திருப் பழமண்ணிப் படிக்கரை





திருப் பழமண்ணிப்படிக்கரை
(இலுப்பைப்பட்டு)


     சோழ நாட்டு வடகரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் இலுப்பைப்பட்டு என்று வழங்குகிறது.

              வைத்தீசுவரன்கோயில் - திருப்பனந்தாள் சாலையில் இளந்தோப்பு, வாளப்புத்தூர் ஆகியவற்றைத் தாண்டி, மணல்மேடு அடைந்து, பஞ்சாலையைத் தாண்டி, 'பாப்பாகுடி' என்று கைகாட்டி உள்ள இடத்தில் அதுகாட்டும் சாலையில் (வலப்புறமாக) சென்று பாப்பாகுடியையும் கடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.


இறைவர்               : நீலகண்டேசுவரர், முத்தீசுவரர், பரமேசுவரர்,  மகதீசுவரர்,                                                 படிக்கரைநாதர்.

இறைவியார்           : அமிர்தகரவல்லி, மங்களநாயகி.

தல மரம்               : இலுப்பை

தீர்த்தம்                : பிரமதீர்த்தம், அமிர்ததீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்         : சுந்தரர் - முன்னவன் எங்கள்

          இத்தலத்தருகே பண்டைக் காலத்தில் மண்ணியாறு ஓடியதால் 'பழ மண்ணிப் படிக்கரை' என்று ஆயிற்று.

          இத்தலத்திற்கு மதூகவனம் என்றும் பெயர். (மதூகம் - இலுப்பை; பட்டு - ஊர்) ஒரு காலத்தில் இலுப்பை வனமாக இருந்ததாலும், இத்தல மரம் இலுப்பையாதலினும் இத்தலம் இப்பெயர் பெறலாயிற்று.

          இறைவன் விஷத்தைப் பருகியபோது உமாதேவி தன் கரத்தால் அவருடைய கழுத்தை பரிசித்த தலம்.

          பாண்டவர்கள் சித்திரைப் பௌர்ணமி நாளில் இங்கு வந்து பஞ்சலிங்கங்களையும் வழிபட்டதாக வரலாறு. பிரமனும் மாந்தாதாவும், நளனும் கூட, இங்கு வந்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது.

          தருமர் வழிபட்டது நீலகண்டேசுவரர்; வீமன் வழிபட்டது மகதீஸ்வரர்; அருச்சுனன் வழிபட்டது படிக்கரைநாதர்; நகுலன் வழிபட்டது பரமேசர்; சகாதேவன் வழிபட்டது முத்தீசர் என்று சொல்லப்படுகிறது.

          திரௌபதி வழிபட்டது வலம்புரி விநாயகர் எனப்படுகிறது.

          பிராகாரத்தில் வீமன், நகுல பூசித்த லிங்கங்களும், திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும் உள்ளனர்.

          இத்தலத்திற்குரிய தலபுராணம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களால் பாடப்பட்டுள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தாழ்வு அகற்ற நண் இப் படிக்கு அரையர் நாள்தோறும் வாழ்த்துகின்ற மண்ணிப் படிக்கரை வாழ் மங்கலமே" என்று போற்றி உள்ளார்.


சுந்தரர் திருப்பதிக வரலாறு:

         நம்பியாரூரர் திருத்தில்லையை வணங்கி, திருக்கருப்பறியலூர் தொழுது பரவி, திருப்பழமண்ணிப்படிக்கரை அடைந்து போற்றிப் பரவியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 118)

பெரிய புராணப் பாடல் எண் : 118
கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
         கைதொழுது நீங்கிப் போய், கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி, அங்கு
         மாதுஒருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி,
எண்ணில்புகழ்ப் பதிகமும் "முன்னவன்" என்று ஏத்தி
         ஏகுவார், வாழ்கொளிபுத் தூர்எய் தாது,
புண்ணியனார் போம்பொழுது, நினைந்து மீண்டு
         புகுகின்றார் "தலைக்கலன்" என்று எடுத்துப்போற்றி.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி உறைகின்ற திருக்கருப்பறியலூரைத் தொழுது, வணங்கிப் பின்னர் அங்கிருந்து நீங்கிச் சென்று, மீன்கள் பாய்ந்து திரியும் மண்ணி ஆற்றின் வளமுடைய திருப்பழமண்ணிப் படிக்கரையை அடைந்து, உமையொரு கூறராய் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுபவர், எண்ணற்கரிய புகழமைந்த பதிகமாய `முன்னவன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின்னர் திருவாழ்கொளிப்புத்தூர் என்னும் கோயிற்குச் செல்லாது செல்கின்றவர், அத்திருப்பதியை நினைந்தளவில், மீண்டு அங்குச் சென்று, `தலைக்கலன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் போற்றியவாறு உட்சென்றார்.

         குறிப்புரை : பழமண்ணிப்படிக்கரையில் அருளிய `முன்னவன்' எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 22).


7. 022   திருப்பழமண்ணிப்படிக்கரை        பண் - நட்டராகம்
திருச்சிற்றம்பலம்
                                                                                                           
பாடல் எண் : 1
முன்னவன் எங்கள்பிரான்,
         முதல் காண்பு அரிது ஆயபிரான்
சென்னியில் எங்கள்பிரான்,
         திருநீல மிடற்று எம்பிரான்
மன்னிய எங்கள்பிரான்,
         மறைநான்கும் கல்ஆல்நிழல்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை :எல்லார்க்கும் முன்னே உள்ளவனும் , தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும் , யாவரினும் தலையாயவனும் , அழகிய நீலகண்டத்தை உடையவனும் , என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும் , நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய் , எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 2
அண்ட கபாலம்சென்னி
         அடிமேல்அலர் இட்டுநல்ல
தொண்டுஅங்கு அடிபரவித்
         தொழுதுஏத்திநின்று ஆடும் இடம்,
வெண்திங்கள் வெண்மழுவன்
         விரைஆர்கதிர் மூஇலைய
பண்டங்கன் மேயஇடம்
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை :திரண்ட தலையை அணிந்த முடியினையுடைய சிவபிரானது திருவடிகளில் நல்ல அடியார்கள் மலர்களை இட்டு அவ் வடிகளை வணங்கி , முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து ஆடுகின்றதும் , வெண்மையான பிறையை அணிந்தவனும் , வெள்ளிய மழுவை ஏந்தியவனும் , பகைவர்மேல் விரைதல் பொருந்திய , ஒளியை யுடைய மூவிலை வேலை ( சூலத்தை ) உடைய , ` பண்டரங்கம் ` என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பெருமான் விரும்பி எழுந் தருளியிருக்கின்றதும் ஆகிய இடம் ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 3
ஆடுமின் அன்பு உடையீர்,
         அடிக்கு ஆட்பட்ட தூளிகொண்டு
சூடுமின், தொண்டர் உள்ளீர்,
         உமரோடு எமர் சூழவந்து,
வாடும் இவ்வாழ்க்கை தன்னை
         வருந்தாமல் திருந்தச்சென்று
பாடுமின் பத்தர் உள்ளீர்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : அன்புடையவர்களே , அன்புக் கூத்தினை ஆடுங் கள் ; தொண்டராய் உள்ளவர்களே , சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை எடுத்துத் தலைமேல் சூடிக்கொள்ளுங்கள் ; பத்தராய் உள்ளவர்களே , உம்மவரோடு எம் மவரும் சூழ ஒன்று கூடி , மனம் மெலிதற்குக் காரணமான இல் வாழ்க்கையில் கிடந்து வருந்தாமல் நன்கு சென்று , திருப்பழமண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள் .


பாடல் எண் : 4
அடுதலை யேபுரிந்தான்
         அவை அந்தர மூஎயிலும்,
கெடுதலை யேபுரிந்தான்
         கிளரும்சிலை நாணியில்கோல்
நடுதலை யேபுரிந்தான், நரி
         கான்றி இட்ட எச்சில்வெள்ளைப்
படுதலையே புரிந்தான்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : உலகத் தொகுதியை அழித்தலை விரும்பினவனும் , வானத்தில் திரிந்த மூன்று மதில்கள் கெட்டொழிதலை விரும்பி வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பினவனும் , நரி உமிழ்ந்த எச்சிலாகிய , வெண்மையான , அழிந்த தலையை விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம் , ` திருப்பழமண்ணிப் படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 5
உங்கைக ளால் கூப்பி
         உகந்து ஏத்தித்தொழு மின்தொண்டீர்,
மங்கையொர் கூறுஉடையான்,
         வானோர்முதல் ஆயபிரான்,
அங்கையில் வெண்மழுவன்,
         அலை ஆர்கதிர் மூஇலைய
பங்கய பாதன் இடம்
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : தொண்டர்களே , உமையை ஒரு கூறில் உடையவனும் , தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும் , அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும் , கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை ( சூலத்தை ) ஏந்திய , தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள் .


பாடல் எண் : 6
செடிபடத் தீவிளைத்தான்
         சிலைஆர்மதில், செம்புனஞ்சேர்
கொடிபடு மூரிவெள்ளை
         எருதுஏற்றையும் ஏறக்கொண்டான்,
கடியவன் காலன் தன்னைக்
         கறுத்தான்கழல், செம்பவளப்
படியவன், பாசுபதன்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும் , நல்ல புனங்களில் மேய்வதாகிய , தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும் , பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும் , செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும் , பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப் பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 7
கடுத்தவன் தேர்கொண்டுஓடிக்
         கயிலாய நல் மாமலையை
எடுத்தவன் ஈர் ஐந்துவாய்
         அரக்கன்முடி பத்து அலற
விடுத்தவன், கைநரம்பால்
         வேத கீதங்கள் பாடல் உறப,
படுத்தவன் பால்வெண்ணீற்றன்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : அரக்கனும் , தேரைச் செலுத்திக்கொண்டு சென்று , அதனைத் தடுத்தலால் சினங்கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை எடுத்தவனும் ஆகிய இராவணனது பத்து வாய்களும் பத்துத் தலைகளில் பொருந்தியிருந்து அலறும்படி ஆக்கியவனும் , பின்பு அவன் கை நரம்பாகிய வீணையால் வேதத்தொடு கூடிய இசைகளைப் பாட , அவனை நலத்திற் பொருந்தச் செய்தவனும் , பால் போலும் வெள்ளிய திருநீற்றை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 8
திரிவன மும்மதிலும் எரித்
         தான்இமை யோர்பெருமான்,
அரியவன் அட்டபுட்பம்
         அவை கொண்டு,அடி போற்றி,நல்ல
கரியவன் நான்முகனும்
         அடியும்முடி காண்புஅரிய
பரியவன், பாசுபதன்,
         பழமண்ணிப் படிக்கரையே.

         பொழிப்புரை : இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும் , தேவர்கட்குத் தலைவனும் , அடைதற்கு அன்புடைய திருமாலும் பிரமனும் அட்ட புட்பங்களால் திருவடியில் அருச்சித்தும் அடியும் முடியும் காணமாட்டாத அளவிறந்தவனும் , பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலமே .


பாடல் எண் : 9
வெற்றுஅரைக் கற்ற அமணும்
         விரையாதுவிண்டு ஆலம் உண்ணும்
துற்றரைத் துற்றுஅறுப்பான்
         துன்னஆடைத் தொழில் உடையீர்
பெற்றரைப் பித்தர் என்று
         கருதேன்மின், படிக்கரையுள்
பற்றரைப் பற்றி நின்று
         பழிபாவங்கள் தீர்மின்களே.

         பொழிப்புரை : மிகுந்த பற்றுக்களை அறுத்தற் பொருட்டு உடையில்லாத அரையினை உடையராதலைக் கற்ற சமணர் வேடத்திலே மனம் விரையாது நீங்கி , கீளொடு பிணைத்தலை உடைய கோவண ஆடையை அணிந்த தொண்டர்களே , நஞ்சினை உண்ணும் உணவுடையவரும் , எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை அதுபோல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று இகழ்ச்சியாக நினையாதீர்கள் ; திருப்பழமண்ணிப்படிக்கரையுள் கோயில் கொண்டிருக்கும் அவரையே துணையாகப் பற்றிநின்று , பழிபாவங்களிலிருந்து நீங்குங்கள் .


பாடல் எண் : 10
பல்லுயிர் வாழும்தெண்ணீர்ப்
         பழமண்ணிப் படிக்கரையை
அல்லிஅம் தாமரைத்தார்
         ஆரூரன் உரைத்ததமிழ்
சொல்லுதல் கேட்டல்வல்லார்,
         அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும்
         இடர் கூருதல் இல்லை அன்றே.

         பொழிப்புரை : பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரையுடைய , ` திருப்பழமண்ணிப்படிக்கரை ` என்னும் தலத்தை , அக இதழ்களை யுடைய தாமரை மாலையை அணிந்த நம்பியாரூரன் புகழ்ந்து சொன்ன இத்தமிழ்ப் பாடலை இரவிலும் , நல்ல பகலிலும் சொல்லுதலும் கேட்டலும் வல்லராகின்ற அத்தன்மையார்க்கும் , அவரைச் சார்ந்து உற்றார்க்கும் , அவ்வுற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும் துன்பம் மிகுதல் இல்லை .                 
                                             திருச்சிற்றம்பலம்
        


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...