆயிற்று, இந்த அறுகைகொண்டு திருச்சிற்சபையிலுள்ள
சிவமூர்த்தியை அர்ச்சித்தால், முற்கூறிய மூன்று
பதங்களின் முதலெழுத்துக்களைக் கூட்டின் ப, த, வி-பதவி; இந்திர பிரம விட்டுணுக்களின் பதவிகள், மேற்கூறிய பதங்களின் கடையெழுத்
துக்களைக் கூட்டின் தி, தி, தி...முத்தி (பதவிகளுக்கு மேற்பட்ட
சிவகதி) இந்த இரண்டும் எளிதில் சித்திக்கும்.
மாகாளி
நாணமுனம் அவைதனில் நடித்தோனை ---
திருநடன வரலாறு
திருவாலங்காட்டின்
பெருமையைச் சிவபெருமான் சொல்லக் கேட்ட சுநந்த முனிவர், பெருமான் அருளிய வண்ணம் தாண்டவ
அருட்கோலத்தைக் காணவிழைந்து திருவாலங்காடு சென்று தவமிழைத்திருந்தனர். கண்ணுதற்
பெருமானது கைவிரல் அணியாகிய கார்க்கோடகன் திருவிரலில் விடத்தைக் கக்க, பெருமான் “நம்மைக் கருதாது தருக்குடன்
நீ செய்த தீமைக்காகத் திருக்கைலை யினின்று நீங்குக” எனப்பணித்தனர். நாகம்
நடுநடுங்கிப் பணிய சிவமூர்த்தி,
“திருவாலங்காட்டில்
அநேக ஆண்டுகளாக அருந்தவம் இயற்றும் சுநந்தருடன் சண்ட தாண்டவத்தைத் தரிசித்துப்
பிறகு வருதி” என்று அருளிச் செய்தனர். கார்க்கோடகன் கருடனுக்கு அஞ்ச எம்பெருமான்
“இத்தீர்த்தத்தில் முழுகி அங்குள்ள முத்தி தீர்த்தத்தில் எழுக” என்று அருள்பாலிக்க, அரவு அவ்வாறே ஆலவனம் வந்து, சுநந்தரைக் கண்டு தொழுது, தனது வரலாற்றைக் கூறி நட்புகொண்டு
தவத்திருந்தது. சுநந்தர் நெடுங்காலம் தவத்திருப்ப, அவரைப் புற்று மூடி முடிமேல்
முஞ்சிப்புல் முளைத்துவிட்டது. அதனால் அவர் முஞ்சிகேச முனிவர் எனப் பெயர்
பெற்றனர். இது நிற்க,
நிசுபன், சும்பன் என்னும் அசுரர் இருவர் ஒப்பாரு
மிக்காருமின்றி பல தீமைகளைச் செய்து வந்தனர். அத் துன்பத்திற்கு அஞ்சிய தேவர்கள்
உமாதேவியாரை நோக்கி அருந்தவம் செய்தனர். அகிலாண்டநாயகி அமரர் முன் தோன்றி, “உங்களைத் துன்புறுத்தும் அசுரரை
அழிப்பேன்” என்று அருளிச்செய்து,
மலைச்சாரலை
அடைந்து, தவ வடிவத்தைக் கொண்டு
உறைகையில், சண்டன் முண்டன்
என்னும் அவுணரிருவர் அம்பிகையை யடைந்து “நீ யார்? தனித்திருக்குங் காரணம் என்ன? சும்பனிடஞ் சேருதி” என்னலும், உமை யம்மையார், “தவமியற்றும் யான் ஆடவர்பால் அணுகேன்”
என்று கூற, அவ்வசுரர் சும்பன்பால்
சென்று தேவியின் திருமேனிப் பொலிவைக் கூறி, அவனால் அனுப்பப்பட்ட படையுடன் வந்து
அழைத்தும் அம்பிகை வராமையால், வலிந்து இழுக்க
எண்ணுகையில் இமயவல்லி, சிறிது வெகுள, அம்மையார் தோளிலிருந்து அநேகஞ்
சேனைகளும் ஒரு சக்தியும் தோன்றி,
அவற்றால், அசுர சேனையும் சண்டனும் முண்டனும்
அழிந்தனர். உமாதேவியார் “சண்டணையும் முண்டனையும் கொன்றதனால் சாமுண்டி எனப் பெயர்
பெற்று உலகோர் தொழ விளங்குதி” என அச்சக்திக்கு அருள் புரிந்தனர். அதனை அறிந்த
நிசும்பன், சும்பன் என்போர்
வெகுண்டு ஆர்த்து, அளப்பற்ற அசுர
சேனையுடன் வந்து, அம்பிகையை எதிர்த்துக்
கணைமாரி பெய்தனர். அகில ஜக அண்டநாயகி தனது உடலினின்றும் சத்தமாதர்களையும்
சிவதூதியரையும் உண்டாக்கிப் போருக்கனுப்பி, அவர்களால் அசுரசேனையை அழிப்பித்து, தாமே முதலில் நிசும்பனையும் பிறகு
சும்பனையும் கொன்றருளினார்.
அவ்விரு
நிருதர்கட்கும் தங்கையாகிய குரோதி என்பவள் பெற்ற இரத்த பீசன் என்று ஒருவன்
இருந்தான். அவன் தனது உடலினின்றும் ஒரு துளி உதிரம் தரைமேல் விழுந்தால், அத்துளி தன்னைப்போல் தானவன் ஆமாறு வரம்
பெற்றவன். அவன், இச்செய்தி அறிந்து
இமைப் பொழுதில் எதிர்த்தனன். அந் நிருதனுடன் சத்த மாதர்கள் சமர் செய்கையில், அவன் உடம்பினின்றும் விழுந்த
உதிரத்துளிகளினின்றும் அவனைப் போன்ற அசுரர்கள் பல ஆயிரம்பேர் தோன்றி எதிர்த்தனர்.
இவ்வற்புதத்தைக் கண்ட சத்த மாதர்கள் அம்பிகையிடம் ஓடிவந்து கூற, அம்பிகை வெகுள; அவர் தோளினின்றும் பெரிய உக்கிரத்துடன்
காளி தோன்றினாள். “பெண்ணே; யான் இரத்த பீசனைக் கொல்லும்போது
உதிரத்துளி ஒன்றும் மண்ணில் விழாமல் உன் கைக் கபாலத்தில் ஏந்திக் குடிக்கக்
கடவாய்” என்று பணித்து, இரத்த பீசனை அம்பிகை
எதிர்த்து, காளி உதிரத்தைப் பருக, இறைவியார் இரத்தபீசனை
சங்கரித்தருளினார். இமையவரைத் தத்தம் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, காளியை மகிழ்வித்து அவளுக்கு சாமுண்டி
என்ற பெயரும் தெய்விகமும் சிவபெருமானிடம் நிருத்தஞ் செய்து அவர் பக்கலில்
உறைதலுமாகிய நலன்களைத் தந்தருளி,
சத்த
மாதர்கட்கும் அருள்புரிந்து மறைந்தருளினார்.
காளி, அசுரர் உதிரம் குடித்த ஆற்றலாலும், உமையிடம் பெற்ற வரத்தாலும் இறுமாந்து ஊன்களைப்
புசித்து, மோகினி, இடாகினி, பூத பிசாசுகள் புடைசூழ ஒரு
வனத்திலிருந்து மற்றொரு வனத்திற்குப் போய், உலகம் முழுவதும், உலாவி, திருவாலங்காட்டிற்கு அருகில் வந்து
அனைவருக்கும் துன்பத்தைச் செய்து வாழ்ந்திருந்தனர்.
ஒரு
நாள் திருவாலங்காடு சென்ற நாரத முனிவருக்குக் காளியின் தீச்செயலை கார்கோடக முனிவர்
கூற, நாரதர் கேட்டுச்
செல்லுகையில் காளி விழுங்க வர, அவர் மறைந்து சென்று
திருமாலிடம் கூறி முறையிட்டார். திருமால் சிவபெருமானிடஞ் சென்று, “எந்தையே! காளியின் தருக்கை அடக்கி அருள
வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய,
முக்கட்பெருமான்
“இப்போதே காளியின் செருக்கை அடக்க வடாரண்யத்திற்கு வருவோம்” என்று திருவாய்
மலர்ந்து, சுநந்த முனிவர்
கார்க்கோடக முனிவர்கட்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு திருவாலங்காட்டிற்கு
எழுந்தருளினார்.
கூற்றை
உதைத்த குன்றவில்லி, வயிரவ வடிவு
கொண்டனர். உடன் வந்த பூதங்களுடன் காளியின் சேனை எதிர்த்து வலியிழந்து காளியிடம்
கூற, அவள் போர்க்கோலம்
தாங்கி வந்து, அரனாரைக் கண்டு அஞ்சி
“நிருத்தயுத்தம் செய்குதும்” எனக்கூற, கண்ணுதற்
கடவுள் இசைந்து, முஞ்சிகேச
கார்க்கோடகர்கட்குத் தரிசனந்தந்து திருநடனத்திற்குத் தேவருடன் வந்தருளினார்.
அக்காலை அமரர் அவரவர்கட்கு இசைந்த பல வாத்தியங்களை வாசித்தனர். அநவரதம், அற்புதம், ரௌத்ரம், கருணை, குற்சை, சாந்தம், சிருங்காரம், பயம், பெருநகை, வீரியம் என்னும் நவரசங்களும் அபநியமும்
விளங்க வாத்தியங்கட்கொப்ப பாண்டரங்க மாகிய சண்ட தாண்டவத்தைக் காளியுடன் அதியற்புத
விசித்திரமாகச் செய்தரு ளினார்.
இவ்வாறு
நடனஞ் செய்கையில், பெருமானது
திருச்செவியில் இருந்து குண்டலமானது நிருத்த வேகத்தால் நிலத்தில் விழ, அதை இறைவரே திருவடி ஒன்றினால் எடுத்துத்
தரித்து ஊர்த்துவ தாண்டவம் செய்ய,
காளி
செயலற்று நாணிப் பணிந்தனள். சிவபெருமான் “நீ இங்கு ஒரு சத்தியாய் இருத்தி” எனத்
திருவருள் புரிந்து, இருமுனிவரும், எண்ணில்லா அடியவரும் தமது தாண்டவத்
திருவருட் கோலத்தை எந்நாளும் தெரிசிக்க ஆங்கு எழுந்தருளியிருந்தார்.
கருத்துரை
திருமால்
மருகரே! சிவகுமாரரே! புலவர் நாவிலுறையும் பொற் பாதரே! வேலாயுதரே! வள்ளிமணவாளரே!
பழநியாண்டவரே! நோயற்ற வாழ்வையும் அடியார் பக்தியையும் தந்து அருள்வழி படவும்
திருவடியை அடியேற்கு அருளவும் மயில்மிசை வந்தருள்வீர்.