திரு ஆப்பாடி
(திருவாய்ப்பாடி)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - அணைக்கரை மர்க்கத்தில்
அமைந்துள்ள மற்றொரு பாடல் பெற்ற திருத்தலமான திருப்பனந்தாள் அருகில் தென்மேற்கே
சுமார் 2 கி.மீ. தொலைவில்
மண்ணியாற்றின் தென்கரையில் திருஆப்பாடி இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி. மீ. தொலைவில் உள்ளது.
இறைவர்
: பாலுகந்தநாதர், பாலுகந்தீசுவரர்.
இறைவியார்
: பிருகந்நாயகி, பெரியநாயகி.
தல
மரம் : அத்தி.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - கடலகம் ஏழி னோடும்.
மண்ணியாற்றின் தென்கரையில் விளங்கும்
இத்தலம் சண்டேசுவர நாயனார் பசுக்களை மேய்த்த இடத்தில், ஆத்திமர நிழலில், வெணமணலையே சிவலிங்கமாகப் பிடித்து
வைத்து பூசித்து அருள்பெற்ற சிறப்புக்குரிய தலமாகும். சண்டேசுவரர் ஆக்களை
(பசுக்களை) மேய்த்த இடமாதலால் இத்தலம் ஆப்பாடி எனப்பட்டது.
சண்டேசுவர நாயனார்
வரலாறு:
ஆப்பாடிக்கு அருகிலுள்ள சேய்ஞலூர் நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின்
அவதாரத் தலம் சேய்ஞலூர். இத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும்
பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி
உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார்.
ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம்
முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு
முன்னரே, அவைகளின் பொருள்களை
விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின்
பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர்
நிற்பாராயினார்.
ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை
மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ்
வேளையில் அவருடன் அவ்வூர் ஆனிரைகளும் போந்தன.
அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக்
கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத்
தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார்.
'பசுக்களின்
உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான்
அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின்
சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன்
ஊர்தியாகிய வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை
விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ?
இதுவே
சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்' என்று
உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ
மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே
ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின்
சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை
மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.
விசாரசருமர் பசுக்களை
மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும் புற்களைப் பறித்து
பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில்
தண்ணீர் அருந்த விடுவார். அச்சத்தைத் தாமே
முன் நின்று நீக்குவார். காலங்களில்
பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச்
செழித்தன. வேதியர்களும் மற்றவர்களும்
மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பசுக்கள் தங்களின் கன்றுகளைப்
பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய
விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன.
கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை
தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.
பசுக்கள் அன்பால் சொரியும் பாலைக்
காணும் தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால்
அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது.
மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு
சிவலிங்கம் அமைப்பார். திருமதில்கள் எழுப்புவார்.
கோபுரங்கள் வகுப்பார். சுற்றாலயங்கள்
எடுப்பார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து வருவார். கறவைப் பசுக்களிடம் சென்று மடியைத்
தீண்டுவார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக் கொள்வார். சிவலிங்கத்தைத்
திருமஞ்சனம் ஆட்டுவார். அருச்சிப்பார்.
பூசைக்குக் கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்புவார். இவர்
செய்யும் அன்புப் பூசையைச் சிவபெருமான் இன்புடன் ஏற்பார். திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக்
குறையாதபடி வழங்கி வந்தன.
இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை
உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு
அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத்
தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று
வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் விசாரசருமர்
வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார். அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து மறைந்து பின்னே
சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே
உள்ள ஒரு குரா மரத்தில் ஏறி ஒளித்து இருந்தான்.
விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை
எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி
வந்து, ஓடிக் கைத் தண்டால் பிள்ளையார்
முதுகில் அடித்தான். கொடும் சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில்
திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப்
புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பாவி, பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத
செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத்
துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார். அந்தக் கோல் மழுவாக மாறியது. தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில்
அமர்ந்தார். சவபெருமான் தேவியுடன்
விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.
சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால்
எடுத்து, "நம் பொருட்டு உன்
தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த தந்தை" என்று திருவாய்
மலர்ந்தருளினார். அவரை அணைத்து உடலைத்
தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது
திருமேனி சிவமாயிற்று. பேரொளியில்
திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு
உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன்
பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது திருச்சடையில்
உள்ள கொன்றை மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.
எச்சதத்தன் சண்டீசப் பெருமானால்
வெட்டுண்டதால், அவன் குற்றம்
நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.
இத்தலத்தைக் குறித்த
மற்றொரு வரலாறும் உண்டு. ஆப்பாடியில் இருந்த இடையர்குலத்
தோன்றல் ஒருவன் பாலைக் கறந்து குடத்தைத் தன் வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது
வழியில் நாடோறும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் தடுக்கிப் பாற்குடம் கவிழ்ந்து
கொண்டு வருதலை அறிந்து அவ்விடத்தைச் சினங்கொண்டு கையிலிருந்த அரிவாளால்
வெட்டினான். அவ்விடத்திலிருந்து இரத்தம் பெருகியது. குருதிபடிந்த திருமேனியுடன்
சிவலிங்கத் திருவுருவில் இறைவன் வெளிப்பட்டு அருளினார். இவ்வதிசயத்தைக் கண்ட
இடையன் தன் அறியாமையால் ஏற்பட்ட செயலை எண்ணி மனம் வருந்தினான். அவனது
வருத்தந்தணித்து இறைவன் இன்னருள் புரிந்தார் என்பது வரலாறு.
இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கிய முகப்பு
வாயிலின் மேற்புறத்தில் இடப வாகனத்தில் அம்மையும், அப்பனும் உள்ளனர். அவர்களுக்கு
இருபுறமும் விநாயகரும், முருகரும் நின்ற
கோலத்தில் காட்சி தருகின்றனர். வாயில் வழி உள்ளே நுழைந்து முதல் பிரகாரத்தை
அடையலாம். இங்கு நந்தவனமும், வடகிழக்கு மூலையில்
பஞ்சமூர்த்தி மண்டபமும் உள்ளது. பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கடந்து முன்
மண்டபத்தை அடையலாம். இம்மண்டபம் வெவ்வால் நெற்றி அமைப்புடையது. மண்டபத்தின்
வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. உட்பிரகாரம் நுழைந்து
வலம் வரும்போது தென்மேற்கு மூலையில் தலமரமான ஆத்திமரம் உள்ளது. ஆத்திமரத்தின்
அடியில் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இந்த ஆத்திமர நிழலில் தான் அன்று சண்டேசர் இத்தல
இறைவனை தாபித்து வழிபட்டார் என்ற நினைப்பு நம்மை சிலிர்க்க வைக்கிறது. கருவறை
கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
கருவறை மேற்குப் பிரகாரத்தில் நால்வர், முருகர், மகாலட்சுமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபைரவர் ஆகியோரின் திருவுருவங்கள்
உள்ளன. எல்ல சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய
சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கர்ப்பகிரகத்தின் முன்னுள்ள அர்த்த
மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் இறைவனை இருத்தி வழிபடும்
முறையில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் மட்டும் இரண்டு
சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பம்சம்.
சண்டிகேசுவரருக்கு ரிஷபாரூடராக, உமையவளுடன் தரிசனம் தந்து சிவபெருமான்
ஆட்கொண்டது மகாசிவராத்திரி அமாவாசை நன்னாளில் என்பார்கள். எனவே மாசி மாதத்தில்
வருகிற மகாசிவராத்திரி நன்னாள் மற்றும் அமாவாசையில் இங்கு சிறப்பு அபிஷேக-
ஆராதனைகளும் விசேஷ வழிபாடுகளும் நடைபெறுகின்றன. மகா சிவராத்திரி நாளில் கும்பகோணம், ஆடுதுறை, பாபநாசம், அணைக்கரை, அரியலூர், ஜெயங் கொண்டம் எனச் சுற்றுவட்டார
ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபாலுகந்தீஸ்வரரைத் தரிசிக்க இங்கு
வருகின்றனர். மகா சிவராத்திரி நாளில் இங்கே உள்ள தீர்த்தத்தில் நீராடி அல்லது
தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக்கொண்டு, ஸ்ரீபெரியநாயகிக்கு
அரளிமாலையும் ஸ்ரீபாலுகந்தீஸ்வரருக்கு வில்வமாலையும் சார்த்தி அபிஷேகம் செய்து
வழிபட்டால் பிறவிப் பயனை அடையலாம்;
சகல
ஐஸ்வரியங்களும் கிடைத்து நிம்மதியுடன் வாழலாம்; முன் ஜன்மப் பாவங்கள் அனைத்தும்
விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தினம் தாளில் சூழ் திரு, வாய்ப் பாடி அங்கு சூழ்கினும்
ஆம் என்று உலகர் வாழ் திருவாய்ப்பாடி இன்ப வாரிதியே" என்று போற்றி உள்ளார்.
காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 301
பொங்கு
புனல்ஆர் பொன்னியினில்
இரண்டு கரையும்
பொருவிடையார்
தங்கும்
இடங்கள் புக்குஇறைஞ்சித்
தமிழ்மா லைகளும்
சாத்திப்போய்
எங்கும்
நிறைந்த புகழாளர்
ஈறுஇல் தொண்டர்
எதிர்கொள்ளச்
செங்கண்
விடையார் திருஆனைக்
காவின் மருங்கு
சென்று அணைந்தார்.
பொழிப்புரை : திருப்பழையாற வடதளியினின்றும்
வரும் வழியில் பொங்கி வருகின்ற காவிரியின் இருமருங்கும் உள்ள, போர் செய்யவல்ல ஆனேற்றை ஊர்தியாகக்
கொண்ட சிவபெருமான் நிலைபெற்று விளங்கி வீற்றிருக்கும், பல பதிகளுக்கும் சென்று வணங்கி, தமிழ் மாலைகளையும் சாத்தி வரும் எங்கும்
நிறைந்த புகழையுடைய அவர், மேலும் சென்று அளவற்ற
தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளச், செங்கண்
விடையையுடைய இறைவரின் திருவானைக்கா என்ற பதியின் அருகே சென்று சேர்ந்தார்.
குறிப்புரை : இத்திருப்பதியிலிருந்து
திருவானைக்காவிற்குச் செல்லும் வரையிலும் பொன்னியின் இருகரைகளிலும் உள்ள திருப்பதிகளை
வணங்கிச் சென்றார் என ஆசிரியர் குறித்தருளுகின்றார். அத்திருப் பதிகளாவன:
1. திரு இன்னம்பர்:
(அ) `விண்ணவர்` (தி.4 ப.72) - திருநேரிசை.
(ஆ) `மன்னும்மலை` (தி.4 ப.100) - திரு விருத்தம்.
(இ) `என்னிலாரும்` (தி.5 ப.21) - திருக்குறுந்தொகை.
(ஈ) `அல்லிமலர்` (தி.6 ப.89) – திருத்தாண்டகம்.
2. திருப்புறம்பயம்: `கொடிமாட` (தி.6 ப.13) - திருத்தாண்டகம்.
3. திருவிசயமங்கை: `குசையும்` (தி.5 ப.71) - திருக்குறுந்தொகை.
4. திருவாப்பாடி: `கடலகம்` (தி.4 ப.48) - திருநேரிசை.
5. திருப்பந்தணை
நல்லூர்: `நோதங்கம்` (தி.6 ப.10) - திருத் தாண்டகம்.
6. திருக்கஞ்சனூர்: `மூவிலைநல்` (தி.6 ப.90) – திருத்தாண்டகம்.
7. திருமங்கலக்குடி: `தங்கலப்பிய` (தி.5 ப.73) – திருக்குறுந்தொகை.
8. தென்குரங்காடு துறை: `இரங்கா` (தி.5 ப.63) - திருக்குறுந்தொகை.
9. திருநீலக்குடி: `வைத்தமாடும்` (தி.5 ப.72) - திருக்குறுந்தொகை.
10.திருக்கருவிலிக்
கொட்டிட்டை: `மட்டிட்ட` (தி.5 ப.69) - திருக்குறுந்தொகை.
11.திரு
அரிசிற்கரைப்புத்தூர்: `முத்தூரும்` (தி.5 ப.61) - திருக்குறுந்தொகை.
12.திருச்சிவபுரம்: `வானவன்காண்` (தி.6 ப.87) - திருத்தாண்டகம்.
13.திருக்கானூர்: `திருவின் நாதனும்` (தி.5 ப.76) - திருக்குறுந் தொகை.
14.திருஅன்பில்ஆலந்துறை:
`வானம் சேர்` (தி.5 ப.80) -திருக்குறுந்தொகை
15.திருஆலம்பொழில்: `கருவாகி` (தி.6 ப.86) - திருத்தாண்டகம்.
16.மேலைத்திருக்காட்டுப்பள்ளி:
`மாட்டுப்பள்ளி` (தி.5 ப.84) - திருக்குறுந்தொகை.
17.
திருநாவுக்கரசர் திருப்பதிகம்
4. 048 திருவாப்பாடி திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
கடல்அகம்
ஏழினோடும், பவனமும், கலந்த
விண்ணும்,
உடல்அகத்து
உயிரும், பாரும், ஒள்அழல் ஆகி நின்று,
தடமலர்க்
கந்த மாலை தண்மதி பகலும் ஆகி
மடல்அவிழ்
கொன்றைசூடி மன்னுஆப் பாடி யாரே.
பொழிப்புரை : ஏழு கடலும் காற்றும்
விண்ணும் , உடல்களில் உள்ள
உயிர்களும் , உலகமும் , தீயும் ஆகிநின்று , பெரிய மலர்கள் மணம் வீசும்
மாலைக்காலமும் , குளிர்ந்த சந்திரன்
ஒளிவிடும் இரவும் , சூரியன் ஒளிவிடும்
பகற்காலமும் ஆகி , நிலைபெற்று நின்ற
ஆப்பாடியார் இதழ் விரிகின்ற கொன்றைப் பூமாலையைச் சூடியவராவார் .
பாடல்
எண் : 2
ஆதியும்
அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும்
ஆகிச்
சோதியுள்
சுடரும் ஆகித் தூநெறிக்கு ஒருவன்
ஆகிப்
பாதியில்
பெண்ணும் ஆகிப் பரவுவார் பாங்கர் ஆகி
வேதியர்
வாழும் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி
யாரே.
பொழிப்புரை : ஆதியும் அறிவும் ஆகி
அறிவினுள் செறிந் திருப்பவராய் ,
ஒளியை
உட்கொண்ட ஞானச்சுடராய் , தூய வழிக்குச்
செலுத்தும் ஒப்பற்றவராய்ப் பாதி பெண் உருவினராய் , வழிபடுபவர்களுக்குத் துணைவராய்
வேதியர்கள் வாழும் சேய்ஞலூரை அடுத்த ஆப்பாடியில் உறையும் பெருமான் அமைந்துள்ளார் .
பாடல்
எண் : 3
எண்உடை
இருக்கும் ஆகி, இருக்கின்உள்
பொருளும் ஆகி,
பண்ணொடு
பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி,
கண்ஒரு
நெற்றி ஆகி, கருதுவார் கருதல்
ஆகாப்
பெண்ஒரு
பாகம் ஆகிப் பேணுஆப் பாடி யாரே.
பொழிப்புரை : மிக மேம்பட்டதாக
எண்ணப்படும் இருக்கு வேதமாய் , அவ்வேதம்
குறிப்பிடும் பரம்பொருளாய் , பண்ணோடு பாடல்
பாடுபவர் துணைவராய் , நெற்றிக்கண்ணராய் , உண்மை ஞானிகள் அல்லாதாருக்கு அறிதலும்
எண்ணுதலும் இயலாத பார்வதி பாகராய்த் திருவாப்பாடியை விரும்பி உறையும் சிவபெருமான் அமைந்துள்ளார்
.
பாடல்
எண் : 4
அண்டம்ஆர்
அமரர் கோமான், ஆதிஎம் அண்ணல் பாதம்
கொண்டுஅவன்
குறிப்பி னாலே கூப்பினான் தாப
ரத்தைக்
கண்டவன்
தாதை பாய்வான் கால்அற எறியக் கண்டு
தண்டியார்க்கு
அருள்கள் செய்த தலைவர்ஆப் பாடி யாரே.
பொழிப்புரை : எல்லா உலகங்களுமாய் , தேவர் தலைவராய், எல்லோருக்கும் ஆதியாய் உள்ள அண்ணலாரின்
திருவடிகளை மனத்துள்கொண்டு , அப்பெருமான்
குறிப்பினாலே மணலிலே மணலால் விசாரசருமன் இலிங்க வடிவத்தை அமைக்க அதனைக் கண்ட அவன்
தந்தையாகிய எச்சதத்தன் சிவபூசையை அழிக்க ஓடிவர , விசாரசருமன் அவன் கால்களை வெட்டியதனைக்
கண்டு அவனுக்குச் சண்டீசன் என்ற பதவியை அருளிச் செய்தவர் திருவாப்பாடிப்
பெருமானாவார் .
பாடல்
எண் : 5
சிந்தையும்
தெளிவும் ஆகித் தெளிவின்உள் சிவமும்
ஆகி,
வந்தநல்
பயனும் ஆகி, வாள்நுதல் பாகம் ஆகி,
மந்தமாம்
பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென்கரைமேல்
மன்னி
அந்தமோடு
அளவு இலாத அடிகள்ஆப் பாடி யாரே.
பொழிப்புரை : சிந்தித்தல் , தெளிதல் , தெளிவினுள் விளங்கும் தூய நிலையாகிய
நிட்டை , இவற்றால் பயனாகிய
வீடுபேறு ஆகியவைகளாகிப் பார்வதி பாகராய் , முடிவும் அளவும் இல்லாதவராய்த் தென்றல்
வீசப்பெறுவதாய் மண்ணியாற்றின் அழகிய கரையில் நிலை பெற்றிருக்கும் ஆப்பாடியை
உறைவிடமாகக் கொண்ட பெருமான் அமைந்துள்ளார் .
பாடல்
எண் : 6
வன்னிவாள்
அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி
மின்னிய
உருவாம் சோதி, மெய்ப்பொருள் பயனும்
ஆகிக்
கன்னிஓர்
பாகம் ஆகிக் கருதுவார் கருத்தும்
ஆகி,
இன்னிசை
தொண்டர் பாட இருந்தஆப் பாடி யாரே.
பொழிப்புரை : வன்னி , ஒளிபொருந்திய பாம்பு , ஊமத்தை , பிறை , கங்கை இவற்றைச் சூடி மின்னல்போல
ஒளிவீசும் வடிவினை உடைய ஒளிமயமாய் ,
ஞானத்தின்
பயனாகிய பரமுத்தியாய்ப் பார்வதி பாகராய் , தியானிப்பவர் தியானத்தில் இருப்பவராய் , இனிய இசைகளை அடியார்கள் பாடுமாறு
ஆப்பாடியார் இருக்கின்றார் .
பாடல்
எண் : 7
உள்ளுமாய்ப்
புறமும் ஆகி, உருவுமாய் அருவும்
ஆகி,
வெள்ளமாய்க்
கரையும் ஆகி, விரிகதிர் ஞாயிறு ஆகி,
கள்ளமாய்க்
கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம்
ஆகி
அள்ளுவார்க்கு
அள்ளல் செய்திட்டு இருந்தஆப் பாடி யாரே.
பொழிப்புரை : உள்ளும் புறமுமாய் , அருவும் உருவுமாய் , வெள்ளமும் கரையுமாய்க் கிரணங்கள்
விரிகின்ற சூரியனாய் , கள்ளமும் கள்ளத்து
உள்ளாருமாய்க் கருத்துள் இருப்பவராய்ச் செல்வ வடிவினராய் , தம்மைப் பலவகையாலும் அனுபவிக்கும்
அடியவர்களுக்கு அவர்கள் விரும்பியவாறு கொள்ளத் தம்மை வழங்கிக் கொண்டு இருப்பவர்
ஆப்பாடிப் பெருமான் ஆவார் .
பாடல்
எண் : 8
மயக்கமாய்த்
தெளிவும்ஆகி, மால்வரை வளியும் ஆகி,
தியக்கமாய்
ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி
நின்று,
இயக்கமாய்
இறுதி ஆகி, எண்திசைக்கு இறைவர்
ஆகி
அயக்கமாய்
அடக்கம் ஆய ஐவர்ஆப் பாடி யாரே.
பொழிப்புரை : மயக்கமும்
தெளிவுமாகிப் பெரிய மலைகளும் காற்றுமாகி , அசைவும் அசைவின்மையுமாகி , அடியவர் சிந்தையுள் பொருந்தி நின்று , அதனை இயக்குபவராய் , உலகுக்கெல்லாம் இறுதியாய், எண் திசைகளுக்கும் தலைவராய், நோயற்றவராய்ப் பொறிவாயில் ஐந்தும்
அவித்தவராய் , உள்ளவர்
திருவாப்பாடிப் பெருமான் ஆவார் .
பாடல்
எண் : 9
ஆர்அழல்
உருவம் ஆகி, அண்டம்ஏழ் கடந்த
எந்தை,
பேர்ஒளி
உருவி னானை, பிரமனும் மாலும்
காணாச்
சீர்அவை
பரவி ஏத்திச் சென்றுஅடி வணங்கு
வார்க்குப்
பேர்அருள்
அருளிச் செய்வார் பேணும்ஆப் பாடி யாரே.
பொழிப்புரை : பெரிய தீத்தம்பத்தின்
உருவினராய் ஏழுலகமும் கடந்த எம் தந்தையாராகிய பேரொளிப் பெருமானைப் பிரமனும்
திருமாலும் முடி அடி காணமுடியாதிருந்த சிறப்பினை முன்நின்று துதித்துப் புகழ்ந்து , திருவடிகளை வணங்குபவருக்கு , ஆப்பாடியை விரும்பி உறையும் அப்பெருமான்
பெருமளவில் அருள் செய்பவராவார் .
பாடல்
எண் : 10
திண்திறல்
அரக்கன் ஓடி, சீகயி லாயம் தன்னை
எண்திறல்
இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச
விண்டுஇறல்
நெரிய ஊன்றி மிகக்கடுத்து அலறி
வீழப்
பண்திறல்
கேட்டு உகந்த பரமர்ஆப் பாடி யாரே.
பொழிப்புரை : மிக்க உடல் வலிமையை
உடைய இராவணன் எம் பெருமானைப் பற்றி எண்ணியறியும் அறிவு வலிமை இல்லாதவனாய்ப்
பெருமைமிக்க கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி பயப்பட , அவன் உடல் வலிமை நீங்குமளவுக்கு அவன்
உடல் நெரியுமாறு மிகவும் வெகுண்டு விரலை ஊன்ற அவன் அலறிவிழப் பின் அவன் பாடிய
பண்களையும் அவற்றின் திறங்களையும் கேட்டுகந்த பெருமான் திருஆப்பாடியார் ஆவார் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment