பழநி - 0164. தகைமைத் தனியில்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தகைமைத் தனியில் (பழநி)

முருகா! 
தனிமையால் வாடும் பெண்மணியான எனக்கு 
உனது திருமாலையைத் தந்து அருள்.


தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான


தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத்
     தநுமுட் டவளைப் ...... பவனாலே

தரளத் திரளிற் புரளக் கரளத்
     தமரத் திமிரக் ...... கடலாலே

உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக்
     கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே

உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக்
     குனநற் பிணையற் ...... றரவேணும்

திகைபத் துமுகக் கமலத் தனைமுற்
     சிறையிட் டபகைத் ...... திறல்வீரா

திகழ்கற் பகமிட் டவனக் கனகத்
     திருவுக் குருகிக் ...... குழைமார்பா

பகலக் கிரணப் பரணச் சடிலப்
     பரமற் கொருசொற் ...... பகர்வோனே

பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


தகைமைத் தனியில் பகை கற்று உறுகைத்
     தநு முட்ட வளைப் ...... பவனாலே,

தரளத் திரளில் புரளக் கரளத்
     தமரத் திமிரக் ...... கடலாலே,

உகை முத்தம் மிகுத்தது எனப் பகல் புக்கு
     ஒளி மட்கும் மிகைப் ...... பொழுதாலே,

உரை அற்று, ணர்வு அற்று, யிர் எய்த்த கொடிக்கு
     உன நல் பிணையல் ...... தரவேணும்.

திகை பத்து முகக் கமலத்தனை முன்
     சிறை இட்ட பகைத் ...... திறல் வீரா!

திகழ் கற்பகம் இட்ட வனக் கனகத்
     திருவுக்கு உருகிக் ...... குழைமார்பா!

பகலக் கிரணப் பரணச் சடிலப்
     பரமற்கு ஒருசொல் ...... பகர்வோனே!

பவனப் புவனச் செறிவு உற்று உயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.

பதவுரை

      திகை பத்தும் உக --- திசைகள் பத்தும் கலங்குமாறு,

     கமலத்தனை --- பிரமதேவனை,

     முன் சிறை இட்ட --- முன்னாளில் சிறையில் அடைத்த,

     பகைத் திறல் வீரா --- பகைமைத் திறத்தைக் கொண்ட வீரரே!

      திகழ் கற்பகம் இட்ட வன --- விளங்குகின்ற கற்பக மரங்கள் நிறைந்த சோலையுடன் கூடிய,

     கனக திருவுக்கு உருகி --- பொன்னுலக மாதாகிய தெய்வயானையம்மையின் மீது மனம் உருகி,

     குழை மார்ப --- குழைந்து தழுவிக் கொண்ட திருமார்பினரே,

      பகல கிரண பரண சடில --- ஞாயிறு போல ஒளியுடைய பாரமான சடை முடியுடைய,

     பரமர்க்கு ஒரு சொல் பகர்வோனே --- சிவபெருமானுக்கு "ஓம்" என்ற ஒரு மொழிப் பொருள் உபதேசித்தவரே!

      பவன புவன செறிவு உற்று உயர் --- வாயு மண்டலம் வரை நிறைந்து உயர்ந்த,

     மெய்ய் பழநி குமர --- மெய்ம்மை நிறைந்த பழநியம்பதியில் மேவும் குமாரக்கடவுளே!

      பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!

      தகைமை தனியில் --- தகுந்த தனியான சமயத்தில்,

     பகை கற்று --- என் மீது பகைமை கொண்டு,

     உறுகை தநு முட்ட வளைப்பானாலே --- தனது கையில் உள்ள வில்லை முழுவதும் வளைக்கும் மன்மதனாலும்,

     தரள திரளில் புரள் --- முத்துக்களின் புரைகள் புரள்கின்றதும்,

     அக் கரள -- அந்த நஞ்சுக்குப் பிறப்பிடமானதும்,

     தமர திமிர கடலாலே --- ஒலிக்கின்றதும் இருள் நிறைந்ததுமான சமுத்திரத்தாலும்,

     உகை முத்தம் மிகுந்தது என --- நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்ததுபோல் காட்சி தர,

     பகல் புக்கு ஒளி மட்கு --- பகல்போய் ஒளி குறைந்து,

     மிகை பொழுதாலே --- இரவுப் பொழுதினாலும்,

     உரை அற்று --- சொற்கள் அற்றும்,

     உணர்வு அற்று --- உணர்வு அழிந்தும்,

     உயிர் எய்த்த கொடிக்கு --- உயிரானது இளைத்த கொடியாகிய எனக்கு,

     உன் நல் பிணையல் தரவேணும் --- உன்னுடைய நல்ல மாலையைத் தந்தருள வேணும்.

பொழிப்புரை 

         திசைகள் பத்தும் கலங்கும்படி, தாமரை மலரில் வாழும் பிரமதேவனை முன்னாள் சிறையில் இட்டு (அவனுடைய அறியாமையைப்) பகைத்த வீர மூர்த்தியே!

         விளங்கும்படியான கற்பக மரங்கள் நிறைந்த சோலையுடன் கூடிய பொன்னுலக மாதாகிய தெய்வயானையம்மைக்கு உள்ளம் உருகி உடல் குழையத் தழுவிய திருமார்பினரே!

         சூரிய ஒளி கொண்ட பாரச் சடைமுடியுடைய பரமசிவத்துக்கு ஒரு மொழிப் பொருளை உபதேசித்தவரே!

         வாயுமண்டலம் வரை உயர்ந்து, உண்மை நிறைந்த பழநி மலைமீது வாழும் குமாரக் கடவுளே! பெருமிதம் உடையவரே!

         தகுந்த தனிமையில் என்மீது பகை கொண்டு, தனது கரத்திலுள்ள வில்லை நன்கு வளைக்கின்ற மன்மதனாலும், முத்துக்களின் கூட்டம் புரள்கின்றதும் விஷத்தின் பிறப்பிடமும், ஒலி செய்வதும் இருள் நிறைந்ததுமாகிய கடலினாலும், நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல நிரம்பி, பகல்போய் ஒளி மழுங்கி நிற்கும் இரவுப் பொழுதினாலும், உரையற்றும், உணர்வு அற்றும், உயிர் இளைத்தும் நிற்கும் கொடியாகிய எனக்குத் தேவரீருடைய மலர் மாலையைத் தருவீராக.


விரிவுரை


இத் திருப்புகழ் நாயகி நாயக முறையில் பாடியது. அருணகிரியார் தன்னை நாயகியாக அமைத்து முருகனிடம் மலர் மாலையை வேண்டுகின்றார்.

தகைமைத் தனியில் ---

தன்னந்தனியான நேரத்தில் காதலருக்குப் பிரிவுத் துன்பம் அதிகப்படும். அத்தனிமையில் மன்மதன் மலர்க்கணையேவித் துன்புறுத்துவான்.

பகை கற்றுறு கைத் தநு முட்ட வளைப்பவனாலும் ---

என்மீது பகைபூண்டு தன் கையிலுள்ள கரும்புவில்லை முழுவதும் வளைத்து மதனன் மலர்க்கணையை யேவுகின்றான்.

கரள ---

கரளம்-விடம்: ஆலகால விடத்திற்குப் பிறப்பிடம் கடல்.

தமரம் ---  

தமரம்-ஒலி, கடல் சதா ஒலிக்கின்றது.

திமிரம் ---

இருள் நிறைந்தது கடல். “திமிர உததி” என்ற திருப்புகழையுங் காணுக. கடல் ஓசை காதலர்க்குப் பிரிவுத் துன்பத்தை மிகுதிப்படுத்தும்.

  துள்ளுமத வேள்கைக்    கணையாலே
    தொல்லைநெடுநீலக்    கடலாலே    ---  திருப்புகழ்

உகைமுத்த மிகுத்ததென ---

உற்கை என்ற சொல் உகையென வந்தது. உற்கை நட்சத்திரம் இரவில் நட்சத்திரங்கள் வானில் முத்துக்கள் பதியவைத்தது போல் அழகு செய்யும்.

இரவு நேரம் வேட்கையை மிகுவிக்கும். இவ்வாறு அடியேன் மன்மதனாலும், கடலாலும், இரவாலும் துன்புறுகின்றேன்-என்கிறார்.

உரையற்று உணர்வற்று உயிர் எய்த்த கொடிக்கு ---

கொடி போன்ற எனக்குக் கொழுகொம்பு தேவரீர், உரையற்றும் உணர்வு அற்றும் உயிர் இளைப்புற்றும் வாடுகின்றேன்.

உன நல் பிணையல் தரவேணும் ---

தனித்து வாடும் பெண்ணாகிய எனக்கு உமது திருமார்பில் உள்ள மலர் மாலையைத் தந்து அருள வேணும்.

திகை பத்து முகக் கமலத் தனை.....திறல் வீரா ---

பிரமதேவன் பிரணவப் பொருளையறியாது திகைத்த போது, பத்துத் திசைகளும் கலங்குமாறு குட்டி, முன்னாள் சிறையில் அடைத்து, அவனுடைய அறியாமையைப் பகைத்த வீரமூர்த்தியாக முருகவேள் விளங்குகின்றான்.

திகழ் கற்பகமிட்ட வன.....மார்பா ---

திகழ்கின்ற கற்பக வனத்தினால் விளங்குகின்ற பொன்னுலகத்தில் வளர்ந்த தெய்வயானையம்மையை உள்ளம் உருகிக் குழைந்து தழுவுகின்ற திருமார்பை யுடையவர்.

பகலக் கிரணப் பரண.....பெருமாளே ---

சூரிய கிரணம் போன்ற சிவந்த சடைமுடியையுடைய சிவமூர்த்திக்கு, ஒரு மொழியை உபதேசித்த உத்தம குருமூர்த்தி.
   
பவனப் புவன.....பெருமாளே ---

பவனம்-வாயு. புவனம்-உலகம். வாயுமண்டலம் வரை புகழால் உயர்ந்த பழநி மலையில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுள்.

கருத்துரை 

         பழநிப் பெருமானே! தனிமையால் வாடும் பெண்மணியான எனக்கு உனது திருமாலையைத் தந்து அருள்வீர்.






No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...