அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தொடுத்த வாள்
(அருக்கொணாமலை)
முருகா!
பொதுமாதர் ஆசையால் நலியாமல்
அருள்.
தனத்த
தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன ...... தனதான
தொடுத்த
வாளென விழித்து மார்முலை
யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர்
சுகித்த
ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ......
வழியேபோய்ப்
படுத்த
பாயலி லணைத்து மாமுலை
பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களு மலத்தி னாயென
பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ......
ருழல்வேனோ
வெடுத்த
தாடகை சினத்தை யோர்கணை
விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே
விதித்து
ஞாலம தளித்த வேதனை
யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
விழித்து காமனை யெரித்த தாதையர் ......
குருநாதா
அடுத்த
ஆயிர விடப்ப ணாமுடி
நடுக்க மாமலை பிளக்க வேகவ
டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ......
மயில்வீரா
அறத்தில்
வாழுமை சிறக்க வேயறு
முகத்தி னோடணி குறத்தி யானையொ
டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ......
பெருமாளே.
பதம் பிரித்தல்
தொடுத்த
வாள் என விழித்து, மார்முலை
அசைத்து, மேகலை மறைத்து மூடிகள்,
துடித்து நேர்கலை நெகிழ்த்து, மாஇயல் ...... கொளுமாதர்,
சுகித்த
ஹா என நகைத்து, மேல்விழ,
முடித்த வார்குழல் விரித்துமே, இதழ்
துவர்த்த வாய் சுருள் அடக்கி மால்கொடு, ...... வழியேபோய்ப்
படுத்த
பாயலில் அணைத்து, மாமுலை
பிடித்து, மார்பொடும் அழுத்தி, வாய்இதழ்
கடித்து, நாணம் அது அழித்த பாவிகள் ......
வலையாலே,
பலித்து, நோய்பிணி கிடத்து பாய்மிசை,
வெளுத்து வாய்களும் மலத் தின் நாய் என
பசித்து, தாகமும் எடுத்திடா உயிர் ...... உழல்வேனோ?
வெடுத்த
தாடகை சினத்தை, ஓர் கணை
விடுத்து, யாகமும் நடத்தியே, ஒரு
மிகுத்த வார் சிலை முறித்த மாயவன் ......
மருகோனே!
விதித்து
ஞாலம் அது அளித்த வேதனை
அதிர்த்து, ஓர் முடி கரத்து உலாய், அனல்
விழித்து காமனை எரித்த தாதையர் ......
குருநாதா!
அடுத்த
ஆயிர விடப் பணாமுடி
நடுக்க, மாமலை பிளக்கவே, கவடு
அரக்கர் மாமுடி பதைக்கவே பொரு ......
மயில்வீரா!
அறத்தில்
வாழ் உமை சிறக்கவே,அறு
முகத்தினோடு, அணி குறத்தி, யானையொடு,
அருக்கொணாமலை தருக் குலாவிய ......
பெருமாளே.
பதவுரை
வெடுத்த தாடகை --- வெடு வெடு என்று
கோபித்து வந்த தாடகையின்,
சினத்தை ஓர் கணை விடுத்து --- கோபத்தை ஒரு
கணைவிடுத்து அடக்கியும்,
யாகமும் நடத்தியே --- யாகத்தைக் காலம் செய்து
நடாத்தியும்,
ஒரு மிகுத்தவார் சிலை முறித்த --- ஓப்பற்றதும்
சிறப்பு மிகுந்ததும் நீண்டதுமான வில்லை முறித்தவரான,
மாயவன் மருகோனே --- திருமாலின் திருமருகரே!
விதித்து --- இது இப்படி இருக்க வேண்டும்
என்று விதி செய்து,
ஞாலம் அது அளித்த வேதனை --- பூமியைத் தந்த
பிரமதேவனை,
அதிர்ந்து --- அதிர்ச்சியுறச் செய்து,
ஓர் முடி கரத்து உலாய் --- அவனுடைய ஒரு
தலையைத் தமது திருக்கரத்தில் உலாவ வைத்து,
அனல் விழித்து --- நெற்றிக் கனற் கண்ணைத்
திறந்து,
காமனை எதிர்த்த தாதையர் --- மன்மதனை எரித்த
தந்தையாரது, குருநாதா-குருநாதரே!
அடுத்த --- நெருங்கியுள்ள,
ஆயிர விட பணாமுடி நடுக்க --- விடமுள்ள ஆயிரம்
பணாமுடிகளையுடைய ஆதிசேடன் நடுங்கவும்,
மாமலை பிளக்க --- கிரவுஞ்சமலை பிளவுபடவும்,
கவடு அரக்கர் மாமுடி பதைக்கவே பொரு ---வஞ்சனையுடைய
அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் போர் புரிந்த,
மயில் வீரா --- மயில் மீது வரும் வீர
மூர்த்தியே!
அறத்தின் வாழ் உமை --- அறங்களை வளர்த்து
வாழ்கின்ற, உமாதேவி,
சிறக்கவே --- மகிழும்படி,
அறுமுகத்தினோடு --- ஆறுமுகங்கள் விளங்க,
அணி குறத்தி ஆனையோடு --- அழகிய வள்ளியுடனும்
தெய்வயானையுடனும்,
அருக்கொணமலை --- அருக்கொணாமலை என்ற திருத்தலத்தில்,
தருக்கு உலாவிய --- களிப்புடன் உலாவுகின்ற,
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
தொடுத்தவாள் என விழித்து --- செலுத்தப்பட்ட
வாளாயுதம் என்று சொல்லும்டி பார்த்து,
மார் முலை அசைத்து --- மார்பிலுள்ள முலைகளை
அசைத்து,
மேகலை மறைத்து மூடிகள் --- மேலையினால் உடம்பை
மறைத்து மூடும் மாதர்கள்;
துடித்து --- அன்புடையவர்கள் போல் துடித்து,
நேர் கலை நெகிழ்ந்து --- எதிரே ஆடையைத்
தளர்த்தி,
மா இயல் கொள்ளும் மாதர் --- நல்லொழுக்கத்தைப்
பறிகொள்ளு மாதர்கள்,
சுகித்து அஹா என நகைத்து --- சுகத்தை
அனுபவித்து, அஹா என்று நகை செய்து,
மேல் விழ --- மேலே விழ,
முடித்த வார்குழல் விரித்து --- முடித்திருந்த
நீண்ட கூந்தலை விரித்து,
இதழ் துவர்க்க வாய் சுருள் அடக்கி --- இதழ்
சிவக்கும்படி வாயில் வெற்றிலைச் சுருள் அடக்கி,
மால் கொடு வழியே போய் --- காம ஆசையைக்
கொடுக்கின்ற வழியிலே போய்,
படுத்த பாயலில் அணைத்து --- படுத்த படுக்கையில்
தழுவி,
மாமுலை பிடித்து --- பெரிய முலைகளைப் பற்றி,
மார்பொடும் அழுத்தி --- மார்பினில் அழுத்தி,
வாய் இதழ் குடித்து --- வாய் அதரத்தைப் பருகி,
நாணம் அது அழித்த பாவிகள் --- நாணத்தை அழித்த
பாவிகளாகிய பொது மாதர்களின்,
வலையாலே --- வலையினாலே;
நோய் பிணி பலித்து --- நோய்களும் பிணிகளும்
உண்டாகி,
கிடந்து பாய் மிசை வெளுத்து --- பாயில்
கிடந்து உடல் வெளுத்து,
வாய்களும் மலர்த்தின் நாய் என ஆக --- மலம்
தின்னும் நாயைப் போல் வாயைப் பிளந்து,
பசித்து தாகமும் --- பசியும் தாகமும் உற்றும்,
எடுத்திடா உயிர் உழல்வேனோ --- எடுத்திட்ட
உயிருடன் திரிவேனோ?
பொழிப்புரை
கோபத்தால் வெடுவெடுத்து வந்த தாடகையின்
கோபத்தை ஓர் அம்பு விடுத்து அடக்கியும், யாகத்தை
நடத்தியும், ஒப்பற்ற சிறந்த நீண்ட
வில்லை எடுத்தவருமான திருமாலின் திருமருகரே!
உலகத்தைச் சிருட்டித்து, இந்த பூமியைத் தந்த பிரமதேவனை நடுங்க
வைத்து, அவனுடைய தலையைக்
கிள்ளி கரத்தில் வைத்து, நெற்றிக் கண்ணால்
பார்த்து மன்மதனை யெரித்த தந்தையாகிய சிவபெருமானுடைய குருநாதரே!
நெருங்கியுள்ள ஆயிரம் விடப் பணாமகுடங்களைக்
கொண்ட ஆதிசேடன் நடுக்க முறவும்,
கிரவுஞ்ச
மலை பிளந்து தூளாகவும், வுஞ்சக அரக்கர்களின்
பெரிய தலைகள், பதைக்கவும் போர்
புரிந்த மயில் வீரரே!
அறங்களை வளர்த்து வாழ்கின்ற உமாதேவி
மகிழுமாறு, ஆறுமுகங்கள் விளங்க, அழகிய வள்ளியுடனும் தேவயானையுடனும், அருக்கொணாமலையில் மகிழ்ச்சியுடன்
உலாவுகின்ற பெருமிதமுடையவரே!
செலுத்திய வாளாயுதம் போன்ற கண்களை
விழித்துப் பார்த்து மார்பிலுள்ள தனங்களை அசைத்து, மேகலையால் உடம்பை மறைத்து மூடும்
மாதர்கள், துடித்து, எதிரே புடைவையைத் தளர்த்தி, நல்லொழுக்கத்தைப் பறி கொள்கின்ற
மாதர்கள், இன்பவதை அநுபவித்து
‘அஹா‘ என்று நகைசெய்து மேலே விழ,
முடித்திருந்த
கூந்தலை விரித்து, இதழ் சிவக்கும்படி
வாயில் வெற்றிலைச் சுருளை அடக்கிஆசையைத் தருகின்ற அந்த வழியிலே போய்ப் படுத்த
படுக்கையில் தழுவி, பெரிய தனங்களைப்
பிடித்து, மார்புடன் அழுத்தி, அதரபானம் செய்து, நாணத்தை அழித்த பொது மாதர்களின் வலையால், உண்டான நோய்களால் படுக்கையில் கிடந்து
உடல் வெளுத்து, மலம் தின்னும் நாய்போல்
வாயைப் பிளந்து, பசி தாகம் அடைந்து, எடுத்திட்ட உயிருடன் அடியேன் திரிவேனோ?
விரிவுரை
தொடுத்த
வாளென விழித்து ---
பொது
மாதர்களின் கண்கள் வாள்போல் இளைஞர்களின் உள்ளத்தை வெட்டிப் பிளக்கும்
வன்மையுடையது.
வெடுத்த
தாடகை ---
கோபத்தால்
கொதித்து வெடு வெடு என்று வேகத்துடன் வந்த தாடகையை ஒரு கணையால் இராம்
கொன்றருளினார்.
சொல்
ஒக்கும் கடிய வேகச்
சுடு சரம், கரிய செம்மல்,
அல்
ஒக்கும் நிறத்தினாள்மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல்
ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
புல்லார்க்கு
நல்லோர் சொன்ன
பொருள் எனப் போயிற்று அன்றே!
--- கம்பர்
யாகமும்
நடத்தி ---
விச்வாமித்திரர்
புரிந்த தவ வேள்வியை, மாரீசன் தாடகை முதலிய
அரக்கர்கள் பன்னெடுங்காலமாகத் தடுத்துக் கெடுத்து வந்தார்கள். ஸ்ரீராமர், தாடைகையையும், சுபாகுவையும், வதைத்தும், மாரீசனைக் கடலில் வீழ்த்தியும்
வேள்விக்காவல் செய்து, முடித்துக்
கொடுத்தார்.
எண்ணுதற்கு, ஆக்க, அரிது இரண்டு-மூன்று நாள்
விண்ணவர்க்கு
ஆக்கி முனிவன் வேள்வியை.
மண்ணினைக்
காக்கின்ற மன்னன் மைந்தர்கள்.
கண்ணினைக்
காக்கின்ற இமையின் காத்தனர். --- கம்பர்
விதித்து
ஞாலம் ---
அவரவர்கள்
கன்மங்களுக்கு ஏற்ப விதிக்கின்றவன் பிரமன், ஞாலம் - பூமி நால் - தொங்குவது.
நால்வாய் - தொங்குகின்ற வாய். நால் என்ற சொல் ஞகரம் போலியாய் ஞால் எனதிரிந்தது.
அம் சாரியை புணர்ந்து “ஞாலம்” என்றாயிற்று. ஞாலம் என்றால் தொங்குவது என்பது
பொருள்.
ஓர்
முடி கரத்து உலாய் ---
பிரமன்
தான் படைப்புத் தலைவன் என்று தருக்குற்றதனால் சிவபெருமான் வைரவரை ஏவி பிரமனுடைய
நடுத்தலையை நகத்தினால் கிள்ளச் செய்தார்.
“நல்லமலரின் மேல் நான்முகனார்
தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற” --- திருவாசகம்
காமனை
எரித்த ---
சிவமூர்த்தி
மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்தருளினார். திருமாலின் மக்களான பிரமனைத்
தலையரிந்தும் மதனனைச் சாம்பலாக்கியும் தண்டித்தருளினார்.
ஆயிர
விடப் பணாமுடி நடுக்க ---
மயில்
நடப்பதனால் ஆதிசேடனுடைய ஆயிரம் பணாமகுடங்களும் நடுங்குகின்றன.
“சேடன் முடிதிண்டாட
ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்”
“பாரப் பணாமுடி
அனந்தன் முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்க” --- மயில்விருத்தம்.
அறத்தில்
வாழுமை சிறக்க ---
காஞ்சிமா
நகரில் காமாட்சியம்மை முப்பத்திரண்டு அறங்களையும் செய்தருளினார். சிறக்க-மகிழ.
“குறைவுஅற
முப்பத்திரண்டு அறம் புரிகின்ற பேதை” --- (தலைவலை) திருப்புகழ்
அருக்கொணாமலை
தருக்கு உலாவிய ---
தருக்கு-மகிழ்ச்சி.
“கீதம் வந்த
வாய்மையால் கிளர் தருக்கினார்” --- திருஞானசம்பந்தர்
அருங்கொணாமலை
என்பது கீரிமலை எனவும் வழங்குகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்திலிருந்து 12 கல் தொலைவில் கடற்கரையில்
திகழ்கின்றது.
கருத்துரை
அருக்கெணாமலை
அண்ணலே! மாதராசையால் துன்புற்று உயிர் உழல்வேனோ?
No comments:
Post a Comment