அவை அடக்கம்

வள்ளுவர்நூல் ஆதி பல நூலில் உள
          அரும்பொருளை, வண்மை யாக,
உள்ளபடி தெரிந்து உணர்ந்த பெரியவர்கள்
          முன், நானும் ஒருவன் போலப்
பள்ளமுது நீர் உலகிற் பரவு, பழ
          மொழிவிளக்கம் பரிந்து கூறல்,
வெள்ளைமதி யினன்கொல்லத் தெருவு அதனில்     
         ஊசிவிற்கும் வினைய தாமே.


இதன் பொருள் ---

     வள்ளுவர் நூல் ஆதி --- திருவள்ளுவர் அருளிய திருக்குறள் முதற்கொண்டு,

     பல நூலில் உள அரும் பொருளை --- பல  நூல்களில்  சொல்லப்பட்டு இருக்கும் அருமையான பொருள்களை,

     வண்மையாக -- சிறந்த முறையில்,

     உள்ளபடி தெரிந்து உணர்ந்த பெரியவர்கள் முன் ---உள்ளவாறு ஆராய்ந்து அறிந்த சான்றோர்கள் முன்னே,

     நானும் ஒருவன் போல --- நானும் ஒரு புலவன் என்று என்னை மதித்து,

     பள்ள முது நீர் உலகில் பரவு பழமொழி விளக்கம் பரிந்து கூறல் --- ஆழமான கடல் நீரையுடைய உலகத்தில் வழங்குகின்ற  பழமொழிகளின் விளக்கத்தை விரும்பிக் கூறுவது என்பது,

     வெள்ளை மதியினன் கொல்லத் தெருவதனில் ஊசி விற்கும் வினையது ஆம் --- அறிவு இல்லாத ஒருவன், கொல்லர்கள் வாழும் தெருவில் சென்று ஊசியினை விற்கும் தொழிலாக அமையும்.

              
     "கொல்லத்  தெருவில் ஊசி  விற்க முடியாது" என்பது பழமொழி. கொல்லத் தெருவில் வாழ்வோர் ஊசி செய்யும் தொழிலை உடையவர்களாதலால், அங்கு ஊசி வேண்டுவர் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால், ஊசியின் தன்மையை அவர்கள் ஆராய்வர்.

     அது போலப், புலவர்கள் நடுவில் இவர் நூலை ஏற்பது இல்லாமல் போகும். ஆனாலும், நற்புலவர்கள், இந்த ஆசிரியரின் நூலை மதிப்பிடுவார்கள்.

வெள்ளை மதி - அறிவு இன்மை.   

No comments:

Post a Comment

பொது --- 1106. மடலவிழ் சரோருகத்து

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடல்அவிழ் சரோருக (பொது) முருகா!  விலைமாதர் கூட்டுறவால் உண்டான தோதகம் தீர,  தேவரீர் போதகத்தை அருள வேண்டு...