காஞ்சீபுரம் - 0490. நச்சரவம் என்று




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நச்சுஅரவம் என்று (காஞ்சீபுரம்)

முருகா!
உன்னையே விரும்பும் பெண்ணாகிய என்னை
அஞ்சேல் என்று இப்போதே அருள்.


தத்ததன தந்த தத்ததன தந்த
     தத்ததன தந்த ...... தனதான


நச்சரவ மென்று நச்சரவ மென்று
     நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும்

நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு
     நத்திரைவ ழங்கு ...... கடலாலும்

இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே

எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி
     இத்தனையி லஞ்ச ...... லெனவேணும்

பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை
     பச்சைமலை யெங்கு ...... முறைவோனே

பத்தியுட னின்று பத்திசெயு மன்பர்
     பத்திரம ணிந்த ...... கழலோனே

கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு
     கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா

கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர்
     கைத்தளைக ளைந்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று
     நச்சு உமிழ் களங்க ...... மதியாலும்,

நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு
     நத்திரை வழங்கு ...... கடலாலும்,

இச்சை உணர்வு இன்று இச்சை என வந்த
     இச்சிறுமி நொந்து ...... மெலியாதே,

எத்தனையி நெஞ்சில் எத்தனம் முயங்கி
     இத்தனையில் அஞ்சல் ...... எனவேணும்.

பச்சைமயில் கொண்டு பச்சை மற மங்கை
     பச்சை மலை எங்கும் ...... உறைவோனே!

பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர்
     பத்திரம் அணிந்த ...... கழலோனே!

கச்சு இவர் குரும்பை கச்சவர் விரும்பு
     கச்சியில் அமர்ந்த ...... கதிர்வேலா!

கற்பக வனம் கொள் கற்பக விசும்பர்
     கைத்தளை களைந்த ...... பெருமாளே.


பதவுரை

      பச்சை மயில் கொண்டு --- பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு,

     பச்சை மற மங்கை --- பச்சை நிறமுடைய வேடப் பெண்ணான வள்ளியம்மையுடன்

      பச்சை மலை எங்கும் உறைவோனே --- பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவரே!

      பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் --- அன்பு நெறியிலே நிலைத்து நின்று அன்பு செய்கின்ற அடியார்கள்

      பத்திரம் அணிந்த கழலோனே --- அர்ச்சிக்கின்ற இலைகளை அணிந்துள்ள திருவடிகளை உடையவரே!

      கச்சு இவர் குரும்பை --- இரவிக்கை அணிந்துள்ள, இளம் தென்னங் குரும்பு போன்ற கொங்கைகளை

     கச்சவர் விரும்பு --- கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர்கள் விரும்புகின்ற

      கச்சியில் அமர்ந்த கதிர்வேலா --- காஞ்சிபுரத்தில் எழுந்தருளி உள்ள ஒளி மிகுந்த வேலவரே!

      கற்பக வனம் கொள் கற்பு அக விசும்பர் --- கற்பகக் காட்டை உடையவர்களும், நீதிநெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின்

      கைத்தளை களைந்த பெருமாளே --- கையில் உள்ள விலங்குகளை அறுத்து எறிந்த பெருமையில் சிறந்தவரே!

      நச்சு அரவம் மென்று நச்சு அரவம் என்று --- விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு நஞ்சு உடைய பாம்பு என்றே கூறும்படி

      நச்சு உமிழ் களங்க மதியாலும் --- என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும்,

      நத்தொடு முழங்கு கனத்தொடு முழங்கு --- சங்குகள் செய்யும் பேரோலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும்,

      நத்திரை வழங்கு கடலாலும் --- சிறந்த அலைகளை வீசும் கடலாலும்,

      இச்சை உணர்வு இன்று, இச்சை என வந்த --- இச்சையினால் அறிவு மயங்கி, தேவரீர் மீது காதல் எனக் கூறி வந்த

      இச்சிறுமி நொந்து மெலியாதே --- இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல்,

      எத்தனையி நெஞ்சில் எத்தனம் முயங்கி --- எத்தனையோ எண்ணங்களை மனதில் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய இவளை

     இத்தனையில் அஞ்சல் எனவேணும் --- இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள் செய்ய வேண்டுகின்றேன்.

பொழிப்புரை

         பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமுடைய வேடப் பெண்ணான வள்ளியம்மையுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவரே!

         அன்பு நெறியிலே நிலைத்து நின்று அன்பு செய்கின்ற அடியார்கள் அர்ச்சிக்கின்ற இலைகளை அணிந்துள்ள திருவடிகளை உடையவரே!

         இரவிக்கை அணிந்துள்ள, இளம் தென்னங் குரும்பு போன்ற கொங்கைகளைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர்கள்  விரும்புகின்ற  காஞ்சீபுரத்தில் எழுந்தருளி உள்ள ஒளி மிகுந்த வேலவரே!

         கற்பகக் காட்டை உடையவர்களும், நீதிநெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கையில் உள்ள விலங்குகளை அறுத்து எறிந்த பெருமையில் சிறந்தவரே!

         விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு நஞ்சு உடைய பாம்பு என்றே கூறும்படி என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், சிறந்த அலைகளை வீசும் கடலாலும், இச்சையினால் அறிவு மயங்கி, தேவரீர் மீது காதல் எனக் கூறி வந்த. இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய இவளை, இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள் செய்ய வேண்டுகின்றேன்.

விரிவுரை

இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் அமைந்தது.

நச்சரவமென்று நச்சரவமென்று நச்சுமிழ் களங்க மதியாலும் ---

காதல் கொண்டவர்க்கு சந்திரனுடைய குளிர்ந்த அமுத கிரணம் நெருப்பு மழை பொழிவது போல் வெப்பத்தைக் கொடுத்து வேதனை செய்யும்.

நச்சு உரவம் மென்று...  நச்சுதல் - விரும்புதல்.

சந்திரனை விழுங்க வேண்டும் என்று விரும்பிச் சென்று, கேது என்ற பாம்பு சந்திரனை மென்று விழுங்கி வெளியே விடும்.  நஞ்சை உடைய பாம்பு என்று கூறும்படி சந்திரன் கொடுமை புரிகின்றான்.  பாம்பு விழுங்கி வெளியே விட்டபடியால், குளிர்ந்த சந்திரனும் விஷப் பாம்பு போல் காமுகரை எரிக்கின்றான்.

நத்தொடு முழங்க னத்தொடு முழங்கு ---

நத்து - சங்கு.  நந்து என்ற சொல் நத்து என வந்தது.

கடலில் சங்குகள் பேரொலியுடன் முழங்கிக் கொண்டு இருக்கும்.

கனம் - மேகம்.  கடலில் நீர் பருகச் செல்லும் மேகம் இடித்துப் பேரொலி செய்யும்.

நத்திரை வழங்கு கடலாலும் ---

நத்திரை - சிறந்த அலைகள்.  ந என்ற எழுத்து, சிறப்பு என்ற பொருளில் வந்தது.

நக்கீரன், நச்செள்ளையார், நப்பின்னை என்ற சொற்கள் போல என அறிக.

கடல் ஒலி காமுகர்க்கு வேதனையைத் தரும்.

தொல்லை நெடு நீலக் கடலாலே..    --- (துள்ளுமத) திருப்புகழ்.

இச்சை உணர்வின்றி ---

தலைவன் மீது அளவற்ற காதல் மீதூர்ந்தபடியால், தலைவி உணர்வு இழந்து நிற்கின்றாள்.

இச்சை என வந்த ---

முருகா, உன் மீது இச்சை கொண்டு, உன்னை நாடி வந்திருக்கின்ற இப் பெண்.

இச் சிறுமி நொந்து மெலியாதே ---

இந்தச் சிறு பெண்ணாகிய நான் சந்திரனாலும், கடல் ஒலியாலும், வெந்து நொந்து மெலிவு அடையாவண்ணம் காத்தருள்க.

எத்தனையி நெஞ்சில் எத்தன முயங்கி இத்தனையில் அஞ்சல் என வேணும் ---

எத்தனம் - முயற்சி.  முருகா, இவள் உன்னை மணவாளனாக அடைய வேண்டும் என்று உள்ளத்தில் எத்தனையோ முயற்சிகளை நினைந்து மேற்கொண்டிருக்கின்றாள்.  ஆதலின், இப்பொழுதே இவளை அஞ்சேல் என்று கூறி அருள் புரிய வேண்டும்.

ஆன்மாவை நாயகியாகவும், முருகனை நாயகனாகவும் வைத்து அமைந்தது இப் பாடல்.

பச்சை மயில் ---

மயில் மரகதத்தினால் செய்தது போல் பச்சை ஒளியுடன் விளங்கும்.

பச்சை மறமங்கை ---

வள்ளியம்மை பச்சை நிறம் உடையவர். மறமங்கை - மறம் - வீரம்.  வீரம் பொருந்திய வேடர் குலப் பாவை.

பச்சை மலை எங்கும் உறைவோனே ---

பசுமையான மரம் செடி கொடிகள் நிறைந்த மலைகள் எல்லாவற்றிலும் முருகவேள் எழுந்தருளி இருக்கின்றான்.

திரைகள் போல்அலை மோதிய சீதள
     குடக காவிரி நீள்அலை சூடிய
          திரிசி ராமலை மேல்உறை வீர,கு ...... றிஞ்சிவாழும்
மறவர் நாயக, ஆதிவி நாயகர்
     இளைய நாயக, காவிரி நாயக,
          வடிவின் நாயக, ஆனைதன் நாயக, ......எங்கள்மானின்
மகிழும் நாயக, தேவர்கள் நாயக,
     கவுரி நாயக னார்குரு நாயக,
          வடிவ தாமலை யாவையும் மேவிய ...... தம்பிரானே.   ---  (தறையின்) திருப்புகழ்.

பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் ---

பத்தி - பக்தி.  இது வடசொல்.  அன்பு எனப்படும்.  அன்பு நெறியில் உறுதியுடன் நிற்பவர்கள் அடியார்கள்.

பத்திரம் அணிந்த கழல் வீரா ---

பத்திரம் - பச்சிலை. அடியார்கள் அன்புடன் முருகன் திருவடியில் பச்சிலைகளை அருச்சித்தால், அப் பச்சிலைக்கு மெச்சி அருள் புரியும் கருணைத் தெய்வம்.

போதும் பெறாவிடில் பச்சிலை உண்டு, புனல் உண்டு, எங்கும்
ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே, இணையாகச் செப்பும்
சூதும் பெறாமுலை பங்கர்,தென் தோணி புரேசர்,வண்டின்
தாதும் பெறாத அடித் தாமரை சென்று சார்வதற்கே.    ---  பட்டினத்தார்.

யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;
யாவர்க்கும் ஆம் உண்ணும் போதொரு கைப்பிடி;
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே.  --- திருமந்திரம்.

பத்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன் நின்று அருளித்
திகழ்ந்து உளது ஒருபால் திருவடி....  ---  பதினோராம் திருமுறை.

பத்தியாகிப் பணைத்தமெய் அன்பொடு
நொச்சி ஆயினும் கரந்தை ஆயினும்
பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 
கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்
திருவிடை மருத, திரிபு ராந்தக,..     ---  பதினோராம் திருமுறை.


வன்திறல் உந்தையோடு மாவேட்டை ஆடிப் பண்டுஇக்
குன்றிடை வந்தோம் ஆக, குளிர்ந்த நீர் இவரை ஆட்டி,
ஒன்றிய இலைப் பூச் சூட்டி, ஊட்டி,முன் பறைந்து ஓர் பார்ப்பான்
அன்றுஇது செய்தான், இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்.  ---  பெரியபுராணம்.

கல்லால் எறிந்தும், கை வில்லால் அடித்தும், கனிமதுரச்
சொல்லால் துதித்தும், நல் பச்சிலை தூவியும், தொண்டர் இனம்
எல்லாம் பிழைத்தனர், அன்பு அற்ற நான்இனி ஏது செய்வேன்?
கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கண் குருமணியே.

எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,
புல் ஆயினும், ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி
நில்லேன், நல் யோக நெறியும் செயேன், அருள் நீதி ஒன்றும்
கல்லேன், எவ்வாறு, பரமே! பரகதி காண்பதுவே.                 ---  தாயுமானார்.

     "எவன் பத்தியோடு, பயனை எதிர்பார்க்காமல், எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோ, அன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலை, மலர் முதலியவற்றை நான் சகுண சொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்" என்று பகவத் கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

கச்சு இவர் குரும்பை கச்சவர் ---

கச்சு - வார்.  குரும்பை - தென்னங் குரும்பை. இது குரும்பை போன்ற கொங்கையைக் குறிக்கின்றது.  உவம ஆகுபெயர்.

மாதர்களின் நலத்தை வெறுத்தவர்கள் பெரியோர்கள்.  அவர்களால் விரும்பப்படுகின்ற ஞானமூர்த்தி முருகவேள்.

அரவுஅகல் அல்குலார்பால் ஆசை நீத்தவர்க்கே வீடு
தருவம் என்று அளவில் வேதம் சாற்றிய தலைவன்...   ---  திருவிளையாடல் புராணம்.

கற்பக வனங்கொள் கற்பக விசும்பர் ---

கற்பகம் - நினைத்ததைத் தரும் தேவலோக மரம்.  இந்தக் கற்பக மரங்கள் காடாக இருக்கும் வளமை மிகுந்த லோகம் தேவர் உலகம். கற்பு அகம். கல்வி நலத்தை உள்ளத்தே கொண்டவர்கள் தேவர்கள்.

இத் திருப்புகழில் அடிதோறும் வழி எதுகை வருவது மிகவும் இனிமையாக உள்ளது. அன்றியும், இத் திருப்புகழில் ஓவ்வோர் அடியின் ஈற்றடிகள் சேர்ந்து ஒரு தனிப்பாடலாகும்.

நச்சுமிழ் களங்க                   மதியாலும்
         நத்திரை வழங்கு           கடலாலும்
இச்சிறுமி நொந்து               மெலியாதே
         இத்தனையில் அஞ்சல்   எனவேணும்
பச்சைமலை எங்கும்             உறைவோனே
         பத்திரம் அணிந்த         கழலோனே
கச்சியில் அமர்ந்த                கதிர்வேலா
         கைத்தளை களைந்த     பெருமாளே.

கருத்துரை

கச்சியில் நிற்கும் கதிர்வேலா, உன்னை விரும்பும் தலைவியாகிய என்னை அஞ்சேல் என்று அருள் செய்.
        

12ந துறந்தார் பெரு்மை

“ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும் ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம் தனையடிமை கொண்டவனே தான்.” — நீதிவெண்பா ...