கதிர்காமம் - 0432. முதிரும் ஆரவாரம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முதிரு மாரவாரம் (கதிர்காமம்)

முருகா!
உன் மீது காதல் கொண்ட பெண்ணைத் தழுவி அருள்


தனன தான தான தத்த தனன தான தான தத்த
     தனன தான தான தத்த ...... தனதான


முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
     முனியு மார வார முற்ற ...... கடலாலே

முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து
     முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே

வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
     வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே

விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
     விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும்

கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
     கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா

கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
     ககன மேவு வாளோ ருத்தி ...... மணவாளா

அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
     அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே

அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
     அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


முதிரும் ஆரவார நட்பொடு இலகும் ஆர் அ ஆரம் எற்றி,
     முனியும் ஆரவாரம் உற்ற ...... கடலாலே,

முடிவு இலாத்து ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து
     முழுகி, ஏறி மேல் எறிக்கும் ...... நிலவாலே,

வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராக நீடு இசைக்கும்,
     வினை விடாத தாயருக்கும் ......  அழியாதே

விளையும் மோக போகம் முற்றி, அளவு இலாத காதல் பெற்ற
     விகட மாதை, நீ அணைக்க ...... வரவேணும்.

கதிர காம மாநகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த
     கடவுளே! கலாப சித்ர ...... மயில்வீரா!

கயல் உலாம் விலோசனத்தி, களபம் ஆர் பயோதரத்தி,
     ககன மேவுவாள் ஒருத்தி ...... மணவாளா!

அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க,
     அரிய ஞான வாசகத்தை ...... அருள்வோனே!

அகில லோக மீது சுற்றி, அசுரர் லோகம் நீறு எழுப்பி,
     அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.


பதவுரை

      கதிரகாம மாநகர்க்கு உள் --- கதிர்காம மா நகரத்தில்

     எதிர் இலாத வேல் தரித்த கடவுளே --- ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே!

      கலாப சித்ர மயில் வீரா --- தோகையின் அழகு வாய்ந்த மயிலில் வரும் வீர மூர்த்தியே!

      கயல் உலாம் விலோசனத்தி --- மீன்போன்ற சிறந்த கண்களை உடையவளும்,

     களபம் ஆர் பயோதரத்தி --- சந்தனக் கலவை அணிந்த தனங்களை உடையவளும்,

     ககன மேவுவாள் ஒருத்தி --- விண்ணுலகத்தில் வீற்றிருப்பவளுமாகிய தேவசேனையின்,

     மணவாளா --- கணவரே!

      அதிர வீசி ஆடும் --- உலகங்கள் அதிரும்படி கைகளையும் கால்களையும் வீசி ஆடுகின்றவரும்,

     வெற்றி விடையில் ஏறும் --- வெற்றியுடைய இடபத்தின் மீது ஆரோகணிக்கின்றவரும், ஆகிய

     ஈசர் கற்க --- சிவபெருமான் அறியுமாறு,

     அரிய ஞான வாசகத்தை --- அருமையான ஞான உபதேச மொழியை,

     அருள்வோனே --- அருளியவரே!

      அகில லோக மீது சுற்றி --- எல்லாவுலகங்களிலும் சுற்றி உலாவி,

     அசுரர் லோகம் நீறு எழுப்பி --- அசுரர்கள் வாழ்ந்த உலகங்களை தூளாக்கி,

     அமரர் லோகம் வாழ வைத்த --- தேவலோகத்தை வாழ வைத்த,

     பெருமாளே --- பெருமையில் சிறந்தவரே!

       மார வாரம் முதிரும் நட்பொடு --- மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன்,

     இலகும் ஆர் அ ஆரம் எற்றி --- ஒளி பொருந்திய அந்த முத்துக்களை கரையில் வீசி,

     முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே --- கோபிக்கும் பேரொலி பொருந்திய கடலினாலும்,

     முடிவு இலாதது --- அழிவில்லாததாய்,

     ஓர் வடக்கில் --- ஒப்பற்ற கடலின் வடக்கில்,

     எரியும் --- ஊழித்தீயாம் வடவைக் கனல் போல் எரிவதாய்,

     ஆலம் ஆர்பு இடத்து முழுகி  --- விஷம் நிறைந்து தோன்றிய இடமாம் கடலில் முழுகி,

     ஏறி மேல் எறிக்கும் நிலவாலே --- மேல் எழுந்து கிரணங்களை வீசும் சந்திரனாலும்,

     வெதிரில் ஆயர் வாயில் வைத்து --- வேங்குழலை இடையர் வாயில் வைத்து,

     மதுர ராகம் நீடு இசைக்கும் --- இனிமையான பண்களை நெடுநேரம் கேட்கச் செய்யும் இசை ஒலியினாலும்,

     வினை விடாத தாயருக்கும் --- தமது தொழிலை விடாத தாய்மாருக்கும்,

     அழியாதே --- அழியாமல்,

     விளையும் மோக போகம் முற்றி --- உண்டகின்ற காமபோகமே நிரம்பி,

     அளவு இலாத காதல் பெற்ற --- அளவு கடந்த ஆசைகொண்டுள்ள,

     விகட மாதை --- இந்த அழகிய பெண்ணை,

      நீ அணைக்க வரவேணும் --- தேவரீர் தழுவிக் கொள்ளும் பொருட்டு வந்தருளவேண்டும்.

பொழிப்புரை

         கதிர்காம மாநகருக்குள் எழுந்தருளியிருக்கும் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே!

     அழகிய தோகைகொண்ட மயிலையுடைய வீர மூர்த்தியே!   மீன் போன்ற கண்களையுடையவளும், சந்தனக்கலவை நிறைந்த தனங்களையுடையவளும் விண்ணுலகில் வாழ்பவளுமாகிய தேவசேனையின் கணவரே!

     விண்ணும் மண்ணும் அதிருமாறு கரசரணங்களை வீசி நடனம் ஆகின்றவரும், வெற்றிவிடையில் ஏறுபவருமாகிய சிவ பெருமாள் உணருமாறு, அருமையான சிவஞான உபதேசமொழியை அருளியவரே!

     எல்ல உலகங்களையும் சுற்றி, அசுர உலகங்களைப் பொடியாகச் செய்து, அமர உலகத்தை வாழ வைத்த பெருமிதம் உடையவரே!

     மன்மதனுக்கும் அன்பு முதிர்ந்த நட்புடன், ஒளி நிறைந்த அந்த முத்துக்களைக் கரையில் எறிந்து கோபிக்கும் பேரொலியுடைய கடலினாலும், அழிவில்லாத வடவைத் தீயைப் போல் எரிவதாய், ஆலகால நஞ்சு தோன்றிய கடலில் முழுகி எழுந்து மேலே கிரணங்களை வீசுவதாயுள்ள நிலவினாலும், புல்லாங்குழலை இடையர்கள் வாயில் வைத்து இனிய பண்களை நீண்ட நேரம் ஒலிக்கும் இன்னிசையினாலும், தம் தொழிலை விடாத தாய்மாருக்கும், அழியாமல், உண்டாகின்ற காமபோகம் நிரம்பி அளவு கடந்த காதல் கொண்டுள்ள, இந்த அழகிய பெண்ணைத் தேவரீர் தழுவிக் கொள்ளும் பொருட்டு வந்தருள வேண்டும்.


விரிவுரை

இத் திருப்புகழ் அகப்பொருள் துறையில் பாடியது.

முதிரு மார வார நட்பொடு ---

மாரன்-மன்மதன். வாரம்-அன்பு.

சமுத்திரம் மன்மதனுக்கு துந்துபி வாத்தியமாக விளங்குவது. மன்மதனுக்கு முதிர்ந்த அன்புடன் கூடிய நட்பு பூண்டது.

இலகுமார வார வெற்றி ---

இலகும் ஆர் அ ஆரம் எற்றி.

இலகும்-ஒளி; ஆர்-நிறைந்த; அ-அந்த; ஆரம்-முத்து.

அலைகாளகிய கரங்களால் கடல் முத்தைக் கரையில் எறிகின்றது.

முனியும் ஆரவாரம் உற்ற கடல் ---

ஆரவாரம்-பேரொலி.

இந்த அடியில் மார வார என்ற சொற்களை மூன்று இடங்களில் வெவ்வேறு பொருள்களில் அமைந்துள்ள கவித்திறம் மிகவும் வியத்தற்குரியது. கடல், தலைவன் தலைவிக்குக் காதல் நோயை அதிகப்படுத்தும். “தொல்லை நெடு நீலக்கடலாலே” என்று பிறிதொரு திருப்புகழிலும் கூறுகின்றார்.

முடிவிலாதோர் வடக்கில் எரியும் ---

வடதிசை அழிவில்லாதது என்கின்றார். அது சிவபெருமான் இருக்கின்ற திசை. தென்திசை பலகாலும் கடலால் அழிவு பெற்றத்தையும் குறிக்கின்றார் போலும்.

வடக்கே கடலில் நீரைச் சுவற வைக்குந் தீ வடவாமுகாக் கினி. அத்தீயைப் போல் நிலவு வெம்மையைச் செய்கின்றது. யாருக்கு? காமுகர்க்கு.

ஆலமார்பிடத்து முழுகி ---

ஆலம் ஆர்பு இடத்து. ஆலகால விஷம் நிறைந்து தோன்றிய கடலில் முழுகி எழுவதால் சந்திரன் நஞ்சுபோல் எரிக்கின்றான் என்கின்றார்.

வெதிரில் ஆயார் ---

வெதிர் - மூங்கில். காட்டில் இயற்கையாய் விளைகின்ற மூங்கில் குழாயில் முறைப்படி துளையிட்டு ஆயர்கள் ஆடுமாடுகளை மகிழ்விக்கும் பொருட்டு இனிய ராகங்களையமைத்து ஊதுவார்கள். அது தலைவன் தலைவியர்க்கு வேதனையைத் தரும்.

அதிர வீசியாடும்...................ஈசர் ---

இறைவனுடைய ஆட்டத்துக்கு இந்த உலகமாகிய அரங்கு காணவில்லை.

அடிபேரின் பாதாளம் பேரும், அடிகள்
மூடிபேரின் வான்முகடு பேரும்,-கடகம்
மறிந்து ஆடு கைபேரில் வான்திசைகள் பேரும்,
அறிந்து ஆடும் ஆற்றாது அரங்கு.                       --- அற்புதத் திருவந்தாதி

அதிர வீசி வாதாடும் விடையில் ஏறுவார் ஆட”      --- (அதலசேட) திருப்புகழ்

அமரலோகம் வாழவைத்த பெருமாள் ---

களைகளைப் பறித்து, நெற்பயிரை வாழவைப்பது போல், அசுர லோகத்தைப் பொடியாக்கி, அமர லோகத்தை எம்பெருமான் வாழ வைத்தருளினார்.

அசுரர்கள்-துர்க்குணங்கள். அமரர்கள்-நற்குணங்கள்.

இந்தத் திருப்புகழில் ஒவ்வோரடியிலும் பிற்பகுதிகளை எடுத்து ஒன்று கூட்டினால் எதுகையென்ற இலக்கணம் ஒன்று மட்டும் இன்றி ஏனைய இலக்கணங்களும் பொருளும் பொருந்தப் பிறிதொரு திருப்புகழ் பாடலாகித் திகழ்கின்றது.

முனியும் ஆர வாரம் உற்ற          கடலாலே
முழுகி ஏறி மேல் எறிக்கும்         நிலவாலே
வினை விடாத தாயருக்கும்        அழியாதே
விகட மாதை நீ அணைக்க         வரவேணும்
கடவுளே! கலாப சித்ர               மயில்வீரா!
ககனம் மேவு வாள்ஒருத்தி          மணவாளா!
அரிய ஞான வாச கத்தை           அருள்வோனே
அமரர் லோகம் வாழ வைத்த       பெருமாளே

கருத்துரை

கதிர்காமக் கடவுளே! உன்னை நினைந்து வருந்தும் இப்பெண்ணைத் தழுவியருள நீ வரவேண்டும்.         

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...