இருந்தால் என்ன - போனால் என்ன




22.  இருநிலையினும் பயனற்றவை

குணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?
     குட்டநோய் கொண்டு மென்ன?
  குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாது
     கொஞ்சமாய்ப் போகில் என்ன?

மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?
     மலராது போகில் என்ன?
  மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?
     மாவெண்மை யாகில் என்ன?

உணவற்ற பேய்ச்சுரை படர்ந்தென்ன? படரா
     துலர்ந்துதான் போகி லென்ன?
  உதவாத பேர்க்குவெகு வாழ்வுவந் தாலென்ன?
     ஓங்கும்மிடி வரில்என் னகாண்?

அணியுற்ற பைங்கொன்றை மாலிகா பரணனே!
     ஆதியே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

          இதன் பொருள் ---

     அணியுற்ற பைங்கொன்றை மாலிகா ஆபரணனே --- அழகான பசுமை பொருந்திய கொன்றைமாலையை அணிந்தவரே!

     ஆதியே --- முதற்பொருள் ஆனவரே!

     அருமை மதவேள் --- அரிய மதவேள் என்பான்,

     அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,

     சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

     குணம் அற்ற பேய் முருங்கைத் தழை தழைத்து என்ன --- நல்ல மருந்துக் குணம் இல்லாத பேய் முருங்கை தழைத்தால் பயன் என்ன?,

     குட்டநோய் கொண்டும் என்ன --- குட்டநோய் அடைந்தாலும் என்ன பயன் அற்றுப் போகும்?

     குரைக்கின்ற நாய் மடி சுரந்து என்ன - குரைக்கும் நாயின் மடியில் பால் சுரந்தால் என்ன பயன்?

     சுரவாது கொஞ்சமாய்ப் போகில் என்ன --- பெருகிச் சுரக்காமல் கொஞ்சமாக இருந்தால்தான் என்ன குறைந்து போகும்?,

     மணம் அற்ற செம் முருக்கது பூத்து அலர்ந்து என்ன --- மணம் சிறிதும் இல்லாத செம்முருக்க மலர் நன்கு மலர்ந்து
என்ன பயன்?,

     மலராது போகில் என்ன --- மலராமல் இருந்தால் தான்  என்ன பயன் அற்றுப் போகும்?,

     மதுரம் இல்லா உவர்க்கடல் நீர் கறுத்து என்ன --- சுவை சிறிதும் இல்லாத உப்புக் கடலின் நீர் கருநிறமாக இருந்தால் என்ன பயன்?,

     மாவெண்மை ஆகில் என் --- தூய வெண்மையாக இருந்து தான் என்ன பயன் இல்லாது போகும்?,

     உணவு அற்ற பேய்ச்சுரை படர்ந்து என்ன - உண்ணத் தகாத பேய்ச் சுரைக் கொடியானது படர்ந்து என்ன பயன்?,

     படராது உலர்ந்துதான் போகில் என்ன - படராமல் காய்ந்து போனால் தான் என்ன பயன்?,

     உதவாத பேர்க்கு வெகு வாழ்வு வந்தால் என்ன --- பிறர்க்குப் பயன்படாதவர்களுக்குச் சிறந்த வாழ்வு வந்தால் என்ன பயன்?,

     ஓங்கும் மிடி வரில் என்ன காண் --- பெரிய வறுமை வந்தால் தான் என்ன குறைந்து போகும்?

          கருத்து --- மற்றவர்க்குப் பயன்படாத பொருள் எதுவானாலும்
இருந்தாலும் பயனில்லை. இல்லாவிட்டாலும் குறை இல்லை. 


எந்நாளும் இன்பமே

இன்பமே எந்நாளும் -----      இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தைப் ...