அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தமரும் அமரும் (பழநி)
பழநியப்பா!
அடியேன் பந்த பாசங்களை விட்டு,
திருவடியை அடைய அருளவேண்டும்
தனன
தனன தனன தனன
தனன தனன ...... தனதான
தமரு
மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்
தறுகண்
மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல
விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்
கருத
அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர
சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய
பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமர
ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே
அறமு
நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தமரும், அமரும் மனையும், இனிய
தனமும் அரசும் ...... அயல் ஆகத்
தறுகண்
மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே,
கமல
விமல மரகத மணி
கனக மருவும் ...... இருபாதம்
கருத
அருளி, எனது தனிமை
கழிய, அறிவு ...... தரவேணும்.
குமர!
சமர முருக! பரம!
குலவு பழநி ...... மலையோனே!
கொடிய
பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா!
அமரர்
இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்து ...... அருள்வோனே!
அறமும், நிறமும் மயிலும், அயிலும்,
அழகும் உடைய ...... பெருமாளே.
பதவுரை
குமர --- குமாரக் கடவுளே!
சமர முருக --- போரில் வல்ல முருகவேளே!
பரம --- பெரிய பொருளே!
குலவு பழநி மலையோனே --- விளங்குகின்ற
பழநி மலையில் இருப்பவரே!
கொடிய பகடு முடிய முடுகு --- கொடுமையான
மதயானையை முடுகி எதிர்வரும்படி செய்த,
குறவர் சிறுமி மணவாளா --- வள்ளி பிராட்டியின்
கணவரே!
அமரர் இடரும் --- தேவர்களுடைய துன்பமும்,
அவுணர் உடலும் --- இராக்கதர்களுடைய சரீரமும்,
அழிய --- அழியுமாறு,
அமர் செய்து அருள்வோனே --- போர் செய்து
அருளியவரே!
அறமும் --- அற நெறியும்,
நிறமும் --- ஒளியும்,
அயிலும் --- வேலும்,
மயிலும் --- மயில் வாகனமும்,
அழகும் உடைய --- சிறந்த வனப்பும் உடைய,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
தமரும் --- சுற்றத்தாரும்,
அமரும் மனையும் --- விரும்புகின்ற மாளிகையும்,
இனிய தனமும் --- இனிமையான செல்வமும்,
அரசும் --- அரச பதவியும்,
அயல் ஆக --- எனக்கு அயலாகப் போகுமாறு,
தறுகண் --- அஞ்சாமையுடைய,
மறலி --- இயமன்,
முருகு கயிறு --- வலிய பாசக் கயிற்றினை,
தலையை வளைய எறியாதே --- என்னுடைய தலையைச்
சுற்றி எறியாதவாறு,
கமல --- தாமரை மலரைப் போன்றும்,
விமல --- பரிசுத்தமானதும்,
மரகதம் அணி --- பச்சை மணியணியைப் பெற்றதும்,
கனகம் மருவும் இருபாதம் --- பொன்னாபரணம்
பூண்டதும் ஆகிய தேவரீருடைய இரண்டு திருவடிகளையும்,
கருத அருளி --- அடியேன் தியானிக்குமாறு
அருள்புரிந்து,
எனது தனிமை கழிய --- அடியேன் உம்முடன் கலவாது
தனித்திருக்கும் அவலநிலை நீங்குமாறு,
அறிவு தரவேணும் --- திருவருள் ஞானத்தைத்
தந்தருள வேண்டும்.
பொழிப்புரை
குமாரக் கடவுளே!
போரில் வல்ல முருகப் பெருமானே!
பரம் பொருளே!
சிறந்த பழநிமலையில் வாழ்பவரே!
வள்ளியம்மையிடம் கொடும் வேகமுடைய
மதயானையை வரும்படிச் செய்து அவரை மனந்த மணவாளரே!
தேவர்கள் துயரும் அசுரர்களுடைய
உடல்களும் அழியுமாறு போர் புரிந்தருளியவரே!
அறமும், ஒளியும், வேலும், மணியும், அழகும் படைத்த பெருமிதம் உடையவரே!
உறவினரும், விரும்புகின்ற மாளிகையையும் இனிய
செல்வமும் என்னைவிட்டு நீங்குமாறு,
அஞ்சுதல்
இல்லாத இயமன் வலிய பாசக்கயிற்றை எனது தலையைச் சுற்றி எறியாதவாறு, தாமரை மலர் போன்றதும் தூய்மையுடையதும்
மரகதமணியும் பொன்னாபரணமும் பூண்டதும் ஆகிய உமது திருவடிகளை அடியேன் சிந்திக்குமாறு
அருள்புரிந்து, உம்மைக் கூடாமல்
நிற்கும் எனது தனித்த அவல நிலைமை தீர மெய்யறிவைத் தந்தருள்வீர்.
விரிவுரை
தமரும்
அமரும் மனையும் இனிய தனமும் அரசும்
...... அயலாக ---
எத்தனையோ
அன்பு புரிந்து உபசரிக்கும் உறவினரும், மிகமிக அருமையாக நாம் புதுக்கிய
மாளிகையும், இரவு பகலாகத்தேடி
அமைத்த செல்வமும், அரிய அரச பதவியும்
ஒரு கணத்தில் பிரிந்து நமக்கு அயலாகுமாறு இயமன் பிரித்து விடுகின்றான். எத்தைனையோ
காலமாகத் தேடிய அருமையிலும் அருமையாக வைத்துப் போற்றிய பொருள்கள் யாவும் நமக்கு
அந்நியமாகப் போய்விடுகின்றன.
பத்து
லட்ச ரூபாய் செலவில் ஒருவன் ஒரு பெரிய மாளிகையைப் புதுக்கினான். சிறந்த கட்டில், ஆசனங்கள், மெத்தை, விளக்குகள், பாத்திரங்கள், பண்டங்கள் எல்லாவற்றையும் தொகுத்து
வைத்தான். அவன் மாண்டு எதிர் வீட்டில் போய் ஓர் ஏழை மகனாகப் பிறந்துவிட்டான்.
பிறகு, இந்த மாளிகையும்
உடைமைகளும் அவனுக்குச் சொந்தமாக ஆகுமா? எதிர்
வீட்டில் பிறந்தவனை இந்த வீட்டில் நுழையத் தான் அனுமதிப்பார்களா? இங்கிருந்த மனைவியுடன் தான் பேச முடியுமா? எல்லாம் இவனுக்கு அயலாகி விட்டன. அந்தோ!
எல்லாம் கனவாகிக் கழிந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டுத் தேடிய அத்தனையும் ஒரு நொடியில்
அயலாகி விடுகின்றன. ஆதலால் அருளைத் தேடாமல் பொருளையே தேடித் திரியக்கூடாது. தேடிய
பொருளில் பற்று வைக்கக்கூடாது. சிவன் தந்தது என்று கருதி அறவழியில் அவற்றைப்
பகிர்ந்து தந்து சிவன் செயலை சிந்தித்து வந்தித்து ஆறுதலாக இருக்கவேண்டும்.
மீட்டிங்கு வராத நெறியைத் தடவேண்டும்.
தறுகண்
மறலி
---
தறுகண்-அஞ்சாமை.
எத்துணைப் பெரிய அதிகாரியாயினும் எத்துணைப் பெரிய செல்வச் சீமானாக இருப்பினும்
அஞ்சாது வருவான் எமன்.
“தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை” ---
நறுந்தொகை
இருபாதம்
கருத அருளி
---
இவ்வாறு
காலபாசம் வருமுன் முருகனுடைய தூய சரணாரவிந்தங்களை இடையறாது உள்ளம் உருகித்
தியானிக்க வேண்டும். இதுவே உய்யும் நெறி.
தனிமை
ஒழிய அறிவு தரவேண்டும் ---
ஆன்மா
இறைவனை நினையாது வேறு வேறு சிந்தனையால் உழன்று திக்கற்றுத் திரிகின்றது.
அப்பரமனுடன் கலக்கும் இரண்டற்ற நிலையே அத்துவிதப் பேரானந்தமாகும். ஆகவே ஆன்மாவின்
தனிமை அகல, மெய்யறிவைப்
பெறவேண்டும். அதனை இறைவன்பால் சுவாமிகள் வேண்டுகின்றார்.
கொடிய
பகடு முடிய முடுகு ---
வள்ளி
பிராட்டியாரிடம் முருகவேள் விநாயகரைக் கடும் வேகமுடைய யானையாக வருமாறு செய்து, அக்குறமகளின் பந்தபாசத்தையகற்றிப் பரம
ஞானத்தை உபதேசித்து அருள் புரிந்தார்.
அறமும்
நிறமும் அயிலும் மயிலும்.....பெருமாளே ---
முருகனிடம்
அறம், நிறம், ஞானம், ஓம், அழகு பெருமை இந்த ஆறும்
அடங்கியிருக்கின்றன என்று இங்கே குறிப்பிடுகிறார். பெருமாள் - பெருமையுடையவன் முழுவதும்
அழகியவன் முருகன். “முழுதும் அழகிய குமர” என்கின்றார் ஒரு திருப்புகழில். முருகன்
என்றாலே அழகன் என்பது பொருள். அழகுத் தெய்வம் முருகன். அழகை எவர் தான்
விரும்பமாட்டார்கள்? ஆகவே அறம், ஒளி, அறிவு, ஓம்(மயில்), அழகு, பெருமை இந்த ஆறும் முருகனை
உபாசிக்கின்றவர்க்கு எளிதில் உண்டாகும்.
கருத்துரை
பழநியாண்டவரே! உன் திருவடியை நினைக்கும்
மெய்ஞ்ஞானம் தந்து அருள்வீர்!
No comments:
Post a Comment