திருச் சேய்ஞலூர்
(சேங்கனூர்)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
கும்பகோணம் - அணைக்கரை பேருந்து
மார்க்கத்தில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சோழபுரம் ஊரைத் தாண்டி சேங்கனூர்
நிறுத்தத்தில் இறங்கி கிழக்கே செல்லும் ஒரு சிறிய சாலையில் (சாலையில் நுழைவு
வாயில் உள்ளது) சுமார் 1 கி.மீ. சென்றால் இத்திருத்தலத்தை
அடையலாம்.
அருகிலுள்ள மற்ற திருத்தலங்கள் திருஆப்பாடி
மற்றும் திருப்பனந்தாள்.
இறைவர்
: சத்தியகிரீசுவரர், சத்யகிரிநாதர்.
இறைவியார்
: சகிதேவியம்மை.
தீர்த்தம் : மண்ணியாறு. (சத்திய புஷ்கரணி -குளம்)
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - நூலடைந்த
கொள்கையாலே
சண்டேசுவர நாயனார்
வரலாறு:
நாயன்மார்களில் ஒருவரான சண்டேசுவர நாயனாரின் அவதாரத் தலம் சேய்ஞலூர். இத்தலத்தில்
எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர்
விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி
உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப்
பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது. உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம்
முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு
முன்னரே, அவைகளின் பொருள்களை
விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு
செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில்
விசாரசருமர் நிற்பாராயினார்.
ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை
மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ்
வேளையில் அவருடன் அவ்வூர் ஆனிரைகளும் போந்தன. அந் நிரைகளில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட
விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன்
அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். 'பசுக்களின்
உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான்
அபிடேகத்திற்குப் பஞ்ச கவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின்
சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய
வெள்ளேறு பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது' என்று
எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின்
மாண்பை எண்ணி, 'இப் பசுக்களை
மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த
வழிபாடாகும்' என்று
உறுதிகொண்டார். ஆயனைப் பார்த்து, "இந்த ஆநிரையை இனி நீ
மேய்த்தல் வேண்டாம். அதனை நானே
செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே
ஓடிப்போனான். விசாரசருமர் அந்தணர்களின்
சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை
மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார்.
விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும்
வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும் புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல
துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.
அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார்.
காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார்.
அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. வேதியர்களும்
மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
பசுக்கள் தங்களின் கன்றுகளைப்
பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய
விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது
இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும்.
தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.
பசுக்கல் அன்பால் சொரியும் பாலைக்
காணும் தோறும் விசாரசருமருக்குச் சிவபெருமான் திருமஞ்சன நினைவு தோன்றும். அதனால்
அவருக்குச் சிவபூசை வேட்கை எழுந்தது.
மண்ணியாற்றங்கரையில் ஒரு மணல் திட்டில், ஆத்தி மரத்தடியில் மணலால் ஒரு
சிவலிங்கம் அமைப்பார். திருமதில்கள்
எழுப்புவார். கோபுரங்கள் வகுப்பார்.
சுற்றாலயங்கள் எடுப்பார். வழிபாட்டிற்கு ஆத்தி முதலிய மலர்களைக் கொய்து
வருவார். கறவைப் பசுக்களிடம் சென்று
மடியைத் தீண்டுவார். பசுக்கள் கனைத்துச் சொரியும் பாலைக் குடங்களில் நிரப்பிக்
கொள்வார். சிவலிங்கத்தைத் திருமஞ்சனம் ஆட்டுவார். அருச்சிப்பார். பூசைக்குக்
கிட்டாத பொருள்களை மனத்திலே பாவித்து நிரப்புவார். இவர் செய்யும் அன்புப் பூசையைச்
சிவபெருமான் இன்புடன் ஏற்பார்.
திருமஞ்சனத்துக்குப் பால் உதவியும், பசுக்கள் உரியவர்களுக்குப் பாலைக்
குறையாதபடி வழங்கி வந்தன.
இவ்வாறு நிகழ்ந்து வரும் நாளில், ஒருநாள் ஒருவன் சேய்ஞ்ஞலூர்ப்
பிள்ளையார் செய்கையைக் கண்டான். உண்மையை
உணராத அவன், அவ்வூர் அந்தணர்களுக்கு
அதை அறிவித்தான். அவர்கள் எச்சதத்தனை அழைப்பித்து, கேட்டதைச் சொன்னார்கள். எச்சதத்தன், "இது எனக்குத்
தெரியாது. சிறுவன் பிழையைப் பொறுத்தருளல் வேண்டும். இனி இப்பிழை நிகழுமாயின், அது என்னுடையது ஆகும்" என்று
வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
அடுத்த நாள் காலையில் விசாரசருமர்
வழக்கம் போலப் பசுக்களை மேய்க்கப் போனார்.
அன்று எச்சதத்தன், அவரைத் தொடர்ந்து
மறைந்து பின்னே சென்றான். சென்று, மணல் திட்டின் அருகே உள்ள ஒரு குரா
மரத்தில் ஏறி ஒளித்து இருந்தான்.
விசாரசருமர் வழக்கப்படி பூசை தொடங்கினார். அவர், பால்குடங்களை ஏந்தி அபிடேகம் செய்வதை
எச்சதத்தன் கண்டான். கண்டதும், அவன் மரத்தில் இருந்து விரைந்து இறங்கி
வந்து, ஓடிக் கைத் தண்டால்
பிள்ளையார் முதுகில் அடித்தான். கொடும்
சொற்களால் வைதான். பெரியவர் சிந்தை சிவபூசையில்
திளைத்துக் கிடக்கிறது. எச்சதத்தன் மேலும் மேலும் சீறிச்சீறி அன்பரைப்
புடைக்கின்றான். அன்பர் நிலை குலையவில்லை. அதற்குமேல், பாவி, பால்குடங்களை உதைத்தான். அந்த அடாத
செயலைச் செய்தவன் தந்தை என்று விசாரசருமர் நன்கு உணர்ந்தார். அவன் கால்களைத்
துணிக்கத் தமக்கு முன்னிருந்து கோலை எடுத்தார்.
அந்தக் கோல் மழுவாக மாறியது.
தந்தையின் கால்கள் வெட்டப்பட்டன. முன்புபோல் சிவபூசையில் அமர்ந்தார். சிவபெருமான்
தேவியுடன் விடைமேல் தோன்றினார். ஆண்டவனைக் கண்டு எல்லை இல்லா ஆனந்தம் அடைந்து, விழுந்து வணங்கினார்.
சிவபெருமான், விசாரசருமரைத் தமது திருக்கையால்
எடுத்து, "நம் பொருட்டு உன்
தந்தையைத் தடிந்தாய். இனி நாமே உனக்கு அடுத்த
தந்தை" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
அவரை அணைத்து உடலைத் தழுவினார். உச்சி மோந்தார். மகிழ்ந்தார். விசாரசருமரது திருமேனி சிவமாயிற்று. பேரொளியில் திகழ்ந்தார். சிவபெருமான், சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளையாரை நோக்கி, "திருத்தொண்டர்களுக்கு
உன்னைத் தலைவன் ஆக்கினோம். நாம் உடுப்பன, உண்பன, அணிவன முதலிய எல்லாம் உனக்கே ஆகுக. அதன்
பொருட்டு உனக்குச் சண்டேசுர பதத்தைத் தந்தோம்" என்று அருளித் தமது
திருச்சடையில் உல்ள கொன்றைமாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார். சண்டீச நாயனார், தேவதேவரைத் தொழுது, அவர் அருளிய பதத்தை அடைந்தார்.
எச்சதத்தன் சண்டீசப் பெருமானால்
வெட்டுண்டதால், அவன் குற்றம்
நீங்கிற்று. அவன் சுற்றத்துடன் சிவலோகம் எய்தினான்.
சூரனை அழிப்பதற்காக வந்த
முருகப்பெருமான் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு சர்வசங்காரப் படைக்கலத்தை, உருத்திர பாசுபதத்தை பெற்றார். சேய் என்பது
முருகனைக் குறிக்கும். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் =
சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது. சேய்ஞலூர் தலத்தின் சிறப்பைப் பற்றி
கந்தபுராணத்தில், வழிநடைப் படலத்தில்
விரிவாக கூறப்பட்டுள்ளது. முருகனுக்கு இத்தலத்தில் பெரிய தனி சன்னதி உள்ளது.
கோச்செங்கட்சோழன் கட்டிய
மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்., கோயில்
கட்டுமலை மேல் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றிலும் மலைமேல் ஒரு
பிராகாரமும், சுற்றிக் கீழே ஒரு
பிராகாரமும் உள்ளன. கட்டுமலை மீது மேலே மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை உள்ளன. மகா
மண்டபத்தில் நடராஜர், தட்டினால் வெங்கல ஒலி
கேட்கும் பைரவர், நால்வர் சன்னதிகள்
உள்ளன. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.
சண்டேசுவரரின் திருமுடியில் பிறை,
சடை, குண்டலம், கங்கையுள்ளன. நாயனாருக்குக் காட்சி தந்த
சிறப்பைக் குறிக்கும் வகையில் இவ்வாறு அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். மூலவர்
சத்தியகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டுமலைக்குக் கீழே
அம்பாள் ஆலயம் தெற்கு நோக்கிய சந்நிதியாகவுள்ளது.
சோழர்களின் முக்கிய ஐந்து நகரங்களுள்
சேய்ஞலூர் தலமும் ஒன்று. வைணவத்தில் நாலாயிர திவ்விய பிரபந்தத்திற்கு உரை எழுதிய
பெரியவாய்ச்சான் பிள்ளை அவதாரத் தலம் இது. எதிரே இவருக்கு கோயில் உள்ளது.
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல்
பாடியருளிய பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சண்டேசுவர நாயனார்
வரலாற்றைப் பற்றி தனது பதிகத்தின் 7-வது பாடலில்
சம்பந்தர் குறிப்பிடுகிறார். சண்டீச நாயனார் அவதாரத்தலம் என்பதால், திருஞானசம்பந்தர்
சிவிகை இருந்து இறங்கி நடந்து சென்று இத்தல இறைவனை வழிபட்டார் என்று பெரிய புராணம்
கூறும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், " ஏழ் புவிக்குள் வாய்ஞ்ஞலூர்
ஈதே மருவ என வானவர் சேர் சேய்ஞ்ஞலூர் இன்பச் செழுங்கனியே" என்று போற்றி உள்ளார்.
காலை 7 மணி முதல் பகல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 241
புறம்பயத்து
இறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி
நீர்மையில் பதிகச் செந்தமிழ்
நிறம்பயில்
இசையுடன் பாடி, நீடிய
அறம்தரு
கொள்கையார் அமர்ந்து மேவினார்.
பொழிப்புரை : திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும்
சிவபெருமானை வணங்கிப் போற்றும் பண்ணியல் திறம் அமைந்த செந்தமிழை, வண்ணம் மிகும் இசையுடன் பாடி, நீடிய அறத்தை உதவும் கொள்கையினரான
பிள்ளையார், அங்கு விருப்புடன்
எழுந்தருளி இருந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 242
அத்திருப்
பதிபணிந்து அகன்று போய்,அனல்
கைத்தலத்
தவர்பதி பிறவும் கைதொழு
முத்தமிழ்
விரகர்ஆம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப்
பணிலம்முத்து ஈனும் சேய்ஞலூர்.
பொழிப்புரை : அத்திருப்புறம்பயம்
என்ற பதியைப் பணிந்து சென்று, தீயை ஏந்திய
கையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கும் முத்தமிழ் வல்லவரான
பிள்ளையார் வயல்களில் சங்குகள் முத்துக்களை ஈனுவதற்கு இடமான `திருச்சேய்ஞலூரை' வந்தடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 243
திருமலி
புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை
யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை
யொடுமுழவு ஒலிபி றங்கவே
வருமுறை
எதிர்கொள வந்து முந்தினார்.
பொழிப்புரை : செல்வம் மிக்க
சீகாழிப் பதியின் தலைவர் இங்ஙனம் எழுந்தருள, சேய்ஞலூரில் வாழ்கின்ற அந்தணர்கள், தம் பதியை அணிசெய்து, முன்பாக மறை முழக்கத்துடன் மங்கல
முழவுகளின் ஒலிகளும் விளங்க முறைமை வழாது பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டு
வந்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 244
ஞானசம்
பந்தரும் நாய னார்சடைத்
தூநறும்
தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில்
வரும்பதி என்று, நித்தில
யானமுன்
இழிந்துஎதிர் இறைஞ்சி எய்தினார்.
பொழிப்புரை : திருஞானசம்பந்தப்
பெருமானும், `இறைவர் தம் சடையில்
சாத்திய தூய நறிய கொன்றை மலர் மாலையை முன்னர்த் தம் தலையில் சூட்டப் பெறும்
பேறுடைய சண்டீசர், எழுமையும் ஏமாப்புடைய
நல்லுணர்வோடு வந்து தோன்றிய திருப்பதி இது' என்று மனத்துள் எண்ணி, முத்துப் பல்லக்கினின்றும் இழிந்து, அப்பதியை வணங்கி வந்து சேர்ந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 245
மாமறை
யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந்து
அருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும்
பதியில்வந்து அருளக் கண்டன
ரா-மகிழ்
வுடன்பணிந்து ஆடி ஆர்த்தனர்.
பொழிப்புரை : பெருமை மிகுந்த
அந்தணர்கள், அருட்கொடையாளரான
சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் எழுந்தருளிவர, தங்களின் சண்டீசப் பிள்ளையாரே அழகிய
தம்பதியின் மீண்டும் எழுந்தருளி வரக்கண்டது போன்ற மகிழ்வுடன் வணங்கியும் ஆடியும்
மகிழ்வொலி செய்தும் எதிர் கொண்டனர்.
பெ.
பு. பாடல் எண் : 246
களித்தனர், புண்ணியக் கரக
வாசநீர்
தெளித்தனர், பொரிகளும் மலரும்
சிந்தினர்,
துளித்தனர்
கண்மழை, சுருதி ஆயிரம்
அளித்தவர்
கோயில்உள் அவர்முன்பு எய்தினார்.
பொழிப்புரை : அவ்வூரவர் இங்ஙனம்
மகிழ்ச்சியடைந்து புண்ணியக் குடத்திலுள்ள மணம் கொண்ட நீரைத் தெளித்தனர்.
பொரிகளையும், மலர்களையும்
சொரிந்தனர். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். அளவற்ற மறைகளை வழங்கியருளிய சிவபெருமானது
திருக்கோயிலில் புகுந்து அப்பிள்ளையாரின் முன்னர்ச் சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 247
வெங்குரு
வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய
விருப்பினால் புடைவ லங்கொடு,
செங்கைகள்
சென்னிமேல் குவித்துச் சென்றுபுக்கு,
அங்கணர்
முன்புஉற அணைந்து தாழ்ந்தனர்.
பொழிப்புரை : வெங்குரு என்னும்
சீகாழித் தலைவரான பிள்ளையாரும்,
விளங்கும்
கோயிலை மிக்க விருப்பத்துடன் வலமாக வந்து, சிவந்த கைகளைத் தலைமேல் குவித்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு சேர்ந்து
வணங்கினர்.
பெ.
பு. பாடல் எண் : 248
வேதியர்
சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலில்
பணிந்து, அவர் கருணை
போற்றுவார்,
தாதைதாள்
தடிந்த சண்டீசப் பிள்ளையார்
பாதகப்
பயன்பெறும் பரிசு பாடினார்.
பொழிப்புரை : அந்தணர் வாழ்தற்கு
இடமான சேய்ஞலூரில் எழுந்தருளியிருக்கும், இயல்பாகவே
வினையின் நீங்கியவராய இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் அருள் திறத்தைப்
போற்றுபவராய பிள்ளையார், தம் தந்தையின் காலை
வெட்டிய சண்டீசப் பிள்ளையார், கொடுஞ்செயலான
அதற்குப் பயனாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார்.
குறிப்புரை : இத்திருப்பதியில்
அருளிய பதிகம் `நூலடைந்த\' (தி.1 ப.48) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும்.
இப்பதிகத்தில்,
பீரடைந்த
பாலதாட்டப் பேணாத வன்றாதை
வேரடைந்து
பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த
மாலை சூட்டித் தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த
கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
எனவரும்
ஏழாவது திருப்பாடலை நினைவு கூருகின்றார் ஆசிரியர் சேக்கிழார்.
1.048 திருச்சேய்ஞலூர் பண் - பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நூல்அடைந்த
கொள்கையாலே நுன்அடி கூடுதற்கு
மால்அடைந்த
நால்வர்கேட்க நல்கிய நல்அறத்தை
ஆல்அடைந்த
நீழல்மேவி அருமறை சொன்னதுஎன்னே
சேல்அடைந்த
தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.?
பொழிப்புரை :சேல் மீன்கள் நிறைந்த
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! வேதம் முதலிய
நூல்களில் விதிக்கப்பட்ட முறைகளினால் உன் திருவடிகளை அடைதற்கு முயன்றும் அஞ்ஞானம்
நீங்காமையால் சனகாதி முனிவர்களாகிய நால்வர் உன்னை அடைந்து உண்மைப் பொருள் கேட்க, அவர்கள் தெளிவு பெறுமாறு கல்லால மர
நிழலில் வீற்றிருந்து அருமறை நல்கிய நல்லறத்தை எவ்வாறு அவர்கட்கு
உணர்த்தியருளினாய்? கூறுவாயாக.
பாடல்
எண் : 2
நீறுஅடைந்த
மேனியின்கண் நேரிழை யாள்ஒருபால்
கூறுஅடைந்த
கொள்கைஅன்றிக் கோல வளர்சடைமேல்
ஆறுஅடைந்த
திங்கள்சூடி அரவம் அணிந்ததுஎன்னே
சேறுஅடைந்த
தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :சேறு மிகுந்த
குளிர்ந்த வயல்களால் சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே!
திருநீறணிந்த தன் திருமேனியின்கண் உமையம்மை ஒருபால் விளங்க அழகியதாய் நீண்டு
வளர்ந்த சடைமேல் கங்கையையும் தன்னைச் சரணாக அடைந்த திங்களையும் சூடிப் பாம்பையும்
அணிந்துள்ள காரணம் யாதோ?
பாடல்
எண் : 3
ஊன்அடைந்த
வெண்தலையி னோடு பலிதிரிந்து
கான்அடைந்த
பேய்களோடு பூதங்க லந்துஉடனே
மான்அடைந்த
நோக்கிகாண மகிழ்ந்துஎரி ஆடல்என்னே
தேன்அடைந்த
சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :வண்டுகள் நிறைந்த
சோலைகள் செறிந்த திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே! ஊன் பொருந்திய வெண்மையான
தலையோட்டைக் கையில் ஏந்தி, உண் பலிக்குத்
திரிந்து காட்டில் வாழும் பேய்களோடு பூதகணங்களும் கலந்து சூழ, மான் போன்ற கண்ணை உடைய உமையம்மை காண
மகிழ்வோடு இடுகாட்டில் எரியாடுவது ஏன்?
பாடல்
எண் : 4
வீண்அடைந்த
மும்மதிலும் வில்மலையா, அரவின்
நாண்அடைந்த
வெஞ்சரத்தால் நல்எரி ஊட்டல்என்னே
பாண்அடைந்த
வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்துஅழகார்
சேண்அடைந்த
மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :பண்ணிசையோடு வண்டுகள்
பாடும் பசுமையான பொழில் சூழ்ந்ததும், அழகியதாய்
உயர்ந்த மாட வீடுகள் நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில் எழுந்தருளிய இறைவனே!
மும்மதில்களும் வீணடையுமாறு மலையை வில்லாகவும் அரவை அவ்வில்லின் நாணாகவும் கொண்டு
கொடிய அம்பால் பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்?
பாடல்
எண் : 5
பேய்அடைந்த
காடுஇடமாப் பேணுவது அன்றியும்போய்
வேய்அடைந்த
தோளிஅஞ்ச வேழம்உரி த்ததுஎன்னே,
வாய்அடைந்த
நான்மறை ஆறுஅங்கமோடு ஐவேள்வித்
தீஅடைந்த
செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :வாயினால் ஓதப்பெற்ற
நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் கற்று, ஐவகை
வேள்விகளை இயற்றி, தீப் பொருந்திய
சிவந்த கையினராய் விளங்கும் அந்தணர் வாழும் சேய்ஞலூர் மேயவனே! சுடுகாட்டை இடமாகக்
கொண்டு ஆடி உகப்பதோடு அன்றியும் சென்று மூங்கில் போன்ற தோளினை உடைய உமையம்மை அஞ்ச
யானையை உரித்தது ஏனோ?
பாடல்
எண் : 6
காடுஅடைந்த
ஏனம்ஒன்றின் காரணம் ஆகிவந்து
வேடுஅடைந்த
வேடன்ஆகி விசயனொடு எய்ததுஎன்னே,
கோடுஅடைந்த
மால்களிற்றுக் கோச்செங்க ணாற்குஅருள்செய்
சேடுஅடைந்த
செல்வர்வாழும் சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :கோடுகளோடு கூடிய
பெரிய யானைப் படைகளை உடைய கோச்செங்கட் சோழனுக்கு அருள் செய்தவனும், பெருமை பொருந்திய செல்வர்கள் வாழும்
திருச்சேய்ஞலூரில் மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக் காட்டுள் சென்று பதுங்கிய
பன்றி ஒன்றின் காரணமாக, தான் வேடன்
உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர் புரிந்தது ஏனோ?
பாடல்
எண் : 7
பீர்அடைந்த
பால்அதுஆட்டப் பேணாத வன்தாதை
வேர்அடைந்து
பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்தனக்குத்
தார்அடைந்த
மாலைசூட்டித் தலைமை வகுத்ததுஎன்னே
சீர்அடைந்த
கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :சிறப்புமிக்க மாடக்
கோயிலாய் விளங்கும் திருச்சேய்ஞலூரில் விளங்கும் இறைவனே! பசுவின் முலைக் காம்பின்
வழிச்சுரந்து நின்ற பாலைச் சண்டீசர் மணலால் தாபித்த இலிங்கத்துக்கு ஆட்டி வழிபட, அதனை விரும்பாது சினந்து பாற்குடத்தை
இடறிய தன் தந்தையின் காலைத் தடிந்த சண்டீசரின் பக்தியை மெச்சி உன் தாரையும்
மாலையையும் சூட்டி அவரைச் சிவகணங்களின் தலைவர் ஆக்கியது ஏனோ?
பாடல்
எண் : 8
மாஅடைந்த
தேர்அரக்கன் வலி தொலை வித்துஅவன்றன்
நாஅடைந்த
பாடல்கேட்டு நயந்துஅருள் செய்ததுஎன்னே,
பூஅடைந்த
நான்முகன்போல் பூசுரர் போற்றிசெய்யும்
சேஅடைந்த
ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :தாமரை மலரில்
விளங்கும் நான்முகன் போன்ற அந்தணர்கள் போற்றும், விடையை ஊர்தியாகக் கொண்டவனே!
திருச்சேய்ஞலூரில் மேவிய இறைவனே! குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது
வலிமையை அழித்து அவன் நாவினால் பாடிய பாடலைக் கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள்
பல செய்தது ஏனோ?
பாடல்
எண் : 9
கார்அடைந்த
வண்ணனோடு கனகம் அனையானும்
பார்அடைந்தும்
விண்பறந்தும் பாதம் முடிகாணார்,
சீர்அடைந்து
வந்துபோற்றச் சென்றுஅருள் செய்ததுஎன்னே,
தேர்அடைந்த
மாமறுகில் சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :தேர் ஓடும் அழகிய
வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர் மேவிய சிவனே! கருமை நிறம் பொருந்திய திருமால்
பொன்வண்ணனாகிய பிரமன் ஆகியோர் உலகங்களை அகழ்ந்தும் பறந்தும் சென்று அடிமுடிகளைக்
காணாராய்த் தம் தருக்கொழிந்து பின் அவர்கள் போற்ற அவர்பால் சென்று அருள் செய்தது
ஏனோ?
பாடல்
எண் : 10
மாசுஅடைந்த
மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி
நேசடைந்த
ஊணினாரும் நேசம் இலாததுஎன்னே,
வீசுஅடைந்த
தோகைஆட விரைகம ழும்பொழில்வாய்த்
தேசுஅடைந்த
வண்டுபாடும் சேய்ஞலூர் மேயவனே.
பொழிப்புரை :வீசி ஆடுகின்ற
தோகைகளை உடைய மயில்கள் ஆடுவதும்,
மணம்
கமழும் பொழில்களில் ஒளி பொருந்திய வண்டுகள் பாடுவதும் செய்யும் திருச்சேய்ஞலூரில்
மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும், மனத்தில்
வெறுப்பின்றிக் கஞ்சியை விரும்பி உணவாகக் கொள்வோரும் ஆகிய சமண புத்தர்கள் உன்பால்
நேசம் இலாததற்குக் காரணம் யாதோ?
பாடல்
எண் : 11
சேய்அடைந்த
சேய்ஞலூரில் செல்வன சீர்பரவித்
தோய்அடைந்த
வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன்
சாய்அடைந்த
ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்
வாய்அடைந்து
பாடவல்லார் வான்உலகு ஆள்பவரே.
பொழிப்புரை :முருகப் பெருமான்
வழிபட்ட சிறப்பினதாகிய திருச்சேய்ஞலூரில் விளங்கும் செல்வனாகிய சிவபிரானது புகழைப்
போற்றி நீர்வளம் சான்ற, வளமையான வயல்களால்
சூழப்பட்ட தோணிபுரத்தின் தலைவனும்,
நுட்பமான
ஞானம் மிக்கவனுமாகிய சம்பந்தனுடைய இன்னுரைகளை வாயினால் பாடி வழிபட வல்லவர் வானுலகு
ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment