திருக்
கானாட்டுமுள்ளூர்
(கானாட்டம்புலியூர்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கொள்ளிடக்கரையில் உள்ள இத்திருத்தலத்தை
அடைய சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்குடி சென்று, அங்கிருந்து ஓமாம்புலியூர் செல்லும்
பேருந்துச் சாலையில் சென்று, மோவூர் என்ற
கிராமத்தைத் தாண்டி மேலும் சென்று,
சாலையில்
முட்டம் என்று வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரியும் சாலையில் 3 கி.மீ. சென்று முட்டம்
கிராமத்தையடைந்து, ஊருள் புகுந்து
செல்லும் சாலை வழியே சுமார் 2 கி.மீ. செல்ல
வேண்டும். குறுகலான சாலை. கோயில் வரை வாகனத்தில் செல்லலாம்.
ஓமாம்புலியூரிலிருந்தும் இத்தலத்திற்கு
இவ்வழியே வரலாம். காட்டுமன்னார்குடியில் இருந்து கமலம் என்ற மினி பேருந்து
கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில்
இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்து சென்று இக்கோயிலை அடையலாம்.
இறைவர்
: பதஞ்சலிநாதர்.
இறைவியார்
: கானார்குழலி, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்.
தல
மரம் : வெள்ளெருக்கு
(தற்போதில்லை)
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சுந்தரர் - வள்வாய மதிமிளிரும்.
கிழக்கு நோக்கிய
மூன்று நிலை இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்திற்கு வெளியே
எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்னுள்ள
மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளனர்.
வலதுபுறம் அம்பாள் கானார்குழலி அம்மையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
அம்பாளுக்கு அம்புஜாட்சி, கோலவளைக்கை அம்பிகை
என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வரதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில்
இருக்கிறார். சனிதோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்து கொள்கின்றனர்.
முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும்
இருக்கிறது.
முன் மண்டபம் தாண்டி நேரே உள்ளே
சென்றால் மூலவர் பதஞ்சலீசுவரர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச்
சுற்றில் மகாவிஷ்ணுவிறகு நேர் எதிரே வள்ளி தெய்வனை சமேத முருகர் நின்ற கோலத்தில்
எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது. கருவறைச்
சுற்றில் காசி விஸ்வநாதர், காசிவிசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி
சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல்
கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர்.
நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
இதனால் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி
கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும்
விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக
அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில்
தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்திருத்தலத்திற்கு
வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார்.
அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி
ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "நேம் ஆர்ந்த வான்
நாட்டும் உள் ஊர் மருவுகின்றோர் போற்று திருக் கானாட்டுமுள்ளூர்க் கலைக் கடலே"
என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சுந்தரர்
திருப்பதிக வரலாறு:
வன்தொண்டர், திருவாழ்கொளிபுத்தூரைத் தொழுது
திருக்கானாட்டுமுள்ளூரை அடையும் பொழுது பெருமான் எதிர் காட்சி கொடுக்கக் கண்டு ''இறைவரது செம்மையாகிய திருவடி மலர்களைக்
கண்டு தொழுதேன்'' என்ற கருத்தினைப்
புலப்படுத்திப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 120)
பெரிய
புராணப் பாடல் எண் : 119
திருப்பதிகம்
பாடியே சென்று,அங்கு எய்தி,
தேவர்பெரு மானார்தம்
கோயில் வாயில்
உருப்பொலியும்
மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே,
உள்அணைந்து, பணிந்து, ஏத்தி, உருகும் அன்பால்
பொருப்புஅரையன்
மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிஇசைத்து, புறம்போந்து, தங்கி, பூமென்
கருப்புவயல்
வாழ்கொளிபுத் தூரை நீங்கி,
கானாட்டு முள்ளூரைக்
கலந்த போது.
பொழிப்புரை : சென்றவர்
திருவாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக்கும் தேவர் பெருமானாரின் திருக்கோயில்
வாயிலைச் சார்ந்து, உடம்பெல்லாம்
மயிர்க்கூச்செறியத் தாழ்ந்து, உள்ளாகச் சென்று, பணிந்து, அன்பினால் மலையரசன் மகளாராய
உமையம்மையாரை இடமருங்கில் கொண்ட சிவபெருமானை வணங்கிப் போற்றிப் பாடி வெளியே போந்து, அங்குத் தங்கி, பின்னர் அழகும் மென்மையும் உடைய
கரும்பின் வயல் நிறைந்த வாழ்கொளிப்புத்தூரை விடுத்து நீங்கி, திருக்கானாட்டு முள்ளூரைச் சேர்ந்த
பொழுது,
பெ.
பு. பாடல் எண் : 120
கானாட்டு
முள்ளூரைச் சாரும் போது,
கண்ணுதலார்
எதிர்காட்சி கொடுப்பக் கண்டு,
"தூநாள்மென்
மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு
தொழுதேன்" என்று
வான்ஆளும்
திருப்பதிகம் "வள்வாய்" என்னும்
வண்தமிழின் தொடைமாலை
மலரச் சாத்தி,
தேன்ஆரும்
மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருஎதிர்கொள்
பாடியினை எய்தச் செல்வார்.
பொழிப்புரை : திருக்கானாட்டுமுள்ளூரைச்
சாரும்பொழுது கண்ணுதற் பெருமான் அவர் எதிரே தோன்றிக் காட்சி கொடுத்தருளக் கண்டு
போற்றுவார், தூயதாய அன்றலர்ந்த
மெல்லிய மலராகும் கொன்றை மாலையைச் சடைமீது அணிந்த பெருமானாரது இரு திருவடி
மலர்களையும் நேரில் கண்டு தொழுதேன் எனும் கருத்தமைந்த, விண்ணுலகத்தையும் ஆட்படுத்தும் `வள்வாய்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்
தமிழ்மாலையை உள்ளம் உருகப்பாடி,
பெருமானுக்கு
அணிவித்து, அப்பால் தேன்நிறைந்த
மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியைச் சென்று சேர்வாராய்,
குறிப்புரை : `வள்வாய்' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக்கௌவாணப்
பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.40).
7.040
திருக்கானாட்டுமுள்ளூர் பண் -
கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வள்வாய
மதிமிளிரும் வளர்சடையி னானை,
மறையவனை, வாய்மொழியை, வானவர்தம் கோனை,
புள்வாயைக்
கீண்டுஉலகம் விழுங்கிஉமிழ்ந் தானை,
பொன்னிறத்தின்
முப்புரிநூல் நான்முகத்தி னானை,
முள்வாய
மடல்தழுவி முடத்தாழை ஈன்று
மொட்டுஅலர்ந்து
விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய
கருங்குவளை கண்வளரும் கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : கூரிய வாயை உடைய பிறை
ஒளிரும் நீண்ட சடையை உடையவனும்,
`வேதம், வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள், இந்திரன், திருமால், பிரமன்` என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய
இறைவனை , அடியேன், தாழையரும்புகள், வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு, முட்களையுடைய வாயினையுடைய இதழ்களைப்
பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற,
தேன்
மிகுந்த சோலைகள் சூழ்ந்த, மதுவொழுகும்
வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய
திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !
பாடல்
எண் : 2
ஒருமேகம்
முகில்ஆகி ஒத்து உலகம் தானாய்,
ஊர்வனவும்
நிற்பனவும் ஊழிகளும் தானாய்,
பொருமேவு
கடல்ஆகி, பூதங்கள் ஐந்தாய்ப்
புனைந்தவனை, புண்ணியனை, புரிசடையி னானை,
திருமேவு
செல்வத்தார் தீமூன்றும் வளர்த்த
திருத்தக்க
அந்தணர்கள் ஓதுநகர் எங்கும்
கருமேதி
செந்தாம ரைமேயும் கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : உலகிற்கு ஒருபெருந்
துணையாய் உள்ள மேகமாகியும் , தம்முள் ஒத்த
உலகங்கள் பலவும் தானேயாகியும், அவற்றில் உள்ள
ஊர்வனவும் , நிற்பனவுமாகிய
உயிர்களும் , அவற்றின் தோற்ற
ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும் , அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும் , ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து
நிற்பவனும் , அறவடிவினனும் , புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன் , திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை
உடையவர்களது மாளிகைகளும், முத்தீயையும்
வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள
இடங்களிலெல்லாம் , கரிய எருமைகள்
செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு
வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன்
இருந்தவாறு !
பாடல்
எண் : 3
இரும்புஉயர்ந்த
மூஇலைய சூலத்தி னானை,
இறையவனை, மறையவனை, எண்குணத்தி னானை,
சுரும்புஉயர்ந்த
கொன்றையொடு தூமதியம் சூடும்
சடையானை, விடையானை, சோதி எனும் சுடரை,
அரும்புஉயர்ந்த
அரவிந்தத்து அணிமலர்கள் ஏறி
அன்னங்கள்
விளையாடும் அகன்துறையின் அருகே,
கரும்புஉயர்ந்து, பெரும்செந்நெல்
நெருங்கிவிளை கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : வலிமை மிகுந்த மூன்று
இலைகளை உடைய சூலத்தை உடையவனும் ,
இறைவனும்
, வேதத்தை ஓதுபவனும் , எட்டுக் குணங்களை உடையவனும் , வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை
மாலையோடு , வெள்ளிய சந்திரனைச்
சூடிய சடையை உடையவனும் , இடபத்தை ஏறுபவனும் , ` சுயஞ்சோதி ` எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , அன்னப்பறவைகள் , அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற
தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற , அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள்
வளரப்பட்டு , செந்நெற்பயிர்கள்
செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !
பாடல்
எண் : 4
பூளைபுனை
கொன்றையொடு புரிசடையி னானை,
புனல்ஆகி, அனல்ஆகி, பூதங்கள் ஐந்துஆய்,
நாளைஇன்று
நெருநல்ஆய், ஆகாயம் ஆகி,
ஞாயிறாய், மதியம்ஆய் நின்றஎம்
பரனை,
பாளைபடு
பைங்கமுகின் சூழல்இளம் தெங்கின்
படுமதம்செய்
கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளைவண்டு
பாடமயில் ஆலும்வளர் சோலைக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : பூளைப் பூவையும் , அழகிய கொன்றை மாலையையும் , புரித்த சடையின்கண் உடையவனும் , நீராகியும் , நெருப்பாகியும் , ஐம்பூதங்களாகியும் , ` நாளை , இன்று , நேற்று ` என்னும் நாள்களாகியும் , பரவெளியாகியும் , சூரியனாகியும் , சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை
, அடியேன் , பாளைகள் உளவாகின்ற , பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள
இளமையான தென்னையினது , மிக்க மயக்கத்தை
உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட , மயில்கள் ஆடுகின்ற , உயர்ந்த சோலையையுடைய , திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்
பெற்றேன் ; இஃது என் தவப்பயன்
இருந்தவாறு !
பாடல்
எண் : 5
செருக்குவாய்ப்
பைங்கண்வெள் அரவுஅரையி னானை,
தேவர்கள்சூ
ளாமணியை, செங்கண்விடை யானை,
முருக்குவாய்
மலர்ஒக்கும் திருமேனி யானை,
முன்னிலையாய்
முழுதுஉலகம் ஆயபெரு மானை,
இருக்குவாய்
அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும்
வேள்வி இருந்து
இருநிதியம் வழங்குநகர் எங்கும்
கருக்குவாய்ப்
பெண்ணையொடு தெங்குமலி சோலைக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : சீறுகின்ற வாயினையும்
, பசிய கண்களையும் உடைய
, வெள்ளிய பாம்பினை
அரையிற் கட்டியவனும், தேவர்கள் முடியிற்
பதிக்கும் மணிபோன்றவனும், சிவந்த கண்களையுடைய
இடப ஊர்தியை உடையவனும், முருக்கமரத்தின்கண் பொருந்தியுள்ள
மலர்போலும் திருமேனியை உடையவனும்,
எல்லாவற்றிற்கும்
சான்றாய் நிற்பவனும் , உலகமுழுதும் தானேயாய்
நிறைந்தவனும் ஆகிய இறைவனை , அடியேன் , எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள
இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி வேட்டிருத்தலால் , அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற
மாளிகையின் பக்கங்களில் எல்லாம்,
கருக்கு
வாயினையுடைய பனைமரங்களும் , தென்னை மரங்களும்
நிறைந்த சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !
பாடல்
எண் : 6
விடைஅரவக்
கொடிஏந்தும் விண்ணவர்தம் கோனை,
வெள்ளத்து
மால்அவனும் வேதமுத லானும்
அடிஇணையும்
திருமுடியும் காண அரிது ஆய
சங்கரனை, தத்துவனை, தையல்மட வார்கள்
உடைஅவிழக்
குழல்அவிழக் கோதை குடைந்து ஆட,
குங்குமங்கள்
உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள்
விடுவார் குவளை களைவாரும் கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : எருதினை எழுதிய
ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும் , நீரில் துயில்கின்ற திருமாலும் , வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி
இணையையும் , அழகிய முடியினையும்
காண்டல் அரிதாகிய , ` சங்கரன் ` என்னும் காரணப் பெயரை உடையவனும் , மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை , அடியேன் , இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும் , மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி
விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிடநதியின்
கரைமேல் உள்ள, கடையர்கள் தாங்கள்
களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற்
கண்டு வணங்கப் பெற்றேன் . இஃது என் தவப்பயன் இருந்தவாறு .
பாடல்
எண் : 7
அருமணியை, முத்தினை, ஆன்அஞ்சும் ஆடும்
அமரர்கள்தம்
பெருமானை, அருமறையின் பொருளை,
திருமணியை, தீங்கரும்பின்
ஊறல்இரும் தேனை,
தெரிவுஅரிய
மாமணியை, திகழ்தருசெம் பொன்னை,
குருமணிகள்
கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்க்
கோல்வளையார்
குடைந்துஆடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள்
போல்நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : அரிய மணியாகிய
மாணிக்கம் போல்பவனும் , முத்துப்போல்பவனும் , ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும், அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகிய பிற மணிகள் போல்பவனும், இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க
சாறுபோல்பவனும், அறிதற்கரிய மணியாகிய
சிந்தாமணி போல்பவனும், மாற்று விளங்குகின்ற
செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை,
அடியேன்
முன்னே, நிறம் பொருந்திய
மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து, பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு
ஓடுகின்ற , அலைகளுக்கிடையில், வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர்
மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற
வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !
பாடல்
எண் : 8
இழைதழுவு
வெண்நூலும் மேவுதிரு மார்பின்
ஈசன்தன்
எண்தோள்கள் வீசிஎரி யாடக்
குழைதழுவு
திருக்காதில் கோள்அரவம் அசைத்துக்
கோவணம்கொள்
குழகனைக் குளிர்சடையி னானை,
தழைதழுவு
தண்நிறத்த செந்நெல் அதன் அயலே
தடம்தரள
மென்கரும்பின் தாழ்கிடங்கின் அருகே
கழைதழுவித்
தேன்தொடுக்கும் கழனிசூழ் பழனக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : பாம்பாகிய அணிகலமும் , அதனோடு சேர்ந்த வெண்மையான
முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினை யுடைய கடவுளும் , தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம்
ஆடுதற் பொருட்டு , குழைபொருந்திய காதில்
கொடிய பாம்பையும் இட்டு , உடையைக் கோவணமாக
உடுத்த அழகனும் , கங்கை நீராற்
குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை , அடியேன்
, தழைத்தலை யுடைய
பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில் , பெரிய முத்துக்களை யுடைய மென்மையான
கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன்
கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக் கானாட்டுமுள்ளூரிற் கண்டு
வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப் பயன்
இருந்தவாறு !
பாடல்
எண் : 9
குனி
இனிய கதிர்மதியம் சூடுசடை யானை,
குண்டலம்சேர்
காதவனை, வண்டுஇனங்கள் பாடப்
பனியுதிரும்
சடையானை, பால்வெண்ணீற் றானை,
பலஉருவும்
தன்உருவே ஆயபெரு மானை,
துனிஇனிய
தூயமொழித் தொண்டைவாய் நல்லார்
தூநீலம்
கண்வளரும் சூழ்கிடங்கின் அருகே
கனிஇனிய
கதலிவனம் தழுவுபொழில் சோலைக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : வளைந்த இனிய
ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும் ,
வண்டுக்
கூட்டங்கள் பாட , நீர்த்துளிகள்
சிந்துகின்றதுமாகிய சடையினையும் ,
குண்டலம்
பொருந்திய காதினையும் உடையவனும் ,
பால்போலும்
வெள்ளிய நீற்றை அணிந்தவனும் , எல்லா உருவங்களும்
தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை , அடியேன் , தூய நீலோற்பலங்கள் , ஊடலிலும் இனியன வாயும் தூயனவாயும் தோன்றும்
மொழிகளையும் , கொவ்வைக் கனிபோலும்
வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண் வளர்கின்ற , நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள , பழங்களைப் பழுத்த , இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள
சோலைகளை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன் இருந்தவாறு !
பாடல்
எண் : 10
தேவிஅம்பொன்
மலைக்கோமான் தன்பாவை ஆகத்
தனது
உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான்,
மேவிய
வெந் நரகத்தில் அழுந்தாமை நமக்கு
மெய்ந்நெறியைத்
தான்காட்டும் வேதமுத லானை,
தூவியவாய்
நாரையொடு குருகுபாய்ந்து ஆர்ப்பத்
துறைக் கெண்டை
மிளிர்ந்து கயல் துள்ளிவிளை யாடக்
காவிவாய்
வண்டுபல பண்செய்யும் கழனிக்
கானாட்டு
முள்ளூரில் கண்டுதொழு தேனே.
பொழிப்புரை : அழகிய பொன்மலைக்கு
அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க , அவளைத்
தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும், பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில்
வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற, வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும்
ஆகிய இறைவனை, சிறகுகள் வாய்ந்த
நாரைகளும், குருகுகளும் பறந்து
ஒலிக்க, நீர்த்துறைகளில்
கெண்டை பிறழ, பிற மீன்கள் துள்ளி
விளையாட, குவளைப்பூவின் கண்
வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களை யுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற்
கண்டு வணங்கப்பெற்றேன் ; இஃது என் தவப்பயன்
இருந்தவாறு !
பாடல்
எண் : 11
திரையின்ஆர்
கடல்சூழ்ந்த தென்இலங்கைக் கோனைச்
செற்றவனை, செம்சடைமேல்
வெண்மதியி னானை,
கரையின்ஆர்
புனல்தழுவு கொள்ளிடத்தின் கரைமேல்
கானாட்டு
முள்ளூரில் கண்டு,கழல் தொழுது,
உரையின்ஆர்
மதயானை நாவல் ஆரூரன்,
உரிமையால்
உரைசெய்த ஒண்தமிழ்கள் வல்லார்,
வரையின்ஆர்
வகைஞாலம் ஆண்டஅவர்க்கும்,
தாம்போய்
வானவர்க்கும்
தலைவராய் நிற்பர்அவர் தாமே.
பொழிப்புரை : புகழ்மிகுந்த , மதம் பொருந்திய யானையை யுடைய
திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் , அலையால்
நிறைந்த கடல்சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும் , செம்மையான சடையின்மேல் வெண்மையான
சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை ,
கரையின்கண்
நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற்
கண்டு அடிவணங்கி , வணங்கப்பெற்ற அவ்
வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள் , எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நில
வுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய் , பின்புசென்று வானுலகத்தார்க்கும்
தலைவராய் நெடிது வாழ்வர் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment