6. பெண்ணின் பெருமை சொல்லப் போமோ?
முக்கணர்தண்
டலைநாட்டில் கற்புடைமங்
கையர்மகிமை மொழியப் போமோ?
ஒக்கும்எரி
குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே
டனை எரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற
அமுது அளித்தாள் ஒருத்தி,
எழு
பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கெனவே
நினைத்தனையோ? கொங்கணவா!'
என்று ஒருத்தி கூறி னாளே!
இதன் பொருள் ---
முக்கணர் தண்டலை நாட்டிற் கற்புடை
மங்கையர் மகிமை மொழியப் போமோ --- முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள
தண்டலை என்னும் திருத்தலத்தில்,
நீள்நெறி
என்னும் திருக்கோழை உடைய நாட்டிலே கற்புடைய மாதரின்
பெருமையைச் சொல்ல முடியுமோ?,
ஒருத்தி
ஒக்கும் எரி குளிர வைத்தாள் --- ஒருத்தி
நெருப்பைக் குளிரச் செய்தாள்,
ஒருத்தி வில் வேடனை எரித்தாள் --- ஒருத்தி
வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள்,
ஒருத்தி மூவர் பக்கம் உற அமுது
அளித்தாள் --- ஒருத்தி மும்மூர்த்திகளையு
தன் அருகில் சிறு குழந்தைகளாக அமரச்
செய்து பால் ஊட்டினாள்,
ஒருத்தி எழுபரி தடுத்தாள் --- ஒருத்தி
கதிரவனுடைய ஏழு குதிரைகளையும் தடுத்தாள்,
பண்டு ஒருத்தி, ‘கொங்கணவா! கொக்கு எனவே நினைத்தனையோ' என்று
கூறினாள் --- முற்காலத்தில் ஒருத்தி, "கொங்கணவரே! என்னையும் நீர் முன்பு எரித்த
கொக்கு என்று நினைத்தீரோ?"
என்று
கூறினாள்.
எரி குளிர வைத்தவள்
சீதை
--- அநுமான் இராம பிரான் ஆணைப்படி சீதையைத் தேடிச் சென்று இலங்கையில் அசோக வனத்தில்
கண்டான். அவனை அரக்கர் பற்றிச் சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை
தீக்கடவுளை வேண்டி அநுமானைச் சுடாது இருக்குமாறு செய்தாள்.
வில்வேடனை எரித்தவள்
தமயந்தி
--- காட்டில் நளனைப் பிரிந்த தமயந்தி கலக்கமுடன் அலையும்போது ஒரு வேடன் அவளைக் கற்பழிக்க
நெருங்கினான். தமயந்தி, சீற்றமுடன் அவனைப்
பார்த்தாள்.
அவ்வளவில் வில் வேடன் எரிந்து சாம்பர் ஆனான்.
மூவர் பக்கம் உற
அமுது அளித்தவள் அனுசூயை --- பிரமன் திருமால் சிவன் என்னும்
முத்தேவரும் அனுசூயை கற்பைச் சோதிக்க எண்ணித் துறவிகளாக வடிவெடுத்துச் சென்றனர்.
அனுசூயை அவர்களை அதிதிகளாக வரவேற்றாள். அவர்கள் தங்களுக்கு அவள் ஆடை இல்லாமல் வந்து உணவு அளிக்க வேண்டும் என்றனர். அவள் உடனே
தனது கற்பின் வலிமையால் அவர்களைச் சிறு குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டு, தன் ஆடைகளைக் களைந்து விட்டு வந்து பாலூட்டினாள்.
மும்மூர்த்திகளும் அவளுடைய கற்பின் திறத்தை வியந்தனர்.
எழுபரி தடுத்தவள் நளாயினி --- நளன் மகளான
இவள் தன் கணவரைக் கூடையில்
நள்ளிரவிலே அவர் விரும்பிய தாசி வீட்டிற்குச் சுமந்து செல்லுகையில் கழுவில் இருந்த மாண்டவியரின் காலில் கூடை தட்டியது. வலிபொறுக்க
முடியாத மாண்டவியர், தன் கணவன்
பணிவிடையில் உள்ள ஊக்கத்தாலே தன்னைக் கவனியாமல் சென்றாள் என்று சினந்து, ‘விடிந்தவுடன் நளாயினி தன் தாலியை
இழப்பாள்' எனச் சபித்தார்.
நளாயினி திடுக்கிட்டுப், ‘பொழுது விடியாமல்
போகட்டும்' என்று சபித்தாள்.
அவ்வாறே விடியாமற் போனதால், தேவர்கள் தலையிட்டு
நளாயினியின் கணவன் இறவா வண்ணம் மாண்டவியரைக் கூறச்செய்து பொழுது விடியுமாறு
நளாயினியைக் கூறச்செய்தனர்.
‘கொக்கு என்று நினைத்தனையோ?' என்றவள் வாசுகி ---
போகரின்
மாணவராகிய கொங்கணவர் தவம் புரிந்து கொண்டிருந்தார். நண்பகலிலே ஊருக்குள் சென்று
உணவு வாங்கி உண்பது அவரது வழக்கம். ஒருநாள் அவ்வாறு செல்கையில், வழியில் ஒரு மரநிழலிலே தங்கினார்.
ஒரு கொக்கு மரத்திலிருந்து அவர் மேல் எச்சம்
இட்டது. அவர் அந்தக் கொக்கை உற்றுப்
பார்த்தார். அக் கொக்கு உடனே எரிந்தது. தன் தவச்சிறப்பை
வியந்து தற்பெருமை கொண்ட அவர், திருவள்ளுவர்
வீட்டிலே உணவுக்குச் சென்றார். திருவள்ளுவர் மனைவி, இவர் வாயிலில் வந்து நின்று கேட்டவுடனே
வராமல் தன் கணவருக்கு உணவு படைத்தபின் உணவு கொண்டு வந்தாள். சினம் கொண்ட கொங்கணவர்
அவளை உறுத்துப் பார்த்தார். வாசுகி அம்மையார் நகைத்துக் "கொக்கு என்று
நினைத்தனையோ, கொங்கணவா' என்று கூறினாள். வாசுகி தனது கற்புத் திறத்தால்
அறிந்து கூறினாள்.
பின்வரும் பெரிய புராணப் பாடல் கருத்தை மனத்தில்
இருத்துக. திரு நீலநக்க நாயனார் புராணத்தில் வருவது.
ஆய்ந்த
மெய்ப்பொருள் நீறுஎன வளர்க்கும்அக் காப்பில்
ஏய்ந்த
மூன்றுதீ வளர்த்து உளார் இருபிறப் பாளர்
நீந்து
நல்லறம் நீர்மையின் வளர்க்கும் அத் தீயை
வாய்ந்த
கற்புடன் நான்குஎன வளர்ப்பர்கண் மடவார்.
பொழிப்புரை : ஆராய்ந்து தெளிந்த
உண்மைப் பொருளாவது திருநீறே என்று எண்ணி, வளர்த்து
வருகின்ற அக்காப்போடு, பொருந்திய முத்தீயை
அங்குள்ள இரு பிறப்பாளர்கள் வளர்த்து வருவர், பிறவிப் பெருங்கடலினின்றும் நீந்தத்
துணை நிற்கும் நல்ல அறங்களைப் போல,
வளர்ந்து
வரும் அத்தீயினை, தமக்கென அமைந்த
கற்புத் தீயையும் கூட்டி அங்குள்ள பெண்கள் தீ நான்கென வளர்ப்பர்.
"தற்காத்து" என்னும் திருவள்ளுவ நாயனார்
சொல்லுக்கு, "கற்பினின்றும் வழுவாமல்
தன்னைக் காத்து" என்று பரிமேலழகர் வரைந்துள்ள பொருளையும் கருத்தில் கொள்க.