கதிர்காமம் - 0431. மாதர் வசமாய்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மாதர் வசமாய் (கதிர்காமம்)

முருகா!
மதர் வசம் ஆவோரும், திருமுறை ஓதிப் பணியாரும்
தீ நரகத்தில் சேர்வார்கள்.


தானதன தானத் ...... தனதான

மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும்

மாதவமெ ணாமற் ...... றிரிவாரும்

தீதகல வோதிப் ...... பணியாரும்

தீநரக மீதிற் ...... றிகழ்வாரே

நாதவோளி யேநற் ...... குணசீலா

நாரியிரு வோரைப் ...... புணர்வேலா

சோதிசிவ ஞானக் ...... குமரேசா

தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


மாதர் வசமாய் உற்று ...... உழல்வாரும்

மாதவம் எணாமல் ...... திரிவாரும்

தீது அகல ஓதிப் ......        பணியாரும்

தீ நரகம் மீதில் ......         திகழ்வாரே

நாத ஒளியே நல் ...... குணசீலா

நாரி இருவோரைப் ...... புணர் வேலா

சோதி சிவ ஞானக் ......      குமரேசா

தோம்இல் கதிர்காமப் ......   பெருமாளே.


பதவுரை

      நாத ஒளியே --- ஒலி ஒளியாக விளங்குபவரே!

      நல்குண சீலா --- நல்ல அருட்குண சீலரே!

      நாரி இருவோரைப் புணர் வேலா --- வள்ளியம்மை தேவசேனை யென்ற இரு சக்திகளை மருவுகின்ற வேலாவுதரே!

      சோதி --- ஜோதியே!

      சிவஞான குமர ஈசா --- சிவஞானத்தைத் தரும் குமாரக் கடவுளே!

      தோம் இல் கதிர்காமப் பெருமாளே --- குற்றமில்லாத கதிர்காமத்தில் வாழும் பெருமையிற் சிறந்தவரே!

      மாதர் வசம் ஆய் உற்று உழல்வாரும் --- பெண்கள் வசப்பட்டுத் திரிபவர்களும்,

     மாதவம் எணாமல் திரிவாரும் --- சிறந்த தவத்தை நினைக்காமல் திரிகின்றவர்களும்,

     தீது அகல ஓதி பணியாரும் --- தீமைகள் அகலும்படி திருமுறைகளை ஓதி வணங்காதவர்களும்,

     தீ நரக மீதில் திகழ்வாரே --- கொடி நரகத்திலே விளக்கமுற்று கிடப்பார்கள்.

பொழிப்புரை

     ஒலி ஒளி மயமாகத் திகழ்பவரே!

     நல்ல அருட்குண சீலரே!

     வள்ளி தேவசேனை என்ற இரு சக்திகளை மருவுகின்றவரே!

     ஜோதியே!

     சிவஞானத்தை வழங்கும் குமாரக் கடவுளே!

     குற்றமில்லாத கதிர் காமத்தில் வாழும் பெருமிதமுடையவரே!

     பெண்கள் வசமாகி உழல்கின்றவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் திரிகின்றவர்களும், தீமைகள் விலகும்படி, திருமுறைகளை ஓதி வணங்காதவர்களும், கொடிய நரகத்தில் கிடந்து துன்புறுவார்கள்.


விரிவுரை

மாதர் வசமாய் உற்று உழல்வாரும் ---

பல்லூழி காலந்தவம் செய்து வந்தது இம்மனிதப் பிறவி. கடலை கையால் நீக்கிக் கரை சேர்ந்தது போல் நால்வகைப் பிறப்பு, ஏழுவகை யோனிகளுடன் எண்பத்து நான்கு லட்ச பேதங்களாகிய பிறவிகளை எடுத்து எடுத்து உழன்று சுழன்று இம்மானிடப் பிறவி எடுத்தோம். இப்பிறப்பின் அருமையும் பெருமையும் தெரியாது. பிறவிப் பயனைப் பெற முயலாது அற்ப இன்பத்தை நாடிப் பெண்கள் வசமாகி உழல்கின்றார்கள் மாந்தர்கள், அந்தோ! அந்தோ! பரிதாபம்! பரிதாபம்!

மாதவம் எணாமல் திரிவாரும் ---

தவம் ஒன்றே சிவத்தைச் சார்விக்கும். அறம் செய்தால் அன்பு வரும்; அன்பு வந்தால் அருள் வரும்; அருள் வந்தால் தவம் வரும்; தவம் வந்தால் சிவம் வரும்; சிவத்தைச் சார்ந்த உயிர் பிறப்பு இறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வைப் பெற்று இன்புறும்.

ஆதலால், ஒவ்வொருவரும் நல்ல தவம் செய்ய வேண்டும்.

தீது அகல ஓதிப் பணியாரும் ---

திருமுறைகளை ஓதினால் ஏனைய தீமைகள் விலகிப் போகும். காதலாகிச் கசிந்து கண்ணீர் மலகித் திருமுறைகளை ஓதவேண்டும். “திருநெறி தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்பார் திருஞானசம்பந்தர்.

ஆசைஅறாய், பாசம்விடாய், ஆனசிவ பூசைபண்ணாய்,
நேசமுடன் ஐந்தெழுத்தை நீநினையாய், - சீசீ
சினமே தவிராய், திருமுறைகள் ஓதாய்,
மனமே உனக்கு என்ன வாய்             --- குருஞான சம்பந்தர்.
  
தீ நரக மீதில் திகழ்வாரே ---

மாதர் வசமானவரும், மாதவம் எண்ணாதவரும், திருமுறைகளை ஓதி இறைவனைப் பணியாதவரும் கொடிய நரகில் வீழ்ந்து கொடுந் துன்பத்தை நுகர்வார்கள்.

நாத ஒளியே ---

நாதம்-ஒலி. ஒலி, ஒலி ஒளியெல்லாம் இறைவன்தான்.

 நாரி இருவோரைப் புணர்வோனே ---

வள்ளியம்மை - மண்ணுலக மடந்தை. தெய்வாயனை -விண்ணுலக மடந்தை. வள்ளியைக் கொண்டு இகலோக வாழ்வும், தெய்வயானையைக் கொண்டு பரலோக வாழ்வும் முருகப் பெருமான் வழங்குவார்.

சோதி சிவஞானக் குமரேசா ---

ஆணவ இருளை அகற்றும் ஜோதி வடிவானவர் முருகர். சிவஞானத்தை வழங்குபவர்.

தோமில் கதிர்காமப் பெருமாளே ---

தோம்-குற்றம்.

குற்றமே இல்லாத புனிதமான திருத்தலம் கதிர்காமம். வணங்குபவர்களின் குற்றத்தைக் களைய வல்லது.

 
கருத்துரை

கதிர் காமக் கடவுளே! மாதர் வசமாவோரும், இறைவழிபாடு செய்யாதாரும் நரகில் புகுவார்கள்.


No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...