காஞ்சீபுரம் - 0489. தெரியல் அம் செச்சை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தெரியல் அம் செச்சை (காஞ்சீபுரம்)

முருகா!
எனது துன்பமெல்லாம் தீர்ந்து,
மேலான தவநிலையை அடைய அருள்.


தனதனந் தத்தத் தத்தன தத்தம்
     தனதனந் தத்தத் தத்தன தத்தம்
          தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான


தெரியலஞ் செச்சைக் கொத்துமு டிக்கும்
     பரிதிகந் தத்தைச் சுற்றந டத்துஞ்
          சிறைவிடுஞ் சொர்க்கத் துச்சுர ரைக்கங் ......கையில்வாழுஞ்

சிறுவனென் றிச்சைப் பட்டுப ஜிக்கும்
     படிபெரும் பத்திச் சித்ரக வித்வஞ்
          சிறிதுமின் றிச்சித் தப்பரி சுத்தம் ...... பிறவாதே

பரிகரஞ் சுத்தத் தக்கப்ர புத்வம்
     பதறியங் கட்டப் பட்டனர் தத்வம்
          பலவையுங் கற்றுத் தர்க்கம தத்வம் ...... பழியாதே

பரபதம் பற்றப் பெற்றஎ வர்க்கும்
     பரவசம் பற்றிப் பற்றற நிற்கும்
          பரவ்ரதம் பற்றப் பெற்றிலன் மற்றென் ......துயர்போமோ

சரியுடன் துத்திப் பத்திமு டிச்செம்
     பணதரங் கைக்குக் கட்டிய நெட்டன்
          தனிசிவன் பக்கத் தற்புதை பற்பந் ...... திரிசூலந்

தரிகரும் பொக்கத் தக்கமொ ழிச்சுந்
     தரியரும் பிக்கப் பித்தத னத்தந்
          தரிசுரும் பிக்குப் பத்ரையெ வர்க்குந் ...... தெரியாத

பெரியபண் டத்தைச் சத்திய பித்தன்
     பிரிதியுண் கற்புப் பச்சையெ றிக்கும்
          ப்ரபையள்தண் டிற்கைப் பத்மம டப்பெண் ......கொடிவாழ்வே

பிரமரண் டத்தைத் தொட்டதொர் வெற்பும்
     பிளவிடுஞ் சத்திக் கைத்தல நித்தம்
          பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


தெரியல் அம் செச்சைக் கொத்து முடிக்கும்,
     பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும்,
          சிறைவிடும் சொர்க்கத்துச் சுரரை, கங் ......கையில்வாழும்

சிறுவன் என்றுஇச்சைப் பட்டு பஜிக்கும்
     படி,பெரும் பத்தி, சித்ர கவித்வம்,
          சிறிதும் இன்றிச் சித்தப் பரிசுத்தம் ...... பிறவாதே,

பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம்,
     பதறி அங்கு அட்டப் பட்டனர், தத்வம்
          பலவையும் கற்று, தர்க்க மதத்து வம்பு ...... அழியாதே,

பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும்
     பரவசம் பற்றி, பற்று அற நிற்கும்
          பரவ்ரதம் பற்றப் பெற்றிலன், மற்று என் ......துயர்போமோ?

சரிஉடன் துத்திப் பத்தி முடி, செம்
     பணதரம், கைக்குக் கட்டிய நெட்டன்,
          தனிசிவன், பக்கத்து அற்புதை, பற்பம், ...... திரிசூலம்

தரி, கரும்பு ஒக்கத் தக்க மொழிச் சுந்-
     தரி, அரும்பிக் கப்பித்த தனத்து அந்-
          தரி, சுரும்பு இக்குப் பத்ரை, எவர்க்குந் ...... தெரியாத

பெரியபண் தத்தை, சத்திய பித்தன்
     பிரிதி உண் கற்பு பச்சை எறிக்கும்
          ப்ரபையள், தண்டில் கை, பத்ம மடப் பெண் ......கொடிவாழ்வே!

பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும்
     பிளவிடும், சத்திக் கைத்தல! நித்தம்
          பெருமிதம் பெற்றுக் கச்சியில் நிற்கும் ...... பெருமாளே.


பதவுரை

      சரி உடன் --- ஒழுங்குடன்

     துத்திப் பத்தி முடி --- படப்பொறி வரிசையைத் தலையில் கொண்டதும்,

     செம் பணதரம் --- செவ்விய படத்தை உடையதுமான பாம்பை

     கைக்குக் கட்டிய நெட்டன் --- கையில் கட்டியுள்ள பெருமை உடையவரும்,

     தனி சிவன் பக்கத்து அற்புதை --- ஒப்பற்ற சிவமூர்த்தியுமாகிய இறைவனுடைய இடப் பக்கத்தில் இருக்கும் அற்புதத் தலைவியும்,

      பற்பம் திரிசூலம் தரி --- திருநீற்றையும், முத்தலைச் சூலத்தையும் தரித்துள்ளவளும்,

     கரும்பு ஒக்கத் தக்க மொழிச் சுந்தரி --- கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய அழகியும்,

     அரும்பி கப்பித்த தனத்து அந்தரி --- தோன்றிப் பருத்துள்ள மார்பகங்களை உடைய முடிவில்லாதவளும்,

     சுரும்பு இக்குப் பத்ரை --- வண்டுகள் மொய்க்கும் கரும்பை ஏந்திய காளியும்,

      எவர்க்கும் தெரியாத பெரிய பண் தத்தை --- யாரும் அறிய ஒண்ணாத சிறந்த பண் போன்ற மொழியை உடைய கிளி போன்றவளும்,

     சத்திய பித்தன் --- சத்தியத்தில் மிகுந்த ஈடுபாடுடைய சிவ பெருமானுடைய

     பிரிதி உண் கற்புப் பச்சை எறிக்கும் ப்ரபையள் --- அன்பை உட்கொண்ட கற்புடைய, பச்சை நிறக் கதிர் வீசும் பேரொளியாளும்,

      தண்டில் கை --- வீணை ஏந்திய கரத்தினளும்,

     பத்ம மடப் பெண் கொடி வாழ்வே --- தாமரை மலரில் வீற்றிருக்கும் மடமங்கையும், கொடி போன்றவளும் ஆகிய பார்வதியின் குழந்தையே!

      பிரமர் அண்டத்தைத் தொட்டது ஒர் வெற்பும் பிளவிடும் சத்திக் கைத்தல --- பிரமதேவருடைய உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தினரே!

      நித்தம் பெருமிதம் பெற்று --- எந்நாளும் பெருமை பெற்று

     கச்சியில் நிற்கும் பெருமாளே --- காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      செச்சைக் கொத்து அம் தெரியல் முடிக்கும் --- வெட்சிப் பூங்கொத்துக்களால் தொடுத்த அழகிய மாலையைச் சூடிக் கொள்பவனும்,

      பரி திக் அந்தத்தைச் சுற்ற நடத்தும் --- குதிரையாகிய மயிலை திக்குகளின் முடிவு வரையில் சுற்றும்படி நடத்துபவனும்,

      சொர்க்கத்துச் சுரரை சிறை விடும் --- விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும்,

     கங்கையில் வாழும் சிறுவன் என்று இச்சைப் பட்டு பஜிக்கும்படி --- கங்கா நதியில் வாழ்ந்தவருமான குழந்தை என்று அன்பு கொண்டு பஜனை செய்து பாடும்படியான

      பெரும் பத்தி --- பெரிய பக்தியும்,

     சித்ர கவித்வம் --- அழகிய கவி பாடும் திறமையும்

     சிறிதும் இன்றிச் சித்தப் பரிசுத்தம் பிறவாதே --- கொஞ்சமும் இல்லாது, சித்தத்தில் தூய்மை நிலை தோன்றாமல்,

      பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம் --- பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கும்படியான, பெரிய பதவியை அடைந்து,

     பதறி அங்கு அட்டம் பட்டனர் தத்வம் பலவையும் கற்று --- பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர்களின் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று,

     தர்க்க மதத்து வம்பு அழியாதே --- தருக்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழியாமல்,

      பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும் --- மேலான நிலையை அடையப் பெற்ற எவரும்

     பரவசம் பற்றி --- மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள,

     பற்று அற நிற்கும் --- பற்று நீங்கி நிற்கும்

     பர வ்ரதம் பற்றப் பெற்றிலன் --- மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே,

     மற்று என் துயர் போமோ --- அப்படி உள்ள அடியேனது துன்பம் போமோ?

பொழிப்புரை
                 
         ஒழுங்குடன் படப்பொறி வரிசையைத் தலையில் கொண்டதும், செவ்விய படத்தை உடையதுமான பாம்பை கையில் கட்டியுள்ள பெருமை உடையவரும், ஒப்பற்ற சிவமூர்த்தியுமாகிய இறைவனுடைய இடப் பக்கத்தில் இருக்கும் அற்புதத் தலைவியும், திருநீற்றையும், முத்தலைச் சூலத்தையும் தரித்துள்ளவளும், கரும்புக்கு ஒப்பு என்று சொல்லத் தக்க சொற்களை உடைய அழகியும், தோன்றிப் பருத்துள்ள மார்பகங்களை உடைய முடிவில்லாதவளும், வண்டுகள் மொய்க்கும் கரும்பை ஏந்திய காளியும், யாரும் அறிய ஒண்ணாத சிறந்த பண் போன்ற மொழியை உடைய கிளி போன்றவளும், சத்தியத்தில் மிகுந்த ஈடுபாடுடைய சிவ பெருமானுடைய அன்பை உட்கொண்ட கற்புடைய வாய்ந்த, பச்சை நிறக் கதிர் வீசும் பேரோளியாளும், வீணை ஏந்திய கரத்தினளும், தாமரை மலரில் வீற்றிருக்கும் மடமங்கையும், கொடி போன்றவளும் ஆகிய பார்வதியின் குழந்தையே!

         பிரமதேவருடைய உலகத்தைத் தொடும்படி வளர்ந்திருந்த ஒப்பற்ற கிரெளஞ்ச மலையைப் பிளந்து எறிந்த சக்தி வேலாயுதத்தைக் கொண்ட திருக் கரத்தினரே!

         எந்நாளும் பெருமை பெற்று காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

         மாலையாக அழகிய வெட்சிப் பூங்கொத்துக்களை சூடிக் கொள்பவனும், குதிரையாகிய மயிலை திக்குகளின் முடிவு வரையில் நடத்துபவனும், விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டவனும், கங்கா நதியில் வாழ்ந்தவருமான குழந்தை என்று அன்பு கொண்டு பஜனை செய்து பாடும்படியான பெரிய பக்தியும், அழகிய கவி பாடும் திறமையும் கொஞ்சமும் இல்லாது, சித்தத்தில் தூய்மை நிலை தோன்றாமல், பரிவாரங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கும்படியான, பெரிய பதவியை அடைந்து, பரபரப்புடன் அவ்விடத்தில் பக்கத்தில் சூழ்ந்துள்ளவர்களின் உண்மை நீதிகள் பலவற்றையும் கற்று, தருக்கம் பேசி, மதங்களின் வம்புப் பேச்சுக்களில் அழியாமல், மேலான நிலையை அடையப் பெற்ற எவரும் மிக்க மகிழ்ச்சியைக் கொள்ள, பற்று நீங்கி நிற்கும் மேலான தவ நிலை அடையப் பெற்றிலனே. அப்படி உள்ள எனது துன்பம் போமோ?

விரிவுரை

         தெரியல்அம் செச்சைக் கொத்து முடிக்கும் பரிதி கந்தத்தைச் சுற்ற நடத்தும் சிறைவிடும் சொர்க்கத்துச் சுரரை கங்கையில் வாழும் சிறுவன் ---

கொத்து முடிக்கும், சுற்ற நடத்தும், சுரரைச் சிறைவிடும், கங்கையில் வாழும் சிறுவன் என்று கொண்டு கூட்டுக.

செச்சை - வெட்சி மலர்.  முருகவேளுக்குப் பிரியமான மலர்.
திகந்தம் - திக் அந்தம். திசைகளின் முடிவு.

இச்சைப்பட்டு பஜிக்கும்படி ---

முருகன் திருவடியில் அன்புகொண்டு அப் பெருமானுடைய துதிகளைக் கூறிப் பஜனை புரிய வேண்டும்.

விருப்பொடு உன்புகழ் துதிசெய விழைகிலன்....      --- (உனைத்தினம்) திருப்புகழ்.


பெரும் பத்திச் சித்ரகவித்வம் சிறிதும் இன்றி ---

பெரிய அன்பும், கவிபாடும் திறமையும் ஒரு சிறிதும் இல்லாதவன்.

வரகுண தேவரின் அன்பைப் பாராட்டுகின்ற பட்டினத்துச் சுவாமிகள், "பெரிய அன்பின் வரகுண தேவர்" என்றார்.  அழகிய கவிபாடும் திறம் அமையவேண்டும்.

சித்தப் பரிசுத்தம் பிறவாமல் ---

மனதில் தூய்மை தோன்ற வேண்டும்.

மனத்துக்கண் மாசுஇலன்ஆதல் அனைத்து அறன்,
ஆகுல நீர பிற.                          ---  திருக்குறள்.

தூய மனதில் இறைவன் உறைவான்.

பரிகரம் சுத்தத் தக்க ப்ரபுத்வம் ---

எப்போதும் அருகில் பரிவாரங்கள் சூழ இருக்கும் தலைமைப் பதவி.

பதறியங் கட்டப்பட்டனர் தத்வம் பலவையும் கற்று ---

பதறி அங்கு அட்டப்பட்டனர்.  அட்டம் - பக்கம்.

தட்டைஇடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுஉண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்
வட்டமுலையாள் உமையாள்பங்கர் மன்னி உறைகோயில்
அட்டம்ஆளித் திரள்வந்துஅணையும் அண்ணா மலையாரே.  ---  திருஞானசம்பந்தர்.

பரபரப்புடன் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உண்மைகளை உணர்ந்து அவர்களுடன் தருக்கம் பேசி, மதங்களின் வம்பு மொழிகளைப் பேசி வீணே பலர் அழிகின்றார்கள்.

பரபதம் பற்றப் பெற்ற எவர்க்கும் பரவசம் பற்றிப் பற்றற நிற்கும் பரவ்ரதம் பற்றப் பெற்றிலன், மற்றுஎன்
துயர்போமோ ---

இந்த மூன்று வரிகளும் இனிமையானவை.  சொல்லச் சொல்லத் தித்திக்கின்றன.

உயர்ந்த பதவியைப் பெற்ற எவரும் மகிழுமாறு பற்றற்று நிற்கும் மேலான தவநிலையை அடியேன் பெற்றேனில்லை.  அங்ஙனம் பெறாத எனக்குத் துயர் போகாது.  ஆதலால், அடியேன் அந்த மேலான தவநிலையை அடைய அருள் புரிவீர் என்று வேண்டுகின்றார்.

சரியுடன் துத்திப் பத்தி ---

துத்தி - பாம்பின் படத்தில் உள்ள பொறி.

ஒழுங்காகப் படப்பொறி உள்ள பாம்பைச் சிவபெருமான் கரத்தில் கட்டிக் கொண்டு இருக்கின்றார்.

பற்பம் ---

பற்பம் - பஸ்மம் - திருநீறு.  பாவத்தைப் பொடி செய்வதால் பஸ்மம் எனப்பட்டது.
  
அரும்பிக் கப்பித்த தனத்து அந்தரி ---

அரும்பி கப்பித்த.  வெளிப்பட்டுக் கிளைத்துள்ள திருத் தனம்.

சுரும்பிக்குப் பத்ரை ---

சுரும்பு இக்கு பத்ரை.  வண்டுகள் மொய்த்துள்ள கரும்பைக் கையில் ஏந்தியவள் பார்வதி.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
                                                                  ---  அபிராமி அந்தாதி.

பெரிய பண் தத்தை ---

பெரிய பண் தத்தை.  தத்தை - கிளி.  பண் - இராகம்.  சிறந்த பண் போன்ற மொழிகளை உடைய கிளி போன்றவள்.

சத்திய பித்தன் ---

சிவபிரான் சத்தியத்தில் பித்துக் கொண்டவர்.

தண்டில் கை ---

தண்டு - வீணை.
 
கருத்துரை

கச்சியம்பதி மேவும் கந்தவேளே, அடியேன் துயர் போக அருள் புரிவாய்.


12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...