திருவியலூர்




திரு வியலூர்
(திருவிசநல்லூர் / திருவிசலூர்)

     சொழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம்.

         கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோயில் செல்லும் வழியில் திருவிசநல்லூர் உள்ளது.

     காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றான திருவிடைமருதூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலத்தில் இருந்து வேப்பத்தூர் செல்லும் வழியில் மேற்கில் 8 கி.மீ. தொலைவு.

     இத்திருத்தலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற திருத்தலம் உள்ளது.

     கும்பகோணத்திலிருந்து திருவியலூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு.


இறைவர் :       யோகானந்தீசுவரர், புராதனேசுவரர்சிவயோகநாதசுவாமி,                                                                                      வில்வாரண்யேசுவரர்.

இறைவியார் :   சாந்தநாயகி, சௌந்தரநாயகி.

தீர்த்தம் :         சடாயுதீர்த்தம்.

தேவாரப் பாடல்கள் :       சம்பந்தர் - குரவங்கமழ்

     கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமர விநாயகர், பலீபீடம், நந்தி, அதன் பின் கொடிமரம் உள்ளது. சிவாலயங்களில் முதலில் கொடிமரமும் அதன் பின் நந்தி இருப்பது வழக்கம். இங்கு மாறி இருக்கிறது. வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. உள் வாயிலைக் கடந்து சென்றால் இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். சித்திரை 1,2,3 தேதிகளில் சூரிய ஒளிக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது. கருவறை தேவ கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை மேற்குச் சுற்றில வள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி உள்ளது. பஞ்சலிங்கங்கள், ஸ்தல விநாயகர் சந்நிதி ஆகியவையும் உள்ளன.

         சுவாமி சந்நிதிக்கு தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள் சந்நிதியும் இத்தலத்தில் மிகவும் விசேஷமானது. இங்கே லட்சுமியை தன் மடியில் அமர வைத்துக் கொண்டு இலட்சுமிநாரயணனாக அருள்பாலிக்கிறார். இந்த இலட்சுமிநாராயணப் பெருமாளை, அவரின் ஜென்ம நட்சத்திரமான திருவோணத்தன்றும், சிரவணம், ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் விலகும், திருமணத் தடை விலகும், மேலும் புத்திர பாக்கியம் ஏற்படும் என்பது ஐதீகம்.

         இத்தலத்திலுள்ள சதுர்கால பைரவர் சந்நிதியும் மிக விசேஷமானது. யுகத்திற்கு ஒரு பைரவராக நான்கு பைரவர் காட்சி தருகிறார். வளர்பிறை, தேய்பிறை அஷ்டதி திதிகளிலும், ஞாயிற்றுக்கிழமை இராகு காலத்திலும் மிளகு தீபம் ஏற்றி சதுர்கால பைரவர் சந்நிதியில் வழிபடுவது மிகவும் நல்லது.

         கிருத்திகை, ரோஷ்ணி, மிருகசீரிஷம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த ரிஷப ராசிக்காரர்களும், மற்றும் ரிஷக லக்னத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்து கொள்ள மிகச் சிறந்த தலம் இதுவாகும்.

         கோயிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு அதைச்சுற்றிலும் காலை 6 முதல் மாலை 6 மணிவரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம் ஆகும். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

         தன் வீட்டு கிணற்றில் கங்கையை பெருகி வரச் செய்த ஸ்ரீதர அய்யாவாள் பிறந்த தலம் என்ற பெருமையுடையது திருவிசநல்லூர் திருத்தலம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று ஸ்ரீதர அய்யாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கா ஸ்நானம் செய்ய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள்.

         சைவசித்தாந்த சாத்திர நூல்களுள் ஒன்றாகிய 'திருவுந்தியார் ' பாடிய 'திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் ' அவதரித்த தலம்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓவில் மயல் ஊர் மனம் போல் வயலில் கயல் ஊர் வியலூர் சிவானந்த வெற்பே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 293
கஞ்சனூர் ஆண்டதம் கோவைக்
         கண்ணுற்று, இறைஞ்சிமுன் போந்து,
மஞ்சுஅணை மாமதில் சூழும்
         மாந்துறை வந்து வணங்கி,
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி,
         அங்குஅகன்று, அன்பர்முன் ஆகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
         திருமங் கலக்குடி சேர்ந்தார்.

         பொழிப்புரை : திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த `திருமாந்துறை' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற `திருமங்கலக்குடியை' அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 294
வெங்கண் விடைமேல் வருவார்
         வியலூர் அடிகளைப் போற்றி,
தங்கிய இன்னிசை கூடும்
         தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி,
அங்கண் அமர்வார்தம் முன்னே
         அருள்வே டம்காட்டத் தொழுது,
செங்கண்மா லுக்குஅரி யார்தம்
         திருந்துதே வன்குடி சேர்ந்தார்.

         பொழிப்புரை : அப்பதியினின்றும் புறப்பட்ட பிள்ளையார், கொடிய கண்களையுடைய ஆனேற்றின் மீது எழுந்தருளும் `திரு வியலூர்\' இறைவரை வணங்கித் தங்கி, இனிய இசையுடைய தமிழ் மாலை பாடி, இத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவர், தம்முன்பு அருள் திருவேடம் நேரே காட்டத் தொழுது, செங்கண்மாலுக்கு அரியவரான இறைவரின் திருந்துதேவன் குடியினைச் சென்று அடைந்தார்.

         குறிப்புரை : திருவியலூரில் அருளிய பதிகம் `குரவம் கமழ்' (தி.1 ப.13) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் 5ஆவது பாடலில் `கண்ணார்தரும் உருவாகிய கடவுள் இடம்' என வருவது கொண்டு, `அருள்வேடம் காட்டத் தொழுது' என ஆசிரியர் அருளியிருப்பர் போலும்.

1.13 திருவியலூர்                      பண் – நட்டபாடை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
குரவம்கமழ் நறுமென்குழல் அரிவைஅவள் வெருவப்
பொருவெங்கரி படவென்றுஅதன் உரிவைஉடல் அணிவோன்,
அரவும்மலை புனலும்இள மதியும்நகு தலையும்
விரவும்சடை அடிகட்குஇடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :குரா மலரின் மணம் கமழ்வதும், இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலையுடைய உமையம்மை அஞ்ச, தன்னோடு பொருதற்கு வந்த சினவேழத்தைக் கொன்று, அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும், அரவு, கங்கை, பிறை, வெண்தலை ஆகியவற்றை அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 2
ஏறுஆர்தரும் ஒருவன்,பல உருவன், நிலை ஆனான்,
ஆறுஆர்தரு சடையன்,அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன், மடவாள்
வீறுஆர்தர நின்றான்இடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :எருதின்மேல் வருபவனும், பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும், என்றும் நிலையானவனும், கங்கையாற்றைச் சடையில் நிறுத்தியவனும், அனல் போன்ற சிவந்த மேனியனும், அன்புடையவனும், பகைவராய் வந்த அசுரர்தம் முப்புரங்கள் எரியுமாறு வில்லை வளைத்தவனும், உமையம்மை பெருமிதம் கொள்ளப் பல்வகைச் சிறப்புக்களோடு நிற்பவனுமாய சிவபிரானுக்குரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 3
செம்மென்சடை அவைதாழ்வுற மடவார்மனை தோறும்
பெய்ம்மின்பலி எனநின்றுஇசை பகர்வார்அவர் இடமாம்,
உம்மென்றுஎழும் அருவித்திரள் வரைபற்றிட உரைமேல்
விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :சிவந்த மென்மையான சடை தாழத் தாருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள்தோறும் சென்று உணவிடுங்கள் என்று இசை பாடியவனாய சிவபிரானது இடம், உம் என்ற ஒலிக்குறிப்போடு அருவிகள் குடகுமலை முகடுகளிலிருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால் புகழோடு செழித்து வளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 4
அடைவுஆகிய அடியார்தொழ, அலரோன்தலை அதனில்
மடவார்இடு பலிவந்து உணல் உடையான்அவன் இடமாம்
கடைஆர்தர அகில்ஆர்கழை முத்தம்நிரை சிந்தி
மிடைஆர்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :அடியவர்கள் தத்தம் அடைவின்படி தொழப் பிரமகபாலத்தில் மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம், பள்ளர்கள் வயல்களில் நிறையவும், நிறைந்த மூங்கில்கள் முத்துக்களை வரிசையாகச் சொரியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும் நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 5
எண்ஆர்தரு பயனாய்,அயன் அவனாய்,மிகு கலையாய்,
பண்ஆர்தரு மறையாய், உயர் பொருளாய்,இறை யவனாய்,
கண்ஆர்தரும் உருவாகிய கடவுள்இடம் எனலாம்
விண்ணோரொடு மண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :தியானத்தின் பயனாய் இருப்பவனும், நான்முகனாய் உலகைப் படைப்போனும், எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோனும் சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோனும், உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும், எல்லோர்க்கும் தலைவனானவனும், கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம் விண்ணவராகிய தேவர்களும் மண்ணவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர்வளம் நிரம்பிய வியலூர் ஆகும்.


பாடல் எண் : 6
வசைவில்கொடு வருவேடுவன் அவனாய்நிலை அறிவான்
திசைஉற்றவர் காணச்செரு மலைவான் நிலை அவனை
அசையப்பொருது அசையாவணம் அவனுக்குஉயர் படைகள்
விசையற்குஅருள் செய்தான்இடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து, தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற்பொருட்டு எண்திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்த அவன் வருந்தும்படி, அவனோடு செருமலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்குப் பாசுபதம் முதலிய படைக்கலங்களை அருளியவனாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 7
மான்ஆர்அரவு உடையான், இரவு உடையான்,பகல் நட்டம்,
ஊன்ஆர்தரும் உயிரான்,உயர் விசையான்,விளை பொருள்கள்
தான்ஆகிய, தலைவன் என நினைவார் அவர் இடமாம்
மேல்நாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :தலைமையான அரவை அணிந்தவனும், தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும், பகலில் நட்டம் ஆடுபவனும், ஊனிடை உயிராய் விளங்குபவனும், உயரிய வீரம் உடையவனும், அனைத்து விளை பொருள்களாய் நிற்கும் தலைவன் என நினைத்தற்குரியவனுமாகிய சிவபிரானது இடம், புண்ணியப் பயனால் மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெறும் நீர் வளம் சான்ற வியலூராகும்.


பாடல் எண் : 8
பொருவார்எனக்கு எதிர்ஆர்எனப் பொருப்பை எடுத்தான் தன்
கருமால்வரை கரம்தோள் உரம் கதிர்நீள்முடி நெரிந்து
சிரம்ஆயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :எனக்கெதிராகச் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த இராவணனின் வலிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஒளி பொருந்திய நீண்ட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலால் அவன் கதறுமாறு, செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின் விரலால் அடர்த்த சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 9
வளம்பட்டுஅலர் மலர்மேல்அயன் மாலும் ஒரு வகையால்
அளம்பட்டு அறி ஒண்ணாவகை அழல்ஆகிய அண்ணல்
உளம்பட்டுஎழு தழல் தூண்அதன் நடுவேஒரு உருவம்
விளம்பட்டுஅருள் செய்தான்இடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :வளமையோடு அலர்ந்த தாமரை மலர் மேல் உறையும் நான்முகனும், திருமாலும் தமக்குள் முடி அடி காண்பவர் பெரியவர் என்ற ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமாய் வருந்தி முயன்றும் அறிய வொண்ணாதவாறு அழலுருவாகி நின்ற அண்ணலும், அவ்விருவர்தம் முனைப்பு அடங்கி வேண்டத் தழல் வடிவான தூணின் நடுவே ஓருருவமாய் வெளிப்பட்டு அருள் செய்தவனுமாகிய சிவபிரானது இடம், நீர்வளம் மிக்க வியலூராகும்.


பாடல் எண் : 10
தடுக்கால் உடல் மறைப்பார் அவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேஉரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்,
கடல்சேர்தரு விடம் உண்டுஅமுது அமரர்க்குஅருள் செய்த
விடைசேர்தரு கொடியான்இடம் விரிநீர்விய லூரே.

         பொழிப்புரை :ஓலைப் பாயால் உடலை மறைப்பவராகிய சமண முனிவர்களுடனும், பொன்னிற ஆடையால் உடலை மூடிப்பிடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத்தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்புக் கொள்ளார். கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு, அமுதை அமரர்க்களித்தருளிய விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர்வளமிக்க வியலூராகும். அதனைச் சென்று வழிபடுமின்.


பாடல் எண் : 11
விளங்கும்பிறை சடைமேல்உடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
துளங்குஇல்தமிழ் பரவித்தொழும் அடியார்அவர் என்றும்
விளங்கும்புகழ் அதனோடுஉயர் விண்ணும்உடை யாரே.

         பொழிப்புரை :விளங்கும் பிறையைச் சடைமேலுடைய விகிர்தனாய சிவபிரானது வியலூரை, இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப்பரவித் தொழும் அடியவர், எக்காலத்தும் விளங்கும் புகழோடு,  உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவராவர்.

                                             திருச்சிற்றம்பலம்




No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவ...