அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
கார் அணிந்த (பழநி)
முருகா!
மாதர் மயலில் தாழாமல்
அடியேனை ஆண்டருள்.
தான
தந்ததனத் தான தந்ததனத்
தான தந்ததனத் ...... தனதான
கார
ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்
கான
ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
காய மொன்றுபொறுத் ...... தடியேனும்
தாரி
ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம்
தாள்ப
ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான்
சூர
னங்கம்விழத் தேவர் நின்றுதொழத்
தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா
தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே
ஆர
ணன்கருடக் கேத னன்தொழமுற்
றால முண்டவருக் ...... குரியோனே
ஆலை
யும்பழனச் சோலை யும்புடைசுற்
றாவி னன்குடியிற் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
கார்
அணிந்த வரைப் பார் அடர்ந்து, வினைக்
காதல் நெஞ்சு அயர, ...... தடுமாறி,
கால், நரம்பு உதிரத் தோல் வழும்பு
உறு பொய்க்
காயம் ஒன்று பொறுத்து, ...... அடியேனும்,
தார்
இணங்கு குழல், கூர் அணிந்த விழி,
சாபம் ஒன்று நுதல், ...... கொடியார்தம்,
தாள்
பணிந்து, அவர் பொன் தோள் விரும்பி, மிகத்
தாழ்வு அடைந்து உலையத் ...... தகுமோ தான்?
சூரன்
அங்கம் விழ, தேவர் நின்றுதொழ,
தோயமும் சுவறப் ...... பொரும் வேலா!
தூய்மை கொண்ட குறத் தோகை நின்ற புனச்
சூழ் பெருங்கிரியில் ...... திரிவோனே!
ஆரணன், கருடக் கேதனன் தொழ, முற்று
ஆலம் உண்டவருக்கு ...... உரியோனே!
ஆலையும்
பழனச் நோலையும் புடை சுற்று
ஆவினன்குடியில் ...... பெருமாளே.
பதவுரை
சூரன் அங்கம் விழ --- சூரபன்மனுடைய உடல்
நின்று அழிந்து விழவும்,
தேவர் நின்று தொழ --- தேவர்கள் திருமுன்
நின்று வணங்கவும்,
தோயமும் சுவற --- கடல்நீர் வற்றிப்போகவும்,
பொரும் வேலா --- போர் செய்த வேலாயுதக்
கடவுளே!
தூய்மை கொண்ட --- பரிசுத்தமுடைய,
குற தோகை நின்ற --- குறவர் குலத்தில்
வளர்ந்து மயில் போன்ற வள்ளியம்மை வாழ்ந்த,
புன சூழ் பெறும் கிரியில் திரிவோனே ---
தினைப்புனங்கள் சூழ்ந்த பெரிய மலையில் உலாவினவரே!
ஆரணன் --- பிரம்மதேவரும்,
கருட கேதனன் --- கருடக் கொடியுடைய திருமாலும்,
தொழ --- வணங்க,
ஆலம் முற்று உண்டவருக்கு --- நஞ்சம் முழுவதையும்
உண்ட சிவபெருமானுக்கு,
உரியோனே --- உரிய புதல்வரே!
ஆலையும் --- கரும்பாலைகளும்,
பழன --- வயல்களும்,
சோலையும் புடைசுற்று --- மலர்ச்சோலைகளும்
அருகில் சூழ்ந்துள்ள,
ஆவினன்குடியில் --- திருவாவினன்குடியில்
எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
கார் அணிந்த வரை பார் அடர்ந்து ---
மேகங்களை அணிந்த மலைகளுடன் கூடிய இப்பூமியில் பொருந்தி,
வினை காதல் நெஞ்சு அயர --- வினைகளை
விளைக்கும் காலினால் உள்ளம் சோர்ந்து,
தடுமாறி --- தடுமாற்றத்தை அடைந்து,
கால் --- வாயு,
நரம்பு --- நரம்பு,
உதிர --- இரத்தம்,
தோல் --- தோல்,
வழும்பு உறு --- கொழுப்பு இவைகளுடன் கூடிய,
பொய் காயம் ஒன்று பொறுத்து --- பொய்யான இந்த
உடல் ஒன்றைச் சுமந்து,
அடியேனும் --- அடியவனாகிய நான்,
தார் இணங்கு குழல் --- மாலை சேர்ந்த
கூந்தலையும்,
கூர் அணிந்த விழி --- கூர்மையான கண்களையும்,
சாபம் ஒன்று நுதல் --- வில்லுக்கு ஒப்பான
நெற்றியையும் உடைய,
கொடியார் தம் --- கொடி போன்ற மாதருடைய,
தாள் பணிந்து --- பாதத்தைப் பணிந்து,
அவர் பொன்தோள் விரும்பி --- அவர்களுடைய அழகிய
தோள்களை விரும்பி,
உலையத் தகுமோ தான் --- மிகவும் கீழான நிலையை அடைந்து, அழிந்து போவது தக்கதாமோ?
பொழிப்புரை
சூரபன்மனுடைய உடல் அழிந்து விழுமாறும்
தேவர்கள் திருமுன் நின்று வணங்கவும், கடல்
நீர் வற்றிப் போகவும், போர் செய்த வேலாயுதக்
கடவுளே!,
பரிசுத்தமுடைய குறவர் குலமகளாகிய மயில்
போன்ற வள்ளியம்மையார் இருந்த தினைப்புனங்கள் சூழ்ந்த பெரிய மலையில் திரிந்தவரே!
பிரமதேவரும், கருடக் கொடியுடைய நாராயணரும் வணங்க, ஆலகால விடம் முழுவதும் உண்ட
சிவமூர்த்திக்கு உரிய புதல்வரே!
கரும்பாலையும் வயல்களும் மலர்ச்
சோலையும் அருகில் சூழ்ந்துள்ள திருவாவினன்குடியில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
மேகந் தவழ்கின்ற மலைகளுடன் கூடிய
இப்பூதலத்தில் பொருந்தி, வினைகளை விளைக்கும்
காதலால் மனம் வருந்தித் தடுமாற்றமுற்று, வாயு
- நரம்பு - இரத்தம் - தோல் - கொழுப்பு இவைகளுடன் கூடிய பொய்யான இந்த உடம்பைச்
சுமந்து, அடியேன், மாலை தரித்த கூந்தலும் கூரிய கண்களும், வில் போன்ற நெற்றியும் உடைய மகளிருடைய
பாதங்களில் பணிந்து, அவருடைய அழகிய தோளை
விரும்பி, மிகவும் தாழ்வுற்று
அழிவது தகுமோ?
விரிவுரை
கார்
அணிந்த வரைப் பார் ---
மேகந்
தவழுகின்ற மலைகளுடன் கூடி இந்தப் பூதலம் விளங்குகின்றது.
நல்வினைகளை
சுவர்க்கத்திலும், தீவினைகளை
நரகத்திலும் அனுபவித்த ஆன்மா, மிச்சிர கன்மங்களை
நுகரும் பொருட்டு இன்ப துன்பங்கள் விரவிய இப்பூதலத்தில் வந்து பிறக்கின்றது.
இப்பூமியில் இன்ப துன்பங்கள் மாறி மாறி வருகின்றன.
வினைக்
காதல் நெஞ்சு அயர ---
பலப்பல
வினைகளை உண்டாக்குந் தன்மையது காதல் நோய். காதலுற்றார் மதிமயங்கிப் பல
வினைபுரிவர். அதனால் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளாகி அல்லல் உறுவர். காதல் என்பது
இங்கே ஆசையைத் தெரிவிக்கின்றது.
கால்
நரம்பு உதிர தோல் வழும்பு உறு பொய்க் காயம்
ஒன்று பொறுத்து ---
இந்த
உடம்பு வாயு. நரம்பு, இரத்தம், தோல், கொழுப்பு இவைகளால் ஆகியது. பொய் என்ற
சொல்லுக்கு இருபொருள் உண்டு.
1. இல்லாத ஒன்று பொய்யெனப்படும்;
2. தோன்றி மறைவதும், நிலை இல்லாததும் பொய் எனப்படும்.
பொய்யுலகம், பொய்வாழ்வு, பொய்யுடம்பு என வரும் இடங்களில் பொய்
என்ற சொல்லுக்கு இல்லாதது என்று பொருளன்று; நிலைப்பேறு இல்லாதது என்று பொருள்.
மாதவச் சிவஞான சுவாமிகள் மாபாடியத்தில் இங்ஙனம் பொருள் கண்டார்.
பொய்யுடலை
மெய்யென்று நம்பி நால்வர் சுமக்கும் (சிறிது நேரம் மட்டும் பொருள் பெற்றுச்
சுமக்கும்) இந்தக் கனமான உடம்பை,
நான்
ஒருவனே நெடுங்காலமாகச் சுமந்து அயர்ந்துவிட்டேன்.
“தூலபங்க காயம் வம்பி
லேசுமந்து நான் மெலிந்து
சோருமிந்த
நோயகன்று துயராற” --- (தோலெலும்பு)
திருப்புகழ்
உலையத்
தகுமோதான்
---
மாதர்
வயமாகி அவரைக் கும்பிட்டு வம்பிட்டு மிகவும் இழிந்த நிலையை அடைந்து, உலைவது தகாது. பல கோடிப் பிறவியில்
செய்த மாபெரும் புண்ணிய மிகுதியால் கிடைத்த இம்மானுட உடம்பை, வரகுக்குப் பொற்கொழுவைக் கொண்டு உழுதது
போல், வறிதாக்கி வாடி
வருந்துவது அறிவுடைமையாகாது.
சூரன்
அங்கம் விழ
---
சூரபன்மன்
ஆணவமலம். அதன் வலி குன்றி அடங்கியது. இதை உணர்த்துவது கந்தபுராணம்.
தோயமும்
சுவற
---
கடல்
வற்றியது என்றது - பிறவிப் பெருங்கடல் வற்றி விட்டது என்பதைக் குறிக்கிறது.
கிரியில்
திரிவோனே
---
வள்ளி
பொருட்டு வடிவேற் கடவுள் வள்ளிமலையில் திரிந்தார் என்பது, பக்குவப்பட்ட ஆன்மாவின் பொருட்டு இறைவன்
இரங்கி வந்த அருள் நிலையை அறிவிக்கின்றது.
ஆலையும் ---
ஆலை
- வேதவேள்விச் சாலை என்றும் பொருள்.
கருத்துரை
சூரசங்கார! வள்ளிநாயக! சிவபால!
ஆவினன்குடி அப்பா! பெண் மயலில் தாழாது அடியேனுக்கு அருள் செய்வாய்.
No comments:
Post a Comment