திரு ஓமாம்புலியூர்





திரு ஓமாம்புலியூர்

     சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம்.

     கொள்ளிடக் கரையில் உள்ளது.

      சிதம்பரத்திலிருந்தும், காட்டுமன்னார்குடியிலிருந்தும் பேருந்து வசதியுள்ளது.

     சிதம்பரத்தில் இருந்து சுமார் 31 கி.மீ. தொலைவு. காட்டுமன்னார்குடியிலிருந்து சுமார் 7 கி.மீ.தொலைவு.

     சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்குடி, மோவூர் வழியாக அணைக்கரை செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது. கோயில் வாயிலில் இறங்கிக் கொள்ளலாம்.


இறைவர்          : பிரணவ வியாக்ரபுரீசுவரர், துயர்தீர்த்தநாதர், பிரணவபுரீசுவரர்.

இறைவியார்      : புஷ்பலதாம்பிகை, பூங்கொடி நாயகி.

தல மரம்          : வதரி (இலந்தை)

தீர்த்தம்           : கொள்ளிடம், கௌரிதீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - பூங்கொடி மடவாள்
                                                2. அப்பர்   -  ஆராரும் மூவிலைவேல்

         உமாதேவி ஒரு முறை கைலாயத்தில் பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவபெருமான் அதற்குரிய விளக்கத்தை உமையம்மைக்கு சொல்லிக் கொண்டிருக்கும்போது உமையின் கவனம் திசை திரும்பியது. சிவபெருமான் உமாதேவியின் மீது கோபம் கொண்டு அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி தண்டனை கொடுத்து விட்டார். அதன்படி உமையம்மை பூமிக்கு வந்தார். அவர் இத்தலத்தில் தங்கியிருந்து சிவனை வணங்கி வந்தாள். இறைவன் உமையின் தவத்திற்கு மகிழ்ந்து அவளுக்கு காட்சி கொடுத்து தெட்சிணாமூர்த்தியாக உமாதேவியார் "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக சிவனிடம் உபதேசம் கேட்டார். சிவன் அதற்குரிய விளக்கத்தை சொல்லிக் கொண்டிருக் கும்போது அவரது கவனம் திசை திரும்பவே, அவளை மானிடப் பிறப்பு எடுக்கும்படி சிவன் தண்டனை கொடுத்து விட்டார்.

         அதன்படி பூமிக்கு வந்த பார்வதிதேவி ஓமாப்புலியூரில் தங்கியிருந்து இத்தலத்து சரசுவதி தேவியை வணங்கி சிவனை நினைத்து இலந்தை மரத்தின் அடியில் கடுந்தவம் மேற்கொண்டாள் என்றும் சொல்லப்படுகிறது. அம்பாளின் தவத்தினை மெச்சி இறைவன் தேவி விரும்பியபடி இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் உமாதேவிக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததார். உபதேசம் செய்யும்போது இடையூறு வரக்கூடாது என்பதற்காக நந்திகேஸ்வரரை வாசலில் காவலுக்கு வைக்கிறார். அப்போது முருகப் பெருமான் அங்குவர நந்தி தடுக்கிறார். முருகப் பெருமான் வண்டு உருவம் எடுத்து அபிஷேக தீர்த்தம் வரும் கோமுகம் வழியாக உள்ளே சென்று, அம்பாள் தலையில் சூடியிருக்கும் பூவில் உட்கார்ந்து குரு தட்சிணாமூர்த்தியாக இறைவன் அம்பாளுக்கு உபதேசம் செய்வதைக் கேட்டுக் கொண்டார். (சுவாமிமலையில் முருகப் பெருமான் தந்தைக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தது ஓமாம்புலியூரில் அம்பாளுக்கு உபதேசம் செய்யும் போது ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டதால் தான் என்றும் ஒரு செய்தி கூறப்படுகிறது). இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து உமாதேவிக்கு பிரணவப் பொருளை உபதேசித்த தலமாதலால் ஓமாம்புலியூர் என்று பெயர் பெற்றது.  இந்தக் கதை வேறு சில திருக்கோயில்களுக்கும் கூறப்படுகின்றது.

         கிழக்கு நோக்கிய இக்கோயில் மதிற்சுவருடன் கூடிய ஒரு வாயிலுடன் அமைந்துள்ளது. வாயிலுக்கு எதிரில் கௌரிதீர்த்தம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடத்தையும், நந்தி மண்டபத்தையும் காணலாம்.. அடுத்துள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்புமூர்த்தியாக இறைவன் காட்சிதருகின்றார். சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப் பட்டுள்ளன.

         இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சிறப்பு. இறைவன் சந்நிதியில் வலதுபுறம் தெற்கு நோக்கி உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சி தருகின்றார். ஓமாம்புலியூர் தலத்தில் சிவாகம ரீதியாக கருவறை தெற்கு கோஷ்டத்தில் ஒரு தட்சிணாமூர்த்தியும், இறைவன் சந்நிதிக்கும், அம்பாஈள் சந்நிதிக்கும் இடையில் மகாமண்டபத்தில் தனி மூலஸ்தானத்தில் ஞானகுருவாக இன்னொரு தட்சிணாமூர்த்தியும் அருள் பாலிப்பது இத்திருத்தலத்தில் மட்டும் தான். இரண்டு தட்சிணாமூர்த்தி இருப்பது இத்திருத்தலத்தின் சிறப்பம்சம்.

         இத்திருத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் கருவறை கோஷ்டத்தில் காணப்படும் நடராசரின் சிலாரூபம். இது வியாக்ர பாதருக்குக் காட்சி தந்த வடிவம் என்று கூறப்படுகிறது. ஏனைய கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை முதலியோர் உள்ளனர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது. பிராகாரத்தில் ஆறுமுகப் பெருமானுக்கும் தனி சந்நிதி உள்ளது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது என்பதும் குறிப்படத்தக்க அம்சமாகும்.

         பஞ்ச புலியூர் தலங்களில் இத்தலமும் ஒன்று. மற்றவை யாவன:

பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்),
கானாட்டம்புலியூர்,
எருக்கத்தம்புலியூர்,
திருப்பாதிரிப்புலியூர்.

         இவற்றில் கானாட்டம்புலியூர், இத்திருத்தலத்திலிருந்து அருகில் உள்ளது. திரு எருக்கத்தம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர் ஆகிய இரண்டும் நடுநாட்டுத் தலங்கள். திருப் பெரும்பற்றப்புலியூர், திரு ஓமாம்புலியூர், திருக் கானாட்டம்புலியூர் ஆகிய மூன்றும் காவிரி வடகரைத் தலம். இந்த ஐந்து தலங்களிலும் வியாக்ரபாத முனிவர் சிவனை வழிபட்டுள்ளார்.

         இத்திருத்தலத்திற்கு திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் உள்ளன.

     திருஞானசம்பந்தர் திருப்பதிகத்தில் இத்தலம் "ஓமமாம்புலியூர்" என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் அப்பர் பாடலில் "ஓமாம்புலியூர்" என்று வருகிறது.

     இருவரும் தங்கள் பதிகங்களில் இத்திருக்கோயிலை வடதளி என்றும் கூறிப்பிட்டுள்ளனர். ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரிலுள்ள கெளரி தீர்த்தத்தின் அக்கரையில் வடதளி என்று ஓர் சிறிய ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் இறைவன் பெயர் நாகவல்லி சமேத வடதளீசுவரர்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விண் இடை வாம்ஆம் புலியூர் மலர்ச் சோலை சூழ்ந்து இலங்கும் ஓமாம் புலியூர் வாழ் உத்தமமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 250
ஆங்குஅணி சொல்மலர் மாலை சாத்தி,அப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்,
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந்து உற்றனர்.

         பொழிப்புரை : அத்திருப்பதி (திருப்பனந்தாள்) யில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள `திருப்பந்தணை நல்லூரைப்' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான `திரு ஓமாம்புலியூரினில்' வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 251
மற்றநல் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந்து, அலர்ந்த செந்தமிழ்ச்
சொல்தொடை பாடி,அங்கு அகன்று, சூழ்மதில்
பொன்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.

         பொழிப்புரை : அந்நற்பதியில் வடதளிக் கோயிலில் எழுந்தருளிய, அற்புதமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங்கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான திருவாழ்கொளிப்புத்தூரில் வந்து புகுந்தனர்.

         குறிப்புரை : திருஓமாம்புலியூரில் பாடிய பதிகம் `பூங்கொடி மடவாள்' (தி.3 ப.122) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். வடதளி - ஊரின் வடபுறத்துள்ள கோயில். இது கோயிலின் பெயர். ஓமம் - வேள்வி. ஓமமாம் புலியூர் - வேள்வி ஓவாத புலியூர்.
        
திருஞானசம்பந்தர் திருப்பதிகம்


3. 122   திருஓமாம்புலியூர்           பண் - புறநீர்மை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பூங்கொடி மடவாள் உமைஒரு பாகம்
         புரிதரு சடைமுடி அடிகள்,
வீங்குஇருள் நட்டம் ஆடும்எம் விகிர்தர்,
         விருப்பொடும் உறைவிடம் வினவில்,
தேங்கமழ் பொழிலில் செழுமலர் கோதிச்
         செறிதரு வண்டுஇசை பாடும்
ஓங்கிய புகழ்ஆர் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 2
சம்பரற்கு அருளிச் சலந்தரன் வீயத்
         தழல்உமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானார், இமையவர் ஏத்த
         இனிதின்அங்கு உறைவிடம் வினவில்,
அம்பரம் ஆகி அழல்உமிழ் புகையின் 
         ஆகுதி யால்மழை பொழியும்,
உம்பர்கள் ஏத்தும் ஓமமாம் புலியூர் 
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழை பொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக் கோயிலாகும்.


பாடல் எண் : 3
பாங்குஉடைத் தவத்துப் பகீரதற்கு அருளிப்
         படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குதல் தவிர்த்து, தராதலத்து இழித்த
         தத்துவன் உறைவிடம் வினவில்,
ஆங்குஎரி மூன்றும் அமர்ந்துஉடன் இருந்த
         அங்கையால் ஆகுதி வேட்கும்
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்து, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 4
புற்றுஅரவு அணிந்து, நீறுமெய் பூசி,
         பூதங்கள் சூழ்தர, ஊர்ஊர்
பெற்றம்ஒன்று ஏறிப் பெய்பலி கொள்ளும்
         பிரான்அவன் உறைவிடம் வினவில்,
கற்றநால் வேதம் அங்கம் ஓர்ஆறும்
         கருத்தினார் அருத்தியால் தெரியும்
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.


பாடல் எண் : 5
நிலத்தவர், வானம் ஆள்பவர், கீழோர் ,
         துயர்கெட, நெடியமாற்கு அருளால்
அலைத்தவல் அசுரர் ஆசுஅறஆழி
         அளித்தவன் உறைவிடம் வினவில்,
சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
         தன்மையார், நன்மையான் மிக்க
உலப்புஇல்பல் புகழார் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 6
மணந்திகழ் திசைகள் எட்டும், ஏழ்இசையும்,
         மலியும் ஆறுஅங்கம், ஐவேள்வி,
இணைந்தநால் வேதம், மூன்றுஎரி, இரண்டு
         பிறப்பு,என ஒருமையால் உணரும்
குணங்களும், அவற்றின் கொள்பொருள் குற்றம்
         அற்றவை, உற்றதும் எல்லாம்
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

பாடல் எண் : 7
* * * * * * * *
பாடல் எண் : 8
தலைஒரு பத்தும் தடக்கை அதுஇரட்டி
         தான்உடை அரக்கன்,ஒண் கயிலை
அலைவது செய்த அவன்திறல் கெடுத்த
         ஆதியார் உறைவிடம் வினவில்,
மலையென ஓங்கு மாளிகை நிலவும்
         மாமதில், மாற்றலர் என்றும்
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனான இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 9
கள்அவிழ் மலர்மேல் இருந்தவன், கரியோன்,
         என்றுஇவர் காண்புஅரிது ஆய
ஒள்எரி உருவர் உமையவ ளோடும்
         உகந்துஇனிது உறைவிடம் வினவில்,
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப்
         பனிமலர்ச் சோலைசூழ் ஆலை
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமா தேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம் , பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 10
தெள்ளியர் அல்லாத் தேரரோடு அமணர்
         தடுக்கொடு சீவரம் உடுக்கும்
கள்ளம்ஆர் மனத்துக் கலதிகட்கு அருளாக்
         கடவுளார் உறைவிடம் வினவில்,
நள்இருள் யாமம் நான்மறை தெரிந்து
         நலந்திகழ் மூன்றுஎரி ஓம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அதுவே.

         பொழிப்புரை : தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.


பாடல் எண் : 11
விளைதரு வயல்உள் வெயில்செறி பவள
         மேதிகள் மேய்புலத்து இடறி,
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர்
         உடையவர் வடதளி அரனைக்
களிதரு நிவப்பில் காண்டகு செல்வக்
         காழியுள் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள்
         அமரலோ கத்துஇருப் பாரே.

         பொழிப்புரை : நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 179
அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற
         கழல்வணங்கி, அருள்முன் பெற்று,
பொய்ப்பிறவிப் பிணிஓட்டுந் திருவீதி
         புரண்டு,வலம் கொண்டு போந்தே,
எப்புவனங் களும்நிறைந்த திருப்பதியின்
         எல்லையினை இறைஞ்சி ஏத்தி,
செப்பரிய பெருமையினார் திருநாரை
         யூர்பணிந்து பாடிச் செல்வார்.

         பொழிப்புரை : சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிக் கேள்வியுற்ற, அதுபொழுதே பொன்னம்பலத்தில் கூத்தாடும் இறைவரின் திருவடியை வணங்கி அருளைப் பெற்றுக் கொண்டு, பொய்யான இப்பிறவி நோயைப் போக்கும் இயல்பு கொண்ட தில்லையின் வீதியை நிலம் பொருந்தப் புரண்டு வலமாக வந்து, பின் எவ்வுலகங்களிலும் நிறைவுடைய அப்பதியினது எல்லையை வணங்கிப் போற்றிச், சொல்வதற்கரிய பெருமையுடைய சிவபெருமானின் திருநாரையூரைப் போய்ப் பணிந்து பாடி மேலே செல்வராய்.

         குறிப்புரை : இது பொழுது திருநாரையூரில் பாடியருளிய பதிகங்கள் இரண்டாம்.

(1) `வீறுதானுடை` (தி.5 ப.54)எனத் தொடங்கும்
                  திருக்குறுந்தொகைப் பதிகம்.
(2) `சொல்லானைப் பொருளானை` (தி.6 ப.74) எனத் தொடங்கும்              திருத்தாண்டகம்.

         இத்திருப்பதியிலிருந்து சீகாழிக்குச் செல்லும் பொழுது இடையில் திருஓமாம்புலியூர், கடம்பூர் ஆகிய திருப்பதிகளுக்கும் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. இப்பதிகளில் அருளிய பதிகங்கள் மூன்றாம்:

1. திரு ஓமாம்புலியூர்த் திருப்பதிகம்: `ஆராரும் மூவிலை வேல்` - திருத்தாண்டகம் (தி.6 ப.88).

2. கடம்பூர்த் திருப்பதிகங்கள்:
         அ)`தளரும் கோளரவ` - திருக்குறுந்தொகை (தி.5 ப.19)
         (ஆ) `ஒருவராய்` - திருக்குறுந் தொகை (தி.5 ப.20).

        
திருநாவுக்கரசர் திருப்பதிகம்


6. 088    திருஓமாம்புலியூர்      திருத்தாண்டகம்
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆர்ஆரும் மூவிலைவேல் அங்கை யானை,
         அலைகடல்நஞ்சு அயின்றானை, அமரர் ஏத்தும்
ஏர்ஆரும் மதிபொதியும் சடையி னானை,
         எழுபிறப்பும் எனைஆளா உடையான் தன்னை,
ஊர்ஆரும் படநாகம் ஆட்டு வானை,
         உயர்புகழ்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்ஆரும் வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை : கூர்மைபொருந்திய மூவிலை வேலை அங்கையிடத்துக் கொண்டவனும், அலையையுடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவனும், தேவர்கள் புகழும் அழகு நிறைந்த மதியைத் தன்னுட்கொண்ட சடையனும், இனி எனக்கு எழ இருக்கும் பிறப்புக்களிலும் என்னை அடிமையாக உடையவனும், ஊரும் இயல்பினதாகிய படநாகத்தை ஆட்டுபவனும் ஆகி உயர்புகழ்சேரும் ஓமாம் புலியூரிடத்தே நிலைத்து நிற்கும் சிறப்பினை உடைய வடதளியில் விளங்கும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 2
ஆதியான், அரிஅயன்என்று அறிய ஒண்ணா
         அமரர்தொழும் கழலானை, அமலன் தன்னை,
சோதிமதி கலைதொலையத் தக்கன் எச்சன்
         சுடர்இரவி அயில்எயிறு தொலைவித் தானை,
ஓதிமிக அந்தணர்கள் எரிமூன்று ஓம்பும்
         உயர்புகழார் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
தீதுஇல்திரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :தன்னின்வேறு பிரித்து அரி என்றும் அயனென்றும் அறிய ஒண்ணாத ஆதியானவனும், தேவர்கள் தொழும் கழலினனும், இயல்பாகவே பாசமில்லாதவனும், ஒளியுமிழும் சந்திரனுடைய கலைகளைத் தொலையச் செய்தவனும், தக்கனையும் எச்சனையும் தக்கவாறு தண்டித்தவனும், ஒளிவீசும் இரவியுடைய கூரிய பற்களைத் தகர்த்தவனும் ஆகி, அந்தணர்கள் வேதங்களை மிக ஓதி மூன்று எரிகளையும் முறையே ஓம்புதலினால் உயர்ந்த புகழைப் பொருந்தும் ஓமாம்புலியூரில் திகழும் தீதில்லாத வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள்பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 3
வருமிக்க மதயானை உரித்தான் தன்னை,
         வானவர்கோன் தோள்அனைத்தும் மடிவித் தானை,
தருமிக்க குழல்உமையாள் பாகன் தன்னை,
         சங்கரன்எம் பெருமானை, தரணி தன்மேல்
உருமிக்க மணிமாடம் நிலாவு வீதி
         உத்தமர்வாழ் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
திருமிக்க வடதளிஎம் செல்வன் தன்னை,
         சேராதே திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :எதிர்த்துவரும் மதமிக்க யானையின் தோலை உரித்தவனும், தக்கயாகத்தில் இந்திரனுடைய தோள்களை முற்றிலும் துணித்தவனும், நறுமணத்தைத்தரும் செறிந்த குழல் உமையாளின் பாகனும், சங்கரனும், எம்பெருமானும் ஆகி, பூமியின்மேல் ஒளிமிக்க மணிகளானியன்ற மாடங்கள் நிலவுகின்ற வீதிகளை உடையதும், மேலோர்கள் வாழ்வதும் ஆகிய ஓமாம்புலியூரில் அழகுமிக்க வடதளியில் மன்னும் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 4
அன்றினவர் புரமூன்றும் பொடியாய் வேவ
         அழல்விழித்த கண்ணானை, அமரர் கோனை,
வென்றிமிகு காலன்உயிர் பொன்றி வீழ
         விளங்குதிரு வடிஎடுத்த விகிர்தன் தன்னை,
ஒன்றியசீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும்
         உயர்புகழ்நான் மறைஓமாம் புலியூர் நாளும்
தென்றல்மலி வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :பகைத்தவர் புரமூன்றும் வெந்து பொடியாமாறு அழல் உண்டாக விழித்த கண்ணினனும், தேவர்கட்குத் தலைவனும், வெற்றியால் மிக்கு விளங்கிய காலன் உயிரிழந்து விழ விளக்கம் மிக்க தன் திருவடியால் உதைத்த விகிர்தனும் ஆகி, புகழ்பொருந்திய அந்தணாளர் நாளும் முத்தீயையும் ஓம்புதலினால் வரும் உயர் புகழையும் நான்மறை முழக்கத்தையும் உடைய ஓமாம்புலியூரில் தென்றற்காற்று மிக்குத் தவழும் வடதளிவாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 5
பாங்குஉடைய எழில்அங்கி அருச்சனைமுன் விரும்பப்
         பரிந்துஅவனுக்கு அருள்செய்த பரமன் தன்னை,
பாங்குஇலா நரகுஅதனைத் தொண்டர் ஆனார்
         பாராத வகைபண்ண வல்லான் தன்னை,
ஓங்குமதில் புடைதழுவும் எழில்ஓமாம் புலியூர்
         உயர்புகழ்அந் தணர்ஏத்த, உலகர்க்கு என்றும்
தீங்குஇல்திரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :முன்செய்த நன்மையுடையனாகிய அழகிய அக்கினிதேவன் அருச்சனை செய்ய விரும்ப அவன் மேல் இரக்கங் கொண்டு அவன் அதனை இயற்ற அருள் செய்த பரமனும், தன் தொண்டரானார், தீங்குடைய நரகினைப் பாராதவாறு பண்ண வல்லவனும் ஆகி, நாற்புறமும் உயர்ந்தமதில் தழுவி நிற்கும் அழகுடைய ஓமாம்புலியூரில் உயர்ந்த புகழினையுடைய அந்தணர்கள் புகழுமாறு பூசையும் விழவும் செவ்வனே நடைபெறுவதால் உலகோர்க்கு என்றும் தீங்கின்றி நிலவும் அழகிய வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 6
அருந்தவத்தோர் தொழுதுஏத்தும் அம்மான் தன்னை,
         ஆராத இன்னமுதை, அடியார் தம்மேல்
வருந்துயரம் தவிர்ப்பானை, உமையாள் நங்கை
         மணவாள நம்பியை,என் மருந்து தன்னை,
பொருந்துபுனல் தழுவுவயல் நிலவு துங்கப்
         பொழில்கெழுவு தரும்ஓமாம் புலியூர் நாளும்
திருந்துதிரு வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :அரிய தவமுடையோர் வணங்க வாழ்த்தும் தலைவனும், தெவிட்டாத இன்னமுதன்னவனும், அடியார்க்கு வரும் துயரங்களை விலக்குபவனும், நங்கை உமையாளின் கணவனாகிய நம்பியும், எனக்கு அமுதும் ஆகி, பயிர் வளர்ச்சிக்குப் பொருத்தமான புனலால் தழுவப்படும் வயலும், உயர்ச்சி நிலவும் பொழிலும் பொருந்தி விளங்கும் ஓமாம்புலியூரில் நாளும் நடைபெறுவன திருத்தமுற அமையும் அழகிய வட தளி வாழ் எம் செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 7
மலையானை, வருமலைஒன் றுஉரிசெய் தானை,
         மறையானை, மறையாலும் அறிய ஒண்ணாக்
கலையானை, கலைஆரும் கையி னானை,
         கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்,
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்
         புலியூர்எம் உத்தமனை, புரம்மூன்று எய்த
சிலையானை, வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :கயிலை மலையவனும், யானை ஒன்றின் தோலை உரித்தவனும், வேதத்தில் உள்ளவனும், அவ்வேதத்தாலும் அறியப் படாத தன்மையனும், மான் கன்று பொருந்திய திருக்கரத்தினனும், அடியார்களுடைய துயரங்களை நீக்குபவனும், எம்மால் வணங்கப்படும் உத்தமனும், திரிபுரங்களை எரித்த வில்லினனும் ஆகி ஒழுக்கத்தில் தளராத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூரில் வடதளி வாழ் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.


பாடல் எண் : 8
சேர்ந்துஓடும் மணிக்கங்கை சூடி னானை,
         செழுமதியும் படஅரவும் உடன்வைத் தானை,
சார்ந்தோர்கட்கு இனியானை, தன்ஒப்பு இல்லாத்
         தழல்உருவை, தலைமகனை, தகைநால் வேதம்
ஓர்ந்துஓதிப் பயில்வார்வாழ் தரும்ஓமாம் புலியூர்
         உள்ளானை, கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை, வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை :மணிகளைக் கொழித்து ஓடும் கங்கையைச் சூடியவனும், அழகிய மதியையும், படநாகத்தையும உடன் தங்குமாறு வைத்தவனும், அடியடைந்தார்க்கு இனியனும், தன்னொப்பார் பிறரில்லாத தழல் நிறத்தவனும், எல்லார்க்கும் தலைவனும், பெருமை மிக்க நால் வேதங்களையும் ஓதி ஆராய்ந்து அவற்றிலேயே பழகுவார் வாழும் ஓமாம்புலியூர் உள்ளவனும், அடியாருடைய களவில்லா நெஞ்சில் சேர்ந்தவனும் ஆகி வடதளிவாழ் எம்செல்வனாகிய சிவ பெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண் போக்கினேன்.

         இத்திருத்தாண்டகத்தை அடுத்து, இறுதித் திருத்தாண்டகமே உள்ளது.


பாடல் எண் : 10
வார்கெழுவு முலைஉமையாள் வெருவ, அன்று
         மலைஎடுத்த வாள்அரக்கன் தோளும் தாளும்
ஏர்கெழுவு சிரம்பத்தும் இறுத்து, மீண்டே
         இன்னிசைகேட்டு இருந்தானை, இமையோர் கோனை,
பார்கெழுவு புகழ்மறையோர் பயிலும் மாடப்
         பைம்பொழில்சேர் தரும்ஓமாம் புலியூர் மன்னும்
சீர்கெழுவு வடதளிஎம் செல்வன் தன்னைச்
         சேராதே, திகைத்துநாள் செலுத்தி னேனே.

         பொழிப்புரை : கச்சணிந்த தனத்தினள் ஆகிய உமையாள் அஞ்சுமாறு அன்று கயிலை மலையைப் பெயர்த்த கொடிய அரக்கனுடைய இருபது தோள்களையும் இருதாள்களையும் அழகிய பத்துத் தலைகளையும் நெரித்துப் பின் அச்சினத்தினின்றும் மீண்டு அவனது இன்னிசையைக் கேட்டு உவந்தவனும், தேவர்களின் தலைவனும் ஆகி, புவிமுழுதும் பரவும் புகழினையுடைய மறையோர் மிக்கு வாழ்கின்றதும் மாடங்கள் நிறைந்ததும், பசியபொழில்கள் சூழ்ந்ததும் ஆகிய ஓமாம்புலியூரில், சிறப்புமிக்க வடதளியில் மன்னும் எம் செல்வனாகிய சிவபெருமானை அடையாது நான் மயங்கி நாள் பல வீண்போக்கினேன்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...