சுவாமி மலை - 0222. நா ஏறு பா மணத்த





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நாவேறு பாமணத்த (சுவாமிமலை)

சுவாமிநாதா! 
உம்மோடு இரண்டறக் கலந்து இன்பம் உற, உபதேசம் அருள்


தானான தான தத்த தானான தான தத்த
     தானான தான தத்த ...... தனதான


நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
     நாலாறு நாலு பற்று ...... வகையான

நாலாறு மாக மத்தி னூலாய ஞான முத்தி
     நாடோறு நானு ரைத்த ...... நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
     நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
     நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
     சீராக வேயு ரைத்த ...... குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீராகு காகு றத்தி ...... மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
     காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே
  
கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நா ஏறு பா மணத்த பாதாரமே நினைத்து,
     நாலாறு நாலு பற்று ...... வகையான

நால் ஆறும் ஆகமத்தின் நூல்ஆய ஞான முத்தி
     நாள்தோறும் நான் உரைத்த ...... நெறியாக,

நீ வேறு எனாது இருக்க, நான்வேறு எனாது இருக்க
     நேராக வாழ்வதற்கு ...... உன்அருள்கூர,

நீடுஆர் ஷட ஆதரத்தின் மீதே பரா பரத்தை
     நீ காண் எனா அனைச் சொல் ...... அருள்வாயே.

சே ஏறும் ஈசர் சுற்ற, மாஞான போத புத்தி
     சீர் ஆகவே உரைத்த ...... குருநாதா!

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
     தீரா! குகா! குறத்தி ...... மணவாளா!

காவேரி நேர் வடக்கிலே வாவி பூ மணத்த
     கா ஆர் சுவாமி வெற்பின் ...... முருகோனே!

கார்போலும் மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
     காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே.

பதவுரை

      சே ஏறும் --- இடபத்தின் மீது ஊர்ந்தருளுகின்ற

     ஈசர் சுற்ற --- சிவபெருமான் தேவரீரை வலம் வந்து வணங்க,

     மாஞான போத புத்தி --- சிறந்த ஞானமாகிய மெய்யுணர்வினால் அறியத் தக்கதை,

     சீராக உரைத்த குருநாதா ---- (ஏ-அசை) செம்மையாக உபதேசித்த, குருபரரே!

      தேரார்கள் நாடு சுட்ட --- தங்கட்குப் பகைவர்களாகிய தேவர்களுடைய பொன்னுலகத்தை சுட்டு எரித்த

     சூரர்கள் மாள வெட்டு தீரா --- சூரபதுமன் முதலியோர் இறந்தொழிய வெட்டித் துணித்த தைரியமுடையவனே!

      குகா --- குகப்பெருமானே!

      குறத்தி மணவாளா --- வள்ளி யம்மையாரது கணவரே!

      காவேரி நேர் வடக்கில்(ஏ-அசை) --- காவிரி நதிக்கு நேரான வடபுறத்தில்

     வாவி பூமணத்த --- குளங்கள் நிறைந்தும், மலர்களின் நன்மணம் கமழும் குளிர்ந்த

     கா ஆர் --- சோலைகள் பல சூழ்ந்தும் விளங்கும்

     சுவாமி வெற்பின் முருகோனே --- சுவாமி மலையில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே!

         கார் போலு மேனி பெற்ற மாகாளி --- நீருண்ட மேகம் போன்ற திருமேனியையுடைய பெருமை பொருந்திய காளியும்,

     வாலை --- இளமையுடையவரும்,

     சத்தி --- சத்தியும்,

     காமாரி வாமி --- மன்மதனை எரித்த சிவமூர்த்தியினது இடப்பாகத்தை உடையவருமாகிய உமையம்மையார்

    பெற்ற பெருமாளே --- ஈன்றருளிய பெருமையின் மிக்கவரே!

      நா ஏறு பா மணத்த --- நாவினில் நின்று வெளிப்படுகின்ற பாமலர்களின் நறுமணங் கமழ்கின்ற

     பாதாரமே நினைத்து --- பாத தாமரைகளையே எண்ண,

     நால் ஆறு நாலு பற்று வகையான (4X6 = 24ம், 4ம் ஆக 28) இருபத்தெட்டு என்ற எண்ணிக்கையுடன் சிவசம்பந்தத்தை உடையதாகி,

     நால் ஆறும் --- சரியை கிரியை யோகம் ஞானம் என்ற நான்கு பாதங்களை விரித்துரைப்பதாகிய

     நூல் ஆய ஆகமத்தின் --- அறிவு நூலாகிய ஆகமத்திற் கூறிய,

     ஞான முத்தி --- பதிஞானத்தாற் பெறுவதாகிய முத்தியைப் பெறுவதற்கு,

     நாள்தோறும் நான் உரைத்த நெறியாக ---  நாள்தோறும் அடியேன் உமது திருவருளால் சொல்லி அன்பு நெறியிலே சென்று,

     நீ வேறு எனாது இருக்க --- தேவரீர் வேறு என்னாமல் இருக்கவும்,

     நான் வேறு எனாது இருக்க --- தேவரீரினின்றும் பிரிந்து நான் வேறு என்னாமல் ஒன்றுபட்டு (அத்துவிதமுற்று)

     நேராக வாழ்வதற்கு --- நேர்மையான இன்ப வாழ்வில் திளைத்து நிற்பதற்கு,

     உன் அருள் கூர --- தேவரீரது திருவருள் பொருந்த,

     நீடு ஆர் சட் ஆதரத்தின் மீது (ஏ-அசை) --- மேன்மை பொருந்திய ஆறு ஆதாரங்களையும் கடந்து அவைகட்கு அப்பால் விளங்கும் சகஸ்ராரப் பெருவெளியில் விளங்கும்

     பராபரத்தை --- பெரிய பொருள் கட்கெல்லாம் பெரிய பொருளாகிய சிவத்தை

     நீ காண் எனா --- நீ காண்பாயாக என்று,

     அனைச் சொல் அருள்வாயே --- ஐக்கிய பதத்தை உபதேசித்து அருள்புரிவீர்.
 

பொழிப்புரை

         இடப வாகனத்தின் மீது ஏறி எழுந்தருளி வருகின்ற சிவபெருமான் வலம் வந்து வணங்கி நிற்க, சிறந்த சிவஞானமாகிய உண்மை பொருளைச் சிறப்பாக எடுத்து உபதேசித்த குருபரரே! தங்கட்குப் பகைவர்களாகிய தேவர்களுடைய சுவர்க்க உலகத்தைக் கொளுத்தி துன்பஞ் செய்த சூரபதுமனாதி அசுரர்கள் இறந்தொழிய வெட்டித் துணித்த தீரரே!

         ஆன்மாக்களின் இதய குகையில் வசிப்பவரே!

         குறவர் குலத்தில் அவதரித்த வள்ளிநாயகியாரது கணவரே!

         காவிரி நதிக்கு நேர் வடபுறத்தில் விளங்குவதும், தடாகங்கள் நிறைந்ததும், நறுமணங்கள் மிக்க பூவனங்கள் சூழத் திகழ்வதுமாகிய சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளே!

         நீருண்ட நீலமேகம் போன்ற திருமேனி யையுடையவரும், சிறந்த காளியாக அவதரித்தவரும், இளமைப் பருவத்தை யுடையவரும், காமனை எரித்த கண்ணுதற் கடவுளுடைய இடப்புறத்தை பெற்றவருமாகிய உமாதேவியார் பெற்றருளிய பெருமிதம் உடையவரே!

         நாவினின்றும் வெளிப்படுகின்ற பா மலர்களின் வாசனை கமழ்கின்ற தேவரீருடைய திருவடித் தாமரைகளை எப்போதும் தியானித்து, சிவசம்பந்தம் உடைய இருபத்தெட்டு வகைப்பட்ட சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களை விளக்கிக் கூறுகின்ற சிவாகமங்களாகிய அறிவுநூல்களிற் கூறிய பதிஞானத்தாற் கிடைக்கும் முக்தியைப் பெறுதற்கு அடியேன் திருவருள் துணை கொண்டு கூறிய அன்புநெறியாகச் சென்று, தேவரீரும், அடியேனும் வேறு என்னாத ஒன்றுபடும் அத்துவித நிலையை நேர்மையாக அடைந்து, அப்பேரின்பத்தில் வாழ்வதற்குத் தேவரீரது திருவருள் பொருந்த, மேன்மை பொருந்திய ஆறு ஆதாரங்களுங் கடந்து அப்பால் விளங்கும் சகஸ்ராரப் பெருவெளியில் திகழும் பரம்பொருளை நீ காண்பாயாக என்று ஐக்கிய பதத்தை உபதேசித்து அருள்புரிவீர்.

விரிவுரை

நாவேறு பாமணத்த பாதாரம் ---

அடியார்கள் அன்பெனும் நார்கொண்டு இன்னிசைச் சொல்லெனும் மலர்களை நாவிலே தொடுத்த பாமாலைகளை ஆறுமுகப்பெருமான் திருவடியிலே சூட்டுவர். எம்பெருமான் திருவடியிலே அப் பாமணம் என்றும் இடையறாது கமழ்ந்து கொண்டிருக்கும்.

முடியவழி வழி அடிமை எனும் உரிமை அடிமை முழுது
     உலகு அறிய மழலைமொழி கொடுபாடும் ஆசுகவி
முதல மொழிவன நிபுண மதுபமுக ரிதமவுன
     முகுள பரிமளநிகில கவிமாலை சூடுவதும்”       --- சீர்பாத வகுப்பு.

பாதாரவிந்தம் என்பது பாதாரம் என்று கடைக்குறையாயிற்று.

நாலாறு நாலுபற்று வகையான நாலாரு மாகமத்தின் ---

சிவாகமங்கள் இருபத்தெட்டு. வேதம் பொது நூல். ஆகமம் சிறப்பு நூல். ஆகமம் என்ற சொல்லுக்கு ‘வந்தது‘ என்று பொருள். இறைவனுடைய நாவிலிருந்து வந்தது எனப்படும். ஆ-பாசம், க-பசு, ம-மல நாசம் என்றும், ஆ-சிவஞானம், க-மோக்ஷம், ம-மலநாசம்; மலத்தைக் கெடுத்து சிவஞானத்தைக் கொடுத்து, மோக்ஷத்தை யருளுவது என்றும் பொருள்படும்.

ஆகமங்கள் இருபத்தெட்டாவன:-காமிகம், யோசகம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்ரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்னேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம், புரோற்கீதம், லளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம்.

இந்த ஆகமங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களுடன் கூடியன. இவற்றுள் சரியான பாதத்திலே சமயாசாரங்களும் சமய விசேட நிருவாண ஆசாரிய அபிடேக விதிகளும் கூறப்படும்.

கிரியா பாதத்திலே மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, ஜெபம், ஓமம் முதலியன கூறப்படும்.

யோக பாதத்திலே பிரணாயாம முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோக லக்கணம் செப்பப்படும்.

ஞான பாதத்திலே பதிபசுபாசம் திரிபதார்த்த லக்ஷணங்கள் பேசப்படும்.

நீ வேறு எனாது இருக்க நான் வேறு எனாது இருக்க ---

ஜீவனும் சிவனும் அத்துவிதமுற்று நிற்கும் இரண்டற்ற நிலை. அது இருவினையொப்பு மலபரிபாகமுற்ற பொழுது சத்தி பதியும். அருள்பதிந்த பின் அத்துவித நிலையெய்தும்.

இருவினை முமலமும் அற, இறவியொடு பிறவி அற,
      ஏகபோகமாய் நீயும் நானுமாய்
இறுகும்வகை, பரமசுகம் அதனை அருள் இடைமருதில்
      ஏகநாயகா லோகநாயகா”           --- (அறுகுநுனி) திருப்புகழ்

நீடார் சடாதரத்தின் மீதே பராபரத்தை ---

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்கட்கும் அப்பாற்பட்ட ஆனந்த மேலை வெளியில் விளங்கும் பரவெளியை என்பது.

ஆனந்த மேலை வெளியேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்றத்   ஒருநாளே”   --- (மூளும் வினை) திருப்புகழ்

சே ஏறும் ஈசர் ---

சே-இடபம். சர்வ சங்காரகாலத்தில் எல்லாம் அழிய அறமொன்றே எஞ்சி நின்றது. அது இடபமாக நிற்க ஈறிலா ஈசன் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கால்களுடன் கூடிய அத்தருமமாகிய விடையின் மீது ஏறியருளினார்.

தேரார்கள் ---

தக்கயாகத்தில் தேவர்களுங் கலந்திருந்து சிவபரம்பொருளின் தனிப் பெருந் தலைமையை ஆராயாது கிடந்தனர். ஆதலால் தேவர்கள் தேரார்கள் என்றனர். தேர்தல் - ஆராய்தல்.
   
கருத்துரை

சிவகுருவே! சூராந்தக! குக! வள்ளி மணாள! சுவாமி மலையாண்டவரே! பார்வதி பால! தேவரீருடைய திருவடியை நினைத்து சிவாகம நெறி சென்று அத்துவிதமுற்று, இன்புற உபதேசித்தருள்வீர்.        

No comments:

Post a Comment

97. அரிதானவை, புகழ்ச்சிக்கு உரியவை

  பருகாத அமுது,ஒருவர் பண்ணாத பூடணம்,      பாரில்மறை யாத நிதியம்,   பரிதிகண்டு அலராத நிலவுகண்டு உலராத      பண்புடைய பங்கே ருகம், கருகாத புயல்...