அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
நாசர்தம் கடை
(சுவாமிமலை)
சுவாமிநாதா!
கீழ்மக்களோடு
கூடாமல்,
உமது திருவடி பணிந்து
உய்ய அருள்.
தானனந்
தனதனன தனதனா
தத்த தந்த ...... தனதான
நாசர்தங்
கடையதனில் விரவிநான்
மெத்த நொந்து ...... தடுமாறி
ஞானமுங் கெடஅடைய வழுவியா
ழத்த ழுந்தி ...... மெலியாதே
மாசகந் தொழுமுனது புகழினோர்
சொற்ப கர்ந்து ...... சுகமேவி
மாமணங் கமழுமிரு கமலபா
தத்தை நின்று ...... பணிவேனோ
வாசகம்
புகலவொரு பரமர்தா
மெச்சு கின்ற ...... குருநாதா
வாசவன் தருதிருவை யொருதெய்வா
னைக்கி ரங்கு ...... மணவாளா
கீசகஞ்
சுரர்தருவு மகிழுமா
வத்தி சந்து ...... புடைசூழுங்
கேசவன்
பரவுகுரு மலையில்யோ
கத்த மர்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
நாசர்
தம் கடை அதனில் விரவி நான்
மெத்த நொந்து ...... தடுமாறி,
ஞானமும் கெட அடைய வழுவி,ஆ-
ழத்து அழுந்தி ...... மெலியாதே,
மாசகம் தொழும் உனது புகழின் ஓர்
சொல் பகர்ந்து ...... சுகம் மேவி,
மாமணம் கமழும்இரு கமல பா-
தத்தை நின்று ...... பணிவேனோ?
வாசகம்
புகல ஒரு பரமர் தாம்
மெச்சு கின்ற ...... குருநாதா!
வாசவன் தரு திருவை ஒரு தெய்வா-
னைக்கு இரங்கு ...... மணவாளா!
கீசகம்
சுரர்தருவு மகிழு மா
அத்தி சந்து ...... புடைசூழும்
கேசவன்
பரவு குருமலையில் யோ-
கத்து அமர்ந்த ...... பெருமாளே.
பதவுரை
வாசகம் புகல --- உபதேச மொழியை நீர் கூற
ஒரு பரமர் தாம் --- ஒப்பற்ற சிவபெருமான்
மெச்சுகின்ற குருநாதா --- மெச்சிப்
புகழ்கின்ற குருமூர்த்தியே!
வாசவன் தரு திரு --- இந்திரன் வளர்த்த
அழகிய,
ஒரு தெய்வயானைக்கு இரங்கும் மணவாளா ---
சமானமில்லாத தெய்வயானையம்மையின் பால் அன்பு செய்து அருளிய நாயகரே!
கீசகம் --- மூங்கில்,
சுரர் தருவு --- தேவ தாரு,
மகிழும் --- மகிழமரமும்,
மா --- மாமரம்,
அத்தி --- அத்திமரம்,
சந்து புடை சூழும் --- - சந்தனமரம் முதலிய
தருக்கள், அருகில்
சூழ்ந்துள்ளதும்,
கேசவன் பரவு --- திருமால் புகழ்ந்து துதி செய்வதுமான
குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே ---
சுவாமிமலையில் யோக நிலையில் அமர்ந்தருளும் பெருமையில் மிகுந்தவரே!
நாசர் தம் கடை அதனில் விரவி --- கேடுசெய்யுங்
கீழ்மக்களுடைய இடங்களில் சென்று
நான் மெத்த நொந்து தடுமாறி --- அடியேன்
மிகவும் வருத்தமுற்று நிலை தடுமாறி,
ஞானமும் கெட --- அறிவும் கெட
அடைய வழுவி --- முழுவதும் தவறான வழியில்
விழுந்து
ஆழத்து அழுந்தி மெலியாதே --- ஆழ்ந்த
அப்படுகுழியில் அழுந்தி மெலியாமல்,
மா சகம் தொழும் --- சிறந்த உலகம் யாவும்
தொழுகின்ற
உனது புகழின் --- தேவரீருடைய புகழில்
ஓர் சொல் பகர்ந்து --- ஒரு சொல்லையாவது
அடியேன் கூறி
சுகம் மேவி --- சுகத்தை அடைந்து,
மா மணம் கமழும் --- உயர்ந்த ஞான வாசனை
வீசுகின்ற
இரு கமல பாதத்தை நின்று பணிவேனோ --- இரண்டு
தாமரை போன்ற திருவடிகளை ஒரு முகமான நிலையில் நின்று பணியமாட்டேனோ?
பொழிப்புரை
உபதேச மொழியை உரைக்க, ஒப்பற்ற சிவபெருமான் மெச்சிப்
புகழ்கின்ற குருநாதரே!
இந்திரன் வளர்த்த அழகிய நிகரில்லாத
தெய்வயானை யம்மைபால் அன்பு காட்டும் கணவரே!
மூங்கில், தேவதாரு, மகிழ், மா, அத்தி, சந்தனம் முதலிய மரங்கள் சூழ்ந்துள்ளதும், நாராயணர் துதி செய்வதுமாகிய
சுவாமிமலையில் யோக நிலையில் அமர்ந்துள்ள பெருமிதம் உடையவரே!
கேடு புரிபவருடைய இடங்களில் சென்று
அடியேன் மிகவும் மனம் நொந்து தடுமாற்றத்தை அடைந்து, அறிவு கெட, முழுவதும் தவறான வழியில் விழுந்து
ஆழத்திலே அழுந்தி மெலியாமல் ஒரு சிறந்த சொல்லையாவது கூறி, சுகத்தை அடைந்து, நல்ல மணங் கமழ்கின்ற உமது திருவடிகள்
இரண்டையும், ஒரு முகமாக நின்று
சிறியேன் பணிய மாட்டேனோ?
விரிவுரை
நாசர்
தங்கடை அதனில் விரவி ---
நாச
வேலை செய்யும் கீழ்மக்கள் வீடுகளில் சென்று அவருடன் கலந்து துன்புறுவர். உலகில்
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒன்று நட்பு. தீயாரோடு இணங்கினால் மனிதன்
அடியோடு அழிவான்.
ஞானமும்
கெட
---
தீயவருடன்
சேர்ந்தோர்க்குப் பொருள் அழிவதுடன் அறிவும் கெடும். ஞானமும் என்ற எச்சவும்மை
பொருளும் கெடும் என்பதை உணர்த்துகின்றது.
அடைய
வழுவி
---
அடைய-முழுவதும், வழுவுதல்-நன்னெறியினின்றும் முற்றும்
விலகுதல்.
ஆழத்து
அழுந்தி மெலியாதே ---
பாவமாகிய
படுகுழியின் ஆழத்தில் அழுத்தி மெலிவது கூடாது. பிறவிப் பெருங்கடலில்
அழுந்தியெனினும் பொருந்தும்.
மாசகந்
தொழும் உனது
---
முருகவேளை
அகில உலகங்களும் தொழுகின்றன. அப்பரமனே அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன். தேவதேவ
தேவாதி தேவன்.
“நவலோகமும் கைதொழு
நிசதேவ அலங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே” --- (சிவனார்) திருப்புகழ்
புகழின்
ஓர் சொற் பகர்ந்து சுகமேவி ---
முருகனுடைய
புகழ் அளவுக்கடங்காது. அதில் ஒரு சொல்லையேனுங் கூறினால் பெருஞ் சுகம் உண்டாகும்.
இறைவனுடைய திருநாமம் நம் துயர் தீர்க்கும்.
“எல்லாம் அரன் நாமமே சூழ்க
வையகமுந் துயர் தீர்க்கவே” --- திருஞானசம்பந்தர்
மாமணங்
கமழுமிரு கமல பாதத்தை ---
இறைவனுடைய
திருவடித் தாமரையில் ஞான வாசனை வீசுகின்றது.
நின்று
பணிவேனோ
---
நின்று
என்ற சொல், பலவாறு அலைகின்ற
மனத்தை அலையவிடாமல் ஒரு முகமாக நிறுத்தி நிலைபெற நின்று என்ற பொருளைத் தரும்.
அங்ஙனம் அசைவற்று நின்று திருவடியைத் தொழுதல் வேண்டும்.
“நின்று சேவிக்கிலேன்” --- கந்தரலங்காரம்
வாசகம்
புகலவொரு பரமர்தாம் மெச்சுகின்ற குருநாதா ---
உபதேச
வாசகம் தந்தைக்கு உரைக்க, அப்பரமபதி கேட்டு
மெச்சிப் புகழ்ந்தார். தந்தை மெச்சுந் தனயனாக அமையவேண்டும் என்பது குறிப்பு.
வாசவன்தரு
திருவை ஒரு தெய்வானைக் கிரங்கும் ---
வாசவன்-இந்திரன்.
தெய்வயானை தானே ஒரு குழந்தையுருக்கொண்டு சென்று இந்திரனால் வளர்க்கப் பெற்றனள்.
திரு
- அழகு. ஐ - சாரியை, தெய்வயானையிடம்
எப்போதும் முருகவேள் அன்பு செய்கின்றனர்.
“நவமாமணி வடமும் பூத்த
தன மாது எனும் இபமின் சேர்க்கை
நழுவாவகை பிரியங் காட்டு முருகோனே” --- (முகிலாமெனு)
திருப்புகழ்
கீசகம்
சுரர்தருவு மகிழு மா வத்தி சந்து ---
கீசகம்
- மூங்கில், சுரர் தரு - தேவதாரு, மகிழ் - மகிழமரம், மா - மாமரம், அத்தி - அத்திமரம், சந்து - சந்தனமரம்.
யோகத்து
அமர்ந்த
---
சுவாமிமலை
தந்தைக்கு உபதேசித்தத் தலம். இங்கு இறைவன் யோக நிலையில் விளங்குகின்றான்.
கருத்துரை
சுவாமிமலை வாழும் குருநாதா! உனது
திருவடி பணிய அருள் புரிவாய்.
No comments:
Post a Comment