திருந்துதேவன்குடி
(நண்டாங்கோயில் / திருத்தேவன்குடி)
சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.
மயிலாடுதுறையிலிருந்தும்
கும்பகோணத்திலிருந்தும் பேருந்தில் செல்லலாம்.
இறைவர்
: கர்க்கடகேசுவரர் (கர்க்கடகம்
- நண்டு)
இறைவியார்
: அருமருந்தம்மை, அபூர்வநாயகி.
தீர்த்தம் : பங்கய தீர்த்தம், காவிரிநதி.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - மருந்துவேண்
டில்லிவை
இத்தலம் நண்டு
பூசித்த தலமாதலின் 'நண்டாங்கோயில்' என்று வழங்குகிறது. இறைவன்
கர்க்கடகேசுவரர் (கர்க்கடகம் - நண்டு) என்று திருநாமங் கொண்டுள்ளார்.
காறாம்பசுவின் பால்
பதின்கலம் அபிஷேகம் செய்தால் இலிங்கத்தின் முடிமீது ஒரு பொன்னிற நண்டு ஊர்தல்
போன்ற தரிசனம் இன்றும் காணலாம்.
இத்தலம்
திருவிசலூருக்கு வடக்கே சிறிது தூரம் சென்றால் வயல்களுக்கு இடையில் கோயில் மட்டுமே
அமைந்துள்ளது.
திருந்துதேவன்குடி
என்னும் பெயருடைய ஊர் தற்போது இல்லை. கோயில் மட்டுமே உள்ளது. கோயில் இருந்த இடம்
நன்செய் நிலங்களாயின. கோயிலைச் சுற்றி அகழியுள்ளது. இப்பகுதி திருந்துதேவன்குடி
என்று சொல்லப்படுகிறது, மிகப் பெரிய
சிவாலயம்.
இத்தல இறைவன் அரசன்
ஒருவனுக்கு இருந்த கொடிய வியாதியை,
கிழவர்போல
வந்து தீர்த்தருளிய தலம்.
வழிபட்டு நோய்
நீங்கப்பெற்ற மன்னன் செய்த பிரதிஷ்டை 'அருமருந்தம்மை' யாகும். பின்னர் பழமையாக இருந்த
அம்பாளும் கண்டெடுக்கப்பட்டு அதுவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'அபூர்வநாயகி' திருமேனியாகும்.
'தேனும் வண்டும்
இசைபாடும் தேவன்குடி' என்னும் தேவாரத்
தொடருக்கேற்ப கோயிலில் தேனீக்களின் ரீங்கார ஒலி கேட்கிறது.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "வாஞ்சை உறும் சீவன் குடி உற, இச் சீர் நகர் ஒன்றே
எனும் சீர்த் தேவன் குடி மகிழ்ந்த தெள்ளமுதே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 294
வெங்கண்
விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப்
போற்றி,
தங்கிய
இன்னிசை கூடும்
தமிழ்ப்பதி கத்தொடை
சாத்தி,
அங்கண்
அமர்வார்தம் முன்னே
அருள்வே டம்காட்டத்
தொழுது,
செங்கண்மா
லுக்குஅரி யார்தம்
திருந்துதே வன்குடி
சேர்ந்தார்.
பொழிப்புரை : அப்பதியினின்றும்
புறப்பட்ட பிள்ளையார், கொடிய கண்களையுடைய
ஆனேற்றின் மீது எழுந்தருளும் `திரு வியலூர்\' இறைவரை வணங்கித் தங்கி, இனிய இசையுடைய தமிழ் மாலை பாடி, இத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள
இறைவர், தம்முன்பு அருள்
திருவேடம் நேரே காட்டத் தொழுது,
செங்கண்மாலுக்கு
அரியவரான இறைவரின் திருந்துதேவன் குடியினைச் சென்று அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 295
திருந்துதே
வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில்
எய்தி,
பொருந்திய
காதலில் புக்குப்
போற்றி வணங்கிப்
புரிவார்,
மருந்தொடு
மந்திரம் ஆகி
மற்றும் இவர்வேட
மாம்என்று,
அருந்தமிழ்
மாலை புனைந்தார்
அளவுஇல்ஞா னத்துஅமுது
உண்டார்.
பொழிப்புரை : உயிர்கள்
பிறவியலையாற்றினின்றும் திருந்துதற்கு ஏதுவாய தேவன்குடி என்ற திருப்பதியில்
நிலையாக வீற்றிருக்கும் இறைவனின் கோயிலை அடைந்து, பொருந்திய அன்பு மீதூரச் சென்று போற்றி
வணங்கி நினைவாராகி, இவர்தம் வேடம்
மருந்தும் மந்திரமும் ஆகும் என்று அளவில்லாத ஞானப்பாலையுண்ட பெற்றிமையால், பிள்ளையார் அரிய தமிழ் மாலையைச்
சாத்தினார்.
குறிப்புரை : இப்பதியில் அருளிய
பதிகம் `மருந்து வேண்டில் இவை' (தி.3 ப.25) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த
திருப்பதிகமாகும்.
3. 025 திருந்து தேவன்குடி பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
மருந்துவேண்
டில்இவை, மந்திரங் கள்இவை,
புரிந்துகேட்
கப்படும் புண்ணியங் கள்இவை,
திருந்துதே
வன்குடித் தேவர்தேவு எய்திய
அருந்தவத்
தோர்தொழும் அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :திருந்துதேவன்குடியில்
வீற்றிருக்கும் , தேவர்கட் கெல்லாம்
தேவனாக விளங்குபவனும் , அருந்தவத்தோர்களால்
தொழப்படுபவனுமான சிவபெருமானின் திருவேடங்கள் ( திருநீறு , உருத்திராக்கம் , சடாமுடி ) மருந்து வேண்டுபவர்க்கு
மருந்தாகவும் , மந்திரங்கள்
விரும்புவார்கட்கு மந்திரமாகவும் ,
சிவபுண்ணியச்
சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும் அமையும் .
பாடல்
எண் : 2
வீதிபோக்கு
ஆவன, வினையைவீட் டுவ்வன,
ஓதிஓர்க்
கப்படாப் பொருளைஓர் விப்பன,
தீதுஇல்தே
வன்குடித் தேவர்தேவு எய்திய
ஆதிஅந்
தம்இலா அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :தேவர்கட்கெல்லாம்
தேவனாக , தீமையில்லாத திருந்து
தேவன்குடியில் வீற்றிருக்கும் ஆதியந்தமில்லாச் சிவ பெருமானின் சிவவேடங்கள்
கோயிலுக்குச் செல்லும்போது அணியப்பட்டு அழகு தருவன . தீவினைகளைப் போக்குவன . கற்று
ஆராய்ந்தறிய முடியாத ஞானநூல்களின் நுண்பொருள்களைத் தெளிவாக உணரும்படி செய்வன .
பாடல்
எண் : 3
மானம்ஆக்
குவ்வன, மாசுநீக் குவ்வன,
வானைஉள்
கச்செலும் வழிகள் காட்டுவ்வன,
தேனும்வண்
டும்இசை பாடும்தே வன்குடி
ஆன்அஞ்சுஆ
டும்முடி அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :தேன் மணமும் , வண்டுகள் இன்னிசையும் விளங்கும்
திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும் , பசுவிலிருந்து
பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் சிவ பெருமானின் சிவவேடங்கள் , மன்னுயிர்களின் பெருமையை மேம்படச்
செய்வன . வினைகட்குக் காரணமான அஞ்ஞானமான மாசினை நீக்குவன . முக்திக்குரிய வழிகளைக்
காட்டுவன .
பாடல்
எண் : 4
செவிகள்ஆர்
விப்பன, சிந்தையுள் சேர்வன,
கவிகள்பா
டுவ்வன, கண்குளிர் விப்பன,
புவிகள்பொங்
கப்புனல் பாயும்தே வன்குடி
அவிகள்உய்க்
கப்படும் அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :இப்பூமியைச்
செழிக்கச் செய்யும் நீர்வளமுடைய திருந்துதேவன்குடியில் வீற்றிருந்து , வேள்வியின் அவிர்ப் பாகத்தை ஏற்று
உயிர்களை உய்யச் செய்யும் சிவபெருமானின் திருவேடங்களின் சிறப்புக்கள் கேட்கச்
செவிகட்கு இன்பம் தருவன . நினைக்கச் சிந்தையில் சீரிய கருத்துக்களைத் தோற்றுவிப்பன
. கவிபாடும் ஆற்றலைத் தருவன . சிவவேடக்காட்சிகள் கண்களைக் குளிர்விப்பன .
பாடல்
எண் : 5
விண்உலா
வும்நெறி, வீடுகாட் டும்நெறி,
மண்உலா
வும்நெறி, மயக்கம்தீர்க்
கும்நெறி,
தெண்ணிலா
வெண்மதி தீண்டுதே வன்குடி
அண்ணல்
ஆன்ஏறுஉடை அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :ஒளிரும் சந்திர
மண்டலத்தைத் தொடும் திருந்துதேவன்குடியில் இடப வாகனத்தில் வீற்றிருக்கும் சிவ
பெருமானின் திருவேடம் , இப்பூவுலகில் வாழும்
நன்னெறியைக் காட்டி , தத்துவங்களே தான் என
மயங்குவதைத் தீர்க்கும் . சிவலோகம் செல்லும் நெறிகாட்டும் . முக்தி நெறி காட்டும்
.
பாடல்
எண் : 6
பங்கம்என்
னப்படர் பழிகள்என் னப்படா,
புங்கம்என்
னப்படர் புகழ்கள்என் னப்படும்,
திங்கள்தோ
யும்பொழில் தீண்டுதே வன்குடி
அங்கம்ஆ
றும்சொன்ன அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :சந்திரனைத் தொடுமளவு
ஒங்கி வளர்ந்துள்ள, நந்தனவனச்
சோலையையுடைய திருந்துதேவன்குடியில் வேதத்தின் ஆறு அங்கங்களையும் விரித்துச் சொன்ன
சிவபெருமானின் திருவேடங்களை நினைப்பூட்டும் வகையில் சிவவேடம் கொள்பவர்களை
முன்னர்ப் பழிபாவங்கட்கு ஆளாயினோர் என்று எள்ளற்க . அவர்கள் உயர்வு வாயினால் சொல்ல
முடியாத அளவு புகழைத் தருவதாகக் கருதுக .
பாடல்
எண் : 7
கரைதல்ஒன்
றும்இலை கருதவல் லார்தமக்கு,
உரையில்ஊ
னம்இலை, உலகினில் மன்னுவர்,
திரைகள்பொங்
கப்புனல் பாயும்தே வன்குடி
அரையில்வெண்
கோவணத்து அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :அலைகள் வீசுகின்ற
ஆறுபாயும் திருந்து தேவன் குடியில் இடையில் வெண்ணிறக் கோவணத்தை அணிந்துள்ள சிவபெருமானின்
திருவேடங்கள் முழுதும் குணமேயாகும் . குற்றம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை .
அவ்வேடங்களை நினைத்து அவற்றின் பெருமையைச் சொல்பவர்களின் குறைகள் நீங்கும் .
அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வர் .
பாடல்
எண் : 8
உலகம்உட்
குந்திறல் உடைஅரக் கன்வலி
விலகுபூ
தக்கணம் வெருட்டும்வே டத்தின,
திலகம்ஆ
ரும்பொழில் சூழ்ந்ததே வன்குடி
அலர்தயங்
கும்முடி அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :சிறந்த நந்தனவனச்சோலை
சூழ்ந்த திருந்துதேவன் குடியில் மலர் அணிந்த முடியுடைய சிவபெருமானின் திருவேடம் , உலகத்தைத் தனக்குக்கீழ் அடக்கும் ஆற்றலுடைய
இராவணனது வலியும் பின்வாங்கத்தக்க வலியையுடைய பூதகணங்கள் சூழ விளங்குவது . எனவே
அவ்வேடம் அஞ்சத்தக்க பிற பொருள்கள் அடியார்களை வந்தடையாதபடி வெருட்டவல்லது .
பாடல்
எண் : 9
துளக்கம்இல்
லாதன, தூயதோற் றத்தன,
விளக்கம்ஆக்
குவ்வன, வெறிவண்டுஆ
ரும்பொழில்
திளைக்கும்தே
வன்குடித் திசைமுக னோடுமால்
அளக்கஒண்
ணாவண்ணத்து அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :வண்டுகள் மொய்க்கின்ற
மலர்களையுடைய நறுமணம் கமழும் நந்தனவனச் சோலை விளங்கும் திருந்துதேவன் குடியில் , பிரமனும் திருமாலும் காணவொண்ணாச்
சிவபெருமானின் திருவேடங்கள் மன்னுயிர்களை நிலைகலங்காமல் காக்கவல்லன . கண்டவர்
மனத்தைத் தூய்மைசெய்யும் தோற்றத்தை உடையன . அஞ்ஞானத்தை நீக்கி ஞானவிளக்கம் தருவன .
பாடல்
எண் : 10
செருமரு
தண்துவர்த் தேர்அமண் ஆதர்கள்
உருமரு
வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்,
திருமரு
வும்பொய்கை சூழ்ந்ததே வன்குடி
அருமருந்து
ஆவன அடிகள்வே டங்களே.
பொழிப்புரை :நெருங்கிய மருதமர
இலையின் குளிர்ந்த துவர் தோய்ந்த ஆடையணிந்த புத்தர்களும் , சமணர்களும் இறைவனை உணரும் அறிவற்றவர்கள்
. அருகில் நெருங்க முடியாத தோற்றமுடைய அவர்களின் உரைகளை ஏற்க வேண்டா . இலக்குமி
வீற்றிருக்கும் தாமரை மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருந்துதேவன் குடியில்
வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவேடம் , உயிர்களின் பிறவிப்பிணிக்கு அருமருந்தாகி
இன்பம் பயக்கும் .
பாடல்
எண் : 11
சேடர்தே
வன்குடித் தேவர்தே வன்தனை
மாடம்ஓங்
கும்பொழில் மல்குதண் காழியான்
நாடவல்
லதமிழ் ஞானசம் பந்தன
பாடல்பத்
தும்வல்லார்க்கு இல்லையாம் பாவமே.
பொழிப்புரை :தேவர்கள் தொழும்
திருந்துதேவன்குடியில் வீற்றிருந்தருளுகின்ற தேவர்கட்கெல்லாம் தேவனான சிவ
பெருமானைப் பற்றி , ஓங்கிய
மாடமாளிகைகளும் , சோலைகளும் நிறைந்த , குளிர்ச்சிபொருந்திய சீகாழியில்
அவதரித்த ஞானசம்பந்தன் விரும்பும் இன்தமிழில் அருளிய பத்துப் பாடல்களையும் ஓத
வல்லவர்கட்குப் பாவம் இல்லை .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment