பருகாத அமுது,ஒருவர் பண்ணாத பூடணம்,
பாரில்மறை யாத நிதியம்,
பரிதிகண்டு அலராத நிலவுகண்டு உலராத
பண்புடைய பங்கே ருகம்,
கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்
கானில் உறை யாத சீயம்;
கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்
காசினியில் அருமை யாகும்!
தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,
சீரிதயம், ஈகை, வதனம்,
திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்
செகமெலாம் கொண்டா டவே
அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை
ஆகும்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
இதன்பொருள் —-
இச் செகம் எலாம் கொண்டாடவே - இவ்வுலகெங்கும் புகழும்படியாக, அருள் கற்ப தரு என்ன - அருள் மிகுந்த கற்பகத் தருவைப் போல, ஓங்கிடும் தானதுரை ஆகும் - உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
பருகாத அமுது - உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் - ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் - உலகில் அழியாத செல்வம், பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் - ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் - கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் - கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் - கொடிய காட்டில் வாழாத சிங்கம், கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர் காசினியில் அருமையாகும் - நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகில் கிடைப்பது அருமையாகும்,
(எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் - விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் - உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடைப் பண்பும், அழகான முகமும், அசையாத வீரமும் ஆகிய இவையே என்று தெரிந்துகொள்வார்கள்.
No comments:
Post a Comment