அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
விலைக்கு மேனியில்
(திருக்கோணமலை)
முருகா!
உன்னைப் பாட வைத்த அடியேனை
உன் திருவடியில் சேர்த்து
அருள்.
தனத்த
தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன
தனத்த தானன தனத்தான தானன ...... தனதான
விலைக்கு
மேனியி லணிக்கோவை மேகலை
தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ
...... மயலூறி
மிகுத்த
காமிய னெனப்பாரு ளோரெதிர்
நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு
......கொடியேனைக்
கலக்க
மாகவெ மலக்கூடி லேமிகு
பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு
......மொருவாழ்வே
கதிக்கு
நாதனி யுனைத்தேடி யேபுக
ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ......
தரவேணும்
மலைக்கு
நாயக சிவக்காமி நாயகர்
திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ்
.....தருவேளே
வசிட்டர்
காசிபர் தவத்தான யோகியர்
அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு
......முருகோனே
நிலைக்கு
நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு
பூதியில் ......வருவோனே
நிகழ்த்து
மேழ்பவ கடற்சூறை யாகவெ
யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
விலைக்கு
மேனியில் அணிக் கோவை, மேகலை,
தரித்த ஆடையும், மணிப்பூணும் ஆகவெ,
மினுக்கு மாதர்கள் இடக் காமம் மூழ்கியெ, ...... மயல்ஊறி,
மிகுத்த
காமியன் எனப் பார் உளோர் எதிர்
நகைக்கவே, உடல் எடுத்தே, வியாகுல
வெறுப்பு அதாகியெ உழைத்தே விடாய்படு
......கொடியேனை,
கலக்கம்
ஆகவெ மலக் கூடிலே, மிகு
பிணிக்குள் ஆகியெ, தவிக்காமலே, உனை
கவிக்குள் ஆய் சொலி, கடைத் தேறவே செயும் ......ஒருவாழ்வே!
கதிக்கு
நாதன் நீ, உனைத் தேடியே, புகழ்
உரைக்கும் நாய்எனை அருட்பார்வை ஆகவெ,
கழற்குள் ஆகவெ, சிறப்பான தாய் அருள் ...... தரவேணும்.
மலைக்கு
நாயக! சிவக்காமி நாயகர்
திருக்குமாரனெ! முகத்து ஆறு தேசிக!
வடிப்ப மாதொரு குறப்பாவையாள் மகிழ்
.....தருவேளே!
வசிட்டர், காசிபர், தவத்து ஆன யோகியர்,
அகத்ய மாமுனி, இடைக்காடர், கீரனும்
வகுத்த பாவினில் பொருள் கோலமாய் வரு
......முருகோனே!
நிலைக்கு
நான்மறை மகத்தான பூசுரர்
திருக்கொணாமலை தலத்து ஆரு கோபுர
நிலைக்குள், வாயினில், கிளிப்பாடு பூதியில் ......வருவோனே!
நிகழ்த்தும்
ஏழ்பவ கடல் சூறை ஆகவெ,
எடுத்த வேல் கொடு பொடித்தூள் அதா எறி,
நினைத்த காரியம் அநுக்கூலமே புரி
...... பெருமாளே.
பதவுரை
மலைக்கு நாயக --- மலைகளுக்குத் தலைவனாக
விளங்குபவரே!
சிவகாமி நாயகர் --- உமாதேவியாருடைய
கணவராகிய சிவபெருமானுடைய,
திருக்குமாரனே --- சிறந்த செல்வப் புதல்வரே!
முகத்து ஆறு தேசிக --- ஆறு
திருமுகங்களையுடைய பரமகுரு நாதரே!
வடிப்ப மாது --- அழகின் மிக்க
பெண்ணரசியும்,
ஒரு --- ஒப்பற்றவரும் ஆகிய,
குற பாவையாள் --- வள்ளியம்மையார்,
மகிழ்தரு வேளே --- உள்ளம் உவந்து
விரும்புகின்றவரே!
வசிட்டர் --- வசிட்ட முனிவர்,
காசிபர் --- காசிப முனிவர்,
தவத்து ஆன யோகியர் --- தவத்திற் சிறந்த
சிவயோகியர்,
அகத்ய மாமுனி --- பெருமைமிக்க அகத்திய
முனிவர்,
இடைக்காடர் --- இடைக்காடர்,
கீரனும் --- நக்கீரதேவர் ஆகிய ஆன்றோர்கள்,
வகுந்த பாவினில் --- வகுத்துக் கூறிய
அருட்பாடல்களில், பொருள் கோலமாய் வரும் முருகோனே --- பொருள்
வடிவாகத் தோன்றும் முருகக் கடவுளே!
நிலைக்கும் நால்மறை --- என்றும்
நிலைத்திருப்பவனாகிய வேதங்கள் நான்கிலும் வல்ல,
மகத்து ஆன பூசுரர் --- பெருமைமிக்க
அந்தணர்கள் வாழுகின்ற,
திருக்கொணாமலை --- திருகொணாமலை
என், தலத்து ஆர் (உ-சாரியை) கோபுர நிலைக்குள்
வாயினில் --- திருத்தலத்தில் அருமையான கோபுரவாயிலுக்குள்,
கிளிப்பாடு பூதியில் --- கிளிப்பாடு பூதி என்னும்
இடத்தில்,
வருவோனே --- எழுந்தருளி வருபவரே!
நிகழ்த்தும் ஏழ் பவ கடல் ---- உயிரைத்
தொழிற்படுத்துகின்ற எழுவகைப் பிறவிகளாகிய கடல்கள்,
சூறை ஆகவெ --- கொள்ளை போக,
எடுத்த வேல்கொடு --- திருக்கரத்து ஏந்திய
வேலாயுதத்தைக் கொண்டு,
பொடி தூளது ஆ எறி --- மிகவும் பொடிபட்டு
போகுமாறு எறிந்த,
நினைத்த காரியம் --- அடியேங்கள் எண்ணிய
கருமங்கள்,
அநுகூலமே புரி --- அநுகூலமே ஆகுமாறு
(ஏ-தேற்றம்) அருள்புரிகின்ற,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
விலைக்கு மேனியில் ---
விலை செய்யும் உடம்பில்,
அணி கோவை --- அழகிய மாலைகளும்,
மேகலை --- மேகலை என்ற ஆபரணமும்,
தரித்த ஆடையும் --- உடுத்த ஆடையும்,
மணிபூணும் ஆகவெ --- இரத்தினங்கள் பதித்த
ஆபரணங்களும் பூண்டு,
மினுக்கும் மாதர்கள் இட காம மூழ்கியெ ---
மினுக்குகின்ற விலை மகளிரிடத்தில் ஆசைவைத்து
காமியன் என --- மிகுந்த விருப்பமுடையவன்
என்று,
பாருளோர் எதிர் நகைக்கவே --- உலகில்
உள்ளவர்கள் முன் நகைக்குமாறு,
உடல் எடுத்தே --- உம்பெடுத்து,
வியாகுல வெறுப்பது ஆகியெ --- துன்புற்று
அதனால் வெறுப்பை அடைந்து,
உழைத்தே விடாய் படு --- மீளமீள உலக வாழ்வில்
உழைத்து தாமமுறுகின்ற,
கொடியேனை --- கொடியவனாகின்ற அடியேனை,
கலக்கம் ஆகவெ --- அறிவு கலக்கமுற்று,
மல கூடிலே --- மலக்கூடாகிய இவ்வுடம்புடன்
கூடி,
மிகு பிணிக்கு உள் ஆகியெ --- மிகுந்த
நோய்களுக்கு உள்ளாகி,
தவிக்காமலே --- தவியாமற் படிக்கு,
உனை கவிக்குளாய் சொலி --- தேவரீரை தமிழ்க்
கவிதைகளைச் சொல்லி
கடைத்தேறவே செயும் --- ஆவி ஈடேறுமாறு
செய்தருளிய,
ஒரு வாழ்வே --- நிகரற்ற வாழ்வாக விளங்குபவரே!
கதிக்கு நாதன் நி --- பரகதிக்குத்
தலைவர் நீரே,
உனை தேடியே --- தேவரீரைத் தேடி,
புகழ் உரைக்கும் நாயேனை --- திருப்புகழ்
பாடும் நாயேனை,
அருள் பார்வையாகவெ --- திருவருட் பார்வையாகப்
பார்த்து,
கழற்குள் ஆகவே --- தேவரீருடைய
திருவடிக்குள்ளாகுமாறு,
சிறப்பு ஆன --- சிறந்ததாகிய,
தாய் அருள் --- தாயின் கருணையை யொத்த
திருவருளை,
தர வேணும் --- தந்தருள்வீர்.
பொழிப்புரை
மலைகளுக்குத் தலைவரே!
உமையம்மையாருடைய கொழுநராகிய
சிவபெருமானுடைய திருப்புதல்வரே!
ஆறு திருமுகங்களையுடைய குருநாதரே!
ஒப்பற்ற அழகின்மிக்க வள்ளியம்மையார்
விரும்பி மகிழும் மணவாளரே!
வசிட்டர், காசிபர், தவத்திற் சிறந்த சிவயோகியர், பெருமையின்மிக்க அகத்திய முனிவர், இடைக்காடர், நக்கீரதேவர் ஆகிய அறிவான் ஆன்ற
பெரியோர்கள் வகுத்துப் பாடிய பாடல்களில் உட்பொருள் வடிவமாகத் தோன்றுபவரே!
நிலைத்துள்ள வேதங்கள் நான்கையும்
ஓதியுணர்ந்த சிறந்த அந்தணர்கள் வாழுகின்ற திருக்கோணமலையென்னும் திருத்தலத்தில்
விளங்குகின்ற கோபுரவாயிலில் கிளிப்பாடுபூதி யென்னும் இடத்தில் எழுந்தருளியுள்ளவரே!
(ஆன்மாவை இங்குமங்குமாக)
தொழிற்படுத்துகின்ற தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, விலங்கு, மனிதர், தேவர் என்ற எழுவகைப் பிறவிகளாகிய
ஏழுகடல்களும் புழுதிபட்டுக் கொள்ளைபோக வேலாயுதத்தை விடுகின்றவரும், நினைத்த காரியங்களை அநுகூலமே
புரிந்தருளுகின்றவரும் ஆகிய பெருமையின் மிக்கவரே!
விலைசெய்கின்ற உடம்பில் அழகிய மாலைகள்
உடுக்கின்ற ஆடை இரத்தினாபரணங்கள் இவற்றை யணிந்து மினுக்குகின்ற விலைமகளிரிடத்தில்
காமுற்று மயக்கக் கடலில் முழுகி அதிலேயே ஊறி மிகுந்த விருப்பினனென்று உலகிலுள்ளோர்
சிரிக்குமாறு உடம்பெடுத்து துன்ப மிகுதியால் வெறுப்புற்று உலக மாயையில் உழைத்து
அதிதாக முற்றகொடியவ னாகிய அடியேனை,
அறிவு
கலக்குற்று மலபாண்டமாகிய உடலுடன் கூடி மிகுந்த நோய் வாய்ப்பட்டு தவிக்காமற்
படிக்கு தேவரீரைத் தமிழ்க்கவிபாடி கடைத்தேறச் செய்தருளிய எம்பெருமானே! தேவரீரே
முத்தி உலகிற்குத் தலைவர்; உமது திருவடியையே
தேடி திருப்புகழ் பாடுகின்ற அடியேனைத் திருவருட் பார்வையாகப் பார்த்து உமது
சரணாரவிந்தங்களுக்கு ஆளாகுமாறு சிறந்த தாய் அருளைத் தந்து ஆட்கொள்வீர்.
விரிவுரை
விலைக்கு
மேனியி.................மயிலூறி ---
விலைக்குமேனி
என்பதற்கு விலைபடுத்துகின்ற மேனி என்பது கருத்து. மேகலை என்பது இடையில்
பெண்களணியும் ஓர் ஆபரணம். மினுக்குமாதர் - விலைமகளிர். “விலைமகட்கழகு தன் மேனி
மினுக்குதல்” என்பது நறுந்தொகை. விலைமாதரிடத்தில் விருப்பத்தை வைத்து அவர்களது
ஆசைப் பெருங்கடலுளாழ்ந்து அதிலேயே ஊறிக் கொண்டிருத்தல்.
மிகுத்த
காமியன்.....................கொடியேனை ---
உலகத்தவர்கள்
இவன், “மிகுந்த காமி” என்று
எள்ளி நகையாட சிறிதும் நாணமின்றி உலாவியும், அதனால் மிகுந்த வியாகுலமுற்றும், நல்ல விஷயத்தில் வெறுப்புற்றும், குடும்பத்திற்காகவும் வயிற்றுக்காகவும், உழைத்து உழைத்து அருள் தாக மடையாமல்
காமதாகமடைந்து தடுமாறி விலை மதிக்கமுடியாத மாணிக்கமாகிய வாணானள வீணாக்குவதைச்
சுவாமிகள் வெறுக்கின்றனர்.
உனை
கவிக்குளாய் சொலி கடைத்தேறவே செயு ---
செந்தமிழ்ப்
பரமாசிரியராகிய செவ்வேட் பரமன் அருணகிரியார்க்கு அருட்கோலங் காட்டி, “அறியும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறி என இமைப் பொழுதில் வாழ்வித்து” “நம் திருப்புகழைப் பாடுதி” என்று
பணித்தருளினார். அருணகிரிநாத சுவாமிகள் கடல் மடை திறந்த வெள்ளம் போல், வேதாகமபுராணேதிகாசக் கருத்துக்களை யெல்லாம்
அமைத்து, தொனிக்க இனிப்பதும், சித்தத்தில் சிந்திக்குற் தொறும்
தித்திப்பதும், நினைத்தது மளிப்பதும், கருங்கல் மனத்தையும் கரைந்துருகச்
செய்வதும், கருவறுத்துப் பிறவாட்
பெற்றியை எளிதில் தருவதுமாகிய பதினாறாயிரந் தமிழ் வேதத் திருப்புகழ்ப் பாடல்களைப்
பாடியருளினார்.
“அற்புதத் திருப்புகழ்
தேன் ஊற ஓதி எத்திசைப் புறத்தினும்
ஏடு ஏவு ராஜதத்தினைப் பணித்ததும் மறவேனே”
--- (ஆனாதஞான) திருப்புகழ்
கதிக்கு
நாதனி:-
கதிக்கு
நாதன் நீ. நீ என்பது குறுகல்விகாரம் பெற்றது; கதி-முத்தி. முத்தி உலகிற்கு முதல்வன்
முருகக் கடவுளே. பரகதியும் அவரே.
“தெரிசன பரகதி யானாய்
நமோநம” --- (அவகுண) திருப்புகழ்
தாயருள்
தரவேணும்:-
தாய்
மகவினிடம் காட்டுங் கருணை நிகரற்றது; பயன்
கருதாதது; இறைவனுடைய கருணைக்கு
ஏகதேச உவமையாக உள்ளது. இறைவனைப் “பொன்னே மணியே” என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.
“பொன்னே மணியே பொருளே அருளே
மன்னே மயிலே றியவா னவனே” --- கந்தர்அநுபூதி
அப்பன்
நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு
உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும்
உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப்
பொன் நீ, இம் மணி நீ, இம் முத்தும் நீ,
இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே. --- அப்பர்.
இறைவன்
பொன்னினும் மணியினும் பல்கோடி மடங்கு சிறந்தவர். எனினும் நமக்குத் தெரிந்த
பொருள்களுக்குள் பொன்னும் மணியும் சிறந்தன. ஆதலினால் நாமறிந்த பொருள்களுக்குள்
உயர்ந்தவற்றின் பேரால் இறைவனை யழைக்கின்றோம். அதேபோல் ஆண்டவன் வரம்பற்ற கருணை
யுடையவர். நமது வாழ்வில் நாம் அறிந்தவற்றுக்குள் தாயன்பு சாலச் சிறந்தது. ஆதலினால்
ஆன்றோர்கள் இறைவன் கருணையைக் குறிப்பிடும்போது தெல்லாம் தாயின் கருணையைக் குறிப்பிடுவர்.
“பால்நினைந் தூட்டுந்
தாயினுஞ் சாலப்பரிந்து”
“தாயிற் சிறந்த தயாவான
தத்துவனே” --- திருவாசகம்.
“தாயினும் நல்லன்” --- திருமந்திரம்.
“ஆய்புரி
அருட்செறிந்தவி நாசியுள் மேவிய பெருமாளே”
--- (மனத்திரைந்தெழு)
திருப்புகழ்
மலைக்கு
நாயக:-
குமராக்
கடவுள் குறிஞ்சி நிலக் கடவுள்.
“சேயோன் மேய மைவரை
யுலகும்” --- தொல்காப்பியம்.
“குறிஞ்சிக் கிழவன் என்று
ஓதும் குவலயமே” --- கந்தர் அலங்காரம்.
முருகவேளின்
முழுமுதற் றன்மையை யறிந்த பண்டைத் தமிழ்கள், உயர்ந்தவனை உயர்ந்த இடத்தில்
வைப்பதுபோல், மயிலேறும் வள்ளலை
மலைமிசை வைத்து வணங்கினர்.
வசிட்டர்........பொருட்
கோலமாய் வரும்:-
வசிட்டாதி
முனிவர் பெருமக்களும், நக்கீரராதி
நாவலரேறுகளும் சித்தர் யோகியர்களும், முருகவேளைப்
பரவி வழிபட்டு அருள் நலமுற்றார்கள்.
சிவவாக்கியர்
வழிபட்ட சிவமலையும், பிண்ணாககு சித்தர்
வழிபட்ட சென்னிமலையும், பாம்பாட்டிச் சித்தர்
வழிபட்ட மருதமலையும், போகர் வழிபட்ட
பழநிமலையும், கொங்கண சித்தர்
வழிபட்ட கொங்கணகிரியும், அகத்தியர் வழிபட்ட
இலஞ்சிப்பதியும், வசிட்டர் வழிபட்ட வேப்பூரும்
இன்றும் கண்கூடாகக் கண்டு மகிழ விளங்குகின்றன.
திருக்கொணாமலை:-
இது
ஈழ நாட்டிலுள்ள அரிய திருத்தலம்.
கிளிப்பாடு
பூதி:-
அத்தலத்தின்
திருக்கோயிலிலுள்ள ஒரிடமென்பர். இனி, அருணகிரியார்
கிளிவடிவமுற்று கந்தரநுபூதி பாடினார் என்னும் வரலாறுண்மையில், வருங்காலத்தைச் சுட்டி அங்ஙனம் பாடினார்
என்றும் கூறுவர்.
ஏழ்பவ
கடல்:-
எழுவகைப்பிறவிகளையும்
ஏழு கடல்களாக அருணிகரி நாதர் உவமதிக்கும் அழகு சிந்திக்கத்தக்கது.
“தரையின் ஆழ்த்திரை ஏழே போல், எழு
பிறவி மாக்கடல் ஊடே நான் உறு
சவலை தீர்த்து உன தாளே சூடி” --- (நிருதரார்க்கொரு) திருப்புகழ்
கருத்துரை
மலைமன்ன! சிவமைந்த! வள்ளிமகிண!
அருட்பாக்களின் பொருட்கோல! திருக்கோணமலைத்தேவ! நினைத்தவை முடிக்கும்
நெடுஞ்சுடர்வேல! மாதர் மயக்குற்ற அடியேனை ஆட்கொண்ட அண்ணல்! புகழுரைக்கும்
அடியேனைத் திருவடிப் பேறு தந்து தாயருள் புரிந்து காப்பாற்றுவீர்.
No comments:
Post a Comment