பழநி - 0156. சிவனார் மனம் குளிர





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சிவனார் மனங்குளிர (பழநி)

பழநியப்பா! 
உனது அருளின் திறத்தை எண்ணாது, 
அவமாயை கொண்டு உழலும் அடியேனை,  
அஞ்சேல் என்று அருளி,  
அருள் ஞான இன்பம் தந்து ஆண்டு கொள்வாய்.


தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான


சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதி லும்பகர்செய் ......     குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலேவி ரும்பியுளம் ......     நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
     மடியேனை அஞ்சலென ......     வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
     அருள்ஞான இன்பமது ......      புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ......       மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
     நலமான விஞ்சைகரு ......       விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ......        வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
     செகமேல்மெய் கண்டவிறல் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு
     செவி மீதிலும் பகர் செய் ......   குருநாதா!

சிவகாம சுந்தரி தன் வரபால! கந்த! நின
     செயலே விரும்பி உளம் ......    நினையாமல்,

அவமாயை கொண்டு, லகில் விருதா அலைந்து உழலும்
     அடியேனை அஞ்சல் என ......   வரவேணும்.

அறிவு ஆகமும் பெருக, இடர் ஆனதும் தொலைய
     அருள்ஞான இன்பம் அது ......        புரிவாயே.

நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும், ரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ......       மருகோனே!

நவலோகமும் கைதொழு நிசதேவ! அலங்கிருத
     நலமான விஞ்சை கரு ...... விளைகோவே!

தெவயானை அம் குறமின் மணவாள! சம்ப்ரம் உறு
     திறல்வீர! மிஞ்சு கதிர் ......       வடிவேலா!

திருவாவினன் குடியில் வருவேள்! சவுந்தரிக!
     செகமேல் மெய் கண்ட விறல் ...... பெருமாளே.


 பதவுரை

      சிவனார் மனம் குளிர --- சிவபெருமானுடைய திருவுள்ளமானது (பிரணவ மந்திரரோபதேச அமுதத்தால்) குளிர்ந்து இன்புற்று விளங்க,

     உபதேச மந்த்ரம் --- (வெளிப்படையாகக் கூறத்தகாததும்) சீடனுக்குக் குருநாதன் உபதேச முறையால் கூறத்தக்கதுமாகிய பிரணவ மந்திரப் பொருளை,

     இரு செவி மீதிலும் பகர் செய் --- (வாய்விட்டுச் சொல்ல வொண்ணாததால் சின்முத்திரையால் காட்டியதோடு) இரண்டு செவிகளிலும் அப்பொருள் நிரம்புமாறு உபதேசித்தருளிய

     குருநாதா --- சற்குருநாதரே!

      சிவகாம சுந்தரி தன் வர பால --- சிவமூர்த்தியை விரும்பியுள்ள அழகில் சிறந்த உமாதேவியாருடைய பெருமை பொருந்திய திருக்குமாரரே!

      கந்த --- கந்தப்பெருமானே!

      நவநீதமும் திருடி --- (கோபிகைகள் வீட்டில பால் தயிர் மட்டுமின்றி்) வெண்ணெயுந் திருடி,

     உரலோடே ஒன்றும் --- (யசோதையினால்) உரலுடன் பிணித்துக் கட்டப்பெற்ற

     அரி --- பாவங்களை ஒழிப்பவராகிய கண்ணபிரானாகவும்,

     ரகுராமர் --- ரகு குலத்தில் இராமச்சந்திரராகவும் அவதரித்த நாராயணமூர்த்தி,

     சிந்தை மகிழ் --- திருவுள்ளம் மிகவும் மகிழும்படியான,

     மருகோனே --- மருகராக எழுந்தருளியுள்ளவரே!

     நவலோகமும் கைதொழு --- ஒன்பது கண்டத்தினர்களும் கைகூப்பி வணங்குகின்ற,

      நிச தேவ --- உண்மைத் தெய்வமே!

      அலங்கிருத ---- (இரத்தின மணியணி பொன்மாலைகளால்) அலங்கரிக்கப்பட்டவரே!

     நலமான விஞ்சை கரு --- நன்மையைத்தரும் கல்வியின் மூலம்,

     விளை கோவே - விளைகின்ற கலாதிபரே!

     தெய்வயானை அம் குறமின் மணவாள --- தெய்வயானை யம்மையாருக்கும் அழகிய மின்னலைப் போன்ற வள்ளியம்மையாருக்கும் நாயகரே!,

      சம்ப்ரம் உறு --- சம்பிரமம் பொருந்திய,

     திறல் வீரம் மிஞ்சு --- அளப்பற்ற ஆற்றலும் வீரமும் மிகுந்துள்ள,

     கதிர்வடிவேலா --- ஒளிமிகுந்த வேலாயுதத்தை ஏந்தியவரே!

      திரு ஆவினன்குடியில் வருவேள் --- திருவாவினன்குடி யென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேளே!

      சவுந்தரிக --- இணையற்ற கட்டழகுடையவரே!

      செக மேல் மெய்கண்ட --- உலகில் உண்மை ஞானத்தைக் கண்டுரைத்த,

     விறல் பெருமாளே --- வலிமை பொருந்திய பெருந்தகையினரே!

         நின் செயலே விரும்பி உளம் நினையாமல் --- தேவரீருடைய திருவருட் செயல்களையே பெரிதும் விழைந்து அவ்வருள் விளையாடல்களை உள்ளத்தில் நினையாமற் படிக்கு,

     அவமாயை கொண்டு --- பயனில்லாது வைகும் மகாமாயைக்குள் மூழ்கி,

     உலகில் விருதா அலைந்து உழலும் --- உலகின் கண் வீணான காரியங்களில் மிகவும் அலைந்து உழன்று கொண்டிருக்கும்.

     அடியேனை அஞ்சல் என வரவேணும் --- அடியேனைப் பயப்படாதே என்று சொல்லி திடமுறச் செய்யும் பொருட்டு தேவரீர் வந்தருளவேண்டும்.

     அறிவு ஆகமும் பெருக --- ஊன சரீரத்தை விட்டு ஞான சரீரத்தைப் பெறவும்

     இடர் ஆனதும் தொலைய --- (பிறப்பதுமாகிய) துன்பமானது அறவே நீங்கவும்,

     அருள் ஞான இன்பமது புரிவாயே --- தேவரீருடைய திருவருள் ஞானத்தால் விளையும் அத்துவிதப் பேரின்பத்தைத் தந்து அருள்புரிவீர்.


பொழிப்புரை

         (பிரணவ மந்திரப் பொருள் விளக்க உபதேசத் திரு அமுதால்) சிவபெருமானுடைய திருவுள்ளமானது குளிரும்படி, உபதேசமுறையாகக் கூறத்தக்க குடிலை மந்திரத்தின் பொருளை, (கரத்தில் ஞான முத்திரையாக விளக்கியதும் அல்லாமல்) அவருடைய இரு செவிகளிலும் உபதேசித்தருளிய ஞானகுருநாதரே!

     சிவகாம சுந்தர வல்லியம்மையாருடைய சிறந்த திருக்குமாரரே!

         கந்தமூர்த்தியே!

         (பால் தயிருடன்) வெண்ணெயையும் களவாடிய, (யசோதையால்) உரலில் கட்டுப்பட்ட கண்ணபிரானும், பாவத்தை நீக்குபவரும், ரகுகுலத்தில் அவதரித்த ஸ்ரீராமசந்திரரும் ஆகிய விட்டுணுதேவர் சிந்தை மகிழ் மருகரே!

         ஒன்பது கண்டத்தவர்களாலும் வணங்கப்பட்ட மெய்த் தெய்வமே! (மணியணி மலர்களால்) அலங்கரிக்கப்பட்டவரே!

         நன்மையைத் தரும் கல்வியின் மூலம் விளைவதற்கு நிலைக் களனாய் விளங்கும் தலைவரே!

         தெய்வயானையம்மையாருக்கும் குறவர் குடியில் தோன்றிய அழகிய மின்னலை நிகர்த்த வள்ளியம்மையாருக்கும் மணவாளரே!

         சம்பிரமம் பொருந்திய வல்லபமும் வீரமுடைய கதிர் வேலாயுதக் கடவுளே!

         திருஆவினன்குடி என்னும் திவ்விய தலத்தில் எழுந்தருளியுள்ள செவ்வேட் கடவுளே!

         கட்டழகுடையவரே!

         உலகில் மெய்ப் பொருளைக் கண்டுரைத்த அறிவாற்றலுடைய பெருமையிற் சிறந்தவரே!

         தேவரீருடைய திருவருட் செயலை விரும்பி மனத்தில் நினைந்து துதிக்காமற் படிக்கு பயனற்ற மாயையிற் சிக்கி, உலகில் வீணாக அலைந்து (வாணாளைக் கழித்து) சுழன்று திரிகின்ற, அடியேனை ‘அஞ்சேல்!’ என்று கூறி அருளவேண்டும். (ஊன் உடம்பு நீங்கி) ஞான உடம்பைப் பெறவும் (பிறப்பிப்பாகிய) பெருந்துன்பம் நீங்கவும் திருவருள் ஞான இன்பத்தை அடியேனுக்குக் கொடுத்து அருள்புரிவீர்.


விரிவுரை


சிவனார் மனங்குளிர......இரு செவிமீதிலும்.........குருநாதா ---

கயிலைமலையின் கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த ஞான்று சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த அமரர்கள் அனைவரும் குகக் கடவுளை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை, அறுமுகனார் சிறைப்படுத்தி முத்தொழிலும் புரிந்து தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணி விளக்கென வெளிப்படுத்தினர்.

  பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின் கணிருந்த கந்தக் கடவுள் தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகுதைவந்து “குமரா! நின் பெருமையை உலகமெவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்கவொண்ணாத மாப் பெருந்தகைமை யுடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதனின்றி மெய்ப்பொருளை யுணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டும் என்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபக எறிந்த வள்ளலை நோக்கி,

அமரர் வணங்குங் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வைரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையிலிருத்தி, எல்லார்க்குஞ் செய்யும் வணக்கமும் நினக்கே எய்துந் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்றெறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினாலன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழற வல்லேம்” என்றனர்.

அரனார் கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்ததென்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமரும் தணிகை வெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறு ஊர்ந்து தணிகைமாமலையைச் சார்ந்தனர்.

குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப்பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பாலவென்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படூஉம் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் உஞற்றியதால் அத்தணிகைமலை, கணிக வெற்பு எனப் பெயர் பெற்றதென்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவமியற்றக் கதிர்வேல் அண்ணல் தோன்றலும், ஆலமுண்ட அண்ணல் எழுந்து குமரனை வணங்கி வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும், தாழ்வயிற்
சதுர்பட வைகுபு, தா அரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.  --- தணிகைப் புராணம்.

நாத போற்றி என முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”            --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனர்
 ஓதாய் என, ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர் பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்

அவ்வாறு கூறிய அமுதமொழி இரண்டு செவிகளிலும் நிரம்பியது என்பது பொருள்.


சிவகாமி சுந்தரிதன் வரபால ---

சிவகாமசௌந்தரிக்கு மிகவும் அன்புடைய குழந்தை முருகப்பெருமான். “கச்சித்தாய் உச்சியை மோந்து கண்ணோடு அணைக்கும் திருத்தாளா,” என்ற சிதம்பர சுவாமிகளின் திருவாக்காலும் “பார்வதீ ப்ரிய நந்தனாய நம”. என்ற திருமந்திரத்தாலும் விளங்குகின்றதல்லவா?

நின்செயலே விரும்பி உளம் நினையாமல் ---

திருவாலயத்திற்குச் செல்லும் காலங்களிலும் ஓய்வு பெற்றுத் தனித்திருக்கும் சமயங்களிலும், மனத்தில் உலக விவகாரங்களைக் கொண்டு விட்டு, பற்பல எண்ணங்களை எண்ணி நெஞ்சம் புண்ணாகாமல், எம்பெருமானுடைய திருவருட் பெருக்கால் செய்தருளிய திருவிளையாடல்களின் பெருமைகளையும், அதன் தத்துவங்களையும், அவருடைய திருவடியை அடையும் செந்நெறியையும், அடியார்க்கு ஆண்டவர் எளிதில் வந்து இன்னருள் செய்யும் பெருங்கருணைத் திறத்தையும் எண்ணி எண்ணி இன்புற வேண்டும். இங்ஙனம் எண்ணும் தன்மை உடையாருடைய மனத்தில் தீய எண்ணங்கள் அணுத்துணையும் இருப்பதற்கு இடமில்லை.

சிந்தனைநின் தனக்கு ஆக்கி, நாயி னேன்தன்
     கண் இணை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி,
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி, வாக்கு உன்
     மணிவார்த்தைக்கு ஆக்கி, ஐம்புலன்கள் ஆர
வந்தனை, ஆட்கொண்டு உள்ளே புகுந்த, விச்சை
     மால் அமுதப் பெருங்கடலே! மலையே! உன்னைத்
தந்தனை, செந்தாமரைக் காடு அனைய மேனித்
     தனிச்சுடரே! இரண்டுமிலித் தனிய னேற்கே.   --- திருவாசகம்.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்தவா, வினையேன் நெடுங் காலமே.      --- தேவாரம்.

அவமாயை கொண்டு உழலும் ---

மகாமாயை களைந்திட வல்ல பிரா”னுடைய அருட்செயல்களை விரும்பி நினையாமையால் உலக பசுபாச சொந்தங்களாகிய படுமாயையிற் சிக்கி அப் பாழ்த்த படுகுழியில் வீழ்ந்து, உய்யும் நெறி உணராது பன்னெடுங் காலமாக உழன்று கொண்டு வருகின்றோம்.

    மாலாசை கோபம் ஓயாதெனாளும்
         மாயா விகார வழியே செல்
    மாபாவி காளி”                    --- திருப்புகழ்

 
நவநீதமும் திருடி ---

கண்ணபிரான்-அருந்தவம் புரிந்து ஆய்ச்சியராக வந்து, தன்னையே நினைந்து உருகும் கோபிகைகள் மனை தொறுஞ்சென்று, அவர்களுடைய “அமலமாகிய சிந்தையில்” “உறவுகோல் நட்டு உணர்வு வயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்ற” அன்பின் முதிர்ச்சியாகிய வெண்ணெயை உண்டார். திருவிளையாடல் காரணமாகவும், மருத மரமாக நின்ற கந்தருவர்களின் சாபத்தைத் தொலைத்தருளும் பொருட்டாகவும், தாயார் அன்பெனும் கயிற்றைக் கொண்டு திடஞானமென்னும் உரலில் கட்டக் கட்டுப்பட்டார்

இடையார் மனை தோறும்நித்தம் உறிதயிர் நெய்பால் குடிக்க,
    இருகைஉற வேபிடித்து,              உரலோடே
 இறுகிட, அசோதை கட்ட, அழுதிடு கோபால கிருஷ்ணன்,
    இயல் மருகனே, குறத்தி            மணவாளா”
                                                                     --- (நடையுடைய) திருப்புகழ்

நவலோகமும் கைதொழு ---

மூவர்க்குந் தேவர்க்கும் யாவர்க்கும் முழுமுதற் கடவுள் முருகப்பெருமானே யாதலால், அப்பரமபதியை நவகண்டங்களில் வாழும் ஆன்மகோடிகள் அனைவரும் கைகூப்பித் தொழுது வழிபடுகிறார்கள்.

    பதினாலு உலகத்தினில் உற்றுஉறு பக்தர்கள்
     ஏது நினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே”
                                                                   --- (கோமள) திருப்புகழ்

    சகம் தொழும் சரவணப் பெருமாளே”  --- (அந்தகன் திருப்புகழ்)

நவகண்டங்கள் ---

பரதகண்டம், குருகண்டம், கிம்புருடகண்டம், இளாவிருதகண்டம், அரிவருடகண்டம், கேதுமால கண்டம், இரமிய கண்டம், பத்திராசுவ கண்டம், இரணிய கண்டம் என்பனவாம்.

நிசதேவ ---

முருகப்பெருமான் என்றும் ஒரு படித்தாக நித்தியமாக விளங்குபவர். செத்துப் பிறக்கின்ற பிறதெய்வங்களைப் போலல்லாது, பிறவாமலும், இறவாமலும், இருக்கும் தனிப்பெருந்தலைவர்.

என்றும் அகலாத இளமைக்கார”   --- (சந்தனசவாது) திருப்புகழ்

பெம்மான் முருகன் பிறவான் இறவான்” --- கந்தர்அநுபூதி.

என்றும் இளையாய் அழகியாய்”          --- நக்கீரர்

செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
 செங்கீரை ஆடி அருளே”             --- குமரகுருபரர்

நலமான விஞ்சை கரு விளை கோவே ---

சகல கலைகளும் முருகப்பெருமானிடத்திலிருந்தே தோன்றின. வேதாகமங்களும் அப்பெருமானுடைய திருமுகங்களினின்றும் தோன்றினவே; அதனால் அருணகிரியார் அப்பெருமானைப் பின்வருமாறு துதிக்கின்றார்.

    வேத ஆகம ஞான வினோத”                --- கந்தர்அநுபூதி.

    கல்லசல மங்கை எல்லையில் விரிந்த
          கல்வி கரைகண்ட புலவோனே”      --- (அல்லசடைந்த) திருப்புகழ்

    சகல கலை முழுதும் வல பெருமாளே” --- (அளகநிறை) திருப்புகழ்

சவுந்தரிக ---

ஆயிரங்கோடி மன்மதர்கள் ஒருங்கு கூடினும் எந்தை கந்தவேள் திருவடி அழகுக்கு இணையாகாது. முழுதும் அழகிய பெருமாளாகிய அத்தெய்வமே அழகுக்கு உறைவிடம்; அவரே அழகுக்குப் பிறப்பிடம்.

ஆயிரகோடி காமர் அழகுஎலாம் திரண்டு ஒன்றாகி
மேயின எனினும், செவ்வேள் விமலமாம் சரணம் தன்னில்,
தூயநல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின், இனைய தொல்லோன்
மாஇரு வடிவிற்கு எல்லாம் உவமை யார் வகுக்க வல்லார்.  --- கந்தபுராணம்

திருவாவினன்குடி ---

பழநிமலையின் அடிவாரத்திலுள்ள கோயில், “திருவாவினன்குடி” யாகும். திரு-இலக்குமி, ஆ-காமதேனு, இனன்-சூரியன், கு-பூமி, டி-அக்கினி, எனவே இந்த ஐவரும் பூசித்த கோயில் என்பர்.

ஜெகமேல் மெய்கண்ட விறல் பெருமாளே ---

சுப்ரமண்ய சாரூபம் பெற்ற அபர சுப்பிரமணியர்களில் ஒருவர், சுப்ரமண்ய பரப்பிரமத்தின் திருவருள் தாங்கி, திருஞானசம்பந்தராகத் தோன்றி, திருமயிலையிலே எலும்பைப் பெண்ணாக்கும் காலத்து, “உலகிற் பிறந்தார்கள் பெறும் பயன்களாவன. மதிசூடும் மணிமிடற்று அண்ணலினது அடியாருக்கு அன்னம் அளித்து உபசரித்தலும், அக்கண்ணுதற் கடவுள் அடியார் பொருட்டு எழுந்தருளியவருடைய நல்விழாவை அன்புடன் தெரிசித்தலுமேயாம், பிறவியின் பயன்கள் இவ்விரண்டுமே என்பது உண்மையேல், நீ உலகவர் முன் உயிர் பெற்றெழுக” என்று சொல்லி உண்மையைக் கண்டு உரைத்து பெண்ணாகச் செய்த அற்புத அருட் செயலையுங் குறிப்பாக உணர்த்தும்.

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்,
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டுஆர்தல்,
உண்மை. ஆம் எனில் உலகர்முன் வருக என உரைப்பார்.  --- பெரிய புராணம்.


 கருத்துரை


         பரசிவகுருவே! மலைமகள் மைந்த! கந்த! மால்மருக! மெய்த் தெய்வமே! கலாபதி! கஜவல்லி வனவல்லி மணாள! கதிர்வேல! திருவாவினன்குடியில் வாழ்பவ! தேவரீரது அருட்டிறத்தை உன்னாது அவமாயை கொண்டுழலும் அடியேனை, அஞ்சேலென்று அருளி, அருள் ஞான இன்பத்தைக் கொடுத்து ஆண்டு கொள்வீர்.



No comments:

Post a Comment

50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 50 -- இடன் அறிதல் இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவத...